6. மனிதப்பற்று | 7. அழைப்பு
ஐந்து நிமிஷங்களில் பக் ஜான் தார்ன்டனுக்கு ஆயிரத்து அறுநூறு டாலர் சம்பாதித்துக்கொடுத்தது. அதைக் கொண்டு அவன் தான் கொடுக்க வேண்டிய சில கடன்களைக் கொடுத்துவிட்டுத் தன் கூட்டாளிகளோடு கிழக்குப்பிரதேசத்தை நோக்கிப்புறப்பட்டான். முன்னால் அங்கே ஒரு தங்கச்சுரங்கம் இருந்ததாக ஒரு கதை நீண்ட காலமாக வழங்கி வந்தது. அதை நாடிப் பல பேர் சென்றார்கள். ஆனால் யாரும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதைத் தேடிச் சென்றவர்களில் பலர் திரும்பி வரவேயில்லை. அந்தத் தங்கச்சுரங்கம் ஒரு மர்மமாக இருந்தது. முதலில் அதை யார் கண்டுபிடித்தார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. கர்ணபரம்பரையாக வரும் கதையிலும் அதனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே அங்கு ஒரு பாழடைந்த மரவீடு இருந்தது. சாகுந்தறுவாயில் கூடப் பலபேர் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். சொல்வதோடல்லாமல் வடநாட்டில் எவரும் கண்டறியாத உயர்ந்த மாற்றுத்தங்கக்கட்டிகளைச் சான்றாக வைத்துச்சென்றனர்.
ஆனால் யாரும் அதனருகே சென்று தங்கச்சுரங்கத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த முயற்சியில் இறந்தவர்களே பலராவர். இவ்வாறு பலர் முயன்று தோல்வி அடைந்திருந்ததாலும் ஜான் தார்ன்டனும், பீட்டும், ஹான்ஸும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கிழக்குப்பிரதேசத்தை நோக்கிச் செல்லலானார்கள். பக்கும், வேறு ஆறு நாய்களும் அவர்களுடன் சென்றன. யூக்கான் ஆற்றுக்கு எதிர்த் திசையில் அவர்கள் சறுக்குவண்டியிலே எழுபது மைல் பிரயாணம் செய்தார்கள்; பிறகு இடது பக்கமாகத் திரும்பி, ஸ்டூவர்ட் ஆற்றின் மேலாக அதன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிச் சென்றார்கள்.
ஜான் தார்ன்டனுடைய தேவைகள் சொற்பமே. கொடிய கானகத்தைக் கண்டு அவனுக்குச் சற்றும் பயமில்லை. கையில் கொஞ்சம் உப்பையும், ஒரு துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு அவன் கானிலே புகுந்து இஷ்டம் போல் திரிவான். பிரயாணம் செய்துகொண்டே அவன் உணவை நாடி வேட்டையாடுவான்; உணவு கிடைக்காவிட்டாலும் அது விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு – செவ்விந்தியனைப்போல – பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவான். இவ்வாறு கிழக்குப்பிரதேசத்திலே அவன் பிரயாணம் செய்தான். வண்டியிலே துப்பாக்கிக்கு வேண்டிய தோட்டாக்களும், மற்ற கருவிகளுமே இருந்தன. எல்லையற்ற எதிர்காலத்தை நோக்கித் திட்டம் ஒன்றும் இன்றி அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
வேட்டையாடுவதும், மீன்பிடிப்பதும், பழக்கமில்லாத இடங்களில் சுற்றி அலைவதும் பக்குக்கு அளவற்ற களிப்பை உண்டாக்கியது. சில வாரங்களுக்கு அவர்கள் நாள்தோறும் பிரயாணம் செய்து கொண்டிருப்பார்கள்; சில வாரங்களுக்கு அங்குமிங்கும் முகாமிட்டுத் தங்குவார்கள். அந்தச் சமயத்தில் நாய்கள் வேலையின்றித் திரியும். கூட்டாளிகள் மூவரும் உறைபனியின் மேல் தீ உண்டாக்கி, அதன் உதவியால் எண்ணிக்கையற்ற தட்டுக்களைக் கழுவிச் சுத்தம் செய்வார்கள். வேட்டை நன்றாகக் கிடைத்தால் வயிறு புடைக்கத் தின்பார்கள்; வேட்டை கிடைக்காவிட்டால் பட்டினி கிடப்பார்கள்.
கோடைக்காலம் வந்தது. மூட்டைகளை நாய்கள் முதுகில் சுமந்து செல்லலாயின. கூட்டாளிகளும் சில சாமான்களை முதுகில் சுமந்து சென்றார்கள். நீலநிறமான மலை ஏரிகளில் படகில் சென்றார்கள். பெயர் தெரியாத பல ஆறுகளின் மேலும் கீழுமாகத் தோணியில் சென்றார்கள். அப்படிச் செல்லுவதற்கு வேண்டிய தோணிகளைக் கானகத்தில் உள்ள மரங்களைக்கொண்டு கட்டிக் கொண்டார்கள்.
பல மாதங்கள் கழிந்தன. யாரும் புகுந்தறியாத பிரதேசங்களிலே அவர்கள் அங்குமிங்குமாகச் சென்று கொண்டிருந்தார்கள். கோடையில் வீசும் உறைபனிப்புயலிலும் அவர்கள் சென்றார்கள். நடுநிசியில் தோன்றும் கதிரவனைப் பார்த்துக்கொண்டும் மலை முகடுகளில் ஏறிச்சென்றனர்; குளிரால் நடுங்கினர்; ஈக்களும், கொசுக்களும் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும் சென்றனர்; பனியாறுகளின் அருகிலும் சென்றனர். இலையுதிர்ப் பருவத்திலே அவர்கள் ஓர் ஏரிப்பிரதேசத்தை அடைந்தனர். அந்தப் பிரதேசம் ஒரே நிசப்தமாக இருந்தது; துயரத்தில் குடியிருப்பதாகவும் தோன்றியது. காட்டுத்தாராக்கள் அங்கே எப்பொழுதோ வந்ததுண்டு. ஆனால், அவர்கள் சென்ற சமயத்தில் அங்கே உயிர்ப்பிராணிகளின் அறிகுறியே தென்படவில்லை. கடுமையான குளிர்க் காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒதுக்கான இடங்களில் பனிக்கட்டிகள் உருவாகிக்கொண்டிருந்தன. நீர்நிலைகளிலே கரையை நோக்கிவரும் சிற்றலைகளின் அரவம் துயரம் நிறைந்தது போலக் காதில் விழுந்தது.
மேலும், ஒரு குளிர்க்காலம் முழுவதும் அவர்கள் சுற்றி அலைந்தார்கள். முன்னால் அப்பகுதிக்கு வந்த மனிதர்கள் பனிப்பரப்பிலே உண்டாக்கிய பாதை ஒன்றுமே தெரியவில்லை. பழம்பாதை ஒன்று கானகத்தின் வழியாகச் செல்வதை அவர்கள் ஒரு சமயத்திலே கண்டார்கள். பாழடைந்த மர வீடு அதன் பக்கத்தில் தான் இருக்குமென்று தோன்றியது. ஆனால், அந்தப் பாதை எங்கே தொடங்குகிறது என்று தெரியவில்லை; எங்கே முடிகிறது என்றும் தெரியவில்லை. அதை யார் உண்டாக்கினார்கள், எதற்காக உண்டாக்கினார்கள் என்பவையெல்லாம் பெரிய மர்மமாக இருந்தன; அவற்றைப் போலவே அந்தப் பாதையும் ஒரு மர்மமாக இருந்தது. மற்றொரு சமயம் அவர்கள் ஒரு பாழடைந்த வேட்டைக்குடிசையைக் கண்டார்கள். அங்குக் கிடந்த ஒரு கந்தலான கம்பளிப் போர்வையினுள்ளே ஒரு வெடிமருந்துத் துப்பாக்கி இருந்ததை ஜான் தார்ன்டன் கண்டுபிடித்தான். வடமேற்குப் பிரதேசத்திலோ முதல் முதலில் மக்கள் புகுந்த போது ஹட்ஸன் வளைகுடாக் கம்பெனியார் அப்படிப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தினார்கள் என்று அவனுக்குத் தெரியும். அந்தக் காலத்தில் அந்தத் துப்பாக்கி மதிப்பு அதிகம். அது எவ்வளவு உயரம் இருக்கிறதோ அவ்வளவு உயரத்திற்கு நீர்நாய்களின் தோல்களை அடக்கி அதற்கு விலையாகக் கொடுக்கவும் மக்கள் தயாராக இருந்தனர். அந்தத் தனி இடத்திலே வேட்டைக் குடிசையைக் கட்டி, பிறகு அதிலேயே கம்பளிப் போர்வைக்குள் துப்பாக்கியை விட்டுச்சென்ற மனிதன் யார் என்று அறிந்துகொள்ள ஒருகுறியும் தென்படவில்லை.
மீண்டும் வசந்தகாலம் வந்தது. பல நாள் சுற்றித்திரிந்த பிறகும் அவர்கள் தங்கள் கேள்விப்பட்ட பாழடைந்த மரவீட்டைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஓர் அகன்ற பள்ளத் தாக்கிலே தங்கப் பொடிகள் கலந்த மணல் நிறைந்த ஓர் ஓடையை அடைந்தார்கள். கலத்தில் அந்த மணலை இட்டுத் தண்ணீரை விட்டு அரித்தெடுத்தால் தங்கப்பொடி அடியிலே தங்கியது. அவர்கள் அங்கேயே தங்கலானார்கள்; தினமும் ஓயாமல் உழைத்தார்கள். ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள தங்கத்தூளும், சிறு கட்டிகளும் அவர்களுக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பனிமான் தோலால் செய்த பைகளில் நிறைத்தார்கள். ஒவ்வொரு மூட்டையிலும் ஐம்பது ராத்தல் இருக்கும்படி கட்டி அவர்கள் தங்குவதற்காக அமைத்துக்கொண்ட மரக்குடிசைக்கு அருகில் அடுக்கி வைத்தார்கள். பூதகணங்கள் போல அவர்கள் வேலை செய்தார்கள். கனவு போல் நாட்கள் தோன்றி மறைந்தன. அடுக்கடுக்கான மூட்டைகள் உயர்ந்து கொண்டிருந்தன.
தார்ன்டன் வேட்டையாடிக் கொல்லுகின்ற பிராணிகளை இழுத்து வருவதைத் தவிர வேறு வேலை இல்லை. தீயின் அருகில் படுத்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்து பக் நேரத்தைப் போக்கும். குட்டையான கால்களும், உடம்பெல்லாம் அடர்ந்த உரோமமும் உடைய மனிதனுடைய தோற்றம் இப்பொழுது வேலையில்லாத காரணத்தால் அடிக்கடி அதற்கு வந்தது. தீயின் அருகிலே படுத்துக்கொண்டே பக் அந்த மனிதனோடு வேறோர் உலகத்திலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
அந்த உலகத்தின் முக்கியமான அம்சம் பயம். தீவின் அருகிலே அந்தச் சடைமனிதன் உட்கார்ந்து தனது முழங்கால்களுக்கு மத்தியில் தலையை வைத்துக்கொண்டும், தலைக்கு மேல் கைகளைக் கோத்துக்கொண்டும், உறங்கும் போது திடீர் திடீரென்று திடுக்கிட்டு விழித்தெழுவதையும் பக் கவனித்தது. அப்படி எழுந்ததும் அவன் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டுக்குள்ளே பயத்தோடு கூர்ந்து நோக்குவான்; பிறகு ஏராளனமான விறகுக்கட்டைகளைத் தீயில் போடுவான். கடற்கரையிலே நடக்கும் போது சிப்பி மீன்களை அவன் தேடி எடுத்து அப்படியே உண்பான். அந்தச் சமயத்தில் ஏதாவது ஆபத்து வருமோவென்று பயந்து அவன் கண்கள் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்; அவன் கால்கள் ஓட்டம் பிடிப்பதற்குத் தயாராக இருக்கும். அந்தச் சடைமனிதன் கானகத்தின் உள்ளே சிறிதும் சப்தமின்றிப் புகுந்து செல்லுவான்; பக்கும் அவன் அருகிலேயே செல்லும். அந்தச் சடைமனிதன் மரங்களிலே தாவி ஏறுவான்; நிலத்திலே செல்லுவதைப்போலவே வேகமாக ஒரு மரத்தை விட்டு மற்றொரு மரத்திற்குச் செல்லுவான்; ஒரு கையால் மரத்தின் ஒரு கிளையையும், மற்றொரு கையால் பத்துப்பன்னிரண்டு அடி தூரத்திற்கப்பாலுள்ள மற்றொரு கிளையையும் எட்டிப் பிடிப்பான். அவன் அதில் தவறுவதே இல்லை. நிலத்திலிருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறதோ அவ்வளவு வசதியாகவே அவனுக்கு மரத்தில் தங்குவதும் இருந்தது. மரக்கிளைகளைப் பிடித்துக்கொண்டு இரவு வேளைகளில் அந்த மனிதன் உறங்கும்போது மரத்திற்கடியில் இருந்து காவல் காத்த நினைவும் பக்கிற்கு வந்தது.
சடை மனிதன் தோன்றுவதற்கும் கானகத்தின் மத்தியிலிருந்து அழைப்புக்குரல் வருவதற்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. அந்தக் குரல் பக்கின் அமைதியைக் குலைத்தது; அதற்கு விநோதமான ஆசைகளையும் உண்டாக்கிற்று. ஏதோ ஒருவிதமான களிப்பையும் அது கொடுத்தது ; பக்கின் உள்ளத்திலே இனந்தெரியாத கிளர்ச்சிகளும், ஆவல்களும் எழுந்தன. சில சமயங்களில் பக் அந்தக் குரலைத் தேடிக் கானகத்திற்குள்ளே மெதுவாகக் குலைத்துக் கொண்டும், எதிர்ப்புணர்ச்சியோடு உறுமிக்கொண்டும் போய் பார்க்கும்; தண்ணென்றிருக்கும் மரக்காளான்களிலோ, நீண்ட புல் வளரும் கருமையான மண்ணிலோ மூக்கை வைத்துப்பார்க்கும். செழித்த தரையிலிருந்து எழுகின்ற பலவிதமான வாசனைகளை முகர்ந்து களிப்போடு துள்ளும்; மண்ணில் சாய்ந்து பூசணம் பூத்துக்கிடக்கும் மரங்களின் அடிப்பாகத்தில் மணிக்கணக்காக மறைந்து படுத்துக்கொண்டு சிறிய அசைவுகளையும் கூர்ந்து பார்க்கும். சிறிய அரவங்களையும் செவியில் வாங்கிக்கொள்ளும். புரிந்து கொள்ள முடியாத அந்தக் குரலின் முன்னால் திடீரென்று போய்நிற்கக் கருதி அது அவ்வாறு படுத்திருந்தது போலும். ஆனால், அது செய்கின்ற பல காரியங்களை எதற்காகவே செய்கிறதென அதற்கே தெரியவில்லை. ஏதோ ஒன்று அவற்றைச் செய்யுமாறு அதைத் தூண்டிக்கொண்டிருந்தது. அதைப் பற்றியெல்லாம் பக் ஆலோசித்துப் பார்க்கவில்லை.
அடக்க முடியாத தூண்டுதல்கள் அதைப் பற்றிக்கொண்டன. பகலின் வெப்பத்திலே அது கூடாரத்திற்குள் படுத்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும். திடீரென்று அது தலையை தூக்கும்; காதுகளை மடித்து எதையோ கூர்ந்து கவனித்துக் கேட்கும்; பாய்ந்தெழுந்து கானகத்துள்ளும் திறந்த வெளிகளிலும் மணிக்கணக்காக சுற்றித் திரியும். நீர் வற்றிய ஓடைகளின் வழியாக ஓடிக் கானகத்தில் வாழும் பறவையினங்களை மெதுவாக அணுகி அவற்றைக் கவனிப்பதில் அதற்கு விருப்பமதிகம். கௌதாரிகள் கத்துவதையும், மிடுக்காக நடப்பதையும் கவனித்துக்கொண்டு அது நாள் முழுவதும் சிறு புதர்களிலே படுத்திருக்கும். கோடைக்கால நடுநிசியிலே தோன்றும் மங்கலான அந்தி ஒளியிலே ஓடித்திரிந்து கானகத்தில் எழுகின்ற அடக்கமான அரவத்தைக் கேட்பதிலே அதற்குத் தனிப்பட்ட ஆசையுண்டு. அப்படிக் கேட்டு அந்த அரவத்தின் மூலம் தன்னை உறக்கத்திலும், விழிப்பு நிலையிலும், எப்பொழுதும் “வா வா” என்று அழைக்கின்ற அந்தக் குரலின் பொருளை உணர்ந்துகொள்ள முயலும்.
ஓர் இரவு அது திடுக்கிட்டு எழுந்து நின்றது. அதன் கண்கள் உற்று நோக்கின. மோப்பம் பிடித்துக்கொண்டு நாசித்துவாரங்கள் துடித்தன. கழுத்திலுள்ள ரோமம் அடிக்கடி சிலிர்த்தெழுந்தது. கானகத்திலிருந்து அந்த அழைப்பு முன்னைவிடத் தெளிவாகவும் திட்டமாகவும் வந்தது. நீண்டு ஊளையிடுவது போன்ற குரல் கேட்டது. அதை ஊளையிடுவதென்றுகூடச் சொல்ல முடியாது. எஸ்கிமோ நாய்கள் உண்டாக்கும் சப்தமுமல்ல. ஏதோ ஒருகாலத்தில் பழக்கமாகக் கேட்ட குரல் போல பக்குக்குப் பட்டது. உறங்கிக்கிடக்கும் முகாமைவிட்டு யாதொரு சந்தடியும் செய்யாமல் கானகத்திற்குள்ளே தாவிப் பாய்ந்தது. குரல் எழுந்த இடத்தை அணுக அணுக அது மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் நடக்கலாயிற்று; அவ்வாறு நடந்து மரங்களுக்கிடையிலேயிருந்த ஒரு வெட்ட வெளியை அடைந்தது. அங்கே ஓர் ஒல்லியான ஓநாய் குந்தியமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை அது கண்ணுற்றது.
பக் ஒருவிதமான அரவமும் செய்யவில்லை ; இருந்தாலும் அந்த ஓநாய் ஊளையிடுவதை நிறுத்திவிட்டு பக் அங்கிருப்பதை உணர்ந்து கொள்ள முயன்றது. பதுங்கிக்கொண்டும், உடம்பை முறுக்கேற்றிக்கொண்டும், வாலை உயர்த்திக்கொண்டும், கால்களை மிகக் கவனமாக வைத்துக்கொண்டும் பக் வெட்டவெளிக்குள் சென்றது. அதன் ஒவ்வோர் அசைவிலும் பயமுறுத்தலும், நட்பின் ஆசையும் கலந்து தோன்றின. இரை தேடித்திரியும் காட்டு விலங்குகள் சந்திக்கும் போது இவ்வாறுதான் பரிச்சயம் செய்துகொள்ள முயலும். ஆனால் பக்கைக் கண்டதும் அந்த ஓநாய் பயந்தோடிவிட்டது. அதை அணுக விரும்பி பக் பின் தொடர்ந்தது. சிற்றோடையின் படுக்கையிலே அவை ஓடின. ஓரிடத்திலே ஓடை திடீரென்று முடிந்துவிட்டது. அதற்கு மேல் போக வழியில்லாமல் மரங்கள் அடர்ந்திருந்தன. அதனால் அந்த ஓநாய் உறுமிக்கொண்டும், சிலிர்த்துக் கொண்டும், பற்களைக் கடித்துக்கொண்டும் சட்டென்று திரும்பி வரலாயிற்று.
பக் அதை எதிர்த்துத் தாக்கவில்லை; ஆனால் சிநேகபாவத்தோடு சுற்றி வளைத்து வந்தது. ஓநாய்க்குப் பயமும், சந்தேகமும் உண்டாயின. அதைப்போல மூன்று மடங்கு பருமனுள்ளது பக். மேலும் பக்கின் தோளுக்குக் கூட அதன் நிமிர்ந்த தலை எட்டவில்லை. சமயம் பார்த்து அது திடீரென்று மறுபடியும் ஓட்டமெடுத்தது. பக் பின்தொடர்ந்தது. ஓநாய் மெலிந்திருந்ததால் அதைப் பலமுறை பக் சுற்றிவளைத்துக்கொண்டு முன்போலவே நட்பு காட்டத் தொடங்கிற்று. பக் அருகில் வரும் வரையில் ஓநாய் ஓடிப்பார்க்கும்; பிறகு திடீரென்று திரும்பி எதிர்ப்பு காட்டுவதுபோல நடித்துவிட்டு மறுபடியும் ஓடத் தொடங்கும்.
ஆனால், பக் விடாப்பிடியாக முயன்றதால் கடைசியில் அதற்கே வெற்றி கிடைத்தது. அது தீங்கொன்றும் நினைக்கவில்லை என்று ஓநாய்க்குப் புலப்பட்டுவிட்டது; அதனால் ஓநாய் பக்கின் மூக்கோடு மூக்கு வைத்து அன்பு காட்டியது. பிறகு இரண்டும் நேசப்பான்மையோடு விளையாடின; காட்டு விலங்குகள் தங்கள் கொடுந்தன்மையை மறைத்துக்கொண்டு விளையாடுவது போல விளையாடின. கொஞ்ச நேரத்திற்குப்பிறகு ஓநாய் எங்கோ போகக் கருதியது போலப் புறப்பட்டு மெதுவாக ஓடலாயிற்று; பக்கும் அதனுடன் வரவேண்டும் என்பது அதன் விருப்பம் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியது. மங்கிய ஒளியிலே அவையிரண்டும் பக்கம் பக்கமாக ஒரே வரிசையில் ஓடின; ஓடையின் எதிர்ப்புறமாக அதன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிச்சென்று ஒரு சிறு குன்றின் மேற்பகுதியை அவை அடைந்தன.
அதன் மறுபுறத்திலே சமதரையான ஒரு பிரதேசத்தில் பெரிய பெரிய காடுகளும், பல ஓடைகளுமிருந்தன. மணிக்கணக்காக அவையிரண்டும் அந்தக் காடுகளின் வழியாக ஓடின. சூரியன் வானில் உயர்ந்து கொண்டிருந்தான்; பகலின் வெப்பமும் அதிகரிக்கலாயிற்று. பக்குக்குப் பெருங்களிப்பு. கானகத்திலிருந்து வந்துகொண்டிருந்த அழைப்பை ஏற்று, அதை நாடித் தனது கானகத்து உடன்பிறப்போடு சேர்ந்து செல்வதாக அது உணர்ந்தது. பழைய நினைவுகள் எல்லாம் வேகமாக மேலெழுந்தன. முன்பெல்லாம் தன்னைச் சுற்றியிருக்கும் உலக வாழ்க்கைக்கு ஏற்றவாறு உள்ளத்திலே அது கிளர்ச்சி பெற்றது போலவே இப்பொழுது அந்த வாழ்க்கையின் நிழல்களா யிருந்த பழைய நினைவுகளால் கிளர்ச்சி பெற்றது. பழைய நினைவுகளிலே மங்கலாகத் தோன்றிய உலகத்திலே அது முன்னொரு காலத்தில் ஓடித்திரிந்திருக்கிறது. அகன்ற வானத்திற்கடியிலே கட்டற்ற மண்ணிலே அது இப்பொழுது மீண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் ஓடுகின்ற ஓர் ஓடையைக் கண்டதும் அவைகள் தாகத்தைத் தணித்துக்கொள்ள நின்றன. உடனே பக்குக்குத் தார்ன்டனின் நினைவு வந்தது. அது கீழே அமர்ந்தது. அழைப்பு வந்த இடத்தை நோக்கி ஓநாய் ஓடிற்று; கொஞ்ச தூரம் சென்றபின் திரும்பி வந்து பக்கின் மூக்கோடு மூக்கு வைத்து அதையும் தன்னுடன் வரும்படி தூண்டிற்று. ஆனால் பக் மறுபுறம் திரும்பி வந்த வழியிலேயே மெதுவாகச் செல்லத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் வரையில் ஓநாய் அதனுடனேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வந்தது. பிறகு அது தரையில் அமர்ந்து வானை நோக்கி ஊளையிடத் தொடங்கியது. துயரம் நிரம்பியதாக அதன் குரல் ஒலித்தது. பக் அங்கே நிற்காமல் திரும்பிவந்து கொண்டே இருந்தது. ஓநாயின் துயரக்குரல் தூரத்திலே மெதுவாகக் குறைந்து கடைசியில் செவிகளுக்கே எட்டாமற் போயிற்று.
இரவு நேரத்தில் முகாமுக்குள் பக் நுழைந்தபோது ஜான் தார்ன்டன் உணவருந்திக் கொண்டிருந்தான். அன்பின் வேகத்தால் தூண்டப்பட்டு பக் அவன் மேல் பாய்ந்து, அவனைக் கீழே விழச்செய்து, அவனுடைய முகத்தை நக்கத்தொடங்கிற்று; வழக்கம் போல் கையைப்பிடித்துக் கடிக்கவும் செய்தது. ஜான் தார்ன்டன் அதைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே அதன் தலையைப் பிடித்து முன்னும் பின்னும் ஆட்டத் தொடங்கினான்.
இரண்டு நாள் இரவும் பகலும் பக் முகாமைவிட்டு வெளியறேவுமில்லை; தார்ன்டனுடைய பார்வையிலிருந்து அப்பாற் செல்லவுமில்லை. அவன் வேலை செய்யும் போதும் உணவருந்தும் போதும், இரவிலே கம்பளியால் போர்த்துக்கொண்டு உறங்கும் போதும் உறங்கி எழுந்திருக்கும் போதும் அவனருகிலேயே இருந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குப்பிறகு கானகத்திலிருந்து மீண்டும் அந்தக் குரலின் அழைப்பு முன்னைக் காட்டிலும் கம்பீரமாக ஒலித்தது. பக் மீண்டும் அமைதியை இழந்தது. ஓநாயின் நினைவும், காடுகளின் வழியாக ஓநாயோடு ஓடிக்கொண்டிருந்த நினைவும் சதா வரலாயின. மீண்டும் அது கானகத்திற்குள் புகுந்து திரியத் தொடங்கியது; ஆனால் அந்த ஓநாய் மீண்டும் அதனிடம் வரவில்லை. பக் எவ்வளவோ கூர்ந்து கவனித்தும் ஓநாயின் துயரக்குரலும் காதில் விழவில்லை.
முகாமைவிட்டு நீங்கித்தொடர்ந்து பல நாட்கள் வெளியில் சுற்றித்திரியவும், இரவிலே வெளியிலே உறங்கவும் அது தொடங்கியது. ஒரு தடவை அது மீண்டும் அந்தக் குன்றைக் கடந்து அதன் மறுபுறத்திலுள்ள ஓடைகளின் அருகிலும் காடுகளில் புகுந்தும் சுற்றிற்று. அந்த ஓநாயைத் தேடி அது ஒரு வாரம் வரையிலும் வீணாக அலைந்தது. அப்படி அலையும் போது எதிர்ப்பட்ட பிராணிகளை அது தன் உணவிற்காகக் கொன்றது. கடலிற் சென்று கலக்கும் ஒருபெரிய ஓடையிலே அது சால்மன் மீனை நாடி வேட்டையாடிற்று. அந்த ஓடையிலே மீனை நாடி வந்த ஒரு பெரிய கருங்கரடியை ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்துக்கொண்டு அதன் கண்களை மறைக்கவே, அது செய்வதையறியாமல் பயங்கரமாகக் சீறிக்கொண்டு காட்டின் வழியாக ஓட்டமெடுத்தது. அதைப் பக் கொன்றுவிட்டது. அப்படிக் கொல்வதற்கு முன்னால் அதனுடன் பலத்த சண்டையிட வேண்டியிருந்தது. அந்தச் சண்டையிலே பக்கின் மூர்க்கத்தனமெல்லாம் வெளிப்பட்டது. தான் கொன்ற கரடியைத் தின்பதற்காக இரண்டு நாட்கள் கழித்து பக் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தது. அங்கே பத்துப்பன்னிரண்டு சிறுபிராணிகள் கரடியைக் கடித்து தின்பதற்காகத் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் பக் ஒரு நொடியில் சிதறியடித்தது. அவற்றில் இரண்டு அங்கேயே பிணமாயின.
பக்குக்கு இரத்தவெறி முன்னைவிட அதிகரிக்கத் தொடங்கியது. அது இப்பொழுது தனியாக நின்று தனது பலத்தால் மற்ற பிராணிகளைக் கொன்றது; பசியெடுத்தபோது அவற்றைத் தின்றது. வலிமையாலேயே வாழக்கூடிய அந்தச் சூழ்நிலையிலே அது வெற்றியோடு வாழ்ந்தது. அதனால் அதற்குத் தன்னைப்பற்றியே ஒரு பெருமிதம் ஏற்பட்டது. அந்தப் பெருமிதம் அதன் உடம்பின் எல்லாப் பாகங்களிலும் வெளியாயிற்று. அதனுடைய அசைவுகளிலும், அதன் தசைநார்களின் நெளிவுகளிலும் அதன் மிடுக்கான தோற்றத்திலும் அந்தப் பெருமிதம் தோன்றியது. அதன் உடம்பிலுள்ள பளபளப்பான உரோமச்செறிவிற்கும், அது மிகுந்த பிரகாசத்தைத் தந்தது. அதன் மூக்கிற்கருகிலும், கண்களுக்கு மேலும் தோன்றும் பழுப்பு நிறமும், நெஞ்சின் நடுப்பகுதியிலே உள்ள வெண்மையான உரோமத்தாரையும் இல்லாவிட்டால் அதை ஒரு மிகப்பெரிய ஓநாய் என்றே கருத வேண்டும். செயின்ட் பெர்னோடு இனத்தைச் சேர்ந்த தந்தை வழியாக அதற்குப் பருமனும். கனமும் கிடைத்தன. பட்டி நாயான அதன் தாய் வழியாக அந்தப் பெரிய உடம்பிற்கு நல்ல தோற்றம் அமைந்தது. ஓநாயின் முகத்தைப் போல அதன் முகம் நீண்டிருந்தது; ஆனால் எந்த ஓநாயின் முகமும் அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. அதன் தலையும் ஓநாயின் தலையைப் போலவே இருப்பினும் அளவில் கொஞ்சம் பெரியது.
ஓநாய்க்குள்ள தந்திரமும் அதற்குண்டு. பட்டி நாயின் புத்திக் கூர்மையும், செயின்ட் பெர்னோடு நாயின் புத்திக்கூர்மையும் சேர்ந்து அதற்கு அமைந்திருந்தன. மிகப்பலவான அதன் அனுபவங்களும் இவற்றோடு சேர்ந்து அதை மிகப் பயங்கரமானதாகச் செய்துவிட்டன. நல்ல பச்சை இறைச்சியைத் தின்று கொண்டு அது தன் வாழ்க்கையின் சிறந்த பருவத்திலே சுறுசுறுப்பும், வீரியமும், ஆண்மையும் பொங்க விளங்கிற்று. மூளையும், உடம்பும், நரம்புகளும், தசைநார்களும், உடம்பின் எல்லாப்பாகங்களும் சரியான உரம் பெற்றிருந்தன. உடம்பின் எல்லாப் பகுதிகளுக்குமிடையிலும் ஒரு சம நிலையும், பொருத்தமும் இருந்தன. கண்ணில் தோன்றும் காட்சிகள், செவிகளில் புலனாகும் ஒலிகள், உடனே கவனிக்க வேண்டிய மற்ற நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்திற்கும் ஏற்றவாறு அது மின்னல் வேகத்தில் செயல்புரிந்தது. மற்றொரு பிராணி எதிர்த்துத் தாக்கும்போது தன்னைக் காத்துக்கொள்ளவும், அல்லது தானே எதிர்த்துச் செல்லவும் எஸ்கிமோ நாய் எவ்வளவு வேகமாகப் பாயுமோ அதைப்போல் இரண்டு மடங்கு வேகத்தில் அது பாய்ந்தது; வேறொரு நாய் ஒரு காட்சியைக் காண்பதற்கும் அல்லது ஒரு சப்தத்தைக் காதில் வாங்கிக் கொள்வதற்கும் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மிகச்சிறிய நேரத்தில் அது அவற்றை அறிந்து கொண்டதோடு என்ன செய்வதென்று தீர்மானித்துச் செயல்புரியும். பார்ப்பதும், தீர்மானிப்பதும், ஏற்ற செயல்புரிவதும், தொடர்ந்து நடக்கும் மூன்று தனிப்பட்ட செயல்களாயினும் பக் அவற்றை வெகு விரைவில் செய்து முடிப்பதால் அவை ஒரே கணத்தில் நிகழ்வன போலத் தோன்றின. அதன் தசைநார்களிலே உயிர்ச்சக்தி ததும்பியது. அதனால் அத்தசை நார்கள் எஃகுச் சுருள்கள் போல வேகமாகச் செயலில் ஈடுபட்டன. வாழ்க்கைச் சக்தியே அதற்குள் பெருவெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தச் சக்தி அதனுள்ளிருந்து வெளிப்பட்டு உலகமெல்லாம் பரவுமோ என்று சொல்லும்படியாக அவ்வளவு கிளர்ச்சியோடிருந்தது.
ஒருநாள் பக் முகாமைவிட்டு வெளியே கிளம்பும் போது கூட்டாளிகள் மூவரும் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். “இதைப் போல ஒரு நாயும் கிடையாது” என்று தார்ன்டன் சொன்னான்.
“பக்கை உருவாக்கியதும் அந்த அச்சே உடைந்து போயிருக்க வேண்டும்” என்று பீட் கூறினான்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அறுதியிட்டுக் கூறினான் ஹான்ஸ்.
முகாமைவிட்டு அது வெளியேறியதை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் கானகத்தின் மறைவிடத்தை அடைந்ததும் அதனிடத்தில் உண்டாகும் பயங்கரமான மாறுதலை அவர்கள் கண்டதில்லை. கானகம் சென்றதும் அது காட்டு விலங்காக மாறிவிடும்; மர நிழல்களுக்கிடையில் மறைந்தும், வெளிப்பட்டும் பூனை போல அது மெதுவாகச் செல்லத்தொடங்கும். ஒவ்வொரு சிறிய ஒளியிடத்தையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வதென்று அதற்குத் தெரியும். பாம்பைப் போல மிஞ்சினால் ஊர்ந்து செல்லவும் பாம்பைப் போலவே தாவித் தாக்கவும் அதற்குத் தெரியும். சிறு பறவையை அதன் கூட்டிலிருந்தே பிடித்துவிடும்; உறங்கும் குழிமுயலிடம் மெதுவாகச் சென்று அதைக் கொல்லும்; மரத்தை நோக்கித் தாவியோடுவதில் சிறிது காலதாமதம் செய்துவிட்ட பனிப்பிரதேச அணில்களை அவை தாவும் போதே பற்றிக்கொள்ளும். ஏரிகளிலுள்ள மீன்களும் அதற்குத் தப்புவது அருமை; சப்தமின்றிச் சென்று அணை கட்டும் நீர் நாய்களையும் பாய்ந்து பிடிக்கும். அது வீணாகக் கொல்லாது; பசியை ஆற்றிக் கொள்ளவே கொல்லும். தானே கொன்ற பிராணிகளைப் புசிக்கவே அது விரும்பிற்று. சில சமயங்களில் அணில்களைப் பிடிப்பது போலச் சென்று பிறகு விட்டுவிடும்; அணில்கள் பயத்தால் கீச்சுக்கீச்சென்று ஒலியெழுப்பிக் கொண்டு மரத்தின் உச்சிக்கு ஏறும். பக்குக்கு இது ஒரு விளையாட்டு.
இந்த ஆண்டின் இலையுதிர்க் காலத்திலே குளிர்க்காலத்தின் கொடுமையைத் தவிர்க்க பனிமான்கள் ஏராளமாகக் கீழ்ப்பகுதியிலுள்ள பள்ளத்தாக்குகளுக்கு வந்தன. சற்று முதிர்ந்த பனிமான் கன்றொன்றை முன்பே பக் வேட்டையாடி வீழ்த்தியிருக்கிறது. ஆனால் பெரிய பனிமானையே வேட்டையாட வேண்டுமென்ற ஆசை அதற்கு. ஓடையின் மேற்பகுதியில் உள்ள பாறையில் ஒருநாள் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஓடைகளும், காடுகளும் நிறைந்த நிலப்பகுதியை விட்டு இருபது பனிமான்கள் ஒரு கூட்டமாக அங்கு வந்தன. அவைகளுள் முக்கியமானது ஒரு பெரிய கடாவாகும். ஆறடி உயரத்திற்கும் மேற்பட்டுத் தோன்றிய அது மிகுந்த கோபத்தோடு இருந்தது. பக்குக்குச் சரியான எதிரிதான் அது. கையை விரித்து வைத்தது போல விரிந்திருக்கும் பெரிய கொம்புகளை அது ஆட்டிக் கொண்டிருந்தது. கொம்புகளிலே பதிநான்கு கிளைகளிருந்தன. அவற்றின் நுனிகளுக்கிடையிலே ஏழடி தூரமிருந்தது. அந்தக் கடாவின் சிறிய கண்கள் கொடூரமான ஒளியோடு பிரகாசித்தன. பக்கைக் கண்டதும் அந்தக் கடா சீற்றத்தோடு கர்ஜித்தது.
அதன் விலாப்புறத்தில் பாய்ந்திருந்த ஓர் அம்பின் பின்பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது; அந்த அம்பு பாய்ந்திருப் பதால் தான் கடாவுக்கு அத்தனை கோபம். ஆதி உலகத்திலே வேட்டையாடிப் பெற்ற இயல்பூக்கம் தூண்டவே, பக் அந்தக் கடாவை மட்டும் மான் கூட்டத்திலிருந்து பிரிக்க முதலில் முயன்றது. அது எளிதான காரியமல்ல. கடாவின் கொம்புகளுக்கும் ஒரே உதையில் உயிரை வாங்கக்கூடிய அகன்ற குளம்புகளுக்கும் சிக்காத தூரத்தில் பக் நின்று கொண்டு ஆடிக் குலைக்கும். அதன் கோரைப்பல்லுக்குப் பயந்து கடாமான் மறுபக்கம் திரும்பிப்போக முடியாமல் மிகுந்த சீற்றங்கொள்ளும்; பக்கின் மீது பாயவரும். தப்பியோட முடியாமல் தவிப்பது போலப் பாசாங்கு செய்து கொண்டு பக் தந்திரமாகச் சற்றுப் பின்வாங்கிச் சென்று தன்னை எதிர்த்து வரும்படி கடாவுக்கு ஆசை காட்டும். ஆனால் அவ்வாறு அந்தப் பெரிய கடா மற்ற மான்களை விட்டுச் சற்றுப் பிரிந்தவுடனே இரண்டு மூன்று இளங்கடாக்கள் முன்வந்து பக்கைத் தாக்க முன்வரும். அந்தச் சமயத்தில் பெரிய கடா மற்ற மான்களோடு சேர்ந்துவிடும்.
காட்டு விலங்குகளினிடையே ஒரு வகையான பொறுமை இருக்கிறது. சீவனைப் போலவே அந்தப் பொறுமையும் களைப்பறியாதது; பிடிவாதமுடையது. அந்தப் பொறுமையால் கட்டுண்டே சிலந்திப்பூச்சி அசையாமல் பல மணி நேரம் தனது கூட்டில் இருக்கின்றது; பாம்பு சுருண்டு படுத்திருக்கின்றது; சிறுத்தைப்புலி ஒளியிடத்தில் பதுங்கி இருக்கின்றது. உணவுக்காகப் பிராணிகளை வேட்டையாடும் உயிரினங்களுக்கே இந்தப் பொறுமை தனிச்சிறப்பாக அமைகின்றது. பக்குக்கும் இந்தப் பொறுமை இருந்தது. அது மான்கூட்டத்தின் அள்ளைப் பக்கமாகச் சென்று மான்களை முன்னேறிச் செல்ல வொட்டாமல் தடுத்தது, இளங்கடாக்களுக்கு எரிச்சல் உண்டாக்கியது. ஓரளவு வளர்ந்த குட்டிகளுடன் கூடிய பெண்மான்களைத் துன்புறுத்தியது; அம்பு பாய்ந்திருந்த கடாவுக்குக் கடுங்கோபத்தால் வெறியே உண்டாகுமாறு செய்தது. இவ்வாறு பாதிநாள் வரையிலும் தொடர்ந்து நடந்தது. எங்கே அவை திரும்பினாலும் பக் காணப்பட்டது. சூறாவளி போல மான்கூட்டத்தைச் சுற்றி வந்து எல்லாப் பக்கங்களிலும் தாக்கிற்று; மான்கூட்டத்தோடு சேர்ந்து கொண்ட பெரிய கடாவை மிக விரைவில் தனியாகப் பிரித்தது; இப்படி செய்து அந்த மான்களின்ப் பொறுமையையே சோதிக்கலாயிற்று. உணவாக விழும் பிராணிகளின் பொறுமை அதிகமே; ஆனால் அதை விட அதிகம் அப்பிராணிகளைத் தின்னும் விலங்குகளின் பொறுமை.
பகல் தேய்ந்து போய்ச் சூரியன் வடமேற்கிலே விழுந்த பிறகு இளங்கடாக்கள் அந்தப் பெரிய கடாவின் உதவிக்கு வருவதிலே அதிக விருப்பம் காட்டவில்லை. வளர்ந்து வரும் குளிர்காலமானது மான்களைக் கீழ்ப்பிரதேசங்களுக்குப் போகும்படி துரத்திக் கொண்டிருந்தது. சலிப்பில்லாமல் தாக்கிக்கொண்டிருக்கும் பக்கை உதறித் தள்ளிவிட்டு அவைகள் முன்னோக்கிச் செல்லமுடியா தெனத் தோன்றியது. மேலும் பக்கினால் மான்கூட்டத்துக்கோ, இளங்கடாக்களுக்கோ ஆபத்தில்லை. அந்தக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு மானின் உயிர்தான் ஆபத்திலிருந்தது. தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் உள்ள ஆர்வம் மற்றோர் உயிரைக் காப்பதில் ஏற்படவில்லை. அதனால் கடைசியில் பெரிய கடாவை விட்டுக்கொடுக்க அவைகள் துணிந்துவிட்டன.
அந்த ஒளி தோன்றிய பொழுது மற்ற மான்களெல்லாம் வேகமாக ஒடுவதை அந்தப் பெரிய கடா பார்த்தது. தான் நன்கறிந்த பெண் மான்களும், தான் பெற்ற குட்டிகளும் தனக்குப் பணிந்திருந்த மற்ற கடாக்களும் தன்னை விட்டு ஓடுவதை அது கண்டது. அவற்றைப் பின் தொடர்ந்து அதனால் போக முடியவில்லை. அதன் முன்னால் தாவிக் கோரைப்பற்களைப் பயங்கரமாகக் காட்டிக் கொண்டு பக் அதைப் போக விடாமல் தடுத்தது. அரை டன்னுக்கு மேல் மூன்று அந்தர் அதிகமாகவே மானின் எடையிருந்தது. பல சண்டைகள் செய்து வெற்றியோடு. அது நீண்ட வாழ்க்கை வாழ்ந்தது. ஆனால் கடைசியில் தனது முழங்கால் உயரத்திற்குக் கூட வராத ஒரு பிராணியின் பல்லில் அது சாவைக் கண்டது.
அந்தப் பெரிய கடா தனியாகப் பிரிக்கப்பட்டது முதல் அல்லும் பகலும் பக் அதைவிட்டு நீங்காமல் அருகிலேயே இருந்து அதற்கு ஒரு கணமும் ஓய்வு கிடைக்காதவாறு செய்தது; இளந்தளிர்களையும் தழைகளையும் தின்னவிடாமல் தடுத்தது. இரண்டும் சிறு சிறு ஓடைகளைக் கடந்து சென்றன. அவற்றில் மான் தனது தீராத தாகத்தைத் தணித்துக் கொள்ள முயன்றதால் பக் அதற்கு இடங்கொடுக்கவில்லை. காயம்பட்ட அந்தக் கடா மிகுந்த துயரத்தோடு பல சமயங்களில் வேகமாக ஓடத் தொடங்கும். அப்பொழுதெல்லாம் பக் அதைத் தடுத்து நிறுத்த முயலாமல் அதன் பின்னாலேயே ஓடும். மான் எங்காவது அசையாமல் நிற்கத் தொடங்கினால் பக் அதற்கருகிலேயே தரையில் படுத்துக் கொள்ளும்; புல்லை மேயவோ, தண்ணீர் குடிக்கவோ மான் முயன்றால் அப்பொழுது அதை மூர்க்கத்தோடு தாக்கும்.
மரமாய்க் கிளைத்த கொம்புகளைத் தாங்க முடியாமல் கடா தன் தலையை தொங்கவிடலாயிற்று. அதன் ஓட்டமும் குறைந்தது. மூக்கைத் தரையில் வைத்துக்கொண்டும், காதுகளைச் சோர்வோடு தொங்கவிட்டுக்கொண்டும் நீண்ட காலம் தொடர்ந்து நின்றது. பக்கிற்கு நீர் அருந்தவும், ஓய்வு கொள்ளவும் இப்போது அதிக நேரம் கிடைத்தது. சிவந்த நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டும், கடாவின் மீதே பார்வையைச் செலுத்திக்கொண்டும் இருந்த அந்த வேளைகளில் எங்கும் ஏதோ ஒரு மாறுதல் ஏற்படுவது போல பக்குக்குத் தோன்றியது. நிலப்பகுதியிலே ஒரு புதிய எழுச்சி உண்டாவதை அது உணர்ந்தது. பனிமான்கள் அங்கு வந்தது போலவே வேறு வயைான உயிரினங்களும் வரலாயின. அவற்றின் வருகையால் கானகமும், ஓடையும், வானவெளியும் புதிய துடிப்பு கொண்டன. பார்த்தோ, ஒலிகளைக்கேட்டோ, மோப்பம் பிடித்தோ இந்த விஷயங்களை பக் உணர்ந்து கொள்ளவில்லை; வேறொரு விதமான நுட்பமான புலனுணர்ச்சியினால் இவை பக்குக்குத் தெரியவந்தன. பக் எதையும் காதால் கேட்கவில்லை ; கண்ணாலும் பார்க்கவில்லை; இருந்தாலும் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதை அது அறிந்து கொண்டது. புதிய நிகழ்ச்சிகள் உருவாகின்றன; பரவுகின்றன’ என்று அது உணர்ந்தது. கடாவை ஒரு வழியாக முடித்தபிறகு அவற்றையெல்லாம் ஆராயவேண்டும் என்று பக் தீர்மானித்தது.
கடைசியில், பதினான்காம் நாள் முடிவில் பக் அந்தப் பெரிய பனிமான் கடாவை வீழ்த்திவிட்டது; ஒரு பகலும் ஓர் இரவுமாக அதைத் தின்பதும், அதன் அருகிலே படுத்துறங்குவதுமாகக் கழித்தது. வயிறாற உண்டு, உறங்கி புதிய பலம்பெற்று அது ஜான் தார்ன்டனை நினைத்து முகாமை நோக்கித் திரும்பிற்று. மணிக்கணக்காக அது மெதுவாக ஓடிற்று. பழக்கமில்லாத பிரதேசத்திலே வழி கண்டு பிடித்துத் திரும்பிச்செல்லுவதில் அதற்கு ஒருவித சிரமுமிருக்கவில்லை. திசையறிக் கருவியைக் கையில் வைத்திருக்கும் மனிதனும் அதன் சக்திக்கு நாணும்படி அது சரியாக வழிகண்டு சென்றது.
அப்படித் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது நிலப் பகுதியிலே உண்டாகியிருக்கும் புதிய கிளர்ச்சியை பக் மேலும் மேலும் உணரலாயிற்று. கோடைகால முழுவதிலும் இருந்த வாழ்க்கை முறை மாறிப் புதிய வாழ்க்கைமுறை ஏற்பட்டிருந்தது. மனம் போல இந்த மாறுதல் மர்மமும் நுட்பமுமான வகையில் புலப்படாமல் இப்பொழுது வெளிப்படையாகவே புலப்படலாயிற்று. பறவைகள் அதைப் பற்றிக் குரல் கொடுத்தன; அணில்கள் கீச்சிட்டன; வீசுகின்ற இளங்காற்றும் அதைப் பற்றி முணுமுணுத்தது. பல தடவை பக் நின்று நின்று காலை இளங்காற்றை முகர்ந்து பார்த்தது; புதிய செய்தியைக் கேட்டதுபோல வேகமாக ஓடத் தொடங்கியது. ஏதோ ஒரு தீங்கு நேரிட்டுக் கொண்டிருப்பதாகவோ, அல்லது நேர்ந்து விட்டதாகவோ ஓர் உணர்ச்சி தோன்றி, அதன் உள்ளத்தை அழுத்தியது. ஓடை உற்பத்தியாகும் பாறையைக் கடந்து பள்ளத்தாக்கின் வழியாகச் செல்ல ஆரம்பித்ததும் அது மிக எச்சரிக்கையோடு ஓடத் தொடங்கியது.
பள்ளத்தாக்கில் மூன்று மைல் வந்ததும் அந்தப் பக்கமாகச் சமீப காலத்தில் யாரோ சென்றுள்ளது போலப் புதிய பாதையொன்று தென்பட்டது; அதைக் கண்டதும் பக்கின் கழுத்து மயிர் சிலிர்த்தெழுந்தது. ஜான் தார்ன்டனுடைய முகாமை நோக்கி அந்தப் பாதை நேராகச் சென்றது. ஒவ்வொரு நரம்பிலும் துடிப்பேற பக் வேகமாகவும், பதுங்கிப் பதுங்கியும் முன்னேறிச்சென்றது. அங்கு காணப்பட்ட பற்பல குறிகள் ஏதோ ஒரு கதையைக் கூறின; ஆனால் அதன் முடிவு தெரியவில்லை. அந்தப் புதியபாதையிலே முன்னால் சென்றவர்களைப்பற்றி அது தன் மூக்கின் உதவியால் மோப்பம் பிடித்து அறியத் தொடங்கிற்று. காட்டிலே ஒரு சிறு ஒலியும் இன்றி அமைதி நிலவுவதையும் அது கவனித்தது. பறவையினங்களையே அங்கு காணோம்.
அணில்கள் ஒளிந்து மறைந்து விட்டன. காய்ந்து போன சிறிய மரக்கிளை ஒன்றில் மட்டும் அடிபட்டுத் தட்டையாக நொறுங்கிப்போன ஓர் அணில் மரப்பிசின் போல ஒட்டிக் கொண்டிருந்தது.
நிழல் போல பக் மெதுவாக ஊர்ந்து செல்லும்பொழுது ஏதோ ஒரு வலிமையான சக்தி அதன் மூக்கை ஒரு பக்கத்தில் இழுத்தது போலத் தோன்றியது. அந்தப் புதிய மோப்பத்தைப் பிடித்துக் கொண்டே அது ஒரு புதருக்குள்ளே சென்றது. அங்கே நிக் உயிரற்றுக் கிடந்தது. அதன் உடம்பிலே ஓர் அம்பு ஊடுருவிப் பாய்ந்து முனை ஒரு பக்கத்திலும் அடிப்பாகம் ஒரு பக்கத்திலுமாகக் காணப்பட்டது. உடம்பிலே அம்பு பாய்ந்த பிறகு நிக் எப்படியோ தடுமாறி அந்தப் புதருக்குள் வந்து சேர்ந்திருக்கிறது.
நூறு கஜத்திற்கு அப்பால் சறுக்குவண்டி நாய்களில் ஒன்று கிடந்தது. தார்ன்டன் அந்த நாயை டாஸனில் வாங்கினான். புதிய மனிதர்கள் வந்த பாதையிலே படுத்து அந்த நாய் சாகும் தறுவாயில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் நிற்காமல் பக் மேலே சென்றது. முகாமிலிருந்து பல குரல்கள் லேசாக எழுந்தன. இழுத்து இழுத்து ஏதோ ஒரு பாட்டைப்பாடுவதுபோல பல குரல்கள் மேலெழுந்தும் தாழ்ந்தும் கேட்டன. மரஞ்செடிகளை வெட்டி ஒதுக்கிய வெளியிடத்திற்கு அருகிலே பக் தன் மார்பிலேயே ஊர்ந்து சென்று பார்த்தது. அங்கே ஹான்ஸ் கிடந்தான். முள்ளம்பன்றியின் உடல் போல அவன் உடலெல்லாம் அம்புகள் பாய்ந்திருந்தன. அதே சமயத்தில் பக் மரக்குடிசை இருந்த இடத்தைக் கூர்ந்து நோக்கிற்று. அங்குக் கண்ட காட்சி அதன் கழுத்திலும் தோளிலும் உள்ள ரோமத்தை நேராக நிற்கும்படி சிலிர்க்கச் செய்தது. அடக்க முடியாத கொடுஞ் சீற்றம் சூறாவளி போல அதன் உள்ளத்திலே எழுந்தது. அது தன்னையறியாமல் வாழ்க்கையிலே கடைசி முறையாகக் கொடுஞ் சீற்றம் அதன் தந்திரசக்தியையும், புத்திவன்மையையும் உதறித் தள்ளிவிட்டு மேலெழுந்தது. ஜான் தார்ன்டன் மீதுள்ள பேரன்பினால் அது தன்னையே மறந்து விட்டது.
அழிந்து கிடந்த மரக்குடிசையைச் சுற்றி செவ்விந்தியர்களின் இனத்தைச் சேர்ந்த ஈஹட் என்ற அநாகரிகக் காட்டு மக்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காதிலே ஒரு பயங்கரமான கர்ஜனை கேட்டது. அவர்கள் இதுவரை பார்த்தறியாத ஒரு விலங்கு அவர்களின் மேல் பாய்ந்தது. கொடுஞ் சீற்றச் சூறாவளிபோல பக் அவர்களைக் கொன்றொழிக்க வேகமாகப் பாய்ந்தது; முதலில் ஈஹட்டுக்களின் தலைவன் மேல் அது பாய்ந்தது. அவனுடைய குரல்வளையைக் கடித்துக் கிழித்தது. ஊற்றிலிருந்து நீரைப்போல அவனுடைய கழுத்திலுள்ள ரத்தக்குழாய்களிலிருந்து ரத்தம் பீறிட்டெழுந்தது. பிறகு அவனைப் பற்றி நினையாமல் பக் மற்றொரு மனிதன் மேல் பாய்ந்து அவன் குரல்வளையையும் கடித்துக் கிழித்தது. யாராலும் அதைத் தடுக்க முடியவில்லை. அது அவர்களுக்குள்ளே மிகுந்த வேகத்தோடு பாய்ந்து பாய்ந்து பலரைக் கடித்தும், கொன்றும் அதம் செய்து கொண்டிருந்தது. அது மிகுந்த வேகத்தோடு வெவ்வேறு பக்கங்களில் பாய்ந்ததால் அவர்கள் விட்ட அம்பு அதன் மேல் பாயவில்லை. நினைக்கவும் முடியாத வேகத்தோடு அது இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்ததாலும், அந்தக் காட்டு மனிதர்கள் நெருக்கமாகக் கூடியிருந்ததாலும் பக்குக்கு யாதொரு தீங்கும் நேரவில்லை. அந்த மனிதர்கள் விட்ட அம்புகள் அவர்களிலேயே பலர் மேல் பாயலாயிற்று. இளைஞன் ஒருவன் ஒரு குத்தீட்டியைப் பக்கின் மேல் வீசி எறிந்தான். அது மற்றொரு ஈஹட்டின் மார்பிலே பாய்ந்து முதுகிலே வெளிப்பட்டுத் தோன்றிற்று. இந்த நிலையில் ஈஹட்டுக்களை ஒரு பெரிய பீதி பிடித்துக் கொண்டது. ஏதோ ஒரு துஷ்டப்பேய் அங்கே தோன்றியிருப்பதாகக் கூறிக்கொண்டு அவர்கள் பீதியோடு காட்டுக்குள்ளே பயந்தோடினார்கள்.
பேயே உருவெடுத்து வந்தாற்போல பக் அவர்களைத் துரத்திக் கொண்டு சென்று மானை வீழ்த்துவது போல அவர்களிற் பலரை வீழ்த்திற்று. ஈஹட்டுக்களுக்கு அது ஒரு பொல்லாத நாளாகும். அவர்கள் நான்கு திசைகளிலும் வெகு தூரத்திற்குச் சிதறி ஓடினார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் கீழ்ப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிலே ஒன்று கூடி யார்யார் இறந்து போனார்கள் என்று கணக்கு பார்க்கலானார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பக் வெகுதூரம் ஓடிக் களைப்படைந்து மீண்டும் முகாமிருந்த இடத்திற்குத் திரும்பியது. எதிர்பாராத நிலையில் தாக்கிக் கொல்லப்பட்ட பீட்டின் உடல் கம்பளிப் போர்வைக்குள்ளே கிடப்பதை அது கண்டது. தார்ன்டன் தனியாக நின்று சண்டையிட்டதன் அறிகுறிகள் அங்குத் தரையில் நன்றாகத் தோன்றின. பக் அவற்றைக் கவனமாக மோப்பம் பிடித்துக்கொண்டே சென்று ஓர் ஆழமான குட்டையை அடைந்தது. தலையும் முன்னங்கால்களும் தண்ணீருக்குள் படிந்திருக்க, ஸ்கீட் குட்டையின் விளிம்பிலே உயிரற்றுக்கிடந்தது. கடைசி மூச்சுவரையிலும் அது விசுவாசத்தோடிருந்திருக்கிறது. கலங்கியும் நிறம் மாறியுமிருந்த குட்டை. அதற்குள்ளே கிடப்பதை முற்றிலும் மறைத்துவிட்டது. அதற்குள்ளே ஜான் தார்ன்டன் அமிழ்ந்து கிடந்தான் மோப்பம் பிடித்துக் கொண்டே பக் தண்ணீருக்குள் சென்றது. ஆனால், தார்ன்டன் குட்டையை விட்டு வெளியேறிப்போனதாக ஓர் அறிகுறியும் தென்படவில்லை.
நாள் முழுவதும் பக் குட்டைக்கருகிலேயே சோர்வோடு ஆழ்ந்த சிந்தனையிலிருந்தது; முகாமைச் சுற்றி அமைதியின்றித் திரிந்தது. அசைவுக்கு முடிவு, ஓய்வு, மறைவு , உயிர்பிரிவு – இதுவே சாவு என்று அதற்குத் தெரியும் ; ஜான் தார்ன்டன் இறந்துவிட்டான் என்பதையும் அது தெரிந்து கொண்டது. ஏதோ ஒன்றை இழந்து விட்டதை அது உணர்ந்தது. அதனால் அதன் உள்ளத்திலே பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. தீராத பசியைப் போல அது மீண்டும் மீண்டும் துன்புறுத்தியது. ஆனால், உணவைக் கொண்டு அந்த பசியைப் போக்கிக் கொள்ளவும் முடியாது. ஈஹட்டுக்களின் பிரேதங்களின் அருகில் சென்று பார்க்கும் போது அத்துன்பம் ஒருவாறு மறைந்தது. அப்பொழுதெல்லாம் அதற்கு என்றுமில்லாத ஒரு தனிப்பெருமிதம் ஏற்பட்டது. வேட்டைக்குரிய உயிரினங்களிலே மிகச் சிறந்து விளங்கும் மனிதனையே அது கொன்றுவிட்டது. குறுந்தடி, கோரைப்பல் ஆட்சியை எதிர்த்து அது மனிதனைக் கொன்றிருக்கிறது. பிரேதங்களை அது ஆச்சரியத்தோடு முகர்ந்து பார்த்தது. அவர்கள் மிக எளிதிலே சாவுக்கிரையானார்கள். அவர்களைக் கொல்லுவதைவிட ஓர் எஸ்கிமோநாயைக் கொல்லுவது கடினமான காரியம். அம்புகளும், ஈட்டிகளும், தடிகளும் இல்லாவிட்டால் அவர்கள் ஒரு பொருட்டே அல்ல. அம்புகளும், ஈட்டிகளும், தடிகளும் அவர்கள் கையிலே இல்லையெனில் இனிமேல் அது அவர்களைக் கண்டு பயப்படாது.
இரவு வந்தது. வானிலே மரங்களுக்கு மேலே முழுநிலா எழுந்தது. மங்கிய பகல் போலத் தோன்றும் அதன் ஒளியிலே உலகம் மூழ்கிக் கிடந்தது. இரவு வந்ததிலிருந்து குட்டையினருகிலே ஆழ்ந்த சிந்தனையிலிருந்த பக் கானகத்தில் தோன்றியுள்ள புதிய வாழ்க்கையின் வளர்ச்சியை உணரலாயிற்று. ஈஹட்டுக்கள் உண்டாக்கிய புதிய வாழ்க்கையல்ல அது. உற்றுக் கேட்டுக் கொண்டும், மோப்பம் பிடித்துக்கொண்டும் பக் எழுந்து சென்றது. வெகு தூரத்திலே ஏதோ ஒன்று குரைக்கும் சப்தம் லேசாகக் கேட்டது. அந்தக் குரலைத் தொடர்ந்து அதைப் போன்ற பல குரல்கள் எழுந்தன. கொஞ்ச நேரத்தில் அந்தக் குரல்கள் அண்மையிலும், உரத்தும் கேட்டன. தனது நினைவிலே நிலை பெற்றிருந்த பழைய உலகத்திலே கேட்கின்ற குரல்கள் போல அவை பக்குக்குத் தோன்றின. வெட்டவெளியின் மையத்திற்குச் சென்று மறுபடியும் உற்றுக் கேட்டது. அதே குரலின் அழைப்புதான். முன்னைவிட மிகுந்த கவர்ச்சியோடும், வற்புறுத்தலோடும் அந்த அழைப்பு ஒலித்தது. அந்த அழைப்பிற்குச் செவிசாய்க்க இப்பொழுது பக் தயாராக இருந்தது. ஜான் தார்ன்டன் இறந்து விட்டான். அவனோடு மனித உலகத்தின் கடைசித்தொடர்பும் அறுந்துவிட்டது. மனிதனும் மனித உரிமையும் இப்பொழுது அதைக் கட்டுப்படுத்தவில்லை.
புதிய இடங்களை நாடி வரும் பனிமான்களை ஈஹட்டுக்கள் வேட்டையாடுவது போல வேட்டையாடிக்கொண்டு , ஓடைகளும் காடுகளும் நிறைந்த பிரதேசத்தைக் கடந்து பக் இருந்த பள்ளத்தாக்கிற்கு ஓநாய்க்கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது. நிலவொளி பொழிந்து கொண்டிருக்கும் வெட்டவெளிக்கு அந்த ஓநாய்கள் வந்து சேர்ந்தன. அதன் மையத்திலே சிலை போல அசையாமல் ஓநாய்களின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு பக் நின்றது. அப்பெரிய உருவம் அசைவற்று நிற்பதைக்கண்டு அவை திகைத்தன. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவைகளிலே மிகவும் தைரியமுள்ள ஓர் ஓநாய் பக்கை நோக்கி முன்னால் தாவி வந்தது. மின்னல் வேகத்தில் பக் அதன் மீது மோதி அதன் கழுத்தை ஒடித்தது. பிறகு முன்போல அசையாமல் நின்றது. அடிப்பட்ட ஓநாய் அதன் பின்னே விழுந்து வலி பொறுக்காமல் புரண்டு கொண்டிருந்தது. பிறகு ஒன்றை ஒன்று தொடர்ந்து மூன்று ஓநாய்கள் பக்கை எதிர்த்தன.
அவைகள் ஒவ்வொன்றும் இரத்தம் பீறிட்டுக்கொண்டும், குரல்வளையும் தோள்களும் கிழிபட்டும் திரும்பி ஓடின. இதைக் கண்டதும் அந்த ஓநாய்க்கூட்டம் முழுவதும் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து கொண்டு நெருக்கமாக முன்வந்து பக்கைத் தாக்க தொடங்கிற்று. பக்கின் அற்புதமான வேகமும், சுறுசுறுப்பும் இந்தச் சமயத்தில் நன்கு உதவின. பின்னங்கால்களைப் பக் நன்றாக ஊன்றிக்கொண்டு எல்லாப் பக்கங்களிலும் சுற்றிச் சுற்றி வேகமாகப் பாய்ந்து பாய்ந்து தாக்கியது. மிக விரைவிலே அது ஒவ்வொரு பக்கமும் திரும்புவதால் ஒரே சமயத்தில் அது எங்கும் இருப்பதாகத் தோன்றியது. தனக்குப் பின்புறத்திலே ஓநாய்கள் வந்து சூழ்ந்து கொள்ளாமலிருப்பதற்காக அது மெதுவாகப் பின்னால் நகர்ந்து கொண்டு குட்டையின் கரையையும், ஓடையையும் கடந்து உயரமாக நின்ற ஒரு சரளைக்கல் பாறை வரை சென்றது. சரளைக்கல் பாறையில் சுரங்கம் வைத்து செங்கோண வடிவத்திலே ஒரு பகுதியை யாரோ உடைத்திருந்தார்கள். பின்புறமாகவே நகர்ந்து அந்த இடத்திற்குச் சென்று அங்கிருந்து கொண்டு பக் ஓநாய்களை எதிர்க்கலாயிற்று. பாறையில் ஏற்பட்டிருந்த கோண அமைப்பால் முன்புறத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் பக்கைத் தாக்க முடியாது.
அந்த இடத்திலிருந்து அது நன்றாக எதிர்த்து நின்றபடியால் அரைமணி நேரத்திற்குள் ஓநாய்கள் தோல்வியுற்றுப் பின்வாங்கின. அவைகள் களைப்பால் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு மூச்சுவாங்கின. அவற்றின் வெண்மையான கோரப்பற்கள் நிலவொளியிலே குரூரமாகத் தோற்றமளித்தன. சில ஓநாய்கள் தலையை உயர்த்திக்கொண்டும், காதுகளை முன்னால் மடித்துக் கொண்டும் படுத்திருந்தன. வேறு சில ஓநாய்கள் குட்டையிலே தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. நீண்ட, ஒல்லியான ஒரு சாம்பல் நிற ஓநாய் சிநேகபாவத்தோடும், எச்சரிக்கையோடும் முன்னால் வந்தது. பக் அதை உடனே தெரிந்து கொண்டது. அந்த ஓநாயோடுதான் முன்பு பக் ஓர் இரவும் பகலுமாகக் காட்டுப் பிரதேசத்திலே ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓநாய் மெதுவாகக் குரல் எழுப்பிற்று. பக்கும் குரல் எழுப்பிற்று. இரண்டும் மூக்கோடு மூக்கை வைத்துக்கொண்டன.
பல சண்டைகளில் தழும் பேறிய ஒல்லியான முதிய ஓநாய் ஒன்று முன்னால் வந்தது. சீறத் தொடங்குவதுபோல பக் உதட்டை மடித்தது; ஆனால் பிறகு அந்த முதிய ஓநாயின் மூக்கோடு மூக்கு வைத்து மோப்பம் பிடித்தது. அதைக் கண்டதும் அந்த முதிய ஓநாய் தரையில் அமர்ந்து நிலாவைப் பார்த்துக்கொண்டு, நீளமாய் ஊளையிட லாயிற்று. அதைப்போலவே மற்ற ஓநாய்களும் அமர்ந்து ஊளையிட்டன. இப்பொழுது மீண்டும் தெளிவான குரலிலே பக்குக்கு அழைப்பு வந்ததாகத் தோன்றியது. அதுவும் தரையில் அமர்ந்து ஊளையிட்டது. ஊளையிட்டு முடிந்ததும் பாறையிலுள்ள கோணத்தைவிட்டு அது முன்னால் வந்தது. ஓநாய்கள் அதைச் சுற்றிக்கொண்டு நட்புமுறையிலும், காட்டு விலங்கின் முறையிலும் அதை முகர்ந்து பார்க்கலாயின. அந்தக் கூட்டத்திலே தலைமை வகிக்கும் ஓநாய்கள் ஒரு வகையாகக் குரல் கொடுத்துக்கொண்டு காட்டை நோக்கி ஓடின. மற்ற ஓநாய்களும் அதேமாதிரி குரல் கொடுத்துக்கொண்டு பின்னால் ஓடின. முன்பே பழகியுள்ள ஓநாய்க்குப் பக்கத்திலே பக்கும் குரல் கொடுத்துக்கொண்டு அவைகளோடு ஒன்றாய் ஓடலாயிற்று.
பக்கின் கதை இத்துடன் முடிவுறுவதாகக் கருதலாம். சில ஆண்டுகளுக்குள் ஓநாய்களின் வர்க்கத்திலே ஒரு புதிய மாறுதலை ஈஹட்டுக்கள் கண்டார்கள். சில ஓநாய்களின் தலையிலும் மூக்கிலும் பழுப்பு நிறமான புள்ளிகளும், மார்பிலே வெண்மையான உரோமத் தாரைகளும் இருந்தன. ஓநாய்களின் தலைமையிலே பேய்நாய் ஒன்று வருவதாகவும் ஈஹட்டுக்கள் கூறிக்கொண்டார்கள். அந்தப் பேய் நாயிடத்திலே அவர்களுக்கு மிகுந்த பயம். ஏனென்றால் அவர்களைக் காட்டிலும் அது அதிகத் தந்திரம் உடையதாக இருந்தது. கடுமையான குளிர்க்காலங்களிலே அது அவர்களுடைய முகாம்களிலே புகுந்து திருடுகிறது; அவர்கள் வைக்கும் வளைகளையே தூக்கிக்கொண்டு போய்விடுகிறது. அவர்களுடைய நாய்களைக் கொன்றுவிடுகிறது. அவர்களிலே மிகுந்த தைரியமுள்ள வேட்டைக்காரர்களையும் பொருட்படுத்தாமல் எதிர்க்கிறது.
இவை மட்டுமல்ல; அதன் அட்டகாசம் இன்னும் மோசமாயிற்று. பல வேட்டைக்காரர்கள் முகாம்களுக்குத் திரும்பாமலே மறைந்து விடுகிறார்கள். சில வேட்டைக்காரர்கள் குரல் வளை கிழிபட்டுப் பனிப்பரப்பிலே கிடப்பதையும், அவர்களைச் சுற்றி ஓநாய் அடிகளைவிடப் பெரிய பாதங்களால் ஏற்பட்ட சுவடுகளிருப்பதையும் பல பேர் காணலானார்கள். இலையுதிர்க் காலத்திலே பனிமான்களைத் தொடர்ந்து வேட்டையாடச் செல்லும் ஈஹட்டுக்கள் ஒரு பள்ளத்தாக்குக்குள் மட்டும் நுழையமாட்டார்கள். ஏதோ ஒரு துஷ்டப்பேய் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்து தங்கி அங்கேயே குடியிருப்பதாக ஒவ்வொரு முகாமிலும் பேச்செழுந்தது. அதைக் கேட்டுப் பெண்களெல்லாம் மனம் சோரலாயினர்.
அந்தப் பள்ளத்தாக்குக்குக் கோடைகாலத்திலே ஒரு பிராணி வருவதை ஈஹட்டுக்கள் அறியார்கள். செறிந்த, பளபளப்பான உரோமக் கட்டுடைய ஓநாய் அது என்று கூறலாம். ஆனால், அது ஓநாய்களிலிருந்து மாறுபட்டது. செழித்து விளங்கும் காட்டுப்பகுதியை விட்டு அது தனியாக மரங்களுக்கிடையில் உள்ள திறந்த வெளிக்கு வரும். அந்த இடத்திலே நைந்து போன பனிமான் தோல்மூட்டைகளின் வழியாக ஒருமஞ்சள் நிறமான ஓடை ஓடிப் பூமியிலே மறைகின்றது. அங்கே நீண்ட புல்லும், செடிகளும், புதர்களும் தழைத்து அதன் மஞ்சள் நிறத்தின் மேல் சூரியகிரணங்கள் படாதவாறு மறைக்கின்றன. அந்தப் பிராணி அங்கு வந்து நின்று ஆழ்ந்த சிந்தனையிலிருக்கும்; பிறகு அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன் மிகுந்த துயரமான குரலில் ஒரு தடவை ஊளையிடும்.
ஆனால் அது எப்பொழுதும் தனித்திருக்காது. நீண்ட குளிர்க்கால இரவுகள் வந்ததும் கீழ்ப்பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளிலே இரையை நாடிப் புறப்படுகின்ற ஓநாய்க்கூட்டத்தின் தலைமையிலே அது மங்கிய நிலவொளியிலே எல்லா ஓநாய்களைவிடவும் பெரிய உருவத்தோடு முன்னால் தாவிச் செல்வதைக் காணலாம். அதன் பெரிய தொண்டையிலிருந்து அந்த ஓநாய்க்கூட்டத்தின் கானம் – யௌவன உலகின் கானம் – ஒலித்துக்கொண்டிருக்கும்.
-முற்றும்-
– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.