அழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 4,686 
 

“குமார், முதலாளி கூப்புடுறாரு”

“எதுக்கு மாஸ்டர்?”

“தெரியல… போ, போய் பாரு…”

அவன் கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். மீசையெல்லாம் மழித்து இந்திப் பட நாயகன்போல முதலாளி தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஆறுக்கு மூன்று சதுர அடியில் மேசை. கண்ணாடியிலான மேல்பாகம் உள்ளிருந்த மரத்திலான அழகான வடிவமைப்பை பளிச்சென்றுக் காட்டியது. முதலாளிக்கு எதிரிலிருந்த இருக்கையில் மேனேஜர் அமர்ந்திருந்தார். அவன் உள்ளே நுழைந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். அவருடைய முகம் கறுத்துப் போயிருந்தது. மேசை மீது சென்ற மாதம் ஏற்றுமதியான ஒரு சட்டை. ஏதோ தவறு நடந்திருக்கிறதென யாரும் சொல்வதற்கு முன்பே புரிந்துகொண்டான்.

“ஐயா, வணக்கம்… தாங்கள் அழைத்ததாக மாஸ்டர் கூறினார்”

“ம்…” அவருடைய முகம் அசாதாரண நிலையில் இருந்தது. ‘ம்’ என்று சொல்லும் பொழுதுகூட சற்று கடுமையை உணரமுடிந்தது. அவன் சற்று நேரம் பேசாமல் நின்றிருந்தான். முகத்தில் இருந்த கடுமை கொஞ்சமும் மாறாமல் தொடர்ந்தார்.

“இதுதான், நீ வேலை செய்கின்ற லட்சணமா?” மேசை மீதிருந்த சட்டையைக் காட்டியவாறு கேட்டார். அவன் பதில் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். அது முதலாளிக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது போலும். “நான் கேட்கிறேன், பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றிருந்தால் என்ன அர்த்தம்?” வார்த்தைகளில் மேலும் கடுமையைக் கூட்டினார்.

மேனேஜர் பின்புறமாக நின்றிருந்த அவனைத் திரும்பிப் பார்த்தார். யாரோ வருகிறார்கள் போல என நினைத்த அவனும் திரும்பிப் பார்த்தான். மாஸ்டர் ஏதோ எடுக்கச் செல்வதுபோல் பாவனைக் காட்டி, கண்ணாடிக் கதவு வழியாக என்ன நடக்கிறதென நோட்டம் விட்டவாறு மெதுவாகச் சென்றார்.

“என்ன, பேசாமல் நிற்கிறாய்? பதில் பேசு…”

அவன் மீண்டும் முதலாளியைப் பார்த்தான்.

“ஐயா, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிய வில்லை…” அசட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பதில் கூறினான். அது மேலும் அவரை கோபமூட்டியிருக்கக்கூடும். மேனேஜர் முகத்தை உயர்த்திப் பார்க்கிறார். அந்தப் பார்வை “ஒன்றும் பேசாதே…” என்று சொல்வதுபோல் இருந்தது.

“ஓஹோ… நான் கேட்பது புரியவில்லையா, அல்லது புரியாதது மாதிரி கேட்கிறாயா? சரி விளக்கமாகவே கேட்கிறேன். இந்த சட்டை எதுவென்று தெரிகிறதா? யாருக்கு அனுப்பினோம் என்று தெரியுமா?”

“தெரியும் ஐயா…”

“இந்த ஆர்டரில் தரம் சரியில்லை என்று மின்னஞ்சல் வந்திருக்கிறது. இதுதான் நீ தரம் பார்க்கின்ற இலட்சணமா?” என கேட்டுக்கொண்டே மேசை மீதிருந்த சட்டையை எடுத்து, அதன் உள்பக்கம் நான்கு அங்குல பிசிறு நூல் தொங்கிக்கொண்டிருக்கிறதை சுட்டிக் காட்டினார்.

‘இவரு என்ன முதலாளி, பத்தாயிரம் சட்டை அதுவும் எந்த மாதிரி சூழ்நிலையில அனுப்பி வைத்தோம் எனத் தெரியுமா? ஏதோ நாம தப்பு செஞ்ச மாதிரி திட்டுறாரே’ என மனதுக்குள் ஓடினாலும் ஒன்றும் பேசாமல் நின்றான்.

“ஐயா… அதுவந்து, அன்றைக்கு அவசர…” அவனை முடிக்க விடாமல் மேனேஜர் இடையில் புகுந்து, “குமார்… இனிமேலாவது இது மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள். போ, போய் வேலையை கவனி…” எனக் கூறி அவனை அந்த அறையைவிட்டு வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அவன் சற்று மருகி நின்று மேனேஜரையும், முதலாளியையும் மாறி, மாறிப் பார்த்தான்.

“கூலிக்கு மாரடிக்கிற ஆட்கள், இவர்களிடம் சற்று கடுமையாக வேலை வாங்குவதற்குப் பழகு” என மேனேஜரைப் பார்த்து முதலாளி கூற, மேனேஜர் என்னைப் பார்த்து ‘போ’ என்பதுபோல் சைகை செய்தார். அந்தக் கண்ணசைவில் ஒளிந்திருந்த கள்ளத்தனத்தை அவன் மட்டுமே அறிவான்.

அவன் மெதுவாக நடந்து அறையைவிட்டு வெளியேறினான். முதலாளியின் அறைக்குப் பக்கவாட்டிலிருந்த ‘மாதிரி ஆடை’ தயாரிப்புப் பகுதிக்கு வந்து, ஒரு தையல் இயந்திரத்தின் முன்னாலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். மாஸ்டர், மாதிரி ஆடை தைப்பவன், உதவியாளன் அனைவரின் பார்வையும் சாக்கடையில் ஈ மொய்ப்பதுபோல அவனை மொய்ப்பதையறிந்து கூனிக்குறுகிப் போனான்.

“என்ன சொன்னாரு…?”

முதலாளி அவனைத் திட்டி, அவமானப் படுத்தியதை உள்ளூற இரசித்துக்கொண்டு, அவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நடித்தனர். அவர்களின் நடிப்பு அவனுக்குள் எரிச்சலை உண்டு பண்ணியது.

“எப்பப் பாரு, இந்த முதலாளி இப்படித்தான்… எதுனா ஒண்ணுனா நம்மளதா திட்டுவாரு…”

முதலாளி என்ன பேசினாரு, எப்படி பேசினாரு என அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது அவர்கள் பேச்சில். அவன் முகம் வாடிப்போய் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். மாஸ்டர் அவன் தோள்மீது கை வைத்தவாறு “எனக்கு அன்னைக்கே தெரியும் இதுமாதிரி நடக்கும்னு” எனச் சொல்ல, அவன் தோளை உலுக்கி, அவரின் ஆறுதலை புறந்தள்ளினான். அவர் விடுவதாக இல்லை. எப்படியும் அவனிடமிருந்து சொற்களை வாங்கிவிட வேண்டுமென்று முயன்றார். அவன் சொற்களை தனக்குள்ளே புதைத்துக்கொண்டவனாக அமர்ந்திருந்தான். அவன் மனம் சமநிலை இழந்து புயலில் சிக்கிய தோணியாய் அலைக்கழிந்தது. வெம்மையின் தாக்கம் சுழலும் காற்றாடியையும் மீறி கழுத்தும், முதுகும் வியர்வையால் பிசு பிசுத்தது.

“எந்திரிங்க, மணி எட்டாயிட்டு… சீக்கிரமா வேலைக்குப் போகணுமுனு சொன்னீங்க…”

“ம்… ம்…” புரண்டு படுத்துக்கொண்டான். அரை தூக்கமும் விழிப்புமாய் இருந்தது. ஆனாலும், எழுந்திருக்க மனம் வரவில்லை. தீடீரென சாக்கடை நாற்றம் நாசியைத் தாக்கியது. வீட்டிற்கு முன்னால் ஓடும் சாக்கடையிலிருந்துதான் அந்த நாற்றம் வந்துகொண்டிருந்தது. அவனால் அதற்கு மேலும் படுத்திருக்க முடியவில்லை.

“என்னங்க…?”

“ம்…”

“நாளைக்கு லீவு போடமுடியுமா…?”

“ஏன், என்ன விசயம்…? அவசர வேலை ஓடுது முடியாது”

“நாளைக்கு நீங்க லீவு போடணும்…”

“அதுதான், ஏன்னு கேட்கிறனுல்ல…”

“உங்களுக்கு என்னதான் ஞாபகம் இருந்தது, இது இருக்க…?”

“ஏண்டி, எதுவும் சுத்தி வளைக்காம பேசத்தெரியாதா? என்னனு சொல்லு…”

“க்கும்… நமக்கு கல்யாணம்…”

“என்னது நாளைக்கு நமக்கு கல்யாணமா…?” ஆஹா வென சிரித்தான்.

“ஆமா பெரிய ஜோக்… சிரிக்கிறதப் பாரு… கல்யாண நாளுக்கு ஜூஹு பீச்சுக்கு போவமா?”

“சரி, சரி ரெம்ப அலுத்துக்காத… ஆனா லீவு போடுறது கஷ்டம் பாப்போம்.”

அவன் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அகர்வால் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தொழிற்சாலை கிடையாது. அவுட் சோர்சிங் முறையில் ஆடைகளைத் தைத்து வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம். எங்கெங்கு ஆடைகள் தைப்பதற்கு துணி கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் சென்று தரம் சரி பார்ப்பதோடு குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுக்க வேண்டியதும் அவனது பொறுப்பு. வெளியில் சென்று வருவதற்கான செலவை நிறுவனம் கொடுத்துவிடும். மூன்று நாட்களுக்கான செலவு கணக்கை வவுச்சரில் எழுதிக் கொண்டிருந்தான்.

“குமார், முதலாளி கூப்பிடுறாரு” முதலாளியின் அறையிலிருந்து வந்த மாஸ்டர் கூறினார்.

‘என்ன இப்போதுதானே புரடெக்சன் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்தோம்…?’ மனதிற்குள் கேள்வியோடு முதலாளி அறைக்குள் நுழைந்தான்.

“ஐயா, தாங்கள் அழைத்தீர்களாமே…?”

“ஆமாம்… அந்த யு.கே ஆர்டர் எப்பமுடியும்?”

“இன்னும் அஞ்சு, ஆறு நாளாகும் ஐயா…”

“அப்படியா…? ஆனா நம்மகிட்ட அவ்வளவு நேரம் கெடையாது… நாளை மாலைக்குள் எல்லா வேலையையும் முடித்து அனுப்பியாக வேண்டும்”

“ஐயா, அது முடியாத காரியம். காலையிலதான் தங்களிடம் ‘புரொடக்சன் ரிப்போர்ட்’ கூட கொடுத்தேன்”

“ஆமாம்… கொடுத்தாய்தான், என்ன செய்ய? நம்மிடம் அவ்வளவு நேரமில்லை. என்ன செய்வாயோ தெரியாது, எனக்கு நாளை மாலைக்குள் வேலை முடியவேண்டும்.”

“எப்படி ஐயா முடியும்? தாங்கள், நேற்று கூட ஒன்றும் சொல்லவில்லை…”

“ஆனால் இப்பொழுது அத்தனை அவகாசமில்லை.”

“இன்னும் மூவாயிரம் ஆடைகள் தரம் பார்த்து, தேய்த்து அட்டை பெட்டி போடவேண்டும். அது மட்டுமின்றி இன்னும் நானூறு ஆடைகள் தைக்க வேண்டியதும் மீதம் உள்ளது. அதற்கே நாளை மாலையாகிவிடும், அதற்குப்பிறகு அந்த ஆடைகளை முழுமையாக தயார் செய்யவே ஒருநாள் வேண்டும். அதுவுமில்லாமல் நாம் ஆடைகள் தயாரிக்க கொடுத்த நிறுவனத்திடம் அவ்வளவு கெபாசிட்டி கிடையாது. நாள் ஒன்றுக்கு அறுநூறு ஆடைகள்தான் அவர்களால் தயார் செய்ய முடியும். இரவு, பகலென்று வேலை பார்த்தால் கூட குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேண்டும்.”

“அது உனக்குள்ள பிரச்சனை, அதுபற்றி எனக்கு கவலையில்லை. கூடுதலாக பணம் செலவானாலும் பரவாயில்லை, நாளை மாலைக்குள் வேலை முடித்தாக வேண்டும்.”

‘சொல்றது கொஞ்சம் கூட புரியாம சொன்னதையே திருப்பி, திருப்பி சொன்னா என்ன செய்வது.’ வாய்க்குள் முனுமுனுத்தான்.

“என்ன யோசிக்கிறாய்? கணக்காளரிடம் பணம் பெற்றுக்கொள். வவுச்சர் வேலை முடிந்த பிறகு கொடுத்தால் போதும். போ, போய் சீக்கிரம் வேலையைப் பாரு…”

ஆட்டோவில் விஷால் கார்மெண்ட்ஸ்க்கு சென்றான். போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்ததால் விரைவாக இலக்கிற்கு போய் சேரமுடிந்தது. விஷால் கார்மென்ட் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. வேலை நடக்கின்ற அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று சூழ்நிலையை விளக்கி துரிதப்படுத்திக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி வந்ததாக உதவியாளன் வந்து கூறினான்.

“ஹலோ…”

“ஹலோ, நான் மேனேஜர் பேசுகிறேன்.”

“ஐயா, நேற்று கூட ஒன்றும் சொல்லாமல், இப்படி திடீரென்று நாளை மாலைக்குள் வேலை முடிய வேண்டும் என்று சொன்னால் எப்படி? அப்படி என்ன ஒரு நாளில் அவசரம் வந்து விட்டது.”

“அதுவா…? அது வந்து நேற்றைக்கு ‘மத்திய பட்ஜெட்’ தாக்கல் ஆனது. அதில் ஏற்றுமதிக்கான மான்யம் இரண்டு சதவீதம் குறைத்து விட்டார்கள்.

“அதற்காக ஒருவார வேலையை ஒண்ணரை நாளில் முடி என்றால் எப்படி முடியும்?”

“நீ நினைத்தால் முடியும்.” உன்னால்தான் முடியும் என்று சொன்னவுடன் சற்று கர்வமாக இருப்பதை உணர்ந்தான்.

“உனக்குத் தெரிந்த, ஆடைகளை தேய்த்து அட்டைப் பெட்டிப் போடுகின்ற நிறுவனங்களிடம் பேசிப்பார்.”

“ஏற்கனவே ஒன்றிரண்டு நபர்களிடம் பேசிவிட்டேன் அங்கும் இதே நிலைதான், ”

“புரியாமல் பேசாதே, ஏற்கனவே ஆடைகள் அனுப்பிவிட்டதாக பில் போட்டு, ஏற்றுமதி ஏஜென்ட்களிடம் கொடுத்தாகிவிட்டது. துறைமுக வைப்பு நேரமான (கூலிங் பிரியட்) 48 மணி நேரம்தான் நம்மிடம் உள்ளது. கமிஷனர், ஏஜெண்ட் என மாறி, மாறிப் பேசி இதற்கு ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறோம். உன்னிடம் சொல்கிறேன் முதலாளியிடம் சொல்லாதே, நாளை மாலையில்லை என்றாலும் மறு நாள் காலை ஆறு மணிக்கு சரக்கு லாரி புறப்பட்டுவிட வேண்டும். மறந்து விடாதே முதலாளி கேட்டால் நாளை மாலைக்குள் வேலை முடிந்துவிடும் என்று சொல் புரிகிறதா? நானும் சற்று நேரத்தில் வருகிறேன். வேறு இடங்களிலும் பேசிப்பார்.”

அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் “சரி” எனத் தலையாட்டினான்.

“ஹலோ… பாண்டேஜி வணக்கம், எப்படியிருக்கிங்க? ”

“நலமாகயிருக்கிறேன்… என்ன ரெம்பநாள் கழித்து பேசுகிறீர்களே? நலமா… பணிகள் எப்படி நடக்கிறது?”

“நலம் பாண்டேஜி, பணி நிமித்தம்தான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாம் என்று போன் செய்தேன்.”

“உதவியா, என்ன உதவி?”

“ஒன்றுமில்லை, நாளை மாலைக்குள் ஒரு ஆயிரம் ஆடைகள் தேய்த்து, அட்டை பெட்டி போட்டுக் கொடுக்க வேண்டும்”

“ஆயிரம் ஆடைகளா? முடியாதே… என்னிடமும் அவசர வேலைதான் ஓடுகிறது.”

“பாண்டேஜி, நீங்கள் மறுக்கக் கூடாது. இக்கட்டான சூழ்நிலை, எப்படியாவது உதவ வேண்டும்.”

“என்ன சொல்வதென்று தெரியவில்லை, நான் வேண்டுமானால் ராம்லால் சேட்டிடம் பேசிப்பார்க்கிறேன். அவர் ஒரு நாள் தாமதத்திற்கு ஒத்துக்கொண்டால் கூட ஆயிரம் ஆடைகள் என்பது முடியாது ஒரு ஐநூறு ஆடைகள் வேண்டுமானால் தயார் செய்து தருகிறேன்.”

“நீங்கள் ராம்லால் சேட்டிடம் பேசுங்கள், இல்லை கரண்ட் இல்லை, பாய்லர் ரிப்பேர் என்று ஏதாவது காரணம் சொல்லுங்கள். இன்று மாலைக்குள் ஆடைகள் உங்களிடம் அனுப்பிவைக்கிறேன். இன்று இரவு, நாளை பகல் என வேலை பார்த்தால் உங்களால் ஆயிரம் ஆடைகள் கூட தயாரித்துவிட முடியும். இரவு செலவை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்கிறேன். முடியாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.”

“குமார், நீங்கள் உங்கள் சூழ்நிலையை சொல்லும்போது என்னால் மறுக்க முடியவில்லை. சரி, அனுப்பிவையுங்கள் முயற்சிக்கிறேன், மறக்காமல் கூடவே இரவு சாப்பாட்டு செலவிற்கு ஐநூறு ரூபாயும் கொடுத்தனுப்புங்கள்.”

‘அப்பாடா ஒத்துக்கொண்டதே பெரிய விசயம். ஐநூறு என்ன ஆயிரம் கூட கூடுதலாகக் கொடுக்கலாம்’ என மனதில் நினைத்தவாறு தொடர்பை துண்டித்தான்.

உதவியாளனை அழைத்து, “சீக்கிரம் ஐநூறு ஆடைகளை எண்ணி எடுத்து பிளாஸ்டிக் பைகளில் கட்டு. ஆயிரம் ஆடைகளுக்கான பேக்கிங் மெட்டிரியல், டேக், அட்டைப்பெட்டி எடுத்துக்கொண்டு பாண்டே கம்பெனியில் கொடு. சற்று நேரத்திற்கெல்லம் நான் வருகிறேன் என்று சொல். பாண்டேயிடம் ஐநூறு ரூபாய் கொடுத்துவிடு. டெம்போகாரரிடம் இரண்டு நாள் மொத்த வாடகைக்கு பேசி அட்வான்ஸ்சாக ரூபாய் ஐநூறு கொடுத்துவிடு.” மொத்தமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினான்.

வேலை நடக்கும் ‘விசால் கார்மெண்ட்’ முதலாளி விஷாலும் வந்து சேர்ந்தார். அவரிடம் சூழ்நிலையை விளக்கினான். “ஐநூறு ஆடைகளை தயார் செய்ய ஏற்பாடு செய்துவிட்டேன். இன்னுமொரு ஐநூறு ஆடைகளுக்கு அதுபோல ஏற்பாடு செய்கிறேன். மீதம் இரண்டாயிரம் ஆடைகளை தாங்கள் தயார் செய்தால் போதும்.” என்றான்.

“ரெண்டயிரமா… எப்படி முடியும்?”

“இரவு பகல் பார்த்தால் முடித்துவிடலாம்.”

“இரண்டு நாள் தொடர்ந்து இரவு முழுக்க, பகல் முழுக்க எப்படி வேலை செய்ய முடியும்.”

“தேய்ப்பவர்களிடம் எப்படியாவது பேசி புரியவையுங்கள். அவர்கள் ஒத்துக்கொண்டாலும் இன்னும் நானூறு ஆடைகள் தைக்க வேண்டியுள்ளதே.”

“இல்லை. அந்த நானூறு ஆடைகளும், தைப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. இன்று இரவு இரண்டு மணிக்குள் தைக்கின்ற வேலை முடிந்து விடும். காஜா, பட்டன் வாலாக்களை நிறுத்தி வையுங்கள். பிசிறு நூல் வெட்ட பெண்களிடம் பேசி வைத்திருக்கிறேன். ஆடைகளை வீட்டில் கொண்டுவந்து கொடுத்தால், நாங்கள் நூல் வெட்டித்தருகிறோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.”

“நல்லது. நான் வருவதற்குள் என் வேலையாட்களை எல்லாம் தயார் படுத்தி விட்டீர்கள். ஆனால் இரண்டு நாள் இரவு முழுதும் வேலை பார்க்க வேண்டுமானால், அதிகம் செலவாகி விடும் எனக்கு கட்டுபடி ஆகாதே.”

“அதுபற்றி கவலைப்பட வேண்டாம். நான் முதலாளியிடம் பேசிவிட்டேன். தங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டவேண்டியது எனது பொறுப்பு. அவசர வேலையென்றாலும் தரத்தில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் தேய்ப்பதற்கு கொடுத்த நிறுவனங்களுக்கு போய் வரவேண்டும். கவனமாக வேலை பார்க்கவும்.”

“அது பற்றி கவலைப்பட வேண்டாம். இன்னும் ஐநூறு ஆடைகள் யாருக்கு தருவதாய் உத்தேசம்?”

“அது பற்றி இன்னும் முடிவாகவில்லை. இரண்டு மூன்று நிறுவங்களில் பேசிப்பார்க்க வேண்டும்.”

நினைவிற்கு வந்த ஒவ்வொருவரிடமும் பேசிப்பார்க்கிறான். அனைத்து இடங்களிலும் முடியாது என்ற பதிலே வந்துகொண்டிருந்தது, அயர்ச்சியை உண்டு பண்ணியது. சூடாக தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தான். மதிய உணவிற்காக கொண்டுவந்த உணவு அப்படியே இருந்தது. இதுபோன்ற நேரங்களில் பசிப்பதேயில்லை. தேநீர் கிடைத்தால் போதும். தேநீர் வயிறுக்குள் இறங்க, இறங்க அது பசியை தள்ளிக்கொண்டு போய்விடும். “கொண்டு போற சாப்பாட்டைக் கூட சாப்பிட முடியாம அப்படி என்னதான் வேலையோ?” அம்மா கடிந்து கொள்வதும் வழமையாகிப் போனது.

மேனேஜர் விஷால் கார்மெண்ட்ஸ் வாசலில் நின்றுகொண்டிருந்தார்.

“எங்க போய் சுத்திட்டு வர்ற, நா வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?”

“இல்ல… இப்பதான் அஞ்சு நிமிசம் கூட இருக்காது. டீ குடிக்கப் போனேன்.”

“சரி, சரி என்ன ஏற்பாடு பண்ணியிருக்க, முடிஞ்சுரும்ல?”

நடந்த ஏற்பாடுகளை சொல்லிவிட்டு “இன்னும் ஒரு ஆயிரம் ஆடைகள் தேய்த்து, அட்டைப்பெட்டி போடுவதற்கு வழி கிடைத்துவிட்டால், நாளை மறுநாள் காலைக்குள் முடித்துவிடலாம் என நினைக்கிறேன்.” என்றேன்

“நினைக்கிறேன், என்ன நினைக்கிறேன்? முடிக்கணும், எப்படியாவது முடிக்கணும்… முதலாளிக்குத் தெரியாம பனிரெண்டு மணிநேரம் கூடுதலாக கொடுத்திருக்கிறேன். தெரியுமில்ல.” ஏதோ அவனுக்கு சகாயம் பண்ணுவதுபோல பேசிக்கொண்டே சென்றார்.

“இன்ஸ்பெக்சன் எப்ப…?”

“அத நான் பாத்துகிறேன். அவர்களிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். நாளை மாலை வருவார்கள்.”

“நாளை மாலைக்குள் வேலை முடியாதே. அதுதான், நான் பேசி விட்டேன் என்று சொல்கிறேன் அல்லவா… நாளை மாலை வருவார்கள், வேலை முடிந்து விட்டதாக இரண்டு நாள் முன் தேதியிட்டு இன்ஸ்பெக்சன் ரிப்போர்ட் கொடுத்து விடுவார்கள். வாங்கி, கவனமாக வைத்துக் கொள்”

“வேலையில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் எனக்கு போன் செய். முதலாளியிடம் எதுவும் சொல்ல வேண்டாம்.” என என்னிடம் கூறிவிட்டு ‘விஷால் கார்மெண்ட்’ முதலாளியை தனியாக அழைத்து ஏதோ சொல்லிவிட்டுச் சென்றார்.

அட, நம்ம தமிழ்க்காரரு நடேசன் அண்ணாச்சி கிட்ட கேட்டுப் பாக்கலாம் என்று சட்டென்று நினைவுக்கு வர அண்ணாச்சிக்கு போன் செய்தேன்.

“உங்களுக்கு இல்லாததா தம்பி, கொண்டுவாங்க. என்ன எங்கிட்டேயும் அவசர வேலைதான் ஓடுது; இருந்தாலும் சமாளிக்கலாம். அப்படியே இரவு சாப்பாட்டுக்கும் பணம் கொடுத்து விடுங்க. இந்த வேலையில பெருசா வருமானம் இல்ல பாருங்க” என்று அணுசரனையாக பேசினார்.

‘ஒருவழியா டென்சன் கொறஞ்சது. எப்படியும் வேலய முடிச்சுறலாம். என்ன ஒழுங்கா வேல ஓடுதுதானு பாக்குறதுதான் கஷ்டம். அதான் மேனேஜர் நான் பாத்துக்கறேனு சொல்லிட்டாரே. நமக்கென்ன பயம்’ என நினைத்தாலும் அப்படியே இருந்துவிட முடியவில்லை. ஆட்டோவைப் பிடித்து பாண்டே கம்பெனிக்கும், நடேசன் அண்ணாச்சி கம்பெனிக்கும், விஷால் கார்மெண்ட்க்கும் என மாறி, மாறி அலைந்ததில் இரவு இரண்டு மணியாகி விட்டது. பசியும், தூக்கமும் எங்கே போய் ஒளிந்துகொண்டதோ தெரியவில்லை.

“மாஸ்டர் இன்னைக்குபோதும், நாளைக்கு பாக்கலாம்.” தேய்ப்பவர்களுக்கு சற்று ஓய்வு தேவை என்றார். வேலையாட்களிடம் காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் பணம் கொடுத்துவிட்டு ஆட்டோப் பிடித்து வீடு வந்து சேரவும், விடியவும் சரியாக இருந்தது. இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்து, மனைவி கொண்டுவந்த இட்லியை சாப்பிட்டும், சாப்பிடாமலும் அவசர, அவசரமாகக் கிளம்பி விஷால் கார்மெண்ட்ஸிற்கு சென்றான்.

காஜா, பட்டன், நூல் வெட்டி முடித்து நானூறு ஆடைகளும் தரம் சரிபார்க்கும் இடத்திற்கு வந்திருந்தது. முதல் நாள் பகல், இரவு வேலை பார்த்ததில் எண்ணூறு ஆடைகள் அட்டைப்பெட்டி போட்டு தயார் நிலையில் இருந்தது. பாண்டே கம்பெனியிலிருந்தும், நடேசன் அண்ணாச்சி கம்பெனியிலிருந்தும் ஐநூறு, ஐநூறு ஆடைகள் வந்து சேரவில்லை. மொத்தம் எட்டாயிரம் ஆடைகள் தயார் நிலையில் இருந்தன. ‘இதே வேகத்தில் வேலை நடந்தால் அதிகாலை நான்கு மணிக்கு வேலை முடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. மனம் பரபரத்துக் கொண்டேயிருந்தது. மூன்று இடங்களுக்கும் மீண்டும், மீண்டும் போய் வந்த வண்ணம் இருந்தான். அன்றைக்கும் மதிய உணவு மறந்தே போயிற்று. மாலையில் நடேசன் அண்ணாச்சிதான் “என்ன தம்பி, களைச்சு போயிருக்கிங்க, ஒரு வடப்பாவாவது சாப்பிடுங்க.” என வாங்கி வந்து கொடுத்தார்.

மீண்டும் விஷால் கார்மெண்ட்டிற்கு வந்து அட்டைப்பெட்டிகளை எண்ணிப் பார்த்தான். இருநூற்றி இருபத்தைந்து அட்டைப்பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. இருநூற்றி இருபத்தைந்து அட்டைப்பெட்டிகள் என்றால் ஒன்பதாயிரம் ஆடைகள் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்சன் செய்கின்றவர்கள் வந்து ரிப்போர்ட் கொடுத்துவிட்டு சென்றனர். ஏற்கனவே பாண்டேயிடமிருந்தும், நடேசன் அண்ணாச்சியிடம் இருந்தும் இரண்டாவது தடவையாக மீதமிருந்த நானூறு ஆடைகளும் வந்து சேர்ந்தன.

மனது இடைவிடாது கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தது. மாலை கதிரவன் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தான். தெருவிளக்குகள் மஞ்சள் வண்ணத்தில் ஒளிரத் துவங்கியது. பகலெல்லாம் ஓடிக் களைத்த மனம் சற்று ஓய்வை விரும்பியது. கடமை முன்னால் குன்றென உயர்ந்து நின்றது. ‘இரவு சாப்பாடு, பின் வேலை, பிறகு சற்று ஓய்வு என சாப்பாட்டிற்கும் ஓய்விற்கும் ஒரு மணிநேரம் எடுத்துக்கொண்டால் கூட ஒன்பது மணி நேரத்தில் தேய்க்கின்ற வேலை முடிந்து விடும். உடனுக்குடனே அட்டைப்பெட்டி போட்டுக்கொண்டே வந்தாலும், கடைசியாகத் தேய்த்து முடிந்த பின் அட்டைப்பெட்டி போட கூடுதலாக ஒரு அரை மணிநேரம், மொத்தத்தில் ஒன்பதரை மணிநேரம். இப்ப மணி ஏழுனா; ஏழு அஞ்சு பன்னெண்டு, ஒன்பதரையில அஞ்சு போக நாலரை, நாலு, நாலரைக்கெல்லாம் வேலை முடிஞ்சுரும்.’ மீண்டும், மீண்டும் மனம் கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தது.

நேரமாக, நேரமாக பசி வயிற்றைப் பிடுங்கியது. விஷால் கார்மெண்ட் முதலாளியும் வீட்டிற்குச் செல்லவில்லை. “குமார் மாஸ்டர் வாங்க, சாப்பிட்டு வருவோம்.” இரவு ஒன்பது மணிக்கு மேல் கடையில் போய் சாப்பிட்டுவிட்டு வந்தனர்.

பதினைந்து அட்டைப்பெட்டிகள் கூடுதலாக இருந்தது. இரு நூறு ஆடைகள் வீதம் இரண்டாவது முறையாக அனுப்பிய ஆடைகளில் நூறு ஆடைகள் தேய்த்தும், மீதம் நூறு ஆடைகள் அப்படியே திரும்ப வந்துவிட்டதாகவும் உதவியாளன் கூறினான். நடேசன் அண்ணாச்சியிடமிருந்து இரு நூறு ஆடைகள் தயார் நிலையில் வந்ததாகவும், இங்கு தயாரான ஆடைகளோடு சேர்ந்து அட்டைப்பெட்டி போட்டதாகவும் உதவியாளன் கூறினான். எப்படி கணக்குப் பார்த்தாலும் நூறு ஆடைகள் கூடுதலாக எப்படி தயார் ஆனது என மனதிற்குள் சின்ன சந்தேகம் எழுந்தது. வேலை நடக்கும் அத்தனை இடங்களையும் சுற்றிவிட்டு வந்தான். மனது நிலைகொள்ளாமல் தவித்தது, ‘ஏதோ தவறு நடந்துள்ளது’ உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. உதவியாளனிடம் கூறி புதிதாக தயார் செய்த பதினைந்து பெட்டிகள் எடுத்து பிரித்து ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் உள்ள ஆடைகளை எண்ணிப் பார்த்தான். ஒவ்வொரு அட்டைப் பெட்டியிலும் ஐந்தாறு ஆடைகள் குறைவாக இருந்தன. எல்லா அட்டைப்பெட்டிகளிலும் சேர்ந்து மொத்தமாக எழுபத்தெட்டு ஆடைகள் குறைந்து இருந்தது. விஷால் கார்மெண்ட் முதலாளியை அழைத்து சத்தம் போட்டான். தனது எச்சரிக்கை உணர்வையெண்ணி தனக்குத்தானே பாராட்டிக்கொண்டான்.

“சரக்கு போகவில்லை என்றாலும் பரவாயில்ல; இதுபோல தவறு செய்ய வேண்டாம். முதலாளிக்கு யார் பதில் சொல்வது. உங்க இஷ்டத்துக்கு வேலை செய்யணும்னா இங்க நான் எதுக்கு? நான் போகிறேன். முதலாளிக்கு நீங்களே பதில் சொல்லிக்கங்க” என சத்தம் போட, “நானும் உங்ககூடதான சாப்பிட வந்தேன் பசங்க தூக்க கலக்கத்துல தப்பு செஞ்சிருப்பாங்க, இனி இந்த தவறு நடக்காது. நீங்களே பக்கத்தில இருந்து பாத்துக்கங்க” என சமாதானம் செய்வதுபோல பேசினார்.

அந்த நேரம் பார்த்து மேனேஜர் போன் வந்தது. அவரிடம் நடந்தத் தவறை எடுத்து கூறினான். “நா கண்டிக்கிறேன். இந்த விசயத்தை முதலாளியிடம் எப்போதும் சொல்ல வேண்டாம்” என்று என்னிடம் கூறிவிட்டு, விஷால் கார்மெண்ட் முதலாளியிடம் பேசினார்.

‘நல்ல வேளை சேட்டுக்கு ஏற்பட்டிருந்த நஷ்டத்த தடுத்து விட்டோம்’ என பெருமிதம் எனக்கு. உற்சாகம் தானாகத் தொற்றிகொண்டது. நாலரை மணிக்கு முடியும்னு பார்த்து இந்த ‘பாண்டே’ நூறு ஆடையை அப்படியே அனுப்பிவிட்டானே. அது ரெடியாக ஒரு மணி நேரம் கூடுதலாக வேண்டுமே. ‘கடைசியில் மேனேஜர் சொன்ன நேரத்துக்குத்தான் முடியும்போல. சரி என்ன பண்ண, நூறுங்கிற எடத்துல இருநூறு வந்திருந்தா அவ்வளவுதான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போயிருக்கும்’ நினைத்துக்கொண்டே தேய்ப்பவர்களிடம் சென்றான். “என்ன மாஸ்டர் நாலு மணிக்கு முடிச்சுறலாம்னு இருந்தோம். இப்ப போய் நூறு சட்டையைக் கொண்டு வந்திருக்கிங்க.” என சலித்துக்கொண்டனர். பாவம் அவர்களது கண்களில் தூக்கம் தொத்திக்கொண்டிருந்தது.

“என்ன ஒரு மணிநேரம் கூடுதலாகும், உங்க சேட்கிட்ட சொல்லி சைக்கிள்ல ச்சாயா விக்கிறவங்கள கூப்பிட்டு வரச் சொல்றேன். ஆளுக்கொரு ச்சாயா குடிச்சிட்டு வேலை பாப்போம்.” என இசைவாகப் பேசினான்.

இரவு நடுநசியைத் தாண்டியிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான். நிலவு தயங்கித், தயங்கி பயணித்துக்கொண்டிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பேறியிருந்தது. நிலவும் தன் வண்ணத்தில் சிவப்பைக் கூட்டி காட்சியளித்தது. அருகிலிருந்த மரத்தின் இலைகள் அசையை, அசைய குளுமை நிறைந்த காற்று அவன் உடலை தழுவிச்சென்றது. அவன் இமைகள் தன்னையறியாமல் மூடிக்கொண்டது. மூடிய கண்களுக்குள்ளாக நிலவு அவனைப் பார்த்து சிரித்தது. அந்தச் சிரிப்பின் அழகை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. ஆனால் நிலவுக்கு மட்டும் ஏதோ ரகசியம் தெரிந்திருந்தது. நேரம் வேக, வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தான் சோர்ந்து உட்கார்ந்தால் வேலையும் அப்படியே நின்றுவிடும் என நினைத்து எழுந்துகொண்டான். பக்கத்து வீட்டு தண்ணீர் குழாயைத் திறந்து இரு கைகளாலும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் சட்டென அறைந்தான். மீண்டும், மீண்டும் தண்ணீரைப் பிடித்து முகம், கழுத்து, இன்னும் சற்று இறக்கி மார்புவரை தண்ணீரால் கழுவினான். உடல் பகலெல்லாம் சுமந்து திரிந்த வெக்கை முழுதும் வெளியேறியதும் உடல் சற்றே குளுமை அடைந்தது.

லாரி இரவே வந்து நின்றுகொண்டிருந்தது. அட்டைப்பெட்டி போட வேலையில்லாத நேரம் பார்த்து, அனைத்து உதவியாளர்களையும் அழைத்து தயாரயிருந்த அனைத்து அட்டைப்பெட்டிகளையும் லாரியில் ஏற்றிவிட்டு மீண்டும் அட்டைப்பெட்டிகளில் அவனே நாற்பது, நாற்பதாக சட்டைகளை எண்ணிப் போட்டான். மணி ஆறு ஆகவும், அட்டைப்பெட்டிகள் முழுவதும் போட்டு லாரியில் ஏற்றவும் சரியாக இருந்தது. கவரில் இருந்த பில்லையும், ஏஜெண்ட் முகவரி, தொலை பேசி எண் முதலியவற்றையும் கொடுத்து, “இரண்டு மணி நேரத்தில் நவசேவா துறைமுகத்தில் இருக்க வேண்டும்” என எச்சரித்து லாரியை அனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். சட்டை, பேண்ட் கூட கழற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்து தூங்கிப் போனான்.

அனைவரும் அவனைச் சுற்றி என்ன, என்ன என கேட்க, கேட்க அவனக்குள் அவமானமும், ஆவேசமும் படர்வதை உணர்ந்தான். ‘முதலாளியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றி விட்டோம், குறித்த நேரத்தில் வேலை முடித்துக் கொடுத்து விட்டோம்’ என இத்தனை நாள் நீடித்திருந்த பெருமிதம் வெடித்து சுக்கு நூறாகியது. துக்கம் தொண்டைக்குழிக்குள் உருண்டுகொண்டிருந்தது. சொற்கள் உள்ளுக்குள் இறுகத்துவங்கின.

ஒரு முடிவெடுத்தவனாய் எழுந்து வேகமாக முதலாளியின் அறைக்குள் சென்றான். முதல் முறையாக முதலாளி அழைக்காமல் அந்த அறைக்குள் நுழைந்தான். “ஐயா, மன்னிக்கவும், நான் வீட்டிற்கு செல்கிறேன். இனிமேல் வேலைக்கு வருவதாக இல்லை.” வார்த்தைகளை தேர்ந்தெடுக்காமல் பேசிவிட்டு முதலாளியின் பதிலுக்கு காத்திராமல் அந்த அறையைவிட்டு வேகமாக வெளியேறினான். அந்த வேகத்தில் அவனது துக்கமும், கோபமும் கலந்து அறையின் சுவரெங்கும் பட்டுத்தெறித்தது. மாலை சூரியன் தன் வெப்பத்தை குறைத்துக்கொண்டு கடலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். சாலையெங்கும் வெளிச்சம் விரிந்துகொண்டே சென்றது. அவனுக்கு கடலைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஜூஹு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தான். கடல் கருநீலநிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் முகத்தில் புன்னகை கொஞ்சம், கொஞ்சமாக மலரத் துவங்கியது. ஓயாத சப்தம் எழுப்பிய வண்ணம் அலைககள் வந்து, வந்து அவன் பாதங்களை முத்தமிட்ட வண்ணம் இருந்தது.

2014- தென்னரசு ஆண்டு மலர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *