ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 7,737 
 
 

குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்பாவாவ் ஷிப்யார்டில் நான் ஹெச்,ஆர் ஹெட்டாகச் சேர்ந்தபோது எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. காரணம் அந்த ஷிப்யார்ட் இருக்கும் இடம் மிகவும் பின்தங்கிய இடம். எனக்கு பேசப்பட்ட மாதச் சம்பளம் மிகவும் கொழுத்த ஆறு இலக்கம் என்பதால் வேலைக்கு ஒப்புக் கொண்டேன். இரண்டாயிரம் நிரந்தர தொழிலாளர்கள், மற்றும் கான்ட்ராக்ட் அடிப்படையில் ஆயிரம்பேர் என மொத்தம் மூவாயிரம்பேர் அங்கு வேலை செய்தனர்.

மத்திய அரசின் ஸ்பெஷல் எகனாமிக் சோன் (SEZ) என்று அந்த இடம் அறிவிக்கப் பட்டிருந்தது. ரயில் வசதியோ அல்லது பஸ் வசதியோ கடைகளோ, ஷாப்பிங் மால்களோ இல்லாத அந்த இடத்தில் எவரும் எட்டு மாதங்களுக்குமேல் தொடர்ந்து வேலை செய்யாமல் தலை தெறிக்க ஓடிப் போனார்கள். ஷிப் பில்டிங் பற்றித் தெரிந்த பல டெக்னீஷியன்கள், வேறு வேலைக்கு தொடர்ந்த முயற்சியில் ஈடுபட்டு பரோடா, சூரத், மும்பை என அங்குள்ள கப்பல் கட்டும் கம்பெனிகளில் குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டார்கள்.

திடீர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து பலர் நின்று கொள்வது, எனக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பாம்பே ஹெட் ஆபீஸிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு இதுகுறித்து அடிக்கடி என்னை குற்றம் சொன்னார்கள்.

அப்போதுதான் எனக்கு அந்த புதிய ஐடியா தோன்றியது.

அதுதான் ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட். அதாவது பிப்பாவாவ் ஷிப்யார்டில் வேலை செய்யும் ஆண் ஊழியர்களின் மனைவிகளுக்கு, அதே ஷிப்யார்டில் வேலை வழங்கும் திட்டம். அவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியும், சிறிதளவே அனுபவமும் இருந்தால் போதுமானது. அவர்களுக்கு அட்மினிஸ்ட்ரேஷன், அக்கவுண்ட்ஸ், ஹெச்.ஆர் போன்ற பொதுவான துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் திறமையான ஆண் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது இலக்கு.

என்னுடைய இந்த புதிய ஐடியாவை, மும்பையின் டாப் மானேஜ்மென்ட் ஏற்றுக்கொள்ளாது இழுத்தடித்தது. இதுவரை எந்தப் பெண்ணும் ஷிப்யார்டில் வேலை செய்ததில்லை. மேலும், ஷிப்யார்ட் அமைந்துள்ள ரிமோட் ஏரியாவில் பெண்கள் வேலை செய்வது சாத்தியமல்ல, தவிர அவர்களுக்கு சரியான பாதுகாப்பில்லை என்று சப்பைக்கட்டு கட்டியது.

எனினும் நான் விடாது போராடி என்னுடைய சீஈஓ ஜே.பி.ராயிடமிருந்து பைனல் அப்ரூவல் வாங்கிவிட்டேன். ராய் உத்திரப்பிரதேச கேடர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. எனது புதிய அணுகு முறைகளுக்கு ஆதரவு அளிப்பவர்.

இதை ஒரு சுற்றறிக்கையின் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் பிரகடனப் படுத்தினேன். என்னுடைய வித்தியாச முயற்சியால், ஆச்சரியப்படும் வகையில் பல ஆண் ஊழியர்கள் தங்களது மனைவிகளின் பயோடேட்டாவை ஹெச்.ஆருக்கு அனுப்பிவைத்தனர். சூட்டோடு சூடாக ஐந்துபேரின் மனைவிகள் உடனே பல பொதுத்துறைகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்.

பெண்கள் வேலைக்கு வருவதால் அங்கு பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஆண்கள் ஒழுங்கான நேரத்திற்கு வேலைக்கு வந்தனர். தினமும் ஷேவ் பண்ணிக்கொண்டு, நேர்த்தியான உடையில் அலுவலகம் வந்தனர். குறிப்பாக அட்ரீஷன் லெவல் மிகவும் குறைந்தது. சிறிது பயிற்சிக்குப் பிறகு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அனைத்து மனைவிகளும் நன்றாக வேலை செய்தனர். இதனால் பாம்பே மானேஜ்மென்ட் மிகவும் சந்தோஷமடைந்தது.

குஜராத் ஒரு வித்தியாசமான மாநிலம். மிகப் பெரும்பாலான குஜராத்திகள் புலால் உண்ண மாட்டார்கள். புலால் உண்பவர்களுக்கு வாடகைக்கு வீடுகூட கிடைக்காது. குடி, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் அறவே கிடையாது. கடவுள் பக்தி அபரிதம். ஸ்ரீ ராமர் ஜெயந்தியின்போது ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு வேளைதான் சாப்பிடுவார்கள். மற்ற நேரங்களில் உபவாசம்தான். பொய், திருட்டு, ஏமாற்றுதல் போன்றவைகளை காண்பது மிக அரிது.

அவர்களிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம், அதிகமான ஆண்கள் வாசனையான ஜரிதாபான் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பார்கள். கண்ட கண்ட இடங்களில் அதை புளிச் புளிச்சென்று துப்புவார்கள்.

குஜராத் பெண்களுக்கு அதிக சுதந்திரம் உண்டு. அதனால் தைரியம் ஜாஸ்தி. ஆண்களுடன் சகஜமாக பழகுவார்கள். நவராத்திரியின்போது ஒன்பது ராத்திரிகளும் தெருவிற்கு வந்து ஆண்களுடன் கலந்து கர்பா என்கிற கோலாட்டம் விடிகாலை ஒரு மணிவரை ஆடுவார்கள். அதில் ராஸ் எனும் இரட்டையர்கள் பங்குபெறும் ஆட்டம் பிரசித்தியானது. சழன்று, சுழன்று அவர்கள் ஆடும் கோலாட்டம் பார்பவர்களை பிரமிக்கச் செய்யும்.

குஜராத்தில் என் நாட்கள் மிக நன்றாக நகர்ந்து கொண்டிருந்தன.

அப்போது ஒருநாள், தீபக் பட்டேல் என்னும் புதிதாக மணமான இளைஞன் என்னை நேரில் சந்தித்து அவன் மனைவிக்கு ஷிப்யார்டில் வேலை வேண்டும் என்று அப்ளிகேஷன் கொடுத்தான். தீபக் பட்டேல் மூன்று வருடங்களாக ஷிப் பில்டிங் துறையில் சீனியர் எஞ்சினியர். திறமையாக வேலைசெய்து நல்ல பெயர் பெற்றவன். எனவே அவனது மனைவியை மறுநாளே இண்டர்வியூவுக்கு நான் வரச்செய்தேன். அவள் பெயர் ஆஷா பட்டேல். சொக்க வைக்கும் அழகில், வளப்பமாக, கோதுமை நிறத்தில், திராட்சைக் கண்களுடன் ஒரு சிந்திப்பசுவின் கம்பீரத்தில் இருந்தாள். திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த வாரமே என்னுடைய ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்தாள்.

ஆஷா ஆர்வமுடன் வேலை கற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக வேலை செய்தாள். அனைவரிடமும் நட்புடன் பழகினாள். அவளுக்கு டான்ஸ்

என்றால் மிகவும் பிரியம். ஷிப்யார்ட் ஆண்டுவிழாவில் அவளுடன் நரேன் தேசாய் என்கிற இஞ்சின் டிஸைன் டிபார்ட்மெண்ட் பையன் நளினமாக ஆடினான். இருவரும் சேர்ந்து அந்த ஆட்டத்திற்கு பரிசு வாங்கினார்கள்.

அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக ஷிப்யார்டில் சுற்றி வந்தார்கள். கேன்டீனில் அடிக்கடி காணப்பட்டார்கள்.

ஆறு மாதங்கள் சென்றன. தீபக் பட்டேல் அன்று மறுபடியும் என்னை வந்து பார்த்தான். முகத்தில் ஏராளமான சோகத்துடன் காணப்பட்டான்.

“கண்ணன் சார்… ஆஷா என்னை விட்டுப் பிரிந்து போயிட்டாள். அடுத்த மாதம் அவளுக்கும் நரேன் தேசாய்க்கும் கல்யாணம். எனக்கு இது மிகப்பெரிய அவமானம்.” என்று அழுதான். நான் அவனைத் தேற்றினேன். அவனைப் பார்க்கும்போது மிகப் பரிதாபமாக இருந்தது.

மறுநாள் ஆஷாவை நான் என் அறைக்கு வரச்செய்து, “தீபக் சொன்னது உண்மையா?” என்று நயமாக கேட்டேன். அதற்கு அவள் “ஆமாம் எனக்கு நரேனை மிகவும் பிடித்துவிட்டது. அவன்தான் என் கணவன். இது என்னுடைய பர்சனல் வாழ்க்கை” என்று விட்டேத்தியாக கூறினாள். அவளிடம் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

“உண்மைதான் இது உன் பர்சனல் லைப். ஆனா நீ இந்தக் கம்பெனிக்குள் வந்தது ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட் கோட்டாவில்…. நீ பார்க்கும் வேலை உன் தற்போதைய கணவன் தீபக்கினால் கிடைத்தது. அதனால நீ உடனே ரிசைன் பண்றது நல்லது.”

ஆஷா உடனே என் டேபிளில் இருந்தே ஒரு வெள்ளைத்தாளை எடுத்து நான்கு வரியில் அவளுடைய ராஜினாமாக் கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்.

நான் சுத்தமாக அதிர்ந்தேன். ஆஷா திமிர் பிடித்தவள் என்று மனதில் எண்ணிக் கொண்டேன். உடனே அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டை தொடர்புகொண்டு ஆஷாவுக்கு அன்று மாலையே பைனல் செட்டில்மென்ட் செய்து அவளை அன்றே வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நோட்டீஸ் பிரியர்ட், கேன்டீன் என்று பணம் எதையும் அவளிடமிருந்து டிடெக்ட் செய்யவில்லை. .

ஷிப்யார்ட் முழுவதும் இது பெரிதாக பேசப்பட்டது. நான் எடுத்த தடாலடியான நடவடிக்கையை பலரும் சிலாகித்துப் பேசினர். அதற்கு அடுத்த மாதமே ஆஷாவும் நரேனும் திருமணம் செய்து கொண்டதாக பரவலாக பேசிக்கொண்டனர். நரேன் ஷிப் இஞ்சின் டிஸைனில் மிகத் திறமையானவன். அவனை நம்பித்தான் அந்த டிப்பார்ட்மென்ட் இருப்பதால் நான் அவனிடம் இதுகுறித்து ஒன்றுமே பேசவில்லை. மேலும் இது அவனுடைய பர்சனல் விஷயம்.

மூன்று மாதத்தில் இந்த கசாமுசாக்கள் அடங்கின.

அன்று காலை நரேன் தேசாய் என்னிடம் வந்தான். தன் மனைவி ஆஷா தேசாய்க்கு ஷிப்யார்டில் ஒரு நல்ல வேலை வேண்டி அப்ளிகேஷன் கொடுத்தான்.

நான் எரிச்சலுடன், “நரேன்…இங்கு நடந்தது என்ன என்பது உனக்குத் தெரியும். அதன் கர்த்தாவே நீதான். ஆஷாவுக்கு எப்படி மறுபடியும் வேலை தரமுடியும்?” என்றேன். .

“மிஸ்டர் கண்ணன் ஆஷாவுக்கு இங்கு வேலை இல்லை என்றால், எனக்கும் இந்த வேலை வேண்டாம்.”

“தட் ஈஸ் பியூர்லி யுவர் டிசஷன்.”

கையோடு எடுத்து வந்திருந்த ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்தான்.

அவன் சென்றதும், நான் மும்பையிலுள்ள என் சிஈஓ ராய்க்கு போன் செய்து நடந்தவைகளை விவரித்தேன்.

“கண்ணன், ப்ளீஸ் அக்சப்ட் ஹிஸ் ரெசிக்னேஷன். நோபடி இஸ் அபோவ் கம்பெனி ரூல்ஸ். டீல் வித் ஹிம் புரோபஷனலி.” என்றார்.

-௦- -௦-

இதெல்லாம் நடந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நானும் பிப்பாவாவ் ஷிப்யார்டிலிருந்து ரிடையர்ட் ஆகி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறேன். ஆஷாவை சுத்தமாக மறந்தும் விட்டேன்.

ஆனால் சென்றவாரம் ஆஷா எனக்கு போன்செய்து அவள் தற்போது நிறைய குஜராத் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதாகவும், அவள் கதாநாயகியாக நடித்த முதல் படம் நூறு நாட்களைத் தாண்டி தற்போது ஓடிக் கொண்டிருப்பதாகவும், அதற்கான வெற்றிவிழா அகமதாபாத்தில் நடப்பதாகவும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, என் லேப்டாப்பில் உடனடியாக ப்ளைட் டிக்கெட்டை அனுப்பி, ஸ்டார் ஹோட்டலில் ஒரு இரவு நான் தங்கும் ஏற்பாட்டையும் செய்திருந்தாள்.

அவள் அழைப்பை என்னால் மறுக்க முடியவில்லை. விழா நடக்கும் இடத்திற்கு நேரில் சென்றபோது எனக்கு ஏகப்பட்ட மரியாதை. கூச்சமாக இருந்தது. ஆஷா நடித்த முதல் படம் ஏதோ ஒரு லேடீஸ் சப்ஜெக்ட். அதனால் ரசிகர்களிடையே அவளின் மவுசு அதிகமாக இருந்தது.

ஆஷா என்னிடம் ஓடிவந்து, என் கையைப்பிடித்து இழுத்துச்சென்று என்னையும் மேடையில் அமரச் செய்தாள். முன்னைவிட அழகாக ஒரு பணக்கார பொலிவுடன் காணப்பட்டாள். மாடர்ன் உடையில் இருந்தாள்.

கடைசியாக அவள் விழாவில் பேசும்போது, அவள் வெற்றிக்கு நான்தான் காரணம் எனவும், அன்று நான் அவளை வேலையிலிருந்து அனுப்பி இருக்காவிட்டால், இன்று தான் குஜராத்தில் ஒரு பிரபல நடிகையாக ஆகியிருக்க முடியாது எனவும், மாதச் சம்பளத்தை எண்ணிக்கொண்டு ஏதோவொரு மூலையில் இருக்க நேரிட்டிருக்கும் எனவும் சொல்லிவிட்டு என் இருக்கைக்கு வந்து குனிந்து என் கால்களைத் தொட்டாள். தொடர்ந்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

ரசிகர்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

அவளை நோக்கி குனிந்து, மெல்லிய குரலில் “நரேன் எங்கே ஆஷா?” என்றேன்.

“கண்ணன் சார்… இப்ப இன்டஸ்ட்ரில என் பெயர் ஆஷா இல்ல. நரேனை கழட்டிவிட்டு ரெண்டு வருஷமாச்சு. இப்ப என் கைவசம் இருக்கும் கால்ஷீட் முடிந்ததும, என்னுடன் நிறைய படங்களில் ஹீரோவா நடிக்கும் ரோஷன்மேத்தாவைத்தான் நான் அடுத்த வருஷம் கல்யாணம் செய்துகொள்வேன். இன்விடேஷன் அனுப்பறேன். நீங்க கண்டிப்பாக வரணும்” என்றாள்.

நான் வாயடைத்துப் போனேன். யார் கண்டது..! அடுத்து அவள் கோலிவுட்டில் ஒரு பெரிய விழாவுக்கு என்னைக் கூப்பிட நேரலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *