கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,827 
 
 

என்னுடைய நண்பரின் பெயர் யோகி. அது அவருடைய இயற்பெயர், பெற்றோர் சூட்டியது. கடந்த பத்து வருடங்களாக ரொறொன்ரோவில் சிறந்த யோகா பயிற்சியாளராக இருக்கிறார். நிதி நிபுணராக பணியாற்றியவர் ஓய்வெடுத்த பின்னர் இந்த வேலையைத்தான் தொண்டு நோக்கோடு செய்கிறார். பலர் அவர் யோகா பயிற்சியாளராக இருப்பதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறார் என்று நினைக்கிறார்கள். அது தவறு. நான் அவருடன் கொழும்பில் ஒன்றாகப் படித்தவன். ஆக இளமைக் காலத்திலிருந்து எனக்கு தெரிந்த ஒரே ரொறொன்ரோ நண்பர் இவர்தான். நான் இருக்கும் இடத்திலிருந்து 20 மைல் தூரத்துக்குள்தான் இருந்தார். ஆனால் அவரைச் சந்திப்பது மகா கடினம். அதனிலும் கடினம் அவரை தொலைபேசியில் பிடிப்பது. எப்பொழுது அழைத்தாலும் தகவல் பெட்டி நிறைந்து விட்டது என தகவல் வரும். மின்னஞ்சல் ஒன்றுதான் வழி. ஆனால் அவர் மின்னஞ்சலை வாரத்துக்கு ஒரு தடவைதான் திறந்து பார்ப்பார். ஏதாவது பிரச்சினைக்கு தீர்வு கேட்டு எழுதினால் அந்தப் பிரச்சினை தீர்ந்து பத்து நாள் கழிந்த பின்னர்தான் பதில் வரும். இவரிடமிருந்துதான் அதிசயமாக ஒரு மின்கடிதம் வந்திருந்தது. அதை ஒரு திங்கள் காலை அவசரமாகத் திறந்து படித்தேன். படித்தபோது அவர் எழுதியது சுவாரஸ்யமான சம்பவமாகப் பட்டது. என்னுடைய ஆற்றலுக்கு ஏற்ப மொழிபெயர்த்து அதை கீழே தந்திருக்கிறேன். அவருடன் தொலைபேசியில் பேசியபோது சில விவரங்களை அவர் கடிதத்தில் கூறாமல் விட்டது தெரிந்தது. அவற்றையும் சேர்த்து கடிதத்தை நிறைவாக்கியிருக்கிறேன். அவர் கூறிய விவரம் கீழே வருகிறது.

‘கடந்த ஞாயிற்றுக் கிழமை, அதாவது நேரத்தை ஒரு மணி நேரம் முன்னுக்கு தள்ளிவைத்த அந்த நாள், ரொறொன்ரோவின் குவீன்ஸ் வீதி வழியாக என்னுடைய காரை யோகா நிலையத்துக்கு ஓட்டிப் போய்க்கொண்டிருந்தேன். பொலீஸ் அன்று அடுத்து வந்த ரோட்டை தடுப்பு போட்டு மறித்திருந்தார்கள். ஏதோ போராட்ட அணிவகுப்பு அங்கே நடந்துகொண்டிருந்தது ஆகையால் கார்கள் ஊர்ந்தபடி நகர்ந்தன. என்னுடைய காரை பின்னாலிருந்து இடித்த சத்தம் கேட்டது. கீழே இறங்கி என்னவென்று பார்த்தால் காருக்கு சாதாரண சேதம்தான்; பெரிதாக ஒன்றும் இல்லை. பின்னால் காரை ஓட்டிவந்த நாகரிகமாக உடையணிந்த மனிதர் அவசரமாக இறங்கி நான் ஏதோ கையில் துப்பாக்கியை நீட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பதுப்போல, இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவர் வாய் ’மன்னியுங்கள், மன்னியுங்கள்’ என்று பலமுறை சொன்னது. நான் அந்த விசயத்தை அதே இடத்தில் மறந்துவிடத் தயாராக இருந்தேன். ஒரு நாளுக்கு ஒரு நன்மை என்ற கொள்கையை சில நாட்களாக கடைப்பிடித்து வந்தேன். ஆனால் கார்க்காரர் சேதத்தை ஈடுசெய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான் மறுபடியும் சேதத்தை குனிந்து ஆராய்ந்தேன், சின்னக் கீறல்தான். சரி, நூறு டொலர் தாருங்கள்’ என்றேன். அவர் உடனேயே சம்மதித்தார் ஆனால் கையில் அவ்வளவு பணமில்லை. பக்கத்திலிருந்த ஹொட்டலுக்கு என்னை வரச் சொன்னார். அங்கே வங்கியின் தானியங்கி மெசின் இருந்தது. அதிலே காசைப் பெற்றுத் தருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்.

நான் ஹொட்டல் வாசலில் காரை நிறுத்தினேன். ஹொட்டல் வாயிலோன் என்னை நோக்கி ஓடி வந்தார். ஆறடி உயரம், துணியை முறுக்கிப் பிழிந்ததுபோல தேகம். பழுப்பு நிறம், மெல்லிய தாடி, சரித்து வைத்த தொப்பி. இடையில் இறுக்கிய பெல்ட், அதில் பெண்டுலம்போல ஆடிய கறுப்புத் தடி. ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மொழி பேசும் ஏதோ ஒரு ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார் என்பது நிச்சயம். இங்கே அவருக்கு வாயிலோன் வேலை. கையை ஆட்டி ஆட்டி என்னை நகரச் சொன்னார். நான் நகரவில்லை. எதற்காக அங்கே காரை நிறுத்தியிருக்கிறேன்? என பழுதுபட்ட ஆங்கிலத்தில் கேட்டார். அவர் மொழியில் வ எழுத்து இல்லையென நினைக்கிறேன். வ வரும் இடமெல்லாம் ப என்றே உச்சரித்தார். நான் அவருக்கு நிலைமையை விளங்கப்படுத்தினேன். அந்தக் கார்க்காரர் காசை மாற்றி வந்து தந்ததும் நான் போய்விடுவேன் என்று உறுதியளித்தேன்.

சிறிது நேரம் தன் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். திடீரென்று ’உங்கள் காரில் எங்கே சேதம்?’ என்று வினவினார். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. அவரிடம் கதைகொடுத்து நேரத்தை நீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருந்தேன். காரில் இருந்து இறங்கி காரின் பின்பக்கத்தை காட்டினேன். யாரோ உயிருள்ள பெண் ஒருவரின் பின்பக்கத்தை ஆராய்வதுபோல நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தார். ‘சேதமே இல்லையே? எவ்வளவு பணம் பெறுகிறீர்கள்?’ என்றார். நூறு டொலர் என்றதும் வாயில் காப்போன் வாயிலே கைவைத்தார். ’அதிகம். மிக அதிகம்’ என்று சத்தமிட்டார். காரை இடித்தவர் ஒருவர். இடிவாங்கியவன் நான். இடையில் இவருக்கு என்ன வந்தது? ’மேலே ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது அநியாயம்’ என்றார். ’வாயிலோயே, வாயிலோயே’ என்று கண்ணகி கத்தியதுபோல நானும் கத்தவேண்டும்போல எனக்கு தோன்றியது.

சரியாக அந்த நேரம் பார்த்து கார்க்காரர் ஹொட்டலுக்குள் இருந்து வெளியே வந்து காசை நீட்டினார். வாயிலோன், யாராவது நாலு ஓட்டம் அடித்தால் கிரிக்கெட் அம்பயர் கையை அகல விரித்து ஆட்டுவது போல, கைகளை வீசி இடையிலே புகுந்து தடுத்தார். நான் சாப்பிட ஆரம்பித்த உணவில் பல்லைக் கண்டதுபோல திகைத்துப்போய் நின்றேன். கார்க்காரர் அவரைத் தள்ளிவிட்டு காசை நீட்ட நான் பெற்றுக்கொண்டேன். குளிர் ரத்தப் பிராணி ஒன்று திடீரென்று வெப்ப ரத்தப் பிராணியாக மாறியது போல அவர் கண்கள் கோபத்தில் சிவப்பாக மாறின. இடையில் அசைந்து தொங்கிக்கொண்டிருக்கும் தடியை எடுத்து அடித்துவிடுவாரோ என்ற அச்சம் தோன்றியது. ‘ஹராம், ஹராம். அநியாயமாக காசு அறவிடுகிறாய். உனக்கு தண்டனை கிடைக்கும். போகும் வழியில் விபத்து காத்திருக்கிறது’ என்ற கொடிய வார்த்தைகளை வீசினார். நான் கண்ணாடியில் அவர் உருவத்தை பார்த்தபடி வேகமாக பின்னுக்கு காரை எடுத்து ஓட்டிச் சென்றேன். இடையில் சொருகிய தடியை வெளியே எடுத்து ஆட்டி, இரண்டு நிமிடத்துக்கு முன்னர் என்னை யாரென்றே அறியாத ஒருவர், எனக்கு சாபமிட்டுக்கொண்டிருந்தார்.

நான் நேராக ரோட்டைப் பார்த்து அன்றுதான் கார் ஓட்டும் லைசென்ஸ் கிடைத்ததுபோல கவனமாக செலுத்தினேன். ஓட்டு வளையத்தில் கை நடுக்கம் மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. வீதியில் நெரிசல் குறைந்துவிட்டதால் நிதானம் பிடிபட்டது. மெல் கிப்சன் நடித்த Passion of Christ படத்தில் யேசுவை சிலுவையில் அறையும் நேரம் மேகமெல்லாம் நிறம் மாறி அசாதாரணமான சாம்பல் ஒளி பரவும். என் மனநிலையில் அதுபோல ஓர் ஒளி ரோட்டிலே போகும் வழியெல்லாம் படர்ந்திருந்தது. அந்த வாயிலோன் தடியை தலைக்கு மேல் சுழட்டி சாபமிட்டது நினைவிலிருந்து போக மறுத்தது. சிலப்பதிகாரத்து ‘இறை முறை பிழைத்தோன்’ என்ற வரிகள் திருப்பி திருப்பி மனதில் ஓடி சங்கடப்படுத்தின.

முன்னுக்குப் போன காரில் தாயும் மகளும்போல தோற்றம் கொண்ட இரு பெண்கள் சிரித்து சிரித்து பேசியபடியே காணப்பட்டார்கள். சிரிப்பை ஒரு தொழிலாகச் செய்ததை அன்றுதான் பார்த்தேன். அப்படியொரு அந்நியோன்யத்தை கண்ணுறுவதும் மனதுக்கு நிறைவாக இருந்தது. வேகமாய் போய் அவர்கள் காரை பின்பக்கத்தில் மோதினேன். எப்படி நடந்ததென எனக்கே புரியவில்லை. இரு பெண்களும் பதறியபடி ஒரே நேரத்தில் கீழே இறங்கினார்கள். இருவருமே அழகிகள். ஒரு விபத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பது எனக்கு இப்போது பழகிவிட்டது. ஒரு பேச்சுக்கு இடம் வைக்காமல் ‘மன்னிக்கவேண்டும். என்னுடைய பிழை’ என்றேன். இரண்டு கார்களுக்கும் நல்ல சேதம். இரண்டு பெண்களும் கார் அடிவாங்கிய இடத்தை குனிந்து ஆராய்ந்தார்கள். மூத்த பெண்ணின் முடி காற்றில் அலைந்து அவர் முகத்தை மூடியது. இளம் அழகியின் கண்கள் வித்தியாசமாக இருந்தன. குதிரையின் கண்கள்போல சாய்ந்திருந்தன. பகல் வெளிச்ச சேமிப்பு நேரம் ஆரம்பித்ததாலோ என்னவோ குளிர்காலம் முழுக்க சேமித்த வெளிச்சம் அவள் கண்கள் வழியாக வெளியே வந்துகொண்டிருந்தது. அவள் கண்களை என்னால் நேராக நோக்க முடியவில்லை. தரையை பார்த்தபடி ‘எவ்வளவு காசு நான் ஈடாகத் தரவேண்டும்?’ என்று கேட்டேன். அவர்கள் கார் பின்பக்கத்தை மறுபடியும் ஆராய்வார்கள் என நினைத்தேன். மாறாக அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இளம் பெண் என்னிடம் திரும்பி ‘500 டொலர்கள்’ என்றாள். நான் அந்த இடத்திலேயே காசை எண்ணிக் கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டேன். அவர்கள் காரை ஓட்டிப் போனார்கள். என்னுடைய காரை பழுது பார்க்கும் கம்பனி வாகனம் வந்து இழுத்துப் போனது. நான் நாலு மைல் தூரத்தையும் வீட்டுக்கு நடந்து கடந்தேன். வாயிலோன் குரல் காதில் விடாது ஒலித்தது. அன்று நான் சாப்பிடவில்லை. உடுப்பை களையவில்லை. அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கினேன். பின்னர் தூங்கினேன்.’

இதுதான் நண்பருடைய மின்னஞ்சல் சொன்ன கதை. இதை படித்ததும் என்னுடைய கார் விபத்தை பற்றியும் எழுதலாம் என்று தோன்றியது. இவ்வளவு காலமும் எழுதாமல் தள்ளிப் போட்டது. நேரம் கிடைக்கும்போது எழுதிவிடுவோம்.

– 2011-04-08

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *