பெண்ணுரிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 4,306 
 

அவள் பெயர் ப்ரியா.

சென்னையின் ஒரு பிரபல ஐடி மல்டி நேஷனில் டெலிவரி ஹெட்டாக இருக்கிறாள்; வயது இருபத்தியெட்டு. கோதுமை நிறத்தில் பார்க்க ரொம்ப அழகாகவே இருப்பாள் ஹாஸ்டலில் தனியறையில் வாசம்.

அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பிடித்ததைச் செய்வாள். இது தப்பு அது ரைட்டு அப்படியெல்லாம் எந்த வேலிகளும் அவளுக்குக் கிடையாது. தனிமனித சுதந்திரத்தை மதிப்பவள். சுதந்திரப் பறவை.

அவ்வப்போது பெண்கள் கல்லூரியில் லெக்சர் கொடுப்பாள். இதனால் கல்லூரி மாணவிகள் மத்தியில் அவள் பிரபலம்.

ப்ரியா கடந்த இரண்டு வருடங்களாக ராம்ஜியை காதலிக்கிறாள். அதே நேரத்தில் ஜார்ஜ் என்பவனும் அவளைக் காதலிக்கிறான். அருமையாக கிடார் வாசிப்பான். மாநிறத்தில் உயரமாக இருப்பான். கவர்ச்சியாகச் சிரிப்பான்.

ராம்ஜி ஐய்யர் வீட்டுப் பையன். அதனால் வீட்டில் பிரச்னை இல்லாமல் எளிதாக சம்மதம் வாங்கிவிடலாம். பார்க்க ஒரு பசுமாடு மாதிரி சாதுவாக இருப்பான். அமைதியாகப் பேசுவான்.

ராம்ஜி ஒருநாள் அவளிடம், “அம்மா, அப்பா திருப்பதி போயிருக்கா. நான் மட்டும்தான் இருக்கிறேன்… ஆத்துக்கு வாயேன்…” என்றான்.

அவளும் குறுகுறுப்புடன் போனாள். பேசிக்கொண்டிருந்த ராம்ஜி திடீரென, “ப்ரியா ஐ வான்ட் டு ஹக் யூ…” என்றான். குரலில் ஒரு விரகதாபம்.

“சரிடா…”

பெட்ரூமிற்குள் நுழைந்தார்கள். ப்ரியாவைக் கட்டிப்பிடித்து முகத்தில் முத்தம் கொடுத்தான். பிறகு வலது கையை அவள்மீது படக்கூடாத இடங்களில் படர விட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. அவனைத் தள்ளிவிட்டாள். அது தப்பு என்றல்ல; அன்றைக்கு அவளுக்கு மூட் இல்லை.

“சரி, வேண்டாம்.. ஆனா உன்னை முழுசா நான் பார்க்கணும்… மேனே ப்யார் க்யா படத்தில் ஒரு பாடல் காட்சியில் சல்மான்கானுக்கு பாக்யஸ்ரீ தன்னை முழுதுமாக காண்பிப்பாளே அது மாதிரி…”

சரி போகிறான் என்று நினைத்து பாத்ரூமில் நுழைந்து, ஒரு பெரிய வெள்ளைநிற டர்க்கி டவலால் உடம்பை சுற்றிக்கொண்டு அவன் முன் வந்து நின்றாள்.

பிறகு டவலை இரண்டு கைகளாலும் நுனிகளில் பிடித்துக்கொண்டு அதை அவிழ்த்து காண்பித்து அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தாள். ராம்ஜி வாயைப்பிளந்தபடி கண்கொட்டாது பார்த்தான். இரண்டு நிமிட தரிசனம் முடிந்ததும் அவள் மறுபடியும் உடைகளை அணிந்து கொண்டாள். .

அடுத்தவாரம் அவன் பெற்றோர்கள் பழனி சென்றனர். மறுபடியும் ப்ரியாவைக் கூப்பிட்டான். இந்தத் தடவை அவள் ‘அதற்கான’ மூடில் இருந்தாள். முதல் அனுபவத் தேடலை ஆசையுடன் எதிர்பார்த்துப் போனாள்.

பேச்சினிடையில் ராம்ஜி தன்னுடைய லேப்டாப்பில் பேனா போன்ற எதையோ பக்கவாட்டில் சொருகி. ப்ரியாவைப் பார்க்கச் சொன்னான். அதைப் பார்த்தபோது அவள் ஷாக்காகி விட்டாள்.

போனவாரம் அவள் அவிழ்த்துக் காட்டிய காட்சி அப்படியே லேப்டாப் திரையில்…

“வாட் திஸ் ராம்ஜி? இது எப்படி?”

“இந்தப் பேனாவில் இருந்த ரகசிய காமிரா மூலம் எடுத்தேன். இதுவரை இருபது தடவைகளுக்கு மேல் இதைப் பார்த்துவிட்டேன் ப்ரியா… எப்படியும் நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கப் போகிறேன்.. ரியல் பரிசு கிடைக்கும்முன் இதுதான் தற்போதைக்கு எனக்கு ஆறுதல் பரிசு…”

ப்ரியா வெகுண்டாள். அந்தப் பேனாவை உருவி எடுத்து தன் கைப்பையில் திணித்துக்கொண்டு, “அதெப்படி எனக்குத் தெரியாமல் என்னை நீ படம் எடுக்கலாம்? நம் காதல் கல்யாணத்துலதான் முடியணும்னு கட்டாயம் ஒண்ணுமில்லையே…. இந்தக் கேவலமான செயலை நீ எப்படிச் செய்யலாம் ராம்ஜி? ச்சீ….”

கோபத்துடன் வெளியே வந்து தன்னுடைய காரைக் கிளப்பினாள்.

காரை ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு அவனுடைய மொபைல் நம்பரை ப்ளாக் செய்துவிட்டு, பின்பு டெலிட் செய்துவிட்டாள். தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

அடுத்தநாள் ராம்ஜி அவளைத் தேடி ஹாஸ்டல் வந்தபோது செக்யூரிட்டியிடம் தனக்கு அவன் யார் என்றே தெரியாது என்றும், அடுத்ததடவை வந்தால் மிரட்டி அனுப்பும்படி சொல்லிவிட்டாள்.

இயல்பான நிலைக்கு ப்ரியா வந்துவிட்டாள்.

இரவு அந்தப் பெண்கள் கல்லூரியில் இருந்து மொபைலில், “மேடம் நாளை மாலை நான்கு மணிக்கு உங்க லெக்சர் இருக்கு மேடம்… கண்டிப்பா வந்துடுங்க…” என்றனர்.

ஓ காட்… மறந்தே போனோமே, இன்னமும் எதையுமே ப்ரிப்பேர் பண்ணலையே என்று நினைத்தவள், சரி எப்படியும் சமாளித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

மறுநாள் கல்லூரியில் ஆக்ரோஷத்துடன் பேச ஆரம்பித்தாள்….

“டியர் ஸ்டூடண்ட்ஸ்…. இரண்டு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது அவளது குணம் விமர்சிக்கப் படுவதை நம்மில் பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப் படுவது குறித்து வியப்பதற்கு ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.

ஆனால் எந்தக் கலாச்சாரத்தில் இருந்தாலும் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம் பெண்ணின் விருப்பம். அதுவும், இக்காலத்தில் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

ஆணாதிக்க சமுதாயத்தின் மன ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும். மேலும், ‘பாலியல் உறவு’ என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து உள்ளது.

ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதா பிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பார்கள். எனவே நடத்தை குறித்த சந்தேகம் எழும் போதெல்லாம் தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் நாமும் திருமணம் செய்யக்கூடும் என்று நினைத்தே அவர்கள் வளர்ந்திருப்பார்கள்.

இது போதாது என்று பெண்களை தேவதை போன்று சித்தரிக்கும் பல தமிழ்ப் படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான் ஆண்கள்.

ராமாயணத்தில் வரும் சீதையைப் பின்பற்றும் அழகான பதுமைகளாக பெண்களைப் போற்றும் பல அர்த்தமற்ற படங்களையும் ஆண்கள் பார்த்திருக்கக்கூடும்.

சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில் பெண்களை மூன்று விதமாகப் பிரிக்க முடியும் என்று நடிகர் ரஜனிகாந்த் கூறியிருப்பார். அந்தக் காட்சியின் கருத்துப்படி, ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும்; பெண்களின் ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும்; வேறுசில பெண்களைப் பார்க்கும்போது பயம் உண்டாகும் என மூன்று வகையாக அவர்களைப் பிரித்திருப்பார்.

பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான அப்பாவிப் பெண்ணான செளந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதைப் பல ஆண்களும் ஏகத்திற்கும் கைதட்டி வரவேற்றிருப்பார்கள்.

இப்படியாக ஆண்கள் படித்த புராணங்கள், பார்த்த படங்களில் எல்லாம் இரண்டு கோணங்களில்தான் பெண்கள் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். ஒன்று அடக்கமான அப்பாவியான பெண்கள், அல்லது காம உணர்வு கொண்ட மோசமான பெண்கள்.

அடக்கமான பெண்கள் காம உணர்வு கொண்டிருக்கக் கூடாதா என்ன?

ஆண்களால் இந்தக் கோணத்தில் யோசிக்க முடியாது. ஏனெனில் ஒரு பெண்ணின் குணம் என்பது அவளது கற்பை வைத்தே நம் நாட்டில் அளவிடப்படுகிறது.

ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் தனித்து இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு.

ஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலவும், இந்த உரிமைகள் குறித்து நாம் கேள்வி கேட்பது இழிவானது போலவும், ஆண்கள் என்ன செய்தாலும் அதைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இங்குள்ளது.

ஆண்கள் மனதில் குழப்பத்தை ஏற்ட்படுத்தக் கூடிய ஒன்றை இப்போது சொல்கிறேன்… பொறுமையாகக் கேளுங்கள்.

பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் ஏகத்துக்கும் உண்டு.

முழுமையான பாலியல் சுதந்திரத்தை ஆண்கள் அனுபவிப்பது போன்று நமக்கும் அனுபவிக்க விருப்பம்தான். இதை மட்டும் வைத்து நம்மை மதிப்பிட வேண்டாம். திருமணத்திற்கு தகுதியற்றவள் என கேலிக்குள்ளாகாமல் இருக்கவே நாம் விரும்புகிறோம்.

எங்களை பெண்களாக இல்லாமல், ஏதோ போகப் பொருளாகப் பார்க்க வேண்டாம்.

இது மட்டுமில்லாமல் முதல் காதலனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையை என்னைப் போன்ற பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. காதல் ஒரு அனுபவம்; அவ்வளவுதான்.

மேடையில் இருந்த ப்ரின்ஸி நெளிந்தாள்…

“ஆண்களைப் போலத்தான் இளம் வயதில் சாகசமும், வேடிக்கையும் நம்மில் சிலருக்கும் தேவை.

ஆண்களே, அடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்கிற பத்தாம் பசலித்தனமான சிந்தனையை தயவுசெய்து அழித்து விடுங்கள்.

பாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர் புத்திசாலியாகவும்; உதவி செய்யும் குணமும்; அன்பாகவும்; நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள். எனவே பாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து மட்டும் ஒரு பெண்ணை கண்டிப்பாக வரையறுக்கக் கூடாது.

பிரபல நடிகைகளான ஜீவனாம்சம் லக்ஷ்மி, ராதிகா போன்றோர் பல்வேறு காரணங்களுக்காக பல கல்யாணங்கள் செய்து இருப்பினும், அவர்களின் போர்க்குணம், தனித்துவம், புத்திசாலித்தனம், உடனடியாக முடிவு எடுத்து செயல்படும் சுதந்திரமான எண்ணம் போன்ற நற்குணங்கள் அவர்களிடம் ஏராளம்.

ஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக; அவளது அறிவுத்திறன், சுதந்திரமான செயல்பாடு, தனித்துவம் போன்ற நல்ல குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது… ஆண்கள் மனதில் மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.

மாணவிகளின் ஆர்ப்பாட்டமான கைதட்டலுக்கிடையே மேடையில் இருந்து கீழே வந்தாள். பல மாணவிகள் ப்ரியாவைச் சூழ்ந்து கொண்டனர்.

இரவு ஹாஸ்டலை அடைந்து படுக்கும் முன், ராபர்ட் மொபைலில் தொடர்பு கொண்டு, “என்ன ப்ரியா, ஆளையே காணோம்…” என்றான்.

“என்ன விஷயம், சீக்கிரம் சொல்லு…”

“நாளைக்கு என்னோட பர்த்டே ப்ரியா… கிடாரில் புதிதாக ஒரு பாடல் பாடப் போகிறேன். மாலை ஆறு மணிக்கு என் அடையாறு வீட்டிற்கு வருவாயா? என் பெற்றோர்களிடம் உன்னை அறிமுகம் செய்ய ஆசைப் படுகிறேன் ப்ரியா…”

“கண்டிப்பாக வரேன் ராபர்ட்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *