சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 4,077 
 
 

அது சாத்தியமா என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையிலிருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை கஷ்டப்பட்டுத்தான் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, கணக்குகள் போடப்படும்போது எல்லாக்கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும் போது கூட பத்து நிமிடத்திற்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத்தகவல்குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ்கிறோம்.

ஆகவே புறங்கையில் தற்செயலாக வந்து படிந்த நுரைக்குமிழியை கூடுமான வரை உடைக்காமல் அதன் வண்ணங்களைப் பார்க்கும் மனநிலையில்தான் நான் இருந்தேன். அனுதாபமான புன்னகையுடன் “அற்புதம்” என்று அவரிடம் சொன்னேன்.

அரைமணி நேரம் முன்புதான் விமான பணிப்பெண் வந்து அவரிடம் விமானத்தின் ஜன்னல் கதவை தாழ்த்தும்படி பணிவுடன் ஆணையிட்டுவிட்டுப் போனாள். அவர் “மன்னிக்கவேண்டும். மன்னிக்கவேண்டும்” என்று சொன்னபிறகு, விமானத்தின் உள்ளே அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதை திரும்பிப்பார்த்தார். அவர் மூடுவதற்காக பணிப்பெண் அங்கேயே முன் இருக்கையில் கை வைத்து சற்றே உடலை வளைத்து, வரையப்பட்டது போன்ற புன்னகையுடன் காத்து நின்றாள்.

அவர் ஜன்னல் கதவை கீழிறக்கும்போது கைகள் சற்று நடுங்குகின்றனவா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. இறக்கி மூடிவிட்டு “மன்னிக்கவேண்டும்” என்று மீண்டும் அவர் சொன்னார்.

ஜப்பானிய முகம். ஒவ்வொரு சொற்றொடருக்குப் பின்னாலும் சற்றே உடல் வளைத்து வணக்கம் சொல்வது போன்ற ஜப்பானிய பாவனை. ஜப்பானியர்கள் பணிவானவர்கள் என்ற சித்திரத்தை உலகமெங்கும் அளிப்பது அது. அந்தப் பணிவுக்குப் பின்னால்தான் உலகத்தின் மிக ஆணவம் கொண்ட, இனமேட்டிமை மனநிலை கொண்ட மக்கள் பிரிவு ஒன்று இருக்கிறது என்பதை என்னைப்போல உலகமெங்கும் சென்று வணிகம் செய்பவர்கள் அறிந்திருப்பார்கள்.

அவர் தன் இரு கைகளையும் கோர்த்து மடியில் வைத்துக் கொண்டார். அவை நடுங்கிக் கொண்டே இருந்தன. உதடுகள் மிக வெளிறி தோல் நிறத்திற்கே வந்துவிட்டிருந்தன. மஞ்சள் இனத்திற்கு இருப்பதே சிறிய உதடுகள். அவை நிறமிழந்தபோது இருப்பதே தெரியாமல் ஆயின. பணிப்பெண் “நன்றி” என்று சொல்லி மீண்டும் ஒரு அச்சிடப்பட்ட புன்னகையை அளித்துவிட்டு நடந்து சென்றாள்

ஜன்னல்கள் மூடப்பட்ட போது விமானத்தின் ஓசை அதிகரித்ததுபோல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. விமானத்தில் பெரும்பாலானவர்கள் கண்களுக்கு மேல் ஒளி மறைப்பானை இழுத்துவிட்டுக் கொண்டு மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருமணி நேரத்திற்கு முன்புதான் மதுவகைகள் சுழன்று சுழன்று வந்திருந்தன.

ஜப்பானியர் மிகவும் நடுங்குவதை உணர்ந்தேன். அவ்வளவாக குளிரவில்லையே என்று எண்ணியபடி மேலே குளிர்காற்று வரும் குழாயை பார்த்தேன். அது மூடப்பட்டிருந்தது. அவர் முகம் வெளிறியிருப்பதை மீண்டும் நோக்கினேன். குளிரில் புல்லரித்தது போல் கழுத்திலும் காதுகளுக்குப்பின்பக்கமும் மயிர்ப்புள்ளிகள் தென்பட்டன. என்னை நோக்கி மங்கலாகப் புன்னகை புரிந்து மீண்டும் திரும்பிக் கொண்டார். அவரை நோக்கக்கூடாது என்று முடிவு செய்து நான் கால்களை நீட்டி உடலை விரித்து சாய்ந்து அமர்ந்தேன்

அவர் தன் நடுங்கும் விரல்களை விமானத்தின் ஜன்னல் கதவின் மேல் வைத்தார். அவை துள்ளி விழுபவை போல நடுங்குவதைப் பார்த்தேன். ஒருவேளை போதைப்பொருள் பழக்கம் இருக்குமோ? அவர் தன் உடலை நன்கு வளைத்து ஜன்னல் கதவு அருகே தலையை வைத்துக் கொண்டார். பின்பு அதிர்ந்து கொண்டிருந்த அந்த விரல்களால் கதவை மெல்லத்திறந்தார். உள்ளே சரிவான ஒளி வந்து என் மடியிலும் கால்களிலும் விழுந்தது. வெளியே உச்சிப் பொழுதாக இருக்க வேண்டும். அவர் தன் முகத்தை அந்த சிறிய இடைவெளி வழியாக வைத்து அதனூடாக வெளியே பார்த்தார்.

ஒருகணம் எனக்கு கோபம் தலையை நிறைத்தது. திரும்பத் திரும்ப இத்தகையவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்கு எந்த விதியிருந்தாலும் அதை சற்றேனும் மீற முடியுமா என்று பார்ப்பவர்கள். ஒரு வரிசை என்றால், குறைந்தது ஒருவரையாவது தாண்டிச் சென்றாகவேண்டும். ஒரு சோதனை என்றால் எதையாவது ஏமாற்றியாகவேண்டும்.

ஆனால் பொதுவாக கள்ளத்தனம் இந்தியர்களின் குணம். ஆப்பிரிக்கர்களும் விதிமீறுவார்கள், ஆனால் எதிர்த்து மூர்க்கமாக சண்டையிடுவார்கள். தென்கிழக்கு நாட்டவர்களில் கொரியர்கள், தாய்வான்காரர்கள், சிங்கப்பூர்காரர்கள், ஜப்பானியர்கள் அனைத்து விதிகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதையே பார்த்திருக்கிறேன். விதிகளை மீறுகிறார் என்றால் அவர் வேறு வகை ஆள். விதிகளை மீறுவதையே தொழிலாகவும் வாழ்க்கையாகவும் கொண்டவர். அவர் சிறியவிதிகளை மீறுவதில்லை.

ஜன்னலின் கீழ்விளிம்பின் இடைவெளியினூடாக வந்த ஒளியை பணிப்பெண்ணுக்குத் தெரியாதபடி தன் தலையால் முழுக்க மறைத்துக் கொண்டு வெளியே பார்த்தபடி வந்தார். அதற்காக உடலை மிக விசித்திரமாக மடித்திருந்தார். கால்களும் வழக்கத்தை மீறிய வகையில் ஒடிந்தவை போல் தெரிந்தன. சூட்கேசுக்குள் வைத்த பிணம்போல என நினைத்துக்கொண்டதுமே அதை தவிர்த்தேன்.

பணிப்பெண் எங்களைக் கடந்து சென்றாள். அவள் அவரைப்பார்க்கிறாளா என்று பார்த்தேன். இயல்பாகத் திரும்பி பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் கோணத்தில் ஜன்னல் கதவை அவர் திறந்திருப்பது தெரியவில்லை என்று ஊகித்தேன். அப்படியென்றால் மிகத் திறமையான உத்தி அது. இதை பலமுறை இவர் செய்து பார்த்திருக்கிறார். இப்போது பணிப்பெண் பார்வையில் ஜன்னல் மூடியிருக்கிறது. விதி அமலில் இருக்கிறது, ஆனால் அவருக்குத் தெரியும் அதை அவர் மீறியிருக்கிறார் என்று. என்ன சிறுமை இது என்று முதலில் சிரிப்பாக இருந்தது. பின்னர் மெல்லிய குரூரம் ஒன்றை அடைந்தேன்.

அவர் தோளில் தட்டி, “மன்னிக்கவேண்டும், ஜன்னல்களை மூடும்படி சொல்லப்படுகிறது. மூடுங்கள்” என்றேன். அவர் “மூடுகிறேன், மன்னிக்கவேண்டும்” என்று பணிவுடன் சொன்னார். ஆனால் மூடவில்லை. நான் மீண்டும், “தயவு செய்து ஜன்னலை மூடுங்கள் இது விதி” என்றேன். “மூடுகிறேன் இதோ…” என்று அவர் மீண்டும் சொல்லி ஜன்னல் கதவில் கையை வைத்து மூடுவது போல் ஒரு பாவனை செய்தார். கை மிக நன்றாகவே நடுங்கி அதிர்ந்தது. கதவு கீழிறங்கவில்லை.

நான் என் கையை அதில் வைத்து கீழே தள்ள தொடங்கியபோது அந்த இடைவெளியில் தன் கையை வைத்து மூடி கீழிறங்காமல் தடுத்துக் கொண்டார். “தயவு செய்து… தயவு செய்து…” என்றார். “ஏன் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று நான் கேட்டேன்.“என்னை மன்னியுங்கள் வெளியே வெயில் இருக்கிறது அது எனக்கு வேண்டும்” என்றார். “ஆம் வெளியே உச்சிப்பொழுது இப்போது” என்றேன். “நான் அதைப்பார்க்க வேண்டும்” என்றார்.

“அங்கென்ன தெரியும்? கண்கூசும் வெளிச்சம் மட்டும்தான் இருக்கும். இந்த உயரத்தில் மேகங்கள் கூட இருக்காது. அதில் என்ன பார்க்கிறீர்கள்?” என்றேன். பதறியபடி “இல்லை, நான் பார்க்க வேண்டும். வெளிச்சத்தை பார்க்க வேண்டும்” என்றார். “பைத்தியக்காரத்தனம்..” என்று சொல்லி “கையை எடுங்கள், விதி என்பது இவ்விருக்கையில் இருக்கும் நம் மூவரையுமே கட்டுப்படுத்தும்.” என்றேன்.

எனக்கு அப்பால் விளிம்பு இருக்கையில் முழுப் போதையில் வாய்திறந்து தவளைத் தொண்டை அதிர தூங்கிக் கொண்டிருந்தவரை பார்த்துவிட்டு “அவருக்குத் தெரியாது” என்றார். “ஆம். ஆனால் எனக்குத் தெரியும் நான் விதிகளை கடைபிடிப்பவன்” என்றபின் அவர் தடையாக வைத்திருந்த அந்தக் கையை பிடித்து விலக்கிவிட்டு மூடியை இழுத்து நன்றாக மூடினேன். அவர் நடுங்கத் தொடங்கியதில் தொடைகள் துள்ளின. கைகூப்புவது போல இரு கைகளையும் சேர்த்தபடி என்னிடம், ”தயவு காட்டுங்கள் என் மேல் தயவு காட்டுங்கள்” என்றார்.

“உங்களுக்கு என்ன செய்கிறது? மது வேண்டுமா?” என்றேன். “இல்லைநான் மது அருந்துவதில்லை என்றார். “என்னதான் பிரச்னை உங்களுக்கு?” என்று நான் மீண்டும் கேட்டேன். “எனக்குப் பகல் வேண்டும். கதவுகளை மூடிவிட்டால் இரவாகிவிடுகிறது போலிருக்கிறது” என்றார். “ஆம் இங்கு உள்ளே இருப்பவர்களின் பெரும்பாலானவர்களின் உடல்களுக்கு இது இரவு. எனக்கும் கூட இரவுதான்” என்றேன். “அது தெரியும். ஆனால் நான் பகலில் இருக்க விரும்புகிறேன். பகலுக்காகத்தான் இந்த விமானத்தில் பயணம் செய்கிறேன்” என்றார்.

நான் அவரை நோக்கி “பகலுக்கு என்றால்…” என்றேன். “நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் பகலில் இருக்கிறேன்” என்றார். நான் அவர் கண்களைப்பார்த்தேன் சற்றே நீர் நிறைந்தது போல தோன்றியது. போதையடிமைகளின் கண்கள் அப்படித்தான் இருக்கும். உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. மிகுந்த அச்சத்தில் பேசுபவர் போல குரலும் நடுங்கியது. “தயவு செய்யுங்கள். இந்தக் கதவை திறந்து வைக்க என்னை அனுமதியுங்கள்” என்றார்.

திறக்காவிட்டால் இறந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டேன். “சரி” என்றபின் திரும்பிக் கொண்டேன். அவர் ஜன்னல் கதவை நான்கு விரல் அளவுக்கு மேலே தூக்கி அவர் தேர்ந்திருந்த வகையில் முகத்தை அந்தப்பிளவில் பொருத்தி வெளியே பார்க்க ஆரம்பித்தார். நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த நடுக்கம் இல்லாமலாகி மெல்ல தசைகள் விடுபடத்தொடங்கின. தூக்கத்தில் இருப்பது போல அமைதியான சீரான மூச்சுடன் அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். தூங்கிவிட்டாரா என்று நான் குனிந்து அவரைப்பார்த்தேன். அவர் உதடுகள் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தூங்கவில்லை. போதை அடிமையேதான் என்று நான் எண்ணிக் கொண்டேன்.

என் தொழில்முறைப் பயணங்களில் பலவகையான விருந்துகளில் பங்கெடுப்பதுண்டு. தென்கிழக்கு நாடுகளில் முழுக்க உயர்மட்ட விருந்து என்றாலே போதை இருக்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை எக்ஸ்டஸி வரிசை மாத்திரைகள். இன்று மூளையில் கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரத்தை செலுத்திக்கொள்வதுதான் உலகமெங்கும் வழக்கம். மாத்திரைகளின் பேரரசான அமெரிக்கா அழிந்து மின்கருவிகளின் பேரரசாக சீனா எழுந்து வந்துவிட்டது. சில மின்சாரவருடல்கள், காது முரசுக்கும் செவிடாகிவிடும். இரண்டு ஆள் உயரமான ஒலிபெருக்கி பெட்டியின் முன்னால் சென்று நின்று அதைக் காதலியைப் போல தழுவியபடி நடனமிடும் போதை கொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு காரம் போதவே போதாது. பச்சை மிளகாய்களை மெல்வார்கள். இவருக்கு ஒளி போலிருக்கிறது.

அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். அப்போது இரவில் இருந்தேன். இரவுக்குரிய ஒலிகள், குளிர், இரவுக்குரிய மெல்லிய தூசு கலந்த நீராவி மணம். எங்கிருக்கிறேன் என்று வியந்தபடி விழித்துக் கொண்டபோது ஆறாயிரம்பேர் அமர்ந்திருக்கும் வசதிகொண்ட இரண்டடுக்கு அணுவெடிப்புவிசை விமானத்தின் பெருங்கூடத்தில் அரை இருள் பரவியிருந்தது. என் முழங்காலும் இடக்கையும் மட்டும் ஒளியுடன் இருந்தன. திரும்பிப் பார்த்த போது ஜப்பானியர் அவ்விடைவெளி வழியாக வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

முதலில் அவர் இறந்து மடிந்திருக்கிறார் என்ற அனிச்சையான எண்ணம் வந்தது. அதன் பிறகுதான் தூங்குவதற்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்பது நினைவில் எழுந்தது. உண்மையில் இவருக்கென்ன சிக்கல் என்று எண்ணிக் கொண்டே அவரைப்பார்த்தேன். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர் போல் இருந்தார். முகம் அமைதி கொண்டிருந்தது. விரல்களின் நடுக்கம் மறைந்திருந்தது. நான் இரவில் இருக்கையில் அவர் பகலில் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன். வெளியே சூரியன் தகதக்கும் உச்சிப்பொழுது. ஆனால் என் உடல் இரவில் இருக்கிறது. சீவிடுகளின் ரீங்காரத்தையும், புழுதிமணமும் நீராவியும் கலந்த காற்றையும், நட்சத்திரங்களையும் தனக்குள்ளிருந்து அது எடுத்துக் கொள்கிறது.

என் செல்பேசியில் வழக்கமாக இந்தியாவின் நேரத்தையே வைத்திருப்பேன். கைக்கடிகாரத்தில்தான் செல்லும் இடத்தின் நேரம். இந்திய நேரம் எனக்கு முக்கியமானது. வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நேரங்களில் பயணம் செய்யும் போது உடல் தன் தாளத்தை மறந்துவிடாமல் இருக்கவேண்டும். அதற்கு நான் திட்டமிட்டு அதன் இரவை அதற்கு அளிக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலின் இரவில் நான் நன்றாக தூங்கி செல்லுமிடத்தில் சூரியனின் இரவில் சென்று இறங்க வேண்டும் நான். என் உடலுக்குள் அப்போது சூரியன் உதித்திருக்கும். ஆனால் இந்த ஜப்பானியர்…

நான் அவர் தோளை மெதுவாகத் தொட்டேன். அவர் அதை அறியவில்லை. மீண்டும் ஒரு முறை மெல்லத்தட்டினேன். திடுக்கிட்டு விழித்துக் கொண்டு “மன்னிக்கவேண்டும்” என்றார். உலகத்திடம் இடைவிடாத மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னவை அப்போதுதான் என் மனதில் தெளிவாக உறைத்தன. “ஒன்றுமில்லை, நீங்கள் பகலுக்காக ஏன் இப்படி ஏங்குகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று அவர் கண்களை நோக்கியபடிக் கேட்டேன்

என் கேள்வியால் அவர் திடுக்கிட்டது போல வாய்திறந்து விழிகள் அசையாமல் இருக்க உற்றுபார்த்தார். நான் “மன்னிக்க வேண்டும் தவறாகக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லித் திரும்புவதற்குள் என் கைமேல் தன் கைகளை வைத்தார். “இல்லை… இல்லையில்லை” என்றார். அவரது கைகள் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்ததைப்போல் நனைந்து குளிர்ந்திருந்தன.

“உங்களுக்கு உடல் நலமில்லையா?” என்றேன். “இல்லை, நன்றாகத்தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு சற்று நரம்பு சிக்கல்கள் உண்டு” என்று அவர் சொன்னார். தெரிகிறது’ என்று எண்ணிக் கொண்டேன். “நான் சூரியன் இல்லாமல் வாழ்வதில்லை” என்றார். நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். “எப்போதும் என் வானத்தில் சூரியன் இருக்கவேண்டும். அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

“எத்தனை வருடங்களாக?” என்றேன். “இப்போது இருபத்து எட்டு வருடங்களாக. என் பதினெட்டுவயதுமுதல்…” என்றார். அவர் என்னிடம் விளையாடுகிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் விளையாடுபவரைப்போல தெரியவில்லை. விளையாடுகிறார் என்றால் உலகின் தலைசிறந்த நடிகர் அவர்.

“அதாவது நீங்கள் இருபத்திஎட்டு வருடங்கள் எப்போதும் எங்கோ ஒரு ஊரில் பகலில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன். “உண்மையில் பெரும்பாலும் விமான நிலையங்களில், விமானத்தில்” என்றார்.

நான் அவர் விளக்கட்டும் என்று காத்திருந்தேன். “சூரியன் இருபத்து நான்கு மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவருகிறது. ஒரு விமானம் இருபத்து நான்கு மணிநேரத்தில் டோக்கியோவில் கிளம்பி சிங்கப்பூர் மும்பை துபாய் அமெரிக்கா வழியாக மீண்டும் டோக்கியோவுக்கே வருமென்றால் அதன் அருகே எப்போதும் சூரியன் இருந்து கொண்டிருக்கும் அல்லவா?”

நான் “ஆம்” என்றேன். “ஆனால் என்று தொடங்குவதற்குள், “இன்றைய அணுஆற்றல் விமானங்கள் மிகவிரைவானவை. மணிக்கு ஆயிரத்தி இருநூறு மைல் வேகத்தில் பறப்பவை. ஆயினும் பயணிகள் விமானத்தில் சென்றால் எனக்கு இரண்டுநாளுக்கு ஒருமுறை எட்டுமணிநேர இழப்பு ஏற்படும். தனியார் விரைவு விமானத்தை ஏற்பாடுசெய்துகொண்டு அதை ஈடுகட்டிவிடுவேன்” என்றார் அவர் “ஆகவே நான் பூமியின் ஒளிமிக்க பக்கத்தில் மட்டுமே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

”இருபத்து நான்கு ஆண்டுகள் என்றால் முந்நூற்று அறுபத்தைந்தை இருபத்து நான்கால் பெருக்க வேண்டும். அத்தனை முறை நீங்கள் உலகத்தை சுற்றி வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன்.

”ஆம். ஆனால் உலகம் எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. பெரும்பாலும் நான் விமான நிலையத்தில்தான் இருக்கிறேன். எப்போதாவது சில மணி நேரம் நகரங்களுக்குள் செல்வேன். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வேன். உடல் நலம் இல்லாத போது சில முறை மருத்துவர்களை பார்த்திருக்கிறேன். மற்றபடி விமானநிலைய அறைகள்தான்.”

“உங்களுக்குத் தெரியும் உலகம் முழுக்க விமான நிலையங்கள் ஒன்று போலவே தான் இருக்கும். எனக்கு ஒரே விமான நிலையத்திற்குள் வந்து இறங்கி மீண்டும் விமானத்தில் ஏறுவதாகவே தோன்றுகிறது. எந்த விமான நிலையம் என்பதை என் மனம் உணர்வதே இல்லை. இன்று நான் சிங்கப்பூருக்கு சென்று இறங்கும் போது உச்சிப்பொழுதாகி இருக்கும். ஒன்றரை மணி நேரத்தில் மும்பை விமானத்தை பிடிப்பேன் அங்கு இரண்டு மணிக்கு சென்று இறங்குவேன். அங்கிருந்து துபாய், அங்கிருந்து அமெரிக்கா, சில தருணங்களில் தனியார் விமானங்கள் பிந்தும். எப்போதும் மாற்று பயணச்சீட்டு போட்டிருப்பேன்”

“சூரியனுடன். சூரியனுக்கு மிக அருகே!” என அவர் விழிகளின் பாப்பாக்கள் விரிய மூக்குத்துளைகள் அகன்று அசைய சொன்னார். “சூரியனைப்போல பூமியைச் சுற்றிவருகிறேன்.சூரியக்கதிர்களுக்கு நேர்கீழே வாழ்கிறேன்”

நான் சற்று சலிப்புடன் அசைந்து அமர்ந்தேன். உண்மையில் நான் இணையத்தில் இருந்து அத்தனை விமான அட்டவணையையும் தரவிறக்கி விமானங்களின் வேகத்துடன் அவற்றை ஒப்பிட்டு ஒரு சரியான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அலுப்பாகவும் இருந்தது. மேலும் இந்த மெலிந்த நரம்பு நோய் கொண்ட ஜப்பானியரை அவ்வளவு தூரம் ஆராய்ந்து புரிந்து கண்டுபிடித்து என்ன அடையப்போகிறேன்?

ஆங்காங்கே பலர் ஜன்னல் மூடிகளை மேலே தூக்கத் தொடங்கினர். பாய்ந்து அவரும் ஜன்னல் மூடியைத் தூக்கிவிட்டார். சூரிய ஒளியை பாலைவனத்தில் செல்பவன் தண்ணீரைப்பார்த்தது போல் பாய்ந்து சென்று அவர் அள்ளிக் கொள்வதைப் பார்த்தேன். வாயைத்திறந்து அதை குடிக்கிறார் என்று தோன்றியது. அருவியில் நீராடுபவர் போல ஒளியில் தலையைக் காட்டினார். உடம்பை கைகால்களைக் காட்டினார். அவருக்கு ஏதேனும் நோய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்காக வாழ்நாளெல்லாம் பயணம் செய்வார்களா என்ன?

”நீங்கள் பெரும் பணக்காரராக இருக்கவேண்டும்” என்றேன். அவர் என்னிடம் ”உண்மை. என் தந்தை பழைய ஜப்பானின் அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருந்தார். அவர் இறக்கும் போது நான் உலகின் முக்கியமான கோடீஸ்வரர்களில் ஒருவனாக இருந்தேன்.” ஜப்பான் சீனாவுடன் இணைந்து முப்பதாண்டுகளாகின்றன. அதற்குமுன்பு ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர்கள் பூமியை விலைபேசிக்கொண்டிருந்தனர்.

“உங்கள் குடும்பம்…?” என்றேன்.”நான் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்றார் அவர். நல்லது என்று நான் நினைத்துக் கொண்டேன். நான் நினைப்பதை அவர் உணர்ந்தது போல சிரித்தபடி “விமானப்பணிப்பெண்களுக்கு என்னை நன்றாகத் தெரியும் முன்பொருமுறை ஒருத்தி தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள். அவள் தான் அதிகமான என்னுடன் செலவிட முடியும் என்றாள்”

அவரால் சிரிக்க முடியும் என்பதை கண்டேன். பல்வரிசைகள் சீராக இருந்தன. பொதுவாக ஜப்பானியர்களுக்குப் பற்கள் சோழியடுக்கியவைபோலிருக்கும். இவை சிறியவெண்ணிறப்பற்கள்.

அவர் ஒரு பழைய கதையைச் சொல்லப்போகிறார் என்பது தெரிந்திருந்தது. அதை நானே கேட்பது அநாகரிகம். ஆனால் அத்தனை சொன்னபின் அதைச் சொல்லாமல் அவரால் இருக்க முடியாது. அது எனக்கு முக்கியமில்லை என்பது போன்ற பாவனையை நான் மேற்கொண்டாக வேண்டும்.

எனவே ”இதனால் உங்கள் உடலுக்கு பிரச்னை எதுமில்லையா?” என்றேன். அவர் “என்ன பிரச்னை?” என்றார். “இல்லை உயிரிகளின் உடல் இரவும் பகலும் கொண்டது. இரவையும் பகலையும் தூக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் ஓரளவு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பகலிலேயே வாழ்வதென்பது…” என்றபின் “அதிலும் பெரும்பாலும் நீங்கள் சூரிய வெளிச்சத்திலேயே இருக்கிறீர்கள்” என்றேன்.

“ஆம் முடிந்த வரை வெயிலைப்பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். வெயில் படாத இடங்களில் நான் இருப்பது மிகக்குறைவுதான். நல்ல வேளையாக இன்றைய விமான நிலையங்கள் அனைத்தும் மின்சார சேமிப்பிற்காக சூரிய ஒளியை உள்ளே விடுவது போல் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.” என்றார்.

“கண்கள் மட்டும் அல்ல தோலும் சூரியனை அறிகிறது. இவை இரண்டுக்கும் தொடர்பில்லாமலேயே மூளை சூரியனை அறிகிறது.புறஊதாக்கதிர்கள், அகச்சிவப்புக்கதிர்கள்…” என்றேன்

”நீங்கள் சொல்வது உண்மை மனித உடல் சூரியனை அறிகிறது. அதைக்கொண்டு இரவையும் பகலையும் பகுக்கிறது. எனக்கும் அப்பிரச்னைகள் இருந்தன. நான் பகலில் வாழ ஆரம்பித்தபோது தலைக்கு மேல் இருக்கும் சூரியனை பிடிவாதமாக மறுத்து என் உடல் இரவை நடிக்க ஆரம்பிக்கும். ஆனால் ஓரிரு மாதங்களுக்குள் உடலும் புரிந்து கொண்டது. இப்போது அது எப்போதும் பகலில் தான் இருக்கிறது. எப்போதுமிருக்கும் பகலில் தான் தூங்குகிறேன். நான் தூங்குவது மிகவும் குறைவுதான், ஒரு நாளுக்கு நான்கு மணிநேரம், அதுவும் சேர்ந்தாற்போல் அல்ல.”

திடீரென்று எழுந்த ஒரு குரூரமான உணர்வால் உந்தப்பட்டு நான் அவரிடம் ”இன்னும் எத்தனை காலம் இப்படி வானில் இருப்பீர்கள்?” என்றேன். அவர் புன்னகையுடன் “ஒரு நாள்” என்றார். “ எனக்கிருப்பது ஒருநாள்தான். அந்த முடிவற்ற நாளில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார்

என்ன நோய், என்று நான் கேட்கவில்லை. ஒளியுடனோ இருளுடனோ தொடர்புடைய ஏதோ ஒரு நோய் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தபோது அவர் “ரத்தப்புற்று நோய்” என்றார்.என் எண்ண ஓட்டத்தை கூர்மையாக வெட்டி “எனக்கல்ல” என்று சேர்த்துக்கொண்டார்.

“ரத்தப்புற்றுநோய் ஜப்பானில் மிக அதிகம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தபின் அப்பகுதியில் புற்று நோய் பல மடங்கு அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில்கூட தலைமுறை தலைமுறையாகவே குழந்தைகள்கூட புற்றுநோயில் செத்துக் கொண்டிருக்கின்றன”

“புற்றுநோய் யாருக்கு?” என்றேன். அவர் சிலகணங்களுக்குப்பின் “என் இளமைக்காதலிக்கு” என்றார். நான் அதை ஓரளவு ஊகித்திருந்தேன். “அகேமி என்றால் ஜப்பானிய மொழியில் சுடர். நானும் அவளும் ஒரே வயது. ஒரே ஊர், ஹிரோஷிமாவுக்கு அருகில்தான்” என்றார். “ஒரே பள்ளியில் படித்தோம். ஒரே தோட்டங்களில்தான் விளையாடினோம்”

“நான் இளமையிலேயே ஆரோக்கியமான குழந்தையாக இருக்கவில்லை. மெலிந்த வெளிறிய உடல். இளமையிலேயே நரம்புச்சிக்கல்கள் இருந்தன.என் குடும்பத்தால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டேன். பாதுகாவலர்களுடன் தான் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வீட்டில் எப்போதும் வேலைக்காரர்களுடன் தான் வாழ்ந்தேன். வெளி உலகம் ஒன்று இருக்கிறது. அங்கு என்ன நிகழ்கிறது என்று எனக்குத்தெரியாது. என் வெளியுலகமே அவள்தான். எங்களைப்போலவே பணக்காரக்குடும்பம். என் குடும்பம் அவர்களுடன் தலைமுறை உறவு உடையது”

அவர் பெருமூச்சுவிட்டர். “எங்களூரில் தொடர்ந்து நோய்க்கான பரிசோதனை செய்து கொண்டிருப்போம் என்பதனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். வழக்கமாக கதிரியக்கப் பாதிப்பால் வரும் புற்றுநோய் விரைவாகப் படராது. உடல் உபாதையாக நெடுநாள் நீடித்த பின்னரே உயிர் பறிக்கும் அளவுக்கு மாறும். மாறாக அவளுக்கு லுக்கிமியா உடலில் தீ போல பற்றி எரிந்து மேலேறியது. நோய் அடையாளம் காணப்பட்டுவிட்ட எட்டு மாதங்களுக்குள் வெளிறி நான்குமுறை கழுவப்பட்ட சுமிஇ ஓவியம்போல ஆகிவிட்டாள்”

“மூக்கின் சவ்வு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கண்கள் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டன. மருத்துவமனையில் கிடந்தாள். அவளுடன் நானும் இருந்தேன். பகலா இரவா என்று தெரியாத வார்டில் உடல் முழுக்க குழாய்களும் கருவிகளும் கம்பிகளும் பொருத்திக் கொண்டு படுத்திருந்த அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சிலசமயம் எண்ணப்பெருக்கு. சிலசமயம் மனமே இல்லாமல் வெறும் வெண்ணிறமான புகைமூட்டமும் ரீங்காரமும்”

“என்னிடம் எதையும் எவரும் சொல்லவில்லை. அவள் அம்மா உடனிருந்தாள். என் அம்மா அடிக்கடி வந்துபோவாள். என் அம்மா இரு உடன்பிறந்தவர்களையும் கணவனையும் அதே நோய்க்குப் பறிகொடுத்தவள். அவள் அம்மாவின் இரு சகோதரர்களும் கணவரும் இறந்த நோயும் அதுவே. ஆகவே அவர்களுக்குக் கொந்தளிப்பு எதுவும் இல்லை. நான் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் முகம் கொள்ளும் மாற்றம் வழியாகவே என்ன நிகழ்கிறதென்று புரிந்து கொண்டேன்.”

“ஒருநாள் இரவில் அவளுடன் நான் மட்டும் இருந்தேன். அப்பால் தாதி ஏதோ செய்துகொண்டிருந்தாள். செவிலியர் வேறு அறைக்குள் பேசிக்கொண்டிருந்த ஒலி. அவள் என்னைப் பெயர்சொல்லி அழைத்தாள். அல்லது அது என் பிரமை. அவள் குரலை இழந்திருந்தாள். நான் பார்த்தபோது அவள் உதடுகள் அசைந்தன. நான் எழுந்து சென்று அவள் உதடுகளில் என் காதை வைத்தேன். அவள் மெல்ல ‘விளக்குகளை அணை’ என்றாள்”

“நான் குழப்பமாக ‘ஏன்?” என்றேன். ‘விளக்குகளை அணை… ஒளி என்னை எரிக்கிறது’ என்றாள். நான் மீண்டும் ‘இந்த ஒளியா?’ என்றேன். மிதமான குளிர்ந்த மின்னொளி அது. ‘சூரிய ஒளி… அது என்னை உருக்குகிறது’ என்றாள் ‘தயவுசெய்து விளக்கை அணை’ நான் எழுந்து விளக்குகளை அணைத்தேன். ‘எல்லா விளக்கையும்…’ என்றாள். மேலும் விளக்குகளை அணைத்தேன். ‘முழு இருட்டு’ என்றாள். இறுதிவிளக்கையும் அணைத்தேன். அவள் கண்கள் இருளுக்குள் மின்னி மெல்ல அணைவதைக் கண்டேன்”

தாதி ஓடிவந்து ‘என்ன செய்கிறாய்?” என்றாள். விளக்குகளைப்போட்டு அவள் பார்த்தபோது நிலைகுத்தியவிழிகளுடன் அவள் இறந்திருந்தாள். ‘என்ன செய்தாய்? என்ன செய்தாய் நீ?’ என்று தாதி கூச்சலிட்டாள். செவிலியரும் கூச்சலிட்டபடி ஓடிவந்தார்கள். நான் ‘இதுதானா?’ என சொல்லிக்கொண்டேன். ‘இதுதான் இறப்பா?’ இறப்பு என்னும் சொல்லை உள்ளம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது

“பலநாட்கள் அச்சொல்லில் வாழ்ந்தேன். இது இப்போது சொல்லும்போது எளிதாக இருக்கிறது. இறப்பு என்னும் சொல் அல்ல இறப்பு என்பது. ஃப்யூஜியாமா என்ற வார்த்தையை எழுத்தில் படிப்பதற்கும் அந்த மாபெரும் எரிமலைக்கு முன் சென்று நிற்பதற்குமான வேறுபாடு. மன்னிக்க வேண்டும். நான் இதை இவ்வளவுதன் சொல்ல முடிகிறது என்னைவிட சிறப்பாக ஒரு எழுத்தாளர் புனைகதையில் சொல்லிவிடக்கூடும்” என்றார்.

“என்னால் உணரமுடிகிறது” என்றேன். “நான் மாதக்கணக்கில் என் இருண்ட அறைக்குள் வாழ்ந்தேன். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்வேன். கைகளால் துழாவித்தான் மேஜையிலிருக்கும் காபிக்கோப்பையை எடுக்கமுடியும். அத்தனை அடர்ந்த இருள். அதற்குள் மட்டுமே என்னால் வாழமுடிந்தது. என் அன்னை பல மருத்துவர்களைக்கூட்டிவந்து என்னைக் காட்டினாள். நான் அந்த முடியாத இரவில் வாழ்ந்தேன்”

“அப்போதுதான் ஒரு கனவு வந்தது. அவளைக் கண்டேன். கனவா அல்லது உருவெளித்தோற்றமா என இப்போது சொல்லமுடியாது. அவள் ஒளிகொண்டிருந்தாள். கண்ணாடிசிலையில் வெயில்பட்டதுபோல. என்னிடம் ஏதோ சொன்னாள். என்ன சொல்கிறாள் என்று உற்று அவள் உதடுகளைப்பார்த்தேன். விழித்துக்கொண்டேன். உடனே அச்சொல் தெளிவாக என் தலைக்குள் வெடித்தது. ‘ஒருபகல்தானே?’ என்று அவள் சொன்னாள்”

“ஒரு பகல்! எனக்கு ஒரு பகல் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது! முதலில் அது ஒரு பெரும் நிம்மதியாக இருந்தது. பின்னர் இனிய எதிர்பார்ப்பு. ஆனால் நேரம் செல்லச்செல்ல என் உள்ளம் அச்சம்கொள்ளத் தொடங்கியது. ஒரு பகல். இன்னும் சற்று நேரம். அதன்பின் இருள். எனக்குள் அமர்ந்து கொண்டு யாரோ பித்துப்பிடித்து பேசிக் கொண்டிருப்பது போல. நான் நினைத்தால் கூட அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்பது போல”

“அஞ்சியும் தயங்கியும் எழுந்துசென்று ஒரு கதவை கொஞ்சம் திறந்தேன். கூரிய வாள் போல ஒளிக்கீற்று அறையை இரண்டாகப்பிளந்தது.என் உடல் நடுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன். விழுந்துவிடாமலிருக்க ஜன்னல்கதவைப் பிடித்துக்கொண்டேன். ஒளியை என் உடலே உணர்ந்தது. என் திசுக்களெல்லாம் விரியத்தொடங்கின. சோடாநீர் போல குருதியில் கொப்புளங்கள் வெடித்து சிதறிக்கொண்டே இருந்ததை அறிந்தேன். மெல்ல கதவைத்திறந்து வெளியே வந்தேன்”

“நன்றாக விடிந்து வெயில் பெருகிக் கிடந்த மே மாதப் பின்காலை. பறவைகள் அனைத்தும் வானில் இருந்தன. அவற்றின் குரல்களின் கலவையோசையை தொலைவில் கேட்க முடிந்தது. அவ்வப்போது தரையில் நிழல்களாக கடந்து சென்றனபறவைக்கூட்டங்கள். ஒளியில் எனக்குக் கண்கூசியது. கண்ணீர் வழிந்து பார்வையை மறைத்து தாடை வழியாக நெஞ்சில் சொட்டிக் கொண்டிருந்தது. அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன்”

“நான் வெயிலைப்பார்ப்பதே அபூர்வம். வெயில் அப்படி உருகிவழிந்து ஒளிகொண்டிருக்கும் என அப்போதுதான் அறிந்தேன். சூரியனைப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சூரியனை எப்போதுமே நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை. வானில் அப்படி ஒன்று இருந்து ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன். உண்மையில் கண்ணாடிகளில் அதைப்பார்த்திருக்கிறேன். ஓவியங்களாக கண்டிருக்கிறேன். தற்செயலாக கண்ணில்விழும் ஒளிப்பெருக்காக உணர்ந்திருக்கிறேன்”

“பதினெட்டு வயதான ஒருவன் தன் வாழ்நாளில் முதல் முறையாக சூரியனை நிமிர்ந்து பார்த்தான். ‘எத்தனை மகத்தான ஒளிவட்டம்!’ என்று தான் முதலில் தோன்றியது. பொன்னிற வட்டத்திற்கு உள்ளே உருகும் வெள்ளி வட்டம் அதற்குள் இளநீலம் அலையடிக்கும் ஒரு தாலம். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து மறைந்தது. மீண்டும் திறந்தபோது மிக அருகே என நானும் சூரியனும் மட்டுமே எஞ்சினோம்.”

”சொல்லப்போனால் சூரியனை நான் அப்போது வானத்தில் பார்க்கவில்லை. எனக்குச் சமானமான தூரத்தில் சற்று ஓடினால் தொட்டு விடும் போல அருகே என் அளவேயான ஒரு வட்டமாக பார்த்தேன். இதை ஒரு மனப்பிரமை என்று தான் நீங்கள் சொல்வீர்கள். நான் அப்படித்தான் எண்ணினேன். ஆனால் எது பிரமை எது உண்மை என்றெல்லாம் எப்படி கண்டுபிடிப்போம். எது நமக்கு மகிழ்வளிக்கிறதோ எது நம்மை வாழச்செய்கிறதோ அது உண்மை. அன்று முடிவு செய்தேன் சூரியனுடன் இருக்க வேண்டும் என்று. ”

“உடனே காரிலேறிக் கிளம்பினேன். மாலையில் சூரியன் அணைந்து விடும். சூரியனுடன் இருக்க வேண்டும் என்ன செய்வது என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டு காரில் அமர்ந்திருந்தேன். என் ஓட்டுநரிடம் கேட்டேன், எப்போதும் சூரியனுடன் இருக்க என்ன செய்யவேண்டும் என்று. அவன் துடிப்பான சீனஇளைஞன். சிரித்தபடி ‘சூரியனுடன் தொற்றிக் கொள்ள வேண்டியதுதான்’ என்றான். டாங் காலகட்டக் கவிஞரானது- ஃபு அப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறாராம், சூரியனின் வாலைப்பிடித்துக்கொண்டு வானில் பறந்துகொண்டிருப்பதைப்பற்றி”

“ஆம், மகாபாரதத்தில் நாகங்கள் சூரியனின் குதிரையின் வாலைப்பற்றிக்கொண்டு பறந்தன என்று கதை உண்டு” என்றேன். அவர் “அக்கணமே நான் முடிவுசெய்துவிட்டேன். சூரியனுடன் சென்றுகொண்டே இருப்பது. தலைக்குமேல் எப்போதும் சூரியன் இருக்கவேண்டும். விமானங்கள் எத்தனை வேகத்தில் பறக்கின்றன என்று பார்த்தேன். உடனடியாக தனியார் விமானம் ஒன்றை பதிவு செய்து கொண்டு டோக்கியோவில் இருந்து சிங்கப்பூர் வந்தேன். வரும் வழியிலேயே அடுத்தடுத்த விமானங்களை பதிவு செய்து கொண்டேன். எனக்குத் தேவையான அனைத்தையும் விமான நிலையங்களில் கொண்டு வரும்படி ஆணையிட்டேன். விமான நிலையங்களில் இருந்தபடியே எனது பங்குகளை முதலீடு செய்து எனக்கான வருவாயை பிற பொருளாதார விஷயங்களையும் சீரமைத்துக் கொண்டேன்.”

“நான் இன்னும் இருக்கிறேன். ஏன் என்றால் நான் இருந்து கொண்டிருப்பது ஒரு பகலில். இந்தப்பகல் முடிந்தால் நான் இறந்துவிடுவேன். ஆனால் இந்தப்பகலை நான் முடியவிடப்போவதில்லை.” என்றார். பேச்சு நிறைவுற்ற களைப்புடன் மெல்ல உடலை நீட்டிக்கொண்டார்.

நான் அவரைப்பார்த்தபடி சொல் மறந்து அமர்ந்திருந்தேன். “உங்களுக்கு வியப்பாக இருக்கிறது எனக்குத்தெரியும்” என்றார். “ஆம் உண்மையில் ஏதோ புராணக்கதையைக் கேட்டது போல் இருக்கிறது” என்றேன். “எங்கள் புராணங்களில் இப்படித்தான் வரும், ஒருசாபம் கிடைக்கும். அதை தந்திரமாக ஜெயிப்பார்கள்” உடனே நினைவுக்குவந்தது “மார்க்கண்டேயர் என்பவர் அவர் தந்தை பிரம்மனுக்கு அளித்த வாக்கின்படி பதினாறு வயதில் சாகவேண்டும். ஆனால் அவர் தனக்கு என்றும் பதினாறுவயதாக இருக்கவேண்டும் என சிவனிடம் வரம்பெற்று காலத்தை வென்றார்” என்றேன்.

உடல் முழுக்க குலுங்க கண்கள் இடுங்க சிரித்த போது அவர் ஒரு சிறுவனாகி விட்டிருந்தார். நான் “உங்களுக்கு இறப்பே கிடையாது. இந்த விமானத்தில் இருக்கும் அத்தனை பேரும் முதுமை அடைந்து இறப்பார்கள். அணுவிசை விமானங்கள் மறைந்து நுண்வடிவ விமானங்கள் வரும். நாடுகள் இணைந்து உலகம் ஒன்றேயாகும். நிலாவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறுவார்கள். ஆனால் உங்கள் பகல் முடியவே முடியாது” என்றேன். “ஆம்” என்றார் அவர். ஆனால் சிரிப்பு மறைந்துவிட்டிருந்தது.

விமானம் சிங்கப்பூரில் இறங்கும் அறிவிப்பு வந்தது. சாய்ந்த இருக்கைகளை நிமிரச்செய்து இடைப்பட்டைகளைக் கட்டினோம். “ஜன்னல் மூடிகளை ஏற்றுங்கள்” என்று சொன்னபடி பணிப்பெண் சுற்றி வந்தாள். ஜன்னலில் இரு விழிகளையும் பொருத்தி வெளியே பொழிந்த வெயிலை பார்த்துக் கொண்டு வந்தார்.

விமானம் அதிர்வுடன் தரையைத் தொட்டது. மாறுபட்ட இயந்திர ஓசையுடன் விரைந்து பலவிதமான சீழ்க்கைகளும் குலுக்கல்களுமாக நின்றது. சாங்கி விமானநிலையத்தை வந்தடைந்திருக்கும் தகவலை ஒலிபெருக்கிப் பெண்குரல் சொன்னது. பயணிகள் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் போல பாய்ந்து தங்கள் பெட்டிகளை எடுத்தார்கள்.

எப்போதும் விமானப்பயணிகளிடம் இருக்கும் இந்தப்பதற்றத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவரும் முந்திப்போய்விட முடியாது. அவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியே போவதை தீர்மானிப்பது பெட்டிகள் வந்து சேரும் நேரமும் பிற ஆவண பரிசோதனை வரிசைகளும் தான். ஆனாலும் விமானங்களுக்குள் முண்டியடிக்கிறார்கள், ஐந்து நிமிடம் என்றால் ஐந்துசொட்டு அமுதம் என்பதைப்போல

விமானத்தின் சன்னலின் திரையை நன்கு மேலேற்றிவிட்டு கொண்டு கைகளைக் கட்டியபடி வெளியே பார்த்தபடி அவர் அமர்ந்திருந்தார். வரிசை நகரத்தொடங்கியது. நான் எழுந்து என் பெட்டியை எடுத்தேன். அவரும் எழுந்து தனது சிறிய கைப்பெட்டியை எடுத்துக் கொண்டார். நான் “சிங்கப்பூரில் இப்பொழுது பன்னிரண்டு மணி” என்றேன். “ஆம், எனக்கு சிங்கப்பூர் நேரம் ஒன்றரை மணிக்கு மும்பை விமானம்” என்றார்.

ஏதோ ஒன்று எஞ்சியிருந்தது.சொல்ல,கேட்க. என்ன என்ன என்று என் உள்ளம் முட்டிமுட்டி சலித்தது. வரிசையில் நின்றபோது அவர் எனக்குப்பின்னால் நின்றார். எனக்குள் அவ்வெண்ணம் எழுந்ததுமே நான் அறியாமல் பின்னால் திரும்பிப்பார்த்தேன். என்விழிகள் அவர் விழிகளைச் சந்தித்ததும் அவர் திரும்பிக்கொண்டார். அவருக்கும் அதுதெரியும் எனத் தெரிந்தது.

– ஆனந்த விகடன், செப்டெம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *