கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 24,396 
 
 

பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சைக்காகத்தான் முதன்முதலாக எங்களுக்கு ‘அங்க அடையாளம்’ எடுத்தார்கள். ”எல்லாரும் ரெண்டு அடையாளங்கள பாத்து வெச்சுக்கோங்க. இங்க வந்து தடவிக்கினு இருக்கக் கூடாது. டிரெஸ்ஸுக்கு வெளிய இருக்கணும். முட்டியில இருக்குது, தொடையில இருக்குதுனு துணியத் தூக்கக் கூடாது” என்று கஸ்தூரி டீச்சர் குரலிலேயே பள்ளி மாணவித் தலைவி மாரியம்மாள் பத்தாம் வகுப்பின் எல்லாப் பிரிவுகளுக்கும் சொல்லிச் சென்றாள்.

எல்லாருக்கும் சிரிப்பாக வந்தது. ”ஒனக்கெங்க இருக்கு… காமி” என்று எல்லாரும் அடுத்த ஆளின் அங்க அடையாளத்தையே தேடியபடி இருந்தோம். ஒருவர் உடலை மற்றொருவர் பார்ப்பதும் புதிதாக அன்றுதான் முகத்தையே பார்ப்பது மாதிரியும் வகுப்பு ஒரே சிரிப்பாக இருந்தது. ”முட்டக் கண்ணச் சொல்வாளா பச்சியம்மா?”, ”தெத்துப் பல்லக் காட்டுவாளா காந்தி?”, ”கொட மிளகா மூக்கைக் காட்டுவாளா மாலினி?” என்று அடுத்த ஆளின் அடையாளங் களை கேலிச்சித்திரங்களாக்கிச் சிரித்துக்கொண் டோம் முதல் பெஞ்ச் மாணவிகளாகிய நாங்கள். கடைசி பெஞ்சில், கூறப்படும் எங்கள் அடை யாளங்களைக் கேட்கவும் கழுதைக் காதுபோல் காது நீண்டது.

”எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்க. நான் திரும்பத் திரும்பச் சொல்ல மாட்டேன். அங்க அடையாளம்னா ஒடம்புல இருக்கிற மச்சம், மரு, வெட்டுத் தழும்புனு… நம்ம ஒடம்புல மறையாததா இருக்கணுமாம். அதுவும் எல்லாரும் பார்க்கிற மாதிரி வெளியில தெரியணுமாம். ரெண்டு அடையாளம் சொல்லணுமாம். நல்லாப் பாத்து வெச்சுக்கோங்க. டிரில் டீச்சர், ‘என்ன லச்சணமாடி கிளாஸ்ல சொன்னே?’னு என்னத்தான் திட்டுவாங்க… சொல்லிட்டேன்” என்று அழுத்தம்திருத்தமாகக் கத்திவிட்டு உட்கார்ந்தாள் மாரியம்மாள்.

அடையாளம்1எங்கள் பள்ளியில் மாணவித் தலைவிகளுக்கு முதல் தகுதியே ஸ்பீக்கர் தொண்டைதான். எங்களுடன் கத்திக் கத்தியே ஸ்பீக்கர் ஆகிவிட்டதாக அவர்கள் கூறுவார்கள். குரல் கனத்து ஆம்பளைக் குரல்போல் இருக்கும். ஆசிரியர்கள் பேசுவதைவிட இவர்கள்தான் அதிகம் பேச வேண்டும். ஆசிரியர்கள் மேல் உள்ள பய உணர்ச்சி அவர்களின்ஆற்றலைக் காப்பாற்றக் கை கொடுக்கும்.

ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் ”ஏய்! பேசாதே… பேசாதே” என்று டேபிள் மேல் கொம்பால் அடித்துக்கொண்டே இருப்பாள் மாரியம்மாள். தொண்டை வற்றிப்போன பிறகு சத்தம் வராது. உடனே, வழிமுறை மாறும். போர்டில் பெயர் எழுதத் துவங்குவாள். பேசுபவர் பெயரை எல்லாம் போர்டில் எழுதுவாள். மறுபடியும் பேசினால் பக்கத்தில் ‘அடங்கவில்லை’ என்று எழுதுவாள். ‘அடங்கவில்லை’ என்று போட்டவுடன் அந்தப் பெண்ணுக்குப் பயம் தெளிந்துவிடும். எப்படியும் கிளாஸ் டீச்சரிடம் அழைத்துப்போவார்கள். பிறகு, எதற்கு இவளுக்கு அடங்க வேண்டும் என்று அவள் தைரியமாகத் தன் பெஞ்ச் மாணவிகளையும் பேசத் தூண்டு வாள். அவள் பேசப் பேச… அடங்கவில்லைக்குப் பக்கத்தில் மிகமிக… மிகமிக… என்று தலைவி போட்டுக்கொண்டே போவாள். அடங்காதவள் வீரதீர சாகசம் செய்தவளைப் போல் வகுப்பையே தெனாவட்டாகப் பார்ப்பாள்.

மொத்தத்தில் மாணவித் தலைவிகள் பேசிப் பேசி இளைத்துப்போவார்கள். டீச்சர்களிடம் மட்டும் நல்ல பேர் வாங்குவார்கள். வகுப்பில் மாணவிகளுக்கு விரோதிகளாவார்கள். பத்தாம் வகுப்பில் பாஸ் ஆனாலே பெரிய விஷயம்.

வழக்கம்போல், தலைவியைக் கத்தவிட்டு நாங்கள் அடையாளங்களைத் தேடினோம். ”மச்சமிருக்கா… மச்சமிருக்கா?” என்று வகுப்பு முழுக்கக் குரல்கள் எதிரொலித்தன. மச்சம் இருந்ததோ இல்லையோ, எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட வெட்டுக் காயம் இருந்தது. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், வெட்டுக் காயம் பலருக்கும் முட்டிக்காலில்தான் இருந்தது. எல்லாரும் பாவாடையை விலக்கிப் பார்த்தார்கள். ”துணியைத் தூக்காம பார்க்கிற எடத்துல இருக்கிற அடையாளத்ததான் சொல்லணும்” – டீச்சரின் உத்தரவை நினைவூட்டி னாள் தலைவி.

புருவத்துக்கு மேல் நாலைந்து பேருக்கு வெட்டுக் காயம் இருந்தது. சின்ன வயதில் சேவல் கீறி சித்ராவுக்குக் கன்னத்தில் போட்ட மாதிரி தழும்பு இருந்தது. முகத்தில் உள்ள தழும்பைக் காட்ட எல்லாருக்குள்ளும் தயக்கம் இருந்தது. அதனால், வேறு அடையாளங்களைத் தேடினார்கள். மச்சம் இல்லாத மாணவிகள் தங்கள் அதிர்ஷ்டமே தொலைந்ததுபோல் பரிதவித்தார்கள்.

எனக்கு நிறைய மச்சம் இருந்தது. மறைவிடங்களில் – கழுத்துக்குக் கீழே, முட்டியில், தொடையில் – நிறைய மச்சங்கள். வெளியில் காட்டும்படி ஒரு மச்சமும் இல்லை. தேடித் தேடி அலுத்துவிட்டேன். டிரில் டீச்சர் சொல்லிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு கண்ணுக்குப் படும் ஓர் அடையாளத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு அடையாளங்களைக் கண்டுபிடித்துவிட்டுச் சந்தோஷத்தில் இருந்த தோழிகளிடம் தஞ்சம் புகுந்தேன். என் உடலில் ஆராய்ச்சியை உடனே தொடங்கினார்கள். முதலில் கையைப் பிடித்து முன்னுக்குப் பின்னாகத் திருப் பினார்கள். பளபளவென்று இருந்த என் கையில் எந்த அடையாளமும் இல்லை. ”சைக்கிள் கத்துக்கும்போதுகூட நீ கீழ விழலையாடி? உனக்கு அம்மைகூடப் போடலையா? எங்கியுமே விழுந்து எழுந்திரிக்கலையா?”- திட்டிக்கொண்டே தேடினார்கள். ஒன்றும் அகப்படவில்லை.

என் அம்மா எங்கேயும் என்னை விளையாட அனுப்பாததால், நான் மண் மகளை முத்தமிட்டது இல்லை. என் ரத்தம், பூமியில் சிந்தியது இல்லை. எல்லா விளையாட்டுகளிலும் நான் வெறும் பார்வையாள்தான். மிகப் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டதால் வியர்ப்பதே எனக்கு அபூர்வம். அலுத்துப்போன தோழிகள் காலுக்கு இடம் மாறியிருந்தார்கள்.

அங்கும் முட்டிக்கு மேல்தான் மச்சம் இருந்தது. தோழிகளே முட்டிக்கு மேல் என் பாவாடையை உயர்த்துவதற்குத் தயங்கி யோசித்துக்கொண்டு இருந்தார்கள். ”ஒழுங்கு மரியாதையா சொல்லிட் டேன். எல்லாம் முட்டிக்காலுக்குக் கீழ இருக்கிற அடையாளத்தைத்தான் காட்டணும்” என்று தலைவி மறுபடியும் கத்தினாள்.

குரல் கேட்டவுடன் தோழிகள் மொத்தமாக என் காலை நிராகரித்தார்கள். கையையும் காலையும்விட்டால் முகத்தில் வெளியே தெரியும் பகுதிகள் கழுத்தும் முகமும்தானே? சொல்லிக்கொள்ளும்படி முகத்தில் ஒன்றும் இல்லை. கழுத்துக்குக் கீழே இருக்கும் அடையாளத்தை நாங்கள் அணிந்திருந்த ஆம்பளைச் சட்டையை லேசாக விலக்கிக் காட்டலாமா என்று எங்களுக்குள் மெல்லிய சந்தேகம் எழுவது தெரிந்தவுடனே தலைவி முறைத்தாள். எப்படித்தான் மொத்த வகுப்பையும் மோப்பம் பிடிப்பாளோ? எல்லாக் கேள்விகளுக்கும் அவள் முகத்தில் ரியாக்‌ஷன் தெரிந்துவிடும்.

அடையாளம்2அடையாளம் தேடி அலுத் துப்போன தோழிகள் ”உன் பரட்டைத் தலையைத்தாண்டி அடையாளமாக் கொடுக்கணும்” என்று தலையைக் கலைத்துவிட்டார்கள். நெற்றியை, புருவத்தை, பின் மண்டையைத் துழாவினார்கள். காடுபோல் செழித்திருந்த என் முடியை இரண்டாக வகிர்ந்து, காதுக்குப் பின்னால் இரண்டு பக்கமும் பின்னி மடித்துப் போட்டு இருப்பேன். என் முகத்தை மிஞ்சி பின்னலும் படியாத முடிக் கற்றைகளும்தான் தெரியும். தலைக்குக் குளிக்கிற அன்று பாதிக் கரடி மாதிரி தான் இருப்பேன். ”முடிக்குச் சாப்பாடு போட்டே இந்தப் பொண்ணுக்கு ஒடம்பு நீத்துப்போச்சு. பாதி முடியையாவது வெட்டிவிடேன்டீ” என்று அம்மாவைத் திட்டும் வள்ளியம்மா என்று உண்மைப் பெயர்கொண்ட பக்கத்து வீட்டுக் கூனிக் கெழவி.

”ஒன் பரட்டைத் தலையையே அடையாளம் கொடுடீ” என்று பரட்டையைப் பெரும் பரட்டையாக்கும் முயற்சியில் இறங்கினாள் சுந்தரி. பின்னலை முன்னாலும் பின்னாலும் திருப்பிப் போட்டு, ரிப்பனைத் தளர்த்தி குரங்குக் கைப் பின்னலானது என் தலை முடி. என் தலையை அவள் மேல் சாய்த்துக்கொண்டவள், பின்னலை ஒரு பக்கமாகத் தள்ளி, காது மடல்களைப் பிரித்துப் பார்த்தாள். ”காதுக்கு தோடு போட்டா என்ன?” என்றபடி என் வெறுங்காதைத் தடவிக் கொடுத்தாள். ”உன் காது ரொம்ப அழகுடி. பெரிய அவரை வெதை மாதிரி வடிவாக்கீது. பெரிய கம்மல் போடுற மாதிரி நல்லாப் படலடிச்சுக்கீது” – கூறிக்கொண்டே காது மடலைத் திருப்பினாள். ”இது என்னாடி… காதுக்குப் பின்னாடி புண்ணா?”

”எனக்குப் புண்ணெல்லாம் வந்ததே கெடை யாதுடீ. என்னன்னு பாரு.”

உடனே, நான்கைந்து தலைகள் ஆர்வமாக என் மேல் கவிழ்ந்தன. ”இது புண்ணு இல்லப்பா… மருவு”- சுப்பு கத்தினாள்.

”மருவா?”

”ஏய்… ஒனக்கு ஒரு அடையாளம் கெடைச்சிடுச்சி” என்றார்கள்.

”காதுக்குப் பின்னால்தான் இருக்கு. யார்கிட்ட வேணும்னாலும் காமிக்கலாம். தப்பிச்சுப் போ” – பெரும் பிரச்னையில் இருந்து என்னை மீட்ட நிம்மதி தெரிந்தது அவர்கள் குரலில்.

”இன்னொரு அடையாளம்டீ?”

”எப்பா… ஆளை விடுங்க. இவகிட்ட தேட முடியாது.

இவ பரட்டைத் தலைதான் இன்னொரு அடையாளம்!”

என் உடலின் பகுதியாக இருந்த மரு அன்றுதான் எனக்குத் தெரியவந்தது. கண்டுபிடிப்பு நிகழ்ந்த பரவசம். எத்தனை வயதில் இருந்து இருக்கிறது?

இதுவரை ஏன் யாருமே சொல்லவில்லை? குளிக்கும்போதுகூட கைக்குத் தட்டுப்பட்டதே இல்லையே? கேள்விகளால் சூழப்பட்டேன்.

அன்று மாலை வரிசையில் நின்று உடற்கல்வி ஆசிரியையிடம் என் அங்க அடையாளத்தைப் பதிந்தேன்.

1. வலது பக்கக் காதின் பின்புறம் ஒரு மரு.

2. ?????????????

”ஏண்டீ இவ ரெண்டாவத சொல்லாம முழிக்கிறா?”

”எவ்வளவோ தேடிட்டோம் டீச்சர். இவளுக்கு வேற அடையாளமே இல்லை!”

டீச்சர் லேசாக முறைத்துவிட்டு, ”சரி தள்ளு” என்று அடுத்த ஆளைக் கூப்பிட்டார்கள். அதன் பிறகுதான் மூச்சு சீரானது.

வீட்டுக்குப் போனதும் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்கு ஓடினேன். கண்ணாடியைச் சாய்த்துப் பிடித்து பின் பக்கம் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. கண்ணாடியை இன்னும் சாய்த்தேன். காதோரமும் சுவரின் பின் பக்கமும் தெரிந்தன. காதை மடக்கி எப்படியும் பார்த்துவிடும் ஆவலில் பின்னால் நகர்ந்து நகர்ந்து பார்த்தேன். நகர்ந்தால் பின் பக்கமும் சேர்ந்தே நகரும் என்பது புரியாததால் சுவரில் போய் முட்டினேன். தலை ‘டங்’கென்று முட்டியது.

பின்னால் ஒரு கண்ணாடியைப் பிடித்துக்கொண்டால், அதில் விழும் பிம்பத்தை முன்னால் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க முடியும் என்று தோன்றியது. அதற்கான சந்தர்ப்பத் துக்குக் காத்திருந்தேன். மனசில் மருவின் மீதுதான் முதல் காதல் அரும்பியதாக ஞாபகம்.

ஒரு விடுமுறை நாளில் எங்கள் அம்மா இல்லாத நேரத் தில் பக்கத்து வீட்டு கீதாவைக் கூப்பிட்டேன். எனக்கு அடுத்த வகுப்பு படிப்பவள். தோட்டத்தில் நல்ல வெளிச் சத்தில் நின்றுகொண்டோம். அவளிடம் ஒரு கண்ணாடியைக் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொன்னேன். பல முயற்சிகளுக்குப் பின்தான் மருவின் தரிசனம் கிடைத்தது. ஊறவைத்த அரிசி போன்ற ஒரு வெளுத்த நிறத்தில் நெற்றிப் பொட்டு சைஸில் தெரிந்தது. ”எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தாய் என் செல்லமே?” என்று மனசுக்குள் ஒரே கொண்டாட்ட மாக இருந்தது.

அம்மாவிடம் துருவித் துருவிக் கேட்டேன். ”நீகூட மருவ எப்படிம்மா பார்க்காம விட்ட?”

”எல்லாம் நான் பார்த்ததுதாண்டீ. நீ அஞ்சாவுது படிக்கும்போதே தவளகிரீஸ்வரரை வேண்டிக்கிட்டு பெரிய கார்த்திகைக்கு மலை ஏறினோம். மருவு மேல முடியைச் சுத்திட்டு, சுனையில மௌகு வாங்கிப் போட்டோம். மௌகு வாங்கிப் போட்டாலே எல்லா மருவும் கொட்டிடும். ஒனக்குத்தான் கொட்டல. அது மரு இல்ல. கொஞ்ச நாள்ல போயிடும்… விடு!”

”ஐயோ… மறையக் கூடாதும்மா இது. இதைத்தான் நான் டீச்சர்கிட்ட அங்க அடையாளமா குடுத்திருக்கேன். சரி, நீ ஏன் சொல்லலைம்மா?”

”இன்னாடி இந்தப் பொண்ணு நொய்நொய்னு? இதுல என்ன இருக்கு சொல்றதுக்கு? புண்ணா, அக்கியா… சீக்குன்னு வைத்தியம் பாக்க? ஒனக்குத் தெரியலையா ஒன் ஒடம்புல இருக்கிறது?”

அம்மாவின் கேள்வி எனக்குள் சுழன்றுகொண்டே இருந்தது. மரு என் நினைவின் மையமானது.

பத்தாம் வகுப்பு முடிந்து, பதினொன்றாம் வகுப்பு படிக் கும்போது, எனக்குள் ஒரு புதிய பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். எங்கு உட்கார்ந்தாலும் முழங்கையை ஊன்றிக்கொண்டு, விரல்களால் மருவை வருடிவிடத் துவங்குவேன். உட்கார்வதற்காகவே காத்துக்கொண்டு இருக்கும் என் செயல். மருவை வருடிக்கொடுக்கும்போது பாதுகாப்பாக உணர்வேன். பால் குடிக்கும் குழந்தையின் பரவசம் அல்ல. சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, வளைய வளையமாகப் புகையை ஊதுபவர் களின் பரவசம்.

வலது பக்கக் காதுக்கு அருகில் அந்த மரு இருந்ததால் என் பரவசத்துக்குக் கொஞ்சம் இடையூறும் இருந்தது. வலக்கை ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் வேலையாக இருக்கும். நினைத்த நேரத்தில் வருடிக்கொண்டு இருக்க முடியாது.

உடன் இருக்கும் நெருக்கமான தோழியைப் போல் மரு என்னுடன் இருந்தது. என் பேச்சு குறைந்தது. மனசு சோர்ந்துபோகும்போது எல்லாம் நீல வானத்தைப் பார்த்துக்கொண்டு மருவை வருடிக்கொண்டு இருந்தால் போதும்… மனசு சரியாகிவிடும்.

பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்புக்குச் சென்ற பின், அங்க அடையாளங்கள்பற்றிய ஆர்வம் தொடர்ந்தது. இது ‘நான்தான்’ என்பதை யாருக்கு நிரூபிக்க வேண்டும்? என் கையெழுத்து, புகைப்படம் இவை எல்லாம் நம்பத் தகுந்தது அல்லவோ?அதனால் தான் மாற்ற முடியாத அங்க அடையாளத்தைக் கேட்கிறார்களோ?

அங்க அடையாளத்தைப் பற்றிய ஆர்வம் என் படிப்பைவிட அதிகமாக இருந்தது. எப்படி எல்லாம் அங்க அடையாளங்களைப் பதிந்துவைத்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை ஆராய்ந்தேன். கைரேகைகூட மாறிவிடுமாம். 19 வயதுக்கு மேல்தான் கைரேகை உறுதிப்படுமாம். கைரேகையைவிட நம்பகமான அடையாளம் கண்ணின் கருவிழியாம். புலிகளுக்கு அதன் உடலில் உள்ள வரிகள்தான் அடையாளமாம். இடப்பக்க, வலப்பக்கக் கோடுகளை வைத்துத்தான் அடையாளம் கண்டுபிடிப்பார்களாம்.

இப்படியாக மருவுக்கும் எனக்கும் இணக்கமாகப் போய்க்கொண்டு இருந்த உறவில் பெரிய திருப்பம் ஏற்பட்டது என் திருமணத்துக்குப் பிறகுதான். திருமணமே திருப்பம்தான். எல்லா உறவுகளுக்கும் உண்டாகும் மூச்சுத் திணறல் எங்கள் உறவிலும் உண்டானது. இருவரின் ஆசாபாசங்கள், ரசனைகள், பிடிவாதங்களைக் கொஞ்ச நாள் வரை அனுசரித்துக்கொள்ள முடிந்தது. வார்த்தைகள் தடிக்கத் துவங்கிய பிறகு, இருவரும் பேச்சைக் குறைத்துக்கொண்டு, அவரவர்களுடைய பழைய உலகங்களுக்குள் மறைந்துகொள்ளத் தொடங்கினோம்.

சில நேரங்களில் வாயை அடக்கத் தெரியாமல், பிரேக் இல்லாத வண்டியைப் போல் மோதத் தொடங்குவோம். ஒருவருக்குள் இருந்ததாக நம்பப்படும் நன்னடத்தையும் நல்வார்த்தையும் மறைந்து, பகையாளிகளின் யுத்தமாக நீளும். அறை முழுக்க ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்த அங்கங்களும் ஆயுதங்களும் சிதறிக்கிடக்கும். எங்களின் குரூர ரூபத்தை நாங்களே இனி தாங்கிக்கொள்ள முடியாமல் மூச்சுத் திணறும் நேரத்தில், பெரும் சேதத்தை விளைவித்த யுத்த வாகனத்தினை நிறுத்த முயற்சிப்போம். அவன் சிகரெட் பாக்கெட்டைத் திறந்து, இரண்டு சிகரெட்டுகளை எடுத்து மேல் சட்டையில் போட்டுக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறுவான். யுத்தச் சகதியில் நான் மௌனித்து உட்கார்ந்திருப்பேன்.

”உலகத் திமிர் பிடிச்ச நாய்டீ நீ… உனக்கு எல்லாம் சரிக்குச் சமமா எடங் குடுத்ததே தப்பு. மத்தவன மாதிரி நானும் பொண்டாட்டி வாலை நறுக்கிவெச்சிருக்கணும். அதனாலதான் நீ ரொம்ப துளுத்துட்ட” என்று அவன் பேசிய அன்று தான் முதன்முதலாக எனக்கு உண்மையான கோபம் வந்தது.

எனக்குக் கோபம் வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எதையும் போட்டு உடைக்க முடியாது. நிரந்தரப் பைத்தியம் ஆக்கிவிடுவார்கள். கோபத்தை மடை மாற்றவும் முடியாது. கோபப்படாமல் இருக்கவும் தெரியவில்லை. உப்பு போட்டுச் சாப்பிடுவதாலும் கொஞ்சம் சுரணை இருப்பதாலும். பிறகு, என்னதான் செய்வது கோபத்தை?

மருவை வருடிக்கொண்டே தலை கனக்க, கண்கள் சிவக்க உட்கார்ந்திருந்தேன். விரல்கள் மருவில். வருடிக்கொண்டு இருந்த விரல்களால் மருவைக் கிள்ளினேன். நன்றாகச் சொறிந்தேன். கை பரபரவென்று சிரங்கைத் தேய்ப்பதைப்போல் தேய்த்துக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஈரமான கைகளைப் பார்த்தால் ரத்தம். ரத்தம் பார்த்தவுடன் கோபம் ஆசுவாசமானது. என் கோபத்துக்கு நிவாரணம் என் ரத்தம்.

என் அன்புக்குரிய ரகசியமாக இருந்த மரு, என் தோல்வியின் வடிகாலாக மாறியது. சின்ன சண்டைக்கு எல்லாம் கிள்ள ஆரம்பித்தேன். ரத்தம் பார்த்தால், ”இனி கையே வைக்கக் கூடாது” என்று சபதம் எடுப்பேன். ரத்தம் காய்ந்து மேலே ஏடு படிந்ததுபோல் காய்வதற்குள் மீண்டும் கிள்ளிவைப்பேன். சண்டையே போடக் கூடாது என்று நாங்கள் எடுக்கும் முடிவும் மருவைக் கிள்ளவே கூடாது என்று நான் எடுக்கும் முடிவும் நடைமுறைக்கு வந்ததே இல்லை.

முகம் துடைக்கவும் ரத்தம் துடைக்கவும் இரண்டு கைக்குட்டைகளை வைத்துக்கொள்ளத் தொடங்கினேன். அலுவலகம், பொது இடம், கூட்டம் எவ்விடமும் விதிவிலக்கல்ல. யாரும் சட்டெனப் பார்க்க முடியாத இடத்தில் என் அடையாளம் இருந்ததால் என்னால் இயல்பாகக் கிள்ளிக்கொள்ள முடிந்தது.

பொட்டு சைஸுக்கு இருந்த மரு, விலகலின் ஆழ அகலங்களை அனுசரித்து அளவு கூடிக்கொண்டுபோனது. மோதிக்கொள்ளாத நாளே இல்லை எனும்போது பாவம், அது வளரத்தானே செய்யும்? பல பிரிவு உயர் அதிகாரிகள்கொண்ட எங்கள் அலுவலகத்தில் இப்போது எனக்குச் சொல்லப்படும் அடையாளம்…

”காது பக்கத்துல ஒரு ரூபா அளவுக்குப் பெருசா புண்ணு மாதிரி மரு இருக்குமே… அந்த மேடமா?”

எல்லாருக்கும் தெரியிற மாதிரி அங்க அடையாளம் இருக்க வேண்டும் என்று சொன்ன என் பத்தாம் வகுப்பு டீச்சர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி?

– அக்டோபர் 2012

1 thought on “அடையாளம்

  1. ரொம்ப நல்லா இருந்தது கதை.
    கூடவே உக்காந்து நேருக்கு நேர் பார்த்து சொல்வது போல இருக்கு.
    நீங்க SFI வெண்ணிலா தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *