மாரிமுத்துவுக்கு வயது அறுபது. அவருக்கு ஒரே சந்தோஷம். தேர்தல் வருகிறதாம்… தேர்தல் வந்தால் அவருக்கு குஷிதான். சுறுசுறுவென இருப்பார். எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு சளைக்காமல் செல்வார். யார் நிறைய குடிக்க, சாப்பிட பிரியாணிபோட்டு அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று மொத்தமாக ஓட்டுப் போட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு ஆவலுடன் காத்திருப்பார். இது அவருடைய நாற்பது வருடப் பழக்கம்.
அதற்காக மாரிமுத்து மோசமானவர் என்று நினைக்க வேண்டாம். பொய், திருட்டு, ஏமாற்று என்பதெல்லாம் அறவே அவரிடம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கிராமத்தில் வசிக்கும் ஒரு வெள்ளந்தியான மனிதர்.
இவரை மாதிரி ஊரகங்களிலும், குக்கிராமங்களிலும் வசிப்பவர்கள் கும்பலாகச் சென்று ஒரே கட்சிக்கு ஓட்டுப் போடும் பொம்மைகள் நம்மிடையே அதிகம். இக் கிராமங்களில் வசிக்கும் சில அரசியல் பணக்காரர்கள் சொல்லும் சொல்லுக்கு மாரிமுத்து போன்றவர்கள் கட்டுப் படுவார்கள். பெரிய, பெரிய கட்சிகள் இம்மாதிரியான பணக்காரர்களை தேர்தல் நேரங்களில் நன்கு ‘கவனித்து’ தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளும்.
ஓட்டுப்போடும் சராசரி தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் என்பது ஒரு பெரிய கோவில் திருவிழா மாதிரி. அவர்களுக்கு தேர்தல் ஒரு திருவிழா, ஒரு கேளிக்கை. அவ்வப்போது வரும் தேர்தல்கள் – அது சட்டசபையோ, பாராளுமன்றமோ அல்லது உள்ளட்சியோ மக்கள்கூடி குதூகலிக்கும் ஒரு பெரிய திருவிழா. அடிக்கடி பணமும், சரக்கும் கிடைக்கும் திருவிழா, அவ்வளவுதான்.
கோவில்களில் மூலவர்கள், உற்சவ மூர்த்திகள் இருக்கிற மாதிரி, அரசியல் கட்சிகளிலும் மூலவ உற்சவ மூர்த்திகள் உண்டு. அதிமுகவின் மூலவர் ஜெயலலிதா. அவருக்கென்று தனியாக குடும்பம் இல்லாததால் அப்போதைக்கு அவருடன் எவர் அதிகார மையத்தில் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் உற்சவமூர்த்திகள். மற்றவர்கள் உற்சாக மூர்த்திகள், நிறைய பணம் புரளுவதால்.
திமுகவின் மூலவர் கருணாநிதி. உற்சவ மூர்த்தி ஸ்டாலின். இதர சுற்றுத் தேவதைகளான கனிமொழி, அன்பழகன், துரைமுருகன் போன்றோர் தேர்தல் காலங்களில் சகல ஊர்களுக்கும் எழுந்தருளிப் பிரச்சாரம் செய்வார்கள்.
அரசியல் ஆகமவிதிப்படி மூலவரும்கூட ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யலாம். இந்த விதிப்படிதான் ஜெயலலிதாவும், கருணாநிதியும் பல ஊர்களிலும் எழுந்தருளி மக்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்தக் காட்சிகளை காண லட்சக் கணக்கான தமிழகத்தின் வாக்காள பக்தர்கள், இருக்கிற வேலையையெல்லாம் விட்டுவிட்டு பதை பதைக்கிற வெய்யிலில் மூலவர்களை மெய்ம்மறந்து திரளாகக் கூடி, கண்டு ரசித்து புளகாங்கிதமடைவார்கள். சிலர் உயிரிழக்கும் அவலங்களும் அரங்கேறும். பின் என்ன மூலவர்களை தரிசிப்பதென்றால் சும்மாவா?
கோவில்களில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை பிரசாதம் தருவதைப்போல் இந்த மூலவர்கள் மிக்ஸி, டி.வி., கிரைண்டர் என்று இலவசங்களைப் பட்டியல் இட்டு பக்தர்களை தன் வசப்படுத்தும் அழகே அழகு.
இந்த மூலவர்கள் பிரசாரம் பண்ண வரும் ‘கெத்து’ இருக்கிறதே ! காணக் கண்கோடி வேண்டும். ஹெலிகாப்டர்கள் என்ன? ஏசி, கக்கூஸு, படுக்கை போன்ற நவீன வசதிகளுடன் சொகுசு பிரச்சார வேன்கள் என்ன? என்று வாக்காளர்களைப் பிரமிக்க வைத்து விடுவார்கள்.
இந்த தேர்தல் திருவிழாவில் மக்களை ஜாலியாக இருக்க விடாமல், அவ்வப்போது உள்ளே புகுந்து பணம் தராதே, பணத்தை எடுத்துக்கொண்டு போகாதே, சாராய சப்ளையை நிறுத்து என்று தேர்தல் கமிஷன் என்கிற ஒரு அமைப்பு தானும் இருப்பதாக பம்மாத்து காட்டும். அதெல்லாம் சும்மா. அதன் பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் தேர்தல் கமிஷன் நினைவே அனைவருக்கும் வரும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் அந்த ஊரின் செல்வாக்கான நபர் ஆடலரசன் மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்தார்.
“எல மாரி….சுகமா இருக்கீயளா?” என்று வீட்டிலிருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டு உரிமையுடன் கேட்டார்.
மாரிமுத்து தலையைச் சொறிந்துகொண்டு அவரைப் பார்த்து சிரித்தான்.
“சரி…சரி நாளைக்கி காலைல நம்ம பால்கார ரத்தினசாமி அரை லிட்டர் பால் ஊத்திட்டு, உன் கைல….ம் வீட்ல எத்தனை பேர்ல?”
“நாலுபேரு சாமி”
“கைல நாலாயிரம் தருவான்….சத்தம் போடாம வாங்கிகிட்டு, நம்ம வண்டி பத்து மணிக்கு வரும், போய் போட்டுட்டு வந்துடுங்கல…..உனக்குத்தான் இது ஒண்ணும் புதுசு இல்லியே”
“அது சரி சரக்கு அடிக்க எங்க வரணும் சாமி?”
“சாயங்காலம் ஏழு மணிக்கு கிழக்க நம்ம பணங்கூடலுக்கு உன் மவனோட வந்துரு”
ஆடலரசன் எழுந்து அடுத்த வீட்டிற்கு சென்றார். மாரிமுத்துவின் கண்கள் மின்னின. அடுத்த நாள் பத்து மணிக்கு வீட்டைப் பூட்டிக்கொண்டு தன் குடும்பத்துடன் மாரிமுத்து ஓட்டுப் போடச் சென்றான்.
-௦-
அன்று காலை நரேன் மெதுவாக பத்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்தான். தேர்தல் தினம் என்பதால் அன்று அவனுடைய ஐ.டி கம்பெனியில் ஓட்டுப் போடுவதற்காக விடுமுறை அளித்திருந்தார்கள். அவனுக்கும் அவன் மனைவிக்கும் என இரண்டு ஓட்டுக்கள்.
மனைவியிடம் “மாயா, பதினோரு மணிக்கு போய் ஓட்டு போட்டுட்டு வந்துரலாம்” என்றான். அவள் உற்சாகமாக “நான் ரெடி நீங்கதான் கூட்டிட்டு போகணும்” என்றாள்.
பல் தேய்த்துவிட்டு வந்து டி.வி. பார்த்தான். டிபன், காபி சாப்பிட்டதும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது.
“மாயா, இந்த வெய்யில்ல இப்ப போக வேண்டாம்….வெயில் தாழ நான்கரை மணிக்கு போகலாம்” என்று சோம்பல் முறித்தான்.
பிறகு தன் லாப்டாப்பைத் திறந்துவைத்து முகநூலில் லியித்தான். முகநூலில் இந்த கட்சி இப்படி அந்த கட்சி அப்படி என்று நரேன் அடித்த கமெண்டுகளுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்.
.
மணி ஒன்றானது. மாயா சமையல் தயார் செய்து கொண்டிருந்தாள். நரேன் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு பாட்டில் கிங் பிஷர் பீர் எடுத்து ஒரு கிளாசில் விட்டுக் கொண்டு மெதுவாக உறிஞ்சிக்கொண்டே “வாவ்….இந்த சம்மருக்கு சில்டு பீர் என்ன சுகம்!” என்று சொல்லிக்கொண்டான்.
இரண்டு மணிக்கு இருவரும் சாப்பிட்டதும், “மாயா பீர் சாப்பிட்டது அப்படியே கண்ண சொருகுது….ஒரு குட்டித் தூக்கம் போடறேன்….நாலு மணிக்கு எழுப்பு” என்று ஏசியை போட்டுக்கொண்டு தலையனையை அணைத்தபடி தூங்கினான்.
மாயாவும் உண்ட களைப்பில் ஏசியின் இதமான குளிரில் தூங்கினாள்.
மாலை ஆறு மணிக்கு அவர்கள் வீட்டில் வேலை செய்யும் தவமணி வந்து காலிங்க்பெல் அடித்தாள்.
மாயா குற்ற உணர்வுடன் நரேனை எழுப்பி “என்னங்க மணி ஆறு……நாம ஓட்டே போடலியே” என்றாள்.
“அதனாலென்ன நம்ம ரெண்டு ஓட்டா முடிவை மாத்திடப் போகுது” என்று புரண்டு படுத்தான்.
நரேன் படித்த சோம்பேறி. ஓட்டுப் போடும் உரிமையைக்கூட நிலை நாட்ட மெனக்கிடாத முட்டாள். இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த ஒரு கட்சியைப் பற்றியும் முகநூலில் முந்திரிக் கொட்டைத்தனமாக கமென்ட் அடிக்கும் தார்மீக உரிமையை இழந்தவன். இதைக்கூட அவன் உணர மாட்டான்.
இந்த மாதிரி முகநூல் அறிவுஜீவிகளுக்கு தன் அபார்ட்மென்ட், தன் அலுவலகம், தன் லாப்டாப், தன் கார், மொபைல், டி.வி. என்கிறதைத் தாண்டி எதுவும் தெரியாது. ஊரகங்கள், பணங்கூடல், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கம்மாய், குளம், ஏரி, வாய்க்கால் தகிக்கும் வெய்யில் என எதுவும் தெரியாது.
,
பில்டரிடம் ஒன்றரைகோடி கொடுத்து வாங்கிய தன் அபார்ட்மென்டுக்கு – குளிப்பதற்கு டாங்கர் லாரியின் தண்ணீர் எங்கிருந்து வருகிறது, குடிக்கும் ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில் எங்கிருந்து வருகிறது, விலை கொடுத்து வாங்கும் அந்த தண்ணீர் எவ்வளவு சுத்தமானது என்பதுகூட தெரியாமல் வாழும் ஒரு வறட்டுக் கெளரவமான வாழ்க்கை. உண்மையில் நரேன் குளிக்கும் தண்ணீர், டாங்கரில் கொண்டுவரப்படும் ஊருக்கு வெளியே தேங்கியிருக்கும் ஏரியின் சாக்கடைத் தண்ணீர். அவன் குடிக்கும் தண்ணீரோ எருமை மாடுகள் வசிக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் போர்வெல் தண்ணீர். தண்ணீர் சப்ளை செய்பவனுடன் பில்டிங் செக்யூரிட்டி உடந்தை. இதைக்கூட கண்டுபிடித்து நிறுத்தும் துப்பில்லாத ஜன்மம் நரேன்.
ஆனால் சமுதாயத்தின் பார்வையில் நரேன் யோக்கியர்…..நிறைய படித்தவர்.
மாரிமுத்து போன்றவர்கள் ஓட்டுப் போடும்போது ஆட்டுவிக்கப்படும் பொம்மலாட்டப் பொம்மைகளாக இருந்தாலும், தவறாது தன் ஜனநாயகக் கடமைகளை செய்பவர்கள். வெள்ளந்தியானவர்கள்.
இம் மாதிரியானவர்களை வைத்துக்கொண்டு சிறந்த ஜனநாயகத்தை நாம் எங்கு போய்த் தேர்ந்தெடுப்பது?