செப்புத் தூக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 4,052 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பகல் பதினொன்று இருக்கும்.

வீதியில் நடந்து செல்பவர்களை சிறியவர் பெரியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் தன் சுடுகதிர் வீச்சால் வறுத்தெடுக்கும் சூரியன், தன் வேலையில் சற்று முனைப்பைக் காட்டத் தொடங்கியிருந்த நேரம்.

வீட்டுப் பெரியவர்கள் மார்க்கெட் சென்று வந்த களைப்பில் அன்றைய நாளேட்டில் முகம் புதைந்து கிடைந்தார்கள். ‘சல்லிசாக’ ஆண்கள் வாங்கி வந்திருந்த மீனின் நாற்றத்தைத் தாங்க முடியாமல், மனதுக்குள் திட்டியபடி – வேறுவழியின்றிச் சலிப்புடன் அவன்

பெண்கள் மீன்களை ஆய்ந்து கொண்டிருந்தார்கள்,

வக்திற்கு வக்த் மட்டுமே வாய் மலரும் பெரிய பள்ளி வாசல் ஒலிபெருக்கி, வழக்கத்திற்கு மாற்றமாய் ஒலிக்கத் தொடங்கியபோது ஊரில் அனைவரின் காதுகளும் சட்’டெனக் கூர்மையாகி ஒலிபெருக்கியின் அன்றைய சிறப்பு ஒலிபரப்பைக் கேட்கத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டன.

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், பெரிய பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த செப்புத் தூக்கி’அப்துல் ஜப்பார் மௌத்து. இன்று மாலை நாலு மணிக்கு கிதர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.”

ஒலி பெருக்கி மூன்று முறை ஒலித்து ஓய்ந்தது.

எல்லாருடைய நாவுகளும் சொல்லிவைத்தாற்போல் அனுதாப வார்த்தைகளால் அதிர்ந்தன.

பாவம், அப்துல் ஜப்பார்! இந்த ஊருக்கு உழைப்பதற்காகவே பிறப்பெடுத்த விசித்திரமான ஒரு ஜீவன், அவன்!

அவனைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக் கொள்ளாதவர்கள் அந்த முஹல்லாவில் ஒருவர் கூட இல்லையென்று அடித்துக் கூறலாம்.

கல்யாண வேலையா? வீட்டு வாசலில் நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்ட ஆட்கள் தேவையா? கல்யாண வீட்டில் மிஞ்சிப் போன சோற்றை – உனக்கு எனக்கு என்று அடித்துக் கொண்டு நெருக்கும் முஸாபிர்களுக்குப் பகிர்ந்தளித்துச் சமாளிக்க வேண்டுமா? – எல்லாவற்றுக்கும் ‘செப்புத் தூக்கி’ அப்துல் ஜப்பார் தேவைப்பட்டான்

கல்யாண வீட்டு வேலைகள் என்றில்லை, மையித்து வீட்டுக் காரியங்களுக்கும் அவன் உதவி தேவைப்பட்டது.

மஞ்சுப் பெட்டிக்குச் சொல்லியனுப்ப, குழி வெட்டியைக் கூப்பிட்டு வர, கபன் துணி மாற்ற ஆட்களை அழைத்து வர, சமயம் பார்த்து தலைமறைவாகும் மோதினாரை எப்படியாவது கண்டுபிடித்து மையித்து வீட்டின் முன் கொண்டு வந்து நிறுத்த, எல்லா முஹல்லாவைச் சேர்ந்த பள்ளிவாசல்களுக்கும் தகவல் கொடுத்து மௌத்துச் செய்தியை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்ய ’செப்புத் தூக்கி’அப்துல் ஜப்பார் தேவைப்பட்டான்.

‘செப்புத் தூக்கி’என்ற பட்டப் பெயரை அவன் பெற்றதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு.

மையித்து வீட்டில் மையித்து ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு, அதை அடக்கும் இடத்தில் காத்திருக்கும் முஸாபிர்களுக்குக் கொடுப்பதற்காக, கப்ருஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும் பொறிச்ச பரோட்டா – வாழைப்பழம் அடங்கிய செப்பை எடுத்துச் செல்லும் பொறுப்பை அவன் ஒருவன்தான் அந்த ஊரில் பொறுப்புணர்வுடன் செய்து வந்தான். எனவே ’செப்புத் தூக்கி’என்று ஊர்மக்கள் அவனைச் செல்லமாக அழைத்தார்கள்.

ஊரில் நடக்கும் “நல்லது கெட்டது” போன்ற வைபவங்கள் போக மற்ற நேரங்களில் அவனுடைய நிரந்தர இருப்பிடம் – பெரிய பள்ளிவாசல் திண்ணைதான்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்த கலையழகு மிகுந்த, அந்தப் பள்ளிவாசலில் எல்லா வக்த்திலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வரிசையில் நிற்பார்கள்.

ஆனால், இவன் மட்டும் தொழ மாட்டான். எப்படித் தொழ முடியும்? தொழுபவர்கள் அத்தனைபேரின் புதுச் செருப்புகளும் இவனுடைய கண்காணிப்பில் இருக்கும்போது, அந்தப் பொறுப்பை உதறித் தள்ளிவிட்டு ஓடிவர இவனால் முடியுமா?

செருப்புகளைக் கண்காணிக்கும் பொறுப்பை இவன் ஏற்றுக் கொண்ட பிறகுதான் – அனேகமாக – புதுச் செருப்பு வாங்கிய அனைவரும் தைரியமாகப் பள்ளிவாசலுக்கு வரத் தொடங்கினார்கள். இல்லையென்றால் தொழுகை முடிந்து வருவதற்குள் செருப்புகளுக்குக் கால் முளைத்துத் தைரியமாக ஓடிவிடும்.

மேற்கில் குனிந்து தலை தரையைத் தொட்டு முத்தமிட்டாலும், மனம் மட்டும் கிழக்கில் வளைந்து கழற்றி வைத்த செருப்பு பத்திரமாக இருக்கிறதா என்று உஷாராகக் கண்காணித்துக் கொண்டிருக்கும். அந்தக் கண்காணிப்பு வளையத்தையும் கடந்து செருப்புகள் காணாமல் போய்க்கொண்டிருந்த தொல்லை – இவன் அதற்குப் பொறுப்பேற்ற பிறகுதான் மாறத் தொடங்கியிருந்தது.

வெள்ளிக்கிழமைகளில் ஜும் ஆ முடித்து திரளாகக் கலையும் கூட்டத்தில் விளம்பர நோட்டீஸ்கள் கொடுக்க, சங்கங்கள் விடுக்கும் பொருளாதார வேண்டுகோள்களைப் பொதுமக்கள் பார்வையில் எட்டச் செய்ய, ஊர்ப் பெரியவர்கள் பெருமையைப் பறைசாற்றும் அல்லது போலித்தன்மையைத் தோலுரித்துக் காட்டும் துண்டறிக்கைகளை விநியோகிக்க – இப்படி சகலத் தரப்புகளுக்கும் அவன் தேவையாக இருந்தான்.

சில நேரங்களில் முத்தவல்லிகளைத் தாக்கிக் கூட காரசாரமாகத் துண்டறிக்கைகள் வெளிவரும். அச்சாபீஸ் வரை செல்லத் துணியும் ‘முற்போக்குவாதிகள்’, விநியோகம் என்று வரும்போது செப்புத் தூக்கி அப்துல் ஜப்பாரிடம் ஒப்படைத்து விட்டு நைசாக நழுவி விடுவார்கள். என்ன செய்கிறோம் என்று தெரியாமலே எல்லாவிதமான பொதுக்காரியங்களையும் துணிந்து செய்யும் அப்பாவியாதலால் ஊர்ப்பெரியவர்களும் இவன் மீது கோபம் கொள்ளமாட்டார்கள்.

இப்படி ஊருக்குச் செல்லப்பிள்ளையாக இருந்த அப்துல் ஜப்பார் – ஊர்மக்களின் மௌத்துச் செய்திகளை எடுத்துச் செல்லும் தாதுவனாக விளங்கிய அப்துல் ஜப்பார் – இதோ, ஒலிபெருக்கியின் சோக முழக்கத்தில் – தன் பெயரையும் இடம் பெற்றச் செய்துவிட்டு – மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கின்றான்.

அஸர் தொழுகை முடிந்தது.

பள்ளிவாசலின் இடது கோடியில் இருந்த மிகப் பெரிய ஹாலின் மத்தியில் ஒரு பெஞ்சில், தலைமாட்டில் ஊதுபத்தி நறுமணத்தைக் கக்கிக்கொண்டு நிற்க, பக்கத்தில் யாரும் வந்து பார்க்கவில்லையே என்று கவலைப்படாமல், போர்த்தப்பட்ட கபன் துணிக்குள், அமைதியாகக் கண்மூடிக் கிடந்தான் அவன். “அப்பாடா! தொல்லை ஒழிந்தது” என்ற சந்தோஷம் அவன் முகத்தில் வியாபித்திருந்தது.

ஊர்மக்கள் சுரத்தெதுவும் இல்லாமல் மரத்துப் போனவர்களாய் ஆங்காங்கே குழுமியிருந்தார்கள். அனாதை மையித்து. எப்போது எடுத்தால் என்ன, எங்கே அடக்கினால் என்ன என்ற அலட்சியம் அனைவர் முகங்களிலும் தெரிந்தது.

அஸர் தொழ வந்தவர்களில் பாதிபேர் ‘தலைக்குமேல் ஒரு வேலையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு’ தலைதெறிக்க ஓடினார்கள், தொழுகை முடிந்து மக்ரிபு தொழுகைக்கு பாங்கு சொல்லும் வரை வழக்கம்போல் பள்ளித் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடிக்கும் இளைஞர் அணி என்றுமில்லாத அதிசயமாய் மாயமாக மறைந்து போனது.

மோதினார் முக்கிக்கொண்டே இறுதிச் சடங்குகளுக்குரிய கடமைகளைச் செய்தார். மையித்து எடுக்கும் நேரத்தில் இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு இருபது பேர் தவறினால், அதுவே ரொம்ப அதிகம்!

ஏழை மையித்தாக இருந்தாலும் பள்ளிவாசல் நிர்வாகம் ஒரு கண்ணியமான அடக்கத்திற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் பொறுப்பாகச் செய்திருந்தது.

எல்லா முத்தவல்லிகளும் – வராவிட்டாலும் இரண்டொரு முத்தவல்லிகள் – வேறு வழியில்லாமல் – வந்து நின்று மையித்துக் காரியங்களைக் கவனித்துக் கொண்டார்கள்.

ஏழை மையித்துக்களை அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சங்கம் ஒன்று தன்னுடைய தொண்டர் படையை வழக்கம்போல் அனுப்பி வைத்திருந்தது. தொண்டர்கள் எல்லோரும் விடலைகள். என்ன செய்வார்கள், பாவம்? இன்றைய மேட்னி ஷோ சினிமாவைக் கெடுத்து விட்டானே என்ற கோபத்தில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இறுதிச் சடங்குகளுக்கு உரிய வேலைகளைப் பரபரப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

இதோ – மையித்துப் பெட்டி வந்துவிட்டது. பெட்டியின் மேல் போர்த்த போர்வையும் பூப்படுதாவும் கூடத் தயார். தூக்கிச் செல்வதற்கும் ஆட்கள் தயாராகக் காத்திருந்தார்கள்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்களைத் தயங்க வைத்துக் கொண்டிருந்தது.

அதோ, அந்தச் செப்பு!

அடக்கத்தலத்தில் பசியுடன் காத்திருக்கும் முஸாபிர்களுக்கு விநியோகிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கும் செப்பு வழக்கம் போல் பொறிச்ச புரோட்டாவும் வாழைப்பழமுமாக நிரம்பி வழிந்து எல்லோரையும் பார்த்து இளித்துக் கொண்டிருந்தது – அந்தச் செப்பு !

வழக்கமாக. அதை எடுத்துச் செல்பவன், இதோ இறைவனின் பாதையில் தன் பயணத்தைத் தொடங்கி விட்டான்.

அவன் இறக்கிவைத்த செப்பை அவனுக்காகத் தோளில் சுமந்து தூக்கிச் செல்லத் துணிபவர் யார்?

வந்திருந்தவர்கள் எல்லாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு திகைத்துப்போய் நின்றார்கள்.

கொண்டு வந்து தந்தால் பங்கு போட்டுத் தின்னத் தயாராக இருக்கும் முஸாபிர் கூட்டம் சொல்லிவைத்தாற்போல் தலைமறைவாகியிருந்தது!

எல்லாரும் கோபமாக மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது!

தற்செயலாக, பெரிய பள்ளிவாசலில் அஸர் தொழ வந்திருந்த சுஹைல், வழக்கத்திற்கு மாறாகப் பள்ளிவாசலில் சிறு கும்பல் கூடியிருப்பதைப் பார்த்து என்ன ஏது என்று விசாரித்தான்.

அனாதை மையித்தாகக் கிடந்த செப்புத் தூக்கி அப்துல் ஜப்பாரின் மீது அவன் பார்வை படிந்தது; இதயத்தின் ஓரத்தில் இரக்கம் சுரந்தது.

சுஹைல் – இன்றைக்குச் சிங்கப்பூரில் மிகப் பெரிய தொழிலதிபர். சென்னையில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பம்பாயில் டைமண்ட் பிசினஸ், கொடைக்கானலில் பங்களா என்று கொடிகட்டிப் பறந்தாலும் அவன் உள்ளம் தறிகெட்டுப் போகாமல் இருந்தது ஓர் அதிசயமான விசயம்தான்.

மையித்து எடுப்பதற்கு உரிய நேரம் நெருங்கியும் இன்னமும் மையித்து எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டு குழப்பமடைந்தவன் பக்கத்திலிருந்த மோதினாரைப் பார்த்துக் கேட்டான்;

“என்னங்க மோதினாரே! ஏன் இன்னமும் தாமதப் படுத்துறீங்க? யாரையாவது எதிர்பார்க்கிறீங்களா?”

மோதினாரை முந்திக்கொண்டு முத்தவல்லி முதுகைச் சொறிந்து கொண்டு பதில் சொன்னார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை தம்பி, இந்தச் செப்பைத் தூக்கிப் போக ஒரு முஸாபர் பயலையும் காணோம்! எப்போதும் நம்ம ஜப்பார்தான் இதுமாதிரி வேலயக் கூச்சப்படாம செய்வான், இப்ப அவனே மௌத்தா போயிட்டான். அதுதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க. ஒங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்! நீங்க அதப்போய் கவனிங்க!”
தனக்காகப் பரிந்து பேசிய முத்தவல்லியை வழக்கத்திற்கு மாற்றமாகக் கோபத்துடன் பார்த்தான், சுஹைல்.

“என்ன மாமா, இப்படிச் சொல்லுறீங்க? ஊர்ல விழுந்தா எல்லா மெளத்துக்கும் செப்புத் தூக்கியவன் மெளத்தா போயிட்டான். ஆனா, அவனுக்கு செப்புத் தூக்க ஊர்ல ஒரு நாதியும் இல்ல. எவ்வளவு வேதனையான விஷயம்? மெளத்துக்குப் பிறகுதான் ஒருத்தனோட உண்மையான வாழ்க்கை ஆரம்பிக்குதுங்கிற உண்மை ஏன் நம்ம ஜனங்களுக்குப் புரிய மாட்டேங்குது? நம்பள கண்ணியப்படுத்திய ஒருத்தன பதிலுக்கு கண்ணியப்படுத்தறது நம்ம கடமை இல்லையா?”

கோபத்துடன் வார்த்தைகளை இறைத்த சுஹைல் வேகமாக நடந்தான். கவனிப்பார் இன்றி அனாதையாகக் கிடந்த செப்பினைத் தூக்கித் தன் தோளில் சுமந்தான்.

கூடி நின்ற கூட்டம் அப்படியே விக்கிப்போய் நின்றது! மோதினார் ’ஸஹாதா’ சொன்னார்.

செப்புத்தூக்கி அப்துல் ஜப்பாரின் மையித்து ஊர்வலம் புறப்பட்டது.

அதோ ஊர்வலத்தின் முன்னால் – செப்பைச் சுமந்தவனாய் – சுஹைல் கொஞ்சமும் வெட்கப்படாமல் கலிமா சொல்லிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறான்.

மஞ்சுப் பெட்டிக்குள் மெளத்தின் சகல அடையாளங்களுடனும் மெளனித்து ஜப்பார் தன் பயணத்தைத் தொடங்க, உயிர் மையித்தாக ’ஸஹாதா’சொல்லிக் கொண்டு நகர்ந்தது, அந்த ஊர்வலம்.!

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *