அம்மாசியின் மனக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 5,406 
 

கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி முண்டாசு கட்டிக்கொண்டு பீடியைப் பற்ற வைத்தான் அம்மாசி. தம் உள்ளே போனதும் அலாதி சுறுசுறுப்புப் பெற்றவனாய் குடிசையின் படல் கதவைத் தட்டி, “அடியேய் ராசம்மா, நான் போயிட்டு வர்றேன்!…” என்று குரல் கொடுத்துவிட்டு, மூலையில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அந்தக் குப்பத்தின் இராஜ வீதிகளில் சங்கமித்துப் புரண்டோடிய சாக்கடை நதிகளில் தாராளமாய் கால் வைத்தும் தாண்டியும் அவன் விந்தி விந்தி நடந்து போனான். கோவாலு அண்ணன் முளிச்சிருக்குமா? என்ற சந்தேகத்துடன் முணுமுணுத்துக் கொண்டே சென்றவன், ஊர்க்கோடி அரச மரத்தடியில் சிவப்புப் புள்ளி ஒன்று தெரிந்ததில் அமைதி கொண்டான்.
கோபாலின் சிக்னல் அது. ஊரே அயர்ந்து உறங்கும் பின்னிரவு நேரத்தில் தூக்கம் வராமல் அரச மரத்தடி மேடையில் உட்கார்ந்து பீடி புகைத்துத் தள்ளிக் கொண்டிருப்பான்.

“கோவாலண்ணே!”

“அம்மாசியா? வந்துட்டியா, வா!” பீடியை இறுதி இழுப்பாக இழுத்துவிட்டு, கீழே வீசினான் கோபால்.

“போலாமாண்ணே?”

“ஓ, போலாண்டா!” கோபால் எழுந்துவிட்டான். இருளில் விந்தி விந்தி அம்மாசி நடக்க, அவனுக்காக மெதுவாக நடந்தான் கோபால்.

“இன்னிக்கு எந்த இடத்துல குளி போடலாம்?” என்று அம்மாசி கேட்டான்.

“ஆத்துக்குள்ளாறவே போட்டுட்டாப் போவுது…”

“சரிண்ணே!”

ஆற்றின் மணல் பரப்பு, நட்சத்திரங்களின் ஒளியில் மங்கல் வெண்மையாகத் தெரிந்தது. தண்ணீர், மருந்துக்குக் கூட இல்லை. அண்டை மாநிலத்தில் மழை அதிகமாகப் பெய்து அவர்கள் தேக்கியது போக உபரியாக இருந்தால் இந்த ஆற்றில் தண்ணீர் கொஞ்சம் ஓடும்… அது வருடத்துக்கு ஒருமுறை அதிசயமென நடக்கும்!

கோபால் நின்றான். “டே அம்மாசி, இங்கன குளி போம்டா?” என்றான்.

“சரிண்ணே!” என்ற அம்மாசி, தோளிலிருந்து மண்வெட்டியை இறக்கினான். “சாமி, புள்ளையாரப்பா!” என்றபடியே முதல் வெட்டைப் போட்டான். இரண்டரையடி நீளம் ஒன்றரையடி
அகலத்துக்கு குழி போடப்படது. ஆழம் மூன்றடி தோண்டி மண்ணை வெளியே கொட்டினான். மண் சரிந்துவிடாமல் தள்ளி வழித்துவிட்டு அம்மாசி நிமிர்ந்தான். அந்தக் குளிரிலும் உடம்பில் வியர்வை வழிந்தது அவனுக்கு. கோபால் ஒரு பீடியை அவனிடம் நீட்டினான்.

பீடிப் புகை உட்சென்றதும் இதமாக இருந்ததே போன்று, சுறுசுறுப்புடன் “போலாமாண்ணே?” என்று கேட்டான் அம்மாசி.

“விடியறாதுக்கு இன்னும் நேரம் இருக்குடா, மெல்லப் போனாப் போவுது களுதை..”

“பிள்ளையார் கோயில் கரையில ஏறி ஊருக்குள்ளப் போலாண்ணே..!”

“ஏண்டா அப்பிடி..?”

அம்மாசி சிறிது நேரம் பேசவில்லை. “ரெண்டு மூணு நாளாப் பட்டினி அண்ணே!” குரல் கம்மச் சொன்னான். “இன்னிக்காவது கிராக்கி கெடைச்சா சூடம் கொளுத்தறதாப் பிள்ளையார்கிட்டே வேண்டிக்கிடணும்.. அதுக்குத்தான்…” என்று தயங்கித் தயங்கி அம்மாசி கூறியதும்… கோபால், “கெக்கெக்கே” என்று சிரித்தான்.

“புள்ளயாரு ஒனக்காகப் போயி கிராக்கியை ரெடி பண்ணி வெச்சிருப்பாராடா..?” என்று கேலி செய்தான்.

“போங்கண்ணே!”

ஆற்றின் இரு கரைகளிலும் ஊருக்குள் செல்லப் பல வழிகள் உண்டு. ஒவ்வொரு வழிக்கும் ஒரு பெயர் உண்டு. மொட்டைப் பிள்ளையார் துறை என்று பெயர் பெற்ற அந்தத் துறையின்
வழியாகக் கரை ஏறி, ஒரு மரத்தின் அடியில் வீற்றிருந்த மொட்டைப் பிள்ளையாரை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கினான் அம்மாசி. தோப்புக் கர்ணம் போட்டு வேண்டிக் கொண்டு மேலே
போனான். அவனுடன் கோபாலும் நடந்தான்.

கரையோர முதல் வீட்டின் முன் நின்று,“ராமசாமி, மம்பட்டியை இந்தாலப் போட்டுட்டுப் போறேன். பொறவு வந்து எடுத்துக்கறேன்..” என்று சத்தம்போட்டான் அம்மாசி. மண் வெட்டியை கூரை எரவாணத்தில் செருகி வைத்து விட்டு நகர்ந்தார்கள்.

ஆஸ்பத்திரிக் கட்டிடம் பிரம்மாண்டமாகத் தெரிந்தது. விடியலின் வெளிச்சம் வந்துவிட்ட போதிலும் ஆஸ்பத்திரி விளக்குகள் எரிந்தவண்ணம் இருப்பதை வேடிக்கை பார்த்தபடி, பிரசவ வார்டு கேட் அருகே சென்று நின்றார்கள். அங்கு பெரும் கூட்டமே நின்றிருந்தது. கேட் கீப்பர் காசு கொடுப்பவர்களை மட்டும் அனுமதித்து, மற்றவர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.
உள்ளே அட்மிட் ஆகியிருந்த நோயாளிகளுக்கு ஃப்ளாஸ்கில், பாட்டில்களில், பாத்திரங்களில் காபி கொண்டு செல்பவர்கள், எதிரேயிருந்த டீக்கடையில் கெஞ்சி வெந்நீர் வாங்கிச் செல்
பவர்கள், நோயாளியைப் பார்க்க வெளியூர்களிலிருந்து அதிகாலை ரயிலில் வந்தவர்கள் என்று வகை வகையான நபர்கள் கேட் கீப்பரைக் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

கேட் கீப்பர் கதவைத் திறந்து இவர்கள் இருவரை மட்டும் உள்ளே விட்டான். அம்மாசி பெருமிதத்துடன், “எல்லோரும் ஒத்துங்க..!” என்று மற்றவர்களை விலக்கி உள்ளே நடக்க, கோபாலும்
அவனைப் பின்தொடர்ந்தான்.

கையில் பெருக்குமாறு ஒன்றை ஏந்தியபடியே அந்தப் பக்கம் வந்த ஸ்வீப்பர் மாராள் இவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே, “இன்னிக்கு உங்களுக்கு ஒண்ணு ரெடி!” என்றாள். சிவப்புப்
புடைவையில் மாராள் சிரித்தது கோபாலுக்குக் கிறக்கத்தை அளித்தது. “சரி மாறா, உன்னையும் கவனிச்சுப்புடறோம்!” என்றான் அவன்.

“கவனிச்சுக் கிழிச்சீங்க. சரி சரி, ஆறரை மணிக்குப் பார்ட்டி வரும். வந்ததும் கூப்பிடறேன்..” என்று சொல்லியபடியே உள்ளே போனாள்.

கொஞ்ச நேரத்தில் ஆஸ்பத்திரி வெளிவாசல் கேட் திறக்கப்பட்டது. இரவு டூட்டி ஸ்டாஃப் நர்ஸ்கள், ஏ.என்.எம்.கள், எஃப்.என்.ஏ.க்கள், எம்.என்.ஏ.க்கள் எல்லோரும் பகல் டூட்டிக்கு வருபவர்களை எதிர்பார்க்கும் நேரம்…

ஸ்வீப்பர் மாராள் லேபர் வார்டு கதவைத் திறந்து விட்டாள். குழந்தை பிறந்த பெண்களையும், பிரசவிக்க வந்திருப்பவர் களையும் பார்க்க, பார்வையாளர் கூட்டம் திமுதிமுவென்று
உள்ளே நுழைந்தது. “டாக்டருங்க வர்றதுக்குள்ள எல்லோரும் போயிடணுமுங்கோ!” என்றாள் மாராள்.

இரண்டு மூன்று ஆண்கள் மாராளை நெருங்கி ஏதோ கேட்டார்கள். அவள் வராந்தாவில் நின்ற அம்மாசியையும் கோபாலையும் கை காட்டி அனுப்பி வைத்தாள். தயங்கியவாறே
அந்த மூவரும் இவர்களிடம் வந்து நின்றார்கள்.

“நீங்கதானுங்களா?” என்று கோபால் பவ்யமாக அவர்களை விசாரித்தான்.

“ஆமாப்பா. பல்லடத்துலேர்ந்து அந்த ஆஸ்பத்திரியில முடியாதுன்னு சொன்னதாலே இங்கே கொண்டாந்தோம். தலைச்சன். இப்படி ஆயிடுச்சு..”

“என்னங்க சாமி செய்யறது? மேலே இருக்கறவன் கிழிச்ச கோடு ஒண்ணு இருக்குக்துங்களே.. அதை மீற நமக்கு சக்தி ஏதுங்க? பெரிய உசிருக்கு ஏதும் சிரமம் இல்லீங்களே..?”

“கடவுள் புண்ணியத்துல அவ பொளைச்சுகிட்டாப்பா. ரெண்டு மூணு நாளாப் பிரசவ வலின்னு துடியாத் துடிச்சா. பாவம், வயித்தைக் கிழிச்சு ஆப்பரேசன் பண்ணித்தான் ஆகணும்னு
டக்டரம்மா சொன்னாங்க. ஏதோ கடைசியிலே ஆப்பரேசன் பண்ணாமலே ஆயுதம் போட்டுக் கொழந்தையை எடுத்துட்டாங்க. அழகான ஆண் கொழந்தை. ஆனா, கொழந்தை
பொழைக்க முடியாமப் போச்சு!”

“த்சு, த்சு, பாவம். நம்ம கையில என்னங்க சாமி இருக்கு?”

“எங்க ஊருக்குக் கொண்டு போய் அடக்கம் பண்றது ரொம்பக் கஷ்டம்னுதான் இங்கேயே முடிச்சுடணும்னு முடிவு செஞ்சோம். சரிப்பா, எவ்வளவு கேக்கறே..?”

“ஐநூறு ரூவா கொடுங்க சாமி!”

“ஐநூறா? என்னப்பா அதிகமா கேக்குறியே..?”

“இல்லீங்க சாமி, நாங்க முறையில்லாமக் கூலி கேட்டா மறுக்கவும் இந்த ஆஸ்பத்திரியில கால் வைக்க முடியாதுங்க. மயானக் கரையில வெட்டியான் கூலி, கோடித்துணி, புஷ்பம், அது
இதுன்னு நெறயச் செலவு இருக்குங்க. மயானக்கரை இங்கேருந்து மூணு கிலோ மீட்டரு போகணுஞ் சாமி, பாத்துப் போட்டுக் கொடுங்க!”

மூன்று பேரும் தங்களுக்குள் கலந்து பேசினார்கள். “முன்னூறு ரூபா தர்றோம். கச்சிதமா, கொறைவில்லாம காரியத்தை முடிக்கணும்..”

“கோபால் தயங்கியபடி, சரி சாமி, உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம். ஒரே பேச்சு, நானூறு ரூபா கொடுத்துடுங்க சாமி!” என்றான்.

“என்னாப்பா தகராறு பண்றே, நாங்களே நொந்து போய் இருக்கோம்…”

“சரி சாமி, கொடுக்கறதைக் கொடுங்க!”

பெரியவர் எடுத்துக் கொடுத்த பணத்தை பயபக்தியுடன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான் கோபால். அம்மாசிக்கு மனசில் மகிழ்வு பொங்கியது. வார்டின் டூட்டி ரூமிற்குப்
போனான். வெள்ளையுடுப்பில் தெரிந்த ஸ்டாஃப் நர்ஸ், “ஏன் இன்னும் கேஸ் ஷீட் எழுதலை?” என்று ஏ.என்.எம்.மைத் (ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப்) திட்டிக் கொண்டிருந்தாள்.

“கும்பிடறேன் சிஸ்டர்!” என்றான் அம்மாசி. திரும்பி இவனைப் பார்த்த ஸ்டாஃப் நர்ஸ் மேரி, “அம்மாசியா? ஓ அந்தப் பல்லடம் டெத் பேபிக்காக வந்திருக்கியா..ஆல்ரைட்!” என்று எஃப்.என்.ஏ.வை.க் (ஃபீமேல் நர்ஸிங் அசிஸ்டெண்ட்) கூப்பிட்டாள். “இந்தா லட்சுமி, அந்த டெத் பேபியோட ஃபாதர்கிட்டே கேஸ் ஷீட்டில் ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு குழந்தையை எடுத்துக் கொடுத்திடு!”

எஃப்.என்.ஏ. இவனுடன் வந்தாள். என் இறந்த குழந்தையை நான் பெற்றுக் கொண்டேன் என்று எழுதி உரிய நபரிடம் கையெழுத்து வாங்கினாள். பிறகு குழந்தையின் தகப்பனிடம்
குழந்தையைக் கொடுக்க, அவன் கையிலிருந்த குழந்தையை அம்மாசி பெற்றுக் கொண்டான்.

குழந்தையின் தகப்பன் கேவினான். விம்மல் வெடித்தது. கண்ணீர் புரண்டது. பக்கத்தில் நின்ற பெரியவர் அவனை அடக்கினார். “த்ஸ்…இந்த குப்புராசு! என்னப்பா படிச்ச பையன்
நீ. பொம்பளை கணக்கா அழுவுறே? இன்னும் உனக்கு வயசு இருக்குப்பா. நெறய பெத்துக்கலாம். போயி ஒம் பொண்டாட்டிக்கு ஆறுதல் சொல்லு. பச்சை ஒடம்போட அந்தப் பொண்ணு அழுதுகிட்டே இருக்கு..பாவம்!”

அம்மாசி இரு கைகளிலும் குழந்தையை ஏந்தித் தன் மேல் துண்டைக் குளிருக்குச் சுற்றிக் கொண்டிருப்பது போல் மார்போடு சுற்றிக் குழந்தையை மறைத்துக் கொண்டான். ஆஸ்பத்திரி பின் வாசல் வழியே விந்தி விந்தி நடந்தான். கூடவே ஆஸ்பத்திரி முனை வரை அந்த மூவரும் வந்தார்கள். கோபால் முன்னதாகச் சென்று ஒரு புதுக் கூடையும் கொஞ்சம் பூவும் வாங்கிக் கொண்டு, ஒரு வாடகை சைக்கிளையும் எடுத்து வந்தான்.

“நீங்க போங்க. நாங்க நல்லபடியா எல்லாம் முடிச்சுடறோம்..” என்று கோபால் சொன்னதன் பேரில் அந்த மூன்று பேரும் நின்றார்கள். குழந்தையின் தகப்பன் ஓவென்று பெருங் குரலெடுத்து அழ, பக்கத்திலிருந்தவர்கள் அவனைக் கட்டிப் பிடித்து சமாதானம் செய்ய முற்பட்டனர்.

சைக்கிளின் பின்னால் அம்மாசி உட்கார்ந்து கொண்டான். அவன் கையில் கூடையில் குழந்தை இருந்தது. கோபால் சைக்கிளை மிதித்தான்.

கனக்கும் கூடையை ஒரு கையாலும் சைக்கிள் ஸீட்டை இன்னொரு கையாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அம்மாசி தன் பங்குக்கு கோபால் தரப்போகும் பணத்தில் வீட்டுக்கு
எவ்வளவு தர வேண்டும், தன் கைச் செலவுக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சந்தோஷத்தோடு கணக்குப் போட ஆரம்பித்தான்.

சைக்கிள் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

( தாமரை மாத இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *