கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 8,232 
 
 

சென்னையில், வயதான அப்பாவும், பேச்சிலர் தம்பியும் கஷ்டப்படுகிறார்களென்று எனக்கும் அப்பாவுக்கும் சுவையாக சமைத்துப் போட ஒவ்வொரு முறையும் அக்கா உமா ஏதாவது காரணம் வைத்துக்கொண்டு மும்பையிலிருந்து மகன் கௌதமுடன் வந்துவிடுவாள். பிரச்சினை என்னவென்றால் எங்களால் வீட்டில் பாத்திர பண்டங்களை ஒழுங்காக பராமரிக்க முடியாது. இன்று நேற்றல்ல அம்மா மறைந்த கடந்த ஏழு வருடங்களாக.

“போன முறை கூட வந்ததும் பத்து ஸ்பூன் வாங்கினேன், ஒண்ணக்கூட காணலை, எங்கேதான் போய் ஒழியுமோ இந்த ஸ்பூனெல்லாம் ச்சே“ என்று காபி பொடி டப்பாவையும், சர்க்கரை டப்பாவையும் பார்க்கும்போதெல்லாம் அலுத்துக்கொள்வாள்.

“ஸ்பூன் தானே உமா பாத்துக்கலாம்” என்பேன்.

“எப்படிடா காபி பொடியையும், சக்கரையையும் கையால எடுக்கறது, கார்த்தால எழுந்தவுடனே இப்படி மூட் அவுட் ஆச்சுன்னா, அப்புறம் அன்னைக்கு ஃபுல்லா மூட் அவுட்டாகவே இருக்கும்” என அன்றே விடுவிடுவென கடைக்குச் சென்று ப்ளாஸ்டிக் பிடியுடன் சில ஸ்பூன்கள், சில அலங்காரத்துடன், ஸ்வாமிக்குப் பூஜை செய்வதற்கென்று செம்பில் – நுனியில் குழியுடன் என்று விதவிதமாக, வெவ்வேறு அளவுகளில் ஸ்பூன்கள் வாங்குவாள்.

ஒருமுறை கடைக்காரரே கேட்டுவிட்டார். “ என்னம்மா போனமுறைதான இதேமாதிரி எல்லாத்தையும் வாங்கிட்டுப்போனிங்க? திரும்பவுமா?” என்று

“எங்கங்க இவங்க வீட்ல லேடீஸே இல்ல, நான் வரும்போது ஒவ்வொரு தடைவையும் சிறமமாயிடறது, அப்பாவையும் இவனையும் ஒண்ணும் சொல்லவும் முடியறதில்லை” என்று அவரிடமும் தன் குறையைக் கொட்டினாள்.

“பாருங்க தம்பிக்கு சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்து முடிச்சிட்டா எல்லாம் சரியாயிடும்“ என்று அவர் தன் பங்குக்குச் சொல்லிவைத்தார்.

அதன் பிறகு அவள் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் சென்னையில் இறங்கியவுடன் எங்களைக் கேட்கக் கூட கேட்காமல் முதன் முதலாக அவள் வாங்கும் பொருள் ஸ்பூன்.

வாங்கும் ஸ்பூன்களில் ஒன்றிரண்டு அவள் மும்பை செல்வதற்குள் தொலைந்துவிடும் என்பது வேறுவிஷயம்!

இன்னிலையில், இந்த முறை உமா சென்னைக்கு வந்தபோது, அவளை அழைத்துவர நான் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தேன்.

ரயிலிலிருந்து அவள் இறங்கியவுடன் “போற வழியில மாம்பலத்தில இறங்கிடலாம்டா, கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்?” என்றாள்.

நான் எதுவும் கேட்கவில்லை, பேசாமல் கௌதமை தூக்கிக்கொண்டேன்.

பார்க் ரயில் நிலையத்தை அடைந்தபோது, “இந்தப்பக்கம் வழக்கமா கூட்டம் இருக்காதில்ல?” என்றாள். “ம்,” என்றேன், நானும் கூட்டமில்லாத ரயில் வண்டியை எதிர்பார்த்து.

எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக அடுத்து வந்த ரயில் கொஞ்சம் கூட்டமாகவே வந்தது.

“என்னடா இது?” என்றாள்.

“செங்கல்பட்டு வண்டி அதான், அடுத்த ட்ரெய்ன்ல போவோம், ஒண்ணும் அவசரமில்லையே?” என்றேன்

“சரி” என்றாள்.

அடுத்த வண்டி காலியாகவே வந்தது. அனால் மாம்பலத்தில் இறங்கும்போது கூட்டம் நெட்டித் தள்ளியது. சிரமத்துடன் ஏறக்குறைய இருவரும் ரயிலிலிருந்து குதித்தோம் என்று தான் சொல்லவேண்டும்.

ரங்கனாதன் தெருவில் செல்லும்போது மிகுந்த ஆயாசமாக இருந்தது. “கரும்பு ஜூஸ் சாப்பிடலாமா?” என்றேன்.

கௌதம் “ஐஸ் க்ரீம்” என்றான்

“மொதல்ல பர்சேஸ்” என்றாள் உமா.

எனக்கு அவள் அவஸ்தை புரிந்தது. அங்கிருந்த பெரிய பாத்திர கடைக்குச் சென்றோம். வழக்கம்போல் விதவிதமாக ஸ்பூன்களை சேகரிக்கத்துவங்கினாள்.
நான் கௌதமுடன் ஜாலியாக ஏதோ பேசிகொண்டிருந்தேன். அப்போது திடீரென நான் காலை வேளைகளில் ‘வெஜ் சாலட்’ சாப்பிடுவது நினைவுக்கு வர “உமா, அப்படியே ரெண்டு ஃபோர்க்’கும் வாங்கேன்” என்றேன்.

ஆர்வமாக தேடிக்கொண்டிருந்தவள், சறேலென அதிர்ந்து, நிமிர்ந்து என்னைப் பார்த்தவள். “ ஃபோர்க் வேண்டாம் போகும்போது நான் உன் கிட்ட இதைப்பத்தி ஒண்ணு சொல்லணும் ஞாபகப்படுத்து!” என்றாள் திட்டவட்டமாக.

சாப்பிடுவதற்கான இரண்டு தட்டும், டபரா செட்டும், ஸ்பூன்களையும் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து கிளம்பினோம். அப்பாவுடைய தட்டு விளிம்பில் விரிசல் விட்டு, மோர் சாதம் சாப்பிடும்போது கீழே ஒழுகிக்கொண்டிருந்ததை அவள் போனமுறை வந்தபோது கவனித்திருக்கவேண்டும்.

கடையை விட்டு வெளியே வந்தவுடன் “எங்கிட்ட ஏதோ சொல்லணுமின்னியே” என்று அவளுக்கு நினைவூட்டினேன்.

“அதுவா நம்ம லோகேஷ் இருக்கான்ல” என்று ஆரம்பித்தாள்

“போன வருஷம் கல்யாணமாச்சே, அவனா?” என்றேன்.

“அவனேதான் என்னாச்சு தெரியுமா, ஃபர்ஸ்ட் அனிவர்சரின்னு எங்களை இன்வைட் பண்ணியிருந்தான், நாங்களும் கௌதமை கூட்டிட்டு போனோம்!.”

“ … .. .. “

“வீட்டை அழகா அலங்காரம் செஞ்சி அமர்க்களப்படுத்தியிருந்தான் ‘கேக்கெல்லாம் வெட்டி ரொம்ப சந்தோஷமா இருந்தது. கடைசியா “அக்கா நானும் அவளும் வெளில சாப்பிடப் போறோம் நீங்களும் வறீங்களா?”ன்னு கேட்டான்.

“மாமியார் ஹாஸ்பிடல்ல இருக்காங்கடா, நீ கூப்பிட்டியேன்னு வந்தேன்னு சொல்லிட்டு. நானும், மாமாவும் அவனை விஷ் பண்ணிட்டு, கிஃப்டையும் கொடுத்துட்டு சட்டுன்னு கிளம்பி வந்துட்டோம்.”

“ அப்புறம்? “

“அப்புறம்தான் ஆரம்பிச்சது வினை, ரெண்டும் கிளம்பி ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட போயிருக்குங்க!”

“‘அதுல என்ன தப்பு?”

“ அதுல ஒண்ணும் தப்பில்ல, சாப்பிடும் போது ரெண்டு பேருக்கும் விளையாட்டு, அவன் இவளுக்கு ஊட்டறது, இவ அவனுக்கு ஊட்டறதுன்னு இதுல ஏமாத்தி வேற விளையாடி இருக்காங்க, அப்ப அவன் ஒரு முறை ஃபோர்க்கால ஊட்டும்போது எங்க ஏமாந்துடுவோமோன்னு அவ தன் கையால் அவன் கையை ஃபோர்ஸ் பண்ணியிருக்கா. மிஸ்ஸாயி ஃபோர்க் அப்படியே மேல் அண்ணத்தில போய் சொருகிடுச்சு.”

“ஐயோ அப்புறம்” என்றேன்.

“அப்புறம், எங்க மாமியார் இருந்த அதே ஹாஸ்பிடல்லதான் சேர்த்தான், ஒரு நாள் ஆப்சர்வேஷன்ல வச்சிருந்துட்டு ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு டாக்டர்செல்லாம் கையை விரிச்சிட்டாங்க அடுத்த நாள் நான் மாமியாரை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வறேன் அவன் ஸ்ட்ரெச்சர்ல அந்த பொண்ணை எடுத்துட்டு போறான். வயித்தில வேற நாலு மாசக் குழந்தை,. அவன் அழுததை நினைச்சா மனசே ஆறலைடா… இப்பக் கூட, ஒரு மாதிரியிருக்கு. ஒரு வேளை நாங்க கூட போயிருந்தா இந்த மாதிரி ஆயிருக்காதோன்னு தோணும்.”

“என்ன பண்ண முடியும்? எல்லாம் விதி!” என்றேன்

“அப்படி சொல்ல முடியாதுடா எவனெவனோ அவனவன் வசதிக்கும் தேவைக்கும் கண்டுபிடிச்சதை, நாம நமக்கு பொருந்துமா? பொருந்தாதா?, தேவையா / இல்லையான்னு கூட பாக்காம எல்லாத்தையும் ‘வெத்து ஜம்பத்துக்காக’ வாங்கி யூஸ் பண்ணிட்டிருகோம்” என்றவள் நிறுத்தி “இந்த விஷயத்தைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச, வேண்டிய எல்லார்க்கிட்டேயும் சொல்றேன். நீ உனக்கு வேண்டியவங்க, தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுடா!” என்றாள்.

நாங்கள் வீட்டை நெருங்கியிருந்தோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *