ஆகாயக் குஞ்சுகள்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 8,340 
 
 

மெல்லிய ஈரமான தாய்லாந்து பாங்கொக் விமான நிலையமானது மாதுளம் பழ முத்துகள் போல அழகாக இருந்தது. குளிரூட்டிகளின் ஈரக் காற்று நாக்கில் இனித்தது. செந்தாமரை மொட்டுகள் சிரித்தது போல தாய்லாந்து மங்கைகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தர்கள். ஆனால் சிந்துவுக்கு வேர்த்துக் கொட்டாத குறை. இது எதையும் ரசிக்கும் பக்குவத்தில் அவன் இல்லை இதை எல்லாம் ரசிக்க உண்மையான விசாவுடன் அவன் இன்னமொரு முறை வந்து போக வேண்டும் .

“”நீ அது தானே.. இண்டைக்கு இரவு என்னோட வாறியா? எண்டு கேக்கிறாங்க கர்மம்.., கர்மம்., நிக்கிறது தான் நிக்கிறான்… கொஞ்சம் நெருங்கி நிக்கிறானா? தெருப்பொறுக்கியள் வலிய வந்து இப்பிடி எல்லாம் பேச விட்டு கண்டும் காணாதவன் போல நிக்கிறான். கட்டிய கணவனையே – கட்டினவன் மாதிரி அருகில் ஒட்டி நில்லு – எண்டு கேக்க வேண்டிய நிலை எனக்கு; இது என்ன மனுசப் பிறப்பா இல்லை மரமா?” என குறுகுறுத்தாள் சிந்துவின் மனைவி கனிதா.

ஆகாயக் குஞ்சுகள்அவளின் முணு முணுப்பு உதடுகளுக்கு வெளியே உருண்டு சென்று சிந்துவின் காதுகளிலும் விழுந்தது.

அவன் வெறும் சிந்து இல்லை. சிந்து வெளி போல ஆழ அகலமானவன். இவ்வளவும் கேட்டு சும்மா இருப்பானா..

“”ஹலோ ஹலோ….. நீர் ஒன்றும் தாலி கட்டின பொண்டாட்டி இல்லை – ஞாபகத்தில் இருக்கட்டும். தப்பான முறையில் ஒட்டிக்கொண்டவர். அதையே சாட்டாக வைத்து பிளக் மெயில் பண்ணி என்னைச் சொந்த புருசனாக மாற்ற கனவு காணாதயும். என்னை விட உமக்கு இரண்டு வயது அதிகம் என்பதையும், உங்கிட அப்பா கட்டாயப்படுத்தினதால தான் நான் இந்த விளையாட்டுக்கே சம்மதிச்சனான் எண்டதையும் மறந்து போடாதயும்” என்றான் மண் விழுங்கிய குழந்தை போல மூக்கை சுழித்து அருவருத்தபடி சிந்து.

“”எல்லாம் என் தலை எழுத்து” என்பதாய் சுடிதாரை சீர் செய்து கொண்டு நெற்றியில் வழிந்த குறுமுடியை ஒதுக்கினாள் பனங்கிழங்கு போல இருந்த கனிதா.

இருந்தபோதும் சற்று முன் நடந்ததை நினைக்க சிந்துவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கனிதா நாயைக் கரிக்கும் பூனை போல சீறி, “”பொடாய் பொடாய்” என்று தாய்லாந்து பாசையில் மறுத்து அந்த தாய்லாந்துக்காரன் மீது வார்த்தைகளைத் துப்பிக்கொண்டிருக்க அருகில் தான் ஏதுமறியாது அணிலேறுவதை பார்க்கும் நாய் போல மேலேறும் விமானங்களைப் பார்த்து நின்றதையும், அவள் கடுப்பு தாங்க முடியாமல்

“”சிந்து…. அவங்க தப்பானவளா நினைச்சு என்னை அணுகிறாங்க” எனக் கேட்க.

“”அவங்க தாய்லாந்து பாசையிலா…. பேசினாங்க சொல்லவே இல்ல…” என தான் வடிவேலு குரலில் பதில் சொல்ல

பேசின மொழி என்ன என்றே தெரியாதவனுக்கு என்ன பேசினாங்க என்றா தெரியப் போகிறது? “”சுத்தம்” என அவள் முணுமுணுத்ததை எல்லாம் மீட்டிப் பார்க்க சிரிப்பு வந்தது.

சிந்து ஒன்றும் ஆரண்ய காண்ட சப்ப இல்லை. கூர்ந்த சிந்தனையாளன். இந்த மானம் கெட்ட – குண்டக்க மண்டக்க – நிலைக்கு வர ஈழத்தின் நாட்டுப் பிரச்னைதான் காரணம். நாடு என எண்ணியதும் அம்மா நினைவால் அவன் மனம் அவிச்ச உருளைக்கிழங்குபோல மென்மையாகியது. – நாட்டை விட்டு தப்பியாக வேண்டும். பல்கலைக்கழகத்தில் இயக்கப் பாட்டு பாடி பிரச்சாரம் செய்ததால் இராணுவம் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறது. அரச படை மட்டுமல்ல, அவர்களுடன் அவனின் அந்த “கருக்கு மட்டை கண் காறி’ மாமாவின் கடைக்குட்டி சுதாவும் தேடிக் கொண்டு இருப்பாள். ஊருக்குத் தெரியாமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்து விட்டான்.

– பருத்தித்துறை ஊராம் பவழக்கொடி பேராம் – என்ற கதை போல பாதி வழியில் நின்று கொண்டு கனவு கண்டு கொண்டு நின்றான் சிந்து.

கனிதா முனி தான் என்பது போல அவனையே முறைத்துக் கொண்டு நின்றாள்.

இப்படி ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளானதில் அவளுக்கும் விருப்பம் இல்லை தான்.

அவ்வளவுக்கு அவள் ஒன்றும் பணமோ, அழகோ, அறிவோ இல்லாதவள் இல்லை .

அவளின் தாய் தாய்லாந்து பெண்மணி- தந்தைதான் தாய்லாந்துக்குப் பிழைக்க வந்த இந்தியத் தமிழர்.

இப்படி – பஞ்சத்திற்கும் தாய்லாந்து வர்ணத்திற்கும் பிறந்த- பஞ்சவர்ணக்கிளி போல வெள்ளையும் மென்மையும் இணைந்து இருந்தாள். தலை முடி மட்டும் சோழன் பொத்தி தும்பு போல செம்பட்டை நிறத்தில் ஏதோ அடித்து வைத்திருந்தாள்.

பாவம் எங்கும் போக முடியாமல் இடைவழியில் முளித்துக் கொண்டு திரும்பி ஊருக்கு போனாலும் பயம் என்று இருந்த சிந்துவுக்கு உதவி செய்ய முன்வந்து “ஓம்’ என்று வாக்கு கொடுத்து பணமும் வேண்டி விட்ட அவளின் அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மனைவி வேசம் போட்டு ஐரோப்பா கொண்டு போய் விட ஒப்புக் கொண்டதன் விளைவே இன்று – கட்டிய மனைவியாய் இல்லாமல் கடவுச்சீட்டில் படமொட்டிய மனைவியாக வந்து, “”என்னோடு முட்டி நில் சிந்து” என நிற்கிறாள். இவனை இந்த தாய்லாந்து விமான நிலயத்தான் ஊடாகப் பிடி படாம ஐரோப்பா கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

“கட்டினதுகள் கட்டாத மாதிரியும் கட்டாததுகள் கட்டினா என்ன செய்ய வேணும் – என்று பயிற்சி எடுக்கிற இந்த காலத்தில் சிந்து இப்படி இருப்பது வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு. அவளும் கட்டாதவள் தான் ஆனால் நாகரீக உலகில் வாழ்வதால் ஏதோ கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறாள். வடலிக்குள்ள கிடந்த சிந்துவுக்கு இதுகள் எங்க தெரியப்போகுது என எண்ணி.

“”சிந்து நெருங்கி என்னோட கிட்ட நில்லு” என்றாள் மண்டைக் கட்டெறும்பின் கொடுக்கு போல கண்ணை அகல விரித்தபடி .

அவன், “”ஹலோ டீசண்டான கணவன் மனைவிகளும் பயணம் போவதுண்டு” என்றான்.

– முட்டினால் தான் முடிச்சது இல்லை என்றால் முடிச்சவித்தது என்று அர்த்தம் அல்ல என்ற தொனியில்.

கனிதாவின் கோபம் கண்ணில் மின்னி உதட்டில் வெடித்தது.

“”இங்கு யாரும் யாருக்கும் உறவு முறை நிரூபிக்க வேண்டியதில்லை. உண்மையான உறவு முறையாய் இருந்தால் இப்படி கள்ளமாக கடவுச்சீட்டில மட்டும் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். இங்குள்ள ஊழியர்களை நம்ப வைக்க அதை இதைச் செய்து தான் ஆக வேண்டும். அப்பா சொல்லும் போது மட்டும் “ஓம் …. ஓம்…..’ எண்டு ஓணான் மாதிரி தலையை ஆட்டினீர். இங்க வந்து குதர்க்கம் பேசுறீர். வெளிநாடு போக வேணும் எண்டால் நான் சொல்லுறபடி என்னோட ஒட்டிக் கொண்டு வாரும். இல்ல தாய்லாந்து ஜெயில்ல இரும்பு சங்கிலி கிலோ கணக்கில தூக்க போறன் – எண்டு ஆசைப்பட்டா… அப்புறம் உம்மிட விருப்பம். செய்யிறது ஓட்டு மாட்டு அதுக்குள்ள கதை மட்டும் வெள்ள வேட்டிக்காரன் மாதிரி” என்று எரி வெள்ளியாய் எரிந்து தள்ளி விட்டு முடிவில் ஒரு புன்னகையையும் உதிர்த்தாள் கொடுப்புக்குள் கனிதா .

கனி என்ற பெயருடன் கச்சல் காயாய் இருக்கிறாள் என்று எண்ணியபடி சற்று நெருக்கமாகவே நின்றான் சிந்து. அவள் என்ன நினைத்தாளோ? தெரியாது திடீரென வெடி அரசன் போல திமிர்ந்து வேண்டா வெறுப்பாக விலகி நின்றாள்.

சிந்து புரியாமல் விழித்த முழியே எல்லாவற்றையும் காட்டி கொடுத்து விடும் போல இருந்தது.

“”சிந்து…. கோம்ப திருடினவன் மாதிரி முளிக்காம சுவிங்கத்தை எடுத்து வாயில போடும் – நாலாவது கவுண்டரில முள்ளம்பன்றி தலையோட ஒரு நாதாரி என்னையே பாத்துக் கொண்டு இருக்கு. நானும் அவனைக் கண்டு கொண்டதாக காட்டிக் கொடுத்திட்டன். அவர் என்னைப் பார்த்து நெளியிறதப் பார்த்தா எங்கிட பருப்பை அவருட்ட அவிக்கலாம் போல கிடக்கு. பார்ட்டி கொஞ்சம் பொண்ணு வியாதிக்காரன் மாதிரி தெரியிறான். அனேகமா தன்ர கவுண்டருக்கு தான் நான் வருவன் எண்டு நினைக்கிறான். பாஸ் போர்ட்டை என்னட்ட தா. நான் உன்னை ஒதுக்கி வெறுக்கிற மாதிரி நடிப்பன். நீ கண்டுக்காத” என சிந்துவின் காதில் தரையை பார்த்து தாவணியை ஒதுக்கியபடி குசுகுத்தாள் கனிதா.

அவர்களின் முன்னும் பின்னும் உண்மையான கணவன் மனைவி மற்றும் உல்லாச பயணிகள் போடிங் உடைக்கும் அந்த வரிசையில் நின்றார்கள்.

மூக்கை பொத்திக் கொண்டு பேசுவது போல ஒரு பெண் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தாள். கனிதா நெஞ்சில் கையை வைத்து பெருமூச்சு விட்டபடி தலையை முகட்டை நோக்கி உயர்த்தினாள்.

சிந்துவுக்கும் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று தோன்றியது. ஆனால் என்ன என்று புரியவில்லை.

அவள் நெற்றியில் கையை வைத்துத் தாங்கியபடி

“”எங்கிட அ- 478 மொஸ்கோ விமானம் தயாரில்லையாம், வேற இடத்தில நிக்குதாம், ஏதோ இயந்திர கோளாறாம், குறித்த நேரத்திற்கு வெளிக்கிடாதாம் – எண்டு சொல்லுறாங்கள். சரியான நேரத்திற்கு போகாட்டி மொஸ்கோவில இருந்து உக்கிரையின் போற ஏற்பாடுகள் எல்லாம் பிழைச்சுப் போகும். இப்ப என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல. இரு வாறன். அப்பாவுக்கு போன் பண்ணி கேப்பம்” என்று விட்டு அகன்றவள் சற்று நேரத்திலேயே திரும்பி வந்தாள்.

“”அப்பா திரும்பி வரட்டாம். பிறகு யோசிப்பம் எண்டு சொல்லுறார். ரிக்கற் காசு அம்போ. திரும்பி எடுக்க முடியாது” என்றாள்.

சிந்து எப்படியாவது வெளிநாடு போய்ச் சேர வேண்டும் என்றும். இப்படியான பாதையில் இப்படி இப்படித்தான் போக வேண்டும் என அவன் முகவர்களும் செயற்பட்டார்கள். இதனால் அவன் அவர்கள் சொல்லும் மகுடிக்கு ஆடவேண்டியவனாய் கனிதா பின்னால் குனிந்தபடி நடந்தான்.

“”இனி தாய்லாந்தில் இருக்க முடியாது விசா முடிந்து விட்டது. அருகில் இருக்கும் கம்போடியாவுக்கோ, வியட்நாமுக்கோ போய் விட்டு மீண்டும் வரலாம். அல்லது அங்கிருந்து முயற்சிக்கலாம்” என்றார் கனிதாவின் அப்பா செல்வம் அண்ணா.

அன்று இரவே சிந்துவுடன் அங்கு கட்டி இருந்த மேலும் சில பயணிகளையும் பெரு நதி ஒன்றைக் கடந்து வேறு ஒரு நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். அது எந்த நாடு என்று தெரியவில்லை தெரிந்தும் செய்வதற்கு ஒன்றும் இல்லை. பயணம் முடியும் இடத்தில் படுத்தெழும்ப வேண்டியதைத் தவிர வேறு எதுவும் அவர்கள் கையில் இல்லை. ஆங்காங்கே பல இலங்கையர்கள் பல முகவர்களால் பயண ஓட்டம் தடைப்பட்டு விட்ட காரணத்தால் தொழுவத்தில் கட்டிய குதிரைகள் போல கட்டி வைத்து சாப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள். சிலருடன் கூப்பாடும் போட்டார்கள். கலியாணத்திற்கு வந்த சிலர் இடையில் தாலி கட்டிக் கொண்டார்கள். சிலரை கட்டிய தாலியையும் கழற்ற வைத்தார்கள் . “இது பாதாள உலகம் பாவ புண்ணியம் எல்லாம் அகலம்’ என்பது போல அநாகரிகம் நடந்தேறியது.

பூமியில் இருக்கிறோம் என்று மட்டும் தெரியும். எந்த நாடு என்று தெரியவில்லை கொண்டு வந்தவர்களும்

“”மூச்சு பேச்சு காட்டாமல் இருங்கோ. வெளிய திரிய வேண்டாம். எல்லா சாமான்களும் இருக்கு சமைத்து சாப்பிடுங்கோ” என கூறிவிட்டுப் போய்விட்டார்கள். கூடையால் அடைத்து விட்ட கோழி குஞ்சுகளை போல உணர்ந்தார்கள் .

பார்ப்பதற்கு இந்த நாட்டு மக்களும் தாய்லாந்துக்காரரின் தங்கையின் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். ஆண் பெண் இருவரும் இரு வேறு முறையிலேயே வணக்கம் சொன்னார்கள். தாய்லாந்து கலாச்சார முறைபடி ஆண்கள் “சபாடிகாப்’ என்றும் பெண்கள் “சபாடிகா’ என்று அரை மைலுக்கு இழுத்தும் வணக்கம் சொல்வார்கள். இது வியட்நாம் இல்லை என்று மட்டும் தெரிந்தது. தாய்லாந்து எழுத்து போலவே எழுத்துக்கள் உடைந்த முறுக்கு போல வளைந்து வளைந்து இருந்தது. வியட்னாம் எழுத்து ஆங்கில வடிவ எழுத்து என யாரோ எப்போதோ சொன்னது நினைவில் இருந்தது. மூன்றாவது நாள்தான் பிரெஞ்சு காலனியாக இருந்த லாவோஸ் என்னும் புகையிரதம் இல்லாத ஆனால் இலங்கையை விட 3 மடங்கு பெரிய நாடு என தெரிய வந்தது. தலைநகரம் வியன்ரியன். நாம் தாய்லாந்தின் அண்டை நாடான லாவோசில் இருக்கிறோம் என்றும் கண்டு கொண்டார்கள். கூடைக்குள் இருந்து தேடிய குட்டி நாடுகாண் பணயம் முடிவுக்கு வந்தது.

பாவப்பட்ட நாடு. பிலாக்கொட்டை குருவியை தவிர எல்லாக் குருவியையும் தின்று விட்டும் பசி தாளாத நாடு. பாம்புப் பயம் இல்லை. தின்றே அழித்து விட்டார்கள். இப்போது நாய்க் கறிக்கு நல்ல மவுசு. பூனை மட்டுமே புண்ணியம் செய்த பிறவி. அதுவும் எத்தனை நாட்களுக்கு என்பது சந்தேகமே. நத்தை சுட்டு நறுக்கு நறுக்கென்று சாப்பிடுவதைப் பார்த்தால் குடித்த தாய்பாலும் குமட்டி வாந்தி வந்துவிடும் போல இருந்தது.

அரிசியை நீத்துப்பெட்டியில் வைத்து அவிச்சு அதை “கவிச்சு’ என்று அழைத்து. மூங்கில் குருத்து அவிச்ச தண்ணியில நனைச்சு நனைச்சு சாப்பிட்டார்கள்.

மழை இல்லாத பிரதேசத்தில் தான் பஞ்சம் வரும் என்ற எண்ணம் இங்கே வந்ததும் தான் பொய்த்தது. வறுமைக்கு காரணம் அறிவைத் தவிர வேறில்லை என்று புரிந்தது. சிலு சிலு என ஆண்டு முழுக்க மழையும், சுடு வெய்யிலோ சுவிஸ் குளிரோ இல்லாத இடைநிலை வெப்பமும் கொண்ட நாடு. இதனாலேயே இங்குள்ளவர்கள் கிணற்றடி தேசிப்பழம் போல மஞ்சள் நிறத்தில் இருந்தார்கள் . ஆனாலும் என்ன முயற்சி இல்லாமையால் வறுமை.

தாய்லாந்து போல் இங்கும் ஆண்களுக்கு அல்ல, பெண்களுக்கே அதிக மவுசு. பெண்களே அதிக தொழில் துறையில் அதிதியாக இருந்தார்கள். பொருளாதாரம் அவர்களாலேயே வளர்ந்து ஆண் கட்டா காலியாக பொறுப்பின்றி சோம்போறியாகினான். முயற்சி குன்ற முடிவு பஞ்சம் என்றாகியது. விசித்திரமான அனுபவம். ஆனால் பயங்கரமான அனுபவங்களைக் கடந்து வந்தமையால் சிந்துவுக்கு இது எருமை மாட்டில் பெய்த மழை போல இருந்தது.

இங்கு எத்தனை நாட்களோ என மனம் விட்டுப் போனது. மூத்த பத்திரிகையாளர் கோமல் சொன்னது போல, “”திரும்பி வராட்டி கூட பரவாய் இல்லை என்று நினைச்சா எங்கேயும் பயமின்றி போகலாம்” என்பதை எண்ணி சிரித்துக் கொண்டான். சொந்த நாட்டுக்கு போகாம எங்க போனாலும் பரவாய் இல்லை என்று தோன்றியதால் “குளத்துக்குள் அவிண்ட கோமணம் போல’ பொறுமையாக இருந்தான். ஆனாலும் எந்தப் பாதையும் இறுதியில் சொந்த நாட்டிலும் போய் முடிவடையலாம் என்று நினைக்கும் போதுதான் வேதனை வந்தது.

பசிக்கும் போதும், கவனிக்காமல் நிமிர்ந்து தலையில் இடிக்கும் போதும் ஏன் நித்திரை இன்றி முளிக்கும் போதும் தாயின் நினைவு வந்து வந்து போனது. அன்னையின் சுற்று வட்டம் போல் அழகான சுகம் எங்கும் இல்லை என்பதை முதல் முதலாய் உணர்ந்தான். வலியே மனிதன் தனிமையானவன் என உணர்த்தியது. எதிலும் ஒரு விருப்பமில்லாத மனநிலை அடிக்கடி வந்து போனது. பழக்கப்பட்டு போன வேதனைகளோடு நாட்கள் இருண்டு இருண்டு விடிந்தது .

சமாதானமாக வாழ உகந்த புத்த மத நாடான லாவோசில் இருந்து மீண்டும் பயணம் என்று கூறப்பட்டது. ஆனால் எங்கு எப்போது என்று மட்டும் தெரியாது. பயணம் என்றதும் பயமும் வந்து ஒட்டிக் கொண்டு. விமானம் மட்டுமல்ல விமான நிலையமும் அந்தரத்தில் பறப்பது போல உணர்ந்தான். வீடு வரா விட்டாலும் அதற்குள் இருந்து வெளியே வந்தால் போதும் என இருந்தது.

அழகாக ஆனந்தமாக இருக்க வேண்டிய பறப்பு அனுபவம் முச்சந்தியில் முனிக்கு கழித்த இனிப்பு பணியாரம் போல கிட்ட போகவே பயமாக இருந்தது.

என்ன ஆச்சரியம் மீண்டும் கழுத்தில் மாலைபோடாத குறையாய் கனிதாவோடு கணவன் வேசம் போட்டு அறுக்கக்கொண்டு போன ஆடு போல பாங்கொக் விமான நிலையத்தினுள் தள்ளி விட்டார்கள்.

அவனது படத்தை அவனாலே நம்ப முடியவில்லை கோட்டு, சேட்டு, ரை என படம் கடவுசீட்டை கடந்து எகிறியது. இதை இங்குள்ளவர்கள் நம்ப வேண்டும் என்று தேசிக்காய் பிளந்து வேம்படி வைரவருக்கு பூசைகள் வேற செய்து முடித்திருந்தார்கள் ஊரில் இருந்த உறவுகள்.

சிந்து எதிலும் நம்பிக்கை இன்றி எல்லாவற்றையும் எள்ளி நகையாடிக் கொண்டிருந்தான். பொறுமை இழந்த ஏஜென்சி, “”தம்பிக்கு கஷ்டம் தெரியேல்ல” என்று அடிக்கடி கடிந்து கொண்டு இருந்தார். கனிதா இம்முறை முன்பை விட ஆடைக் குறைப்பு செய்திருந்தாள். எல்லாம் இராஜ தந்திரம். நல்ல பொண்ணுதான் நாதாரித்தனமான மூளை.

போடிங் காட் பார்த்து உடைக்கும் நேரம் வந்தது. ஏற்கெனவே ஏஜென்சியின் பணம் உள்ளே பாய்ந்து விட்டது என சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி விமானநிலைய அலுவலர் ஒருவர் அங்கும் இங்கும் ஓடித் திரியும் போதே தெரிந்தது. அப்பிரிவில் வேலை செய்த பதினாறு பணியாளர்கட்கும் பணம் பட்டுவாடா செய்திருந்ததால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் எனத் தோன்றியது.

இம்முறை எல்லாம் இறங்கும் என்று ஏஜென்சி சொல்லி விட்டார். அவரை முக்காவாசிப் பேர் அரைவாசிக் கடவுளாக நம்பினார்கள். தோட்டக்காரனோட களவா தோடங்காய் ஆய வந்த கள்ளனுக்கு என்ன பயம் இருக்கப்போகிறது. பணியாளரை மட்டுமா விலை கொடுத்து வாங்கினார்? இந்த பாதி கடவுள். பயணிகளையும் விலை கொடுத்து வாங்கி விட்டாரோ என வியக்கும் படி பதினேழு கறுத்த தோல் சொந்தக்காரர்கள் சோடிகளுடனும் தனியேயும் தலையை சொறிந்தபடி ரியூப் லைற் வெளிச்சத்திற்கு வந்த பூச்சி மாதிரி எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் வந்து கூடி விட்டார்கள்.

சும்மா சொல்லக்கூடாது. நம்ம முகவரை நினைக்க பெருமையாய் தான் இருந்தது ஆனால் பாவி ஏஜென்சி பேராசையில் -கன பேரை ஒண்டா போட்டு எல்லாத்தையும் கெடுக்க போறானோ.. – என மனம் சுயநலமாக பதைத்தது.

மேலோட்டமாக பார்க்கவே எல்லோரும் களவுக்கு போய் கண்முளிச்ச ஆட்கள் போல இருந்தது. தங்களுக்கும் பயணத்திற்கும் தொடர்பு இல்லாதது போல செய்த மீறிய பாவனையானது இவர்கள் எல்லோரும் ஒரு பட்டி என்று காட்டிக் கொடுத்தது. .

அங்கே கனிதாவுக்கு மட்டுமே கொம்பு இருந்தது. சைகை உணர் கொம்பு (அன்ரனா) அந்த சுடுதண்ணி குடித்த பொறுப்பதிகாரி பரம ரகசிய அசைவுகளை சைகை மூலம் பரப்ப அதை வார்த்தைகளாய் கனிதா உள்வாங்கி படித்து எதிர்வினை ஆற்றினாள்.

என்ன ஆச்சரியம். அடை வைத்த முட்டை எல்லாம் பொரித்து விட்டது. பதினேழு பேரும் விமானத்தில் ஏறி விட்டார்கள். விமானம் மேலெழுந்தது. இப்போது குஞ்சுகள் எல்லாம் ஆகாயத்தில். கோழி அல்ல பருந்துகளே அவர்களுடன் கூட பறந்தன. ஒரு விமான அதிகாரி மட்டும் கத்தரி வெருளியின் கண் போல குத்தும் விதமாக எல்லோரையும் பார்த்தார்.

திட்டமிட்ட படி எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் மொஸ்கோ வந்து சேர்ந்து விட்டது என்றுதான் நினைத்தார்கள். ஏனோ பெயர்ப் பலகை மட்டும் பாங்கொக் சர்வதேச விமானநிலையம் என்று இருந்தது.

– பசுந்திரா சசி (ஜூலை 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *