கண்ணாடியின் பின் பக்கம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 3,501 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனித வர்க்கம் பரபரப்பான வாழ்க் கையை மேற்கொண்டு விட்டது. இதுவே கலியுகத்தின் முடிவு போலத் தோன்றுகிறது.

அடிப்படைப் பண்புகள், அடிப்படை நியாயங்கள் எல்லாம் தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்றாகிவிட்டன. தாய்மை தன் பரிபூரண ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதே குறைந்து விட்டது. கற்பு, அடக்கம். இவையெல்லாம் இலக்கியங்களோடு நின்றுவிட்டன.

ஹோட்டல்களிலும், தெருக்களிலும் ஆண்களும் பெண்களும் இனத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வாகனங்களின் புகை வானத்தை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் நாணயம் அடியோடு படுத்துப்போய் விட்டது.

பள்ளிகள், கல்லூரிகளில் ஒழுங்கீனம் வளர்ந்து விட்டது.

எல்லாமே போலித்தனம். மனித உடம்பில் பாதியும் போலி வேஷம்.

நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு…

நகரங்களும், கிராமங்களும் எவ்வளவு பரிசுத்தமாக இருந்தன, சென்னை நகரம் கூட எவ்வளவு அழகாகவும். அமைதியாகவும் காட்சியளித்தது. கிராமங்கள் எவ்வளவு நிம்மதியாக இருந்தன!

தேர் திருவிழா, திருமணம் எல்லாமே எவ்வளவு ஜாம் ஜாம் என்று நடந்தன!

பெரியவர்களுக்கு மரியாதை, கல்விக் கூடங்களில் பக்திப் பண்பாடுகள். காந்தி எப்போது ராமராஜ்யத்தை விரும்பினாரோ அப்போது கூடுமானவரை ராமராஜ்யமே நடந்து கொண்டிருந்தது. இப்போதோ?

என்னதான் வாழ்க்கை வசதிகள் பெருகட்டும், பழைய பண்பாட்டின் சுகம் வரவே வராது.

ஆயிரம் ஷவர்பாத்கள் கட்டினாலும் ஆற்றிலே குளிக்கும் சுகமாகுமா?

என்னதான் மின்சார விசிறி ஓடினாலும் வேப்ப மரத்துக் காற்றின் இனிமை வருமா?

போலித்தனமான நாகரிகத்தின் உச்சகட்டமே கலியுகத்தின் முடிவாக இருந்தால் கூட யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

நாகரிகத்தின் உச்சாணிக் கொப்பில் வாழ்ந்து பார்த்த அமெரிக்கர்கள் ஆன்மீகத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஆன்மீகத்தின் உச்சத்திலிருந்த இந்தியர்கள் ‘போலி நாகரிகத்தைப் புகலிடமாகக் கொண்டு விட்டார்கள்.

கட்டுகின்ற வீடுகள் எல்லாம் காலால் உதைத்தால் பொல பொலவென்று உதிர்ந்து விழும்.

தலையை மொட்டையடித்துக்கொண்டு வாழ்ந்த என் தாத்தாவை விட இன்றைய ஹிப்பித்தலையர்கள் ஆரோக்கியமாகவா இருக்கிறார்கள்?

ஒரு மாத்திரையும் பாராமல் கண்மாயில் குளித்துக் கரையில் உலாவிய என் தந்தையை விட நான் ஆரோக்கியமாகவா இருக்கிறேன்?

வாழ்க்கையைச் சுலபமாக்குவதற்காக வந்த வசதிகள் அதைப் போலித்தனமாக்கி விட்டன.

பெண்ணுக்குப் பெண்மையும் போய். ஆடவனுக்கு ஆண்மையும் போய், வெள்ளம் போகிற வேகத்தில் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறோம்.

‘அத்தனையும் மோசமானவை’ நான் மொத்தமாக ஒதுக்கிவிடவில்லை, சில பயனுள்ள வசதிகளும் வந்திருக்கின்றன. அவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் உலகம் அழிவை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.

எனது தலைமுறை முக்கால் தூரத்தைக் கடந்து விட்டது. நான் தப்பி விட்டேன்.

ஆனால் என் குழந்தைகள்…?

ஒரு இட்லி பத்து ரூபாய் விலையாவதை அவை பார்க்கப் போகின்றன. அச்சம், நாணம் இல்லாத உலகத்தில் அவை வாழப் போகின்றன.

தனி மனிதனின் சாப்பாட்டுச் செலவே மாதம் இரண்டாயிரம் ரூபாயை எட்டும் கோரத்தை அவை காணப் போகின்றன.

எல்லாமே தாறுமாறான ஒரு காட்டு மிராண்டிக் காலத்தை அவை எதிர்நோக்கி நிற்கின்றன.

என் பேரக் குழந்தைகள் அதிருஷ்டக்காரர்கள் : காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்து பார்க்கிற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கப்போகிறதல்லவா?

– 02-11-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *