தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,435 
 
 

“”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும் அளித்தது. இந்த பரிசு ஏன், எதற்காக எனக்கு கொடுத்தனர் தெரியுமா… இருபத்தோராம் நூற்றாண்டின், மிகச் சிறந்த இளைஞனாக, சர்வதேச அளவில் நடந்த ஆய்வில், நான் தேர்வானதால் தரப்பட்டது…
“”எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. ஆனால், அந்தக் தொகை, எனக்கே மூச்சடைக்க வைத்தது. அவ்வளவு பெரிய தொகை, எங்கே என் குணத்தை மாற்றிவிடுமோ என்று எனக்கு ஒரு பயம்…
“”இதற்கு முன் பல பரிசுகள் நான் வாங்கியிருக்கேன். லாட்டரியில் எனக்கு ஒரு லட்சம் விழுந்திருக்கிறது. அப்போது நான் பள்ளி மாணவன் தான். பட்டாணி வாங்க கொண்டுபோன ஒரு ரூபாயில், ஏனோ பக்கத்துக் கடையில் விற்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கத் தோன்றியது…
“”அதற்குதான் லட்ச ரூபாய் பரிசு. கமிஷன் போக, வந்த தொகையை அப்பாவிடம் கொடுத்து, சிதிலமடைந்திருந்த வீட்டை புதுப்பிக்கச் சொன்னேன்… என் அதிர்ஷ்டத்தையும், பொறுப்புணர்ச்சியையும் வீட்டில் மட்டுமல்ல, ஊரிலும் பாராட்டினர்!” என்றான் ஆனந்த்.
“”இருக்காதா பின்ன… சிறு பிள்ளையாய் இருந்தும், லாட்டரி பணத்தில் சட்டை, சாக்லேட், வண்டி எல்லாம் வேண்டும் என்றெல்லாம் ஆசைப் படாமல், வீட்டை புதுப்பிக்க உதவியிருக்கீங்களே,” என்றார் சதானந்தம்.
புன்னகை பூத்தான் ஆனந்த்.
தொடர்ந்து, “”லாட்டரியில் அதிக பட்சம் ஒரு கோடி சம்பாதித்த போதும், நான் நிலை தடுமாறியதில்லை.”
“”அது எப்போ?”
“”நான் கல்லூரி படிக்கும் போது!”
“”என்ன செய்தீர்கள் கோடி ரூபாயை?”
“”வரி போக, அறுபது லட்சம் தான் கிடைத்தது. கொஞ்சம் விளை நிலங்கள் வாங்கினேன்; சினிமா தியேட்டர் கட்டினேன். பஸ் ரூட் வாங்கி, இரண்டு பஸ்கள் இயக்கினேன்!”
“”ஒரே நாளில் உங்கள் வாழ்க்கை உச்சத்தைத் தொட்டு விட்டது; இல்லையா?”
கனவு“”ஊர் அப்படித்தான் சொன்னது… ஆனால், அந்த பெருமையை என் மூளையில் ஏற்றிக் கொள்ளவில்லை. எப்போதும் போல் கல்லூரிக்கு போனேன். வயலில் உழவு வேலை செய்தேன். தியேட்டரில் டிக்கெட் கிழித்தேன். டிரைவர் வராத நாளில், நானே பஸ் ஓட்டினேன். இரவில் பஸ்சைக் கழுவுவேன். அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும், நான் என்னை அடி மட்டத்திலேயே வைத்துக் கொண்டேன்.”
“”பெரிய விஷயம்!”
“”மேற்படி இரண்டு பரிசுகளையும், நான் அதிர்ஷ்டத்தால் வென்றிருந்தாலும், திறமையால் ஒரு பரிசு வெல்ல வேண்டுமென்ற ஆர்வம். பாடங்களுக்கு அப்பால், பொது அறிவு நூல்கள் அதிகம் வாசித்துக் கொண்டிருப்பேன். அதை பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் வந்தது…
“”கோன் பனேகா க்ரோபதி’ கேள்விப்பட்டிருப்பீங்க… அதில் கலந்துகொள்ள ஒரு கடிதம் தட்டி விட்டிருந்தேன். அழைப்பு வந்து, கலந்து கொண்டேன். போட்டியில் வென்றேன். கோடி வென்ற, முதல் தென் இந்தியன் என்ற பெருமையும் சேர்ந்தது. ஆனாலும், ஒரு சிக்கல் நேர்ந்தது. என்னால், எல்லா கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்ல முடிந்தது என்று சந்தேகப்பட்ட சிலர், என்னைக் கடுமையாக பரிட்சித்தனர். எல்லா வகையிலும், என் அறிவை சோதித்து, திருப்தி அடைந்த பிறகே, பரிசு வழங்கினர். எனக்கு மிக திருப்தி!”
“”அந்த பணத்தை என்ன செய்தீர்கள்?”
“”பணமாக கையிலிருந்தால், செலவாகி விடும். அதனால், சென்னைக்கு அருகில் வீட்டு மனைகளாக வாங்கிப் போட்டேன். அது, குறுகிய காலத்தில் பல கோடிகளாகி விடும்!”
“”உண்மைதான்!” ஒப்புக்கொண்டார் சதானந்தம்.
“”அப்போதும் உழவையோ, டிக்கெட் கிழிப்பதையோ, பஸ் ஓட்டுவதையோ நிறுத்தவில்லை நான். டிகிரி முடித்த பின், முழுமையாக இறங்கி விட்டேன். கடுமையாக உழைத்தேன். அப்போது ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன். பணம் இல்லாத போது, ஒருவன் எப்படி உழைப்பானோ, அதைவிட இரண்டு மடங்கு பணம் வந்த பின் உழைக்க வேண்டும்; அப்போதுதான் வந்த பணத்தைக் காப்பாற்ற முடியும்!”
“”ரொம்ப சரி…” என்று ஆமோதித்த சதானந்தம், “”கோடி கோடியாய் பணம் வந்ததும், நிலைபிறழாத உங்கள் நிதான குணமும், தளறாத உழைப்பும் தான், இப்போது அமெரிக்க விருதும், பரிசுமாக வந்து சேர்ந்திருக்கிறது இல்லையா… என்ன செய்யப் போகிறீர்கள் இந்த பதிமூன்று கோடி பணத்தை?”
“”நல்ல நிறுவனமொன்றில் முதலீடு செய்து, பங்குதாரர் ஆகலாமென்றிருக்கிறேன். ஒன் ஆப் த பார்ட்னர் ஆனாலும், நான் சூட்டு கோட்டு போட்டு, காரில் போகாமல், என் மக்கள் மத்தியில் சாதாரண ஆனந்தாகவே இருப்பேன். வரும் லாபத் தொகையில், அறக்கட்டளை ஒன்றை துவங்கி, சமூகத்துக்கு உதவலாம்ன்னு நினைக்கிறேன்.”
“”இந்தக் கனவு இத்தோடு நிற்கிறதா, நீள்கிறதா?” என்று கேட்டார் டாக்டர்.
“”இந்தக் கனவை பொறுத்தவரை, இதோடு நின்று விட்டது டாக்டர். இன்னும் பல கனவுகள்… பெரிய ஜமீந்தாரர் ஆவது, எண்ணுவதெல்லாம் நடக்கிறது மாதிரியான யோக சக்தி பெறுவது… இப்படி பலதும் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது டாக்டர்… இந்தக் கனவுகள் சுவாரஸ்யமாகவும், சுகமாகவும் இருக்கு டாக்டர்…
“”இந்தக் கனவில் இருக்கும் போது, எதுவும் எனக்கு பொருட்டில்லாமல் இருக்கிறது. இரவு தூக்கத்தில் வந்து கொண்டிருந்த கனவு, இப்போது விழித்துக் கொண்டிருக்கும் போதும் வந்து, என் இயல்பு வாழ்வை தொந்தரவு செய்கிறது…
“”இது வெறும் கனவு என்று அறிவு சொன்னாலும், மனம் திரும்பத் திரும்ப, பலவந்தமாக அந்தக் கனவில் விழுகிறது. கனவு வராத போது வெறுமையாக, எரிச்சலாக இருக்கிறது. வலுவில் கனவை வரவழைத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. அது, ஒரு நோய் போல் என்னை பீடித்திருக்கிறது டாக்டர்…. எப்படியாவது விடுபட வேண்டும்…” என்று, முடிக்கும் போது, அவன் குரல், சுய பச்சாத்தாபத்தில் தோய்ந்திருந்தது.
“”பிரச்னையை புரிந்து கொண்டதால், தீர்வு சுலபம் தான்,” என்ற சதானந்தம் பிரிஸ்க்ரிப்ஷன் எழுதினார்.
அதை ஆனந்த் கையில் கொடுக்காமல், ஒரு கவரில் போட்டு, வாயை ஒட்டினார்.
மேலே விலாசம் எழுதி, ஒருமுறை சரி பார்த்து, ஆனந்திடம் கொடுத்து, “”இந்த முகவரியில் உள்ள நபரைப் பார்,” என்றார்.
அவன் கேள்விக்கு காத்திராமல், பெல் அடித்து, அடுத்த பேஷன்ட்டை அழைத்தார்.
“நீ போகலாம்…’ என்று சொல்லாமல் சொன்னது, அவரது நடவடிக்கை.
ஆனந்துக்கு ஏமாற்றம் தான். “மனம் விட்டு அவ்வளவையும் கொட்டியிருக்கிறோம். கவுன்சிலிங் கொடுப்பார் அல்லது மருந்து ஏதும் பிரஸ்க்ரைப் செய்வார் என்று நினைத்துக் கொண்டிருக்க, ஒரு கவரைக் கொடுத்து விரட்டுகிறார். மேலும், பேசிக்கொண்டிருப்பது, வீண் வேலை என்று நினைக்கிறாரா அல்லது இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை என்று அலட்சியப்படுத்துகிறாரா… புரியவில்லை!’
“”டாக்டர்… நான் மறுபடியும் எப்போது வர வேண்டும்?” என்று கேட்டான்.
“”இவரிடம் போங்கள்… அவரே சொல்வார்!” என்றார்.
“”என் பிரச்னைக்கு மருந்து ஏதும் எழுதியிருக்கிறீர்களா?”
“”அவர் சொல்வார். அவரைப் பார்க்கும் போது, உங்கள் படிப்பு சர்ட்டிபிகேட்டையும் காட்டுங்கள்,” என்று மட்டும் சொன்னார். அதற்குள் அடுத்த நோயாளி வந்து விட, அவன் வெளியேற வேண்டியிருந்தது. வெளியில் வந்து பணம் செலுத்துமிடத்துக்கு சென்றபோது, “”நீங்கள் பீஸ் எதுவும் செலுத்த வேண்டியதில்லை சார்… டாக்டர் சொல்லிட்டார்,” என்றனர்.
“”நல்லது… இதோ இந்த கவரில், ஒருவருடைய முகவரி எழுதியிருக்கு. இவர் யார்ன்னு சொல்ல முடியுமா… அவர் பெரிய டாக்டரா… சைக்கியாட்ரிஸ்ட்டா?” என்று கேட்டான்.
வாங்கிப் பார்த்து, “”ரெண்டுமே இல்லை,” என்றனர்.
ஆனந்துக்கு தலை சுற்றியது. டாக்டர் அறைக்குள் போனதிலிருந்து திரும்பி வந்து நிற்பது வரை, நினைவில் ஓட்டினான். உறுதியாக தெரிந்தது. எதுவும் கனவில்லை; நிஜம்.
“சாதாரண காய்ச்சலுக்கு கூட, நாலு மருந்து எழுதி, பதினாலு, “அட்வைஸ்’ சொல்லும் டாக்டர், வாழ்வை பாதிக்கும் பிரச்னைக்கு, ஒரு வார்த்தையும் சொல்லாமல், ஒரு கடிதம் கொடுத்து வெளியேற்றுகிறாரே…’ என்று நினைக்க, குழப்பமாக இருந்தாலும், முகவரியில் உள்ள அசோக்குமாரை பார்க்க தீர்மானித்தான்.
மறுநாள், சர்ட்டிபிகேட்டுகளுடனும், டாக்டர் கொடுத்த கவருடனும் கிளம்பினான். அண்ணாசாலையில் இருந்தது அந்த அலுவலகம். அது ஒரு பதிப்பகம் என்பதை போர்டு அறிவித்தது. வாட்ச் மேனிடம் விவரம் சொல்லி, அனுமதி வாங்கி, உள்ளே போய் ரிசப்ஷனில் காத்திருந்து, அசோக்குமாரை பார்த்தபோது, அந்த மனிதர் படு பிசி.
அவனை ஒரு செகண்ட் ஏறிட்டு, அவன் கொடுத்த கடிதத்தை பிரிக்காமலே ஓரமாக வைத்து, “”நீங்கள் பி.எஸ்.சி.,யா கம்ப்யூட்டர் தெரியுமா?” என்று கேட்டார்.
“”டேட்டா என்ட்ரி பண்ணுவேன்,” என்றதும், ஒருவரை அழைத்து, “”மல்லிகா சீட்ல இவரை உட்கார வைத்து, டி.டி.பி., செய்ய வேண்டியதை எடுத்துக் கொடுங்கள்,” என்று சொல்லி, “”அவர் கூட போங்கள்,” என்றார்.
“”சார்… நான் எதுக்காக வந்தேன்னா…” என்று ஆரம்பித்தான் ஆனந்த். முடிக்க விடாமல் தடுத்து, “”அர்ஜண்ட் ஒர்க். அதை முடிச்சுட்டு வாங்க, பேசலாம்,” என்று அனுப்பி விட்டு, அடுத்த அழைப்பை கவனித்தார்.
“சரி… வந்து விட்டோம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்…’ என்று, பின் தொடர்ந்தான் ஆனந்த். அங்கே நிறைய பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கேபினும், பரபரப்பாக இருந்தது. “சாவகாசமாக உட்கார்ந்து படிக்கும் புத்தகத்துக்காக, இவர்கள் எவ்வளவு பரபரப்பாக வேலை பார்க்கின்றனர்…’ என்று வியந்தபடி, ஆள் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.
அடுத்த நிமிஷம், ஒரு அடுக்கு பேப்பர்கள் அவன் முன் வைக்கப்பட்டது. அது ஒரு நாவலாகவோ, கட்டுரைத் தொகுப்பாகவோ இருக்கக் கூடும். “அடித்து முடிக்க நாலுநாள் ஆகும் போலிருக்கே…’ என்று நினைத்தான். கல்லூரி முடிந்த கையோடு, ஒரு இடத்தில் கொஞ்சம் நாள், டி.டி.பி., செய்திருக்கிறான். அந்த அனுபவத்தை மனதில் கொண்டு, விரல்களை சொடக்கு போட்டு, கம்ப்யூட்டரை உயிர்பித்தான்.
பக்கத்து ஆள் கொஞ்சம் உதவினார்.
டைப் செய்யத் துவங்கினான். சிறிது நேரத்தில் டீ வந்தது. அரைமணி நேர லஞ்ச் ப்ரேக்கில், சாப்பாட்டு பொட்டலம், இருப்பிடம் தேடி வந்தது. இரண்டு மணிக்கு ஒரு ஆள் வந்து, “”இவ்வளவுதானா முடிஞ்சது; கத்துக்குட்டியோ?” என்றார்.
சுருக்கென்று ரோஷம் வந்தது. விரல்களை விரைவுப்படுத்தினான். சாயங்காலத்துக்குள், முழுசும் முடியவில்லை என்றாலும், முக்கால் அளவு முடிந்திருந்தது. ஒரே மூச்சாக வேலை பார்த்ததில், முதுகு வலி!
கிளம்பலாம் என்றபோது, “”வேலை அர்ஜண்ட். முடிச்சு கொடுத்துட்டு போங்க. ஓ.டி., காசு உண்டு. டிபனும் கிடைக்கும்,” என்றனர்.
இரவு எட்டரைக்கு கிளம்பும்போது, “”உங்களுக்கு தமிழ் நன்றாக வருமா… வீட்டுக்கு கொண்டு போய், பிழை திருத்தம் போட்டுக் கொண்டு வாங்க,” என்று ஒரு கட்டையும், “பிழைத்திருத்தம் செய்வது எப்படி?’ என்ற கையேட்டையும் கொடுத்து அனுப்பினர்.
“இதெல்லாம் எதற்கு?’ என்று புரியாமலே கொண்டு போனான்.
கண் விழித்து, “ப்ரூப்’ படித்தான். அசந்து தூங்கினான். விடியலில் எழுந்தான். மீதி, “ப்ரூப்’ படித்து முடித்து, கொண்டு போனான். அங்கே டேபிளில் அவனுக்காக, ஒரு கட்டு பேப்பர் அமர்ந்திருந்தது. டைப் செய்வதும், ப்ரூப் திருத்துவதுமாக நாட்கள் ஓடின.
ஒரு நாள் அசோக்குமார் அழைத்து, ஒரு கவரை கொடுத்து, “”சதானந்தத்தைப் பாருங்கள்,” என்று அனுப்பினார்.
“”எத்தனை நாள் வேலை பார்த்தீங்க?” என்று கேட்டபடியே கவரை பிரித்து, ஒரு செக்கை எடுத்தார் டாக்டர்.
“”பத்து நாளுக்கு மேல இருக்கும் சார்.”
“”இந்த நாட்கள்ல உங்களுக்கு எத்தனை முறை கனவுகள் வந்தது. எத்தனை கோடி கொட்டியது?” என்று கேட்டார். அவன் யோசித்து, ஆச்சர்யப்பட்டான்.
“”சார்… வேலை நெருக்கடியில், எனக்கு கனவு காணவும் நேரமில்லாமல் போய் விட்டது. உழைக்கவும், தூங்கவுமே நேரம் சரியாக இருந்தது,” என்றான்.
“”புரிஞ்சுக்கிட்டீங்களா… சும்மாயிருக்கிறவங்க, எதுவும் செய்ய இயலாதவங்களுக்குதான், பகல் கனவும், அற்ப கற்பனைகளும் வரும். உழைக்கிறவர்களுக்கு அந்த அபத்தங்கள் நேராது…
“”உங்கள் கனவு நோய் தீர, இதுதான் வழின்னு புரிய வைக்கத்தான் அசோக்குமாரிடம் அனுப்பினேன். என் வைத்தியம் சரியாக வேலை செய்திருக்கிறது…
“”இந்த செக், பத்து நாள் உழைப்புக்கான சம்பளம். வாங்கிகிட்டு, இதே வேலையைத் தொடர்வதாக இருந்தாலும் சரி, வேறு வேலை தேடிக்கொள்வதாக இருந்தாலும் சரி; உடனே செய்யுங்கள். எக்காரணம் கொண்டும், சும்மா மட்டும் இருக்காதீங்க,” என்று அறிவுறுத்தினார்.
“”சார்… இந்த செக்கை உங்கள் கன்சல்டிங் பீசா வச்சுக்குங்க. எனக்கு இந்த வேலையே பிடிச்சிருக்கு. நான் கிளம்பறேன்… வேலைக்கு நேரமாச்சு,” என்று பகல் கனவு நோய்க்கு,
சரியான தீர்வை உணர்ந்தவனாக, உற்சாகத்துடன் க்ளினிக்கை விட்டு வெளியேறினான் ஆனந்த்.

– எஸ். சேதுபதி (பிப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *