‘‘வெங்கட்!’’
‘‘சார்?’’
‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’
‘‘பதினோரு மணிக்கு சார்!’’
‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’
‘‘ஆமா சார்… சரியா பதினோரு மணிக்கு இங்கே வந்துடறதாச் சொன்னாங்க!’’
‘….’
‘‘என்ன சார் யோசிக்கிறீங்க?’’
‘‘ஒ… ஒண்ணுமில்லே…’’
‘‘புரியுது சார். சங்கடப்படாதீங்க. அவனவன் பொண்டாட்டிக்கு ஒட்டியாணமும் சின்ன வீட்டுக்கு நெக்லஸ§ம் செய்து போடறதுக்கு லஞ்சம் வாங்கறான். நீங்க ஒரு உயிரைக் காப்பாத்தத்தானே வாங்கறீங்க? தப்பில்லை சார்!’’
‘‘சொந்தப் பொண்டாட்டியின் உயிரைக் காப்பாத்தன்னு சொல்லு!’’
‘‘அதனால என்ன சார்… உங்களையே நம்பி வந்து, உங்களோடு இத்தனை வருஷங்களா சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்டவங்களுக்கு இதுகூடச் செய்யலைன்னா எப்படி சார்? கொடுக்கப் போறவனும் ஒண்ணும் கஞ்சிக்கு வழியில்லாதவன் இல்லே. எங்கோ பதுக்கிவெச்சு செல்லரிக்கப்போற காகிதங்கள் இப்படியாவது பயன்படட்டுமே சார்!’’ என்றான் வெங்கட்.
ராமலிங்கம் பலகீனமாகச் சிரித்தார். ‘‘தப்பு செய்யறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் இந்த மாதிரி ஏதாவது நொண்டிச் சமாதானம் சொல்லித்தானே மனசாட்சியை அடக்கணும்?’’
‘‘ஏன் சார் அப்படி நினைக்கிறீங்க? நாம மறுத்தாலும் அந்தக் காரியம் நடக்கும். வேற எவனையாவது பிடிச்சு முடிச்சுக்கப் போறான். அதுக்கு நாமே…’’
‘‘சரி விடு! அதான் முடிவு பண்ணியாச்சே. நான் ஆஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வரேன்!’’
‘‘சரி சார்’’ எனத் தலையாட்டினான் வெங்கட்.
ராமலிங்கம் கிளம்பிவிட்டார். பயணம் முழுக்க, மனம் குலுங்கியது. ‘கடைசியில் தானும் விழுந்துவிட்டோமே’ என்ற குற்ற உணர்ச்சி ஊசியாகக் குத்தியது.
ராமலிங்கம் மத்திய அரசுப் பணியில் இருந்தவர். பணம் தாராளமாகப் புரளும் இடம். ஆனாலும் பைசாகூடத் தொடாமல் நேர்மையாக தனது வேலையைச் செய்துகொண்டு இருந்தார். இதனால் மற்றவர்களுக்குச் சில இடைஞ்சல்கள் வந்தன. எரிச்சல்பட்டார்கள். அவரைத் தங்கள் வழிக்கு இழுக்க முயன்றார்கள். முடியாமல் போனதும், திட்டமிட்டு வேலையை விட்டு நீக்க முயன்றார்கள்.
சாது மிரண்டது. தனக்கு நடந்த அநீதியை பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் போட்டுச் சொன்னார் ராமலிங்கம். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பரபரப்பானது. அரசு அலறிக்கொண்டு அவரைத் திரும்ப வேலைக்கு அழைத்தது. ஆனால், மனிதர் தானாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பிழைப்புக்கு ஒரு பெட்டிக்கடையை வைத்துக்கொண்டு, பொதுச் சேவையில் இறங்கிவிட்டார்.
அப்போது ஆரம்பித்தது ராம லிங்கத்தின் போராட்டம். சுற்றி உள்ள மக்களின் மரியாதைக்குரிய சேவகன் ஆனார். கவுன்சிலராக இருந்தார். இப்போது சுயேச்சை எம்.எல்.ஏ.வாகி, மக்களிட-மும், அதி காரிகளிடமும் நல்ல செல்வாக்கு.
அவரோடு வாழ்ந்து துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட காஞ்சனா இப்போது இதய நோயாளி யாக மருத்துவமனையில் இருக் கிறாள். ஒரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கள் சொல்லிவிட்டார்கள்.
செல்வாக்கும் நேர்மையும் இருந்த அளவுக்கு ராமலிங்கத்திடம் பணம் இல்லை. ஆபரேஷன் செலவுக்கு என்ன செய்வது எனப் புரியாமல் அவர் தவித்துக்கொண்டு இருந்தபோதுதான், உதவியாளன் வெங்கட் தயக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னான்…
‘‘ஒரேயரு கையெழுத்து சார். பிரச்னை எதுவும் வராது. உங்க கிட்டே சொல்லத் தயக்கமாதான் இருக்கு. அம்மாவோட நிலைமை-யைப் பார்க்கறப்ப மனசு தாங்க லீங்க. என்னைத் தன் மகன் மாதிரி நடத்தினவங்க இப்படி நோயாளியா படுத்துட்டு இருக்கிறது கஷ்டமா இருக்கு. அதான், தைரியமா…’’
‘‘சரி, விஷயத்தைச் சொல்லு’’ என்றார் ராமலிங்கம்.
வெங்கட் சொன்னான். ராம லிங்கம் அவனைச் சீற்றமாகப் பார்க்கவில்லை. தத்துவங்கள் பேசவில்லை. அமைதியாக இருந்தார். தானும் எதற்கும் தயா ராகிவிட்டோம் என்கிற உண்மை அவருக்கே உறைத்தது.
மருத்துவமனையை அடைந்து, மனைவி இருந்த அறையில் நுழைந்தார். அங்கே அமர்ந்திருந்த மகள் எழுந்துகொண்டாள்.
ஒற்றை மகள். தன்னைப் போலவே ஒரு நேர்மையாள-னிடம் அவளை ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்து, தேடிப் பிடித்துத் திருமணம் செய்துவைத்தார். மருமகன் மாதச் சம்பளக்காரன். அதனால், அவனாலும் இந்தத் துக்கத்தில் கையைக் கட்டி நிற்கத்தான் முடிந்ததே தவிர, உதவ முடிய வில்லை.
‘‘நீ சாப்பிட்டியா சரோ?’’
‘‘இன்னும் இல்லப்பா!’’
‘‘சரி, நான் பார்த்துக்கறேன். நீ போய் கேன்டீன்ல சாப்பிட் டுட்டு வா!’’
சரோஜினி அகன்றதும், மனைவியின் அருகே அமர்ந்தார் ராமலிங்கம்.
‘‘என்னங்க, முகம் ஒரு மாதிரியா இருக்கு?’’ என்றாள் காஞ்சனா பலவீனமான குரலில்.
‘‘இ… இல்லையே!’’ என்றார்.
‘‘எனக்குத் தெரியாதுங்களா? உங்க முகம் சரியில்லை!’’
‘‘அது, வேற ஒண்ணுமில்லே. இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு ஆபரேஷன் இல்லியா… அதை நினைச்சுதான்…’’
‘‘நானே கேட்கணும்னு நினைச்சேன். ஆபரேஷனுக்கு லட்சக்கணக்குல செலவாகுமே, பணத்துக்கு எப்படி ஏற்பாடு பண்ணப்போறீங்க?’’
‘‘தெரிஞ்சவங்ககிட்டே கடன் கேட்டிருக்கேன்…’’
‘‘உங்களுக்குதான் கடன் வாங்கறதே பிடிக்காதே? அரசியல்வாதிகிட்டே கடனாக் கூட பணத்தை வாங்கக்கூடாது. அது லஞ்சத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் மாதிரின்னு சொல்வீங்களே..?’’
ராமலிங்கம் புன்னகைத்தார். ‘‘சில சமயம் சில விஷயங்கள்ல, சில கொள்கையில் இருந்து இறங்கி வரவேண்டிதான் இருக்கு’’ என்றார்.
சற்று மௌனமாக இருந்த காஞ்சனா, ‘‘என்னங்க, நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருந்திருக்கேனா?’’ என்றாள்.
‘‘இது என்ன கேள்வி காஞ்சனா? நீ நல்ல மனைவியா இருந்ததாலதான், நான் நல்ல அரசியல்வாதியாவே இருக்க முடிஞ்சுது!’’
‘‘அப்படியே என்னையும் அறியாம எப்பவாவது உங்க கொள்கையில குறுக்கிட்டு இருந்தா மன்னிச்சுடுங்க. நடக்கப் போற ஆபரேஷன்ல நான் பிழைப்பேனான்னு…’’
ராமலிங்கம் அவள் வாயைப் பொத்தினார். ‘‘அப்படிச் சொல்லாதே! கண்டிப்பா பிழைப்பே. அதுக்குத்தானே இத்தனைப் போராட்டம் செய்துட்டிருக்கேன்!’’
‘‘பிழைச்சா சந்தோஷம்தான். உங்களை மாதிரி நேர்மையான மனிதரை புருஷனா அடைஞ்சதுக்குப் பெருமைப்படறேங்க!’’
ராமலிங்கம் அமைதியாக இருக்க, காஞ்சனாவே தொடர்ந்து பேசினாள்… ‘‘காமராஜரையும், கக்கனையும் இப்போ இருக்கிற அரசியல்வாதிங்ககிட்டே சுட்டிக் காட்டி அறிவுரை சொல்ற மாதிரி, நாளைய அரசியல்வாதிகள் கிட்டே உங்களைச் சுட்டிக் காட்டுவாங்க. இது நிச்சயம் நடக்கும்க’’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னாள் காஞ்சனா.
‘‘சரி, காஞ்சனா… நீ ரெஸ்ட் எடு!’’ என்று எழுந்துகொண்ட ராமலிங்கம், மகள் வந்ததும் கிளம்பிவிட்டார்.
‘காஞ்சனா என் மீது எத்தனை நம்பிக்கை வைத் திருக்கிறாள்? சொன் னாளே ஒரு வார்த்தை… காமராஜர் போல், கக்கன் போல் நான் உதாரணம் காட்டப்பட வேண்டும் என்று! அதற்குத் தகுதியானவனா நான்? சரி, இப்படியே எல்லாரும் சொல்லிக்-கொண்டு இருந்தால் எப்படி? அவர்கள் போல் வாழ நாம் ஏன் முயற்சி செய்யக் கூடாது?’
ராமலிங்கம் வீட்டை அடைந்தபோது, அவர்கள் காத்திருந்தார்கள். ஒரு இளைஞன், நடுத்தர வயதில் அவன் தந்தை, அவர்களின் உதவியாளராக சற்றே வயதான ஒருவர் என மூவர்.
‘‘வணக்கம் சார்! வெங்கட் உங்ககிட்ட விஷயத்தை…’’ என்று வயதானவர் மெதுவாக ஆரம்பிக்க… ராமலிங்கம் கையமர்த்தினார்.
‘‘சொன்னார். ஆனா, நீங்க என்னை மன்னிக்கணும். நான் உங்களை இங்கே வரச் சொன்னது பணத்தை வாங்கிட்டு உங்களுக்கான காரியத்துக்குச் சம்மதம் சொல்றதுக்கில்லை. புத்திமதி சொல்லத்தான் உங்களை வரவழைச்சேன். தப்பான அரசியல்வாதிங்களை உருவாக்கறதே உங்களை மாதிரி ஆட்கள்தான். நேர்மையா வாழ நினைக்கிற என் போன்றவர்களைச் சூழ்நிலைக் கைதியாக்கி நீங்க ஜெயிச்சுடறீங்க. பழி மொத்தமும் எங்களைச் சேருது. வேண்டாம். தயவு செய்து இனிமேலாவது மாறுங்க. இதே காரியத்தை நீங்க வேற யார் மூலமாவது செய்ய நினைச்சாலும், விடமாட்டேன். வெளிச்சம் போட்டுக் காட்டுவேன். அதனால ஒழுங்கா நடந்துக்கங்க. நீங்க போகலாம்’’ என்றார் ராமலிங்கம் உறுதியான குரலில்.
அவர்கள் வெளியேற, வெங்கட் திகைப்புடன் நெருங்கி, ‘‘என்ன சார்… திடீர்னு இப்படிச் சொல்லிட்-டீங்க? ஆபரேஷனுக்கு என்ன செய்வீங்க?’’ என்று கேட்டான்.
‘‘அவளுக்கு இன்னும் ஆயுசு மிச்சமிருந்தா பிழைச்சுப்பா. விடு…’’ என்றபடி விலகினார்.
அடுத்த இரண்டாவது நாள் வெளியான அந்த வார இதழில், பரபரப்பான விஷயம் இடம்பெற்றது. அதன் இணைய தளத்திலும் அந்தக் காட்சி ஓடியது. ராமலிங்கத்திடம் பணம் கொடுத்து ஒரு காரியத்தைச் சாதிக்க முயல்வதும், அவர் தீர்மான-மாக மறுத்துப் பேசுவதும் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அப்படி யானால் வந்தவர்கள்..?
‘‘யெஸ்! இதெல்லாம் ஒரு நாடகம்தான்!’’ என்று புன்ன கையோடு ராமலிங்கத்துடன் கை குலுக்கினார் அந்தப் பெரியவர். அவர்தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர். அவரே தொடர்ந்தார்…
‘‘நாலு அயோக்கியனுங்களை அடையாளம் காட்டறதைவிட, ஒரு யோக்கியனை அடையாளம் காட்டறது புண்ணியமான காரியம்னு நினைக்கிறவன் நான். தப்பான அரசியல்வாதிகளைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கிற ஜனங்ககிட்டே, இதோ ஒரு நேர்மைவாதின்னு காட்டினா என்னன்னு ஒரு எண்ணம் வர, உடனே செயலில் இறங்கினோம். நெருக்கடியான நிலையில இருக்கிற ஒரு நல்லவரை அணுகி, பணத்தைக் காட்டி திசை மாற்ற முயற்சிக்கணும். அவர் உண்மையிலேயே நேர்மையானவரா இருந்தா நிச்சயம் மாற மாட்டார்னு நம்பினோம்’’ என்றார்.
அன்று வந்தவர்களில், நடுத்தர வயதுள்ளவர் உதவியாசிரியர். அவர் தொடர்ந்தார்… ‘‘உடனே எங்களுக்கு உங்க ஞாபகம்தான் வந்தது. அதான், உங்களைத் தேர்ந்தெடுத்தோம். நீங்க வரச் சொன்னதும், எங்க நம்பிக்கையில் சின்ன தடுமாற்றம் ஏற்பட்டுது. ஆனா, உங்களை வந்து பார்த்த பிறகு, சரியாயிடுச்சு. நீங்க பேசினதைப் பார்த்த, படிச்ச ஜனங்களுக்கும் சந்தோஷம். ‘நமக்காகக் கவலைப்பட இவரை மாதிரி சிலர் இன்னும் மிச்சம் இருக்காங்க. இது போதும்… நமக்கு நல்லது நடக்கும்’கிற நம்பிக்கை அவங்களுக்கு வந்திருக்கு. பாருங்க, எவ்வளவு பாராட்டுக்கள்!’’
இப்போது இளைஞன் பேசினான்… ‘‘அது மட்டும் இல்ல சார், உங்க மனைவியோட ஆபரேஷனுக்கு உதவச் சொல்லி எங்க வாசகர்கள்கிட்டேர்ந்து பணம் வந்துட்டே இருக்கு. இதெல்லாம் நேர்மையா உழைச்ச வங்க, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம அன்போடு கொடுக்கிற பணம். இதை நீங்க எந்தத் தயக்கமும் இல்லாம வாங்கிக்கலாம். வாங்கிக்கணும். எங்களோட ‘ஆபரேஷன் தருமனு’க்குக் கிடைச்ச வெற்றி இது!’’
ராமலிங்கத்தின் கண்களில் நீர் துளிர்த்தது. ‘இந்த தருமனைக் காப்பாற்றியதே பாஞ்சாலிதான். லஞ்சச் சூதாட்டத்தில் என்னை நானே பணயமாக வைத்து இழக்க இருந்த நேரத்தில், தடுத்தாட்கொண்டவள் அவள் தான்’ என நினைத்துக்கொண்டவர், பேச முடியாமல் நெகிழ்ந்து நின்றார்.
– வெளியான தேதி: 06 ஆகஸ்ட் 2006