அன்று சனிக்கிழமை விடிந்தும் விடியாததுமாக சதீஷ் ராமுவைப் போய் எழுப்பினான். ஏன்டா இவ்வளோ சீக்கிரம் எழுப்புறனு திட்டிக்கிட்டே ராமு எழுந்தான்.உனக்கு விசயம் தெரியாத? இன்னும் ரெண்டு நாளைக்கு இன்டெர்நெட் வேலை செய்யாதாம். அடக்கடவுளே என்னடா சொல்ற? ஏன்டா?
ஏதோ கிரகங்கள் எல்லாம் ஒரே கோட்டுல பயணிக்கப் போகுதாம், இது பல நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்குறதுதானாம். ஆனா இப்போ இருக்க டவர், நெட்வொர்க் கனெக்சன்னு நம்ப செஞ்சு வச்ச எல்லாம் அந்த கிரகங்களோட சக்தியால பாதிக்கப்படகூடிய வாய்ப்பு இருக்காம்.
அதுனால இயற்கையோட மோத தெம்பு இல்லாம எல்லா நெட்வொர்க்கையும் ஆஃப் பன்னி வைக்க போறாங்கன்னு சதீஷ் சொல்லி முடிச்சான்.
டேய் எப்புடிடா நெட் இல்லாம ரெண்டு நாள் ஓட்டுறது, என்னோட ஃபேஸ்புக் ,வாட்சாப் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மிஸ் பன்னுவேன். அடேய் வாடா இன்னைக்காவது உண்மையான உலகத்த போய் பாப்போம்னு கூட்டிக்கிட்டு போனான்.
ஏய் அந்த மரத்துல பாருடா மாங்கா இருக்கு, அட ஆமா! ஆனா அத எப்புடி டா பறிக்கிறது, ஏய் நீ யாருனு எனக்கு தெரியும் ,நா யாருனு உனக்கு தெரியும் ஏறுடா எருமன்னு ராமுவ ஏத்தி விட்டான். தயக்கத்தோட ஏறுனான் ஆன அவனால நல்லா ஏற முடிஞ்சுச்சு. மாங்காய பிச்சு சாப்டுட்டு வர வழில வாய்கால்ல குதிச்சு குளிச்சுட்டு, அழகான பூக்கள ரசிச்சுட்டே வரப்புல நடந்தாங்க.
சதீஷ் திடீர்னு கால் வழுக்கி விழ அவன பிடிக்கிறேன்னு ராமுவும் விழ ரெண்டு பேரும் சிரிச்சிக்கிட்டே சேத்த அள்ளி அடுச்சுக்கிட்டாங்க. ராமுவோட தங்கச்சி வினோ அவன கூப்பிட்டு அங்க பாருடா மேகத்துல நம்ப டோனி நாய்குட்டி மாதிரியே உருவம் தெரியுதுன்னு சொன்னா. அட ஆமா, அங்க பாரு சிங்கம், அங்க பாரு பறவை, அங்க பாரு ராக்கெட் பொக உட்டுருக்குன்னு பேசி சிரிச்சுக்கிட்டாங்க.
ஏய் வானத்த பாரேன் டா சதீஷ் எவ்வளோ அழகா இருக்குள்ள? இது நமக்கு மேலதான் எப்போதும் இருக்கு ஆனா நம்பதான் தலையே நிமிந்து பாக்கிறதே இல்லையே. இப்போதான்டா நம்ப உண்மையான மனுசனா இருக்கோம் போன்னுக்குள்ளயே முழுகி ரோபோமாதிரி ஆகிட்டோம். ஆமாடா நெட் தேவைதான் ஆனா இனி அத அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தனும் அதுலயே மூழ்கிற கூடாது. நாளைக்கு மீன் புடிச்சு கூட்டாஞ்சோறு ஆக்குவோம்டா.
ஆமா ராமு, இனி வாரம் வாரம் நம்ப கூட இருக்க ஃபரண்ட்ஸ் பேமிலின்னு சேந்து நேரம் செலவிடனும்டா. அம்மா சமயல ரசிச்சு சாப்டனும் அப்பாகூட வெளில போய்ட்டு வரனும்.அக்கா,தங்கச்சி கூட சண்டை போடனும்னு சொல்லும்போதே வினோ ரெண்டுபேரு முதுகுலயும் ஓங்கி அடிச்சுட்டு ஓடுறா, ரெண்டு பேரும் அவள துரத்திக்கிட்டு ஓடுறாங்க…
“தேவைக்கு உபயோகித்து
தெவிட்டாமல் வாழ்வோம்”