கவனிப்பதால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 7,306 
 
 

யோகாவைக் காணவில்லை. காலை 9 மணிக்கே சுமதி அவனைத் தேடி ஒரு முறை வந்தாள். அவன் இருக்கையில் இல்லை. 10:30 மணிக்கும் வந்தாள். மீண்டும் அவனுடைய மேசையை வெறுமைதான் சூழ்ந்திருந்தது. இப்பொழுது மணி 11 ஆகிறது. இப்பொழுதும் அவனைக் காணவில்லை.

பவனிடம், ”யோகா எங்கே?” என்றாள்.

”இப்பக்கூட இங்கதான் இருந்தான், மேம்! அதுக்குள்ள எங்க போனானோ?!”

பதிலளித்தவனை முறைத்தாள்.

”முன்ன கேட்டதுக்கும், இதையேதான சொன்ன?”

”இல்ல மேம். நீங்க கேட்டுட்டுப் போனப்புறம் யோகாவைத் தேடிப் போனேன். கீழே மரத்துக்கு அடில, ஒரு திட்டுல உட்கார்ந்து வேலை செஞ்சிட்டிருந்தான். நீங்க தேடறதாச் சொன்னேன். என்கூடத்தான் மேல வந்தான். ஆனா, காணோமே!”

பேனா முனையினால் பவன் தலையைத் தேய்க்க, அவனுடைய தலைமுடி பேனாவின் பச்சைச் சாயத்தைப் பூசிக்கொண்டது. நீளமாகத் தலைமுடியை வளர்த்து விட்டிருந்தான். இரண்டடிக் கூந்தலை தோள்களில் பரப்பி விட்டிருக்கும் அவனைப் பார்த்தாலே சுமதிக்கு எரிச்சலாகும்.

முழங்கை வரை மடித்திருக்கும் அவன் சட்டையின் கையைத் தாண்டி, துடித்துக்கொண்டு வெளியே தலைகாட்டும் ஆந்தைகளையும் பாம்புகளையும் பார்க்க அவளுக்குப் பயமாக இருக்கும். பச்சை குத்திக் கொண்டிருப்பவர்களை வேலையில் சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று தீவிரமாக எண்ணினாள்.

”மேம்! ஒரு வேளை.., உங்களைத் தேடிப் போயிருப்பானோ?”

சொல்லிவிட்டு பவன் தன்பாட்டிற்கு தன் வேலையைத் தொடர்ந்தான். சுமதி தன் அறைக்குத் திரும்பினாள்.

திட்டமிட்டு, அதன்படி வேலை செய்வது சுமதியின் சுபாவம். இந்த நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து, அவளுக்கு ஒற்றைத் தலைவலிதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு. சுதந்திரத்தை அணு அணுவாக சுவாசிக்கும் இளைஞர்கள். கட்டுப்பாடுகளை விதிக்கும் மூத்தவர்கள். இவர்களுக்கிடையே சிக்கிக் கொண்டிருப்பவள்தான் சுமதி.

புத்தாக்கச் சிந்தனையில் நகரை உருமாற்றம் செய்யக் கட்டட வடிவமைப்புகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இது. இதன் செயல்பாட்டில் எல்லாத் தரப்பினருக்கும் ஒரு பங்கு உண்டு. வீட்டளவில் அவரவர் போக்கிற்கு தன்னைப் பச்சோந்தியாக மாற்றும் இனத்தைச் சேர்ந்த அவளுக்கு அலுவலக சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களைத் தழுவதில் சிக்கல் இல்லை.

யோகா அவளுடைய அறையிலிருந்து வெளியேறுவதைப் பார்த்து, வேகமாக நடந்தாள்.

”கொஞ்சம் இரு, யோகா. பேசணும். உள்ளே வா.”

யோகா நகர்வதை நிறுத்தினான். இரண்டடி எடுத்து வைத்தவள் திரும்பிப் பார்த்தாள். கதவு திறந்தே இருந்தது. சூரியனின் பின்னணியில் யோகாவின் உருவம் நிழல் ஓவியமாகத் தெரிந்தது. பிம்பத்தை விட்டுவிட்டு அவனுடைய உயிர் எங்கோ சென்ற தோற்றம் அவளுக்கு ஏற்பட்டது.

அவள் 45 கோணம் திரும்பி அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். யோகாவின் கண்களின் ஆழத்தில் தெரிந்த வெறுமையை அவளுடைய கண்கள் சந்தித்தன. அவனுடைய உருவம் மெல்ல முன்னோக்கி அடி எடுத்து வைத்தது. தான் ஓர் உயிருள்ள இனம் என்று அவன் அப்பொழுதுதான் உணர்ந்ததைப் போல இருந்தது.

”வேலையின் செயல்திறனைப் பத்தி இன்னைக்கே நான் அறிக்கை அனுப்பணும். முக்கியமானவற்றை கலந்து பேச வேண்டாமா?”

முன்னேறி நடந்தவன் நின்றான். நேற்றே மின்னஞ்சல் அவன் நினைவிற்கு வந்தது. திரும்ப எத்தனித்தான்.

”யோகா. இதுவும் வேலையின் ஒரு அங்கம்தான்.”

”நீங்க கொடுத்த வேலையை முடிச்சுக் கொடுக்கறேன்”

”ஆனா, நீ அடிக்கடி இருக்கையில் இருப்பது இல்லை. பல பேர் வேலை செய்யற ஓர் இடம். ஒரு சொல் யாரும் சொல்லக்கூடாது பாரு!”

யோகாவின் கண்கள் சுருங்கின.

”யார் போட்டுக் கொடுக்கறா?”

”அப்படி எல்லாம் இல்லை. இன்னைக்குக்கூட காலையிலிருந்து உன்னைத் தேடறேன்”

”கண்டவனுக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை.”

”எங்கேயிருந்து வேலை செய்யற? கைபேசியில அடிச்சாக்கூட எடுக்க மாட்டேங்கறே!”

”உங்க வேலை சரியான நேரத்துக்கு முடிச்சுக் கொடுக்கறேன். அதோட என் வேலை முடிஞ்சது. அதுல ஏதாவது பிரச்சனையா?”

”யார்கிட்டயும் பேச மாட்டேங்கறே!”

படக்கென்று திரும்பி வெளியே சென்றுவிட்டான்.

முன்னேறிய நாட்டில், மில்லியனம் காலத்தில் புத்திசாலிக்கு தகுந்த மரியாதை கொடுக்க வேண்டாமா? மற்றவர்களுடன் ஒப்பு நோக்கும் பெருநிறுவன கலாசாரத்தை நினைத்து அவளுக்கே சங்கடமாக இருந்தது. மாற்று வேலை பழக்க வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை சமநிலையை ஏற்படுத்துவது தன் கடமை என்று எண்ணி சுமதி பெருமூச்செறிந்தாள். திரும்பி தன் இருக்கையை நோக்கி நடந்தவள் தொப்பென சுழலும் சக்கர நாற்காலியில் தன்னைப் பொதித்துக்கொண்ட கணம் அவளுடைய கண்கள் தானாகவே அகல விரிந்தன.

வக்கீலின் புத்தகத்தைப் போலத் தடித்த கோப்பு ஒன்று அவளுடைய இருக்கைக்கு நேராக வைக்கப்பட்டு இருந்தது. பரவசத்துடன் அதனைத் திறந்து, ஒவ்வொரு பக்கமாகத் திருப்பினாள். உற்சாகமடைந்தாள். காற்றோட்டமுள்ள 25 மாடிக் கட்டடத்திற்கான வரைபடங்கள் அவை. எல்லாப் படங்களும் திருத்தமாக இருந்தன.

அதனுடன் இருந்த ’USB ட்ரைவ்வை’ தன்னுடைய மடிகணினியில் சொருகி, சுவரில் தொங்கிய பெரிய திரையில் பார்த்து, சில குறிப்புகளை அதில் சேர்த்தாள். அடுத்த வார தேசிய அளவிலான ’கட்டட வடிவமைப்புப் போட்டியில்’ அவர்களுடைய நிறுவனம் கலந்துகொள்ள எல்லாம் தயார். முதல் பரிசு அவர்களுக்குத்தான் என்று சுமதி திட்டவட்டமாக நம்பினாள்.

யோகாவின் வேலையில் குறையே கண்டுபிடிக்க முடியாது.

அதற்கு மாறாக, அவன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வளர்ந்துகொண்டே போயின. அவன் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவதில்லையாம். எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லையாம். அவனுடைய இடத்தில் ஒழுங்காக அமர்ந்து வேலை செய்வதில்லையாம்.

அவனுடைய தரப்பு நியாயத்தைக் கேட்கும் முன்னர், எந்த ஒரு தீவிரமான முடிவையும் எடுப்பது சரியல்ல என்று கருதுகிறாள்.

ஆனால், அதற்கு யோகாவும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?

மணி பிற்பகல் 12:30. தன் அறையை விட்டு வெளியேறினாள்.

சீரான வேகத்தில் நடக்கும்பொழுது, எதிர்பாரா விதமாக யாராவது வேகமாக இடிப்பது போல வந்தால், அடி வயிற்றை பயம் சுருட்ட ஓர் ஓலம் எழுமே! சுமதியை அப்படிப்பட்ட கிலி பிடித்தது.

அவர்களுடைய அலுவலகம் இருந்த தளத்தில், பழுது பார்க்கும் வசதிக்காக ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அளவில் ஒரு நடைபாதை உண்டு. ஆபத்து என்பதால், அதில் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த 60 அடி நீளப் பாதையின் முடிவில் ஓர் உருவம் தெரிந்ததால், அவள் திடுக்கிட்டு நின்றாள்.

குறுகிய பாதையின் முடிவில் பால்கனி போல் இருந்த அமைப்பில் உடலை முன்புறமாக வளைத்து, இரு பக்கச் சுவர்களுக்கும் நடுவே முட்டுக்கொடுத்து நிற்பது யோகாவேதான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. முகம் கோணி இருந்தது. ஏதோ ஒரு வலியைத் தாங்க முடியாமல் அரற்றுவது அவன் முக பாவனையில் தெரிந்தது. கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வலது பக்கக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டிருந்தான்.

யோகாவை அந்தக் கோலத்தில் பார்க்க, சுமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஓர் ஆண் அழுவதை அப்பொழுதுதான் முதல் முறையாக சுமதி பார்க்கிறாள். அதைக் கண்டு, அவளுடைய உடல் நடுங்கியது. சற்று முன்னர் அவன் மேல் தோன்றிய கோபம் மறைந்தது. மனிதாபிமானம் விழித்துக் கொண்டது. அந்த மனிதனுக்காக அவளுடைய இதயத்தில் ஏதோ ஒன்று வெடித்தது.

அவன் அழுவதைப் பார்த்து, அவன் மேல் பரிவு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. அவனை அழைத்துச் சென்று, அவளால் விசாரிக்க முடியும். ஆனால், சுமதி அப்படிச் செய்யவில்லை.

உணர்ச்சி வசப்படும் ஓர் ஆண் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப, அவனுக்குத் தனிமை தேவை. அதுவும், யார் கண்ணிலும் படாத இடமாக இவன் வந்து அழுகிறான் என்றால், அழுவதன் காரணத்தை யாரிடமும் அவனால் பகிர்ந்து கொள்ள இயலாமல் இருக்கலாம். அவனை அப்பொழுது தொல்லை செய்ய சுமதி விரும்பவில்லை.

அவனை அழவிட்டு, அவள் அவனைக் கடந்து சென்றாள்.

நேராக மனிதவளத் துறைக்குச் சென்று, தன் தோழியைச் சந்தித்தாள்.

”யோகாவைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் வேணும். உதவி செய்வியா?”

”என்னப்பா! இதுல சிக்கல் வருமே!”

”அதான் நேர்ல வந்தேன். காண்பிச்சா மட்டும் போதும்.”

அவள் கேட்கும் உதவி, தோழிக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் என்று சுமதிக்குத் தெரியும். ஆனாலும், யோகா அழுவதைப் பற்றி எடுத்துச்சொல்லி உதவி கேட்க சுமதி தயங்கினாள்.

அங்கிருந்து வெளியேறிய சுமதியின் காதில், ”அதுக்கப்புறம் யோகா அழமாட்டான்!” என்ற சொற்கள் அசரீரி போல ஒலித்தன.

பவன் அவளருகில் வந்தான்.

சுமதியின் முகம் சிவந்திருந்தது.

”இப்ப, நீங்க என்னோட கொஞ்சம் வர முடியுமா?”

மருத்துவமனையில், நீண்டநாள் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகள் தங்கும் பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு பெண்மணி ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

ஆரோக்கியமாக வளைய வர வேண்டிய வயதினள். ஆனால், அவளோ கூனிக் குறுகி, காய்ந்த தோலுடன் எந்த இயக்கமுமின்றிக் கிடந்தாள்.

”இவங்க யோகாவோட மனைவி! மூணு வருசமா தீராத நோயால் உருக்குலைஞ்சுகிட்டே வராங்க. இன்னும் 50 நாளோ! 100 நாளோ! போய்டுவாங்க. அப்புறம் என்ன? யோகா இங்க வந்து போகத் தேவை இருக்காது. வேலைக்குச் சரியாக வரும் வழக்கம் திரும்பிடும், மேம்”

சுமதியின் முகமும் வெளிறியது.

அந்தப் படுக்கையைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள். அதில் அவள் தனியாகவும், யோகாவுடன் இணைந்து சிரித்துக்கொண்டும் இருந்தாள். ரதியைப் போல் அழகான பெண் உருவம். கல்லூரி, கல்யாணம், ஊர் சுற்றுவது என யோகாவின் கைவண்ணத்தில் அந்த ஓவியங்கள் உயிர்பெற்று இருந்தன.

ஆனால், உயிரோவியமோ உயிரற்றுப் படுக்கையில் கிடந்தது.

”எப்படி ஆச்சு?”

”அது ஒரு பெரிய கதை, மேம். எல்லாரும் பொறாமைப்படற மாதிரி இரண்டு பேரும் காதலிச்சாங்க. வாழ்ந்தாங்க. திடீர்னு ஒரு நாள் காலைல எழுந்தப்ப, அவங்க உடம்போட வெளிபாகங்களின் இயக்கம் எல்லாமே நின்னுருச்சு. அதுக்கப்புறம் தான் யோகா அவனுக்கே அந்நிய மனிதனா மாறிட்டான்”

அப்பொழுது அங்கே வந்த யோகா அறைக்கு வெளியே இவர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் மனைவியின் படுக்கைக்குச் சென்று, அதில் அமர்ந்தான். அவளுடைய முன் நெற்றியைத் தடவினான்.

விழித்தவுடன், வெண் பனிச்சறுக்கு மேடையில் நடனமாடும் சிறுமியைப் போல அவளுடைய கருவிழிகள் வெள்ளைப் படலத்தில் விளையாடின. அவனைப் பார்க்கும் அந்தச் சில நொடிகளுக்காகவே அவளுடைய உயிர் பிரியாமல் இருப்பதைப் போன்ற பிம்பம் ஏற்பட்டது.

அவளுடைய வாய் பேசவில்லை. கைகள் அசையவில்லை. கூனியிருந்த முதுகு நீட்டித்துக்கொள்ளவில்லை. யோகா மெதுவாக அவளுடைய கால்களை நேராக இழுத்துவிட்டான். பின்னர், மற்றொரு தலையணையை வைத்து, அவளுடைய தலையை உயர்த்தினான்.

சிரித்த முகத்துடன் அவளிடம் பேச்சுக்கொடுத்தபடியே இந்தக் காரியங்களைச் செய்தான். சற்று முன்னர் இவனா அழுதான்? தினமும் அழுவானா? அத்தனை வலிகளையும் மறைத்து, தான் நேசிக்கும் பெண்ணிற்காக அவன் முகம் சிரித்தது.

பின்னர், தன் கையில் கொண்டுவந்த கிண்ணத்தில் இருந்த சூப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் புகட்டினான்.

சாகும் வயதா அவளுக்கு?

தன் அன்புக்கு உரியவர்களைச் சில நாள்களில் இழக்க நேரும் என்பதை எதிர்பார்த்துக் கடக்கும் நாட்கள் மிகக் கொடூரமானது. நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களை மாதக்கணக்கில் கவனித்துப் பராமரிக்கும் ஒருவரின் மனமும் நிலை தடுமாறும் என்பதை அவள் படித்திருக்கிறாள்.

யோகாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி இனிக் கேட்பதற்கு ஒன்றுமேயில்லை.

”போலாமா, மேம்”

திடீரென கேட்ட பவனின் குரலுக்கு அவள் கையில் வைத்திருந்த கைபேசி தவறி கீழே விழுந்தது. அதைக் குனிந்து எடுத்து அதிர்ச்சியில் எதிர்வினை ஏதும் செய்ய இயலாமல் நிற்கும் சுமதியின் கையில் கைபேசியை வைத்தான். கைபேசியை வாங்கும்பொழுது அவனுடைய சட்டையை மீறி பாம்பு தெரிந்தது. சுமதி நிமிர்ந்து அவனுடைய முகத்தை சிநேகத்துடன் பார்த்தாள்.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் யோகா. அவனுடைய முகத்தின் ஒவ்வொரு அங்கமும் விரிவடைந்து விகாரமானத் தோற்றத்தை ஏற்படுத்தியது. அறையை விட்டு வெளியே வந்தவன், கதவை நிதானமாகச் சாத்தினான்.

”யாரும் இங்கே வரத் தேவை இல்லை” என்ற குரல் வெறுப்பின் பூச்சைக் கொண்டிருந்தது. அவனுடைய அதரங்களும் கால் விரல்களும் அதிர்ந்தன.

”நாளை பார்க்கலாம்” என்று சுமதி நிறுத்தி நிதானமாகச் சொல்லிவிட்டு மின் தூக்கிக்த் தளத்தை நோக்கி நடந்தாள். தாதியர்கள் இங்குமங்கும் நடந்துகொண்டிருந்தனர்.

”யோகா இங்கேர்ந்துதான் நேரா வேலைக்கு வரான். அவன் அவனோட வீட்டுக்குப் போயே, பல மாதங்கள் ஆகி இருக்கும்.”

தாய் எனும் தன்மை ஆணுக்கும் உண்டென உலகம் புரிந்துகொள்ளும் தூரம் அதிகமில்லை.

சுமதியின் குழப்பம், பவனிடம் இல்லை.

”சரியாயிடும், மேம்! நான் அவனைப் பார்த்துக்குவேன்”

வெள்ளை மனத்துடன், சர்வ சாதாரணமாக, பவன் சொல்லிவிட்டான்

பவனின் தோள்களில் தொங்கும் நீளமான சுருள் முடி, இப்பொழுது சுமதியின் கண்களுக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *