“போனால் ஐம்பது…வந்தால் எழுபதினாயிரமே! நானைக்கு உருட்டுற ஆஸ்பத்திரி சுவீப் டிக்கட் வாங்குங்கள்! கமோன்….கமோன்…!”
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் என்றும் இல்லாதவாறு இன்று கூட்டம் நிறைந்து வழிகின்றது. வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து பிரயாணிகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்துக்கு வெளியே அவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
“அப்பாடா! என்ன வெய்யில்? என்ன புழுக்கம்?” என்று கொட்டகைக்குள் ஓடி வந்து ஒருவர் நிற்கின்றார். அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் இருப்பதற்காக இடங்தேடுகின்றன. திக்குக்கு ஒன்றாகப் போடப்பட்டிருந்த வாங்குகளில் பஸ்வண்டியில் உண்டாகும் நெரிசலுடன் பார்க்கக் கூடிய நெரிசலுடன் ஆட்கள் அமர்ந்திருக்கின்றார்கள்.
வந்தவருடைய கண்கள் இசையோடு கலந்த விளம்பர ஒலி வந்து உறைகின்ற வழி நீளம் செல்கின்றன.
“போனால் ஐம்பது…வந்தால் எழுபது…”
அவன் வெய்யிலையோ. புழுக்கத்தையோ கவனித்ததாகத் தெரியவில்லை. அல்ல – உணர்கிறான் என்று சொல்வதற்கும் இல்லை. அப்படி இருக்கிறது அவனுடைய தொழில் மீது கொண்ட வேகம்……..
“அது சரி பாருங்கோ! இந்த ஆள் இருக்கே! இவனுக்கு இதிலை என்ன உழைப்பு இருக்கு ……! ஆள் ஏதோ படிச்சவனாட்டம் இருக்கிறான்…… போயும் போயும் சுவீப் டிக்கட் விற்க வேணும்……..?”
அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்கின்றார் வந்தவர். பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்த அவர் கேட்டவருக்குக் காது கொடுப்பதாகத் தெரியவில்லை. அசட்டையாக இருந்துவிடுகிறார். கேட்பவர் இடங்கிடைக்காமற் போனது ஒரு புறம் இருக்க தம்முடைய கேள்வியை இருப்பவர் கவனிக்கவில்லையே என்ற கவலையோடு மௌனியாகி விடுகிறார்.
அவன் ஓயாமற் கூவிக்கொண்டிருக்கிறான்.
“போனால்…வந்தால்…”
“நீங்க சோதிடத்தை நம்புறீங்களா?”
இருந்தவர் கேட்கின்றார்.
“என்ன சொன்னீங்க…”
பதில் கிடைக்காமற் போனதற்காகச் சிறிது கவன்ற அவர் சடுதியாகக் கேட்டுவிடுகின்றார்.
“இல்லை…நீங்க சோதிடத்தை நம்புறீங்களா என்றேன்.”
“ம்…! நம்பாமல் என்ன? கடவுளுக்கு ஆராய்ச்சி செய்து விட்டு இப்ப, சோதிடத்துக்கும் வேறை வந்துட்டினமா? என்ன?”
“அப்படியொண்டுமில்லை ….” என்றபடி சிரிக்கின்றார் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர். வந்தவர் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசிவிட்டதாக அவர் நினைப்பு.
“கொஞ்சம்..!” என்று தமது கையை ஒரு பக்கமாக அசைத்து, அமர்ந்திருப்பவரை நகர்ந்திருக்கும்படி கேட்கின்றார் வந்தவர்.
அவர் நகைக்கின்றார்.
‘இந்த மனுஷனோடை போய் கதைச்சோமே! அட…’ – இருந்தவருடைய உள்ளத்தில் இப்படியும் ஒரு நினைப்பு ஊறுகிறது.
குரல் கம்மிப்போகும் வண்ணம் அவன் கத்துகின்றான். இது வரையில் ஒரே ஒருவர் மட்டுந்தான் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை அவன் உணர்கிறான்.
“இஞ்சை பாருங்கோ, இந்த மனுஷன் இப்பிடிச் செய்தால் என்ன?”
அவனையே வைத்தவிழி வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்த அந்த வந்தவர் புது ‘ஐடியா’ பெற்றுவிட்டவர் போலக் கேட்கிறார்.
“எப்பிடி”
“தன்னிட்டை உள்ள எல்லா ரிக்கட்டுகளையும் தானே எடுத்துக் கொண்டு அதிலை அடிக்கிற காசோடை சோக்காக வாழுறதுக்கென்ன?”
“அசல் மூளையைய்யா! அத்தனை டிக்கட்டுகளையும் வாங் அவனட்டைப் பணமிருந்தா இந்தத் தொழிலையா செய்வான். நீரும் ஒரு ஆள்தான்!…?”
அவன் குரல் சிறுத்து வருகிறது!
ஒவ்வொரு பஸ்நிற்பாட்டு மிடங்களுக்கும் அவனுடைய கால்கள் மாறி, மாறி நடந்து வருகின்றன.
‘கலீர்…!” என்ற சதங்கைச் சிரிப்பு.
அந்த அரவம் இருந்து வருகின்ற இடத்தை நோக்கிக் கண்களைச் செலுத்துகின்றார் இருந்தவர்.
“சரோ! ஏனப்பா….! சுவீப் ரிக்கட்டாமே. போனால் ஐம்பது சதந்தானே? வந்தால்”
இரு நாரீமணிகள் பஸ்நிலையமே மயங்கும்படி சிரிக்கின்றார்கள்.
“எழுபதினாயிரம்…அப்பாடா! ஏழு பிள்ளை சீதனம்!”
வயது வந்த பிள்ளை குட்டிகளின் பொறுப்பில் தாங்கமுடியாத சுமையை தாங்கி நிற்பவளைப் போலக் கூறுகின்றாள் அவள்.
மறுபடியும் நகை அரவம்!
கைகளிலே அழகுப்பை, குடை சகிதங்காணப்பட்ட அவளுடைய அதரங்களின் இடையே அவள் பற்கள் முறுவலிக்கின்றன. அந்த அழகுறு முறுவலை மிகைப்படுத்துவது போல இதழ்களின் சாயம் சூரிய ஒளியில் பட்டுப்போல மின்னுகிறது. குதிரைவாலையன்றிய பிறவற்றை உவமைகாட்ட முடியாத அவளுடைய கூந்தல் அங்கும், இங்கும் ஆடுகிறது.
“சுவீப் டிக்கட் கமோன். யூ வோண்ற் வண்?”
அவன் கேட்கிறான். அரிசி சாப்பிட்ட காமாளைப் பிள்ளையின் தோற்றம் போல வெண்மை படிந்து காணப்படுகிறது அவன் கடைவாயில் ….. அந்த அருவருப்பில் மயங்க முடியாது திணறுகின்ற இரு இளமங்கையர் முகத்தைத் திருப்பிக் கண்களை வேறு எங்கோ செலுத்துகின்றனர்.
ஏமாற்றம்!
அவனுக்கு இன்று பிழைப்பேயில்லை.
வாய் உளைச்சல் எடுக்கும் வரை கலந்து – கத்து எனக்கத்தித் தொண்டையும் வரண்டு விடுகிறது. இலாபம் இல்லாத வியாபாரத்துக்கு நட்டம் வைத்துவிடுவதற்காக அவன் அருகே பெரிய விளம்பர பலகையுடன் காணப்படுகின்ற தேநீர்க்கடைக்கும் புகுகின்றான்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவனையே வேடிக்கையாகப் பார்த்து நிற்கின்றனர். சிலர் தமக்குள் பகிடி’ விட்டுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்திற்கு ஊனம் விளைக்காத சிரிப்பொலி எங்கும் பரந்து கேட்கிறது. கூடவே எச்சில் இலைக்காக ஏங்கித் திரியும் காகங்களின் கரைவும் சேர்ந்து கேட்கிறது.
“உ!” என வாயை ஒடுக்கிப் புழுக்கத்தின் கொடுமையைப் புலப்படுத்துகின்றான் அவன். கையில் இருந்த சுவீப் டிக்கட் தட்டை மேசை மீது வைத்து விட்டு, வியர்த்து வழிகின்ற தன் மேற்சட்டையை மெல்ல உதறிவிடுகின்றான்.
அவனைப் பொறுத்தமட்டில் உலகத்தில் எந்தவித இனிய உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ மற்றவர்கள் வாழ்கிறார்கள்; அவனும் வாழ்கின்றான்.
ஒரு வெறும் தேநீர் அடங்கிய கோப்பை அவன் முன் வந்து சரணடைகிறது. குடித்து விட்டு, தன் மத்தியானப் போசனத்தை முடித்த நினைப்போடு வெளியே வருகின்றான் அவன்.
கொதிக்கும் வெய்யில்!
அவனுடைய கால்களில் அந்த உணர்வ இல்லை. கண்கள் தாம் மற்றவர்கள் படும் அவதியைப் பார்த்து, மனத்துக்குச் சொல்லிக்கொள்கிறது. அக்கம் பக்கம் வெப்பந்தான் !
மறுபடியந் தொழில்!
“போனால்…”
எல்லோருடைய கண்களும் அவனையே திரும்பிப் பார்க்கின்றன.
வந்தவரும், இருந்தவரும் இன்னமும் புறப்படவில்லை .
“எனக்கொண்டு கொடப்பா!”
வந்தவர் தமது பெயரில் ஐம்பது சதக் குற்றியொன்றை அவனது கையில் திணித்து விட்டு, தாமே ஒரு சுவீட்டிக்கட்டைப் பரிசீலனை செய்து எடுத்துக் கொள்கிறார்.
அவனுக்கு களிப்பும், சலிப்பும்….
‘காரைநகர்…’ என எழுதப்பட்டிருக்கும் அறிவித்தல் அருகே நின்றபடி உறுமுகிறது – கொழும்பு நகரை ஒரு கலக்குக் கலக்கி விட்டு வந்த யாழ்ப்பாணத்து டபிள் டெக்கர்’
அதிலே அமர்ந்திருந்த ஒருவருக்கு அவசரம். இறங்கி விட்டால் வெயில் சுடும்! அதேவேளையிற் சொல்லி வைத்தாற்போல இடமும் போய்விடும்.
வண்டியில் இடமற்ற நெருக்கம், வியர்வை , புழுக்கம்………
“இந்தப்பா சுவீப் டிக்கட் இஞ்சை வா!”
தன்னுடைய பெயர் மற்றைய சில பிரமுகர்களைப் போன்று பிரபலமடையவில்லையே என்ற ஏக்கம் முகத்தில் வழிகிறது. தான் கொடுக்கப் போகும் கணக்கிற்குக் கிடைக்கும் கமிஷன்’ தொகை கூடி, இன்றைய உழைப்புக்கும் பெருக்கம் ஏற்படப்போகும் மகிழ்ச்சி அதனை மறைக்கிறது.
“பார்த்தெடுக்கிறிங்களா? நான் ஒண்டைக் கிழிக்கட்டுமா?”
“நீயே கிழி பார்ப்பம்!”
பஸ் உறுமிவிட்டு ஆற்றாமையோடு புகையைக்கக்குகின்றது.
அவருடைய முகத்தைப் பார்த்து ‘எதை விரும்பக்கூடியவர்’ என்ற தவிப்பில் கண்களைச் செலுத்துகின்றான் அவன்.
கை – ஒரு துண்டைக் கிழித்துவிடுகிறது!
பஸ் நகர்ந்துவிட்டது!
அவன் பிழைப்பு என்ற பெயரில் அதன் பின்னே ஓடுகிறான்.
அவன் மனிதன்.
பஸ் இயந்திரம்.
“சே! சோம்பேறிச் சனங்கள் மனிஷன் யாழ்ப்பாணத்துக்குப் பிழைக்க வாறானே! ஐ…ய்யோ…ஐய்யோ !”
அவனுடைய உதடுகள் முணுமுணுக்கின்றன; முகம் தொய்ந்து விடுகிறது. உணர்ச்சிகளை வார்த்தைகளின் மூலம் வாயை விரல்கள் மூடுகின்றன.
‘இதை எப்பிடியும் இனிவிற்க ஏலாது! ஒருத்தரும் வாங்க மாட்டினம். சே! அந்தக் கண்ணறாவிபிடிச்ச மனிஷன் காசை எடுக்க எவ்வளவு நேரஞ்செண்டுது. அவன் நினைவுகள் தடுமாறுகின்றன.
சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துளாவிப்பார்க்கின்றான். பதினைந்து டிக்கட்டுகள் விற்ற பணம் – அதிலே தேநீர்க் காக போக – மீதி இருக்கின்றது.
‘எப்பிடியாவது கமிஷனில் கழிச்சுப்போடலாம்’
கிழிந்த டிக்கட்டை மடித்துத் தன் சொத்தாக எண்ணியபடி சட்டைப்பைக்குள் பதனமாக வைக்கின்றான். அது அவனுக்கு ஒரு வேளைச் சோறு போடும் பணமல்லவா?
மனம் உடைந்து விடுகிறது.
உள்ளத்திலே இருந்த தைரியம், வெய்யிலிலே வரண்டு விட்ட உணர்வு அவனை வாட்டுகிறது. கூடாரத்தின் உள்ளே சென்று போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தபடி, தகரத்துடன் சாய்கின்றான். அவனுடைய சொத்து – கிழித்த டிக்கட்!
நேரமும் ஓடக் காலமுங் கழிகிறது.
எல்லோரும் கலைந்து விடுகிறார்கள். வந்வர் போய்விடுகிறார். இருந்தவர் எப்பொழுதோ போயிருக்க வேண்டும்.
வருவதும், போவதும் வியாபாரம்!
அவனுக்குப் புதுப்புது முகங்கள். பஸ்ஸில் இருந்து போக்கிரித்தனம் செய்துவிட்ட eஆசாமியின் முகம் அவனுள் ஆழமாகப் பதிகிறது.
இத்தொழிலில் இறங்கி இண்டைக்குத் தான் ஒரே ஏமாற்றம். சுவீப் டிக்கட் விற்க முடியுமே தவிர, அதிலை ஒண்டைண்ெடாலும் என்ரை பிறப்பிலை வாங்கியிருக்கமாட்டேன் ! இதென்ன சங்கடமோ?
பையினுள் இருந்த துண்டு பெரும் பாரமாவும் இருக்கின்றது. இடையிடையே அதைத் தொட்டும் பார்க்கின்றான்.
இருள்கின்றது!
தான் சுவீப் டிக்கட்டுகளைப் பெற்ற இடத்திற்குச் சென்று மீதானவற்றை எண்ணிக் கணக்குக் கொடுத்துவிட்டு, கிடைத்த பணத்தோடு திரும்புகின்றான்.
வெறுமை!
யாழ்ப்பாணம் அமைதியில் மூழ்கிக் கிடக்கிறது.
தெருவோரங்களில் தூங்கி வழியும் சில கட்டாக்காலி மாடுகள், வாகனங்கள் நிறுத்தப்படும் கோட்டில் கிடந்து இரை மீட்கின்றன. அவற்றின் மிடற்றொலி எங்கும் பரவலாகக் கேட்கிறது. சந்தையின் மறுகோடியில் சில நாய்களின் ஒன்றை மற்றொன்று கடிக்கும் ஆவேச மூச்சும் தெளிவாகக் கேட்கின்றன.
‘நாளை விடிந்தால் – அதிருஷ்டப் பரீட்சை அவன் நினைக்கின்றான். அவனையும் அறியாமல் அந்த சுவீப் டிக்கட்டை அவனுடைய விரலகள் தொட்டுப் பார்த்து ஆயிரம் ரூபாவை ஸ்பரிசித்த மகிழ்வோடு கீழே சாய்கின்றன.
***
மறுபடியும் யாழ்ப்பாணம் தொடர்ந்து விழித்துக் கொண்ட பொழுது ஓர் அதிசயம்.
அவனை வழமையில் காண்பவர்க்கு அவன் காட்சியளிப்பதில்லை. “ஏன்” என்று கேட்டால் “தெரியாது” என்கிறார்கள்.
“பத்தாயிரம் ரூபாவுக்கு சுவீப் விழுந்திருக்கிறது” என்கிறார்கள் சிலர். விபரம் தெரியாது.
– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு