கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,771 
 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உந்துருளி தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. மனம் வேறெங்கோ தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இடையிடையே திடுக்கிட்டு சுயநினைவுக்கு வரும்போது ஒரு முறை பரந்தன் சந்தியால் திரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மறுமுறை ஆனையிறவை கடந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். குறுக்கும் மறுக்கும் கூவியபடி போய்க்கொண்டிருக்கும் ஊர்திகளோடு மோதாது எப்படி வந்துகொண்டிருக்கிறேன்? ஆச்சரியமாக இருந்தது.

மூளையின் தொழிற்பாட்டை கைகளும், கால்களும் பொறுப்பேற்றுக் கொண்டனவோ? அல்லது, போகும் இடத்தையும் இலக்கையும் புரிந்து கொண்டு உந்துருளி தானாகவே தொழிற்படுகின்றதோ? சிலவேளை இருக்கும். நதிமூலம் 01 (வோட்டர் ஜெட் நடவடிக்கைப் படைகள் நாற்பது மோட்டர் களாலும் பொழிந்து தள்ளியடி அம்பலகாமம் காட்டுக்குள் அந்த அடி அடித்தபடி நகர்ந்து கொண்டிருக்க, எனது முன்னணிக் கட்டளைப்பீடத்தில் தொலைத்தொடர்புக் கோபுரம் தெறித்து விழுந்தது. உடனேயே இரண்டு பேர் உந்துருளியை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியை நோக்கிப் பறக்க, அதற்குள்ளாகவே கிளிநொச்சி தளத்தில் நின்றவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு தமது தொலைத்தொடர்புக் கோபுரத்தைக் கழற்றிக் கையிலெடுத்து இரண்டு மிதிவண்டிகளில் ஏறிக் காற்றைக் கிழித்தவாறு விரைய, இரு பகுதியும் இரணைமடுக் குளக்கட்டின்மேல் சந்தித்து உபகரணங்களையும் கள நிலைமைகளையும் கணத்தில் பரிமாறிக்கொண்டு, மறுபடி விரைந்தோம்.

காட்டு வழியெங்கும் எறிகணை வீச்சில் கிளைகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்க, வந்த பாதை இதுதானோ என்ற குழப்பம் எங்களுக்குத்தான் உண்டானதே தவிர, உந்துருளிக்கல்ல. அது மிகச் சரியாக கட்டளைப் பீடத்தில் போய் நின்றது. அதுபோல் இப்போதும் யாரும் எதுவும் சொல்லாமலேயே அரியாலை மணியந்தோட்டத்தில் அந்த வீட்டின் முன் போய் நிற்கக்கூடும். யாருக்குத் தெரியும்?!

உந்துருளி இயக்கச்சிச் சந்தியால் வளைந்தது IRON side தன் அடையாளத்தை இழந்திருந்தது. அனுராதபுரத்துக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் இயக்கச்சியை தமது இரும்புக் கோட்டையாக நினைத்திருந்தது என்ன முட்டாள் தனம்? யாழ்ப்பாணத்தவர்களின் வாழ்வின் பாதுகாவலர்கள் தாமே என்று கூறிக்கொள்வது அதைவிடப் பெரிய முட்டாள்த்தனம். இப்போது சிலர் எம்மை வழிமறிப்பார்கள். அடையாள அட்டையில் உள்ள முகத்தையும், என் கழுத்துக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் முகத்தையும் நாலைந்து தடவைகளுக்கு மேல் மாறி மாறிப் பார்ப்பார்கள். பெயர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் என் பெயரை தவறாக அவர்கள் எழுதிவிட நான் திருத்தவேண்டியிருந்தது.

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாடகம் அரங்கேறப்போகிறது. முதன் முதலாக யாழ்ப்பாணம் போனபோது, முன்னணிக் காவல் நிலையில் முதன் முதலாக காணப்போகும் படைவீரனைப் பார்த்து என்ன செய்வது, புன்னகைப்பதா, தலையாட்டுவதா, சினத்தை முகத்தில் காட்டாமல் கட்டுப் படுத்திக் கொள்ள முடியுமா என்று கனக்க யோசித்ததையும், ஆனால் முன்னணிக் காவல் நிலையைக் கடந்தபோது எந்தக் குழப்பமுமின்றி, எந்தப் படை வீரனையும் பொருட்படுத்தாது அலட்சியமாக உள் நுழைந்ததையும் நினைக்க இப்போது சிரிப்பு வந்தது. கப்பென்று வாயை மூடிக்கொண்டேன். தம்மைப் பார்த்துத்தான் நான் சிரித்தேன் என்று இவர்கள் நினைத்துவிடக்கூடும்.

அதோ புன்னகையோடு ஒரு படைவீரன் எங்களை வரவேற்கிறார். புன்னகையோடு இன்னொரு படைவீரன் உந்துருளித் தரிப்பிடத்துக் வழிகாட்டுகிறார். தற்செயலாக ஏறிட்டுப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம், முன்னின்ற படையினர் புன்னகையோடு தலையசைத்தனர். ஒரு வருடத்துக்கு முன்புவரை எங்களை நோக்கிச் சுடுகுழல் வாய்களை இலக்குப் பொருத்தியவாறு எங்கள் நிலத்தில் எங்களைக் கொல்லக் காத்திருந்த உங்கள் முகங்களில் புன்னகையை கண்டதாக நினை வில்லையே இளைஞர்களே. அப்போதுதான் காவல் கடமையை மாற்றிக் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நின்று காற்று வாங்கியவளை, வேலை செய்த களைப்பில் ஒரு பிடி உணவை வாயருகே கொண்டு போனவளை, விழுந்து கிடந்த வேலியை நிமிர்த்த வந்தவளையெல்லாம் பதுங்கிச்சுடும் கருவியால் சுட்டு விழுத்திய போதும் கூட இப்படித்தான் புன்னகைத்தீர்களா இளைஞர்களே?

சடங்கு வைபவங்களை எல்லாம் முடித்து உந்துருளி முகமாலையைக் கடந்து புறப்பட்டது. வீதியெங்கும் படைவீரரின் தலைகளே. அது வழமையான விடயம்தான். இது என்ன திருவிழாக் காலத்து மணிக் கடைகள் போன்று திடீரென்று புதிது புதிதாய் காப்பரண்கள்? ஆயுதங் களின்றி உலவும் எங்களை எதிர்கொள்ள எதற்காக இத்தனை அமளி? யாழ் நெடுஞ்சாலை போர்க்கோலம் பூண்டிருந்தது. மாற்றம் எதுவும் நடைபெறாமல் அன்றுபோல் இன்றும் இருப்பது பிளவுண்டு இரு முனைகளாகத் தொங்கும் நாவற்குழித் தண்டவாளப் பாலம் மட்டுமே.

ஓயாத அலைகளாக நாம் கைதடியில் நுழைந்தபோது நாவற்குழி, அரியாலை நோக்கிய எமது நகர்வைக் கட்டுப்படுத்தும் முகமாக சிறீலங்கா விமானப்படையினர் நாவற்குழிப் பாலத்தையும் தண்டவாளப் பாலத்தையும் தகர்த்துவிட்டிருந்தனர். பாளம் பாளமாக சிதறிக்கிடந்த நாவற்குழிப் பாலத்தின் உயிராபத்துமிக்க வெடிப்புகளை இரவில் பாய்ந்து கடப்போம். மயிரிழையில் சறுக்கி நீருள் மூழ்கவிருந்த வாய்ப்புகள் எல்லாம் வெற்றி கொள்ளப்பட்டன. பகலில் இந்தப் பாதையை கற்பனை பண்ணியே பார்க்கத் தேவையில்லை. எமது பகல் நடமாட்டம் முழுவதும் தண்டவாளப் பாதையால்தான். ஒவ்வொரு தண்டவாளமும் ஒவ்வொரு திசைநோக்கித் திரும்பியிருக்கும். ஒரு நுனியிலிருந்து அடுத்த நுனிக்குத் தாவுவோம். தவளுவோம். குதிப்போம். தண்டவாளத் துண்டுகளின் நெளிவுகளுக்கேற்ப நகர்வு மாறுபடும்.

செருப்புக்களைக் கழற்றி கைகளுள் கொழுவிக்கொள்வோம். ஆயுதத்தை தொங்கப்போடுவோம். கொண்டு செல்லவேண்டிய பொருட்களை உடம்போடு கட்டுவோம். புறப்பட்டுவிடுவோம். ஒரு துண்டிலிருந்து அடுத்த துண்டுக்கு பாய முன்னர் கீழே தழும்பிக்கொண்டிருக்கும் தண்ணீரைப் பார்த்தால் பயத்திலேயே உயிர் போகும். எதற்கு வில்லங்கம் என்று பெரும்பாலும் நாங்கள் கீழே குனிவதேயில்லை. பூம்புகார், அரியாலை, கொழும்புத்துறை, செம்மணிக் காப்பரண் போராளிகளை சந்திக்கவரும் ஒவ்வொருவருமே ஒவ்வொரு முறையும் தொங்குபாலத்தின் மேலே தொங்கிப் பாயவேண்டும் என்பது தென்மராட்சிச் சண்டை முனையின் விதியாக இருந்தது.

கடைசியாக நான் தொங்கு பாலத்ததைக் கடந்த போது, மிதுலா அரியாலையில் நின்றாள். பொன்னேரியை படகில் கடந்து வன்னியை அடைந்த மறுநாள், மிதுலாவும் அரியாலையும் எம்மோடில்லை என்ற செய்தி காதுகளை அடைந்தது. பகல் வேளையில் நடந்த மிக உக்கிரமான சண்டையில் மிதுலா தன்னை அழித்துக்கொண்டாள். காப்பரணில் நின்ற எல்லோருமே கடைசி நிமிடம்வரை சண்டையிட்டனர். இறுதியில் தமது கட்டளை அதிகாரி மேஜர் மிதுலா எடுத்த முடிவையே எல்லோரும் எடுத்தனர். எல்லோருமே தமது கடைசி மணித்துளியில் தொலைத்தொடர்புக் கருவியில், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” சொல்லிவிட்டே வீழ்ந்தார்கள் என்ற செய்தி நெஞ்சுப் பரப்பினுள் ஏதோ செய்தது.

மிதுலாவோடு அரியாலை, மேஜர் கயல்விழியோடு சாவகச்சேரி போனது. எத்தனை பேரை இந்த வீதியெங்கும் விதைத்தோம்? மிதுலாவின் சண்டை எப்படி நடந்திருக்கும்? ஒரு முறை அந்த இடத்தை, சண்டை நடந்த தடத்தைப் பார்த்தால் போதும். புரிந்துகொள்வோம். அந்தக் கல் வீட்டின் போட்டிக்கோவில் பனங் குற்றிகளும் மண் மூடைகளும் அடித்து, அதையே தனது கட்டளைப் பீடமாக மிதுலா பயன்படுத்தியிருந்தாள். அந்த வீட்டுக்காரரிடம் போய், அவர்கள் வந்தபோது வீடு எப்படியிருந்தது என்று கேட்டால்? அதற்குள் படையினர் என்னென்ன செய்து வைத்தார்களோ? யாருக்குத் தெரியும்.

அட அதற்குள் அரியாலை வந்துவிட்டோமா? இந்த இடது பக்க ஒழுங்கையால் திரும்பி… ஏன் எங்களை நோக்கிப் படையினர் ஓடி வருகின்றனர்? என்ன நடந்துவிட்டது இப்போது? தமிழில் ஒருவர் விளக்கினார். படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைவதற்கு எங்களுக்கு அனுமதி இல்லையாம். சரியாகப் போய்விட்டது. எங்களுடைய நெருங்கின உறவினர் வீட்டுக்கு போகவேணும் என்று கேட்டுப்பார்த்தோம். எம்மை உள்ளே போகவிட்டால் மேலிடத்திலிந்து தாம் எதிர்கொள்ள வேண்டியுள்ள சிக்கல்களைப் படை வீரர்கள் விளக்கினார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. புறப்பட்டோம்.

“பாசையூர் பக்கத்தால் முயன்று பார்ப்போம்” என்றாள் கூட வந்தவள். விடுவார்களா? தெரியவில்லை. எமது மாவீரர்களின் எச்சங்கள் ஏதேனும் எஞ்சியிருக்கின்றதா என்று பார்த்து எடுக்கப்போகிறோம் என்ற உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன? விடுவார்களா? வீழ்ந்தவர்களின் விதை நிலங்களை உழுதவர்களுக்கு எங்களின் இந்த மென்மையான உணர்வு புரியுமா? தெரியவில்லை.

“யோசிக்காதையுங்கோ. எப்படியாவது போகலாம்.” என்றாள் கூட வந்தவள். உந்துருளி பாசையூருக்கு வந்து சேர்ந்துவிட்டது. நினைத்து வந்தது எதுவும் நடக்கக்கூடிய சூழ்நிலை தென்படவில்லை. கூட வந்தவள் நாடகத்தைத் தொடங்கினாள்.

“சேர், எங்கடை வீடு மணியந்தோட்டத்திலை இருக்குது. ரெண்டு பேரின்ரை வீடுகளுமே கிட்டக் கிட்டத்தான் எங்கடை வீடுகளை நாங்கள் பார்க்கப் போகலாமோ?” அந்த அதிகாரி அதி உயர் பாதுகாப்பு வலயம் என்று விளக்கினார்.

“நாங்க ஒரே ஒரு தரம் பாத்திட்டுப் போய்விடுவம். நீங்களும் வந்து பார்க்கலாம்”

“ம்ஹூம்”

“இந்தக் கடற்கரையிலதான் சின்னனில் நாங்கள் விளையாடினனாங்கள். ஒரே ஒரு தரம்மட்டும் கடற்கரையைப் பார்க்கலாமோ?”

அந்த அதிகாரி கொஞ்ச நேரம் எங்களைப் பார்த்தவாறிருந்தார். எழும்பி உள்ளே போனார். பத்து நிமிடம், பதினைந்து நிமிடம், அரை மணித்தியாலம்…. ஆளையே காணோம். நடமாடிக்கொண்டிருந்த படைவீரர்கள் எங்களைச் விநோதமாகப் பார்த்தனர். உள்ளே போன அதிகாரி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்த பின்னர்தான் முடிவு சொல்வாரோ? சினமாக இருந்தது. அதிகாரி வந்தார். கூடவே சில அதிகாரிகளும் பல படைவீரர்களும் வந்தனர்.

“வாருங்கள்” என்றனர். எங்கே? மணியந்தோட்டத்து மிதுலாவின் வீட்டுக்கா? கடற்கரைக்கா? தெரியவில்லை. கூடவே நடந்தோம்.

பாசையூர் மீன் சந்தை தெரியும் தூரத்தில் நின்றார்கள். நின்றோம். “இதிலை நிண்டு கடற்கரையைப் பாருங்கோ. இதுக்கு மேல கூட்டிப்போக அனுமதியில்லை.” என்றார்கள்.

– வேர்கள் துளிர்க்கும்; தொகுப்பு 2003 பங்குனி, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *