கடிகார மனிதர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 8,580 
 
 

கூட்டம் ஆறு மணிக்கு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஐந்து மணிக்கே வந்து விட்டிருந்தார்கள். நேரம் பொன்னானது என்று தெரியாதவர்கள்.

அவர் மட்டும்தான் குறித்த நேரத்திற்கு வந்தார். மணி ஆறு அடிப்பதற்கும் அவருடைய கார் மண்டபத்துக்கு எதிரே வந்து நிர்ப்பதர்க்கும் சரியாக இருந்தது.

அன்று அவருக்குப் பாராட்டு விழா. கடிகாரத்தோடு ஓட்ட ஒழுகும் நெறியை மேற்கொண்டு ஒற்றை வினாடியும் வீணடிக்காமல், தம்முடைய தொழிற்சாலைகளையும் பிற நிறுவனங்களையும் அவர் கண்காணித்து வருவதுபற்றி அவருக்கு அந்தப் பாராட்டு விழா.

எளியவராய்ப் பிறந்து, கடிகாரம் பழுது பார்க்கும் வேலை ஏற்று, ஓய்வு நேரங்களில் மோட்டார் மெக்கானிக் பயிற்சி பெற்று, கடைபோட்டு அதைப் ம்பெரிதாக்கிப் பெரிதாக்கித் தொழிற்சாலையாக விரிவுபடுத்திக் கிளை நிறுவனங்களை அமைத்து, நாடு முழுவதிலும் பெயரை நிலை நாட்டிக் கொண்ட திறமையை உள்ளூரார் உரிமையோடும், பெருமையோடும் பாராட்டும் சிறப்புக் கூட்டம்.
‘கை ராசி உள்ளவர்; அவர் தொட்டதெல்லாம் பொன்’ என்று பாராட்டினர் ஊராட்சி மன்றத் தலைவர்.

‘கடவுள் பக்திதான் அவர் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் அடித்தளம் ‘ என்று புகழ்ந்தார் அம்மன் கோவில் தருமகர்த்தா.

‘பணிவுடையவர்,; இன்சொலார்; குணம் என்னும் குன்றேறி நிற்பவர்; கோட்டம் அகன்றவர்’ என்று அடுக்கிக்கொண்டே போனார் திருக்குறள் மன்ற அமைப்பாளர்.

உழைப்பால் உயர்ந்தவர்; முயற்சியால் முன்னேற்றம் கண்டவர் என்று வர்ணித்தார் தொழிலாளர் மன்றச் செயலாளர்.

வாழ்த்துப் பத்திரங்கள் வாசித்துத் தள்ளினார்கள், உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியருக்கு ஓர் அரிய வாய்ப்பு. ‘கடிகைக் காவல, கண்டார் ஏத்தும் குரிசில், ஆன்றோய், சான்றோய்’ என்று பலபட விளித்து ஒரு நீண்ட ஆசிரியப் பாவை அரங்கேற்றினார்.

ஈவு இரக்கமில்லாமல் அத்தனை மாலைகளைப் போட்டார்கள். அவ்வளவைய்ம் சிரமமில்லாமல் தாங்கிக் கொள்ள அவர் என்ன பிணமா?

களைப்புடனேயே எழுந்து, கடிகாரத்தில் கண்ணை வைத்துக்கொண்டு கச்சிதமாகப் பேசினார்.

‘அன்பர்களே, என்னுடைய முன்னேற்றத்துக்கேல்லாம் காரணம் என் வீட்டுக் கடிகாரம்தான். அதுதான் எனக்குக் குரு. நண்பன் எல்லாம்.

‘கடிகார முட்கள் நிலைதவறி வேகமாகவோ, மெதுவாகவோ நகர்ந்தால் எத்தனைப் பேருக்குக் குழப்பமும் தவறுதலும் ஏற்பட்டுவிடுகின்றன! வாழ்கை ஓட்டம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். பணம் இருக்கும்போது உற்சாகமும், அது குறையும்போது சோர்வும் இருக்கக் கூடாது. இது தான் நான் கற்ற முதல் பாடம்.

கைதட்டல் ஓய இரண்டு நிமிடங்கள் ஆயின.
அவர் தொடர்ந்தார்.

‘சிறிய முள் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானால், பெரிய முள் ஒரு பெருஞ்சுற்றுச் சுற்றிவர வேண்டியிருக்கிறது. தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு படி உயர வேண்டுமானால், மேற்பபடியில் இருப்பவர்கள் அவர்களுக்காக ஓடியாடித் தொண்டாற்ற வேண்டும். இது இரண்டாவது பாடம். என்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளும் கூட.

கை வலிப்பதையும் பொருட்படுத்தாமல் பேரொலி கிளப்பினார்கள் ஊர்ப் பொதுமக்கள்.

நன்றிக்கு இரண்டு வார்த்தைகள் சொல்லிப் பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் கடிகார மனிதர்.
அன்று இரவு தூக்கம் கொள்ளாமல் கடிகார மனிதரின் குறிக்கோளை எண்ணிப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தேன். நம் ஊரில் இப்படி ஒரு பெரிய மனிதர்! நினைக்க நினைக்க நெஞ்சம் பூரித்தது.
மறு நாள் காலையில் அவர் வீட்டுக்குப் புறப்பட்டேன். கோடி வீட்டு நண்பரையும் பக்கத்துத் தெரு பையனையும் உடன் அழைத்துக்கொண்டு போனேன். இரண்டு பெரும் வேலைக்காகவும், கடன் உதவிக்காகவும் என்னிடம் சொல்லி வைத்தவர்கள். நானும் ஒரு பெரிய முள் போலத்தான் சுழன்று வந்தேன். எந்தச் சிறிய முட்களையும் நகரவைக்க முடியவில்லை.

கடிகார மனிதர் வீட்டுவாசலை மிதித்தோம். வேலையாளிடம் எங்கள் வருகையைத் தெரிவித்துவிட்டுக் காத்திருந்தோம். சரியாக ஐந்து நிமிடங்கள் கழிந்தன. மணி எட்டு ஐம்பத்தைந்து. கடிகாரர் வந்தார். உடலை வளைத்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தோம்.

‘சிறிய முள் போன்றவர்கள்’ என்று நண்பர்களைச் ச்ருர்க்கமாக அறிமுகப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே,

‘ நானே ஒரு சிறிய முள். ஒரு முக்கிய விஷயமாகப் பட்டணத்திலிருக்கும் ஒரு பெரிய முள்ளின் உதவியை நாடி இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு, எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறி விட்டார்..

பேசவும் முடியாமல், நகரவும் முடியாமல் நின்று விட்டேன்.

ஹாலுக்குள்ளே கடிகாரம் மணி அடிக்கத் தொடங்கியது. அடித்துக் கொண்டே இருந்தது. பன்னிரெண்டு முற்றி அடித்து ஓய்ந்தது.
மணி பன்னிரெண்டா? இருக்க முடியாதே! ,கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. ஹாலுக்குள்ளே எட்டிப் பார்த்தேன் அந்தச் சுவர்க்கடிகாரத்திலும் மணி ஒன்பதுதான் என்று முட்கள் காட்டிக்கொண்டிருந்தன.

‘அந்த கடிகாரம் அப்படித்தானுங்க! அது காட்டுகிறது ஒரு மணியாக இருக்கும் அடிக்கிறது இன்னொன்னா இருக்கும். என்றார் அங்கே நின்று கொண்டிருந்த பணியாளர்.
(1967)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *