கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 6,314 
 

தலைநகர் டெல்லி. சராய் ரோஹில்லா ரயில் நிலையம்.

இரவு பதினோரு மணிக்கு பெங்களூர் யஷ்வந்த்பூர் புறப்பட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் தயாராக இருந்தது.

நாங்கள் அவசர அவசரமாக ஓடிச்சென்று எங்களுடைய ஏ.ஸி ரிசர்வேஷன் பெட்டியைத் தேடி ஏறிக்கொண்டோம். நாங்கள் இருபதுபேர். அதில் ஆறுபேர் பெண்கள். பெங்களூரில் ஒரு பிரபல கல்லூரியில் படிக்கிறோம். பத்துநாட்கள் கல்விச் சுற்றுலா டெல்லி வந்திருந்தோம்.

வியர்க்க வியர்க்க ஓடிவந்து ரயில் ஏறிய எங்களுக்கு ஏ.ஸி குளிர் இதமாக இருந்தது. நாங்கள் ஏறிக்கொண்ட அடுத்த இரண்டு நிமிடங்களில் ரயில் புறப்பட்டது.

நாங்கள் அனைவரும் பயங்கரப் பசியில் இருந்தோம். கடைசியாக மதியம் ஒருமணிக்கு ஆக்ராவில் தாஜ்மஹால் பார்க்கச் சென்றபோது ஒரு பாடாவதி ஹோட்டலில் நுழைந்து எதையோ சாப்பிட்டோம். அதுக்கப்புறம் ஒரு டீகூட சாப்பிடவில்லை.

நல்லவேளையாக ரயிலினுள்ளேயே சிலவகை உணவுகளை விற்றார்கள். கிடைத்த உணவை வாங்கிச் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிட்டு முடித்தபோது மணி பதினொன்றே முக்கால். ஏசி பெட்டி என்பதால் எங்களுக்கு படுக்கை விரிப்பும், தலையணையும், போர்வையும் ஏற்கனவே தயாராக வைக்கப் பட்டிருந்தது.

எனினும் சாப்பிட்டவுடன் உடனே படுக்க வேண்டாம்…சிறிதுநேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தபோது எதிர்சீட்டில் இருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி எங்களை தயக்கத்துடன் பார்த்து, “என்னுடையது அப்பர் பர்த்….என்னால் அதில் ஏறிப் படுக்க முடியாது. நீங்கள் யாராவது எனக்கு லோயர் பர்த் தந்து உதவ முடியுமா?” என்று ஆங்கிலத்தில் அமைதியாக வேண்டினாள்.

உடனே எமல்டா, “ஷ்யூர் மேடம், என்னோட லோயர் பர்த்தை நீங்க எடுத்துக்குங்க” என்று சொல்லி அந்தப் பெண்மணியை சிறிதுநேரம் எழுந்து நிற்கச் சொல்லி லோயர் பர்த்தில் படுக்கையை விரித்து உதவி செய்தாள்.

எழுந்து நின்ற மேடம் கம்பீரமான அழகில் நல்ல உயரத்துடன் இருந்தாள். கோதுமை நிறத்தில் வாளிப்பாக இருந்தாள். வட்டவடிவமான முகத்தில் தங்க பிரேமில் கண்ணாடி அணிந்திருந்தாள். காட்டனில் சிறந்தவகைப் புடவை அணிந்து ஒரு புரொபசர் போல் தோற்றமளித்தாள்.

ரயிலின் அசுர வேகத்தில் அதன் அசைவுக்கு ஏற்ப மேடமும் அசைந்தபடி நின்று கொண்டிருந்தது பார்க்க ரம்மியமாக இருந்தது.

“சின்ன வயசுல ரொம்ப அழகா இருந்திருப்பாங்க இல்ல?”

“ஆமாண்டா அப்போதைய பசங்க எல்லாம் மேடத்தை சுத்தி சுத்தி வந்து ஜொள்ளு விட்டிருப்பாங்க”

எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்.

படுக்கையை விரித்தவுடன் எமல்டா, “மேடம் யூ மே ப்ளீஸ் லைடவுன்” என்றாள்.

அவள் “வெரி கைண்ட் ஆப் யூ” என்று எமல்டாவைப் பார்த்து சிரித்தாள். சிரித்தபோது இன்னமும் அழகாக இருந்தாள்.

படுப்பதற்குமுன் டூத்பேஸ்ட்-பிரஷ் எடுத்துச் சென்று பல்தேய்த்துவிட்டு வந்தாள். செருப்பை ஓரமாக கழட்டி வைத்தாள். அவளது பாதங்கள் வெண்மையாக இருந்தன. கண்ணாடியை கழற்றி கண்ணாடிக்கூண்டில் நுழைத்து அதை தன் ஹாண்ட்பாக்கில் வைத்துவிட்டு அழகாக போர்த்திக்கொண்டு தூங்கினாள்.

நாங்களும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு தூங்கிவிட்டோம்.

மறுநாள் நாங்கள் ஒவ்வொருவராக மெதுவாக எழுந்தோம். மேடம் அமைதியாக ஏதோ ஒரு ஆங்கில நாவலில் மூழ்கியிருந்தாள்.

ரயில் சரியான நேரத்திற்கு சென்று கொண்டிருந்தது. பகல் உணவு ரயிலில் ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். தான் கொண்டுவந்திருந்த சப்பாத்தியை ஏதோ ஒரு சப்ஜியுடன் சேர்த்து மேடம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது லான்சி, “பத்துநாளா உப்பு ஒறப்பு இல்லாம சப்புன்னு சாப்பிட்டு, நாக்கே செத்துப்போச்சு” என்றாள்.

எமல்டா, “ஆமா நீ சொல்றது கரெக்ட்….ராத்திரிக்கும் நம்மால இதே ரயில் உணவை சாப்பிடமுடியாது. ஏ ராகுல் உன்னோட பிரென்ட் விஷாக் ஹைதராபாத்துலதான இருக்கான், அவனுக்கு போன் பண்ணி பாரடைஸ் ஹோட்டலுக்கு போய் சிக்கன் பிரியாணி வாங்கிட்டு செகந்திராபாத் ஸ்டேஷனுக்கு நம்முடைய கோச் நம்பரைச் சொல்லி வரச்சொல்லு. அதுக்கு உண்டான பணத்த குடுத்துடலாம். ட்ரெயின் அங்க இருபது நிமிஷம் நிக்கும்” என்றாள்.

உடனே மோஷீன் உற்சாகத்துடன், “வாவ் ரொம்ப நல்ல ஐடியா…ராகுல் ப்ளீஸ் கால் ஹிம் ப்ரம் யுவர் மொபைல் நவ்” என்றான்.

ராகுல் உடனே செயல்பட்டான்.

இரண்டு ரிங் போனதும் விஷாக் எடுத்து, “ஏ மச்சி எப்டிடா இருக்க?” என்றான்.

“நா நல்லா இருக்கேன்…ஸ்டடி டூர்ல இருக்கேன். நாங்க இன்னி நைட்டு ஒன்பது மணிக்கு செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவோம். எங்களுக்கு பாரடைஸ் ஹோட்டல் சிக்கன் பிரியாணி நீ வாங்கிகிட்டு வா.”

“ஓ காட்…மச்சி நான் இப்ப சென்னைல இருக்கேன்…அடுத்தவாரம்தான் ஹைதராபாத் வருவேன்”

“சரி நான் உன்னை அப்புறமா கூப்பிடுகிறேன்” மொபலை கட் செய்துவிட்டு,

இவர்களிடம் “ஷிட்… அவன் ஊரில் இல்லை” என்றான்.

அனைவர் முகத்திலும் ஏமாற்றம்.

இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த மேடம், “கவலைப் படாதீங்க….என் மகன் என்னைப் பார்க்க செகந்திராபாத் ஸ்டேஷன் வருவான். அவன்கிட்ட போன் பண்ணி உங்களுக்கு சிக்கன் பிரியாணி வாங்கிகிட்டு வரச் சொல்கிறேன். உங்களுக்கு எத்தனை பிரியாணி வேண்டும்?” என்றாள்.

எமல்டா உடனே “நாங்கள் இருபதுபேர் மேடம். ஆனால் எட்டுபேர் வெஜிடேரியன். அதனால பன்னிரண்டு சிக்கன் பிரியாணி போதும்” என்றாள்.

மேடம் உடனே தன் ஹான்ட்பேக்கைத் திறந்து அதிலிருந்து கோல்டன் கலரில் தோசைக்கல் போலிருந்த ஸ்மார்ட்போனை எடுத்து நம்பரை ஒத்தினாள். அடுத்த நிமிடம், “ஹலோ ரோஹித்” என்று ஆரம்பித்து ஹிந்தியில் ஏதோ குடும்ப விஷயங்கள் பேசினாள். எமல்டா தன்னுடைய லோயர் பர்த்தை தனக்கு விட்டுக் கொடுத்ததை மிகவும் சிலாகித்துச் சொன்னாள். பிறகு பேச்சின் நடுவே இவர்களைப் பார்த்து, “சிக்கன் பிரியாணி எங்கிருந்து வாங்கி வரவேண்டும்?” என்று கேட்டாள்.

“பாரடைஸ் ஹோட்டல் மேடம்” ராகுல் சொன்னான்.

“ரோஹித் இட் இஸ் ப்ரம் பாரடைஸ்” என்று சொல்லிவிட்டு மொபைலை கட் செய்தாள்.

பின்பு எங்களைப் பார்த்து, “டோன்ட் ஒர்ரி இன் எனி கேஸ் ஹி வில் பிரிங் மை டின்னர். ஆல்ஸோ வில் பிரிங் யுவர்ஸ்” என்று புன்னகையுடன் சொன்னாள்.

அப்போது எங்களுக்கு மேடம் ஒரு தேவதையைப்போல் தோன்றினாள்.

இரவு ஒன்பது மணிக்கு ட்ரெயின் செகந்திராபாத் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. மேடம் இறங்கியதும், நாங்கள் அனைவரும் இறங்கி மேடம் அறிமுகம் செய்துவைத்த ரோஹித்தின் கையைக் குலுக்கினோம். அவர் மேடத்திடம் ஒரு பையை கொடுத்துவிட்டு, தன்னுடன் எடுத்து வந்திருந்த பேப்பர் ப்ளேட், நாப்கின் பாக்ஸ், ஆறு ஒரு லிட்டர் கின்லே வாட்டர் பாட்டில்களை எங்களிடம் கொடுத்தார்.

கிரண் அவரிடம் ஆவலுடன் “சிக்கன் பிரியாணி எங்கே?” என்றான்.

அவர் சிரித்துக்கொண்டே “ஜஸ்ட் நவ் டேவிட் வில் பிரிங்” என்றார்.

அடுத்த சிலநிமிடங்களில் வலது இடது கைகளில் கஷ்டப்பட்டு பிரியாணியை தூக்கிக்கொண்டு யூனிபார்மில் அவரது டிரைவர் அங்கு வந்தான்.

கிரணும், மோஷினும் பிரியாணியை வாங்கிக்கொண்டு டிரைவர் கொடுத்த ஹோட்டல் பில்லை வாங்கிக்கொண்டு ரோஹித்திடம் அதற்கான பணத்தை கொடுத்தபோது அவர் “டேவிட்டின் கையில் கொடுத்துவிடுங்கள்” என்றார். வாட்டர் பாட்டில், நாப்கின், பேப்பர் ப்ளேட்டிற்கான பணம் எவ்வளவு என்று கேட்டபோது “தட்ஸ் மை ஸ்மால் காம்ப்ளிமென்ட்” என்றார்.

டேவிட்டிடம் பிரியாணிக்குமட்டும் பணம் கொடுத்தோம்.

மேடம், “ஹவ் ஆர் யூ டேவிட்? ஹவ் இஸ் யுவர் பேமிலி?” என்று அவனிடம் குசலம் விசாரித்தாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் ட்ரெயின் புறப்பட்டது.

நாங்கள் பயங்கரப் பசியில் சிக்கன் பிரியாணியைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தோம். பிரியாணி சூடாக இருந்தது. காரசாரமாக சுவையுடன் இருந்தது. தொட்டுக்கொள்ள தயிரில் வெங்காயம் போட்டு தனியாக வைத்திருந்தார்கள். நாங்கள் அனைவரும் நாக்கை சப்புக்கொட்டியபடி கடக் முடக்கென்று எலும்பை கடித்து அதன் மஜ்ஜையை உறிஞ்சி “ஆஹா என்ன சுவை” என்று சொல்லி சொல்லி பிரியாணியை ரசித்து சாப்பிட்டோம். கம்பார்ட்மென்ட் முழுவதும் பிரியாணி வாசனை தூக்கியடித்தது.

மேடமும் தன் மகன் கொடுத்த பையைத் திறந்து அதிலிருந்த உணவை எடுத்து சாப்பிட்டாள்.

எமல்டா திடீரென்று ஞாபகம் வந்தவளாக, “மேடம் யு ப்ளீஸ் ட்ரை சம் சிக்கன், இட் இஸ் டூ குட்” என்றாள்.

மேடம் சிரித்துக்கொண்டே “நோ. தாங்க்யூ… வி ஆர் ஜெயின் கம்யூனிட்டி ப்யூர் வெஜிடேரியன்.” என்றாள்.

எமல்டா இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“தென் ஹவ் கம் யு பாட் நான்வெஜ் பார் அஸ்?”

“ஸோ வாட்? யு வான்டட் ஐ ஆர்கனைஸ்ட் இட். டேவிட் பாட் பார் யு ஆல், அண்ட் யூ பெய்ட் ஹிம். ஹி சேப்லி கெப்ட் தம் இன் அவர் கார்டிக்கி அண்ட் பிராட் இட் பார் யூ” என்றாள்.

அதன் பிறகு நாங்கள் அமைதியாக சாப்பிட்டு முடித்தோம்.

மறுநாள் காலை ஏழுமணிக்கு மேடம் பெங்களூர் எலஹங்கா ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டபோது நாங்கள் அனைவரும் மேடத்தின் லக்கேஜ்களை இறக்கி வைத்தோம். ஒரு போர்ட்டரை பேரம் பேசி உடன் அனுப்பி வைத்தோம்.

மேடம் ஸ்டேஷன் கேட்டைத்தாண்டி வெளியே செல்லும்வரை நாங்கள் அனைவரும் மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மேடத்தின் பிரிவினால் இனம்புரியாத ஒரு சோகம் எங்களுக்குள் ஏற்பட்டது.

ஆர்வம் உந்த ரயில் பெட்டியின் வெளியே ஒட்டியிருந்த ரிசர்வேஷன் சார்ட்டில் மேடம் பெயரைத் தேடினாம். .

சுமித்ரா ஜெயின். வயது 52 என்று இருந்தது.

பின்பு ரயிலில் ஏறி அமர்ந்தோம்.

ராகுல், “மேடமும் அவர் மகனும் டிரைவரைக்கூட டிரைவர் என்று சொல்லாமல் டேவிட் என்று பெயர் சொல்லி அழைக்கும் டிக்னிட்டியை யாராவது நோட்டீஸ் பண்ணீங்களா?” என்றான்.

எமல்டா குரல் உடைய, “டேவிட்டை பாரடைஸ் அனுப்பி சிக்கன் பிரியாணியை வாங்கி காரின் டிக்கியில் வைக்கச்சொல்லி நமக்கு வழங்கியுள்ளார் மேடத்தின் மகன் ரோஹித். அவர் ஜெயின் என்றாலும் நமக்காக மெனக்கிட்டு இதைச் செய்துள்ளார். முன்பின் தெரியாத அவரின் அன்புதான் நம்மைக் கலங்க வைக்கிறது” என்றாள்.

லான்சி “மேடத்துக்கு உடம்பு மட்டுமல்ல, மனசும்தான் மிக அழகு” என்றாள்.

கிரண், “சம் பீப்பிள் ரியலி மெயின்டெயின் எபிடோம் ஆப் சோபிஸ்டிகேஷன்” என்றான்.

மோஷீன், “நம் ஸ்டடி டூரில் எதைக் கற்றுக் கொண்டோமோ இல்லையோ, எவரையும் நம் பண்பினாலும், அன்பினாலும் கட்டிப்போட முடியும் என்பதை இன்று நாம் கற்றுக்கொண்டோம்” என்றான்.

அவன் கண்கள் கலங்கியது.

ட்ரெயின் டெர்மினஸ் ஸ்டேஷன் யஷ்வந்த்பூர் நோக்கி கிளம்பிச் சென்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *