கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,006 
 
 

“இந்த விரலை இனி நோண்ட பயன்படுத்தலாம்…” நடுவிரலை நீட்டியும் மடக்கியும் ஜமால் செய்த ஆபாசமான கையசைவையும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாத என் முகபாவனையையும் மேற்பார்வையாளர் அமீர் கவனிக்கிறார் என எங்கள் இருவருக்குமே தெரியும். பதிலுக்கு நான் ஏதும் சொல்வேன் என ஜமால் காத்திருக்கலாம்.

வேறு வழியில்லாமல்தான் ஒரு மாதத்திற்கு முன் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்த அந்தத் தொழிற்பேட்டையில் அங்கு மட்டும்தான் கேட்டவுடன் வேலை கிடைத்தது. வயதை வைத்து நான் நீண்டநாள் கூலிக்காரனாக இருக்க மாட்டேன் என எல்லா தொழிற்சாலை நிர்வாகிகளும் எளிதாக முடிவெடுத்திருந்தனர். வருடக்கடைசியில் வேலைத்தேடி அலைபவர்கள் பள்ளிக்கூட விடுமுறையில் மட்டும் உருவாகும் உழைப்பாளர் வர்க்கம் என மலேசியா முழுவதும் தெரியும். பெரும்பாலான தொழிற்சாலைகளில் ஜனவரியில் வரும்படி கதவை அடைத்தனர். இங்கு அது ஒரு பொருட்டாக இல்லை. ஷிப்ட் வேலை செய்வாயா எனக்கேட்டார் அமீர். முடியும் என்றேன். உடனே வேலை கிடைத்தது.

என்னுடன் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே வேலை பார்த்த சிறிய தொழிற்சாலை அது. அதில் இருவர் வங்காளம். ஒரு மலாய் பெண். காசிம் என்ற ஒரு மலாய் இளைஞன். மலாய் இளைஞனை எங்கள் வர்க்கத்தில் சேர்க்க முடியாது. அவனுக்கு அவ்வளவாகப் பேச்சு வராது. உடல் சிறுத்துக் கூனனாகக் காட்சி தருவான். நடையில் ஒரு வேகம் இருக்கும். அவன் என்ன சொல்லவருகிறான் எனப்புரிந்துகொள்ளவே தனிப்பயிற்சி தேவை என்பதாலும் அப்பயிற்சியைப் பெற நிர்வாகம் அலவன்ஸ் ஏதும் தரப்போவதில்லை என்பதாலும் யாரும் அவனிடம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவன் எல்லோரிடமும் சகஜமாகவே பேசிப்பழகினான். பேசிக்கொண்டே சிரித்தால் ஜோக் அடிக்கிறான் என்று பொருள். நான் முதன் முதலில் அவனைப்பார்த்துதான் பயந்தேன். அவனது அதிகாரத் தோரணையும் அதற்கு பொறுந்தாதத் தோற்றமும் என்னைக் குழப்பமடைய வைத்தது. அமீர், அவன் கொஞ்சம் மனப்பிறழ்ச்சி உள்ளவன் என்றும் முதலாளியின் உறவினர் என்பதால் அவன் குடும்பத்துக்கு உதவும் பொருட்டு வேலைக்கு வைத்துள்ளதாக விளக்கினார். அப்போதுதான் கவனித்தேன். அவன் நடமாட்டத்தை யாரும் அங்குக் கண்டுக்கொள்ளவில்லை. அவனாகவே தன்னை அந்தத் தொழிற்சாலையின் முக்கியஸ்தராக நம்பிக்கொண்டிருந்தான்.

“கல்லூரி எதற்கும் போகாமல் இந்த வேலைக்குப் வரச்சொல்லி யார் உன்னை அழைத்தது?” என மஸ்தூராதான் முதல் நாள் பேச்சுத்துணையாக வந்தாள்.

“அப்பாதான்” என்றேன். அவள் மீதிருந்து வந்த பௌடர் வாசனை தொழிற்சாலை எங்கும் பரவியிருந்த பிளாஸ்டிக் நெடியுடன் கலந்து அதிகாலையில் ஒருவித கிரக்கத்தைக் கொடுத்தது.

அச்சு வார்க்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருள்களின் மூலை முடுக்குகளில் பிசிரில்லாமல் கத்தரித்துக் கொடுப்பது அவள் வேலை. ஏதோ ஒரு இயந்திரத்தினுள் இருக்கும் உபரி பாகத்தின் ஒரு பகுதியைத் தயாரிக்கும் வேலைதான் அங்கு நடந்தது. அது என்ன உபரிப்பாகம் என எங்கள் யாருக்குமே தெரியாது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என மட்டும் அறிவோம்.

“ஏன் மேற்கொண்டு படிக்கப் பணம் இல்லையா? அதுக்குதான் இங்குச் சம்பாதிக்க வந்தாயா?” மீண்டும் அவள் கேட்டபோதுதான் அவள் அழகாக இருக்கிறாள் எனத் தெரிந்தது. அழகான பெண்கள் என்னப்பார்த்துப் பரிதாபப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் வீட்டில் அடங்கி இருக்காததால் அப்பா கிடைக்கும் வேலைக்குப் போகச்சொன்னதையும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு விண்ணப்பம் எழுதிப்போட்டுள்ளதையும் கூறினேன். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் படிக்க பணம் தேவையில்லை எனச்சொல்லிவைத்தேன்.

மலாய் பெண்கள் எப்படித்தான் தங்கள் அழகை இப்படிப் பேணுகிறார்களோ என வியப்பாக இருந்தது. அவர்கள் செய்யும் தொழில் குறித்தெல்லாம் சங்கடம் அடைந்து நான் பார்த்ததில்லை. வேலைக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் யார் பார்த்தாலும் ஓர் அரசு உயர் அதிகாரி போல இருக்கும் அவர்களின் பொழிவு. அம்மாவை நான் அப்படிப் பார்த்ததில்லை. அவர் வேலை செய்த மர ஆலையிலிருந்து திரும்பும் அனேகமான பொழுதுகள் கருவடைந்த முகத்துடன் காணப்படுவாள். உடையில் படிந்துள்ள மரத்தூள் காற்றில் கலந்து தும்மலை உண்டாக்கும்.

“உன் அப்பாவுக்கு உன் மேல் அக்கறை ” என்றாள்.

என் செலவுகளை நானே நிவர்த்தி செய்துக்கொள்ள , நான் உறுதியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என அப்பா கட்டளையிட்ட நாளுக்கு முதல் வாரம் நான் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உடல் முழுவதும் ஆங்காங்கு சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தது. கால் மூட்டில் விழுந்த அடி மட்டும் பலமானது. உண்மையில் அது பெரிய விபத்துதான். உயிர் போகக்கூடிய விபத்து. எமன் திட்டமிட்டபடி விபத்து நடந்திருந்தால் உடலில் ஒரு காயம் இல்லாமல் தலை மட்டும் தெறித்திருக்கும். நண்பர்கள் தோளில் தாங்கியபடி காயத்துடன் வந்த என்னை வீட்டுக்கு வெங்காயம் வாங்கி வருவதைப் போல பார்த்தார் அப்பா. ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்துகொண்டார். நாளெல்லாம் அவ்வறையில் சித்தியுடன் என்னதான் ஆராய்ச்சி செய்கிறாரோ என எரிச்சலாக இருந்தது. நான் அதிகம் பயந்திருந்தேன். உறக்கத்தில் தூக்கிவாரிப்போட்டது. தனிமை பயமுறுத்தியது.

நான் அம்மாவை அதிகம் நினைத்து ஏங்கியது அன்றுதான். சின்னவயதில் நான் ஹெர்குளஸ் சைக்கிளில் அதிகம் கீழே விழுந்து வாறியுள்ளேன். அம்மா பதறி அடித்து ஓடி வருவாள். அது தாத்தாவின் ஹெர்குளஸ் சைக்கிள். அதை ஓட்ட எனக்கு உயரம் போதாவிட்டாலும் நடுவில் வலது காலை விட்டு ஒருமாதிரியாக இடுப்பைச் சமன் செய்து ஓட்டியே விடுவேன். அதிகம் காயம் ஏற்படுத்திக்கொள்வதால் கேட்ட விலைக்கு அதைவிற்று அம்மா மினி சைக்கிள் ஒன்று வாங்கினாள். அதில்தான் அம்மா வேலைக்குச் செல்வாள். அம்மாவின் வேலை செய்த மர ஆலை வீட்டிலிருந்து முன்னூறு நானூறு மீட்டர் தொலைவில் இருக்கும். ஐந்து மணிக்கு சங்கு ஊதும் முன், நான் அம்மாவுக்காகத் தொழிற்சாலையின் வெளியே காத்திருப்பேன். உள்ளே நுழைய அம்மா அனுமதித்ததே இல்லை. ஆபத்தான இயந்திரங்களாலும் மரச்சட்டங்களைச் சுமந்து திரியும் ஃபொர்க்லிப்டுகளாலும் எனக்கு ஆபத்து வரலாம் என அம்மா பயந்தாள்.

வீடுவரும்போது சைக்கிளை மிதித்தபடி அம்மாவை வட்டமடித்து வருவேன். சைக்கிளில் முன்னேறிச்சென்று மீண்டும் திரும்பிவந்து அம்மாவை வட்டமிடுவேன். அம்மா வீடு வந்து சேர்வதற்குள் நான் ஒன்றிரண்டு முறை சைக்கிளில் வீட்டின் வாயிலைத் தொட்டு மீண்டும் அம்மாவை வட்டமிட்டிருப்பேன். அப்போதெல்லாம் அம்மாவின் முகத்தில் களைப்பைக் கடந்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொண்டிருக்கும். அது சைக்கிள் ஓட்ட கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும் எனக்கு. அவள் மேலும் பயப்படும்படியாக வேகத்தை அதிகப்படுத்தி சாகசம் செய்வேன்.

ஒருமுறை தனபாலுவுடன் பள்ளிமுடிந்து திரும்பும்போது சறுக்கி விழுந்ததில் நெற்றியில் காயம்பட்டது. வீடு திரும்பிய அம்மா தன் உடல் முழுவதும் ரணமானதுபோல துடித்தாள். இரவெல்லாம் தலையைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள். நான் அவள் கண்களையே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். நிரந்தரமான துக்கம் அதில் குடியிருந்தது. ஒரு பதற்றத்தை அவ்வளவு நேரம் அவளால் கண்களில் நீட்டித்து வைத்திருக்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. திட்டிப்போடாமல் வேலைக்குப் போனால் கிடைக்கும் ஊக்கத்தொகையை மறுநாள் தியாகம் செய்திருந்தாள். அன்றிலிருந்து தனபால் எங்கள் குடும்ப எதிரியானான். என் அம்மாவும் அவர் அம்மாவும் வீதியில் மாறி மாறி காரித்துப்பிக்கொண்டனர். அது அவர்களின் அணுஆயுதம். ஒருவர் மீது தெறிக்காமல் மற்றவர் தப்பிச்சென்று பதில் தாக்குதல் செய்ய வேண்டும். நான் மோட்டாரில் விழுந்து, காயம்பட்டு வரும் காட்சியை அம்மா பார்த்திருந்தால் அவள் கண்கள் எப்படி மாறியிருக்கும் என யோசித்துப்பார்த்தேன். சரியாக நினைவுக்கு அகப்படவில்லை. அம்மா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்ட நிலையில் அவள் பாவனைகள் மறந்திருந்தன. நெடுஞ்சாலைத் தடுப்புஇரும்புக்கு அருகில் சென்று தப்பிய தலையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டேன். மரணத்துக்கும் வாழ்வுக்குமான இடைவெளிக்கு வெறும் ஒரு சென்டிமீட்டர் மட்டும்தான் .

தொழிற்சாலையில் எல்லாம் வசதியாகத்தான் இருந்தது. சாமான் கொட்டாய்தான் பழைய முறையில் தரையோடு இருந்தது. எனக்கு அதில் போனாலும் வரும். சிலர் வராது என்பார்கள். உயரத்தில் இருந்து குளத்தில் வீழ்வது ஒரு சாகசம் என்றால் தரையோடு மிதப்பதும் ஓர் இன்பம்தானே. ஆனால் முட்டி தேய்ந்ததில் ஒழுங்காக அமர முடியவில்லை. கைகளைத் தரையின் ஊன்றி இடதுகாலை மடக்கி வைத்து அடிப்பட்ட வலது காலை நேராக நீட்டிவைத்துக்கொண்டு சர்க்கஸ் செய்தபடி குறிதவறாமல் சாகசம் செய்துவரும்போது உடலைத் தாங்கிக்கொண்டிருந்த இடதுகால் நடுங்கும். அந்தக் கால் வலியோடு இயந்திரத்தின் மேல் புறம் இருக்கு வாய்ப்பகுதியில் பிளாஸ்டிக் செய்யும் மூலப்பொருளின் மூட்டையைச் சுமந்து சென்று கொட்டுவது சாத்தியப்படாது. என்னுடன் கட்டிங் பகுதியில் இருக்கும் வங்காளதேச இளைஞனான ஜமாலிடம்தான் முதல் வாரத்தில் உதவி கேட்டேன்.

ஜமால் திமிர் பிடித்தவன் என வேலைக்குச் சேர்ந்து ஒரு நாள் ஆவதற்குள் தெரிந்துவிட்டது. மூன்று பகுப்புகளாக வேலை நடக்கும் தொழிற்சாலையில் ஜமால்தான் என்னுடைய சகா. மோல்டிங் இயந்திரத்திரத்தில் சூடாக வடிவமைந்து , சில கத்திகளால் வெட்டப்பட்டு இயந்திரத்தின் உள்ளேயே தயாராகிக் காத்திருக்கும் பிளாஸ்டிக் பொருளை கவனமாகக் கைவிட்டு எடுத்து கூடையில் போடுவதுதான் கட்டிங் பகுதியின் இருந்த எங்கள் இருவரின் வேலை. கூடையில் போடப்பட்ட பொருள்களை எடுத்துச்சென்று சுற்றி இருக்கும் அதன் பிசிறுகளைக் கத்தரித்துப் பெட்டியில் அடுக்குவது மஸ்துரா உள்ள பகுதியினரின் வேலை. இறுதியாக அவற்றின் தரத்தைப் பார்வையிட்டு பெட்டியில் கணக்கிட்டு அடுக்கி லாரியில் ஏற்ற மூன்றாவது பகுதியில் ஒரு வங்காளதேச இளைஞன் இருந்தான். மலாய் இளைஞனுக்குக் குறிப்பிட்ட ஒரு வேலை என இல்லை. காலையில் வந்ததும் இயந்திரங்களுக்கு அடியில் ஒழுகி தேங்கி இருக்கும் கறுப்பெண்ணையை அகற்றி சுத்தம் செய்வது, கழிவறையைச் சுத்தம் செய்வது, எலிக்கு வைத்த விஷ உணவைத் தின்று பூனையும் செத்துக்கிடந்தால் இரண்டையும் அப்புறப்படுத்துவது, என ஓடும்பிள்ளையாக இருந்தான். ஜமால்தான் அவனுக்கு வேலைகளை ஏவுவான். வங்காள தேசத்திலிருந்து பிழைப்புத்தேடி வந்தவன் இங்குள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதில் எனக்குக் கோபம்.

அமீர், ஜமாலை நம்பிதான் அந்தத் தொழிற்சாலையை நிர்வாகித்தான். எந்த இயந்திரத்தில் பழுதென்றாலும் ஜமாலினால் சரி செய்ய இயலும். எங்கோ வெளிநாட்டில் இருந்து படியளக்கும் முதலாளி அமீரை நம்பினான். அமீர், ஜமாலை நம்பினான். மற்றொரு வங்காளதேச இளைஞன் ஜமாலிடம் அவ்வளவாக முகம் காட்டுவதில்லை. நான் வேலைக்கு வரும்முன்பே ஏதோ சச்சரவு என்றார்கள். ஜமால் அலட்டலே இல்லாமல் அந்த வங்காள இளைஞனின் தாடையை உடைத்தான் என காசிம் அபிநயமெல்லாம் செய்து காட்சிப்படுத்தினான். ஜமாலுக்குச் சற்றும் குறையாத வகையில் அந்த வங்காள இளைஞனின் உடல்வாகு இருந்தது எனக்கு ஜமாலிடம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வைக் கூட்டியது. மஸ்தூரா மட்டும் அவனிடம் கூடையை எடுக்கும்போதும் வைக்கும்போது குழைவாள். ஜமால் பல் காட்டாமல் சிரிக்கக் கற்று வைத்திருந்தான்.

பெரும்பாலும் அமீர் தொழிற்சாலைக்கு வருவதில்லை. அலுவலகம் வேறொரு இடத்தில் இருந்ததாலும் அங்கு அவன் மனைவி குமஸ்தாவாகப் பணியாற்றியதாலும் வீட்டில் செய்ய வேண்டிய கடமைகளை அலுவலகத்திலும் அலுவகத்தில் செய்ய வேண்டியதை வீட்டிலும் மாற்றி மாற்றி செய்து முடித்தனர் எனக் கேள்விப்பட்டதுண்டு. அமீர் வராத நேரங்களில் ஜமாலின் கைதான் ஓங்கி இருக்கும். 15 நிமிடத்தில் அனுப்ப வேண்டிய நான்கு கூடைகளில் மூன்று என்னது, ஒன்று அவனது என என் வேலை அதிகரிக்கும். ஜமால், எவ்வித அவசரமும் இல்லாமல் மோல்டிங்கில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கைச் சேகரிப்பான். திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவனாக கைப்பேசியை எடுத்துச்சென்று வங்காள மொழியில் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருப்பான். முதல் அடுக்கில் தாமதமானால் எல்லா வேலைகளும் தாமதமாகும். அடுத்தடுத்த அடுக்கில் உள்ளவர்கள் ஜமாலை கேள்வி எழுப்ப திரணியற்றவர்களாகி என்னைக் கோபிப்பர். அவனிடம் ஓரிரு முறை சொல்லியிருக்கிறேன். அவன் காதில் விழாததுபோல வேலையை இன்னும் மெதுவாக்குவான். அவனது திடகாத்திரமான சரீரம் என்னை எதையும் அதிகம் பேசவிடாமல் தடுத்தது. கோபத்தையோ அவமானத்தையோ முகத்தில் காட்டிக்கொள்ள மாட்டேன். அப்படிக் காட்டினால் எதிர்வினையாற்ற வேண்டும். எதிர்வினை ஆற்றினால் சேதாரம் எனக்குதான். கொடுக்கும் 600 வெள்ளி சம்பளத்துக்கு இரண்டு பேரின் வேலையை நான் ஒருவனே செய்துத்தொலைத்தேன்.

அமீர் இருக்கும்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். ஜமாலினால் மேற்பார்வையாளருக்கு ஏற்றதுபோல நடிக்க முடிந்தது. அனைவரையும் அதட்டி மிரட்டி வேலை வாங்குவது முதல் என்னிடம் போட்டிப்போட்டு மூன்று கூடை வரை பதினைந்து நிமிடத்தில் செய்துமுடித்து மூலப்பொருளையும் மேலே ஏறி இயந்திர வாயில் கொட்டுவதுவது என வியர்த்து விறுவிறுப்பான். மேற்பார்வையாளர் இருந்தால் மதிய உணவு மாலை உணவு என அவனுக்குக் கலை கட்டும்.

நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டாவது வாரத்தில் இரவு ஷிப்ட் கிடைத்தது. இரவு ஷிப்டில் முதல் இரண்டு பகுதிகளில் மட்டுமே வேலை ஓடும். என்னுடன் ஜமால், காசிம் மற்றும் மஸ்தூரா இருந்தனர். அன்றுதான் ஜமால் என்னிடம் கொஞ்சம் கனிவாகப் பேசினான். இரவு ஷிப்டுக்கு உடல் பழக வேண்டும் என்றும் உறக்கம் இல்லாமல் சிக்கலான இயந்திரங்களுடன் இரவில் புலங்குவது கடினம் என்றான். மூலப்பொருள் கட்டிவைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளைத் தற்காலிக மெத்தையாகப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னான்.

அன்று கனவிலும் அந்த விபத்து வந்து தொலைத்தது. கார் பின்புறம் இடித்தவுடன் மோட்டாரில் இருந்து பறக்கிறேன். தலைக்கவசத்தில் பெல்ட் போடாததால் அது சுழன்று கழன்று பறக்கிறது. நான் கீழே விழுகிறேன். சரியாக நெடுஞ்சாலை இரும்புத்தடுப்பை நோக்கி தலை செல்வதை தடுக்க முடியவில்லை. தலையில் இடித்தால் கனவில் மூளையைப் பார்க்கலாம். அம்மா இதைப்பார்த்தாள் அவள் கண்கள் என்னவாக மாறும் என நினைக்கும்போது அம்மா வருகிறாள். அவள் அருகில் இருப்பதாக உள்ளுணர்வு. கனவில் உள்ளவர்களுக்கும் உள்ளுணர்வு உண்டுதான்போல. நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க தேடுகிறேன். மோட்டார் இஞ்சினின் இரைச்சல் அதிகமாகக் கேட்கிறது. அம்மா கண்களில் அகப்படும்முன் புல்தரையில் விழுகிறேன். பலநாள்களாக வெட்டப்படாத புல்தரை என்னை உள்வாங்கி மேலே எம்பித்தள்ளுகிறது. அதன் பஞ்சுத்தன்மையால் நான் மீண்டும் மேலெந்து பறக்கிறேன். மீண்டும் கீழ் நோக்கி வரும்போது விழிப்பு வந்தது. உண்மையில் மூட்டை குலுங்கி என்னை மேலெம் கீழும் உலுக்கிக்கொண்டிருந்தது. மோட்டார் இஞ்சின் ஒலி காணாமல் போய் காசிமின் குரட்டை ஒலி காதுகளின் அருகில் கேட்டது. சுதாகரித்துக்கொண்டு கண்களைக் கசக்கி பார்த்தபோது மூட்டைகளில் அரண் அமைத்து மஸ்தூராவிடம் ஜமால் ஆக்ரோஷமாக இயங்கிக்கொண்டிருந்தான். நான் கண்களையும் காதுகளையும் இறுக்க மூடிக்கொண்டேன். அம்மா அலறுவதும் அப்பாவும் சித்தியும் அம்மாவின் காலில் விழுந்து கெஞ்சுவதும் கேட்கிறது.

மறுநாளிலிருந்து இருவரின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். “உனக்கு வேண்டுமானால் சொல். மஸ்தூராவிடம் பேசுகிறேன். ஆனால் அமீரிடம் விசயம் போனால் தொலைத்துவிடுவேன்” என ஜமால் மிரட்டி வைத்தான். அவன் சொல்லும்வரை அமீரிடம் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் அதற்கும் மறுநாள் இதே கதை நடக்கவே அமீர் நள்ளிரவில் தூக்கம் கெடுத்து தொழிற்சாலை வரும்படி ஆனது. இருவரும் கைலியும் கலவியுமாக மாட்டிக்கொண்டனர். மானேஞ்சர் ஜமாலை ஒன்றும் சொல்லவில்லை. குத்தகைத் தொழிலாளி என்பதால் மஸ்தூராவை மட்டும் 24 மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்கினார். எனக்கு மஸ்தூராவின் மேல் இரக்கம் வரவில்லை. மறுநாள் மஸ்தூராவின் கணவனும் அவன் சகாக்களும் இரவில் நுழைந்து ஜமாலை புரட்டி எடுக்கும்வரை அவளுக்கு திருமணம் ஆனது தொழிற்சாலையில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஜமால் எல்லா அடிகளையும் வாங்கிக்கொண்டானே தவிர திரும்ப அடிக்கவில்லை. வலித்ததாகவும் காட்டிக்கொள்ளவில்லை. காசிம் வந்தவர்களைத் தடுக்க பெரும்பாடு பட்டான். அவனது ஊளை இரவின் அடர்த்தியைக் கிழித்தது. ஜமாலும் நானும் அன்றுமுதல் எதிரும் புதிரும் ஆனோம். அதற்கு முன்பும் அப்படித்தான் என்றாலும் இது அதிகாரப்பூர்வ பகையானது. மேற்பார்வையாளர் ஜமால் தாக்கப்பட்டது குறித்து போலிஸில் புகார் செய்யாதது போலவே அவனிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஜமாலும் கொஞ்சம் அடங்கிப்போயிருந்தான். இன்னொரு வங்காள இளைஞன் மட்டும் அவ்வப்போது உற்சாகமாக வங்காளப்பாடல்களைப் பாடுவான்

நான் குடிக்கக் கொண்டுவந்த நீரில் ஜமால் எச்சில் துப்பியதில் இருந்துதான் எங்கள் இருவருக்கும் பனிப்போர் தொடங்கியது. நான் பதிலுக்கு அவன் வாங்கி வைத்த உணவை நாய்க்கு உண்ணக்கொடுத்து அவனைப் பட்டினி போட்டேன். எனக்கு அவன் மேல் பயம் குறைந்து போயிருந்தது. ஜமால் என்னிடம் விடாமல் வம்பு செய்யத்தொடங்கினான். கூடையில் உள்ள என் பங்கு பிளாஸ்டிக் பொருள்களை அவனது கூடையில் கொட்டி கடுப்பேற்றுவான். நான் சேதமான பிளாஸ்டிக்குகளை அவன் கூடையில் கலந்துவிட்டு தரம் பிரிக்க வைப்பேன். இருவரும் ஒருவர் மீது மற்றவர் புகார் செய்துக்கொள்ளாமல் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தோம். தொடக்கத்தில் இது எரிச்சலாக இருந்தாலும் நாளடைவில் எங்களுக்குள் இது ஒரு விளையாட்டுபோல ஆனது. இன்று என்ன நடக்கும் என நானும் அவனும் மாறி மாறி ஆர்வத்தோடு காத்திருந்து தாக்கப்பட்டு எதிர்த்தாக்குதல் செய்வோம். சில சமயம் தாக்குதல் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். ஒரு இரவு ஷிப்டில் அவன் என் மோட்டார் காற்றைப்பிடுங்கிவிட்டிருந்தான். தள்ளிக்கொண்டே அதிகாலையில் வீட்டுக்குச் செல்லும்முன் அவன் தங்கும் மேல்த்தள அறைக்கு ரகசியமாகச் சென்று மெத்தையில் மூத்திரம் பெய்து வைத்தேன். பகலெல்லாம் அவன் தூங்கவில்லை என வங்காள இளைஞன் சொல்லிச் சொல்லிச் சிரித்தான்.

அன்று அப்படி சிக்கல் இல்லாமல் இருவரும் வேலையில் மும்முறமாக இருந்தபோது வேலையே ஒரு விளையாட்டுபோல ஆனது. யார் சீக்கிரமாக கட்டிங் இயந்திரத்திலிருந்து கையைவிட்டு உருகி வந்த பிளாஸ்டிக்கை சூடு தணியும் முன் எடுத்துக் கூடையில் போடுவதெனப்போட்டி. கூடையில் போடும் முன் அதில் ஒட்டி இருக்கும் தேவையில்லாமல் நீண்டிருக்கும் பகுதி ஒன்றை பிய்த்து எடுக்க வேண்டும். ஜமால் அதை என் மீது வீசினான். அதன் கூரியப்பகுதி சுருக்கென வலியைக் கொடுத்தது. அதையே நான் திரும்ப செய்தேன். உருகி வந்து தயாராக இருக்கும் பிளாஸ்டிக்குக்கு மூன்று வினாடிகளாவது கொடுத்தால்தான் அதன் சூடு தணிந்திருக்கும். அதை எடுத்து, பாதுகாப்புக் கதவைச் சாற்றியவுடன் அடுத்த பிளாஸ்டிக் உள்ளே அச்சாகும். எஞ்சியதை வீசி அடிக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்துப்பரிகசித்தோம். ஜமால் கட்டிங் இயந்திரத்திலிருந்து பொருளை எடுப்பதில் கெட்டிக்காரன். அவன் விடும் இரண்டடிக்கும் என்னால் ஒரு அடியைத்தான் பதிலாகத் தர முடிந்தது. ஏளமாகச் சிரித்துக்கொண்டே ஜமால் இடைவிடாமல் என்மீது எஞ்சிய பிளாஸ்டிக்கை வீசி எரிச்சலடைய வைத்தான். பிளாஸ்டிக்கின் சூட்டைத் தாங்கும் பக்குவம் என் விரல்களுக்கு வராததால் நான் கொஞ்சம் தாமதித்தே பிடுங்கி வீச வேண்டி இருந்தது. தன்னிச்சையாக உருவான விளையாட்டு உக்கிரமாகிக்கொண்டிருந்தது.

அப்படி நான் வீசி அடித்து அடுத்த பிளாஸ்டிக்கை எடுத்துக்கொண்டே அவனைப்பார்த்து பரிகசித்தபோதுதான் அவன் முகம் தீடீர் என மாறியது. “ஏய் ஏய்” என என்னை நோக்கிக் கத்தினான். என்ன ஏதென்று என்னால் சுதாகரிக்க முடியவில்லை. பாதுகாப்புக்கதவை என்னை அறியாமலேயே மூடியிருந்தேன். உள்ளே என் கைகள். என்னால் எடுக்க முடியாதபடி கதவின் இடுக்கில் சிக்கிக்கொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கனமான இரு இரும்பு சட்டங்கள் மூன்று விரல்களை நசுக்கத்தொடங்கின. ஜமால் ஓடி வந்து ஏதேதோ விசைகளை அழுத்தினான். எனக்கு என் விரல் எலும்புகள் முறியும் ஓசைக் கேட்டது. இயந்திரம் கையை விடுவித்ததும் விரல்கள் நசுங்கி ஒன்றின்மேல் மற்றொன்று முயங்கியிருந்தன. ஜமால் என் கை மணிக்கட்டை அழுத்திப்பிடித்தான். எனக்கு வலிக்கவில்லை. மரப்புக்கட்டியதுபோல விரல்களில் அதிர்வு இருந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட என்னை இழுத்துக்கொண்டு கிளினிக்கு ஓடினான். அவன் முரட்டுப்பிடிதான் மணிக்கட்டை நோக வைத்தது. கிளினிக்கில் முதல் சிகிச்சைக்குப் பின் டாக்சியில் பெரிய மருத்துவமனை செல்லும்போது மயக்கமாகிவிட்டேன் எனச்சொன்னார்கள். மயங்கும்வரை நான் ஜமாலின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

விழித்தபோது கையில் பெரிய கட்டு. விரல்கள் உள்ளே பத்திரமாக இருப்பதாகவும் ஆறியவிடன் அதன் வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கும் என்றார் டாக்டர். எந்த பிசியோதிரோப்பியாலும் காப்பாற்ற முடியாமல் என் நடுவிரலின் முன் புறம் மண்வெட்டி போல வளைந்து இருந்தது. நரம்பு வெட்டுப்பட்டதால் அதில் சுரணையோ அசைவோ இருக்காது எனத்தெரிந்தது. வேலைக்குச் சேர்ந்து ஒருமாதமே ஆன நிலையில் சொக்சோ கிடைக்க மேலும் சிறிது நாள்கள் வேலை செய்ய வேண்டுமெனக் கூறினார்கள். மெதுவேலை செய்ய இன்று அனுமதிக்கப்பட்டு தொழிற்சாலைக்குள் நுழைந்தபோதுதான் ஜமால் என் நடுவிரலை ஆபாசமாகக் கிண்டல் செய்யத்தொடங்கினான்.

அமீர் அருகில் வந்தார். தோளைத்தட்டிக்கொடுத்தார். நலம் விசாரித்தவர் “ஜமால் இல்லையென்றால் உன் கைகளைக் காப்பாற்றியிருக்க முடியாது. அதற்கென அவன் கிண்டலை நீ பொறுத்துப்போக வேண்டியதில்லை. நான் அவனிடம் பேசுகிறேன்” என்றார்.

நான் பரவாயில்லை எனக்கூறிவிட்டு மூன்றாவது பகுதிக்கு பெட்டிகளை அடுக்கச் சென்றேன். டாக்சியில் நான் மயங்கும் வரை ஜமாலின் முகத்தில் அம்மாவின் கண்கள் இருந்ததை அமீரிடம் எப்படிச் சொல்வதென தெரியவில்லை.

– மார்ச் 2017 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *