இரண்டு ஊர்வலங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,784 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த சமயத்திலும் விதி அவளுடைய படுக்கையை அந்த அரசமரத்தடியிலிருந்து மாற்றி வைக்க விரும்பவில்லை யென்றே சொல்லவேண்டும். அவளுக்குப் பக்கத்தில் ஸ்வாமி மட்டும் உட்கார்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் ஒரு கிழவன் விழுந்து கிடந்தான். மற்றவர்களை அங்கே காணவில்லை. ஸ்வாமி அடிக்கொருதரம் அவளைக் கூப்பிட்டுப் பார்த்தான். ஒருவேளை பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்தப் பெண் திடீரென்று எழுந்திருந்து பேசுவாள் என்று எண்ணினான் போலும்!

இப்படி ஆகிவிடுமென்று அவன் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. சாயந்தரமெல்லாம் படுத்தபடியே கிடந்தாளேனும் நன்றாகப் பேசினாள். அப்படி வெகுநேரமாக அவளோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு “இன்றைக்குக் கொஞ்சம் கஞ்சி வைத்துக் கொடுக்கட்டுமா” என்று கேட்டுக் கொண்டே எங்கோ ஓடிப்போய், கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்தான். அப்பொழுதும் அயர்ந்து கிடப்பது போலவே அவள் காணப்பட்டாள். ஆனால் கஞ்சியை வைத்துக் கொண்டு வந்து எழுப்பிப் பார்த்த பொழுதோ…!

வழக்கம் போல அங்கே வந்து விழுந்து கிடக்கும் மற்றப் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அன்று அந்த நகரத்துப் பிரபு ஒருவருடைய பெண்ணின் கல்யாண வைபவத்தைப் பார்க்கப் போய்விட்டார்கள். எல்லா ஜனங்களுக்குமே அது ஒரு ஆனந்தமான சம்பவமாக இருக்கும் போது, சாதாரணமான அந்த ஏழைகளுடைய நிலையைச் சொல்லவேண்டியதில்லை. ஆயிரக்கணக்காக ரூபாய்களைச் செலவு செய்து கொட்டகைகள் போட்டு அலங்காரங்கள் செய்து இருந்தார்கள். வாத்தியக்காரரும் மற்றும் வித்துவான்களும் பல தேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். நண்பர்களென்றும் பந்துக்களென்றும் வந்து குவிந்த கும்பலே பார்ப்பதற்கு அதிசயமாக இருந்தது. இந்தக் காட்சிகளைப் பார்ப்பதை விட்டு, இருள் சூழ்ந்த அந்தமரத்தடியிலே விழுந்து கிடக்க யார்தான் விரும்புவார்கள்? அல்லாமலும், அவள் சுகமாகக் கிடந்ததை நேராகப் பார்த்துவிட்டே அவர்கள் மாலையில் அங்கே ஓடிச்சென்றார்கள். ஆனால், ஸ்வாமியும் அந்தக் கிழவனும் அவளை விட்டுப்போக விரும்பவில்லை.

ஸ்வாமி கொஞ்சநாட்களுக்கு முன்புதான் இந்தக் கூட்டத்தார்களோடு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பெல்லாம் உணவுக்காகத் தேசாந்தரஞ் செல்லும் பறவைகள் போல எங்கெங்கோ சுற்றி அலைந்து கொண்டிருந்தான். அப்பொழுது நிரந்தரமாகச் சில மாதங்களுக்கேனும் அவன் ஒரு இடத்தில் நிலைத்து இருந்ததில்லை. இங்கு வந்த பிறகே அவனது இயல்பான பழக்கம் மாறியது. உயர்ந்த அந்தஸ்துக்களில் இருந்து கொண்டு வாழுகிற மனிதர்களை விட இந்தக் கூட்டத்தவர்களிடம் அமைந்திருந்த அற்புதமான இயல்புகளே அப்படி அவனை ஓடவிடாமல் தடுத்து வைத்திருந்ததென்று சொல்லவேண்டும்.

காலையிலே அவர்கள் அந்த இடத்தைவிட்டுத் தனித்தனியாக ஒவ்வொரு திசையால் போவார்கள். மாலைக்காலமானதும் திரும்பிவந்து கூடுவார்கள். எல்லோரும் வந்து சேர்ந்ததும், இன்றைக்கு யாராவது வயிற்றுக்குக் கிடைக்காமல் வந்தீர்களா? என்று விசாரித்து வைத்திருக்கிறவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவார்கள். பிறகு எல்லோருமே சேர்ந்துகொண்டு தங்கள் துன்பங்களை மறந்து சிறு குழந்தைகள் போல விளையாடுவார்கள்; பாடுவார்கள். இந்தச் சமயங் களிலெல்லாம் அவள் எல்லோருடைய கண்களின் முன்பும் நிற்பாள். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் மற்றவர்களை வசீகரித்து ஒரு புதுமையின் சுகத்தில் ஆழ்த்திவிடும். அவளுக்கு யாரிடமும் வித்தியாசம் பாராட்டி நடக்கவுந் தெரியாது, எல்லையற்ற இருட்கடலிலே தோன்றிய லட்சியதீபம் போலவும் பரந்த பாலைவனத்தின் நடுவிலே கிடந்த அமிர்தமயமான தடாகம் போலவும் அவர்களது ஆழ்ந்த துயர்நிலையில் அவள் ஒரு தன்னம்பிக்கையை உண்டுபண்ணிக் கொண்டிருந்தாள். அதாவது, வாழ்விலே சிரித்துப் பழக்கமில்லாத அந்த ஏழைகளை அவளுடைய ஒவ்வொரு செய்கையும் தங்களை மறந்து ஆரவாரஞ் செய்யும்படி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தது.

சில சமயங்களிலே அவள் ஒரு “தர்பார்” நடத்துவதுண்டு. ஸ்வாமி முதன் முதல் அங்கே வந்த அன்றைக்கும் அது நடந்தது. எல்லோரும் அவளைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவளுடைய கண்கள் நாலாபக்கமும் ஒருமுறை சுற்றிவந்தன. புதிதாக அன்றைக்கு வந்துசேர்ந்த ஸ்வாமியைக் கண்டதும் ” ஓகோ ! நமது கூட்டத்துக்குள் உத்தரவில்லாமலே யாரோ ஒரு புதியவன் வந்து நுழைந்துவிட்டதாகத் தெரிகிறதே! உடனே அந்த மனிதனைப் பிடித்து வந்து என் முன்னால் நிறுத்துங்கள்” என்ற க…டளை பிறந்தது. ஸ்வாமி சிரிப்பை அடக்கிக்கொண்டு “நானே வந்து விடுகிறேன்” என்று சொல்லியபடி அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.

“வேண்டுமானால் உத்தரவில்லாமல் வந்து புகுந்த குற்றத்தை மன்னிக்கிறோம். ஆனால், மன்னிக்க முடியாத வேறொரு குற்றமுண்டு!”

“புதியவனானாலும் கட்டளைப்படி நடக்க உத்தரவை எதிர்பார்க்கிறேன்”

“நமது கூட்டத்துள் நுழைகிற எந்த ஆசாமியும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று கிழிசலில்லாத உடையை உடுத்திருக்கலாகாது. நீ அதற்கு மாறாக நடந்துவிட்டாய் அல்லவா? ஏன் நீங்களே சொல்லுங்கள் தண்டிக்காமல் விடலாமா?”

“விட முடியாது; விட முடியாது” என்று ஏக காலத்தில் பல குரல்கள் எழுந்து கேட்டன. அவ்வளவில் அவன், “உங்களுடைய சட்டந் தெரியாமல் இந்த அபராதத்தைச் செய்துவிட்டேன். இதோ நானாகவே கிழித்துவிடுகிறேன்” என்று சொல்லியபடி கிழிப்பதற்குத் துணியைப் பிடித்தான். உடனே “மன்னித்துக் கொண்டோம். இனிமேல் இவ்விதமான பிழைகள் வராமற் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

அதோடு அன்றைய நியாயசபை கலைந்துவிட்டது. பிறகும் வெகு நேரம்வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஒவ்வொருவராக அங்கங்கே விழுந்து தூங்கிவிட்டார்கள். ஸ்வாமி மட்டும் ஒரு புறத்திலே கிடந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் என்றைக்குமே கண்டிராத ஒரு இன்ப வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. அதனால் அன்று வெகு நேரத்தின் பிறகே அவனுக்கு நித்திரையும் வந்தது. தினமும் அவர்களுடைய வாழ்வு இப்படியே இருந்ததால், நாளைக்கு என்ற விசாரம் யாரிடமும் இருந்ததில்லை. உணவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒரே மாதிரியே சலனமற்ற நிலையில் காணப்பட்டார்கள். எந்த நிலையிலும் தங்களைத் தேற்றிக் கொள்ளக்கூடிய வீரம், அவர்களது பிறப்புரிமையானது என்று கூடச் சொல்லலாம். எல்லோராலும் ஒதுக்கித் தள்ளப்பட்டபோதிலும், அவர்களிடம் தன்னம்பிக்கையிருந்தது. மானமற்ற ஈனப் பிச்சைத் தொழிலையே செய்தாலும், அவர்களே அந்த மானத்தின் உயிர்நிலையாக இருந்தார்கள் எனலாம். வாழ்க்கையின் சுகங்களை கனவிலும் காணாமல் துன்பச் சுழல்களில் அடியுண்டும், நிமிர்ந்து நிற்கும் அவர்களைப்போன்ற மனிதரது மூச்சிலிருந்தே புது யுகத்தின் உயிர் தோன்றப் போகிறதல்லவா?

இந்த இடத்தில் ஏற்பட்ட கூட்டுறவை ஸ்வாமி தனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகவே கருதினான். மற்றவர்களைவிட அவனுக்கு உயர்ந்த ஒரு அந்தஸ்தும் கிடைத்தது. அதுவும் அவளுடைய கடாட்சத்தினாலேயே கிடைத்ததென்று சொல்ல வேண்டும். வாழ்க்கை என்னும் முள் நிறைந்த பாதையிலே காலமெல்லாம் நடந்ததில் சலிப்படைந்த அவனுக்கு அவள் ஒரு மருந்தாகவே விளங்கினாள். ஒரு நாள் அவர்களது சம்பாஷணைக்குள் இந்த பிச்சையெடுக்கிற தொழிலைப் பற்றிய பேச்சும் வந்தது. அப்போது அவள் தன் மனதில் வெகுகாலமாக வேரூன்றியிருந்த இந்த அபிப்பிராயத்தையும் சொன்னாள்.

“வெட்கமின்றி எல்லோரிடமும் யாசிக்கிறோம். வயிற்றுக் கொடுமை யினாலேயே கேட்கிறார்கள் என்று எண்ணாமல் ஜனங்களும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். கடவுள் தந்த உடம்பு இருக்கும் போதாவது வேலை செய்து இந்த வயிற்றை நிரப்பக் கூடாதா என்று அடிக்கடி தோன்றுகிறது.”

சிறிது நேரம் வரை சும்மா இருந்துவிட்டே அவன் பதில் சொன்னான்.

“நீ சொன்னதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அது நல்லதுதான் ஆனால் … எல்லோருக்கும் வேலை கிடைப்பது, பிறகு வேலைக்கும் கூலி கிடைப்பது – இவையெல்லாம் எனக்குப் பெரிய பிரச்சினைகளாகவே தோன்றுகின்றன.”

அவள் இதைக் கேட்டதும் ஒரு மாதிரிச் சிரித்துக் கொண்டு “நீங்களும் ஒரு பெரிய கோழை என்றே சொல்வேன். ஆனால் உங்களைப் பார்க்கும் போது அப்படிச் சொல்ல முடிவில்லை ” என்றாள்.

“அனுபவமில்லாத ஒரு பெண் சொல்லக் கூடியதைத்தான் நீயும் சொல்லுகிறாய்”

“என்ன? உலகத்தில் வேலை கிடைப்பதென்பது பெரிய பிரச்சினையா? நன்றாகச் செய்கிறவர்களை எல்லோருமே வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.”

“சரி நான் இன்றையிலிருந்து அப்படியே செய்கிறேன். ஆனால் நீ…”

“நானும் அப்படித்தான் செய்வேன்.”

“அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன்.”

“அப்படியானால் நான் நெடுகிலுமே பிச்சைதான் எடுக்க வேண்டுமாக்கும்?”

“எனக்குக் கிடைப்பதில் ஒரு பகுதியைக் கொடுக்கிறேனே!”

அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் இதைக் கேட்டவுடன் கொஞ்சம் யோசித்துவிட்டே,”என்ன?” என்று கேட்டாள்.

“நான் வெகு காலமாகக் கூலிவேலை செய்து சீவித்த ஒருவன் என்பதை நீ ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாளிகள் என்று இருக்கிறவர்கள் ஓயாமல் வேலை வாங்கிக் கொண்டும், அதற்குரிய சம்பளத்தைக் கொடுப்பார்களா? மனிதனிடம் நியாயப்படி கொடுக்கிற மனமிருந்தால் ஒருவனும் கோடிஸ்வரனாய் வந்திருக்க முடியாது. பத்து ரூபா செலவு செய்ய வேண்டிய ஒரு வேலையை பத்துப் பணத்தோடு செய்கிற ஒருவனையே ஒவ்வொரு மனிதனும் தேடிக் கொண்டிருக்கிறானென்பதை நீ அறிவாயா? அந்தக் காலத்தில் வேலை செய்து செய்து எலும்பாகிச் சாகிற நிலைக்கு வந்துவிட்டேன். பிறகு, வேலை செய்யவும் முடியாது போய்விடவே இந்தப் பிச்சையெடுக்கிற தொழிலிலிறங்கினேன். என்னுடைய இந்த அனுபவத்தைக் கொண்டே “நீ செய்ய வேண்டாம்” என்று தடுத்தேன். உன்னாலும் அப்படிப் பாடுபட முடியாது.

“எப்படியிருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் வயிற்றுக்குத் தாங்கள் தானே பாடுபட்டுத் தீர வேண்டும்?”

“உண்மைதான்; ஆனால், ஒரு குழந்தை தன் சாப்பாட்டுக்குச் சம்பாதித்தேயாக வேண்டுமென்று அதன் தாய் எவ்வளவு ஏழையானாலும் – விரும்புவாளா?”

அவளுக்கு இந்த வார்த்தைகள் ஒருவித இன்பங் கலந்த மயக்கத்தையே உண்டுபண்ணின. ஆயினும் சாதுரியமாகப் பதில் சொன்னாள்.

“தானே பாடுபட்டுக் கொடுக்கும் பருவம் வந்த பிறகும், வாழ்க்கையிலே அடிபட்டுச் சோர்ந்து போன ஒரு தாயிடம் எதிர்பார்ப்பது எந்தப் பிள்ளைக்கும் ஏற்றதல்ல. அல்லாமலும் தன் குழந்தைக்கு சம்பாதிக்கத் தக்க பருவம் வந்த பிறகும், அடைத்து வைக்கிற ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கே பெரிய தீமை செய்தவளாகிறாள்.”

“நியாயம் வேறு; தாயினுடைய உள்ளம் சட்டங்களுக்குள் கட்டுப்படக்கூடியதுமல்ல”

மேலே அவளால் ஒன்றுமே பேசமுடியவில்லை. உண்மையான அன்பு கனிந்த அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதிலே கூட அவள் ஆனந்தம் அடைந்தாள். இதுவரை காணாத ஒன்றைக் கண்டது போல அவளுடைய உள்ளம் உள்ளே குமுறிக்கொண்டிருந்தது. பாவம் அவளுக்குத் தன் தாயின் அன்புகூட இப்படித்தான் இருக்குமென்று தெரியாது. அதனாலே தான் புதிதாகக் கிடைத்த இந்த இனிமை அவளுக்கு அமிர்த மயமாகவே தெரிந்தது. அவனும் உள்ளபடி ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து கொண்டே தன் உள்ளத்தைத் காட்டினான். ஆயினும் அது இன்ன பாதையிலேதான் ஓடி வருகிறதென்று அவளால் நிதானிக்க முடியவில்லை .

இயற்கையிலே துள்ளி விளையாடுஞ் சிறுவர்கள் போன்ற அவளுடைய சுபாவம், நாளடைவில் அடங்கிவிட, ஒருவித அமைதியான நிலை தானாகவே தோன்றி நிலைத்து விட்டது. அவளிடத்து தோன்றிய இந்த மாறுதல் மற்றவர்களுக்குக் கூட ஆச்சரியத்தையே உண்டு பண்ணியது. அந்தக் கிழவன் மட்டும் “அம்மா. நீ அவனோடு சுகமாக வாழ்வதைப் பார்த்துவிட்டுத்தான் நான் சாக வேண்டும்” என்று அடிக்கடி வெளியாகத் திறந்து சொல்லுவான். முதலில் “தாத்தா! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?”என்று கேட்டவள், வரவரச் சிரித்து மௌனமானாள். நியாயமின்றி மற்றவர்கள் இப்படியே நினைக்கின்றார்கள் என்பது தெரிந்திருந்தும் அதை வரவேற்பதற்குத் தயாராகவே அவளுடைய நெஞ்சு திருந்தி விட்டது. ஆனால்…? காலக்காற்று திடீரென்று வேறு திசை நோக்கிச் சுழன்றடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு காரணமுமின்றி அவளுக்கு ஏதோ ஒன்று சொல்ல முடியாதபடி வந்துவிட்டது. இத்தனை நாளும் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் அலைந்தபோது கூட வராத அந்த வரத்து, ஒருவன் பக்குவஞ் செய்ய வந்த பிறகே எங்கிருந்தோ ஓடிவந்து பிடித்துக்கொண்டது. ஏன் சாயந்தரம் அவன் அரிசிக்காக போகும் வரைக்கும் சௌக்கியமாகத்தானே இருந்தாள்! படுத்தபடி கிடந்த போதிலும் வேடிக்கையாகப் பேசினாள்; சிரித்தாள்! ‘கஞ்சி வைத்துத் தரட்டுமா?’ என்று கேட்டபோது “இந்த நேரத்தில் எங்கே அரிசி கிடைக்கப்போகிறது” என்று அவனுக்காகத் தன் அனுதாபத்தைக் கூடத் தெரிவித்தாளே! இப்போதோ…

பிரக்ஞையற்றுக் கிடக்கும் அந்தப் பேதையின் தலையைத் தன் மடிமீது வைத்தபடியே அவனும் உணர்ச்சியற்ற நிலையிலே உட் கார்ந்திருந்தான். அப்பொழுது தான் ஒவ்வொருவராக அவர்களது கூட்டத்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். வெளியில் நிறைந்திருந்த இருளின் எதிரொலிபோல எல்லோருடைய இதயங்களும் பயங்கரமாக இருண்டு கிடந்தன. ஆனால் அந்த இருளின் கோரமான சிரிப்புப் போலவே தூரத்திலே வந்து கொண்டிருந்த கல்யாண ஊர்வலத்தில் தீபங்கள் பிரகாசித்தன. வாத்தியங்களின் ஓசையும் சனங்களின் ஆரவாரமும் ஒன்றாகி, விதி தூரத்தில் நின்று கொண்டு தன் வாயைத் திறந்து ஊளையிடுவது போலவே கேட்டது.

மூச்சு நின்ற பிறகும் அவளுடைய உடலைத் தன்மடியிலிருந்து இறக்கி வைக்க விரும்பாதவன் போலவே ஸ்வாமி விறைத்துப் போயிருந்தான். அவனுடைய கண்களிலிருந்து ஆறாக ஒழுகிய நீர் உயிரற்ற அவள் முகத்தின் வழியாக ஓடிக்கொண்டிருந்தது.

கல்யாண ஊர்வலம் அந்த மரத்தடிக்குச் சற்றுத் தொலைவில் வந்ததும் திடீரென்று ஒரு பரபரப்பு உண்டாகிவிட்டது. எல்லோரும் நின்று ஒருவரோடொருவர் ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு ஒரேயொரு மனிதன் மட்டும் அந்த இடத்தை நோக்கி வந்தான். அவனுடைய உடம்பு ஆத்திரத்தினால் ஆடிக்கொண்டிருந்தது, அந்த மங்கிய மர நிழலிலே கூடத் தெரிந்தது. வார்த்தைகளும் துடித்துக் கொண்டே வெளிவந்தன. ஆனால் எட்டி நின்று பேசினான்.

“யாரெடா அங்கே! ஊர்வலம் வருவது தெரியவில்லையா? எப்படித் தெரியும்! எந்த நாயின் பிணத்தை வைத்துக்கொண்டு வழியிலே அபசகுனம் மாதிரி நிற்கிறீர்கள். எல்லோருக்கும் அந்தக் கதி வரமுன் இழுத்துக் கொண்டு ஓடிப் போகிறீர்களா அல்லது…?”

ஸ்வாமி அப்படி இரைந்து கொண்டு நின்ற அந்த மிருகத்தின் பக்கமாக ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் உயிரினுமினிய அவளது உடலைத் தூக்கித் தோள் மீது வைத்துக்கொண்டு ஏதோ ஒரு திசையை நோக்கி நடந்தான். அவளைச் சேர்ந்த மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராக அவனைத் தொடர்ந்து நடந்தார்கள்.

அந்த உயர்வான மனிதஜாதியின் ஆடம்பரமான கல்யாண ஊர்வலம் நகரத் தொடங்கிய போது, அவர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட அந்த ஏழை மனிதர்களின் அபசகுனமான மரண ஊர்வலமும் இருளோடு ஐக்கியப்பட்டு மறைந்து விட்டது.

ஒரு வேளை நவயுகத்தைச் சிருஷ்டிக்க எண்ணிய விதியின் ஆரம்ப ஊர்வலங்களாகவும் இவை இருக்கலாமல்லவா?

– மறுமலர்ச்சி பங்குனி 1946

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை

– துறவு (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 2004, ஸ்ரீலங்கா வெளியீடு, யாழ்ப்பாணம்.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *