உன்னை விட மாட்டேன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 3,845 
 

என் பெயர் பஞ்சாபகேசன். கொஞ்சம் பழமையான பெயர்தான். பஞ்சு என்று கூப்பிட்டுக்கொள்ளலாம்.

ஆளும் அந்தகாலத்து மனுஷன் தான்.

வேட்டி, சட்டைதான். நான் பார்க்கும் சரக்கு மாஸ்டர் ஊத்தியோகத்துக்கு இது போதாதா?.

சரக்கு மாஸ்டர் என்று ஏன் பெயர் வந்ததோ தெரியாது. ஆனால் உண்மையிலேயே எனக்கு நல்ல சரக்கு இருப்பதால்தான் மயிலை மெஸ்ஸில் பத்து வருஷமாய் மணக்க மணக்க சமைத்துப் போட்டுக் கொண்டு குடும்பத்தை ஓட்டிக்கொண்டு வருகிறேன்.

சாப்பாட்டில்தான் உப்பு காரம் இருக்கிறதேயொழிய வாழ்க்கை உப்புசப்பில்லாமல். வேலை, வீடு, குழந்தைகள் நடுநடுவே மனைவி. கைக்கும் வாய்க்குமான போராட்ட வாழ்க்கை.

மயிலாப்பூர் அடையவளஞ்சான் தெருவில்தான் முதலில் குடியிருந்தோம்.

இப்போது நங்கநல்லூர்.

ஆனாலும் நான் மனதளவில் இன்னும் மயிலாப்பூர்வாசிதான்.

நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். சென்னை மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் காலகாலமாய் வசித்தவர்கள் நாட்டு விசுவாசத்துக்கு இணையான விசுவாசத்தை இந்த இரண்டு இடத்திலும் வைத்திருப்பார்கள்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இன்றைக்கு அறுபத்துமூவர் உற்சவம்.

சாதாரண நாட்களிலேயே கூட்டம் அப்பும் மயிலாப்பூரில் பங்குனி மாசம் வரும் அறுபத்து மூவருக்கு கூட்டம் வராமலிருக்குமா?

அந்த காலத்தில் பாட்டி சொல்லுவாள்.

“உன்ன அறுபத்து மூவர் திருவிழால கண்டெடுத்தோம்டா…”

நானும் நம்பிக்கொண்டு நிறைய நாள் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதிருக்கேன். நிறைய குழந்தைகள் நிஜமாகவே காணாமல் போனதுண்டு.

அறுபத்து மூவர்…

மயிலாப்பூர்வாசிகளின் உயிர் நாடி. காணக் கண் கோடி வேண்டும். பங்குனி மாசம் வரும் பண்டிகை.

காபாலீஸ்வரர் கோவிலிலிருந்து தம்பதி சமேதராய் கிளம்புவார் ஈசன்.

முன்னால் விநாயகர், சுப்ரமணிய சுவாமி, முண்டக்கண்ணி மற்றும் கோலவிழி அம்மன், பின்னால் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பின்னோடு மீதியுள்ள சைவக் குரவர்கள்.

இதில் வைரத்தால் இழைத்த சுப்பிரமணியன் மட்டும் சிந்தாதிரிப்பேட்டடையிலிருந்து வருவாராம்!

இன்றைக்கு அறுபத்து மூவர்…

நான் வேலை பார்ப்பது மயிலை மெஸ்ஸில். ஆனால் வீட்டுக்கு போகும்போது தினமும் கற்பகம் மெஸ்ஸில் அடை, அவியலோ, மெது வடையோ அல்லது ரவா தோசையோ சாப்பிடாமல் வீட்டுக்கு திரும்ப மாட்டேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் துரோகி என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. நீங்களும் கற்பகம் மெஸ்ஸில் ஒரு தடவை சாப்பிட்டால் காலத்துக்கும் அதற்கு அடிமையாகி விடுவீர்கள்.

எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம்? என் தாயார் செல்லம்மா ஒரு சமையல்காரி. யாரும் சமையற்காரியாய் பிறப்பதில்லை. அம்மா வேலைக்குப் போயே தீர வேண்டுமென்ற கட்டாயம். அம்மாவுக்கு தெரிந்ததெல்லாம் சமையல் ஒன்றுதானே. சமையல் என்று சாதாரணமாய் ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நளபாகம் கைப்புண்ணியம். என்ன பெயர் சொன்னாலும் அம்மா சமையல் அக்கம்பக்கத்தில் மகா பிரசித்தம்!

ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே ஆமவடை, கீரைவடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி என்று ஆரம்பித்த மெஸ் சீக்கிரமே ‘மயிலாப்பூர் செல்லம்மா மெஸ்’ என்று பிரபலமானது. நான்தான் அம்மாவுக்கு எல்லாமே. அரைத்து, கரைத்துக் குடுத்து, வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிக் கொடுத்து, விநியோகம் வரை பார்த்துக் கொள்வேன். அப்பா?

இருந்தார், அத்தனை சமர்த்து போதாது. அசடு என்று சொல்ல மனம் வரவில்லை. வெத்திலையைக் குதப்பிக்கொண்டு, வாசலில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டு, மூன்று வேளையும் தவறாமல் சாப்பிடுவதோடு வேலை முடிந்தது என்று நினைப்பவர். என் தாயார் மாதிரி உலகத்தில் ஒருத்தி இருக்க மாட்டாள்!

எனக்குத் தெரிந்து அப்பாவை ‘தள்ளி நில்லு’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பாளா? இப்போ என்ன அம்மா புராணம் என்கிறீர்களா? இந்தக் கதைக்கு முக்கிய சம்பந்தம் இருப்பதால்தானே இத்தனை தூரம் பேசுகிறேன்!

சரி, இப்போ கதைக்கு வருவோம்.

நியாபகம் இருக்கிறதா?

இன்றைக்கு அறுபத்து மூவர். எள் போட்டால் எண்ணெய் என்பார்களே. அத்தனை கூட்டம்.

நான் கற்பகம் மெஸ்ஸில் இரண்டு ரவா தோசை சாப்பிட்டுவிட்டு அப்படியே மாட வீதியில் சுவாமியை தரிசித்து விட்டு பொடி நடையாய் (பஸ்ஸையெல்லாம் திருப்பி விட்டிருந்தார்கள்) அடையார் டெர்மினசிலிருந்து பழவந்தாங்கல் பஸ்ஸைப் பிடிக்க ஏற்பாடு. எனக்கு இன்றைக்குக்குத்தான் சம்பளம் குடுத்திருந்தார்கள். முதலாளி என்றைக்கு மனது வைக்கிறாரோ அன்றைக்குத்தான் எனக்கு முதல்தேதி.

என் பர்ஸையும் சம்பளம் பணத்தையும் ஒரு மஞ்சப்பையில் சுருட்டி பத்திரமாய் இடுக்கிக் கொண்டு ‘சிவ…சிவா…’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளும்போது, பின்னால் ஏதோ கரப்பான்பூச்சி ஊறுவதுபோல இருந்தது. தட்டிவிட்டேன். ஏதோ எண்ணத்தில் இரண்டு கையையும் ‘சிவ..சிவா..’ என்று மேலே தூக்கினவன் ஒரு நிமிடம் பையை நழுவ விட்டிருப்பேன் போலிருக்கிறது. அதற்குள் சுதாரித்துக் கொண்டு பிடிக்கப்போனவன் கொஞ்சம் நிலை தடுமாறி விட்டேன்!

என் பையை யாரோ பலவந்தமாய் பிடுங்குவது தெரிந்ததும் ‘திருடன்..திருடன்..’ என்று கத்தினேன்.

யார் காதிலாவது விழுந்தால் தானே!

பின்னால் திரும்பினவன், ஒருவன் மஞ்சள் நிற பனியனும் நீல கட்டம் போட்ட லுங்கியும் கட்டிக்கொண்டு ஓடத் தயாராக இருந்ததை கவனித்து விட்டேன்!

கையில் என் மஞ்சப்பை!

எட்டி அவன் பனியனை கெட்டியாகப் பிடித்து இழுத்தேன். திமிறிக்கொண்டு ஓடுகிறான். நான் விடவில்லை, கூட்டத்தில் மறைவதும் தெரிவதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். எங்கிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரியும் மஞ்சள் பனியன். கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிப்பவன் இப்படியா பளிச்சென்று தெரியும்படி உடை அணிவான்?.

என்ன பஞ்சு, திருடனுக்கு பரிந்து கொண்டு வருகிறாயே என்கிறீர்களா? இந்த பரிதாப உணர்ச்சிதான் என்னை முன்னேற விடாத முட்டுக்கட்டை.

சரி, அதை விடுவோம். உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அவன் என் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு ஓடிவிடுவான்.

அந்தப் பை. என் உயிரே அதில் இருக்கிறதே! உன்னை விட மாட்டேன்!

குறுகிய சந்து பொந்தில் புகுந்து நார்ட்டன் ரோடு வழியாக மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை ஓடினான். போஸ்ட் ஆஃபீஸ் நிறுத்தத்தில் தயாராக நின்று கொண்டிருந்த 29C பஸ்ஸுக்குள் ஏறி விட்டான்.நான் விடுவேனா?. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நானும் ஏறிவிட்டான். பஸ்ஸில் நெரிசல்தான். உற்சவம் பார்க்க வந்த கூட்டம். எங்கே அவன்?. இறங்கி விட்டானா? நல்லவேளை முன்னால் போய் நிற்கிறான். பெசன்ட் நகர் நிறுத்தத்தில் எல்லோரும் இறங்கினோம். என்னை எதிர்பார்க்கவில்லை. பார்த்ததும் மறுபடியும் ஓட்டம்.

சாஸ்திரி நகர் குறுக்குத் தெரு வழியே ஓடி எலியட்ஸ் பீச்சுக்கு வந்து விட்டோம். உன்னை விட மாட்டேன்! மனசுக்குள் கறுவிக்கொண்டேன். பீச்சில் நடக்க வருபவர்கள் கூட்டம் குறைந்து விட்டது. அங்கங்கே சில ஜோடிகள், அது வேறு உலகம். தனி உலகம்.

மஞ்சள் பனியன் கொஞ்சம் நின்றான். சுத்தும் முத்தும் பார்க்கிறான். பையைத் திறந்து பார்க்க கை பரபரத்திருக்க வேண்டும். நான் அவன் கண்ணில் படாமல் மறைந்து நின்றேன். கொஞ்ச தூரம் மணலில் நடந்தான். ஒரு சுண்டல் வண்டியருகே நின்றவன் மனதை மாற்றிக் கொண்டு மறுபடியும் மெயின் ரோடுக்கு வந்தான். பசி போலிருக்கிறது. ரோட்டை கிராஸ் பண்ணி முருகன் இட்லி கடையை நோக்கி நடந்தான். உள்ளே நுழைந்து விட்டான். நானும் வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தேன்.

இட்லி சாம்பார் ஆர்டர் பண்ணியிருப்பான் போலிருக்கிறது. அவனுக்கென்ன? பை நிறைய பணம். எனக்கு அவ்வளவாக பசியில்லை. இரண்டு ரவா தோசை சாப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனாலும் ஓடி வந்த களைப்பு. நல்லவேளை, ஆத்திர அவசரத்துக்கு சட்டைப் பையில் எப்போதும் நூறு ரூபாய் வைத்திருப்பேன். ஒரு காப்பி மட்டும் சொல்லி விட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த முறை தப்பிக்க விடமாட்டேன்.

சாப்பிட்டுவிட்டு கைகழுவ உள்ளே போனான். அப்படியே போய் ஒரு அமுக்கு அமுக்கினால் என்னவென்று தோன்றியது. வேண்டாம். ஊரைக் கூட்டி நான்தான் திருடன் என்று சொல்லி விட்டால், காரியம் கெட்டுவிடும். பொறுமையாக காத்திருந்தேன்.

வெளியே வந்து வேளாங்கண்ணி கோயில் பக்கம் நடக்கத் தொடங்கினான். கொஞ்சம் விந்தி விந்திதான் நடந்தான். யாரும் பக்கத்தில் இல்லை என்று நிச்சியம் செய்து கொண்டபின் கிட்டத்தில போய் பின்னாலிருந்து அவன் பனியனைப் பிடித்தேன். அரண்டு போய் திரும்பினான்.

ஓட எத்தனித்தவன் சுதாரித்துக் கொண்டு, “டேய்..எவண்டா எம்மேல கை வைக்கிறது?”. இன்னும் சில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தான்.

“பிரதர், எதுக்கு நடிக்கிறீங்க? என்ன உனக்கு தெரியும். உன்னையும் எனக்கு தெரியும்!”

“டேய். எம்மேல கை வச்ச கீசிடுவேன்”

“அதுக்கெல்லாம் அவசியமில்ல, உங்கூட கொஞ்சம் பேசணும்”

“அந்த வேலையே வேணாம். உன்ன மாதிரி எத்தன பேர பாத்திருப்பேன். போலீசு கீலிசுன்னு போன, மவனே, உம்பொண்டாட்டி தாலி அறுந்துடும்”

“இத பாருப்பா, எம்பை உங்கையில. அது உனக்குத்தான். உம்மேல சத்தியம். நான் அத கையால கூட தொடமாட்டேன். என்ன நம்பு”

மஞ்சள் பனியன் ஒரு மாதிரி முழித்தான்.

“இப்போ இன்னான்ற?”

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும். அஞ்சு நிமிஷம் தான். வா, அந்த பீச்சோரம் போகலாம்”

என்ன தோன்றியதோ, மஞ்சள் பனியன் என்னோடு வர சம்மதித்தான்.

மறுபடியும் ரோடை கிராஸ் பண்ணி பீச்சை நோக்கி நடந்தோம். அநேகமாய் காலியாய் இருந்தது. ஒரு தனியிடமாய் பார்த்து உட்கார்ந்தோம்.

“உம் பேரென்னப்பா…?”

அவ்வளவு கிட்டத்தில் அவனை அப்போதுதான் பார்க்கிறேன்.

எண்ணெய் காணாத செம்பட்டை முடி. கண்ணெல்லாம் ஒளியிழந்து, பள்ளத்தில். பத்து நாள் பட்டினி போலிருந்தான். சிறு வயதுதான். நல்ல கருப்பு நிறம். மின்னும் பற்கள்.

“எம்பேரு இன்னாத்துக்கு? போலீசாண்ட்ட கம்ப்ளெயிண்டு குடுக்கவா?”

“ஐய்யய்யோ..போலீஸ். போலீஸ்! பை உன்னுதுன்னு சொல்லிட்டேனேப்பா! பையத் தொறந்து பாத்தியா?”

பாத்ரூம் போகும் போது திறந்து பார்த்திருக்கிறான்.

“உனக்கு அதிர்ஷ்டம் தான். என் சம்பளம் மொத்தமும் அதிலதான். அது ஒண்ணும் பெருசா இல்ல. அத வச்சு ரெண்டு பேருமே ஒரு கோட்டையும் கட்டமுடியாது…வச்சுக்க. ஆனா அதில ஒரு பர்சு இருக்கும் பாரு, இருக்குதா?”

பையை நடுங்கும் கையால் பிரித்தான். கையை விட்டு துழாவி பர்சை எடுத்தான்.

“இதில் இன்னும் கொஞ்சம் ரூபா வச்சிருக்கியா?”

“நீயே பிரிச்சு பாரு..”

பழைய, நைந்து போன பர்ஸ். ஒரு பக்கம் சாமிப்படம். இன்னொரு பக்கம்?

“பூராபாத்தியா? பணமிருந்தா எடுத்துக்க. உன்னுதுதான்…”

இப்போதுதான் முதல் முறையாக என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுகிறான்.

“சரி, பேரச் சொல்லு”

“டில்லி பாபு…”

“பாபு, நான் இந்த பர்ச மட்டும் எடுத்துக்கட்டா?”

பாபுவுக்கு இந்த அனுபவம் புதுமையாக இருந்தது.

“எடுத்துக்க சார். ஆமா இது யாரு?”

அதிலிருந்த மங்கிப் போன ஒரு போட்டோவைக் காண்பித்து கேட்டான்.

ஒரு நிமிடம் என்னால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண்ணில் நீர் குளம் கட்டியது.

“பாபு. இது எங்கம்மா. தீயில வெந்து, எண்ணயில பொரிஞ்சு, வாடி வதங்கி, எல்லாம் யாருக்காக? என்ன ஆளாக்க மட்டும்தான்! சுகம்னா என்னன்னே தெரியாம, உதாவக்கர புருஷன தெய்வமா ஏத்துகிட்டு…”

பஞ்சுவால் அழுகையை நிறுத்த முடியவில்லை!

பாபுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“சார், என்ன மன்னிச்சிடு..உம்பணம் எனக்கு வேண்டாம்..”

“பாபு, நான் உன்னை விடாம தொரத்தினது பணத்துக்காக இல்லப்பா. இதில இருக்கிறது யாருன்னு தெரியுமா, எங்கம்மா! இதுதான் எங்கிட்ட இருக்கிற ஒரே அம்மா படம். இத தொலச்சிருந்தாலும் அம்மா எம்மனச விட்டு போயிட மாட்டாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா பாபு, உங்கள மாதிரி பிக்பாக்கெட் அடிக்கிறவுங்க பணத்த மட்டும் எடுத்துகிட்டு பர்ச சாக்கடையில வீசி எறியுறத பாத்திருக்கேன். எங்கம்மா படம் சாக்கடையில மிதந்தா எனக்கு, நெனச்சு பாக்கக் கூட…வாழ்க்கையிலதான் அவுங்கள ஒயரத்தில வச்சு பாக்க முடியல. செத்தப்புறம் இந்த கதி வர விடக்கூடாதுன்னு ஒரு வெறியே வந்திடிச்சு.

“பாபு, ஒண்ண மட்டும் வேண்டி கேட்டுக்கறேன். நீங்க மத்தவங்க கிட்டேயிருந்து பறிக்கிறது பணம் மட்டும்னு நினைக்காதீங்க! ஒருத்தரோட வாழ்க்கையின் உயிர் மூச்சே அந்த பர்சுக்குள்ள இருக்கலாம். பர்சோ, பையோ தூக்கி சாக்கடையில மட்டும் எறிஞ்சிடாதீங்க”.

பஞ்சு பாபுவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுகிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *