ஆற்றுப்படை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 1,379 
 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரசவம் வாஸ்தவத்தில் தேமாங்கனிச் சுவையே! இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்கனிச் சுவை போன்றதே இன்ப வேதனையாலும் துன்ப வேதனையாலும் அலசப்படும் பிரசவ வாதையும்!!

சுகப் பிரவசத்தின்போது சம்பந்தப்பட்ட மனிதர் களில், சம்பந்தப்பட்ட களத்தில் சுடரோடும் மகிழ்ச்சிக்களை இருக்கிறதே, அதற்கு எதுதான் நிகர்?

பருவ காலத்தில் கடலணங்கும் பிரசவத் தாயாகி விடுகிறாள்:

சித்திரை மாதம். பேய்க்காற்றின் வீச்சின்றி மலையளவு எம்பியெழும் பேரலைகளின் சீற்றமின்றி, விசைமிக்க நீர்ப் போக்கின்றி, கலங்களின்றி, தாய்மை கனிந்து வங்காளக் கடல் மூச்செறிந்து கிடக்கிறாள்.

பிரவசக்குறி முற்றி மருதமுனைக் கடற்கரை களைகட்டி யிருக்கிறது.

கடலில் வளைந்து விரிக்கப்பட்ட கொண்டோடி வலை களில் ஒன்று கரைசேருங் கட்டத்தை அடைந்துவிட்டது. வலையை நாடிப் பெருங்கூட்டமே கூடிவிடுகிறது.

கூட்டத்தின் ஒரு பகுதியான பொறுக்கிப் பையன்கள் போர்வீரர்களின் துறுதுறுப்புடன் களத்திலே குதிக்க வரிந்து கட்டிவிட்டார்கள்.

சிந்தும் மீன்களுக்காகக் கழுகுப் பார்வையுடன் காத் திருக்கும் சகபாடிகளுடன் மல்லடிப்பதும், தோணிவலைச் சொந்தக்காரர், தொழிலாளிகள் வியாபாரிகள் முதலான நூற்றுக்கணக்கானோரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மீன் களவெடுப்பதும் சாதாரணமா போங்கள், அது ஒரு பெரும் போராட்டம்!

சாரனை மடித்துக் கை நுழைய வழிவைத்து இடுப்போடு கட்டியவர்கள்; உடுதுணித் துண்டைப் பையாக்கி வயிற்றுப் பக்கமாக அரை ஞாணில் செருகிக்கொண்டிருப்பவர்கள்; இருபக்கமும் பைகள் பொருந்திய காற்சட்டை தரித்தவர் கள்- இப்படி மூன்றுபட வேஷம் புனைந்து துடித்து நிற்கும் அவர்களுக்கு ‘யூனிபோம்’ தரித்த முப்படையினரும் நிகராக முடியாது.

கயிற்றுவயை கரைவந்து, நூல் வலையின் சள்ளைப் பகுதி கரைக்கு வருகிறது.

பந்தலிலே சூழலவரைக்காய் சிலிர்த்தது போல சள்ளை வலைக் கண்களில் பாய்ந்து குத்திட்டுச்சிலிர்த்த கீரிச்சூடை கள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணப் பொறுக் கிப் பையன்களின் வதனங்கள் இளம் பருதியின் ஒளிச் சிதற லில் தகதகக்கும் கடல் நீர் போலப் பிரகாசிக்கின்றது.

இனி அவர்கள் பாடு ‘நரி காட்டில்’ என்ற மாதிரித் தான். சூரை, சுறா, பாரை என்று பேரினமாகச் சிக்கிவிட்டாலோ கரையேறுங். கட்டத்தில் நெரிசல் தாங்காது மடி வலை வெடித்தாலொழிய, அவர் சாமர்த்தியம் ஒன்றும் பலிக்கப்போவதில்லை.

பையன்கள் மிக நுட்பமாக, குத்திட்டு துடிக்கும் மீன் அங்கைக்குள் மறையக் கூடியதாக, வலையைப் பற்றி இழுக் சிறார்கள். இழுப்பதாவது? அப்படியொரு பாசாங்கு; காரிய வாதத் தொழில் தந்திரம், வலையிழுக்கும் பாவனையினூடு கைகள் பைகளுக்குள் நுழைந்து மீள்வது அவர்களது தொழில் இரகசியம்.

கூலிக்கு மாரடிக்கும் மீனவர்களுக்கோ வலையிழுக்குங் கடுப்பு; முதலாளியின், அவர் கையாட்களின் வசைப் பாணங் களைக் கட்டிச் சுமக்கும் கவலை, மீன்மடி, முக்கால் மடியாக முழு மடியாக நிறைந்துவராதா என்கின்ற அங்கலாய்ப்பு; அப்படி வந்தால் இன்று எவ்வளவு பங்குப்பணங் கிடைக்கும் என்ற கனவுலகச் சஞ்சரிப்பு. அவர்கள் கவனத்திற்கு இவ் வளவு அலைப்பு. எனவே சள்ளை வலைப்பாடு பொறுக்கிப்பையன்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

“அடேய்! கள்ள எலி! கவனம்; மென்னிய முறிப்பன்”

பொறுக்கிப்பயல் ஒருவன் ஒரு தொழிலாளியினால் எச்சரிக்கப்படுகிறான்.

“முறிப்பேன் எண்டு சொல்லிப்போட்டு உடாம, முறிச்சிக் கையில் கொடு.”

இப்படி மற்றொருவன் அவனுக்கு ஆலோசனை கூறு கிறான்.

கொண்டோடி வலைத்தொழிலின் கருமாதிப் பொழுது வலை கரைசேரும் வேளை தான். அந்தக் கெடுபிடியான கட் டத்திலுங்கூட கள்ள எலியைக் கவனிக்கத் தொழிலாளர்கள் தவறமாட்டார்கள்.

கள்ள எலி வலையடிக்கு வந்துவிட்டானென்றால், முத லாளிமாருக்கும் வியாபாரிகளுக்கும் முகச்சுளிப்பு. தொழி லாளர்களுக்கோ குலை நடுக்கம். இவனால் அவர்கள், முத லாளிமாரால் வறுத்தெடுக்கப்படுவார்களே! வறுத்து! மற் றப் பையன்கள் மீது ஒரு பங்கு கவனம் செலுத்தினால், அவன் மீது மூன்று மடங்கு.

அவனது இயற் பெயர் முகம்மதலி. அவனுடைய தொழில் திறமைக்காக ஏக அபிப்பிராயமாகக் கிடைத்த பட்டப்பெயர் தான் கள்ள எலி என்பது. 3

மீன்மடி கரை சேர்ந்துவிட்டது. முக்கால் மடி மீன், அவ்வளவுங் கலப்பற்ற கீரிச்சூடை. மடியையும், வலையை யும் இணைத்துள்ள கயிற்றை உருவி எடுத்துவிட்டு மடியி லுள்ள மீனைக் கூடைகளால் அள்ளுகின்ற வேலை நடை பெறுகிறது. மடிவாயை அகற்றிப்பிடிக்கும் பாவனையில் எலி யின் கை மடிவட்டைத் தீண்டுகிறது.

“கள்ள எலி! எடுறா கைய!” என்ற கதறலுடன் அவன் கையில் கூரிய நகங்களால் நிமிண்டி எடுக்கிறான் ஒருவன், அலியின் கை பின்வாங்குகிறது.

இதெல்லாம் அவனுக்குச் சர்வசாதாரணம். புலி பதுங்குகிறதென்றால், பின்வாங்கிவிட்டதென்று அர்த்தமா?

கண்ணை மூக்கைப் பார்த்து மடிவட்டில் இலாகவ மாகக் கையைப்போட்டு, கூடை குத்தி அள்ளும்போது, பிதுங்கிவழிந்த மீன்களில் நான் கைந்தை ஒரே அள்ளாக அள்ளி வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விடுகிறான் அது தேர்ச்சி பெற்ற கை. ஒரு முறையோடு ஓய்ந்து பழக்க மற்றது.

“சிக்கு, குள்ள நரிப் பயலே! எடுறா கைய”

‘பளீர்’

அலியினுடைய மடியின் விம்முதலைக் கண்ணுற்ற தொழிலாளியொருவனின் நாவும், கையும் மேய்ந்த மேய்ச்சல்… இதற்கெல்லாம் சளைப்பவனா அவன்? கன்னத்தைப் புலால் படிந்த கையால் மெல்ல நீவிக்கொண்டான். மீண் டும் ஓர் அள்ளு. மீண்டும்…

மீன்மடி காலியாகிவிட்டது. அதனை அலைவாய்க் கரை யில் உதறிக்கழுவ, வலைபோடும் சிறுவர்கள் எடுத்துச்செல் கிறார்கள். எல்லார் கவனமும் திடலில் குருத்து மணவில் பரப்பப்பட்டுள்ள மீன் கும்பத்தை நாடிவிட்டது.

மீன் கும்பத்தைச் சுற்றி வேலி கட்டினாற்போல ஜனக் கும்பல். முதலாளிக்கும் வியாபாரிகளுக்குமிடையே பேரம் நடைபெறுகிறது.

ஜன வேலியின் பின்னால் பொறுக்கிகளின் போரணி முழுச் சந்திர வியூகத்தில் நிற்கிறது. பெரியவர்களின் காலி டைகளினூடே பையன்களின் கால்களும், கைகளும் மெல்ல மெல்ல ஊர்கின்றன. அவர்கள் இறாஞ்சி எடுக்கும் மீன்கள் பைகளுக்குள்ளோ மண்ணுக்குள்ளோ தஞ்சமடைகின்றன.

உஷாராக நின்ற தொழிலாளி ஒருவன் பையனொருவனின் கையைக் கால்களால் கிட்டிப்பிடித்து பொறியில் பட்ட எலியாகத் துடித்துத் தன்னை விடுவித்துக்கொண்டு ஓட்டமெடுக்கிறான்.

“அன்னா காலால இழுக்கிறானுகள்”

‘பளீர்! பளீர்!’

“ஹறாமிச் சாதாக்கள் ! கள்ள ராஸ்கல்கள்!”

‘பட்! படார்! படார்!’

“ஆய்! அடிக்காத காக்கா…!”

“அன்னா மடியில் கட்டுறாண்டா! பென்னம்பெரிய மாப்புள்ளக் கீரிய கள்ள எலி மடியில் கட்டுறாண்டா !”

சக தொழிலாளியின் குரலால் ஆட்பட்ட ஒருவன் அலியின் மீது பாய்ந்து சள்ளையிலே ஓர் உதை விடுகிறான். அலியோ சுருண்டுபோய் – விழுகிறான்,

2

இதைப்போல அப்பனான அடி, உதை, ஏச்சுக்களை யெல்லாம் வாங்கிப் பழக்கப்பட்டவனாயிற்றே அலி. சேக ரித்த மீன்களை இரு கோவையாகக் கொடியிலே கோத்து நீயிழு, நானிழு என்று சுமக்கமுடியாமற் சுமந்து செல்கின்ற அவனது நடையிலும் முகபாவனையிலுந்தான் எவ்வளவு அலட்சியம், வீறாப்பு! கூடவே, வலையிழுத்துக் கறிக்கு மீன் வாங்கிய ஒரு கிழவனும் தள்ளாடித் தள்ளாடி நடந்து செல் கிறார். கிழவன் அலியோடு மெல்லக் குரல் கொடுக்கிறார்.

“மனே! நீபட்ட ஆக்கினையையும் ஏச்சையும் நெனச்சா எண்ட வகுறு கொதிக்குது”

“நோவையும் ரோஷத்தையும் பாத்தாக் கறியாகுமா?”

“அதுக்காகக் களவெடுக்கிறதா?”

“கை நெறைய அள்ளித்தர மாமா மச்சானா தோணி வல் வச்சிருக்கான்?”

“சும்மா ஏன் தரவேணும்? பாடுபட்டாப் பலன் கிடைக்கும்! என்னப்பாரு; வலையிழுத்தன் கூலி கெடச்சிச்சி.”

‘நான் வலையிழுத்தாப்போல தரவா போறானுகள் ? ம்… உட்டுத் தள்ளுங்க.”

“ஏன் தராம? செய்த வேலைக்கிக் கூலி தராமா முடி யுமா? தராட்டி அதட்டிக்கேட்டு வாங்குறது. அடிதான் ஒருபக்கம் போகட்டும். இந்த நாத்த மீனுக்காகப் பத்து மாதம் சுமந்து படாதபாடும் பதினெட்டுப் பாடும் பட்டு வளத்த உம்மாவுக்கு இவ்வளவு பேச்சி வாங்கிக் குடுக்கலாமா? அவனுகள் சொன்ன உலவியத்தையும், நீ பட்ட அடி உதை யையும் கேள்விப்பட்டா அந்தப் பித்து மனசு என்ன பாடு படும்?”

“ம்… பாப்பம்…”

3

நீண்ட பெருவயிற்றினுள் கொண்டோடி வலையினை அடக்கிக்கொண்டு, வயிறு முட்ட இரை விழுங்கிய பேய்ச் சுறாக்கள் போல அசைந்தசைந்து, எற்றும் சிற்றலைகளுக்கு எவ்விக் குதித்துத் தோணிகள் நகர்கின்றன.

மோனத் தவமியற்றும் தவசிபோல மருதமுனை மத்திய வீதியின் அந்தத்தில், மண்ணெடுத்த பெருங்குழியின் ஓரத் தில் நிற்கின்ற அந்த ஒற்றைப்பனைக்கு நேரே கடலில் நங் கூரம் பாய்ச்சிக் கிடக்கும் தோணியின் வலைக்காலில் குழுமி யிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக முகம்மது அலியும் நிற் கின்றான்.

பதல்ல ” சுக்கான் பிடிக்கும் சவளை ஒரு கையால் பற்றியவண் ணம் மறு கையை விரித்துக் கண் புருவத்தில் வைத்தவாறு கடலின் எழுவானை நோக்கி நீளக் கண்வைத்த ஆழப் பார் வையுடன் தோணியின் முகரியில் கம்பீரமாக நிற்கும் தண் டயலின் பார்வையில் ஒரு பெரிய மீன் சிவப்புத் தோன்றி யிருக்க வேண்டும். கரையில் வலைக்காலில் நிற்பவர்களுக்கு உஷார் சமிக்ஞை காட்டிவிட்டுத் துடுப்பை எட்டிப்போடுகிறர். தோணியின் நான்கு தண்டுக்கைகளும் கோபாவேசத் தோடு கடலின் கன்னத்திலே அறைவது போல உந்தித் தள்ள தோணி கடலைக் கிழித்து விரைகிறது. மந்து பிடிப்ப வர்கள், வலை வடுபவர் எல்லாரும் இயந்திரமாக இயங்கத் தலைப்பட்டுவிட்டனர்.

தோணி மீன்பாட்டத்தை வளைந்துவிட்டது. வலையின் இரு கால்களும் இழுக்கப்படுகின்றன.

“ஏலே … லா… வல…”

”ஓவே.. லா., வல..”

“கொட்டிக் கிழங்குக்குப்”

“போனங்கா லாத்தண்டே”

“கோவிச்சுக் கொண்டாராம்” “பண்டாரம்”

“அவிச் சுரிச்சி”

“கட்டிலே போட்டா”

“சிரிச்சிக் கொண்டாராம்”

“சிரிச்சிக் கொண்டாராம்”

“பண்டாரம்”

“இப்படிக் கொந்த”

“மச்சானே”

“ஓட்டிலே போட்டு”

“வறுத்திடிச்சி”

“வாயில போட்டால் பால்”

“ஆகாதோ”

“காத்து வாற”

“நேரம் பாத்துத்”

“தூத்தி விட்டால்”

“ஆகாதோ”

“ஏலேலா வலி”

“ஓவேலா வலி”

வலைபோடும் பையன்கள் பிஞ்சுக் குரல்களின் கூட்டணி அமைத்துக்கொண்டு தங்கள மொழிநடையில் கானம்பிழிந்து, அயர்வையும் அலுப்பையும் விரட்டியடித்த வண்ணமே வலையிழுக்கிறார்கள். அவர்களின் தமிழிற் குழைந்த தேனிசையிற் கிறங்கி இறுமாந்தவர்களாகப் பெரியவர்கள் வலையிழுக்கிறார்கள். பாட்டின் ஒரு தொடர் முடிய, அடுத்த தொடர்…அதுமுடிய அடுத்தது…

பள்ளியிலே, திறமையான மாணவன் எல்லாப் பாடங் களிலுமே திறமையாக இருப்பதில்லையா? முகம்மதலி மீன் கள வெடுப்பதில் மட்டுமல்ல, வலையிழுப்பதிலும், அம்பா பாடுவதிலுங்கூடச் சூரனாகவே இருக்கிறான். சல்லாரி முழங்கு வதுபோன்ற கணீரென்ற குரலில் பாட்டின் முதலடியைத் தூக்கிக் கொடுக்கும் பிரதான பாகத்தை அவனே வகிக் கிறான்.

கயிறு முடிந்து, வலையின் கடைசி வட்டும் கரைக்கு வந்துவிட்டது. தோணியின் முகரியில் நிற்கின்ற தண்டயல் இரு கைகளையும் மாறிமாறிக் காட்டி, படம் எடுத்துப் பாம் பாட்டம் ஆடி வலையிழுப்பவர்களை உஷார்படுத்துகிறார், இரண்டாம் மூன்றாந் தண்டயல்கள் அவருக்கும் மேலாக, மாயத வண்ணமாக மாய்கிறார்கள், கரைத் தண்டயல் அவர் களையும் விஞ்சி நிற்கிறார். வலை இழுப்பவர்களின் தாய். பெண்டிர், சகோதரிகளெல்லாரும், தண்டயல்மார் முதன்மை யூக்கங்கள் ஆகியோரது நரகமாகக் கொதிக்கின்ற வாய்களால் அலைவாய்க் கரைக்கு இழுத்துவரப்பட்டு, மான பங்கப் படுத்தப்படும் கண்ணராவி வேறு. அந்தத் தூஷணை கள் உள்ளத்திலிருந்து பிறப்பனவல்ல என்பது உண்மை . தொழிலாளரது உரோசத்தைச் சீண்டி வேலைவாங்கும் நோக்கமாக உதட்டளவிலே பிறந்து மடிபவை.

இதுவரை தூரத்தே நின்று புதினம் பார்த்துக்கொண் டிருந்த பலர் அப்பொழுதுதான் வந்து வலையை இழுக்கிறார் கள். அவர்கள் வலை இழுப்போருக்கு உதவுகிறார்களா? அல் லது இழுப்பவர்களுக்கு மேலும் பழுவாகத் தொங்குகிறார் களா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்,

மீன் மடி கரை சேர்ந்து விட்டது. பொறுக்கிப் பையன் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். கள்ள எலி தங்களோடு ஒட்டாமல் நிற்பது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஒரு வகையில் அது அவர் களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆசாமி சம்பளத்துக்கு வலை போடுகிறானாக்கும் என்று எண்ணிக்கொண்டனர். ஏனென்றால் கறிமீன் வாங்குபவர்கள் தோணி தள்ளும் நேரத்துக்கே ஆஜராகி ஆரம்பம் முதலே வலை இழுப்பார் களா? வலை கரைசேருந் தறுவாயிலல்லவோ வலையைப் பிடித்துத் தொங்கவேண்டும்.

கறிமீன் பகிருங் கட்டம். ஒருவர் கூடை நிறைய மீனோடு திடலுக்குச் செல்கிறார். அவருக்கு உதவியாக இன் னும் இருவர் செல்கிறார்கள். பின்னாலே ஒரு பெருங்கூட்டம் தொடர்கிறது.

மேட்டிலே நிற்கின்ற கனவான்களுக்கு முதற்பங்கு போடப்பட்ட பின் சண்டியர்களுக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள்…

கூடை காலி. அப்பா விகள் வயோதிபங்களோடு, முகம்மதலியும் நெரிசலில் தள்ளுண்டு, துவைபட்டு, ” மாமா! நான் வலையிழுத்தேன் !” “மச்சான்! எனக்கு மீன் “காக்கா எனக்கில்லையா?”இப்படிக் கெஞ்சியது தான் மிச்சம். அவன் குரல், அதன் உருக்கம் எல்லாம் பகிர்ந்தவர் களின் செவியைத் தீண்டவில்லை.

மேலுஞ் சில கனவான்கள் வருகை தருகிறார்கள். அவர்களைக் கண்ட கரைத் தண்டயல், கும்பத்திலிருந்து அள்ளிக் கொடுக்கிறார்.

ஒரு பக்கமாக வெம்மை கும்மலால் குமைந்து கண் கள் கசிந்து நின்ற முகம்மதலி அதைக் கண்ணுற்று கரைத்தண்டயல் பக்கமாக நெருங்கி அவரிடம் விநயமாகக் குரல் கொடுக்கிறான்.

“பெரியப்பா! நான் தோணி தள்ளி கவுத்தில இருந்து வலையிழுத்தன்; எனக்கு மீன் கிடைக்கல்ல”

“நீ இழுக்காட்டி எங்கடவல கர சேராதாக்கும்?”

இது தண்டயலின் பதில்.

“சேந்திருக்குந்தான். ஆனா, நான் அம்பாப்படி வல யிழுத்தேனே? நீங்களும் பாத்தயள் தானே?”

“ஒன்ன ஆருடா இழுக்கச் சொன்ன?”

“ஒங்களக் கேட்டுத்தான் மத்தவங்கெல்லாம் இழுத் தாங்களா?”

‘பனீர்! பனீர்!!’

“கள்ள நாயே! வாய்க்கு வாயா கதக்கிறாய்?”

கரைத்ண்டயலின் பக்கத்தில் நின்ற ஓர் இடக்கைப் பேர்வழியின் கையும் நாக்கும் நீண்ட நீளந்தான் அவை.

அவனது அங்கை அப்படியே பதிய அலியின் கன்னம் கன்றிச் சிவந்து குவியலில் கிடந்த செங்கலவாய் மீனைப் பழிக்கிறது. அவன் படாத அறையா? கேட்காத தூஷனையா? அப்பொழுதெல்லாம் அவன் இப்படிக் கலங்கியதில்லை. அவன் கண்கள் கரைந்தண்டயல் அணிந்திருக்கும் பச்சவடச் சிறுவால்போலச் சிவந்துவிட்டன. பொங்கும் அலைபோலப் பிரவாகமெடுக்கின்றன. ஒரு மூலையிலே குந்தியிருந்து விக்கி விக்கிப் பிலாக்கணம் வைக்கிறான். அவனை யாருமே பொருட் படுத்தவில்லை.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து, கொடுக்கை அவிழ்த்துக் கண்களைச் சாரனால் துடைக்கிறான். பின் கடலை, காலைச் சூரியனை, அங்கு குழுமி நிற்கும் மனிதக் கும்பலை, மீன் கும்பத்தையெல்லாம் அவன் கண்கள் வரிசைக் கிரம மாக வெறிக்கின்றன,

ஓர் இராணுவ வீரனின் கம்பீரத்துடன் நெஞ்சை முன்னிறுத்தி, மனிதக் கூட்டத்தை இடித்து விலக்கிக் கொண்டு மீன் குவியலில் பாய்கிறான். பாய்ந்தவன் மீனில் இரு கைகளும் கொள்ளுமளவுக்கு ஓர் அள்ளு அள்ளிக் கொண்டு விடுவிடென்று நடையைக் கட்டுகிறான்.

‘ஐஸ்’ போட்ட சுறாக்களை நிறுதிட்டமாக நாட்டி வைத்த பாவனையில் எல்லாரும் வாயடைத்துப்போய் நிற்கிறார்கள்.

அவன் பாட்டுக்கே விடுவதாவது சுட்டிப் பேர்வழி யொருவன் அலியைப் பாய்ந்து துரத்துகிறான்.

எலியைப் பதுங்கிப் பிடிக்கலாமொழிய, துரத்திப் பிடிக்க முடியாதே!

(யாவும் கற்பனை)

– தினகரன் 1967

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *