வைக்கோல் உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 6,572 
 
 

எனக்கு வயது பதினைந்து.

என் அப்பாவை எனக்குப் பிடிக்காது.

காரணம் அப்பா எப்போது பார்த்தாலும் பணம் வைத்துச் சீட்டாடுவார். ஆயிரக்கணக்கில் அடிக்கடி தோற்றுப் போவார். அதனால் என் பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டையும், வாக்குவாதமும் உண்டாகும். உடனே அப்பா கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவார்.

அதன்பிறகு நான்கைந்து மாதங்கள் கழித்துத் திரும்பி வருவார். ஆனால் எங்கள் வீட்டில் அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் – என் அம்மா உட்பட. இதுதவிர அப்பாவுக்கு குடி, சிகரெட் பழக்கமும் உண்டு.

பெரியப்பா குடும்பம்; சித்தப்பா குடும்பம்; எங்கள் குடும்பம் – ஆகிய மூன்று குடும்பங்களும் ஒரேவீட்டில் ஒன்றாக வசித்து வந்தோம். எல்லா குடும்பங்களுக்கும் பெரியப்பாதான் தலைவர். அவருடைய சொற்படிதான் எல்லாம் நடக்கும்.

நெல்லை திம்மராஜபுரத்தில் எங்கள் வீடுதான் மிகப்பெரியது. பெரியப்பாவின் உழைப்பினால் மர வியாபாரம்; லாரி ட்ரான்ஸ்போர்ட்; வெல்ல மண்டி என்று அமோகமாக இருந்தோம். பெரியப்பாவிடம் மாரிஸ் மைனர் கார் இருந்தது. அதில் அடிக்கடி பிசினெஸ் சம்பந்தமாக மதுரைக்குப் போவார்.

வீட்டில் எட்டு குழந்தைகள் இருந்தாலும், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் பெரியப்பா என்னையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு மதுரைக்கு அழைத்துப்போவார். மதுரையிலும் ஒரு வீடு இருந்தது.

அந்த வீட்டில் ஒரு அழகான பெண்ணை பெரியப்பா வைத்திருந்தார். அந்த வீட்டில்தான் சாப்பிடுவார், தூங்குவார்.

அவருடன் மதுரைக்குப் போகிற ஆனந்தத்திற்குச் சமமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை. காரணம் வேறு யாருமே பெரியப்பாவுடன் காரில் அவ்விதம் போனது கிடையாது. என்னிடம் மிகுந்த வாஞ்சையுடன் அவர் இருப்பதால், வீட்டில் என் மூலமாகத்தான் மற்ற குழந்தைகள் தனக்கு வேண்டியதை பெரியப்பாவிடம் சாதித்துக் கொள்வார்கள். எனக்கு ரெண்டு கொம்பு முளைத்துவிட்ட மாதிரி, நான் ரொம்ப பந்தா காட்டுவேன்.

மதுரைக்கு காரில் போய்க் கொண்டிருக்கும்போதே என்மனம் மதுரை வீட்டுக்குப் போய்விடும்.

அந்த வீட்டில் பெரியப்பா வைத்திருந்த கமலா என்ற பெண் என் நினைப்பில் முழு நிலா போலத் தெரிந்து கொண்டிருப்பாள். அவளுடைய அழகை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்திருந்தது. எங்கள் ஊரில் அவ்வளவு அழகான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது.

மிகவும் அழகான ஒருத்தியை, அதுவும் அத்தனை பெரிய மதுரையில் என் பெரியப்பா வைத்திருந்தது எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது.

அந்த வீட்டில் பெரியப்பா ஊஞ்சலில் உட்கார்ந்து கமலாவுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி ஒரு சினிமாக் காட்சி போலத் தோன்றும். அதில் பெரியப்பாதான் ஹீரோ போலத் தோன்றும் எனக்கு…

நேரில் பார்ப்பதற்கும் பெரியப்பா ஹீரோ போலத்தான் இருப்பார். நல்ல சிவப்பு, ஆறடி உயரம். சில்க் ஜிப்பா போட்டு, ஜரிகை வேஷ்டியுடன் ஏதாவது ஒரு தெருவில் நடந்து போனால், அந்தத் தெரு தாண்டுவதற்குள் ஒருபெண் பெரியப்பாவின் மேல் காதலாகி விடுவாளாம். எங்கள் பாட்டி உயிரோடு இருந்தபோது என்னிடம் சொல்லியிருக்கிறாள். பாட்டிக்கே அதில் பெருமை! பாட்டிக்கே இருந்தால் எனக்கு இருக்காதா?

பெரியவன் ஆன பிறகு நானும் பெரியப்பா போலவே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அந்தக் கமலா மாதிரி எனக்கும் ஒருத்தி இருக்கவேண்டும் என்றும் நினைப்பேன்.

கமலா எப்போதுமே பட்டுச் சேலைதான் கட்டுவாள். சாப்பிடுவதற்கு எனக்கு மீன்புட்டு தந்து லேசாக என்னை அவளோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளும் போதெல்லாம் எனக்கு சுகமாக இருக்கும். அப்போது அவளிடமிருந்து ஒரு இனிய சுகந்தம் வரும். அதை ஆசையுடன் ரகசியமாக முகர்வேன்.

பெரியப்பா திம்மராஜபுரத்தில் எல்லோராலுமே விரும்பப் பட்டார். இந்தக் கமலா விஷயத்தில்கூட அவருக்கு ஊரில் பெரிய மரியாதைதான். யாரும் அதைக் கண்ணியக் குறைவாகப் பேசியதில்லை.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பெரியப்பாவிற்கு கமலா என்று மட்டுமல்ல. எந்த ஊருக்குப் போனாலும், அங்கெல்லாம் ஒரேநாளில் ஒருத்தி அவருக்கு ரொம்ப சிநேகிதமாகி விடுவாளாம்! அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், தூத்துக்குடி என்று ஏகப்பட்ட சினேகிதிகள்…

இதையெல்லாம் மறைந்த எங்கள் பாட்டியே சிறிதும் விசனம் இல்லாமல் பெரிய கதையாக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஆனால் திடீரென்று பெரியப்பா மேல் எனக்கு ரொம்பக் கோபம் வந்தது. மதுரையில் அந்த வீட்டில் கமலாவுக்குப் பதில் வேறு ஒருத்தி இருந்தாள்!. அந்தத் திடீர் ஆள் மாறாட்டம் எனக்குப் புரியவில்லை. புதியவளும் அழகாகத்தான் இருந்தாள்.

ஆனால் என்னால் கமலாவை மறக்க முடியவில்லை. அவளிடம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த விஷயம் அவள் என் எதிரிலேயே ஜம்மென்று சேலை மாற்றிக் கொள்வதுதான்! அதற்குமுன் அந்த மாதிரியான காட்சியை நான் பார்த்ததே கிடையாது! எங்கள் வீட்டிலெல்லாம் எல்லாப் பெண்களுமே ஏதாவது அறைக்குள் போய் கதவுகளை சாத்திக் கொண்டுதான் சேலை மாற்றுவார்கள். அதனால் கமலா முதன் முதலில் என்முன் நின்றபடி ரொம்ப சாவகாசமாக சேலை மாற்றியபோது நான் கிளுகிளுப்பில் சிலிர்த்துப்போனேன்.

“என்ன சின்னராசா அப்படி கண்கொட்டாம பாக்குறீங்க?” என்பாள்.

பதில் சொல்லத் தெரியாமல் நான் அவளையே வெறித்துப் பார்ப்பேன்.

“பெரியவுகளா ஆனதும் என்னைக் கண்ணாலம் செஞ்சுக்கிறீங்களா?” என்பாள். நானும் அதற்கு சந்தோஷத்துடன் சரியென்று தலையை ஆட்டியிருக்கிறேன்.

இப்படியாக பெரியப்பாவின் தயவால் நிறையப் பெண்களைப் பார்த்தேன். ஆனால் யார் வந்தாலும் அவர்களையும் எனக்குப் பிடிக்கத்தான் செய்தது. காரணம் என் பெரியப்பா மேல் எனக்கு இருந்த பிரியம்தான். அவர்மேல் இருந்த அளவில்லாத பிரியம் அவருடைய பெண்கள் மீதும் இருந்தது போலும்.

இப்படியிருக்கையில் என் அப்பா ஒருமுறை பெரியப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனார். அப்புறம் அவர் திரும்பியே வரவில்லை. என்னுடைய பதினெட்டு வயதில், அவர் சென்னையில் இறந்துபோனார் என்ற செய்திதான் வந்தது.

அது ஒரு பெரிய அபசகுனமாக ஆரம்பித்து, பல காரணங்களால் வரிசையாக பெரியப்பாவின் பிஸினெஸ் சாம்ராஜ்யம் சரிந்தது. தினசரி செலவுக்கே பெரிய போராட்டம் ஆனது. பெரியப்பா முற்றிலுமாக நொடித்துப் போனார்.

அந்தக் கஷ்டத்திலும் அவருக்குத் தெரிந்த சென்னை ரத்னா கபே ஓனரிடம் சொல்லி எனக்கு சர்வர் வேலை வாங்கிக் கொடுத்தார். என்னையும் அம்மாவையும் கையில் இருபதாயிரம் கொடுத்து சென்னைக்கு அனுப்பினார்.

துணிமணிகளுடனும், பெரியப்பாவின் போட்டோவுடனும் நானும் அம்மாவும் சென்னைக்கு ரயில் ஏறினோம்.

இதுகாறும் பெரியப்பாவின் அணைப்பில் இருந்த எனக்கு, சென்னையின் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தது. திருவல்லிக்கேணியின் மூத்திரச் சந்தின் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் நானும் அம்மாவும் குடியிருந்தோம்.

நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் ஒருத்தனாக வாழ்க்கையில் நான் உழன்றேன்.

எட்டு மாதம் கழிந்து, பெரியப்பா இறந்துவிட்டதாக அவர் இறந்து ஒருவாரம் கழித்து ஒரு கடிதம் வந்தது. அம்மாவும் நானும் அவர் போட்டோவின் முன்னின்று அழுதோம்.

அன்று நான் ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென அம்மா, “டேய் நாளைக்கு அவர் செத்த பத்தாவதுநாள். ஒரு ஐயரைக் கூப்பிட்டு அரிசி, வாழப்பழம் வச்சு அவருக்கு திவசம் பண்ணிரு…” என்றாள்.

“நான் எதுக்கும்மா பண்ணனும்? அவருக்குத்தான் பையன்கள் உண்டே…”

“உன்னையும் அவர் சொந்தப் பிள்ளையாத்தானடா வளர்த்தாரு…. அம்மா சொன்னாக் கேளு.”

“சரிம்மா.”

அவசரத்தில் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

கிளம்பி சற்றுதூரம் போனபிறகுதான் தெரிந்தது, அது அம்மாவின் செருப்பு என்று. உடனே வீட்டிற்கு திரும்பி வந்தேன்…

அங்கு அம்மா பெரியப்பாவின் போட்டோவை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கண்களை மூடியபடி, “உங்களுக்குப் பிறந்த பிள்ளை அவன்… அவனையும் பத்தாம்நாள் காரியம் செய்யச் சொல்லிட்டேன். தெய்வமா இருந்து அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்கறதுக்கு நீங்கதான் அருள் புரியணும்…” என்றாள்.

நான் அங்கு வந்ததை அம்மா கவனிக்கவில்லை. சத்தம்போடாது என் செருப்பை மாட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

ஹோட்டல் பணிக்குச் செல்லாமல் ஒரு பார்க்கில் போய் அமர்ந்துகொண்டேன். என் மனம் புழுங்கித் தவித்தது…

நான் ஹீரோவாக நினைத்திருந்த என் பெரியப்பா ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு என் அம்மாவையே முயங்கிவிட்டாரே!?

எனக்கு பெரியப்பா மீது பயங்கர கோபம் வந்தது. அவர் உயிருடன் இருந்தால் நானே அவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பேன். யாராவது செத்தவன் மீது கொலைவெறி கொள்வானா? நான் கொண்டேன்.

பசுமாட்டிடம் பால் கறக்கும்போது எப்படி வைக்கோல் கன்னுக்குட்டி வைத்து ஏமாற்றப் படுகிறதோ, அது மாதிரிதான் என்னுடையை முக்கிய உறவுகளும் என்பதை உணர்ந்தேன்…

என் அம்மாவின் புருஷன் ஒரு டம்மி; பெரியப்பா என் அம்மாவை சல்லாபம் செய்து நான் ஜனித்தேன்; என் அம்மா பெரியப்பாவிடம் சோரம் போய் என்னை ஈன்றவள். ஆக எந்த உறவிலும் நேர்மையில்லை…

இப்படியாக எனக்கு எல்லாமே வைக்கோல் உறவுகள்தான்.

நான் ஒரு கேவலமான பிறப்பா?

வாய்விட்டு அழுதேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *