அன்புள்ள அத்தானுக்கு,
உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா?
இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாளாகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன்கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் கூட நீங்கள் எழுதவில்லை.
எப்படி எழுதுவீர்கள்? எங்கள் அப்பா, அம்மா செய்ததென்ன மன்னிக்கக்கூடிய குற்றமா? ‘என் மகனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. 12,000 ரூபாயிலிருந்து ஒரே ஜம்ப்பில் 20,000 ரூபாயாக சம்பளம் உயர்ந்திருக்கிறது. எனவே, மாப்பிள்ளைக்கு இப்போதைய அவன் அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் ஒரு கார் வாங்கிக் கொடுங்கள்’ என்று உங்கள் பெற்றோர் கேட்டபோது, ‘ஆகட்டும்! என் தலையை அடமானம் வைத்தாவது பணம் புரட்டி கார் வாங்கித் தந்துவிடுகிறேன்’ என்று என் அப்பா சொன்னாரே, சொன்னது போல் செய்தாரா? கவலைப்பட்டுப் பட்டே முடியெல்லாம் கொட்டி வழுக்கை விழுந்த தன் தலை பத்து பைசாவாவது பெறுமா என்று இவர் யோசித்திருக்க வேண்டாமா?
சரி, நீங்களும்தான் கார் வரும், வரும் என்று எத்தனைக் காலம் பொறுமையாக இருப்பீர்கள்? நீங்கள் என்ன இளிச்சவாயரா? வேறு வழியில்லாமல்தானே ‘வந்தால் காருடன் வா!’ என்று என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்!
அப்பாவின் 3,000 ரூபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து, பத்து வருஷமோ இருபது வருஷமோ, அவரால் என்றைக்குக் கார் வாங்கித் தர முடிகிறதோ, அன்றைக்கு நான் வருகிறேன். அல்லது, அடுத்த ஜென்மத்தில்தான் நாம் ஒன்று சேர முடியுமென்றாலும் சரி, வேறு வழியில்லை; நான் காத்திருக்கத்தானே வேண்டும்?
அன்புடன், மீனாட்சி.
பின்குறிப்பு: அநேகமாக இதுவே என் கடைசி கடிதமாக இருக்கும். இங்கே, சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ரூ.35,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அதனால், இனிமேல் உங்களுக்குக் கடிதம் எழுதக்கூட எனக்கு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.
– 28th நவம்பர் 2007