உயிர் மூச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 8,697 
 
 

அந்த அறை மிதமாகவே குளிரூட்டப்பட்டிருந்தது.மெல்லிய காதைத் துளைக்காத இசை வழிந்து பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. முக்கிய கூட்டங்கள் எல்லாம் கூட்டப்படும் அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மூன்றாம் மாடி அறைதான் இப்போது நாம் காண்பது. விடுதியின் ரம்பைகளும் ஊர்வசிகளும் விலையுயர்ந்த பட்டுப் புடவை உடுத்தி, நுனி நாக்கு ஆங்கிலத்தில், கூட்டத்திற்கு வருகை கொண்டிருந்த வயதான மற்றும் நடுத்தர வயது, தொப்பை பிரமுகர்களை மலர்ந்த முகத்துடன் இருகரம் குவித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். பயணக் களைப்பில் இருந்த தலைவர்களுக்கு அருமையான வெளிநாட்டு மதுபானம் சிறிதே வழங்கப்பட்டது. கூட்டப் பொருள் மிக முக்கியமானதால் அதிகம் வழங்கவில்லை. அதற்கு ஈடு செய்யும் பொருட்டு முழு அளவு போத்தல் கூட்டம் முடிந்த பின் தரப்படும் என்பதை மிகப் பணிவோடு ஆயிரம் மன்னிப்புகளுடன் திலோத்தமைகள் மைக்கில் மிழற்றிக் கொண்டிருந்தனர். ஒலி பெருக்கியில் கூட்டம் சரியாக காலை பத்து மணிக்கு ஆரம்பம் என்றது கண்ணில் படாத ஒரு குயில்.

மனிஸ்தான் நாட்டின் கிட்டத்தட்ட எல்லா தேசியத் தலைவர்களும், மாநில தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த அந்த கூட்டத்தை நடத்துவது பிரபலமான பன்னாட்டு நிறுவனம். கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு அழைப்பு தரப்பட்டிருந்தது. வெளி மாநிலத் தலைவர்களுக்கு அருகேயே வேறு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் அறைகள் இரு வாரங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. மனிஸ்தான் நாட்டின் தலைவர்கள் “ரொம்ப நல்லவர்கள்”. பாராளுமன்ற கூட்டத்தை அடிக்கடி தவற விடுபவர்கள் என்றாலும் இந்த மாதிரி கூட்டங்களைத் தவற விட்டதே இல்லை. கூட்டத்திற்கு தலைமை பன்னாட்டுக் கம்பெனியின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுத்துறையின் முதன்மை விஞ்ஞானி ராபர்ட் மூர். சிறப்பு விருந்தினராக டிங்காடு நாட்டின் அதிபர். கூட்டம் நடைபெறும் விடுதி மற்றும் தங்கும் விடுதிகளைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு, நான்கடுக்கு காவல். ஊடக நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்த நிருபர்களுக்கு அன்பான எச்சரிக்கையும், விலையுயர்ந்த பரிசும் கிடைத்தன. மாலையில் அவர்களின் அதிபர்கள் கூட்டத்தில் அவர்களுக்கு தக்கவாறு விளக்கப்படும் என்று பன்னாட்டு நிறுவனத்தின் தொடர்பு அலுவலர் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தார்.

கூட்ட மேடையில் மொத்தமே நான்கு இருக்கைகள். மனிஸ்தான் அதிபர்,பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், நிறுவனத்தின் விஞ்ஞானி ராபர்ட் மூர் மற்றும் டிங்காடு நாட்டு அதிபர் ஆகியோருக்கு மட்டுமே மேடையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடக்கவிருக்கும் கூட்டத்தில் எப்படி விவாதம் நடத்த வேண்டும் என்ற சிந்தனையுடன் மிகச் சிலர். பெரும்பாலோர் மதுபானத்தின் சந்தோஷத்தில் மிதந்தபடி இருந்தனர்.

சரியாகப் பத்து மணிக்கு மேடைக்கு வந்த நால்வரையும் முகமன் கூறுமுகமாக ஒரு தேவதை வலது புற மைக் முன் ஆஜரானது. கையசைத்தபடி அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும், வந்திருந்த தலைவர்களும் அமர்ந்தனர். தேவதை அனைவரையும் மனிஸ்தான் நாட்டின் நாட்டுப் பண்ணுக்கு இசைக்கப் படப்போவதால் மரியாதை நிமித்தம் அனைவரையும் எழுந்து நிற்கப் பணித்தது. நாட்டுப்பண் முடிந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தததும் , திடீரென இடது புற மைக்கிற்கு மற்றொரு தேவதை வந்து அறிமுகப் படலத்தை கொஞ்சிப் பேசியது.ஒவ்வொரு அறிமுகத்திற்கும் பின்விருந்தினர்கள் தங்களுக்கு முற்றிலும் பழக்கமற்ற முறையில் மெல்லக் கை தட்டினர்.

முதலில் பன்னாட்டு நிறுவனத்தலைவர் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் பூங்கொத்தும் நினைவுப்பரிசாக ஒரு வைர மோதிரத்தையும் வழங்க ஏதுவாக வெள்ளித்தட்டில் பட்டுத் துணியில் வைத்து பட்டத்தரசி போன்ற உடை அணிந்த மற்றொரு புது தேவதை வந்தது. வந்திருந்த விருந்தினர்கள் தங்கள் மகள் வயதை விடக் குறைவான வயதுடையஅந்த பெண்களை ரசித்தவாறே பக்கத்தில் உள்ளோரிடம் மெல்லிய காமெண்ட் அடித்துச் சிரித்தபடி இருந்தனர்.

இப்போது வெளிச்சம் குறைக்கப்பட்டு மேடையின் மீது மட்டும் ஒளி ஸ்பாட்டிங்க் செய்யப்பட்டது. பன்னாட்டு கம்பெனியின் சார்பில், டிங்காடு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டார். அவர் வளர்ந்து வரும் நாடுகளின் பிரச்சனைகளை, அவற்றை எப்படி தனது நாடு அணுகுகிறது என்று சுருக்கமாகப் பேசினார். அடுத்ததாக ராபர்ட் மூர் பேச அழைக்கப்பட்டார். அவர் பேச்சு நல்ல உயர் தரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. நாகரீகமான வார்த்தைகள் ஆனால் பயமுறுத்தும் கவலைகள் கலந்திருந்தது. பவர் பாயிண்ட், குறும் படங்கள் என்று தெள்ளத்தெளிவாக காற்று எப்படி எல்லாம் மாசடைகிறது என்று ஆரம்பித்து சிறிது சிறிதாக அதன் விளைவுகளைக் கூற ஆரம்பித்தார்.

புள்ளிவிவரங்களுடன் அவர் பேசப் பேச என்னவோ அந்த அறையை விட்டு வெளியே வந்தாலே சுவாசிக்க முடியாது இறந்து விடுவோம் என்ற பிரமை உண்டாக்கினார். அவர் பேச்சின் சாராம்சம் இதுதான். இப்போது உலகின் சுவாசிக்கும் காற்று சுத்திகரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது சுவாசிக்கப்படும் காற்றில் எழுபத்தைந்து சதவீதம் சுவாசிக்கத் தகுதியற்றது. இப்படி காற்றை நாசமாக்கியதில் பெரும் பங்கு மனிஸ்தான், டிங்காடு போன்ற மூன்றாம் உலக நாடுகள் என்றும், அவர்களின் வரைமுறையற்ற மக்கள் தொகை பெருக்கமே இதற்கு அடிப்படைக் காரணம். சுவாசிக்கும் மக்களால் சமுதாயத்தின் பொதுக் காற்று மாசாகிறது. ஆகவே ஒன்று மக்கள் தொகையை குறைக்க வேண்டும் அடுத்தது காற்றின் பயன் பாட்டை முறைபடுத்திக் குறைத்தல். இதில் முதல் சொன்ன மக்கள் தொகை குறைப்பு ஏற்கெனவே நடைமுறைச் செயல் பாட்டில் உள்ளது. அதனால் இனி இரண்டாவது பற்றிய யோசனை அவசியமாகிறது. இந்த இரண்டாவது யோசனையை செயல்படுத்தாவிட்டால் இன்னும் நூறு ஆண்டுகளில் பிறக்கும் எந்த உயிருக்கும் சுவாசிக்க நல்ல காற்று இராது. இதை கருத்தில் கொண்டு கம்பெனி உருவாக்கியுள்ள கருவிதான் ஏர் மீட்டர் மற்றும் ப்யூரிபையர்(AIR METER AND PURIFIER). நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் வருங்கால சந்ததிக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற அர்பணிப்பு உணர்வுடன் இக் கருவியை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நாட்டு அரசுகளும் இக் கருவியை பயன்படுத்த ஆதரவு தரும் பட்சத்தில் மிகவும் மலிவான தொகைக்கு தயாரித்துத் தர முடியும். இக் கருவி மூலம் ஒரு மனிதன் நூறாண்டு காலம் வாழ சராசரியாக எத்தனை முறை மூச்சு விடத்தேவை இருக்குமோ அதற்குச் சமமான மூச்சு விட அனுமதி தரப்படும். அது இரு பிரிவாக பிரிக்கப்படும். ஒன்று இலவச மூச்சுக்காலம் மற்றது கட்டண முச்சுக்காலம். இலவச மூச்சுக்காலம் என்பது முதல் ஐம்பது ஆண்டுகள். மனிதனின் ஐம்பதாவது வயதில் அவனுடன் இந்த மீட்டர் இணைக்கப்படும். அப்போதிருந்து அவன் விடும் மூச்சுக்கள் எண்ணப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மனிதன் சராசரியாக விடவேண்டிய நிர்ணயிக்கப்பட்ட மூச்சுகள் எண்ணிக்கையை விட அதிகமாக விடும் மூச்சுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். இந்த கருவியை கைக்கு அடக்கமாகவே செய்திருப்பதால் எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இதனால் மக்கள் விடும் மூச்சுக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டிய பட்சத்தில் கட்டணம் செலுத்தி மூச்சு வாங்கிக் கொள்ள முடியும். ஆன்லைனில் டாப் அப் கூட செய்யும் வசதி தரலாம். இத்தனை வசதிகள் உள்ளடக்கியும் கருவி சுமாராக ஐநூறு ரூபாய் மதிப்புக்கே தரப்படும்.

மேற் சொன்னவாறு அமைந்த பேச்சை கேட்ட தலைவர்கள் தங்கள் சந்தேகங்களை உணவு இடைவேளைக்குப்பின் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு, தரம் மற்றும் பரிமாறிய தேவதைகளின் இன் சொல் எல்லாம் அவர்கள் சொல்லுவதும் சரிதானே என்ற மனோபாவத்தை விருந்தினர்களிடையே விதைத்தது. மதியம் உண்வு இடை வேளைக்குப் பின் கருவியின் செயல் பாடு குறித்த சிறிய டிமான்ஸ்டிரேஷன். அதன் பின் கடைசியாக பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். அதில் மிக முக்கியமான செய்தி ஒரு கருவிக்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு மனிஸ்தானின் மக்கள் தொகையின் அளவுக்கு தலா ஒரு ரூபாய் வீதம் கமிஷன் அவரவர் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதே. இதன் பின்னர் சந்தேகம் யாரும் கேட்காத நிலையில் அடுத்த நிகழ்வாக மனிஸ்தானின் அதிபரின் பேச்சு அமைந்தது. அதில் அவர் இந்த அருமையான தன் கனவுத்திட்டத்தை செயல் வடிவம் தந்த நிறுவனத்திற்கு தந்து பாராட்டுகளைத் தெரிவித்தார். இறுதியாக மனிஸ்தான் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு கூட்டம் இனிதே முடிவுக்கு வந்தது.

மாலையில் நடந்த அனைத்து ஊடகங்களின் தொழில் அதிபர்களின் கூட்டத்தில் அவர்களுக்கும் மனிஸ்தானின் மக்கள் தொகையின் அளவுக்கு தலா ஐம்பது காசு வீதம் கமிஷன் அவரவர் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தி விருந்தில் சொல்லப்பட்டது.

மறுவாரம் பாராளுமன்றம் கூடியபோது மனிஸ்தான் அதிபர் காற்று மாசடைவது குறித்து கவலை தெரிவித்தார். பன்னாட்டு நிறுவங்களின் துணையுடன் இந்த இடரை எதிர் கொள்ளப் போவதாக அறிவித்தார். அது குறித்த மசோதா பலத்த வரவேற்புடன் ஒப்புக்கு ஓரிரு விவாதங்களுக்குப்பின் நிறைவேறியது. மறுநாள் வெளியான எல்லா பத்திரிக்கைகளும் இந்த திட்டத்தை பாராட்டித் தீர்த்தன. அந்த ஆண்டே இது சம்பந்தமான சட்ட வரைவுகள்முடிவாக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டே மனிஸ்தான் முழுவதும் கிட்டத்தட்ட முப்பது கோடி மூச்சு மீட்டர்கள் விற்பனை ஆயின. மூச்சு மீட்டர் வாங்க வங்கிகள் சுலபத்தவணையில் கடன் ஈந்தன. மூச்சு மீட்டர் வாங்கியவர்களுக்கு கூடுதல் சலுகையாக வாழ்வு வரி (Living Tax) முற்றிலுமாக நீக்கப்பட்டது என்பது எல்லா ஊடகங்களாலும் பாராட்டப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *