கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,119 
 

என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள் அவள். என் ஊருக்கு அயல் ஊரில்தான் அவள் குடியிருந்தாள். 1994 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைத்தபோது அயலூரிலிருந்து என் பள்ளியில் புதிதாக வந்து இணைந்து கொண்டவள்தான் அவள்.

என்னை விட சற்று நிறம் குறைவாகவும் ஒரிரு இஞ்சி உயரம் குறைவாகவும் இருந்தாள். அவளை பார்த்த உடனேயே எனக்குப் பிடித்துப்போயிற்று. எல்லோருடனும் சகஜமாக பழகினாலும். யாருடனும் அதிகம் ஒட்டிக்கொள்வதில்லை நான். இவளிடத்தில் அப்படி என்ன ஒரு ஈர்ப்பு?

சிறுவயதிலேயே தந்தையை இழந்தவள் இவள். தாயுடனும் ஏனைய பெண் சகோதரிகளுடனும் வளர்ந்தவள். ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டதும் மாலை நேர வகுப்புகள் இதர ஆசிரியர்களால் பள்ளியில் வைத்து நடாத்தப்படுவது வழமை. மிதியூந்தில் பத்தே நிமிடதில் பள்ளி செல்லும் என்னுடன் ஒப்பிடுகையில் அவள் மூன்று மயில்கள் நடந்தே பள்ளிக்கு வருவாள். மாலை நேர வகுப்பிற்காக காத்திருக்கும் அந்த இடைவேளையில் எங்கள் வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றிருக்கின்றேன்.

என் அறையை ஒரு முறை சுற்று முற்றும் பார்த்த அவள். “இப்படியெல்லோ இருக்க வேணும் படிக்கும் அறை “ என்று அவள் கூறிய அந்த வார்த்தை இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படி என்னதான் இருந்தது என் அறையில்! அம்மா விசேட நாட்களில் மேசைக்கு விரித்து அழகுபடுத்துவதற்கென வாங்கி வைத்திருந்த கம்பளத்தை எடுத்து நான் படிக்கும் மேசைக்கு விரித்து அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தேன், மேசையை ஒட்டியதாக இருந்த நாற்காலியில் இருப்பதற்கு வசதியாக ஒரு தலையணை, அதைவிட ஒரு தும்புமெத்தை போடப்பட்ட ஒரு கட்டில், இன்னும் சில அத்தியவசிய பொருட்கள், வீட்டிற்கு பின்னால் வரிசையாக நடப்பட்ட பாக்கு மரங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட சாளரத்தினூடே வரும் குளிரோடு இதம் கலந்த காற்று இவைதான் என் அறையில் இருந்தவை.

ஒரு நாள் அவள் ஊருக்கு அருகிலிருந்து வரும் எங்கள் பள்ளித்தோழி ஒருவரின் சகோதரனின் திருமணத்திற்கு சென்றபோது ஏனைய தோழிகளுடன் இணைந்து அவள் வீட்டிற்கும் சென்றேன். செங்கற்களால் கட்டப்பட்டு பூச்சுப் பூசப்படாத சுவரையும் பனையோலையால் வேயப்பட்ட கூரையையும் தாங்கி இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய ஒரு பதிந்த விறாந்தை. நிலம் சாணத்தால் நன்கு மெழுகப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் மரங்கள் இருப்பதாக தெரியவில்லை. வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நீண்டு வளர்ந்திருந்தது. முற்றத்தில் நிலத்தோடு பதிந்தவாறு ஒரிரு சூரியகாந்திப் பூச்செடி. வீட்டைச்சுற்றி வேலிகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. அவள் அன்று வீட்டில் இருக்கவில்லை. அவள் அம்மாதான் வீட்டிற்கு வெளியே நின்றிருந்தார். அவள் வந்ததும் நாங்கள்

வந்து போனதாக சொல்லிவிடுகின்றேன் என்றார். சிறிய சிறிய ஓலைக் குடிசைகள் அதிகமாகவே இருக்கும் அந்த ஊரில் இந்த வீட்டிற்கு என்ன குறை என்று நினைத்தவாறெ அன்று அவள் என் வீட்டில் சொன்னதை நினைத்துக் கொண்டு திரும்பிச்சென்றேன்.

பள்ளியில் சரியாக பன்னிரண்டு மணிக்கு மதிய உணவுக்காக இடைவேளை விடுவது வழமை. அப்போதெல்லாம் நாங்கள் பாட்டுக்கு பாட்டு வைத்தால் அவள் பாடுவாள். அவள் பாடலில் எப்பொழுதும் சோகம் கலந்திருக்கும். ஆனாலும் ஒருபோதும் அவள் மனம் திறந்து கதைத்ததில்லை. நான் எங்கள் வகுப்பு தலைவியாக இருந்தபோது எல்லா மாணவர்களிடமிருந்தும் தவணைப்பரீட்சைக்கட்டணத்தை சேகரித்து வகுப்பாசிரியரிடம் கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. நான் பலதடவை எனக்கு ஏதாவது வாங்குவதற்கு என்று வீட்டில் பணம் கிடைத்தால், அதைக் கொண்டு வந்து அவளுக்காக தவணைப்பரீட்சைக் கட்டணம் கட்டியிருக்கின்றேன். அது அவளுக்கே பல சமயங்களில் தெரியாது. ஏனோ அவளிடம் பணம் கேட்க மனது கஷ்டமாக இருக்கும். ஏன் அவளுக்கு இதெல்லாம் செய்தேன் என்பது எனக்கே தெரியாத உண்மை.

அவள் படிப்பில் கெட்டிக்காரி. பரீட்சையில் எப்பொழுதும் அதிக புள்ளிகளையே பெறுவாள். என்னில் அவளுக்கு அதிக விருப்பம். ஆனாலும் அவள் என் நெருங்கிய நண்பி என்று சொல்லுமளவிற்கு நான் பழகவில்லை. ஏதோ ஒரு நெருடல், பரிவா? பாசமா? தோழமையா? என்னால் இன்றுவரை சொல்லவே முடியவில்லை.

தவணைப் பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறை விட்டிருந்த காலமது. 1995 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அம்மா ஏதோ அலுவலாக வெளியில் சென்றிருந்தார். நான்தான் அன்று சமைத்திருந்தேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பிடுங்கி பூசனிக்காய் பிரட்டலும் கத்தரிக்காயும் தக்காளிப்பழமும் போட்டு ஒரு குழம்பும் இவற்றோடு அப்பா அன்று சந்தையில் வாங்கி வந்த இறால் போட்டு ஒரு கறியும், எங்கள் வயலில் விளைந்த நெல்லை அரிசி ஆலையில் கொடுத்து குற்றி பிரித்தெடுத்த சிவப்பு அரிசி போட்டு சோறும் சமைத்திருந்தேன்.

நல்ல உச்சி வெய்யில், பகல் ஒரு மணியிருக்கும். திடீரென்று எங்கள் வீட்டு வெளிக் கேற்றடியில் நின்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வீட்டின் வரவேற்பறை சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன்.அவளும் அவளோடு நெருங்கிப் பழகும் அவள் ஊரில் இருந்து வரும் எங்கள் வகுப்பறைத்தோழி ஒருவரும் அவர்கள் இருவரோடும் என் அபிமான நண்பி பாலர் பாடசாலையில் இருந்தே என்னோடு இணைந்த தோழியும் நின்றிருந்தனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிரித்துக்கொண்டே சொன்னாள் “ நீ எங்களை எதிர்பார்க்கவில்லையல்லவா? உன்னை நீண்ட நாட்களாக பார்க்கவில்லை அதுதான் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தோம்” என்றாள் அவள் .

தோழியுடன் மிதியூந்தில் வந்திருந்தாள். அவர்களைக் கண்ட சந்தோசத்தில் வரவேற்று, என் கையால் சமைத்த உணவும் பரிமாறினேன். “உனக்கு சமைக்கத்தெரியாது என்று நினைத்தேன். இவ்வளவு ருசியாக சமைத்திருக்கிறாய்”என்று சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். அவளும் மிக சந்தோசமாகவே இருந்தாள். வீட்டின் பக்கமாக வேலிக்கரையோடு செளித்து வளர்ந்து கூடாரமாக நிழல் தந்த அந்தக் கறுத்தக் கொழும்பன் மாமரத்து நிழலில் நீண்ட நேரம் இருந்து பலவற்றையும் கதைத்து அரட்டையடித்தோம். அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது மாலை மங்கும் நேரமாகிவிட்டிருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் களித்து என் அபிமான தோழி வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள் வீடு கடைத்தெருப்பக்கம்தான் இருந்தது. அவள் பெற்றோர் கடை வைத்திருந்தார்கள். அவள் ஒரே பெண் பெற்றோருக்கு. இரண்டு அண்ணன்மார் இருக்கின்றார்கள் அவளுக்கு. ஒருவர் பிரித்தானியாவில் இருக்கின்றார். இன்னொருவர் நாட்டுக்காக போராடச் சென்றுவிட்டார். அவள் வீட்டில் அவள் மட்டுமே என்பதால் எப்பொழுதும் அவள் வீட்டிற்கு செல்வதற்கு எனக்கு தனி சுதந்திரம் வழங்கப்பட்டது, எங்கள் வீட்டில். நான் உயர்தரம் கற்கும் காலத்தில் அதிக நேரத்தை அவள் வீட்டில்தான் கழித்திருக்கின்றேன்.இருவரும் இணைந்து பரீட்சைக்கு படிப்பது வழக்கமாய் இருந்தது. நன்கு சிவந்த பொன்னிற மேனி அவளுக்கு. நீண்டு, கருத்த, அடர்த்தியான தலை முடி. என்னைப்போன்று சுமாரான உயரம்தான். முன்பக்க பற்கள் மட்டும் சற்று உயர்ந்திருக்கும். மிக சிரமப்பட்டே தன் சொண்டினால் மூடிக்கொள்வாள்.

எப்பொழுதும் என்னைக்கண்டவுடன் ஆரவாரிக்கும் இவள். இன்று அமைதியாகவே இருந்தாள். நான் என்னவென்று விசாரிப்பதற்கு முன்னரே அவள் விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் மெல்ல உருண்டு அவள் கன்னங்களில் வழிந்தோடியது. அப்போதுதான் தெரிந்துகொண்டேன் அன்று எங்கள் வீட்டிற்கு வந்த இரண்டு தோழிகளும் நாட்டுக்காக போராடுவதற்கு தம்மை இணைத்துக்கொண்டு விட்டார்கள் என்று. எங்கள் வீட்டிற்கு வந்த அன்று இரவே சென்றிருக்கின்றார்கள். ஆனால் இவளுக்கு கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்கள் சென்ற பிறகு பெற்றோரும் உற்றாரும் தேடி வரும்போதுதான் விடயம் தெரிந்திருக்கின்றது இவளுக்கு. அவர்கள் எங்கள் வீட்டில் அத்தனை மணி நேரம் இருந்தும் ஒரு மூச்சுக்காற்றுக்கூட விடவில்லையே இதைப்பற்றி, என்று எண்ணிய பொழுது எவ்வளவு இரகசியக்காரிகள் என்றுதான் எண்ணத் தோன்றியது.

அந்தச் சம்பவத்திற்கு பிறகு எங்கள் வகுப்பே அமைதியாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் இடைவேளை நேரங்களில் பாட்டுக்குப் பாட்டு எங்கள் வகுப்பில் நடைபெறுவதில்லை. ஒரு மூன்று நான்கு மாதங்கள் தான் கடந்திருக்கும். அவளோடு சென்ற மற்றவளின் வீரமரண அறிவித்தல் கேட்டு விழி பிதுங்கி நின்றோம் நாம். பள்ளியில் இருந்து அதிபர் ஆசிரியர்கள் உட்பட எல்லோரும் அவள் வீட்டிற்கு சென்று வீரவணக்க அஞ்சலி செலுத்தினோம். எங்களைக் கண்டதும் அவள் பெற்றாரும் உற்றாரும் வீறிட்டு அழுதார்கள். ஆறுதல் சொல்ல முடியாதவாறு திகைத்து நின்றோம் நாம். அவளின் வித்துடலுக்கு போராளிகளுக்கான ராணுவ உடை அணிவிக்கப்பட்டு மரப்பலகையிலான வித்துடல்பெட்டியில் வெள்ளை துணி விரிக்கப்பட்டு நேர்த்தியாக படுக்கவைக்கப்பட்டு அதன் மேல் புலிக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. கழுத்தில் மல்லிகை, நித்திய கல்யாணி பூக்களைக்கொண்டு கட்டப்பட்ட பூ மாலைகளும், அருகருகே வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களும் தலைமாட்டில் ஒரு சிறிய மேசையும் வைக்கப்பட்டு அதன்மேல் ஒரு குத்துவிளக்கும் எரிந்து கொண்டிருந்ததை பார்த்தபோது நெஞ்சை கனக்கச்செய்தது. ஆங்காங்கே குழுமி நின்ற சன நெருசலில் ஆயுதம் தாங்கிய ஓரிரு போராளிகளும் நின்றிருந்தார்கள். ஏற்கனவே அந்த வீட்டில் அவளுடைய அக்கா ஒருவரும் போராளியாக இருந்து இறந்திருக்கிறார் என்று அன்றுதான் எங்களுக்குத் தெரிந்தது.

ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டிருந்த காலமது. 1997 ஆம் ஆண்டின் இலைதுளிர்காலம். சொல்லொணாத்துயரம் வன்னியை ஆட்கொண்டிருந்த நாட்கள் அவை. இடம்பெயர்ந்து சென்று கற்கிடங்கு என்னும் ஊரில் இருக்கின்றோம். வந்தோரை வாழவைக்கும் ஊர் அது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம் என்னும் நகரத்திற்கு அண்டிய பகுதியான கனகராயன்குளம் பிரதேசசபைக்குக்கீழ் உள்ள கருப்பட்டமுறிப்பு என்னும் கிராமத்தின் ஒரு பகுதிதான் இந்த ஊர். என் அப்பப்பாவின் உறவு வழிக்காரர் சிற்றம்பலம் பூசகர் அப்பப்பா வீட்டில் இருக்கின்றோம். கற்கிடங்கு அம்மன்கோவிலோடு ஒட்டியதாக இரண்டு பெரிய கல் வீடுகள் இருக்கிறது அங்கு. வீதியின் இரண்டு மருங்கிலும் எதிர் எதிரே இருக்கின்றது அந்த வீடுகள். வீட்டிற்கு வெளியே வீதிக்கரையோடு நிற்கிறது நிழல்தரும் ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்திற்கு கீழ் அப்பாவின் உழவு இயந்திரம் தரித்து நின்றிருந்தது. அதில் ஏறியிருந்து உறவுமுறை தோழிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.

அந்த வழியால் மூன்று நான்கு பெண் போராளிகள் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கியது எனது கண்கள். என்ன ஆச்சரியம் அதில் ஒருவர் அவளேதான் ஐயமே இல்லை. என்னை அந்த இடத்தில் எதிர்பார்த்திராதவளாய் ஆச்சரியத்தோடு தன் முத்துப்பற்களால் புன்னகைத்தவளை தயங்கித்தயங்கிச் சென்று கட்டியணைத்தேன்.

போராளிகளுக்கான ராணுவ உடையில் கம்பீரமாக காட்சியளித்தாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு சலிப்பும் சோர்வும் இருந்தது. கண்கள் ஒழி இழந்திருந்தது. அவளை என்னோடு வீட்டுக்குள் வரச்சொல்லி அழைத்தேன். தன்னோடு வந்த போராளிகளை அனுப்பிவிட்டு ஒரே ஒரு சக போராளியை அழைத்துக்கொண்டு வந்தாள். அங்கிருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றேன்.

அம்மா அன்று சுட்ட தோசையை அவர்களுக்கு பரிமாறினேன். என் அம்மாவும் என்னை கூப்பிட்டுக்கொண்டேயிருந்தார். “ ஏன் நாங்கள் போராளிகள் என்றால் எங்களோடு கதைக்கக் கூடாதோ” என்று கேட்டாள் அவள். என்னால் புன்னகைக்கத்தான் முடிந்ததே தவிர பதில் கூற முடியவில்லை. “எங்கே தன் மகளும் போராளியாகி விடுவாளோ” என்ற பயம்போலும் அம்மாவுக்கு. இப்போது அவளோடு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

இப்போது அவள் போராளி. அவளுக்கு எதை பேசவேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்ற வரம்பு இருக்கும். சாதாரண சுகம் விசாரிப்பு அவ்வளவுதான். சில நிமிடங்கள் இருந்தவள் விடைபெற்றுச்சென்றுவிட்டாள்.

அவள் கண்களிலிருந்த ஏக்கத்தை என்னால் உணரமுடிந்தது….. இன்னும் உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவ்வப்போது நினைத்துப்பார்ப்பதுண்டு……!

“ உணர்வுகளுக்கு உருவம் இல்லை, எல்லையில்லை, பொய்யில்லை, பேதமில்லை….. இல்லை இல்லை எதுவுமே இல்லை….”

– 15.ஆனி.2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *