இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி டாலர்கள் இருக்கிறது என்பதே தெரியாது. அவ்வளவு பெரிய செல்வந்தர்.
அவருடைய ஒரே மகன் யுத்தத்தில் இறந்ததைத் தொடர்ந்து, சகோதர பாசத்தால் மகளும், புத்திர சோகத்தால் மனைவியும், அவரை விட்டு மறைந்தனர்.
குடும்பத்தினர் அனைவரையும் இழந்த அவர், தன்னையும் ஒருநாள் சாவு தழுவ வரப்போவதை எண்ணி சிந்திக்கத் தொடங்கினார். உறவினர் என்று சொல்லவும் எவரும் இல்லை. தான் சாவதற்குள் இந்தச் சொத்துக் களை நல்ல வழியில் பயன்படுத்தச் செய்து மறைய எண்ணினார்.
இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியபோது, நண்பர்கள் பலர் கோயில் கட்டவும், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், அறநிலையங்கள் அமைக்கவும் அவருக்கு ஆலோசனை கூறினர்.
இதைக் கேட்ட செல்வந்தரோ, “இவையெல்லாம் அமெரிக்காவில் இருக்கின்றன.
ஆனால் ‘சமூக சேவை’ என்பதே இங்கு இல்லை. இந்த அமைப்புக்கே என் சொத்துக்கள் பயன்பட வேண்டும்” என்று கூறினார். சமூக சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களை உண்டாக்கவும், நன்கு பிரச்சாரம் செய்யவும், சொற்பொழிவாளர்கள் தேவை என்றும், அவர்களுக்குப் பெருந்தொகை சம்பளமாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தார். இதற்கு அறிஞர்கள், பேராசிரியர்கள். சொற் பொழிவாளர்கள் ஆகிய பல துறையினரிடமிருந்தும் 832 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.
அப்போது செல்வந்தர் கூறினார், “நான் ஒரு மூடன் அமெரிக்காவில் சீர்த்திருத்தம் இல்லை என்று நினைத்தேன். சமூகத் தொண்டு புரிந்து நம் நாட்டைச் சீர்த் திருத்த 832 பேர் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சமூக சீர்திருத்தம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர்களும், அதை மக்களுக்கு போதிக்கும் ஆற்றல் உள்ளவர் களாகவும் இருக்கிறீர்கள். ஆகவே,…
“என் பணத்தை இதற்கு வீணாகச் செலவிட விரும்ப வில்லை. தயவு செய்து நீங்கள் 832 பேரும் எவரையும் திருத்த வேண்டியதில்லை. உங்களை நீங்களே திருத்திக் கொண்டால் போதும். நம்நாடு உருப்பட்டுவிடும்.” என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை