ஸ்ரீமான் கணவருக்கு ஒரு கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2023
பார்வையிட்டோர்: 3,025 
 
 

திரு.சந்திரசேகர் அவர்களுக்கு,

கிருத்திகா எழுதுகிறேன். இது போன்றதொரு கடிதத்தை அநேகமாக என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இங்கே நான், அம்மா, அப்பா, அனைவரும் நலம். அங்கே நீங்கள் நலமா?” என்பது போன்ற சம்பிரதாயமான விசாரிப்புகளை உள்ளடக்கிய கடிதம் அல்ல இது என்பதை இப்போதே தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.

இந்தக் கடிதத்தை என்னுடைய அறையில் என்னுடைய டேபிளில் வைத்து எழுகிறேன். இந்த என்னுடைய என்ற உணர்ச்சி எத்தனை சுகமானது என்பது அனுபவித்தால்தான் புரியும். உங்களுக்குப் புரிய நியாயமில்லை.

என்னுடைய அறையில் அதிக மாற்றங்களில்லை. ரகு கொஞ்ச நாள் உபயோகப் படுத்தியிருக்கிறான். அப்புறம் சரிப்படவில்லை என்று மாடியறைக்கே போய்விட்டான்.

ஜன்னலோரமாய் நிற்கும் மாமரத்தின் நிழலையும் அதன் குளிர்ச்சியையும் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுபவிப்பதில்… மனசு நிஜமாகவே சாந்தமடைந்திருக்கிறது. நீங்கள் என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்று இதே ஜன்னலோரமாய், இதே மாமரத்தின் பின்னணியில், லேசாக இருள் மூடத் தொடங்கின மாலையில், “மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி” என்று அதிகம் குரலெழுப்பாமல் ரகசியமாய்ப் பாடிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.

இங்கு வந்து பத்து நாட்களில் நேற்றுவரை சுதந்திரமாய் இருந்த மனசு இன்றைக்குத் திடீரென்று கொதிக்கத் தொடங்கிவிட்டது. உங்களுக்குக் கடிதம் எழுதினால்தான் ஆறும் போலத் தெரிந்ததால் எழுதத் தொடங்கி விட்டேன்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் இங்கே வந்த காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. செல்ல மகள் வந்திருக்கிறாள். கொஞ்சம் சீராடி விட்டுப் போகட்டுமே என்று மேலே விழுந்து உபசாரம் செய்கிறார்கள். விருந்தாளியைப் போலத்தான் இருக்கிறது. “அம்மா, இதெல்லாம் வேண்டாம், என்னை கொஞ்சம் ப்ரீயாக இருக்க விடு” என்று கேட்டுக் கொண்டேன்.

காலம் இரண்டு வருஷம் பின்னோக்கிப் போய்விடக் கூடாதா என்று இருக்கிறது. அதே கிருத்திகாவாய், வயலினும், வாசிப்புமாய், இதே மாமர நிழலில் மதியம் தி. ஜானகிராமனை வாசித்துக் கொண்டே உறங்கிப் போய்… நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது! சில நிகழ்ச்சிகளெல்லாம் என் வாழ்வில் இன்னும் நடக்கவேயில்லை என்று திரும்பத்திரும்பக் கட்டாயமாக நினைத்துக் கொள்கிறேன். சந்திரசேகர் என்று யாரையும் எனக்குக் கொஞ்சம்கூட அறிமுகமே இல்லை என்றாகி விட வேண்டும். எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லை?

நானும்தான் பி.ஏ. இலக்கியம் படித்தேன். இலக்கியம் படிப்பவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதிகளாய் இருப்பதில்லை. அதனால் தான் என் பிள்ளைகளுக்கு இலக்கியத்தைத் தவிர்த்து விட்டேன் என்று அப்பாவின் நண்பர் சொன்ன போது ஏன் சிலபேர் இப்படியிருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரும் கீட்சும் படித்துப் படித்து மனசு கனவில் மிதக்கத் தொடங்கிவிடும், யதார்த்தம் புரியாது என்றார்.

எதை யதார்த்தம் என்கிறார்கள்? புருஷன் நல்லவனாய், மனைவியை நம்புபவனாய், பெண்களை மதிப்பவனாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை யதார்த்தமில்லை என்கிறார்களா? ஷேக்ஸ்பியர் படித்தால்தான் நல்ல கணவன் வேண்டும் என்று கனவு காண முடியுமா?

அதுதான்…. நீ இப்படித்தான் இருக்க வேண்டும், ஆம்பிளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ரொம்ப காலமாய் சொல்லிச் சொல்லி, கடைசியில் நிஜம் மறந்து போய் இதுவே வேதமாய் நிலைத்து விட்டது. பெண்களும் இந்த அடிமைத்தனத்தில் கொஞ்சம் குளிர் காய்கிறாற் போலத்தான் தெரிகிறது. சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய அதிகார வித்தியாசத்தை மறந்து போய் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிற மரபுகளில் திளைத்துப் போய் விட்டார்கள்.

இங்கே புருஷன் ஊருக்குப் போய்விட்டால் பெண்களுக்குத்தான் பசலை காண்கிறது. பெண்களுக்குத்தான் வளையல் கழன்று விழுகிறது, இடுப்பு மெலிகிறது. ஏன் இது போன்ற எந்த அடையாளமும் ஆண்களுக்குக் குறிப்பிடப்படவில்லை?

ஊருக்குப் போனவன் ஒழுக்கமாய் இருக்க வேண்டியதில்லை. பெண்டாட்டியை நினைத்து உருக வேண்டியதில்லை என்பது மறைமுகமாகப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதா?

“பெண்ணே! நீ பெண். அதனால் உருகு, பசலைப்படு, இடைதுவண்டு விழு! அவன் ஆண்! அதனாலேயே அதிகாரமிக்கவன். அவன் உன்னை நினைக்க வேண்டியதில்லை. அவன் திரும்பிவர வேண்டும் என்பது மட்டுமே உன் எண்ணமாய் இருக்கவேண்டும். ஒழுக்கமாய்த்தானா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நீ செய்யக்கூடாது என்று காலங்காலமாய் இருந்து வருகின்ற சமூகக் கட்டளைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நான் பெண், நீ ஆண், இது இயற்கை. இது நேர்ந்து விட்டது – it just happened! அவ்வளவு தான். மற்றபடி உணர்விலோ செயலிலோ வித்தியாசம் இல்லை. அப்புறம் எங்கே இருந்து வந்தது நான் பெரியவன், நீ சின்னவள் என்ற சித்தாந்தம்?

நீ கற்பு என்றால் நானும் கற்பு. நீ ஊர் மேய்ந்து விட்டு வரும் போது நான் மட்டும் போர்த்திக் கொண்டு படுத்திருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்?

இதில் இன்னொரு வேடிக்கை, குனிந்த தலை நிமிராமல், கண்மறைப்புப் போட்ட குதிரையாய் நேரே போய், நேரே வருகிறவன் பெண்டாட்டியைப் பார்த்து ஜன்னலைத் திறக்காதே, வாசல் படியில் நிற்காதே என்று அதட்டினால், அட, கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம். பெண்டாட்டியின் சிநேகிதி கொஞ்சம் பகட்டாய் உடுத்தி சிரிப்பாய்ப் பேசுகிறாள் என்பதற்காக, “நாளைக்கு ஆறுமணிக்கு அருள்ஜோதிக்கு வா, காத்திருப்பேன்” என்று கடிதம் எழுதுகிறவன் “ஆபீஸ் விட்டவுடன் நேராய் வீட்டுக்கு வா” என்று மனைவியை எப்படி அதட்ட முடியும்?

நான் வேலைக்கு போகிறேன், நீயும் வேலைக்குப் போகிறாய். நான் நாலு பெண்களுடன் பேசுகிறேன், உனக்கும் அலுவலகத்தில் நாலு ஆண்களுடன் பேச வேண்டியிருக்கிறது, தவிர்க்க முடியாது. அதனாலென்ன என்று சொல்கிறவன்தான் அபூர்வமாகி விட்டான். சரி, காணாத இடத்தில் என்ன நடக்கிறதோ என்று சந்தேகம் வந்து தொலையட்டும். பரவாயில்லை, அதையாவது எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். நீ ஹாலில் இருக்கும் போது, சமையலறை ஜன்னல் வழியாக மனைவி அடுத்த வீட்டுக்காரனோடு ஓடிப்போய் விடுவாள் என்று இரண்டு நிமிஷத்துக்கொரு தரம் சமையலறைக்கும் வாசலுக்கும் நடக்கிறவன் எப்பேர்ப்பட்ட புருஷன்! அப்பேர்ப்பட்ட மகா புருஷனைத்தான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நல்ல சுபதினத்தில் கல்யாணம் செய்து கொண்டேன். அப்பேர்ப்பட்டவனுக்காகத்தான் ஒரு மாலைப் பொழுதில் மயங்கி மயங்கிக் கனவு கண்டேன். தோழி கேளடி என்று பாட்டுப் பாடினேன் என்றால் சிரிப்பு வராதா?

யோசித்துப் பார்க்கிறேன் இதன் பின்னாலிருக்கும் மனோதத்துவம்தான் என்ன என்று. பெண் பார்க்க அழகாயிருக்கிறாள். நாகரீகமாய்ப் பழகுகிறாள். கை நிறைய சம்பாதிக்கிறாள் என்றால், உடனே தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை. சொந்தமாக்கிக் கொண்ட பின்பு, இப்படித்தானே அடுத்தவனும் நினைப்பான் என்ற ஆற்றாமை, எப்படிப் தடுப்பது – இயலாமை… கடைசியில் அகப்படுவது அவள்தான். பார்க்கின்ற பெண்கள் மேலெல்லாம் ஆசைப்படுவதை நீ முதலில் நிறுத்து, சந்தேகம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கலாம்.

அழகாயிருப்பது தப்பா? நீ ஆசைப்பட்ட மாதிரிதானே அடுத்தவனும் படுவான்? நீ ரசித்ததை என்னால் தடுக்க முடிந்ததா? அடுத்தவனை மட்டும் நான் எப்படி நிறுத்த முடியும்? நீ ஒரு படி மேலே போய்க் கல்யாணம் செய்து மனைவியாக்கிக் கொண்டாய். அடுத்தவன் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறான். இதில் நான் என்ன செய்ய முடியும்?

நான் அப்படியில்லை என்று சொல்லத்தான் முடியும், அனுமாரைப் போல நெஞ்சைப் பிளந்தா காட்ட முடியும்? இல்லை, பர்தா போட்டுக் கொண்டு ஜன்னல், கதவு எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அறைக்குள் மூச்சுத் திணறி சாகவா முடியும்?

சாகலாம், மனசு எதிர்பார்த்த விதமாய் நடந்து கொள்கிற கணவனுக்காக உயிரை விடுவதுகூட சுகம்தான். சதா வேவு பார்க்கிற, நடுராத்திரி எழுந்து கைப்பையைச் சோதனையிடுகிறவனுக்காக சாக முடியுமா? அது இந்தப் பிறப்பையே அவமானப் படுத்துவதாகாது? உனக்காக நான் சாவதற்கு நீ தகுதியுடையவனாக இருக்க வேண்டாமா?

இதையெல்லாம் வாயால் பேசி, கூட்டம் போட்டு கோஷமிட்டு திருத்த முடியாது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் சரியான தண்டனை அவர்கள் செய்வதையே திருப்பிச் செய்வதுதான்.

நீ என் மேல் சந்தேகப்பட்டால் நான் உன் மேல் சந்தேகப்படுகிறேன். நீ என் அலுவலகத்துக்கு போன் செய்து நான் இருப்பதை உறுதி செய்தால், நான் அரை நாள் லீவு போட்டு உன் அலுவலகத்திற்க வந்து நீ இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். நீ வீட்டுக்கு வந்த மச்சினி மேல் வாஞ்கையாய்க் கையைப் போட்டுக் குசலம் விசாரித்தால், நான் விடுமுறையைக் கழிக்க வந்த சின்ன மைத்துனனுக்குத் தலைவலித் தைலம் தேய்த்து விட்டு அன்பைக் காட்டிக் கொள்கிறேன். இந்த Tit for Tat கொஞ்சம் பயனுள்ள மருந்ததாகத் தெரிகிறது.

இப்படிச் சுகமாய் உட்கார்ந்து பொறுமையாய் எழுதுகிற போது இதெல்லாம் தோன்றுகிறதே, ஏன் நிஜத்தில் அப்படிச் செய்யாமல் போய் விட்டேன்? நீ பன்றி சேற்றில் புரள்கிறாய் என்பதற்காக, நானும் அதிலே உருள முடியுமா என்ற, இலக்கியம் படித்ததினால் உண்டான இயல்பான நாசூக்கா அல்லது தமிழ்நாட்டிலே பிறந்து பண்பாடு நெறிமுறை போன்ற ஒன்றிரண்டு கலைக்குதவாத வார்த்தைகளைக் கற்றுக் கொண்ட மனப்பாங்கா?

ஏதோ ஒன்று…. செய்து காட்டு, நான் சூடுபட்டேன் என்று வாயால் சொன்னால் எதிராளிக்குப் புரியாது. நீ சூடு வைத்துக் காட்டு என்று அறிவு, இப்போது ஆயிரம் தரம் சொன்னாலும் மனசு ஏனோ அதை ஒத்துக் கொள்ள மாட்டேனென்கிறது.

மணி மூன்றாகி விட்டது. அம்மா இத்தோடு இரண்டு தடவை எட்டிப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டாள். மகள் மாப்பிள்ளைக்கு ஏதோ அந்தரங்கமாய் எழுதுகிறாள் போலிருக்கிறது என்று நினைத்திருப்பாள். “சாப்பிடக்கூட வராமல் அப்படியென்ன மாஞ்சு மாஞ்சு லெட்டர் வேண்டிக் கிடக்கு” என்று ரகு கூட சத்தம் போட்ட விட்டு போய்விட்டான்.

அதெல்லாம் போகட்டும்…. இப்படி மனசிலிருக்கிற ஆங்காரத்தையெல்லாம் அப்பட்டமாய் லெட்டரில் எழுதி விட்டேனே, காரணம் தெரியுமா? எல்லாம் அந்த மனோகர் சொல்லிக் கொடுத்திருப்பான் என்று தத்துப்பித்தென்று நீங்கள் யூகிக்கப் போகிறதை நினைத்தால் எனக்கு இப்போதே சிரிப்பு வருகிறது. காரணத்தை கடிதத்தின் கடைசியில், பின் குறிப்பில் சொல்கிறேன்.

அப்புறம்…. அப்புறம் என்ன? பிரமாதமான விசேஷம் ஏதும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ரகுவுடன் (இனிமேல் இங்கே வராதே என்று அல்பத்தனமாய் விரட்னீர்களே அந்த ரகுபதி இல்லை, என் சொந்தக் தம்பி “ரகு” என்கிற ரகுராமன்) ஜெயா அத்தை வீட்டுக்குப் போய் வந்தேன். நான் வந்திருக்கிறதைக் கேள்விப்பட்டு கஸ்தூரி வந்திருந்தாள். இரண்டு பேருமாய் என்னுடைய அறையில், இருக்றி கேசட்டுக€யெல்லாம் போட்டுப் பாட்டாய்க் கேட்டுத் தீர்த்தோம். வணங்காமுடி, தமிழில் இராமாயணம் என்று இரண்டு வீடியோ கேசட்டுகள் அப்பா எடுத்து வந்தார். என்ன பிரமாத இராமாயணம்? அத்தனை கஷ்டப்பட்டு, யுத்தம் செய்த, ஆயிரக்கணக்கில் பலி கொடுத்து கடைசியில் எவனோ சொன்னான் என்று மனைவியைக் காட்டுக்கு அனுப்புன புண்ணியவானைத்தானே புராணமாய்க் காட்டுகிறார்கள்? இதை என்ன சினிமாவில் பார்க்கிறது? என்று திருப்பி அனுப்பி விட்டேன்.

நேற்றிரவு வெளிவாசல் படியில் உட்கார்ந்து மனசுக்குத் தோன்றின படியெல்லாம் வயலின் வாசித்துக் கையைப் புண்ணாக்கிக் கொண்டேன். அப்புறம் அம்மா திட்டிக் கொண்டே தேங்காய் எண்ணெய்த் தடவி விட்டாள். சொல்ல மறந்து விட்டேனே. லைப்ரரிக்குப் போயிருந்தேன். உங்கள் பாஷையில் ஆறு “குப்பைகள்” எடுத்து வந்தேன். அதில் ஜெயகாந்தனின் “பாரிசுக்குப் போ” என்ற குப்பை நன்றாக இருந்தது. இன்னொரு தடவை படிக்கலாம் என்று வைத்திருக்கிறேன்.

அப்புறம் வைசாலி அத்தை வந்திருந்தார். “என்னடி, ஏதாவது விசேஷமா? என்று குடைந்தார். “நீங்கள் வேறு, எனக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு அப்பா யாராக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொள்வதிலேயே என் வீட்டுக்காரர் ஆயுசை முடித்துக் கொள்வார்” என்று மனசில் நினைத்துக் கொண்டேன், சொல்லவில்லை.

நேற்று சாப்பாட்டு நேரத்தில் கடலையும் விரல் நகங்களையும் இணைத்து ஒரு கவிதை தோன்றியது, எழுதினேன். சுமாராய் வந்தது. யோசிக்காமல், பத்திரிகைக்கு அனுப்பி விட்டேன்.

வேறு…. வேறு என்ன? எனக்குப் பசிக்கிறது. சாப்பிடப் போகலாம். என்று நினைக்கிறேன். இன்னொரு விஷயம். ஊருக்குப் போன முட்டாள் எப்படியும் காய்ந்து போய்த் திரும்பி வருவாள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நாளைக்கு மனோகரிடம் சொல்லி எம்.ஏ. (இலக்கியம் தான்) அப்ளிகேசன் ஃபாரம் வாங்கி வரச் சொல்லப் போகிறேன். அதாவது மேலே படிக்கலாம் என்று உத்தேசப்படுகிறேன். காற்றை உண்டு, கனவைச் சுவாசித்துக் கொண்டிருக்கலாம் பாருங்கள்!

நானில்லா விட்டாலும் உங்களால் உயிர்வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சந்தேகப்படாவிட்டால் செத்துப் போய் விடுவீர்களே! ஆகவே ஸ்ரீமான் சந்திரசேகர் அவர்களே! எங்கேயாவது பார்க்கிலோ, பீச்சிலோ ஓர் ஓரமாய் உட்கார்ந்து என்னைத் தொந்தரவு செய்யாமல், எதையாவது சந்தேகப்பட்டுக் கொண்டிருங்கள். வந்தனம்.

– கிருத்திகா பி.ஏ.

பின்குறிப்பு:

ஆத்திரத்தையெல்லாம் கொட்டி எழுதி விட்டேன். ஆனால் இதைப் போஸ்ட் செய்வதா வேண்டாமா என்று இதை எழுதும் இந்த நிமிடம் வரை தீர்மானிக்கவில்லை. “எல்லாவற்றையும் மறந்து விட்டேன். திருந்தி, புதுசாய் வந்திருக்கிறேன், நீயும் வா” என்று நீங்கள் வந்து அழைத்தால் எல்லாப் பெண்களையும் போல நானும் கரைந்து போய் “போனால் போகட்டும் விடுங்க” என்று உங்களுடன் வந்த விடுவேன் என்றுதான் தோன்றுகிது. உள்ளூர அப்படி நடக்கக் கூடாதா என்கிற நப்பாசை இருப்பதை உணர முடிகிறது. எப்படியாயினும், தன்மானத்தை விடாமல், திடமாய் யோசித்து நல்ல முடிவாய் எடுப்பேன் என்று நம்பிக்கைப்படுகிறேன்.

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *