சங்கினி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,352 
 
 

சனிக்கிழமை.

அலுவலகத்தில் இருந்த ஜெயராமனுக்கு அவன் அப்பாவிடமிருந்து மெயில் வந்தது.

பவித்ரா என்கிற பெண்ணின் ஜாதகம் மிக நன்றாகப் பொருந்துகிறதாம். திருவான்மியூர் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்கிறாளாம். அவளுடைய வீடும் இவன் வசிக்கும் பாலவாக்கத்தில்தான் உள்ளதாம்.

வரும் வெள்ளிக்கிழமை சென்னை வருவதாகவும், ஞாயிற்று கிழமை ராகு காலத்திற்குள் அவளை ஜெயராமனுடன் சென்று பெண் பார்த்துவிட்டு திங்கட்கிழமை திருநெல்வேலி திரும்புவதாகவும் எழுதியிருந்தார்.

ஜெயராமனுக்கு வயது 27. ஓ.எம்.ஆர் ரோட்டில் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியில் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர். பாலவாக்கத்தில் கடற்கரை ரோடில் ஒரு பெரிய வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்தான். அவனுக்கு தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். மெயில் பார்த்து சந்தோஷமடைந்து, உடனே தன் நெருங்கிய கல்லூரித் தோழர்களான அருணாச்சலம் மற்றும் குமாருக்கு போன் பண்ணினான். இருவரும் பொன்னேரியில் அசோக் லேலாண்டில் வேலை செய்கிறார்கள்.

அருணாச்சலத்திடம் உற்சாகத்துடன், “மச்சி அடுத்த சண்டே நான் பொண்ணு பாக்கப்போறேன்….பேரு பவித்ராவாம். ஸ்டேட் பாங்க்ல வேலை. அப்ஸ் இப்பத்தான் மெயில் போட்டாரு” என்றான்.

“சீக்கிரம் அவள மடக்கிரு. மச்சி……உனக்கும் ஒருத்தன் பொண்ணு தரானே….மவனே உன் அப்பாக்கு கல்யாணம் ஆனதே ஜாஸ்தி.”

இருவரும் பெரிதாக சிரித்தார்கள்.

“சரி, சரி நீயும் குமாரும் இன்னிக்கு பாலவாக்கம் வந்து நீராகாரம் குடிச்சிட்டு சமத்தா இங்கேயே தூங்கிடுங்க…நாளைக்கு சண்டே, மெதுவா எந்திரிக்கலாம். நான் சரக்கு வாங்கிகிட்டு வீட்டுக்கு போறேன்.”

அடுத்த அரைமணி நேரத்தில் குமார், போன் பண்ணி “மச்சி நீராகாரத்துக்கு அப்புறமா டின்னருக்கு வெளிய எங்கயும் அலைய வேண்டாம்…நான்வெஜ் பீட்ஸா ஆர்டர் பண்ணிரு” என்றான்.

இரவு ஏழரை மணி.

நண்பர்கள் மூவரும் பாலவாக்க மாடி வீட்டில் அப்சொல்யூட் வோட்காவையும், ஸ்பரைட் குளிர்பானத்தையும். கோல்ட்பிளேக் சிகரெட் பாக்கெட்டுகளையும் டேபிளின் மேல் பரத்திவைத்துவிட்டு,

குடிக்க ஆரம்பிக்கும்முன், ஆர்டர் செய்த பீட்ஸாவுக்கு காத்திருந்தார்கள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

“மச்சி, பீட்ஸா வந்துருச்சு, போய் கதவைத் திற.”

ஜெயராமன் லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டான். கையில் புகையும் சிகரெட்டுடன் கதவைத் திறக்க, அங்கு புடவையணிந்த ஒரு அழகிய இளம் பெண் பீட்ஸா டப்பாக்களுடன் நின்று கொண்டிருந்தாள்.

“மிஸ்டர் ஜெயராமன் ப்ளீஸ்” என்றாள்.

ஜெயராமன் ஒரு கணம் திகைத்து பின்பு சமாளித்துக்கொண்டு “நான்தான் ஜெயராமன் ப்ளீஸ் கம் இன்” என்று கதவை அகலத் திறந்தான்.

அவள் உள்ளே வந்தாள்.

அறையில் ஒரே புகை மண்டலம். டேபிளின் மீது இருந்த பெரிய வோட்கா பாட்டிலையும் அதைச்சுற்றி பரத்தியிருந்த கண்ணாடிக் குடுவைகளையும் பார்த்து முகம் சுளித்தாள்.

ஜெயராமன் “டெலிவரி பாய் இல்லியா? நீங்க யாரு?” என்று கேட்டான்.

“டெலிவரி பாய் அவசரமா வேற இடத்துக்கு போய்ட்டான், இன்னிக்கி சனிக்கிழமை அதனால எல்லா பாய்ஸும் பிஸி….நான் அவனுக்கு சூப்பர்வைசர்”

குமார், “உங்களுக்கு யூனிபார்ம் கிடையாதா?” என்றான்.

“நான் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆச்சு….யூனிபார்ம் ஆர்டர் கொடுத்திருக்கு, அடுத்தவாரம் வரும்.”

அவள் பீட்சாவை கொடுத்துவிட்டு ஜெயராமனிடம் பணம் பெற்றுக் கொண்டு உடனே சென்று விட்டாள்.

ஜெயராமன் கதவை நன்கு சாத்திவிட்டு உள்ளே வந்தான். மூவரும் அந்த ஒரு பாட்டில் வோட்காவை, ஸ்ப்ரைட் கலந்து ஆர்வத்துடன் குடிக்க ஆரம்பித்தனர்.

இரண்டு பெக் உள்ளே போனதும் குமார், “இப்ப வந்துட்டு போனாளே, பீட்ஸா பொண்ணு… அவ சூப்பர் பிகர்” என்றான்.

அதற்குள் நான்காவது பெக்கில் இருந்த அருணாச்சலம், “மச்சி அந்தக் காலத்திலிருந்தே பெண்களை நான்கு வகைகளா பிரிச்சு வச்சிருக்காங்க. அது உங்களுக்கு தெரியுமா?” என்று சுவையான டாப்பிக்கை ஆரம்பித்தான்.

“எங்களுக்கு அழகான பெண்கள், அழகில்லாத பெண்கள் மட்டும்தான்டா தெரியும்…நீயே சொல்லு.” என்றான் ஜெயராமன்.

“ஜொள்றேன்….அவர்களை பத்மினி, சங்கினி, ஹஸ்தினி, சித்ரினி என்பார்கள். பத்மினி பெண்கள் சொக்கவைக்கும் அழகு, இனியசொல், புனிதம், புன்சிரிப்பு, எப்போதும் மலர்ந்தமுகம் கொண்ட மேன்மையானவர்கள்.

“சங்கினி பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறுசுறுப்பானவர்கள், சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். ஹஸ்தினி பெண்கள் கேளிக்கையை விரும்புபவர்கள், ஆண்களை கோபமூட்டி காதலிப்பவர்கள், ஊடல் குணம் அதிகம். சித்ரினி பெண்கள் அலங்காரத்திலும், கலைகளிலும் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களை சிங்காரி, அலங்காரி என்றும் அழைப்பர். இது வட இந்திய கணிப்புகள்.

“ஆனால் தமிழர்கள் பெண்களை வயது அடிப்படையில் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் என ஏழு வகைகளாக கணித்துள்ளனர்.” என்றான்.

குமார் “எப்டி மச்சி உனக்கு இவ்வளவு தெரியும்?” என்றான்.

அருணாச்சலம் முழு மப்பில் இருந்தான். சடக்கென்று கிளாஸை ஒரே மடக்கில் காலி செய்து விட்டு,

“மயிரு இன்னும் கொஞ்சம் ஊத்து, ஷோல்றேன்” என்றான்.

மூவரும் முழு பாட்டிலை காலி செய்தனர். அதீத மப்பில் திளைத்தனர்.

அருணாச்சலம் வோட்கா பாட்டிலின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு நெருப்புக் குச்சியை கிழித்துப் போட, அது குப் என நீல நிறத்தில் ஒரு செகண்ட் ஒளிர்ந்தது. அனைவரும் கைகொட்டி சிரித்தனர்.

பின்பு நான்வெஜ் பீட்ஸாவை பகிர்ந்து உண்டனர். இருக்கிற சிகரெட் அனைத்தும் காலியானதும் ஆஷ்ட்ரேயில் தூக்கி எறிந்த சிகரெட் துண்டுகளுக்கு மறுபடியும் உயிரூட்டி புகைத்தனர். என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிப்பேசி இரவு இரண்டு மணிக்குமேல் தரையில் உருண்டு தூங்கிப் போயினர்.

மறுநாள் காலை ஏழரை மணி. சென்னை வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் மூவரும் எழுந்திருக்கவில்லை. கதவு படபடவென தட்டப்படும் சத்தம் கேட்டது.

ஜெயராமன் சிரமப்பட்டு தரையிலிருந்து எழுந்து சென்று, எரிச்சலான கண்களுடன் கதவைத் திறக்க, அங்கு முந்தையதினம் வந்த பீட்ஸா பெண் டீ ஷர்ட், ட்ராக் பாண்ட், ஷூ அணிந்து நின்று கொண்டிருந்தாள்.

“பீச்சுக்கு மார்னிங் வாக் வந்தேன்…. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்.”

ஜெயராமன் பதிலுக்கு காத்திராமல் அவனைத் தாண்டி உள்ளே வந்தாள்.

அருணாச்சலமும், குமாரும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தனர். அடுத்த அறைக்குள் சென்று இவர்கள் பேசுவதை கேட்டனர்.

“மிஸ்டர் ஜெயராமன், என்னோட பெயர் பவித்ரா. அடுத்த சண்டே நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதா, உங்களோட அப்பா என்னோட அப்பாவுக்கு மெயில் அனுப்பிச்சு நீங்களும் பாலவாக்கத்தில் இருப்பதாக உங்கள் முகவரியை அதில் எழுதியிருந்தாரு. உங்க அட்ரஸ் என் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருந்ததுனால, நான் உங்களைப் பார்த்து பேசலாம், உங்களைப் புரிந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் நேற்று மாலை ஏழரை மணிக்கு இங்க வந்தேன். பீட்ஸா டெலிவரி பாய் ஒருத்தன் உங்க பில்டிங் படியேறும்போது, நான் அவனை மறித்து, யாருக்கு பீட்ஸா? என்று கேட்டதும், மிஸ்டர் ஜெயராமனுக்கு என்றான். நான் அவனிடம் பணம் கொடுத்து பீட்ஸா பெற்றுக்கொண்டு அதை உங்களுக்கு டெலிவரி செய்தேன்.”

“……………..”

“இப்ப எதுக்கு வந்தேன் என்றால், நீங்க தயவுசெய்து அடுத்த சண்டே என் வீட்டுக்கு வராதீங்க. குடிக்கிற, சிகரெட் பிடிக்கிற ஒருத்தர என் கணவரா என்னால கற்பனை செஞ்சுகூட பார்க்க முடியாது.

நம்ம நேரத்தை இனிமே நாம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.”

பல்லுகூட தேய்க்காமல், கலைந்த தலை மயிருடன், அழுக்கு லுங்கி பனியனில் தான் இருப்பதை உணர்ந்த ஜெயராமன், கூச்சத்துடன் “இந்த மாதிரி சூழ்நிலைல நான் நம்முடைய சந்திப்பை கொஞ்சமும் எதிர்பார்க்கல. மேடம் ப்ளீஸ் அவசரப் படாதீங்க…நான் சத்தியமா குடிகாரன் இல்ல, வீக் எண்ட்ல இந்த மாதிரி எப்பவாச்சும் நண்பர்களுடன் மட்டும்தான். நீங்க சொன்னா அதையும் விட்ருவேன்..” என்று கெஞ்சினான்.

“சாரி மிஸ்டர் ஜெயராமன் நான் தவறுகள் செய்யாது நேர் கோட்டில் அமைதியா வாழ்ந்துவரும் ஒரு பெண். ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளதான் எனக்கு விருப்பம். உங்களை மாதிரி பெரும்பாலான இளைஞர்கள் விளையாட்டா நண்பர்களுடன் குடிக்க ஆரம்பிச்சு அப்புறம் மனைவிகிட்ட பல கெட்ட பழக்கங்களை மறைச்சு, நாற்பது வயசுலயே ஷுகர், ஹார்ட் அட்டாக் என்று ஆரம்பித்து, படிப்படியாக முற்றி, ஐம்பது வயதில் காங்ரீன் ஏற்பட்டு, தவணை முறையில் கால் விரல்களை எடுத்து, கடைசியாக கால்களையும் இழக்க நேரிடும் கொடுமைகளை நான் நிறைய பார்த்து விட்டேன். போதும்.”

விருட்டென்று வெளியேறினாள்.

ஜெயராமன் வேதனையில் விக்கித்துப் போனான்.

அடுத்த ரூமிலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தனர்.

அருணாச்சலம் நிலைமையின் தாக்கம் உணராது, “போனா போகுது மச்சி…நீ கவலைப் படாத. இந்த பவித்ரா இல்லன்னா இன்னொரு சுமித்ரா….அடுத்த தடவை குடிக்கும்போது பீட்ஸா ஆர்டர் பண்ணாத” என்றான்.

குமார், “மச்சி நேத்து நீ சொன்ன நாலு வகைகளில் இவள் எந்தவகை?” என்றான்.

“கண்டிப்பாக சங்கினிதான். சுதந்திரமான புத்திசாலிப் பெண்.” என்றான்.

Print Friendly, PDF & Email

1 thought on “சங்கினி

  1. இளைஞர்களுக்கான கதை. வாலிபர்கள் பாடம் கற்றுக் கொண்டால் சரி. விறுவிறுப்புக்கு குறைவில்லை.
    சபிரே மொஹமெட், ஆம்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *