சங்க இலக்கியத்தில் ஊறுகாய்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 7,609 
 
 

வழக்கம்போல் உதவிப்பேராசிரியர் குப்பம்மாள் தனது கல்லூரிக்கு வாடகை தானியில் பயணித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றிப்பெற்று அரசு அமைத்த இன்றைய முதல்வரின் புகைப்படம் சாலையோரப் பதாகையில் தெரிந்தது. அவரின் சிரித்தமுகம் குப்பம்மாவிற்கு ஒருவிதப் புத்துணர்ச்சியை அளித்தது.

அந்த மாநகரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜவுளி வியாபாரிகளை உருவாக்கிய ஜவுளிக்கடையைக் கடந்து செல்கையில் அக்கடையின் பெயரைப் பார்த்த பின்பு குப்பம்மாவிற்குத் தன்னுடைய பெயர் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய பெயருக்குப் பின்னுள்ள அரசியலில் இது வரை அவள் பட்டதுயரங்கள் நிழலாடின. தன்னுடைய பெயரைக்கேட்டவுடன் மற்றவர்கள் தன்னிடம் காட்டும் விலக்குதலை அவள் ஒவ்வொரு முறையும் உணர்ந்தே வருகிறாள். என்னதான் அறிவுஜீவியாக இருந்தாலும் பெயரைக் கேட்டவுடன் குப்பையாக ஒதுக்கும் மனிதர்களை அவள் கடந்தே வருகிறாள். அதே நேரம் தன் தந்தை தனக்கிட்டப் பெயரைச் சொல்லிக்கொள்வதில் அவளுக்குக் கர்வம் இருக்கத்தான் செய்தது.

குப்பம்மா மூன்றாவது முறையாகத் தனது கைப்பையைத் திறந்து அதில் அந்தக்கோப்பு இருப்பதை உறுதிசெய்து கொண்டாள்.

மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயின்று மிக ஆர்வத்துடன் இக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்த குப்பம்மாள் இலக்கிய வட்டம், படைப்பிலக்கியப் பயிற்சி என மாணவர்களின் திறமையை வளர்க்க மேற்கண்ட முயற்சிகள் அனைத்தும், முட்டுக்கட்டைகளால் முடங்கிப்போககுப்பம்மா கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதி சுமக்கும் கழுதையாகவே மாறிபோயிருந்தாள். கல்லூரிக்கு வருவது, பாடம் நடத்துவது, விளையாட்டுவிழா, மகளிர்தினவிழா, வருடத்திற்கு ஒருமுறை மாணவர்மன்றம் என்றளவில் அவளும் முடங்கித்தான் போயிருந்தாள். குப்பம்மாவிற்கு நேற்று துறைத்தலைவர் தலைமையில் நடந்த பேராசிரியர் கூட்டம் ஆச்சரியமாக இருந்தது. வழக்கம் போல், “வாங்கம்மா நாமெல்லாம் ஒரு குடும்பம். ஒத்துமையா இருக்கனும். யாருக்காவது பிறந்தநாள், திருமண நாள்னா ஹோட்டலுக்குப் போகனும். நல்லாசாப்படனும்” என்றுதான் பேசுவார் என எதிர்ப்பார்த்துப்போன குப்பம்மாவிற்கு துறைத்தலைவர் கூறிய செய்தி பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது.

“நேக் கமிட்டி வருது. எப்படியாவது இந்த முறை ஏ கிரேடு வாங்கிடனும்னு முதல்வர் சொல்லிட்டாரு. ஆனா அதவாங்கனும்னா கல்லூரியுடைய உள்கட்டமைப்பு, மாணவர்களுடைய சாதனை அதலாம் தாண்டி பணி புரிகின்ற பேராசிரியர்களுடைய செயல்பாடுகள் ரொம்ப முக்கியம். அத எப்படி முடிவு பண்றாங்கனா ஒவ்வொரு பேராசிரியரும் எத்தன ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறாங்க, எத்தன புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறாங்க. அவுங்க பங்கேற்ற கருத்தரங்குகள் எத்தனை அப்படினு பார்ப்பாங்க. அந்தமாதிரி எந்த சர்ட்டிஃபிகேட்டும் உங்ககிட்ட இருக்காதுனு எனக்குத் தெரியும். அதனால இப்போதிக்கு நீங்க எல்லாம் ஆளுக்கொரு கருத்தரங்கம் பண்ணுன மாதிரி காட்டறதது தாம் நம்மளால செய்யமுடியும். இதுக்காக நீங்க ரொம்ப சிரமப்படவேண்டாம். இப்ப ஆன்லைன்ல கருத்தரங்கம் பண்றது ரொம்ப ஈசி. ஆனா உங்களுக்கு இதபத்தி ஒன்னும் தெரியாதுனு எனக்குத் தெரியும். ஏனா எனக்கும் ஒன்னும் தெரியாது. ஆனா இதுக்கு ஒருவழி இருக்கு. எனக்குத் தெரிந்த நண்பர் இருக்காரு. அவருக்கிட்ட ஐயாயிரம் கொடுத்தா இன்விடேஷன், சர்ட்டிஃபிகேட் எல்லாம் அவுரு பாத்துப்பாரு. நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான். நாளைக்கு காலையில வரும்போது ஆளாளுக்கு ஒருபத்து தலைப்பு ரெடிபண்ணிட்டு வரவேண்டியதுதான். நாளைக்கு முதல்வர் தலைமையில் நடக்கற கூட்டத்துல அவங்கவங்க தலைப்ப முடிவு பண்ணிடலாம். சரிங்கலாமா….” என தன் உரையை முடித்தார்.

குப்பம்மாளுக்குத் தலைகால் புரியவில்லை. அவளுக்குப் பல்கலைக்கழக நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தன. முதுகலை முதல் முனைவர் பட்டம் வரை தான் படித்த காலத்தில் எத்தனை எத்தனை ஆய்வரங்கங்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள். அவளது திறமையை வெளிக்காட்ட கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே இதைக் கருதினாள். உடனடியாகத் தன்னுடைய பல்கலைக்கழகப் பேராசிரியருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அவர் மூலம் அவர்களது நண்பர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு வாழ்பேராசிரியர்கள் என அனைவரிடமும் பேசிய குப்பம்மாளுக்குக் கடும் அதிர்ச்சியாய் இருந்தது.

“நீ எந்த உலகத்துல இருக்க? கொரோனா காலத்துல ஏறக்குறைய ரெண்டாயிரம் தலைப்புகளுக்கு மேல நிறைய கல்லூரிகள்ல, இணைய வழிக் கருத்தரங்கம் நடத்தி முடிச்சிட்டாங்க. நல்லதலைப்புக்கு நான் எங்கபோறது” கேட்ட பல்கலைக் கழகப் பேராசிரியர் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு ஒரு ஐந்து தலைப்புகளைக் கூறினார். விடியவிடிய யோசனை செய்து இருபத்தைந்து தலைப்புகளைத் தேர்வு செய்து, இறுதியாகப் பத்துதலைப்புகளை முடிவுசெய்தாள் குப்பம்மாள். அதுதான் அவள் கைப்பையில் கோப்பினுள் இருக்கிறது.

இக்கருத்தரங்கிற்கு யாரையாரையெல்லாம் அழைக்கலாம். எப்படி எப்படியெல்லாம் சிறப்பாகச் செய்யலாம் என யோசித்துவந்த குப்பம்மா, தனது கல்லூரிவாசலில் தானி நின்றதும் சுயநினைவு திரும்பி, தானியிலிருந்து இறங்கி, தனது அலுவலகம் நோக்கி நடக்கையில், கல்வியறிவு மட்டுமே சமூகவிடுதலைக்கு வழிவகுக்கும் என்னும் உயரிய நோக்கத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான்பணியாற்றும் கல்லூரியை நிறுவிய நிறுவனரின் சிலையை, வழக்கம்போல் வணங்கிவிட்டு தனது அறைக்குச் சென்றாள்.

அன்று வழக்கத்திற்கு மாறாக, குப்பம்மாவின் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. சகப் பேராசிரியர் அனைவரும் கையில் கோப்புகளுடன் குறிப்பேடுகளில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். முதலாவதாக, அவர்களில் மூத்தபேராசிரியர் முதல்வர் அறைக்கு அழைக்கப்பட்டார். உடனே அடுத்து போகவேண்டிய கமலம் பரபரப்பின் உச்சத்தில் மடக்மடக்கெனத் தண்ணீர் குடித்தாள். குப்பம்மா தனது சகப்பேராசிரியை வனஜாவிடம் பேச்சு கொடுத்தாள்.

“நீ என்ன தலைப்புடி தேர்வு செஞ்சி இருக்க” எனக் கேட்டதற்கு அவள் ஏதோ மும்முரமாகப் படிப்பது போல் குப்பம்மாளின் கேள்வியைத் தவிர்த்தாள்.

முதல்வர் அறைக்குச் சென்ற மூத்தபேராசிரியர் மலர்ந்த முகத்துடன் அறைக்குத் திரும்பி “ஒரே தலைப்புதான் கொண்டுபோனேன். முதல்வர் நல்ல தலைப்புனு சொல்லி ஓக்கே சொல்லிட்டாரு. சொன்ன உடனே என்ன தலைப்புனு வனஜா கேட்டா. அது சஸ்பென்ஸ். அத நான் இப்ப சொல்லமாட்டன். இந்த தலைப்ப நானும் என்னோட வீட்டுக்காரு. அவரு பிரண்டு, ஒரு ஐ. ஏ. எஸ் ஆபீஸர், ஒரு ஐ. பி. எஸ் ஆபீஸர் எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணினோம்” எனக் கூறிய மூத்தபேராசிரியர் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.

“குமுதம், குங்குமம் தவிர எந்தப் புத்தகமும் படிக்காத இந்த அம்மா என்ன தலைப்பு கொடுத்திருப்பாங்க” எனக் குப்பம்மாள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், குப்பம்மாளின் தோழி வனஜா முதல்வர் அறைக்குச் சென்று திரும்பியிருந்தாள். அவளது முகத்தில் எதையும் அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் கடைசி ஆளாக முதல்வர் அறைக்குள் நுழைந்த குப்பம்மா, தேர்வுக் குழுவிலிருந்த ஐந்து பேருக்கும் ஆளுக்கொரு கோப்பினைக் கொடுத்தாள்.

கோப்பினைப் பிரித்த கல்லூரி முதல்வர் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் என்னும் முதல் தலைப்பைப் படித்தவுடன், துறைத்தலைவர் பெரியசாமி, “சார் இது நல்ல தலைப்பு சார். இப்ப இருக்கற சூழ்நிலையில் இத பத்தி பேசறது சரியா இருக்கும்” என்றார்.

பெரியசாமி புலம்பெயர் தமிழர்கள் அப்படின்னா இது ஈழத்தமிழர்களைக் குறிக்கும்தானே” என முதல்வர் கேட்டதற்கு, “ஆமா சார்” எனத் துறைத்தலைவர் சொன்னார்.

“அப்படின்னா இது இலங்கை அரசைப்பற்றி பேச வேண்டிய சூழல் வருமே. அது நம்ம கல்வி நிறுவனத்திற்குச் சிக்கலாகுமே என இழுத்தார். உடனே துறைத்தலைவர் ஆமா சார் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், அமைதிப்படை எனப் பேசும்போது இந்திய இறையாண்மைக்குச் சிக்கலாயிடும். எனவே, இந்த தலைப்பு வேண்டாம் சார்”

எனத் தோசையைத் திருப்பிப் போட்டார். பெரியசாமி தலித் இலக்கியம் இந்தத் தலைப்பு என இழுப்பதை உணர்ந்து கொண்ட துறைத்தலைவர்,

“சார் தலித்இலக்கியம் பத்தி பேசினா தலித் தலைவர்களை யாரையாவது கூப்பிட நேரிடும். அப்ப தமிழ்த்தேசியம், திராவிடத்தேசியம், இந்தியத்தேசியம் போன்ற சிக்கல்கள் வரும். அது இல்லாம தவித்தலைவர்கள் பேசுவதை நமது கல்லூரி நிர்வாகம் ஒத்துக்காது. அதனால வேறதலைப்பு இருந்தா பரவாலசார்” என்றார் அவர். அயல் தமிழ் இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம் என ஒவ்வொரு தலைப்பாக வாசித்துவிட்டு, கோப்பினை மூடிய முதல்வர், “இந்த தலைப்புலாம் வேண்டாம். பெரியசாமி முதல்ல ஒரு அம்மா வந்தாங்கள்ல அது என்ன தலைப்பு? என யோசிக்கும் போது, பெரியசாமி முண்டியடித்துக்கொண்டு “சங்க இலக்கியத்தில் ஊறுகாய் மிக நல்ல தலைப்புசார்” என்றார்.

“அந்த தலைப்புல முக்கிய விஷயம் ஊறுகாய். சார் இதுல இலக்கியம் மட்டும் இல்ல, இலக்கணமும் இருக்கு. ஊறுகாய் என்பது வினைத்தொகை. ஊறுகாய், ஊறுகின்றகாய், ஊறும்காய் என அது முக்காலத்துக்கும் பொருந்தும் சார்” எனத் துறைத் தலைவரின் அடுத்த நிலையிலுள்ள நல்ல பேராசிரியர் தனது தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தினார்.

“பெரியசாமி இந்தமாதிரி யோசிச்சி மத்த நாலு ஸ்டாப்புக்கும் நீங்களே ஒரு நல்லதலைப்பா சொல்விடுங்க. ஒக்கே சார். நான் உடனே சொல்றன் சார்.”

இதிகாசத்தில் ஊறுகாய், பதினெண்கீழ்க் கணக்கில் ஊறுகாய், ஐம்பெருங்காப்பியத்தில் ஊறுகாய் என யோசிக்கும் போது, துறைத் தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள நல்ல பேராசிரியர் “ஐஞ்சிறுகாப்பியத்தில் ஊறுகாய்” எனக் கடைசித் தலைப்பையும் உறுதி செய்தார்.

ஒருமனதாய் தலைப்பு முடிவு செய்த பெருமிதம் முதல்வர் முகத்தில் தெரிந்தது. முதல்வரிடம் துறைத்தலைவர், “ஐயா ஒரு சின்ன விண்ணப்பம். கருத்தரங்கம் முடிந்த பின்னாடி, இதையெல்லாம் தொகுத்து, ஊறுகாயும் இலக்கியமும் எனப் புத்தகமாக வெளியிட்டால், நமது கல்லூரிக்கு நல்ல பெயர் கிடைக்கும் எனப் பெருமிதத்துடன் சொன்னார்”.

துறைத்தலைவரின் அடுத்த நிலையிலிருந்த நல்ல பேராசிரியர் இந்தக் கட்டுரைகளில் யாராவது பார்ப்பனர் ஊறுகாய், நாடார் ஊறுகாய், பறையர் ஊறுகாய் என எழுதிவிட்டால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் எனத் தனது அறிவுத்திறத்தை வெளிப்படுத்தினார்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின், கருத்தரங்கம் முடிந்தப்பின் மீண்டும் ஒரு குழு அமைத்து சாதியம் இல்லாத ஊறுகாய் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே தேர்வு செய்து வெளியிடுவோம் எனக் கூட்டத்தில் முடிவு செய்தார் கல்லூரிமுதல்வர்.

குப்பம்மாள் அன்று மாலை வீட்டிற்குத் திரும்புகையில் வழக்கம்போல் அப்புகழ்ப்பெற்ற கல்லூரியின் நிறுவனரான அந்த உயரிய மனிதர் சிலையாகவே இருந்தார். ஆனால் தானியில் பயணிக்கும் குப்பம்மாளின் இதயம் மட்டும் கல்லூரி முதல்வர் அறையில் பலமணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே இருந்த காரணத்தினால் ஏற்பட்ட கால்வலியும் தாண்டி வலித்தது.

– காக்கை சிறகினிலே (பிப்ரவரி 2022)

4 thoughts on “சங்க இலக்கியத்தில் ஊறுகாய்

  1. அகடெமியாவில் நடக்கும் சமகால அபத்தங்களை மிகச்சிறப்பாக இக்கதை சித்திரிக்கிறது.

  2. The story is finely fabricated. To be very frank, without any fabrication and manipulation, the author has selected the concept based on the need of the hour. Even after independence, implementation of social justice, still the casteism is rooted deeply in the minds of learnt people. Even the principal of the college has to dance according to the tune played by his subordinates. Marginal people has to keep struggling for ever. The respect and reverence kuppamaal shows to the statue and the interest and involvement towards her profession was clearly conceptualised. She struggled to present the topic for seminar is also written nicely and justifiable. The name of the protagonist ‘kuppamaal’ is also a good selection. But nowadays marginalized people opt to name in a Novel manner. I mean, it’s difficult to classify people by their name. (People select Sanskrit name). I like to read with great interest as it deals with our teaching profession and it focusses on the contemporary issues such as fulfilling the needs of NAAC, preparing fabricated reports etc., Good attempt. Lots of wishes. Keep rocking.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *