அவதாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 30,188 
 
 

கடவுள் நம்பிக்கை உண்டா என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப் படுகிறது. “தெரியவில்லையே” என்ற பதில் தான் மிக வசதியானது என்று அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன். அதுவே மிகப் பொருத்தமான பதிலும் கூட.

சின்ன வயது நினைவுகள் சில வருகின்றன. என் ஊரின் பயங்கர ரவுடியான தேவ ஆசிர்வாதத்தை நொண்டியான கோலன் அப்பு வீழ்த்தியபோது எனக்கு பதினாறு வயது. உடல் வலிமையே மனிதப் பிறப்பின் அதிகபட்ச சாதனை என்று எண்ணிக் கொண்டிருந்த காலம். கதை கேட்கும் போது ‘அவன் ரொம்பக் கெட்டவன்’ என்று ஒரு வரி வந்தால் அக்கதாபாத்திரம் மீது உடனே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விடும். கதைகளின் இன்றியமையாத விதியின்படி (கதையூழ்?) அவன் தோற்கடிக்கப் படும் போது துக்கம் நிரம்பிய ஒரு நிறைவுணர்வும் ஏற்படும். ‘ஒரே ஒரு காலத்தில், ஒரே ஒரு ஊரிலே’ என்று தொடங்கும் அந்தப் பழைய காலம்தான் எத்தனைப் பொற்காலம்! அப்போது ராட்சதர்கள், அசுரர்கள் இடைவெளியின்றி பிறந்து மானுட குலத்தைக் கதைகளால் செழிப்புறச் செய்தார்கள். தர்மம் வெல்லும் என்பதைக் கடவுள்கள் நிரூபித்தேயாக வேண்டியிருந்தது. அது பூமியின் இளமைப் பருவம் போலும். இளமைக் காலத்தில் தான் கதைகள் அதிகம். ஏனெனில் அப்போது நிதரிசனம் கூட கதையாக மாறியபடியே இருக்கிறது.

‘ஆசீரான்’ எங்களூர் ராட்சதன். ஆறடிக்கு மேல் உயரம். பெரிய மீசை. பொன்னுமுத்தன் பெருவட்டரின் மூத்த மகன். ஆகவே அடிதடி தவிர வேறு வேலை இல்லை. பொதுவாக எங்களூரின் அத்தனை பேருமே உறுதியான உடல் கொண்டவர்கள் தான். அதிபலசாலிகள் பலர் உண்டு. உடல் வலிமை மூலமே பெரும்பாலான நியாயங்கள் நிறுவப் பட்டும் வந்தன. அடிதடி இல்லாத நாள் ஒன்று இருண்டு அடங்கியதேயில்லை. ஆனாலும் ஆசீரானைப் பார்த்து அத்தனைப் பேருமே பயப்பட்டார்கள். அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயங்கி பெரும்பாலோர் வழி விட்டு தள்ளி ஒதுங்கிப் போய் விடுவார்கள். சிலர் மட்டும் ஒரு போலி நட்பு, மரியாதையுடன், “ஆங், என்ன பெருவட்டரே இந்த வழி? பின்ன என்னவாக்கும் காரியங்க? ஒரு அவசரமாக்கும், வரட்டா?” என்று நழுவிச் செல்வார்கள். ஆசீரான் கனத்து நீண்ட கைகளை வீசி, கால்களை அழுத்த மிதித்து, தொடைக்குமேல் ஏற்றிக் கட்டப் பட்ட சாய வேட்டியுடன் சங்கிலியில்லாத யானை போல நடந்து போவதை பெண்கள் ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்த்து, “போறான், பஞ்சபாவி. இவனுக்கொண்ணும் சாவு வரேல்லயே, எனக்க மாதாவே” என்று சபிப்பார்கள். ‘சுக்கு’ தாணப்பண்ணன் சொன்னார், அது பெண்களின் நடிப்பு என்று. “கைக்கும், காலுக்கும், நீளமும் உரப்பும் உண்டெங்கில் பெண்ணாப் பிறந்தவளுக எட்டிப் பாக்காம இருக்க மாட்டாளுவ, எலேய் ஒருத்தியெங்கிலும் அவன் போனாப் பாக்காம இருக்கியத நீ கண்டிட்டுண்டா? சாபமும் வலிச்சுக் காட்டுததும் ஒக்கே ஒரு கலயுல்லா? படச்ச தெய்வம் பிரம்மாவ ஏமாத்திப் போடுவாளுவ பாத்துக்கோ.”

இப்போது யோசிக்கும் போது ஆசீரானின் வல்லமைக்கானக் காரணங்களை என்னால் வகுக்க முடிகிறது. அவன் சில வருடங்கள் அடிமுறைப் பயிற்சி எடுத்தவன். அத்துடன் அடிதடிகளில் பல முறை ஈடுபட்டு அனுபவம் உடையவன். அவ்வளவு தான். சாதாரணமாகவே வன்முறைக்குப் பழகிப் போனவர்களின் கண்களில் ஒரு வகையான ஒளி உண்டு. அவர்கள் பார்வை சாதாரண மனிதர்களைச் சற்றுக் கூச வைக்கும். (ஒழுக்கம் தவறியப் பெண்களின் கண்களில் கூட அந்த முள் உண்டு.) ஒரு பதற்றமான சூழ்நிலை வரும் போது சாதாரண மனிதர்களின் முக்கியப் பிரச்சினையே உடல் மீது மனத்தின் கட்டுப்பாடு போய் விடுவது தான். கால்கள் நடுநடுங்குகின்றன. மனம் எதையுமே கவனிக்காது, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்காக பறக்கிறது. எல்லாவற்றையும் விட மேலாக கற்பனை தாறுமாறாக வளர்ந்து பல வழிகளில் பெருகி மனத்தின் ஒருமையை முற்றிலும் அழித்து விடுகிறது. மேலும் ஒன்று உண்டு. நாம் எப்போதுமே நடக்கும் பாவனையில் தான் நிற்கிறோம். ஆகவே வளைந்தோ, குழைந்தோ தான் பெரும்பாலோர் நிற்கிறார்கள். காற்றின் மீது சாய்ந்து நிற்பது போல. அடிதடியின்போது உறுதியாக நிற்பது அவசியம். ராணுவம் கூட்டமாக நடக்கும் போது லெப்ட், ரைட் எப்படி அவசியமோ, அதுபோல… ஆகவே தான் அடிமுறை ஆசான்கள் முதலில் கற்றுத் தருவதே எப்படி திடமாக நிற்பது என்பதைத் தான். மனத்தை அலைபாயாமல், பதற்றமில்லாமல் வைத்துக் கொண்டால் பிறகு அதிகமாக ஒன்றும் தேவை இல்லை.

என் அப்பாவின் தோழரான வர்ம ஆசான் பொன்னு நாடார் எனக்கு சிலவற்றைச் சொல்லியிருக்கிறார். ‘காலுறச்சு நிக்கணும் பிள்ளேய். காலுறச்சா மனசுறச்சு எண்ணாக்கும் கத. கேட்டுதா?’ என்பார். அவர் சொன்ன இரு உத்திகள், ஒன்று கண்களை அலைபாய விடக் கூடாது. என்னென்ன கவனிக்க வேண்டுமோ அவற்றை ஒரு கணத்தில் கவனித்து விட்டு, பிறகு பார்வையை அர்த்தமற்ற வெறிப்பாக மாற்றி எதிராளியின் உடலில் சம்பந்தமற்ற பகுதி ஒன்றில் நிலைக் குத்தி நிற்கச் செய்வது நல்லது. எதிரியைக் குழப்ப அதற்குமேல் ஏதும் தேவையில்லை. நம் கண்களை அனிச்சையாக அவன் கவனிக்கிறான், நாம் செய்யப் போவதென்ன என்று அதன் மூலமே அவன் ஊகிக்கிறான். இன்னொன்று ஒருபோதும் கைககளைச் சுழற்றி அடிக்காமலிருப்பது. கையின் விசையை அது குறைத்துவிடும். கூர்மையாக நேராகக் குத்த வேண்டும். எட்டு மாதம் நான் அடிமுறை கற்றதுண்டு. பிறகு கட்டாரி வீசவும், சிலம்பு சுழற்றவும் கற்றேன். அவை வேறு கலைகள். ஆயுதத்தை பிரக்ஞையில்லாமல் கை போல சகஜமாக ஆக்க அவை கற்றுத் தருகின்றன. ‘கை, மெய், மனம்’ என்பார் ஆசான். மூன்றும் ஒன்றாகச் செயல்படும்போதுதான் கலை முழுமையடைகிறது. என் மனம், உடலுடன் இசைவு கொள்ளவேயில்லை.

கோலன் அப்பு பயந்தாங்குள்ளி. பலவீனன். ஒரு கால் பிரம்பு போல குழைய, கோணலாக ஆடி, ஆடி நடப்பான். கோவிலில் பூ கட்டுகிற வேலை. வீடுகளில் தேங்காய் உடைப்பது, துருவித் தருவது, முருங்கைக்கீரை ஆய்வது போன்ற வேலைகள் செய்வான். அப்புவின் தலை மாங்காய் வடிவில் அவன் உடலுக்கு மிகப் பெரிதாக இருக்கும். அவன் அக்கா சினேகப் பிரபா உள்ளூர் நிலவரத்துக்கு அழகி. (ரத்தச் சோகையைக் கூட எங்களூரில் நல்ல நிறம் என்று ரசிப்பார்கள்.) பொதுவாக உயர்சாதிப் பெண்களைச் சீண்டாத ஆசீரான் அவளைச் சீண்டியது அவள் ஏழை என்பதனால் இருக்கலாம். முந்திரிப் பருப்புத் தொழிற்சாலைக்கு அவள் போகும் போது சாலையில் இரும்புக் காடு மூன்று முக்கு ரோட்டில் அவளை ஆசீரான் மடக்கும் போது நான் புகையிலை வாங்க நேசனின் பெட்டிக்கடை முன் நின்றிருந்தேன். அருகே கண்ணன் பார்பர் ஷாப்பில் சிலர் உண்டு. ‘ஒச்சு’ சண்முகம், பரமன், ஸ்தனிஸ்லாஸ் போல ஆசீரானின் அணுக்கத் தொண்டர்கள். கிழங்கு வியாபாரம் செய்யும் பெண்கள் சிலர் மளிகைக் கடை வாசலில் நின்றிருந்தார்கள். வேறு எங்கோ போவது போல நடந்த ஆசீரான் சட்டென்று பிரபாவின் பின்பக்கத்தைப் பற்றி ஒரு அமுக்கு அமுக்கினான். அவள் ‘ச்சீ” என்று சீறியபடி திரும்ப அப்படியே அள்ளிப் பிடித்து மார்பை அள்ளிக் கசக்கினான். ஏதோ மல்யுத்தம் போல சில கணங்கள். அப்படியே அவளைப் போட்டு விட்டு வேட்டியைத் திரைத்து பின் தொடையைச் சொறிந்தபடி நேராக ‘ஒணக்கை’ அப்படி நாயரின் மணிகண்ட விலாசம் ஹோட்டல் அண்ட் டீ ஷாப் நோக்கி நடந்து சென்றான்.

ஆசீரான் ஆதரவற்ற பல பெண்களைக் கெடுத்தது உண்டு என்பார்கள். ஒரு முறை சேரியில் எல்லாருமாகச் சேர்ந்து அவனைக் கல்லெறிந்து துரத்தியிருக்கிறார்கள். ஆனால் நடுச் சாலையில் அப்படி நடப்பது ஊரில் கேள்விப் பட்டிருக்காத விஷயம். எல்லாருமே சற்று விக்கித்து விட்டார்கள். அவள் கூட வந்த பெண்கள் அலறியபடி ஓடி விலகி நின்று, அர்த்தமின்றி ‘அய்யோ! சேசுவே!’ என்று கூவிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் நின்ற ஒரு கூடைக்காரி ஓடிப் போய் அவளை அள்ளித் தூக்கி “நீக்கம்பிலே போவான்… ஏசுவே அவன் கை புளுக்காதா? நீ எந்திரிடி குட்டீ. பாவங்களுக்கு கடவுள் உண்டும்.. நீ வீட்டுக்குப் போ” என்றாள்.

நான் அப்புவிடம் தகவல் சொல்ல ஓடினேன். ஆனால் விஷயம் கேள்விப் பட்டு அப்பு கோயிலில் இருந்தே ஆவேசத்துடன் கிளம்பி விட்டான். அப்பு போவதைக் கண்டு கோயில் வட்டத்துப் பையன்கள் ஆர்வத்துடன் கும்பலாகப் பின்னால் வந்தார்கள். பாதிப் பேருக்கு சிரிப்பு. ராமன் பிள்ளை அண்ணா “டேய் ஜெயா… ஓடி வா. அப்பு ஆசீரானைக் கொல்லப் போறான்” என்றார். அப்பு கோணல் உடல் அலை பாய, ஒல்லிக் காலைச் சுழற்றி, சுழற்றி வைத்தபடி ஆவேசத்துடன் நடப்பதைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது. கம்பௌண்டர் பாக்கியமுத்து தாத்தா “பிள்ளே பேயாம வீட்டுக்குப் போணும். அவன் ஏனங்கெட்ட மிருகமாக்கும் கேட்டுதா…” என்று அப்புவை அள்ளிப் பற்றித் தடுத்தார். “விடுங்க கம்பவுண்டரே, இண்ணைக்கு ரண்டில ஒண்ணு பாத்துப் போட்டு தான் மறு காரியம்…” என்று அப்பு திமிறினான். யார் தடுத்தாலும் அப்பு நிற்பதாக இல்லை.

ஆசீரான் எறும்புக்காடு முச்சந்தியில் கடைத் திண்ணையில் கையில் எரியும் பீடியுடன் அமர்ந்திருந்தான். அருகே அவனது சீடப் பையன்கள். கண்ணன் பார்பர் ஷாப்பில் தாமு கையில் வாய் பிளந்து நின்று விட்ட கத்திரிக்கோலுடன் எட்டிப் பார்த்து அப்பு வருவதைக் கவனித்து ஆசீரானுக்குச் சொன்னான். அப்பு வந்து கொண்டிருக்கும் விஷயம் ஏற்கெனவே அங்கு எட்டி விட்டது என்று தெரிந்தது. சாயாக் கடையின் அழிகளில் சிரிப்புக்கு சமானமான ஓர் ஒளி நிரம்பிய முகங்கள் எட்டிப் பார்த்தன.

அப்பு ஆக்ரோஷமாக நடந்த போது அவன் உடலில் கோணல் காரணமாக அது மிக விசித்திரமான அசைவுகளை உருவாக்கி அந்த வருகையை கோமாளியின் அரங்கப் பிரவேசம் போல ஆக்கியது. ஒல்லிக் காலால் அவிழ்ந்த வேட்டியை அவன் ஏற்றி தொடை மீது வரிந்து கட்டிய போது உண்மையிலேயே சிலர் சிரித்து விட்டார்கள்.

அப்பு வந்தபடியே “எங்கலே அந்த ஆசீரான்? இண்ணு அவனே கொண்ணுட்டுதான் மறு ஜோலி” என்று கீச்சுக் குரலில் ஆக்ரோஷமாகக் கத்தினான். கோணலான உடல் துள்ள நான்கு பக்கமும் பார்த்தான். அந்த வேகம் கண்டு அது வரை சிரித்தவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

ஆசீரான் பிரக்ஞை பூர்வமாக உருவாக்கிய அலுப்பை ஒவ்வொரு உறுப்பிலும் வெளிக் காட்டியபடி எழுந்து நின்று, “பிள்ளேய் நீரு போவும்… பிறவு பேசலாம். பிலேய் ராபர்ட்டு, கூட்டிக் கிட்டு போலே… நொண்டிப் பயல வெறுதே கொலைக்கு கொடுக்காம” என்றான். ஆனால் அவன் முகத்தில் ஒரு தடுமாற்றம் வந்து விட்டதை அனுதினமும் மனக் கண்ணில் ஆசீரான் முகத்தை ஆயிரம் முறை காணும் என்னால் அறிய முடிந்தது. அப்புவின் துணிச்சல் ஆசீரான் அதற்கு முன் எதிர் கொண்டிராத சம்பவம். அஞ்சி நிலை குலைந்த, விலக முயலும் எதிரிகளையே அவன் கண்டிருக்கலாம். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டையில் ஒட்டிய பூச்சியைத் தட்டிவிடுவது போல அப்புவை அவன் வென்றாக வேண்டும்.

அப்பு “வெளிய வாடா நாயே… இண்ணு உனக்கு அந்தியமாக்கும்…” என்று கூவினான். ஆனால் ஆசீரானை நோக்கி ஓடவில்லை.

ஆசீரானின் உடலில் அவன் முன்னகரப் போவது போல ஓர் அசைவு ஏற்பட்டது. ஆனால் அவன் எதிர்பார்த்தது போல அப்புவின் உடலில் பின்னகரும் அனிச்சை அசைவு ஏற்படவில்லை. அப்பு “எறங்கி வாடா பொறுக்கி நாயே” என்றான். கையை நீட்டி, விரல் சுட்டி அழைத்தான்.

ஆசீரான் மீண்டும், “பிலேய் நொண்டி, இது அடுக்களையில் கீர உருவுத வேலையில்லை. பேயாம ஓடுலே” என்றபடி பீடியைத் துப்பினான். ஆனால் கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி அவனும் அங்கே தான் நின்றான்.

அப்பு மீண்டும் அரைக் கூவ, ஆசீரான் ஓரிரு முறை பக்கங்களுக்கு திரும்பி துப்பினான். காலால் மண்ணைத் தேய்த்தான். “பிலேய் பாக்கரா, பயலுக்கு தலைக்கு சுகமில்லன்னு தோணுது. கூட்டிக்கிட்டு போலே” என்றான். வெயில் வெறித்துக் கிடந்த முச்சந்திப் புழுதி மீது ஐந்து நிமிடங்கள் இழுபட்டபடியே நீண்டு போயின. எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடுவது போல….

சட்டென்று அப்பு ஆசீரானிடம் அவனது தங்கையை பதிலுக்கு அனுப்பச் சொல்லி, அவள் மார்பகத்தைப் பற்றி ஆபாசமாக ஒரு வர்ணனையும் செய்தான். நிதானமிழந்த ஆசீரான் கெட்ட வார்த்தையைக் கூவியபடி தொண்டை புடைக்க, கையை ஓங்கி ஓடி வந்தான். அவனது வழக்கமான தந்திரம் ஒன்று உண்டு. அவன் இடது கைக்காரன். ஆனால் கோபத்துடன் வலது கரத்தை ஓங்குவான். எதிராளி அக்கரத்தை நோக்கி தன கவனத்தைப் பதறித் திருப்பியதும் இடது கரத்தால் ஓங்கி அடித்து விடுவான். எப்போதுமே முதல் அடி மிக உக்கிரமாக இருக்கும்படித் தான் அடிப்பான். அநேகமாக கண்ணின் மீது அந்த அதிர்ச்சியிலிருந்து பொதுவாக எவரும் மீள்வது இல்லை.

ஆனால் அப்புவிடம் அது நடக்கவில்லை. ஆசீரான் அவனை நோக்கி வந்த போது அப்பு சற்றும் பின்னகரவில்லை. அது ஒரு முறைகூட ஆசீரான் சந்திக்காத சந்தர்ப்பம். குழம்பிப் போன அரைக் கணத்தில் அவன் வேகம் சற்று தடுக்கியது. பின்பு அதைத் திரட்டி அவன் அடித்த அடி முன்போல தன்னிச்சையான வேகத்தையும், அனிச்சைச் செயல்பாடுகளுக்கே உரிய கச்சிதத்தையும், அடையவில்லை. அப்பு தன ஒற்றைக் காலை உறுதியாக ஊன்றி, மறு காலை காற்றில் மிதப்பது போல் வைத்து, திடமாக நின்றான். ஆசீரான் அடித்ததும் அப்பு தலையைக் குனிந்து விலகிக் கொண்டான். அடியின் விசை காரணமாக ஆசீரான் தடுமாற, அப்பு அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ஓங்கி அவன் கன்னத்தில் அடித்து விட்டான்.

பிறகு இச்சந்தர்ப்பத்தை பல்லாயிரம் தடவை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்திருப்பேன். இரண்டு விஷயம் என் தருக்கத்தில் சிக்கியது. ஒன்று, ஆசீரான் அப்படி ஒரு பதில் அடியை அப்படிப் பட்ட ஒரு பலவீனனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இரண்டு, ஊராரிடமிருந்து சட்டென்று ஒரு பாராட்டுக் குரல் எழுந்தது. அது ஆசீரானை அனைத்து சமநிலையையும் இழக்கச் செய்தது. பாய்ந்து கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான். ஆனால் வழக்கத்துக்கு மாறான உடலமைப்பு உள்ள ஒருவனை மிக, மிகக் கவனமாகவேத் தாக்க வேண்டும். அவனது உடலசைவுகள் நம் கணிப்புகளை ஏமாற்றும். (பொதுவாக கிராமங்களில் சிறு ஊனம் உடையவர்கள் பெரிய ரவுடிகளாக இருப்பதைக் காணலாம். கணிசமாக ரவுடிகள் இடது கையர்கள்.) ஆசீரான் அடித்த அடிகளில் பெரும்பாலானவை வீணாயின. கோப வெறியில் அவன் மேலும், மேலும் சமநிலையிழந்து குதித்து அலறி அடித்துக் கொண்டிருந்தான்.

கோபம் சீக்கிரமே பலத்தை (குறிப்பாக மூச்சுப் பலத்தை) வற்ற அடித்து விடும். ஆசீரான் தளர்ந்த உடனே அந்தத் தளர்வை அவனே உணர்ந்தவனாக மேலும் வெறியேற்றிக் கொண்டான். அவனது சமநிலை முற்றாகப் போய் விட்டது என்பதற்கு ஆதாரம் அவன் ஒரே சமயம் கையாலும், காலாலும் தாக்க முயன்றது. அப்பு வெகு நேரம் அவனை எதிர்த்து அடிக்கவேயில்லை.

ஆசீரான் சில கணங்களுக்குள் அந்த வெறி பழகி அப்பு அடிக்கவே போவதில்லை என்பது போலத்தான் அடிப்பதிலேயே கவனமாக இருந்தான். சட்டென்று ஒரு கணத்தில் அப்பு பயங்கரமான உறுமலுடன் அடிக்க ஆரம்பித்தான். இங்கும் அவனது ஊனமே உதவியது. அவனது அடிவரும் திசையை ஆசீரானால் ஊகிக்கவே இயலவில்லை. அப்புவின் அடிகள் பலமற்றவையானாலும், மனத்தின் வேகம் அதில் இருந்தது போலும். மேலும் அது அதிகமும் ஆசீரான் மனத்தில் தான் பட்டது என்று படுகிறது. அப்பு மீண்டும், மீண்டும் ஆசீரான் கண்களைக் குறிவைத்தே அடித்துக் கொண்டிருந்தான். அடிகள் சில கண்கள் மீதும் நாசியிலும் விழ மூக்கு சவ்வு உடைந்து ரத்தம் வந்தது. ஆவேசத்துடன் பாய்ந்த ஆசீரான் தடுக்கி கீழே விழுந்து விட்டான்.

அதன் பிறகு தான் ஆச்சரியம் நடந்தது! அப்பு தன் இடுப்பிலிருந்து கிழிந்த பழைய சட்டைக்குள் மறையும் படி சுற்றிக் கட்டியிருந்த, கோயிலின் கோட்டை வாசல் கதவின் கனத்த இரும்புச் சங்கிலியுடன் பிணைக்கப் பட்ட பெரிய பூட்டை எடுத்தான். கூட்டமே பதறி விட்டது. “அப்பு வேண்டாம்! கொலைப் பழியாயிப் போயிடும்” என்று ‘எருமை’ சிவதாணுப்பிள்ளை கத்தினார். அக்குரல் ஆசீரானின் மீது ஒரு பெரிய அடிபோல சாப வாக்கியம் போல விழுந்திருக்க வேண்டும். ஆசீரான் அப்படியே மந்திரத்தால் கட்டுப்படுத்தப் பட்டவனாக பூட்டுச் சங்கிலியை வெறித்துப் பார்த்தபடி, எழ முயன்று கை வழுக்கி சரிந்து கிடந்தான். மந்த புத்திகள் செய்வதுபோல, வேண்டாம் என்று கையையும், தலையையும் அசைத்தான். முதல் அடி பட்டபோது எலும்பில் அது போய் மோதும் ஒலி அத்தனை துல்லியமாக அத்தனை பேருக்கும் கேட்டது. அத்தனை பேரின் முதுகெலும்பும் கூசின. பிறகு அலறல். வார்த்தைகளற்ற மிருக ஊளை போல. அச்சமும், வலியும் மட்டுமேயான ஒலி; அதற்கு மனித மிருக அடையாளம் கூட இல்லை. அது உயிரின் ஒலி… ஒரு மாமிச மலை இம்மி கூட எதிர்ப்பு இல்லாமல் அடி வாங்கி, துடி துடிப்பதை நம்ப முடியாமல் பார்த்தோம்.

அப்பு “நாயே! நாயே! என்று ஒரே வசையை உக்கிரமான ஒரு மந்திரம் போலச் சொல்லிய படி அடித்துக் கொண்டிருந்தான். அவன் மனத்தில் அப்போது காலமில்லை என்று பட்டது. அந்த சீரான அடியசைவு மட்டுமே அவனாக அப்போது இருந்தான். சீரான தன்மை கொள்ளும் எச்செயலும் கச்சிதத்தையும், அதனால் உச்ச பட்ச வேகத்தையும் அடைந்து விடுகிறது. பூட்டு அழகான வட்டங்களாகச் சுழன்று பச்சை மாமிசத்தைப் பிய்த்து சிதறடித்தது. எலும்பில் மோதி, அதிர்ந்து, மீண்டு வந்தது.

முதல் கட்டப் பதற்றத்துக்குப் பிறகு அத்தனை பேருக்குள்ளும் இருந்த மிருகங்கள் அந்த வன்முறையை ரசிக்க ஆரம்பித்தன. காலமில்லை! ஓசைகளே இல்லை! ரத்தம் என்ற மிக ரகசியமான மணம். காம நினைவுகளை, ருசியுணர்வுகளை இளமைப் பருவத்து துயர நினைவுகளை எழுப்பும் அதன் எரியும் வீச்சம். ரத்தம் செம்புழுதியில் தெறித்துச் சுருண்டு முத்துக்கள் போல உருள்வதைக் கண்டோம். மண்தான் எத்தனை ஆவலுடன் ரத்தத்தை வாங்கிக் கொள்கிறது! தாகம் மிக்க ஒரு காட்டேரி போல! மனித ரத்தம் மிக புனிதமானது என்று சொல்லப் படுவது இதனால் தான் போலும். உடலுக்கு உள்ளே சீறி ஓடுகையில் என்னென்ன எண்ணங்களாக, வேகங்களாக உருமாறிக் கொண்டேயிருக்கிறது அது. ஆகவே தான் கடவுள்களுக்கு ரத்தமின்றி சிறந்த பலி வேறு இருக்க முடியாது என்கிறார்கள். ரத்தமே மனிதர்களை அவர்கள் பாவனைகளிலிருந்து மீட்டு அசலான ஆதி நிலைக்குக் கொண்டு போக முடியும்.

இன்னும் இன்னும் என்ற துடிப்புகள் அடங்கி இது இப்படியே எப்போதும் நீடிக்கும் ஒரு காலமற்ற நிலை என மனம் உறைந்து விட்டபோது சட்டென்று அப்பு நிறுத்திக் கொண்டான். ரத்தக் குளத்தில் ஆசீரானைப் போட்டு விட்டு போய் அருகே ஓடிய ஓடையில் சங்கிலிப் பூட்டைக் கழுவ ஆரம்பித்தான். கூட்டம் புதிய காற்று பட்ட புதர் கூட்டம் போல அசைவு கொண்டது. பெருமூச்சுகள் சீறின.

ஓடை நீர் சிவந்து சுழித்துச் சென்றது. ஓடையோரப் புல் நுனிகளில் கொழுத்த ரத்தத் துளிகள் நின்றன. இரையைக் கொன்ற மிருகத்தின் வாயோர மயிர்கள் போல. அப்பு பிரமைப் பிடித்தவன் போல வெகு நேரம் மிக மெதுவான அசைவுகளுடன் கழுவிக் கொண்டிருந்தான். அவனது மெலிந்த முதுகில் ரத்தத்துளிகள் வழிந்து, உளற ஆரம்பித்தான். “அப்பு, அப்பு, என்னலே இது?” என்று வேலுப்பிள்ளை போய் பிடித்து உலுக்கிய போது கனவிலிருந்து விழிப்பவன் போல அவன் விழித்துக்கொண்டான். வாயைத் திறந்தபடி தலை ஒரு பக்கமாக சரிந்து வெடவெடக்க ரத்தப் பிண்டமாகக் கிடந்த ஆசீரானைப் பார்த்தான். விசித்திரமான கம்மிய குரலில் “தெய்வமுண்ணு ஓராளு உண்டு வேலுவண்ணா” என்றான். பிறகு அடிவயிறு எக்கி ஒரு ஆழ்ந்த கேவல்.

ஆறு மாதம் படுக்கையில் கிடந்து ஆசீரான் பிழைத்துக் கொண்டான். ஆனால் தலையில் பட்ட அடி அவனது நரம்பு மண்டலத்தைச் சீரழித்து விட்டது. நிரந்தர நோயாளி ஆகி, ஓர் ஆசை நாயகி வீட்டில் படுக்கையில் கிடந்து, இரண்டு வருடத்தில் இறந்தான். வழக்கு ஒன்றுமே ஆகவில்லை. கண்ணால் கண்ட சாட்சிகளில்லை. அப்பு பின்பு ஒரு பெட்டிக்கடைப் போட்டார். பொது விஷயங்களில் ஈடுபட்டு, இடது கம்யூனிஸ்டுக் கட்சியின் அதி தீவிரத் தொண்டராகி, பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று ‘மெம்பர் அப்பு’ ஆனார்.

அன்று அத்தனை பேரும் சொன்னார்கள். அது தெய்வ அருள்தான் என்று. கோயிலில் பூமாலை பூமாலையாகக் கட்டிப் போட்ட புண்ணியம் அப்புவைக் கைவிடவில்லை என்று. “தெய்வம் பாவங்களுக்கு கூடயாக்கும் ஏமானே, இப்ப திருட்டாந்தம் ஆச்சுதா?” என்று எறும்புக்கண்ணன் கேட்டார். இப்போது யோசிக்கிறேன். தெய்வமென்றால் என்ன? எப்படி அது மண்ணில் வருகிறது?

அப்புவின் ஒவ்வொரு திட்டமும், மிக நுணுக்கமானவை. கோயிலில் இருந்தே அவன் கொலை வஞ்சினம் கூறிக் கிளம்பியது ஒரு முக்கிய உத்தி. வழியில் ஆட்கள் சேரச் சேர அவன் வருவதற்குள் அச்செய்தி ஆசீரானை வந்தடைந்து விட்டிருக்கும். தன்னைக் கொல்ல ஒருவன் ஆவேசத்துடன் தேடி வருவது எந்த சூரனுக்கானாலும் ஆழத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி விடும். கூட்டம் பின்தொடர ஆவேசத்துடன் வரும் அப்பு ஆரம்பத்திலேயே ஆசிரானை அஞ்ச வைத்து விட்டான் என்பது அவனது அப்போதைய முகபாவனைகளைப் பிறகு மீட்டுப் பார்த்த போது எனக்குத் தெளிவாகியது. ஆகவே தான் அவன் அந்த உதாசீன பாவனையை மிகையாகக் கைக்கொண்டான்.

அப்பு பாய்ந்து ஆசீரானை அடித்திருந்தான் என்றால் ஆசீரானுக்கு ஒரு அடியே போதும் அவனை வீழ்த்த. ஆனால் அவன் ஆசீரானைப் பாய்ந்து வரச் செய்தான். நிற்பவனின் கால்கள் ஓடி வருபவனின் கால்களை விட திடமாக ஊன்றியவை. தாக்க வருபவனைத் தெளிவாகப் பார்க்கவும் அவனுக்கு வாய்ப்பு அதிகம். தன ஊனத்தை அப்பு நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்ல, ஒரே இடத்தில் மீண்டும் அடித்தது கூட பெரிய தந்திரம்தான். ஆனால் ஆயுதம் கொண்டு வந்திருப்பதைக் கடைசி வரை மறைத்து விட்டது தான் உச்சக் கட்டத் தந்திரம். அவன் ஆயுதம் கொண்டு வந்திருப்பதை அறிந்தால் ஆசீரான் அத்தனை உதாசீனமாக இருந்திருக்க மாட்டான். அவன் விழுந்த பிறகு அதை அப்பு சட்டென்று நாடகத் தன்மையுடன் எடுத்ததைக் கண்டதனால்தான் ஆசீரான் அப்படி புத்தி உறைந்து போனான்.

கோயிலுக்கு வரும் ஆசானிடம் அப்பு எப்போதுமே அடிமுறைகள், பழைய அடிக்கதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான் என்பதை நான் நினைவுக் கூர்ந்தேன். அதை நொண்டியின் கையாலாகாமையின் வெளிப்பாடாகவேக் கண்டிருக்கிறேன். அந்த நுட்பங்கள் அவன் எப்போதோ எப்படியோ உள்வாங்கிக் கொண்டவை. அவை துளித் துளியாகத் தேங்கிய அந்த அக ஆழம்தான் தெய்வமா? அல்லது அப்புவில் தன் உயிரைத் துச்சமென ஆக்குமளவுக்குப் பொங்கிய அந்த அறச்சீற்றம்தான் தெய்வமா? அல்லது அந்த மோதலின் கணத்தில் அங்கிருந்த அத்தனை பேருமே அப்புவின் தரப்பினராக ஆன அடிப்படையான நியாய உணர்வுதான் தெய்வமா? தாவீதே அறியாமல் அவன் கவணில் குடிவந்த வல்லமைதான் கடவுளா?

தெரியவில்லை. அவையெல்லாம் சேர்ந்த ஒட்டுமொத்தத்தையே அப்பு தெய்வம் என்றான் போலும். ஒன்று சொல்லலாம். தெய்வமென்றால் பூமியின் எளிய இயங்கு விதிகளுக்கு அப்பால் தன மகத்தான நியதியுடன் மறைந்திருக்கும் ஒன்று. உச்ச கணங்களில் மட்டும் நிலத்தடி நீருற்று போல சீறி வெளிப்படுவது. அது வெளிப்படும் கணங்களே சரித்திரத்தில் நீடித்து நிற்கின்றன. கலைகளால் சித்தரிக்கப் படுகின்றன. கலைகளின் அடிப்படையே அந்தத் தருணம் தான். அதை வருணிக்கலாம். குறிப்புணர்த்தலாம். அதற்கு ஆயிரம் உத்திகள் உள்ளன. அந்த ஊற்று கிளம்புவதை வாசக அனுபவமாக்குவது எப்படி என்ற சவாலுக்கு விடையாகவே கலையும் இலக்கியமும் உருவாகின்றன.

ஆம், எல்லா கலையும் அப்பு சொன்ன வரியையே மீண்டும், மீண்டும் சொல்கின்றன: ‘தெய்வம் உண்டு.’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *