இரண்டு ரூபாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,922 
 
 

“அண்ணே ! ஒரு பீடி இருந்தா கொடுக்கிறியா அண்ணே?” என்றான் சின்னசாமி, தான் அணிந்திருந்த சிவப்பு குல்லாயைக் கழற்றித் தலையைச் ‘சொறி, சொறி’ என்று சொரிந்து கொண்டே.

“என்னடா! சும்மா ஆளை ஒரு நோட்டம் விட்டுப் பார்க்கிறியா? இப்போத்தான் சம்பளத்தைக்கூட ஒசத்திக் கொடுத்திருக்காங்க, அதுக்குள்ளே நீ ஓசி பீடிக்கு வந்து நிக்கிறியே?” என்றான் பெரியசாமி, அதுவரை தான் காவல் காத்துவந்த இடத்தை விட்டுக் கொஞ்சம் அப்பால் நகர்ந்து கொண்டே.

“அங்கே சம்பளத்தை ஒசத்தினா, இங்கே அரிசி விலை, பருப்பு விலையை ஒசத்திடறாங்க! அதுக்கும் இதுக்கும்தான் சரியாய்ப் போகுதே!” என்றான் அவன்.

“அப்போ ஒண்ணு செய்!” என்றான் இவன்.

“என்ன அண்ணே , செய்யணுங்கிறே?”

“அதோ இருக்கா பார், ஒரு பழக்காரி! அவகிட்டே போய், “ஏம்மே, பிளாட்பாரத்திலே கடை வெச்சே?”ன்னு சும்மா ஒரு மெரட்டு மெரட்டிப் பாரு!”

“மெரட்னா?”

“அவ, ‘இது ஒரு தண்ட எழவு’ன்னு எட்டணா எடுத்துக் கொடுக்க வருவா. உனக்கு இருக்கிற காஜிலே, ‘அப்படிக் கொடுடி, என் ராஜாத்தி!’ன்னு அதை வாங்கிக் கிட்டு நீ நேரே இங்கே வந்து நின்னுடாதே! ‘அதுக்கு வேறே ஆளைப் பாரும்மே, வா டேசனுக்கு’ன்னு சும்மா ஒரு சின்ன கலாட்டா பண்ணு; ஒரு ரூபா எடுத்து நீட்டுவா. அதுக்கும் மசியாதே! ‘என்னா இன்னா லஞ்சம் வாங்கற பஞ்சப் பயன்னு நெனைச்சிட்டியா, எழுந்து வாம்மேன்னா!’ன்னு ஒரு இசுப்பு இசுத்துக்கிட்டே, கையிலே இருக்கிற குண்டாந்தடியைச் சும்மா ஒரு சொழட்டுச் சொழட்டு! அவ கில்லாடி, அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான்னாலும், உன் மூஞ்சி அதுக்குள்ளே அழுது வடியுமே, அதை நீ அவளுக்குத் தெரியாம மறைக்க வேண்டாமா, அதுக்காகத்தான் இது! அதுக்கு மேலே அவ ‘ம்மா நிறுத்தப்பேன்!’னு சொல்லிக்கிட்டே ஒண்ணரை ரூபா எடுத்துக் கொடுக்க வருவா; இந்த இடத்திலேதான் நீ அவளுக்கு ஒரு சின்ன லாபநஷ்டக் கணக்குப் போட்டுக் காட்டணும். அது எப்படி, தெரியுமா? தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிகிட்டே, ‘நடக்காது, நட டேசனுக்கு! அங்கே போய்க் கேசு எழுதி, நாளைக்குக் காத்தாலே உனக்கு நான் கோர்ட்டுலே அஞ்சு ரூபா அவராதம் போட்டு வைக்கலே, என் பேரு சின்னசாமியில்லே’ன்னு மீசைமேலே சும்மா ஒரு கையைப் போடு! இன்னா, உனக்கு மீசையே இன்னும் சரியா முளைக்கலையா? பரவாயில்லை! அது முளைக்கிற இடத்தைச் சும்மா ஒரு தடவுத் தடவு, போதும்! எல்லாம் உன் அசட்டுத்தனத்தை மறைக்கத்தானே? இப்போ நீ போடாம போட்டுக் காட்டிய கணக்கு அவளுக்கு புரிஞ்சிப்போவும். ‘மூணு ரூவாய்க்கு மூணு ரூவாயும் மிச்சம், பேரமும் கெட்டுப் போவாது’ன்னு முழுசா ரெண்டு ரூபா எடுத்துக் கொடுக்க வருவா! அதையும் பேசாம வாங்கிக்கிட்டு வராம ‘இன்னிக்கு உன்னைப் போனாப் போவுதுன்னு உடறேன்; நாளைக்கு இங்கேகடை வெச்சே, லாரியைக் கொண்டாந்து, உன்னையும் உன் பழத்தையும் வாரிப் போட்டுக்கிட்டுப் போயிடுவேன்! ‘ன்னு சும்மா ஒரு ‘உடான்சு’ உட்டுட்டு இங்கே வா! அதோ, அந்தச் சந்து முனையிலே இருக்கிற காக்கா ஓட்டலுக்குப் போயி, ஆளுக்கு ரெண்டு சம்சாவை எடுத்துக் கடிச்சி, அதுக்குமேலே டீயும் அடிச்சு, அப்படியே உனக்கொரு பீடிக்கட்டும் எனக்கொரு பீடிக்கட்டும் வாங்கிக்கிட்டு வந்துடுவோம், என்ன செய்யறியா?”

“ஐயையோ, நான் மாட்டேண்ணா ! லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க பார்த்தா …”

“அந்தக் கவலை உனக்கு இன்னாத்துக்கு? அவங்களைப் பார்த்துக்கத்தான் நான் இருக்கேனே, நீ போடா சும்மா!”

“அப்புறம் என்னை வம்புலே மாட்டி வெச்சிடாதே, அண்ணே! நான் பிள்ளை குட்டிக்காரன்….”

“எனக்கு மட்டும் பிள்ளை குட்டி இல்லையா? போடா! அவங்க வந்தா ஏதாச்சும் ஒருசாக்கைவெச்சி நான் விசில் அடிக்கிறேன், அதைக் கேட்டதும் நீ சும்மா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கம்னு வந்துடு!”

“சும்மா சும்மான்னு என்னைச் சும்மா போகச் சொல்றியே, அதுக்கு நீயேதான் போனா என்னண்ணே?”
“நான் நேத்துத்தாண்டா, அவளை மெரட்டி ரெண்டு ரூவா வாங்கினேன்; அதுக்குத்தான் இன்னிக்கு உன்னைப் போகச் சொல்றேன்!”

“என்னமோண்ணே, என் பொழைப்பிலே மண்ணைப் போட்டுடாதீங்க! உஷாராப் பார்த்துக்குங்க, பொறாவைத் தேடிப் பருந்து கத்தறாப்போல அந்தப் பசங்க சும்மா சுத்து, சுத்து’ன்னு சுத்திக்கிட்டே இருக்கானுங்க!”

“அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ போடா!” என்று பெரியசாமி, சும்மா’ அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட, அப்போதும் சின்னசாமி அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் நடக்க, அவனுக்குப் பின்னால் நின்று அவன் கால்கள் பின்னுவதைக் கண்ட பெரியசாமி கலகலவென்று நகைக்க, “என்ன அண்ணே, சிரிக்கிறீங்க?” என்றான் அவன், மேலும் தயக்கத்துடன் நின்று.

“ஒண்ணும் இல்லேடா என்னதான் புதுசா இருந்தாலும் இப்படியா? நீ கொஞ்சம் மிடுக்கா போ, அப்போத் தான் காரியம் நடக்கும்!” என்றான் பெரியசாமி. அவனுக்குத் தெரியாமல் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டே.

அதைக் கவனிக்காத சின்னசாமி, “சரி!” என்று மூக்கால் அழுது கொண்டே அவளை நெருங்க, “எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன்! அதுக்காக நீங்க ஒண்ணும் இங்கே மணிக்கணக்கா நின்று, எங்கிட்டே கொசிறிகிட்டு இருக்கவேணாம்; இந்தாங்க, ஒரேயடியா ரெண்டு ரூவாயாவே கொடுத்துடறேன், எடுத்துக்கிட்டுப் போங்க! அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க வந்ததும், நானே உங்களைப் பிடிச்சு அவங்ககிட்டே கொடுக்கலேன்னா, என் பேரு எச்சிமியில்லே!’ என்று இவன் அவளை மிரட்டுவதற்குப்பதிலாக அவளே இவனை மிரட்ட, இவன் விழிக்க, நிலைமை மோசமாவதற்கு முன்னால் பெரியசாமி விரைந்து வந்து அந்த ரூபாய் இரண்டையும் வாங்கிக்கொண்டு ‘லஞ்சம் வாங்கறது மட்டும் தப்பு இல்லே எச்சிமி, கொடுக்கறதும் தப்புன்னு தெரியுமா உனக்கு?” என்றான் அவள் விட்ட சவாலுக்கு எதிர்ச்சவாலாக.

“எல்லாம் தெரியும், போய்யா!” என்றாள் அவள், அப்போதும் அலட்சியமாக.

அதற்குமேல் அவளை மிரட்டுவது தனக்கே ஆபத்து என்பதை உணர்ந்த பெரியசாமி மேலே நடக்க, அவனைத் தொடர்ந்து நடந்தான் சின்னசாமி.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, இருவரும் அந்தக் காக்கா ஓட்டல் இருந்த சந்து மூலைக்குத் திரும்பியது தான் தாமதம், தங்களை யாரோ கைதட்டி அழைப்பது போலிருக்கவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் பயந்ததற்கு ஏற்றாற் போல் அவர்களை நோக்கி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் அவசரம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்!

தம்மைக் கண்டதும் பேய் அறைந்தது போல் நின்ற அவர்களை நெருங்கி, “அந்தப்பழக்காரியிடமிருந்து என்ன வாங்கினீர்கள், காட்டுங்கள் கையை!” என்றார் அவர், அதிகாரத்துடன்.

அவ்வளவுதான்; ‘நானில்லை, ஸார்!’ என்றான் சின்னசாமி, அழாக்குறையாக.

அவனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே அவர் சொன்னது சொன்னபடி கையைக் காட்டினான் பெரியசாமி.

அவனை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டே அவன் கையிலிருந்த ரூபாய் இரண்டில் ஒன்றை எடுத்துத் தம் சட்டைப் பையில் போட்டுக் கொண்டே “பயப்படாதே, போ!” என்றார் அதிகாரி!

“நன்றி!” என்று சொல்லிக்கொண்டே பெரியசாமி நழுவ, “லஞ்சம் ஒழிந்ததோ இல்லையோ என்னைப் பிடிச்ச பயம் என்னை விட்டுப் போச்சுடா, அப்பா!” என்று பெருமூச்சு விட்டான் சின்னசாமி.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *