அந்த வழக்கறிஞரின் பெயர் பிரேமநாதன். பணத்தைக்கண்டால் நியாயம் அநியாயம் பிரித்தறியும் பகுத்தறிவை இழப்பான். பணத்தை கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொலைகாரனையும் நிரபராதியாக்கி ஒன்றுமறியா அப்பாவியை குற்றவாளியாக்குவான். எந்த வழக்காக இருந்தாலும் வென்று விடுவான்.
பாலன் தன் மகளின் ஆத்மாக்கு ஞாயம் பெறுவதற்காக பிரேமனாதனிடம் நியமனம் கோரி இருந்தான். பிரேமனாதனின் முதல் கேள்வி வழக்கு சாராது விலையை சார்ந்து இருந்தது. தன் மகளின் கல்விக்காக கூலி வேலை மட்டுமே செய்து வாழ்க்கை நடாத்தி வந்த பாலனுக்கு பிரேமனாதன் எதிர்பாக்கும் தொகையை செலுத்தும் சக்தி இருக்கவில்லை. பல லட்சங்களை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பிரேமனாதனுக்காக காத்திருக்கும் மேல் இடத்து மனிதர்கள் முன் பாலனின் வழக்கு பிரேமனாதனிடம் நிராகரிக்கப்பட்டது.
கண்ணீரில் மிதக்கும் கண்களுடன் மகளின் லட்சியம் சாந்தியடைய வைத்திருந்த ஒரு தொகை பணத்தை கொண்டு தன் மகளின் ஆத்மாக்கு கிடைக்கவேண்டிய நியாயத்துக்காக நியாயமான வழக்கறிஞரை தேடும் முயற்சியை பாலன் மேற்கொண்டான்.
இவ்வேளையில் பிரேமனாதனுக்கு கிடைத்த அடுத்த வழக்கு கொலைகாரர்கள் ஐவரை நிரபராதியாக்கும் வழக்கு. ஆர்தனனின் தந்தை வர்த்தக ரீதியில் மேலிடம் என்பதாலும், பிரேமனாதனின் நண்பன் என்பதாலும், பிரேமநாதன் எதிர்பாக்கும் தொகையை விட அதிக தொகையை கூட செலுத்தகூடிய வர்க்கம் என்பதாலும் பிரேமநாதன் இவ்வழக்கை கையில் எடுத்தான்.
ஆர்தனன், அர்ஜுன், வினித், ராகுல், ஜிவ் ஆகிய இளைஞர்கள் குடி போதையின் உச்சத்தில் இருக்கும் வேளை அவ்வழியாக சென்ற மேகலா என்ற ஏழைப்பெண்ணின் அழகை ரசிப்பதோடு நிறுத்தாமல் ருசித்து பசியாறி உயிர்பிரித்த காமுகர்களை காப்பாற்றும் முயற்சியில் பிரேமநாதன் இறங்கினான்.
வழக்குக்கு சாதகமான குறிப்புகளை ஆராய்ந்த பின் வளமையை போல் தன் மகள் ஹரிஜாவை காரில் பாடசாலையில் விட்டுவிட்டு வழக்கை வென்று குடுப்பதற்க்காக நீதிமன்றத்துக்கு சென்றான்.
பிரேமனாதனின் தரப்பாரின் கூண்டுக்கு எதிர் கூண்டில் “தன் மகள் மேகலாவுக்கு நியாயம் கிடைக்குமா” என்ற கேள்வியை மனதில் வைத்துக்கொண்டு பாலன் நிண்டான்.
வாத பிரதிவாதங்கள் தொடர்ந்தன.
அனைத்து வாதங்களும் பிரேமநாதன் தரப்பினருக்கே சாதகமாக செல்கிறது. பாலனுக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு பிரிகிறது. ஆர்த்தனன் குழுவினர் திருப்தி கலந்த திமிருடன் பாலனை பார்க்கின்றனர்.
தீர்ப்பும் ஆர்த்தனன் தரப்பினர்க்கே சாதகமாக அமைந்தது.
தன் மகள் மேகலாவுக்கு நேர்ந்த அநியாயத்தை நியாயமாக்கும் முயற்சி தோல்வியடைந்தது குறித்து. மிகுந்த மனவருத்தத்துடன் அடுத்த இலக்கறியாது வீடுதிரும்பினான் பாலன். வழக்கு பிரேமனாதனிடம் சென்றதால், வெற்றி நம் தரப்பிற்கு தான் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த ஆர்த்தனனும் நண்பர்களும் அவ்வெற்றியை கொண்டாட சென்றுவிட்டனர்.
பிரேமநாதனும் அடுத்த வழக்கை ஆராய்வதற்காக பாடசாலையில் விட்ட தன் மகள் ஹரிஜாவை ஏற்றிக்கொண்டு வீடுதிரும்பினார்.
நாட்கள் கழிந்தன..
ஆர்த்தனனும் நண்பர்களும் ஓர் களியாட்ட நிகழ்வு முடிந்து குடிபோதையில் காரில் சென்றுகொண்டு இருந்தனர். வழியில் காரை நிறுத்திய பொலிசாருக்கு பச்சைதாள்களை பறக்கவிட்டுவிட்டு வந்தவர்களின் கண்ணை குளிர்த்தும் வகையில் ஓர் பெண் தெருவில் நின்றுகொண்டு இருந்தாள்.
ஓர் முறை விட்ட தவறு மறுமுறை செய்யகூடாது என்று அவர்களின் மூளை கூறினாலும் மனம் கூறமருத்தது. இம்முறையும் பிரேமநாதன் தங்களை காப்பாற்றிவிடுவான் என்று ஆர்தனனுக்கு தோன்றியது. சனநடமாட்டம் இல்லாத அமைதியான அந்த தெரு அவர்களுக்கு தைரியமளித்தது. காத்திருந்து சரியான சந்தர்ப்பம் வந்தபின் அப்பெண்ணை காருக்குள் இழுத்து மதுவை கொடுத்து மயக்கினர்.
ஓர் கட்டடத்துக்கு சென்று அப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு அவர்கள் மதுவருந்த சென்றுவிட்டனர். புகையிரத கோர்ன் சத்தம் கேட்டு அப்பெண் விழித்துக்கொண்டாள். அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு கோல் செய்தாள்.
“அப்பா.. நான் ஹரிஜா கதைக்கிறன் அப்பா..என்ன யாரோ கடத்திவச்சிருகாங்க அப்பா.. எனக்கு பயமா இருக்கு கெதீல வாங்க..”
“ஹரிமா.. என்ன மகள் சொல்றா?.. எங்க வச்சிருகாங்க…பயப்படாத மா.. அப்பா வந்திருவன்.”
“எங்க எண்டு தெரியல்ல அப்பா, ட்ரைன் கோர்ன் சத்தம் கேட்டுது”
அவ்வேளை அதனை ஆர்தனனின் நண்பனாகிய ஜீவன் கண்டுவிட்டான். ஹரிஜா தன் தந்தையிடம் தன் நிலையை சொல்லும் வேளையில் ஜீவன் அலைபேசியை வாங்கி நிறுத்திவிட்டான்.
பிரேமநாதன் பதற்றத்தில் செய்வதறியாது திகைக்கிறான். அவள் சென்ற வகுப்பாசிரியரிடம் விசாரின்கின்றான். வகுப்பாசிரியர் அவள் வகுப்பு முடிந்து சென்றுவிட்டதாக கூறியபின்னர் தன் வாகனத்தை எடுத்துகொண்டு புகையிரத நிலையம் நோக்கி சுற்றி முற்றி திரிகிறான்.
ஓர் வீட்டின் முன்னே ஆர்த்தனனின் வாகனத்தை காண்கிறான். தன் மகள் அவனுக்கு தான் இரையாக போகிறாள் என்பதை அறியாமல். தன் மகளை தேடும் முயற்சியில் உதவி கேட்க ஆர்தனனிடம் செல்கிறான் பிரேமநாதன்.
வீட்டினுள் சென்ற பிரேமனாதனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஓர் தந்தை தன் மகளை எந்த நிலையில் பார்க்க கூடாதோ அந்நிலையில் பிரேமநாதன் தன் மகளை பார்த்தான். பூனை தின்றுவிட்டு போட்ட எலும்பை போல் அக்காமுகர்கள் ஹரிஜாவை ….
ஓர் தந்தைக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையை மனதளவில் பிரேமநாதன் அன்று பெற்றான்.
தான் அன்று பணத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பாலனின் நீதிக்கு கொடுத்து காமுகர்களுக்கு சட்டத்தை சொல்லி கொடுத்திருந்தால் தன் மகளுக்கு இந்நிலை நேர்ந்திருக்காது என உணர்ந்தான் பிரேமநாதன்.
இச்சம்பவத்தின் பின்னர் பிரேமநாதன் காமுகர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தான். அன்று பாலனின் மகளை தன் மகள் போல நினைத்து நியாயத்தின் படி நடந்திருந்தால். இன்று பாலனின் வலியை பிரேமநாதன் உணரவேண்டிய தேவை இருந்திருக்காது.
இவ்வுலகில் நீதிகளும் நியாயங்களும் விலைபோக வழிகாட்டும் வழக்கறிஞர்கள் இருக்கும்வரை கொலைகள், கற்பழிப்புகள் செய்ய அஞ்ச தேவையில்லை.