ஸ்ருதி பேதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 4,311 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விழிப்பு தன் சுழிப்பிலிருந்து தானே வெளிவருமுன் ஏதோ சத்தத்தில் வெடுக்கெனக் கலைந்து முழுமையில் கூடிக்கொண்டது. பழக்கத்தில் பார்வை சுவர்க் கடியாரத் தின் மீது பதிந்ததும் அடித்துப் புரண்டு எழுந்தாள். ஐயோ ரொம்ப நேரமாச்சே ! உடனே நினைப்பு வந்தது. இன்றைக் குப் போலாமா வேண்டாமா? இன்றிலிருந்தே வேண்டாமா?

கதவைத் தட்டும் சப்தம். அதுதான் எழுப்பியிருக்கிறது. மெதுவாய், படிப்படியாய், உடனே அவசரமா; கூடவே அதிகாரம்.

இடுப்பில் துணியைச் சரிபண்ணிய வண்ணம் போய்த் திறந்தால் வாசலில் போலீஸ். ஒருவன்தான்.

“இது யார் பத்மாவதி வீடா? நீங்கதான் பத்மாவதியா? உள்ளே வரலாமா?”

கேள்விகளைக் கேட்டுக்கொண்டே பதிலுக்குக் காத்திரா மலே, உள்ளே வந்துவிட்டான்.

இவா வழக்கமே இதுதானே! ஆனால் அவள் கலவர மடையவில்லை. தொண்டையடியில் சிரிப்பு வந்தது.

“உங்கள் வீட்டுக்காரர் இல்லையா?”

“Campஇலே போயிருக்கார். இன்னி ராத்ரி வரணும்.”

”அதான் நெனச்சேன். இன்னும் உங்களுக்கு விடியல் லியா? வெயில் முதுகைப் பிளக்குது!’

“குழந்தைக்கு ஜுரம். ராமுழிச்சு, விடிகாலையிலே அசந்துட்டேன்.”

கிழிந்த பாயில் படுத்திருக்கும் பையனைப் பார்த்தான். மூணு வயது? அயர்வில் அரைக் கண்ணில் காங்கை அடித்தது.

சுற்றுமுற்றும் –

ஒரே அறை. அதுவே கூடம். கிச்சன், படுக்கை, மூலை யில் ஜலதாரை. சுவருக்குச் சுவர் ஒரு கயிற்றுக் கொடியில், இரண்டு புடவைகள். ஒரு அழுக்கு லுங்கி, குழந்தை நிஜார். சொக்காய்கள் இரண்டு தொங்கின. எற்கனவே அழுக்கும் மழை ஒழுகல் கறைகளும் வழிந்து காய்ந்த சுவர்களில் கரித்துண்டால் கிறுக்கல்கள்.

அப்பா மேல் ஆச்சி அம்மா மேல் ஆச்சி

ஏழ்மைதான் கூத்தாடிற்று என்றாலும் இவள் இடத்தைப் பெருக்கி ஒழுங்குபடுத்தி, இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்க முடியும்.

“நீ ஏன் இன்னும் வேலைக்குப் போகல்லே?”

அவளுக்கு விழியோரம் குறுகுறுத்தது. ”கான்ஸ்டேபிள், மரியாதையைக் கோட்டை விடறீங்க.”

“மரியாதையா ? கான்ஸ்டேபிளா ? கான்ஸ்டேபிளுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுமா? நீ இப்படி மரியாதை தவறாப் பேசறதுக்கே உன்னைக் காரணம் சொல்லாமல் உள்ளே தள்ளிட முடியும், அது தெரியுமா?”

“கான்ஸ்டேபிளுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் கான்ஸ்டேபிள். உங்களோடு எனக் கேன் பேச்சு ? வேணும்னா எனக்குக் காவல் வெச்சுட்டு, ஸ்டேஷனுக்குப் போய் DSP தரணீஸ்வரனுக்கு போன் போடுங்கோ -long distance இப்போ MPயிலே இருக்கார்னு நெனக்கிறேன் . டிபார்ட்மெண்டுக்குத் தெரியாமல் இருக்காது. அவரிடம் என்னை யார்னு விசாரியுங்க. ஒண்ணும் வேண்டாம் என் பேர் சொன்னால் போதும்.”

“இந்த உதார் எல்லாம்…”

”நீங்க இப்படி சொல்விங்கன்னு தெரியும். அதனால் தான் உங்களையே விசாரிக்கச் சொல்றேன். இல்லை என்னை அழைச்சுட்டுப் போங்க. உங்க எதிரே நானே அப்பாவோடு பேசறேன்.”

வந்தவன் சட்டெனப் பின்னிடைந்தான். அவனுடைய புதிய குளியல், புதிய ஆடை, புதிய க்ஷவரம், புதிதாய்த் துளிர் வெட்டின மீசை, மிடுக்கு, யாவதிலும் திடீர் அசடு வழிந்தது. திடீர் அசடு எப்பவுமே பரிதாபக் காக்ஷி.

“நீ நீங்க யார்?”

”அதான் சொன்னேனே, அவர் மகள். ஒரே மகள்.”

”உங்கள் வீட்டுக்காரருக்கு என்ன வேலை?”

“Car driver.”

திகைத்து நின்றான். அவனுக்கு வாய் அடைத்து விட்டது. சுற்றுமுற்றும் இருக்கும் நிலையைக் காட்டி அவன் கைகள் துழாவித் தவித்தன. அவனுக்குப் புரியவில்லை .

“ஓ இதுவா, பெரியவங்க பேச்சைக் கேக்காமே ஏமாந்த காதல் கல்யாணத்தின் அவலம். என்னால் அவமானம் தாங்காமல் அப்பா வடக்கே மாத்திண்டு போயிட்டார். ஆமா, ஏன் உங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன்? என் விவரங் களைத் தெரிஞ்சுக்க வந்திருக்கிங்களா , இல்லே நீங்க விசாரிக்க வந்ததுக்கும் இதுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?”

“இல்லேம்மா நான் வந்தது -”

“ஒரு நிமிஷம். பல் விளக்கிட்டு வந்துடறேன் -”

சாம்பலில் தான் தேய்த்தாள். ஆனால் அவள் தன்னைப் பரிதாபத்துக்குரியவளாய்க் காட்டிக் கொள்ளவில்லை. பற்களும் பளீரிடாமல் இல்லை. அவனுக்குத்தான் இருப்புக் கொள்ளவில்லை. அந்த கீக்கிடத்தில் உழல முயன்று தவித்தான்.

அவள் அடுப்பு மூலைக்குப் போனாள்.

“கொஞ்சம் காப்பி சாப்பிடறிங்களா? இருப்பதில் ஒரு பங்கு -”

“இல்லேம்மா, டூட்டி மேலே -”

”அப்படியா? ரொம்ப சரி.”

தன் காப்பியை அனுபவித்துக்கொண்டே மூலையின் இருளிலிருந்து வெளிப்பட்டாள்.

“எது எவ்வளவு மோசமானாலும், என் காப்பியை நான் தரம் குறைச்சுக்கறதில்லே. உசிர்த்தண்ணியாச்சே! சரி, நீங்க வந்த சமாச்சாரம்?”

”பக்கத்துத் தெருவிலே காலையிலிருந்து திமிலோகப்படுதே. உங்களுக்குத் தெரியாதா?”

“எனக்கு எப்படித் தெரியும்? நான்தான் தூங்கிட்டேனே!”

“நீங்க வேலை செய்யற இடத்துலே அந்தப் பெரியவர் இறந்துட்டாரம்மா-”

“என்னது?”

இவள் பிரமிப்பைச் சந்தேகிப்பதற்கில்லை . Geniune Shock..

”ஆமாம். கடைசியா அவரை உயிரோடு பார்த்தது நீங்க தான்னு நினைக்கிறேன். அதனாலே விசாரிச்சு உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.”

“இதில் என்னை விசாரிக்க என்ன இருக்கு? இறந்துட்டாரா? நம்பும் படியாயில்லையே?”

“அதனாலேதான் வந்திருக்கேன்.”

“மாரடைப்பாயிருக்கலாமா?”

“தோணல்லே. கட்டிலுக்குப் பக்கத்துலே சின்ன மேஜை மேல் தூக்க மாத்திரை பாட்டில். காலி. உங்கள் பேர் மட்டும் எழுதி ஒரு கவர் ஒட்டல்லே. உள்ளே ரூ.125. அத்தோடு தனியா ஒரு நூறு ரூபாய் ஒத்தை ரூவாக்கட்டு.”

“125 என் சம்பளம். இன்னிக்கு கடைசி தேதில்யோ ? 100 புரியல்லே. ஒருவேளை எனக்குப் போனஸ்ஸோ என்னவோ?” புன்னகைக்க முயன்றாள். உடனேயே, “ஆனால் இது சிரிக்கிற விஷயமில்லே. ஆளுக்கு வயசாச்சு. தானாய் சாவு நேர்ந்தால் தடுக்க முடியாது. ஆச்சர்யப் படறதுக்குமில்லை. ஆனால் தற்கொலை ஏன்?”

“உடலைப் பரிசோதனைக்கு அனுப்பிச்சால் தான் தெரியும். தற்கொலையா , கொலையான்னு . இவர் இங்க settle ஆகியே இன்னும் அஞ்சு மாஸம் முழுக்க ஆவல்லே. அதுக்குள்ளே இவருக்கு ஆகாதவங்க யாரு இருக்கப் போறாங்க. குழப்பம்தான். நீங்க அங்கேவிட்டு நேத்தி வந்திங்களே. எப்படியிருந்தார்? ஏதேனும் upset-? சத்தே விவரமா சொல்றீங்களா? இல்லை உங்களுக்கு objection இருக்குமா?”

“எனக்கென்ன objection? நடந்ததைச் சொல்லப் போறேன். சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் நடக்கல்லே. சாதத்தை வடிச்சுட்டு, ‘இன்னிக்குக் கொஞ்சம் சுருக்கப் போறேன். நாளைக்கு காலையிலே வந்து பத்துத் தேச்சுக்கறேன் குழந்தைக்கு ஜுரம்’னேன்.”

”’குழந்தைக்கு ஜுரம்னு ஏன் முன்னாலேயே சொல்லல்லே? அப்பவே போயிருக்கலாமில்லே’ன்னு இரைஞ்சார். ‘இல்லே வராமலே இருந்திருக்கலாம். அனேகமா ராத்ரி மோருஞ்சாதம் தானே! இல்லாட்டி bread இருக்கு சமாளிச்சுக்கறேன். இல்லே ஒரு ரா பட்டினி கிடந்தால் ஆகாதா? டாக்டரிடம் காண்பிச்சையா ? இன்னும் இல்லையா? உடனே போய்க் காண்பி. பணம் இல்லையா? இந்த அம்பது ரூபா வெச்சுக்கோ. இது கடனா? ஓசியான்னு பின்னாலே முடிவு பண்ணலாம். முன்னாலே போ’ உடனே வந்துட்டேன் நடந்தது இதுதான்.”

“அவருக்கு உற்றார் உறவினர் இருக்காங்களாா?”

“பிள்ளைங்க இருக்கறதா ஒருதடவை பேச்சுவாக்கிலே சொன்னார். ஆனால் எத்தனை பேர், எங்கேயிருக்காங்கன்னு சொல்லல்லே.”

“தபால் கிபால்?”

“அப்படி வரமாதிரியும் தெரியல்லே. ஆனால் இதுக்கு என் வார்த்தை கெட்டியில்லை. இங்கே நான் தினம் வேலை செய்யற நேரம் காலை 8 to 10. சாயந்திரம் 7 to 8. இடையில் நடப்பது எனக்குத் தெரியாது.”

ஆழ்ந்த யோசனையில் அவன் வாய் முறுக்கிக் கொண்டது. “எனக்கு இப்போ தோணினது இவ்வளவுதான். நான் வரேன். பின்னாலே உங்களுக்கு ஏதாச்சும் தோணித் துன்னா சொல்லியனுப்புங்க. No. 285”

அவன் சென்றபின் கதவைத் தாளிட்டுக்கொண்டு சிந்தனையில் உள்ளே நடந்தாள்.

நேற்று நடந்தது அதுதானா? தன்னை மாய்த்துக் கொள்ளும்படி என்ன ஆயிடுத்து? ஏதோ குற்ற உணர்வு அவளை உறுத்திற்று. இப்போ மட்டுமல்ல. இனி அப்பப்போ நினைப்பு வரும்போதெல்லாம் உறுத்திக்கொண்டிருக்கும். ஐயோ பாவம்! நல்ல மனுஷன்.

ஆகமிச்சம். நாலு மாதத்தோடு பிழைப்பு போச்சா?


ஒருநாள் பிற்பகல்.

அவனுடைய புதிய சட்டை நிஜாரில் பையன் கையைப் பிடித்துக்கொண்டு முதன் முதலாக அவர் எதிரே நின்ற போது, அவர் அவளைக் கவனிக்கவில்லை. சாய்வு நாற்காலி யில் அமர்ந்து என்னவோ எழுதுவதில் முழுக் கவனமும் முனைந்திருந்தது.

சற்று பொறுத்து, “மாமா!” வென்று மெதுவாய் அவள் அழைத்ததும், திடுக்கிட்டு நிமிர்ந்தவர், சற்றுநேரம் தன்னையே இழந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்களில் ஒரு திகைப்பு.

”உன் பேர் என்ன அம்மா?”

”பத்மாவதி. பத்மா.”

“என்ன வேண்டும்?”

“சமையலுக்கு ஆள் தேவைப்படுவதாகச் சொல்லக் கேட்டு வந்தேன்.”

“ஓ!” அப்பத்தான் அவருக்கு நினைப்பு வந்தது. பேனாவை மூடிப் பக்கத்தில் ஜன்னல் விளிம்பில் வைத்தார்.

”நன்னா சமைப்பையா?”

“அப்படித் தைரியமாச் சொல்லிக்க முடியாது மாமா! ஏதோ ஒரு குழம்பு, ரஸம், கறி அத்தோடு சரி. இதில் ஒண்ணு சரியா வாய்க்கும். நிச்சயமா சாதத்தைக் குழைச்சுடுவேன். வெரைட்டி items தெரியாது. டிபன் கழுதை கெட்டால் குட்டிச்சுவர். ரவா உப்புமாவு, நாலுபேர் விருந்தாளி வந்துட்டா, சேர்த்து சமைக்க உதறல்தான். இந்த சரக்கை வெச்சுண்டு உங்களிடம் வேலை கேட்க எந்த தைரியத்தில் வந்தேன்னு எனக்கே புரியல்லே!”

அவள் கைகொட்டிச் சிரிக்கையில் ஒரு குழந்தைத் தனம் தெரிந்தது.

முறுவலித்தார். “குழைச்ச சாதம்தான் எனக்கு ஒத்துக் கும். ரஸம் must. மற்றபடி எனக்கு அவசியமில்லை . டிபன் -” உதட்டைப் பிதுக்கினார். “டிபன் காரம் ஆசை எல்லாம் தாண்டிப் போயாச்சு. வயிறு நுட்பமாயிடுத்து. வாரம் ஒரு வேளையேனும் இட்டிலி இருந்தால் தேவலை. ஓட்டலில் வாங்கிக்க வேண்டியதுதான்.”

“முயற்சி பண்ணறேன்.”

”யாரம்மா என்னைப் பார்க்க வரப்போறா? யாரும் வேண்டாம்னுதானே விலகி வந்திருக்கேன். சமையலுக்கு லாயக்கில்லைன்னு நீயே சொல்லிக்கறாய். ஆனால் இந்தப் பத்து நாளில் தேடினதில் உன்னை விட்டால் வேறு கதியில்லை போலிருக்கு.”

“Sorry மாமா. சமையல் நான் கத்துக்கல்லே. பொது வாகவே எனக்கு அதில் interest இல்லே. நான் சமையல்காரி யில்லை. வீட்டுக்கு ஒரே பெண். ஒரே குழந்தை. சின்ன வயசிலே அம்மா போயிட்டா. முழுக்க முழுக்க அப்பா செல்லம். பாதி ஆண்பிள்ளையாகவே வளந்துட்டேன். வசதியா வாழ்ந்துட்டு இப்போ சறுக்கினதும் அவஸ்தைப் படறேன். குடும்பம் நடத்தப் போதல்லே.”

“Ok don’t worry, we will manage. எனக்கு வேளை தவறி சாப்பாடு ஆகாது. Ulcer. சரியா பத்து மணிக்கு ஒக்காந்துடு வேன். இரவு 71 அப்புறம் உன் பேர் என்ன -Yes. பத்மா! கடை கண்ணி, மார்க்கெட் வெளிவேலை எல்லாம் நீதான் பார்த்துக்கணும். நான் நடைக்கு லாயக்கில்லை. கால் weak ஆயிடுத்து. இன்னும் ஆயிண்டே இருக்கு. இது ஏதோ தனிக் கோளாறு. But no more doctoring. தீர்மானிச்சுட்டேன். சரி போகட்டும். சமையலில் புளி காரம் nil. பயத்தம் பருப்பு கூடச்சேர். தக்காளி மறக்காதே. வாழையிலை வாங்கு, the only luxury I allow myself. நீ உன் சமையலைத் தனியாக சமைச்சுக்கோ. உனக்கு என் சமையலைச் சாப்பிட வழங்காது. இந்தா பையனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடு – ஏண்டா நீ அப்பா கோண்டா, அம்மா கோண்டா? Okay that is all.”

இப்படித்தான் ஆரம்பித்தது அவள் உத்யோகம்.

அவள் வருவதற்குள் ஸ்னானம் பண்ணி கட்டுக் கட்டாய் விபூதியிட்டுக் கொண்டு சாய்வு நாற்காலியில் வீற் றிருப்பார். அவள் காப்பி காத்திருக்கும். கலந்து சுடவைத்துக் கொள்ள வேண்டும். A 1. வந்தவளை ‘வா’ வென்று ஒரு வார்த்தை. ஒரு புன்னகை. அவள் வந்ததை அடையாளம் கண்டு கொண்டதற்கு ஒரு தலையசைப்பு. சைகை ஊஹூம்.

பளீரென வெள்ளை வேட்டி. முழங்கை பனியன். தானே தோய்த்துக் கொள்வார் போல இருக்கு. அதிகப்படி சம்பளத்துக்கு அவளிடம் தோய்க்கப் போட்டால், முதலில், மாட்டாள். தோய்த்தாலும் இந்த வெளுப்பு வராது.

பொதுவாகவே பெரிய உத்யோகம் பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் – அவள் அப்பாவும் அவர் களில் ஒருவர்தான் – நடை உடை பாவனைகளில் ஒரு ஒழுங்குபாடும் அணுகாத்தன்மையும் ஒரு அம்சமாகக் கவனிச்சிருக்கேன். செயற்கையாக ஆரம்பித்து அதுவே பழக்கத்தில் படிந்துவிடும் போலும்.

ஒல்லியான உருவத்தில் விறைப்பாய் நிமிர்ந்த முதுகு…. முன் மண்டையும் உச்சியும் வழுக்கையில் பளபளக்க, பின்னால் பிடரி வரையிலும் பக்கவாட்டிலும் தும்பை அடர்ந்து ஒழுங்காய்ச் சீவப் பெற்று அதுவே முகத்துக்கு ஒரு தனி அழகையும் கம்பீரத்தையும் தந்தது. இப்பவே இத்தனைச் செவக்க மேனி உற்ற வயதில் எப்படியிருந் திருக்கும்! வயது ஏற ஏற சிலருக்குத்தான் இந்த உள்தன்மையின் ஒளி.

இந்தத் தோற்றத்தை ஒற்றினாற் போல் அவள் கணவனைப்பற்றி நினைப்பு எழாமல் இருக்குமா? நினைத் தாலே கைக் காரியம் தடைப்பட்டு, கை அந்தரத்தில் நின்றது. மாதத்தில் இருபது நாள் camp. மிச்சம் பத்து நாட்கள் சிதறுண்டு இருந்தாலும், மனிதன் வீட்டில் இருப்பதைவிட வெளியில் இருப்பதே மேல். இனி என்றுமே அவனுடன் புழக்கத்துக்குப் பழக்கப்பட முடியாது. ஆனால் நானாக என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது தானே ! கண்ணை ஒரேயடியாக மறைச்சு விட்டதால் விதி யென்று ஒன்று இருக்கிறது என்று நம்பத்தான் வேண்டி யிருக்கிறது. நடப்பது நடந்தே தீரும். வாழ்க்கையின் போக்கில் ஒரு தவிர்க்க முடியாத தர்க்கரீதி இயங்குகிறது. அதன் காரண காரியங்களை இங்கேயே இப்பவே தேடினால் கிடைப்பதில்லை. எங்கோ, எப்பவோ எதனோபோ முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே முற்பிறவி உண்டென்றும் நம்பும் படியுமிருக்கிறது.

கிட்டப் பழகி சாயம் வெளுத்துப் போயும் ஒரு குழந்தை யையும் பெற்றுவிட்டேன். இவன் வாய்க்காவிட்டால் என் திசை எப்படியோ திரும்பியிருக்கும்.

தலையை உதறிக் கொண்டு அடுப்பில் பண்டத் தைக் கிளறினாள். அடிப்பிடிச்சுப் போச்சோ? புதுசாப் பண்ணனுமோ?

மனுஷன் என்னத்தைச் சாப்பிடறான்? இந்தக் கொறிப் புக்கு ஒரு சமையல், ஒரு பரிமாறல், குடித்தனம் நடத்துதல் என்று வேறு! ஒரு நாளைப் பார்த்தாற்போல், பொறிச்ச குழம்பு, தெளிவு ரஸம், மசியல், எரிச்சலா வரது. அதே புடலை, சௌ சௌ , கீரையை விட்டால் வேறு கதி யில்லையா? கத்திரிக்காய்கூட மத்திமம்தான். கிழங்கு பக்கம் தலை வெச்சுப் படுக்காதே. மாற்றிக்கூட சமைக்க முடியாது. அவர் அனுமதித்து விட்டாலும் தனக்கு ஒரு சமையல் என்று இரட்டைச் சமையலுக்கு உடம்பு வணங்கவில்லை. வீட்டுக்குப் போய் அவனுக்கு வேறே பொங்கியாகணும்.

ஒருநாள் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கையில் கேட்டுவிட்டாள். “மாமா, உங்களுக்கு மனுஷாள் இல்லையா பிள்ளைகள், பெண்கள்?”

“ஏன் இல்லாமல்?”

“அப்ப இந்த வயசிலே, இந்த உடம்பிலே என் சமையலை நம்பிண்டு நீங்கள் ஏன் -”

“ஏன் உனக்கு அலுத்துப் போச்சா?”

”ஐயோ அதுக்கில்லே மாமா! எனக்குப் பிழைப்பைத் தந்திண்டிருக்கேள். அதை நானாக் கெடுத்துப்பேனா? உங்களுடைய நலத்துக்குத்தான் கேட்டேன்.”

“இருக்கா அவாளவாள் இடத்துலே சௌக்யமா -” உடனேயே தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் அவசரத்துடன், ”ஆனால் நான் அவர்களை நம்பியில்லை. என் பென்ஷனே எனக்கு தலைக்கு மேல் வெள்ளம் -”

“மா-மி?” நாக்கு நுனிக்கு வந்துவிட்ட கேள்வியை அப்படியே கடித்து விழுங்கினாள். ‘அந்தக் கேள்வி உன் பேச்சுப் பிரதேசமல்ல.’ உள்ளுர்ணவு எச்சரித்தது.

அவர் முக இறுக்கமும், உள் சுருங்கலும் மேல் பேச்சுக்கு வழியில்லாமல் தடுத்துவிட்டன.

விழுங்கிய கேள்வி தொண்டையில் சிக்கிக்கொண்டு அங்கேயே நூல் நூற்றது.

மாமி பிள்ளைகளுடன் கட்சி சேர்ந்து விட்டாளா? என்ன அக்ரமம்! இந்த வயஸில் மாமியும் மாமாவும் ஒருவருக்கொருவர் துணையாக சேர்ந்து இருக்க வேண்டாமா? நான் பேசுவது காதல் இல்லை. கட்டை சரிஞ்சு போனபின் காதல் ஏது? நான் நினைப்பது விசுவாசம். ஆனால் என்னை வெச்சுண்டு, மத்தவாளுக்கு உதாரணம் காட்ட எனக்கென்ன வாயிருக்கு!

இல்லை அவசியமில்லாத கவலையைப் பட்டிண்டிருக் கேனா? மாமி மாமாவை முந்திண்டுட்டாளா? அவளுக்கு மாத்திரம் வயசாகியிருக்காதா ? மடியில் மஞ்சளும் தேங்காயு மான்னு ஏதோ வசனம் பேசறாளே அப்படியும் இவர் பாடு கஷ்டம்தான்.

அம்மா போனப்போ எனக்கு விவரம் தெரிஞ்ச வயசானாலும் என்னை வளர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார். இப்போ தெரியறது. அவரும் மறு கல்யாணம் பண்ணிக்கல்லே. வயசு கொஞ்சம் தாண்டிப் போச்சுன்னா லும் பெண் கொடுக்க வேண்டிய பேர் இருந்தாலும், அப்பா வுக்கு இஷ்டமில்லையோ என்னவோ? என்னதான் I.P.S. ஆனாலும் அடிப்படையில் போலீஸ்காரன் தானே! போலீஸ் காரனை யாருக்கு மனசாரப் பிடிக்கறது? அதனாலும் அப்பா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அப்பா பண்ணினது தப்போ? இப்போ சந்தேகம் தட்டறது. வீட்டிலேயே பொம்மனாட்டியின் ஹிதமான வாடை போயிடுத்து. தனக்கும் கெடுத்துண்டு எனக்கும் நல்லது பண்ணல்லே. சித்தி ஒருத்தி வந்திருந்தால். எனக்கு ஒரு அத்தாயிருந் திருப்பாள். நான் பெண் என்று அப்பப்போ எனக்கு ஞாபகப்படுத்தியிருப்பாள். அதற்குப் பதிலா தறிகெட்டுப் போயிட்டேன். இப்போ நினைச்சு என்ன பயன்? எது எப்படி யிருந்தால் என்ன, இவரும் நானும் ஏதோ விதத்தில் ஒரே ஓடம் . துடுப்பில்லாத ஓடம்.

அப்புறம் அதென்ன இருந்த இடத்தை விட்டு அசை யாமல், ஓயாமல் படிப்போ அல்லது எழுத்தோ? இரண்டை யும் விட்டால் யோசனை? இப்படியே மனிதன் காலத்தைத் தள்ள முடியுமோ? ஆனால் அவர் பொழுது அப்படித்தான் போயிற்று.

ஒரு சமயம் அல்ஸர் காரணம் உடலில் ஈரப்பசை வற்றிப்போய் (dehydration) ஓரிரவு ஆஸ்பத்திரியில் இருந்து drips ஏற்றிக் கொண்டு வந்தார். Ulcer என்றால் இந்த மாதிரிப் பிரச்னைகூட இருக்கா? மனம் பரிதவித்தது. தனக்கு இந்த அவசர நிலை ஏற்பட்டதை அவர் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவளாகத்தான் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். எரிச்சலாக வந்தது. இட்டிலியும் flaskஇல் காப்பியும் கொண்டு வந்திருக்க மாட்டேனா? பக்கத்தில் இருந்திருக்க மாட்டேனா? நானாகவே போயிருக் கலாம். ஏதோ சங்கோஜம் தடுத்தது. ‘ஏன் வந்தாய்?’ என்று கேட்டுவிட்டால்? தன் சுய கௌரவத்தை இம்மாதிரி யெல்லாம் காப்பாற்றுபவர்கள் நம்ப முடியாதவர்கள். உண்மையில் மனிதத் தன்மையில்லாதவர்கள். அதைவிட ஏதோ உயர்ந்த நிலையை எட்ட ஆசைப்படுகிறார்கள். தனக்கும் பிரயோஜனமில்லை மற்றவர்க்கும் இதமில்லை.

அப்படியும் பரிவு சுரந்தது. பெண் ஜென்மத்துக்கே இயல்பான தாய்மை.


ஒருநாள் சமைக்க வந்தபின் (அபூர்வமாய்) அவர் ஸ்னானத்துக்குப் போயிருந்த சமயத்தில் ஜன்னல் விளிம்பில் அவர் வைத்துவிட்டுப் போயிருந்த அட்டையை (pad) எடுத்துப் பார்த்தாள். என்னதான் எழுதறார் ? தான் செய்யும் தவறு அவளுக்குப் புரியவில்லையா? ஆயினும் ஆவலை அடக்க முடியவில்லை. நேரும் போதெல்லாம் நேரங்களைத் திருடிப் படித்தாள் – முத்துப் போன்ற அவ்வெழுத்துக்களே ஈர்த்த ன.

தனித் தனித் தாள்கள்.

கடிதங்களாக அமையவில்லை. நாவலோ கதையோ கட்டுரையுமில்லை.

ஒன்றுக்கொன்று கோர்வையற்று, சமயங்களில் முரணாய், அந்தந்த சமயத்துக்குத் தோன்றியபடி எண்ணங் கள், அவைகளை முழுக்கப் புரிந்து கொண்டாள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஏதோ விதத்தில் அவை நெகிழ்த்தின. தனியாக அவைகளில் கவிதையில்லை.

அவர் வரும் அரவத்தை மோப்பமாகவே உணர்ந்து padஐத் திருப்பி வைத்துவிட்டு சமையலறைக்கு ஓடிப் போய் காரியத்தை ஏற்படுத்திக் கொண்டு, தான் படித்ததன் புரியாத சுவை அவளை ஆட்கொள்கையில் திக்குத் தெரியாத காட்டினிலே எனும் சொற்றொடர், மார்க்குலையில் பிறந்து அவளே அதன் கவிதை ஆகும் தருணம் அவளைத் தன்னுள் இழுத்துக் கொண்டதும் இன்ப துக்கம் தொண்டையை அடைத்தது.

இவரும் நானும் ஒரே ஓடம் . துடுப்பில்லாத ஓடம்.

இல்லாவிட்டால் என்ன?

எல்லாமே தனிமை ஆகாது. சமுதாயத்துடன் சண்டை போட்டுக் கொண்டேனும் அதன் நடுவே வாழ்வது தனிமை அல்ல. மௌனம் தனிமை அல்ல. மௌனத்தில் உன்னோடு வாழ்கிறாய்.

To be not wanted. அப்படியும் நம்மைச் சகித்துக் கொண்டு போகிறார்கள் என்பதை உணர்ந்தும் ஏதும் செய்ய இயலாமல் இருக் கிறோமே அதுதான் உண்மையான தனிமை. கூடவே நாளுக்கு நாள் அடுத்து நிமிடத்துக்கு நிமிடம் ஏறுகிறதே வயதின் சுமை, அது தனிமை.

இது ஒரு தவிர்க்க முடியாத நிலைமையானா லும் அதனுடன் சமாதானம் ஆக முடிய வில்லை!

சமுதாயம் தன்னைப் பத்ரப்படுத்திக் கொள்ள நட்ட வேலி உறவு. இஷ்டப்பட்ட உறவு, தாக்ஷண்ய உறவு, கட்டாய உறவு என உறவுகளில் பல விதங்கள் சாயங்கள் உள. சாயல்கள் இன்னும் வந்துகொண்டேயிருக் கின்றன. கட்டாய உறவுதான் கடமை. உனக்கு இஷ்டமிருந்தாலும் இல்லாவிடினும் செயல்பட்டாகணும். உறவின் நாமத்தில் சொந்தங்கள் கொண்டாடி ஆகின்றன. ஆனால் உண்மையில் யார் யாருக்கு எது யாருக்குச் சொந்தம்? ஒருவரை ஒருவர் உபயோகிப்பதற்கும் உபயோகப்படுவதற்கும் உண்டாக்கிய பொய்கள்தான் சொந்தங்கள்.

உறவுகள். சமயத்துக்கேற்றவாறு இவை பெயர்கள் எடுக்கும்.

நான் பெற்றுவிட்டதனால் என் பேறுகள் எனக்குச் சொந்தமன்று. அவரவர் தம் விதி யைத் தனித்தனி நூற்று அதற்கு வாழ்க்கை யென்று பெயர் கொடுத்து அதன்படி அழிய வந்திருக்கிறோம். இந்த உண்மைக்கு கோபம் கொண்டு பயனில்லை. அந்தக் கோபத்துக்கு அர்த்தமில்லை. ஏமாந்தால் அது உன் குற்றமே.

The world belongs to Youth and youth is only as long as it lasts.

நான் பயனுள்ள வரை வேணும். சக்கை பிழிந்ததும் எறியப்படாமல், சக்கை உலர்ந்து உதிர்ந்து போகும் வரை ஸஹித்துக் கொள் ளப் படுகிறேன். இதைவிடச் சிறையும் கொடுமையும் ஏது?

வயல்காடில் இருளில் பரப்பின் மேல் நடந்து செல்கையில், அதோ தூர விளக்கு வெளிச்சம் ‘மினுக் மினுக்’. இதோ கிட்ட தான் என எதிர்வருபவனும் தைரியம் சொல்லிக்கொண்டே போகிறான். ஆனால் நடக்க நடக்க எட்ட எட்ட வெளிச்சம் சிரிக் கிறது. நான் இருக்கும் இடமும் தெரியாமல், போகும் இடமும் தெரியாமல் இதற்குத் தான் வந்தேனா ஏ மனோ நீயேனும் சொல்லேண்டி!

எத்தனை வயதானாலும் மரணம் இப்பவும் பயமாய்த்தானிருக்கிறது. வயதின் சுமை இருக்கவும் அலுப்பாயிருக்கிறது. எந்தப் பிடிப்புமில்லை.

பிறக்கையில் எப்படி இங்கு வந்தேன் – அறிய முடியவில்லை . அப்போது நான் ஒரு உயிர்ப் பொறி. நினைக்க மனம் இல்லை. மாற்றி வீறிடலும், உணவும், தூக்கமும் என இந்த சுழற்சியில் என்று மனம் மலர்ந்ததோ? இன்று வரை இது மீளா வியப்புத்தான். சாவு அத்தனை அப்பாவித்தனமாயிருக்குமா? இப்போது எல்லாம் மனம் தவிர வேறு இல்லை . என் மனம் முற்றியிருக்கிறது. இதோ போகிறேன். போய்க் கொண்டிருக் கிறேன். போய்விட்டேன். எங்கு போனேன்? அதுதான் கேள்வி.

ஸ்மரணை தப்பித் தன் கடைசியிரக்கச் செயலாய் ஆட்கொள்ளுமா?

உயிர்நிலைக்கப்பால் என்னை அணைக்க என்ன காத்துக்கொண்டிருக்கிறது?

சாவுக்கும் உயிருக்கும் இடைவிளிம்பில் நிற்கும் வேளை மிக்க நெருங்கிவிட்டது. இனி இப்பவோ எப்பவோ? கடைசி மூச்சுக்குத் திண்டாடும் வேளை அந்த ஒரே மூச்சு அதுவே தான் எனக்கு எல்லாம். அச்சமயம் என் கடைசி நினைவாக அதில் நர்த்தனமாட வருவாயா? உன்னில் என் கடைசி மூச்சை இழந்து மூலப் பிரக்ஞையில் புகுந்து விடுவேனோ? சொல்லுடி மனோ… நம்மிடை யில் சொல் ஏது? நீ உணர்த்துவதுதான் பாஷை.

இல்லை, பூர்வ ஜென்மாவின் தொடர்பு என்பது இலாமல், கற்பூரம், மெழுகுவர்த்தி எரிவதுபோல, என்னையே நான் தின்று கொண்டு அத்துடன் அவிந்துவிடு கிறேனோ ? Every begining is fresh, A new life and one by itself unto the last breath? இந்த logicபடி மனோ நீ இருக்கிறாயா அல்ல அறவேயில்லையா?

இந்தத் தர்க்க ரீதியில், இதுகாறும் இருக்கும் கோவில், குளம், அதனதன் ஐதீகம், மஹாத் மியம் பிராரத்த கர்மா. வினை விதித்தவன் 09W YJÚLIGT, an eye for an eye, a tooth for a tooth. மறுபிறவி. இந்த நம்பிக்கைகள், கோட்பாடுகள், Iama vengeful God (Jehova தன்னைப்பற்றி சொல்லிக் கொள்வது) இவை; இவை போன்ற மற்ற விஷயங்களின் உண்மை நிலையென்ன? இதிகாச புராணங் களை மானுடத்தின் சரித்திரத்தில் சேர்த்து விட்டாலும் – இல்லை அவையும் உள்ளடக் கியே – இவையெல்லாம் மனிதன் மனிதனை ஆள்வதற்கு, தொன்றுதொட்டு வளர்த்த பயமுறுத்தல் விதிகளா? Man rules man by fear. அதற்குக் காலங்காலமாய் வளர்ந்து இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கும் விரிவான கோலம் ! ஆண்டவனே நீ ஒன்றிருந்தால் என்னிடமிருந்தே என்னைக் காப்பாற்று.

எனக்குத் திகைப்பூட்டுவது யாதெனில் மனோ இத்தனை நாள் கழித்து இப்போது எங்கே முளைத்தாய் ? சாகும் வேளை நெருங்குகையில் பழைய நினைவுகள் பவனி வரும் என்று சொல்வார்கள். அதைச் சேர்ந்ததா உன் தோற்றம்?

நாம் பார்த்துக்கொண்ட கடுகளவு நேரமும் ஒரு தடவை – ஒரே தடவை; முதலும் கடைசி யும் அதுவே. ஊரிலிருந்து ரயிலில் வந்து இறங்கி பெண் வீட்டாரால் எற்பாடாகி யிருந்த Vanஇல் விடிகாலையின் பொன் வெய்யிலில் நாங்கள் என் கலியாணத்துக்கு மண்டபத்தை நோக்கி விரைந்து கொண் டிருக்கையில் – அன்றிரவு ஜான வாஸம் – நீ உன் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள் – பெரிய கோலம் அதன் நடுவில் நீ – தற்செயலாக நிமிர்கையில் நம் கண்கள் சந்தித்தன. உடனேயே கார் தெருமுனை திரும்பிவிட்டது.

நாம் பார்த்துக் கொண்டு, நம் விழிகள் கேள்வியில் பேசிக்கொண்டன. அத்தோடு சரி. அப்புறம் நான் இன்னமும் உன்னைப் பார்க்கப் போகிறேன்.

நான் கலியாண மாப்பிள்ளை என்று உனக்குத் தெரிந்திருக்கும். நான் உன்னைக் கலியாணத்தில் பார்க்கா விட்டாலும் நீ உள்ளூர்தானே!

பிறகு உன்னை நினைக்க நேரமில்லை. ப்ர மேயமுமில்லை. எனக்குத்தான் பாரு காத் திருக்கிறாளே. அவளைக் கரம் பிடிக்கத் தானே அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கேன்!

எனக்கு வாய்த்தவளைப் பற்றி சும்மா சொல்லக்கூடாது. அவள் தன்மையில் இன்றைய மதிப்பீட்டில் 60% தேறி விடுவாள். படு சுத்தம். தினம் இரண்டு குளியல். உடை மாற்றலும் அவ்விதமே. சமையல் வெகு நேர்த்தி. அஞ்சு பெற்றும் கட்டுத் தளர வில்லை. கூந்தல் நரையில்லை. படா சுறு சுறுப்பு. நகை நட்டுமேல் அதிக ஆசை யென்று சொல்ல முடியாது. T.V., புதுப்புது ரவிக்கை இவை இரண்டும் அலுக்கவே அலுக்காது. வம்பு தும்புக்குப் போகமாட் டாள். மனைவி என்றால் இதற்குமேல் என்ன வேண்டும்? இப்போது கொஞ்சம் எதிர்த்துப் பேசுகிறாள். பொதுவாகவே அதிகம் ஒட்ட மாட்டாள். ‘இன்னிக்கு செத்தால் நாளைக்கு பத்து’ இது அவள் வார்த்தைகள் தான்; கொள்கையும் கூட. நடந்தது நடந்தாச்சு – ஊம் அடுத்தது என்ன? வாழ்க்கையை மேல் ஓட்ட அப்படியும் ஒரு ஆள் வேண்டித்தான் இருக்கிறது.

அன்று நான் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருக்கிறேன். எதிரே பீரோக் கண்ணாடியில் புது ரவிக்கையில் தன் தோளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நாளன்னிக்கு ஆவணி அவிட்டம் போளி தட்டியாகணும். எட்டாநாள் கோகுலாஷ்டமி உங்களுக்காகப் பண்டிகையைக் குறைக்க முடியுமா? ஒரு தடவை தட்டினால் மூணு தடவை தட்டும். நான் எதைப்பற்றியும் ஒண்ணுமே பேசவில்லை. சரி சரி, பாரு வைப் பற்றி இத்தோடு விட்டுவிடுவோம். மனோ -1- கற்பு எண். ஒரு தடவை ஒரே தடவை முதல் தடவை. முதலும் கடைசியும் அதுவே. அதில் ஏதோ தத்துவம், மகிமை இருக்கத்தான் இருக்கிறது. நாம் இனி எங்கே சந்திக்கப் போகிறோம்? சந்திக்கவும் வேண் பாம். ஏன் மனோ உனக்கு மட்டும் வயசாகி யிருக்காதா? கலியாணம், கார்த்தி, குழந்தை குட்டி, பேரன், பேத்தி என்று பெருகி உன் தோற்றமும் மாறியிருக்க மாட்டாயா? அவர்கள் நடுவே சீர்குலைகிறாயோ சீர் பெருகுகிறாயோ ? இல்லை உன் வேளை வந்து உன்னை எடுத்துக்கொண்டு போய் விட்டதோ?

மனோ, நம் சந்திப்பு மறுபடி இலாத அதன் ஒன்றினால் ஒரு பவித்ரத்தைப் பெற்று விட்டது. எல்லாம் நான் நினைத்துக் கொள் வதுதான். உனக்கு அப்படித் தோன்று கிறதோ இல்லையோ? உனக்கும் என் நினைப்பு இருக்கிறது என்று என்ன நிச்சயம், ஆதாரம், அவசியம்?

ஆனால் நீ அத்துடன் அழிந்துவிடவில்லை . அதுதான் அதிசயம். நாள் ஏற ஏற வருடக் கணக்கில் மலையாய் குவிந்து விட்டிருக் கும் நினைவுச் சருகுகளினடியில் பொறி புதைந்து’ புகைச்சல்கூடத் தெரியாமல் எரிந்து கொண்டிருந்திருக்கிறாய். தீசலின் வாசனை கூடத் தெரியவில்லை . என் சருகுகள் அத்தனை மெத்தா மனோ ? நீதான் அதுகளைப் படிப்படியாகத் தின்று கொண்டிருந்திருக்கிறாய். நான்தான் சுரணை கெட்டவன். சம்சாரத்தில் மாட்டிக் கொண் பால் அப்படித்தான் ஆகிவிடுகிறோம்.

பின்பு ஒருநாள் எதிர்பாரா சமயத்தில் –

ஏதோ வியாஜ்யத்தில் பெட்டியில் பழங் குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்கையில் என் திருமணப் பத்திரிகை – பாரு இம்மாதிரி பழைய தஸ்தாவேஜிகளைச் சேகரிப்பதில் கெட்டிக்காரி. காணாமற்போன பொருள் களை, பேப்பர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதில் அவளுக்குத் தனி ராசி உண்டு. ‘இதோ கண்ணெதிரே இருந் துண்டே ….’ என்று முகத்துக்கெதிரே ஆட்டுகையில் எனக்கு அசடு வழியும்.

திருமணப்பத்திரிகை தட்டியதும் அதை யொட்டினாற் போன்ற நினைவும் பதிவு களும் எழுந்ததும் நெஞ்சில் குபீர், கோலத் தின் நடுவே நின்றபடி நீ – முகத்தில் சிரிப்பு, உள்ளே மூர்க்கம். விழியெனும் வேல் கொண்டு முதுகில் குத்தி விட்டாயேடி! அப்போதிலிருந்து நெஞ்சம் தஹி தஹி தஹி…

மனோ-இதுகூட நான் எனக்காக உனக்குச் சூட்டிய பேர்தான். மனோன்மணி, மனோபாலா, மனோ ரஞ்சிதா – எது வேணுமானாலும் இருந்துகொள்.

மனோ , இப்போது உன்னால் ஒன்று புரிகிறது. மனித வாழ்வு முற்றிலும் வியர்த்த மில்லை. அழகிய எண்ணங்களை எண்ணி இங்கு விட்டுச்செல்ல வந்திருக்கிறோம். அவை பூத்ததற்கு ஏற்றவாறு மணங்கமழ்ந்து கொண்டிருக்கும், பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டாலும் மணம் மட்டும் கொஞ்ச காலம் தங்கி நீடிக்கும். அழகிய எண்ணங்கள் வாழ்வின் நிர்மால்யம் இதற்கு நீ லாயக் கில்லையானால் உன் நரகத்தில் வீழ்ந்து நாசமாப்போ. மனோ, இதுதானே உன் தீர்ப்பு ?

மனோ , நீ அழகா இல்லையா என்று எனக்குத் தெரிய அன்று நேரமில்லே. ஆனால் நீ அழகிய எண்ணம், அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லாய்க் கட்டடம் எழுப்புகிறேன்.

மனோ, எனக்கு உன்மேல் நிச்சயமாய்க் காதல் இல்லை , அறி….ஆனால் அன்று கோலத்தின் நடுவே நின்றபடி அந்த poseஇல், நீ உன் யௌவ்வனத்தில் என் நினைவில் அப்படியே உறைந்து போனாய். நான் நாளுக்கு நாள் வயதாகி உன் நிர் மாலியமாகிக் கொண்டிருக்கிறேன். இது என்ன நியாயம். என்ன பயன். உனக்குத் தான் வெளிச்சம். உனக்குச் சித்து விளையாட்டு, எனக்குச் சித்ரவதை. The world belongs to Youth.

இன்னமும் என்னென்னவோ எவ்வளவோ எழுதி யிருந்தார். ஆனால் அவைகளை விழுங்க நேரமுமில்லை. சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. ஆனால் தன்னால் படிக்க முடிந்ததைப் படித்தவரை நினைவிலேயே மாற்றி மாற்றி அடுக்கி ஒருவாறு தனக்குத் தோன்றியபடி கோர்வைப் படுத்துவதே ஒரு adventure ஆக இருந்தது. அப்படிச் செய்து அது கொண்டு வந்து விட்ட முடிவுக்கு வந்து அடங்கியதும் பூமியின் ரேகை ஒன்றைத் துருவத்துக்குத் துருவம் முழுக்கப் பிரயாணம் வந்தாற்போல் ஒரு அமைதி கண்டாள். இப்போது அவள் கணவன் மீது கூடக் கசப்பு தெரிய வில்லை . அவரவர் வந்த வழி இதுதான் பூமியின் இசை.

இந்த நிச்சயம் நீடிக்காது. தெரியும். ஆனால் கிடைத்தது கிடைத்தவரை. இதுவும் வாழ்க்கைத் தத்துவத்தைச் சேர்ந்தது தான்.


அடுத்த நாள் வேலைக்குப் போனபோது அவர் எதிரே கணிசமாக ஒரு காயிதக் குவியல் இருந்தது. கூடவே நெருப்புச் சட்டி. ஒவ்வொரு தாளாய்த் தீக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொசுங்கல் நெடியில் அவளுக்குக் கமிறிற்று.

”என்ன இது. உங்கள் எழுத்துப்போல் இருக்கே!”

அவர் பதில் பேசவில்லை . அவர் முகம் அழுது தெளிந்தாற்போல், மாரிக்காலத்து மதியெனச் சோபை இழந்து …..

“ஏன் எரிக்கிறீர்கள்?”

”ஆம், எதனால்தான் என்ன பயன்?”

அவளுக்குப் பகீரென்றது.

“அடப்பாவி, நானாவது வெச்சிண்டிருந்திருப்பேனே!” வார்த்தைகள் கொட்டிவிட்டன. உடனேயே பதறிப்போய், “மன்னிச்சுடுங்கோ, என்னவோ உளறிட்டேன்.”

அவர் அதற்கும் பதில் பேசவில்லை . தன் காரியத்தில் முனைந்திருந்தார்.

அன்று பிற்பகல் சமையலறையில் பற்றுத் தேய்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ மெட்டை முனகியவண்ணம் மனம் குதூகலத்திலிருந்தது.

அழகிய எண்ணங்கள் வாழ்வின் நிர்மால்யம். வதங்க வதங்க மணம் கூடுதல் – மார்புள் பொங்கலின் எழுச்சி யில், மாமாவை ‘அப்பா’ என்று அழைத்துப் பார்த்துக் கொள்ளணும் போல் ஆவலாய், ஆசையாய், சந்தோஷமா யிருந்தது.

மோப்பம் போன்ற ஒரு விலங்கு அறிவு எச்சரிக்கை செய்து அவளைக் கலைத்தது. சட்டெனத் திரும்பினாள்.

வாசற்படியில் நின்றார். முகத்தில் காங்கை. கண்கள் அவள் மேல் குவிந்திருந்தாலும் அவைகளில் பார்வை யில்லை .

அவளிடம் வந்து இரு தோள்களையும் பற்றித் தன் பக்கம் திருப்பினார். அவளுக்கு வெலவெலப்பைவிட வியப்புதான் அதிகம் உணர்ந்தாள்.

அவள் முகத்தில் அவர் கண்கள் தேடின. அவளை அடையாளம் கண்டு கொண்டதும் தணலைத் தொட்டாற் போல் கைகளை உதறி பின்னடைந்தார்.

“Oh God! என்ன தவறு செய்தேன் ! இவ்வளவு பெரிய தப்பு! காலம் இடம் இமேஜ் எல்லாம் குழம்பிப் போச்சு. Oh God! Oh God!! என்னை மன்னிச்சுக்கோம்மா! மன்னிச்சுடு!”

தன் அறைக்குள் ஓடிப்போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு விட்டார்.

அவரை அவள் கடைசியாகப் பார்த்தது அத்தோடு சரி.

‘இல்லை மாமா. ஒண்ணும் மோசமில்லை’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமோ? தோன்றவில்லை, வாஸ்தவம். ஆனால் அப்படிச் சொல்லலாமோ? அவ ளுடைய மானம் என்னவாச்சு? எல்லாரையும் போல் தான் இவளும் என்று விகல்பமான எண்ணத்துக்கு இடம் கொடுத்துவிட்டேனானால்? ஒருவேளை அவர்மேல் இருந்த இரக்கத்தில் இணங்கியிருப்பேனோ? பிறகு என் கதி யென்ன? சே! அவருக்கு எந்தக் கெட்ட எண்ணமுமில்லை, எனக்குமில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் என்னத்தை நிரூபிப்பது? நிரூபிப்பதன் அவசியமே குற்ற உணர்வில் தானே!

தலை சுற்றிற்று. அவர் சாதம் அடுப்பில் தயாரா யிருந்தது. போட்டுக் கொண்டு சாப்பிடட்டும்.

அங்குவிட்டு அகன்றாள்.

நடந்தது இதுதான்.


மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள்.

“அப்பா நான் தோத்துப் போனேன். உங்களை மன்னிப்புக் கேக்கணுமா? என் தோல்வியை ஒப்புக்கொள் றேனே, அதுவே மன்னிப்புக் கேக்கற மாதிரிதானே! இனி இப்படி நேராது இனிமேல் நேருவதற்கே என்ன இருக்கு? என் பையனை உருப்படுத்தணும். அதுதான் இனி என் முழு நோக்கமே”

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *