ஹாப்பி ஹனி ட்ராப் நியூ இயர் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 7,773 
 
 

டிடக்டிவ் ஹரனுக்கும் ஹரிணிக்கும் இது தலைப் புத்தாண்டு. இரவு பதினோரு மணிக்கு ஒரு போன் வந்தது ஹரனுக்கு.

“உடனடியாக ஓட்டல் அசோக், ரூம் நம்பர் 8 க்கு வா, ஒரு ஹனி ட்ராப் செய்யணும்”. போன் செய்தவன் ஹரனுடன் பணி புரியும் அவன் ஆருயிர் நண்பன் தாமஸ்.

‘அருகில்தானே இருக்கிறது ஓட்டல், போய்விட்டு வந்துவிடலாம்’ என்று “இதோ வந்துடறேன் டியர்…” என்று சொல்விவிட்டு அவசரமாய்க் கிளம்பினான் ஹரன்.

ஹரன் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். ஹரிணி கதைவைத் திறக்க, வெளியில் தாமஸின் மனைவி மேரி நின்று கொண்டிருந்தாள்.

“வா மேரி.. என்ன இந்த நேரத்துல…?”

“ஹரன் எங்கே..?”

“யாரோ கால் பண்ணினாங்க. ஆபீஸ் கால் போல இருந்துச்சு. வந்துடறேன்னு சொல்லிட்டுக் கிளம்பிப் போயிட்டார்..” என்றாள் ஹரிணி.

“புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு மணி நேரம் கூட இல்லை.. இந்த நேரத்துல இப்படிப் போயிட்டாரே…” என்று அங்கலாய்த்தாள் மேரி.

“மேரி நீ தாமஸ் கூட மிட் நைட் மாஸ்க் போகலையா..? இங்கே வந்திருக்க..?” என்று கேட்டாள் ஹரிணி.

மணி பதினொண்ணே முக்கால் ஆகிவிட்டது.

இன்னும் ஹரனைக் காணோம். ஒரு ஃபோன் கூட இல்லை. மணி 11.50. ஹரிணிக்குப் போன் வந்தது. கணவர் ஹரனோ என எதிர்பார்த்தாள். புது எண்ணாய் இருந்தது.

“ஹலோ டிடக்டிவ் ஹரனோட ஒய்ஃபா..”

“ஆமாம்…”

“உடனே ஓட்டல் அசோக் ரூம் நம்பர் 7 க்கு வாங்க. அங்கே ஹரன் மயங்கிக் கிடக்கறார்..” என்றது எதிர் முனை.

மேரியிடம் செய்தி சொல்ல “வா நானும் வர்றேன்..” என இருவரும் விரைந்தனர்.

ரூம் நம்பர் 7 ஐத் திறந்து விளக்கைப் போட்டபோது மணி 11.58. உள்ளே யாரும் இல்லை. யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தாள் ஹரிணி.

ரூம் நம்பர் 8 ல் இருந்து “நாம தேடியவங்க வந்தாச்சு ஹனி ட்ராப்ல நல்லா சிக்கப் போறாங்க..” என்று சொல்லியவாறு ஹரனை அழைத்துக் கொண்டு தாமஸ், 7ம் எண் அறைக்குள் அடியெடுத்து வைத்தபோது மணி 12 அடிக்கத் தொடங்கியது.

மிரண்டு போய் நின்றிருந்த ஹரிணி முன், ஹரனை கொண்டு வந்து நிறுத்தினார் தாமஸ். மேரியும் தாமஸும் ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

“இது வெறும் ஹாப்பி நியூ இயர் மட்டுமில்லே.. ஹாப்பி ஹனி ட்ராப் (Honey Drop) நியூ இயர்!” என்று சொல்லிக் கொண்டே, ஹரிணியுடன் லிப் லாக் செய்தான், ஹனி டிராப (Honey Trap) செய்ய வந்த ஹரன்.

– கதிர்ஸ் (ஜனவரி 1-15-2022)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *