செய்தித்தாளைப் புரட்டியதுமே அந்த விளம்பரம்தான் சேகர் கண்களில் பளிச்சென்று பட்டது.
சின்ன கட்டம் போட்ட விளம்பரம். பாஸ்போர்ட் அளவு படத்தில் ஒரு இளம் பெண். அதன் கீழே….
‘பெயர் கிரிஜாராணி. வயது 25. படிப்பு பி.ஏ. தட்டச்சு, சுருக்கெழுத்துத் தெரியும். கணனியில் எல்லா வேலைகளும் தெரியும். எந்த வேலை செய்யவும் தயார். வேலை கொடுக்க விருப்பமுள்ளோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி…121, மேல் கரை வீதி. கோட்டுச்சேரி, காரைக்கால். 609 608. கை பேசி எண். 54456 78899.
நிறுத்தி நிதானமாகப் படித்த சேகர் மறுமுறை படித்து ஒரு முடிவுடன் பரபரப்பாக எழுந்தான்.
கோப்புகள் பார்த்துக் கொண்டிருந்த மானேஜிங் டைரக்டர் தனி அறைக்குள் நுழைந்தான்.
“இந்த விளம்பரம் பாருங்க..”சொல்லி அவர் முன் செய்தித்தாளை விரித்து வைத்து எதிரில் அமர்ந்தான்..
படித்துப் பார்த்த பொன்னுரங்கம்….
“ம்ம்… இதுக்கு என்ன…?” கேட்டார்.
“எல்லாரும் வேலை தேடித் தேடி அலுத்துப் போவாங்க. இல்லே இன்னும் முயற்சித்துக் கொண்டே இருப்பாங்க. ஆனா… இவள் இப்படி ஒரு வித்தியாசமான விளம்பரம் கொடுத்து வேலை தேடி இருக்காள். இந்த புத்திசாலித்தனம் எனக்குப் பிடிச்சிருக்கு.!”என்றான்.
ஒரு நிமிடம் யோசித்து சேகரை உற்றுப் பார்த்த பொன்னுரங்கம்….
“ம்ம்… அதுக்கு என்ன..?”கேட்டார்.
“நம்ம கம்பெனியில் வேலை கொடுத்து இவள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக்கலாம்ன்னு நினைக்கிறேன்.”
“வேலை காலி இருக்கா…?”
“ம்ம். மனசு இருந்தால் மார்க்கமுண்டு. !”
“சரி. கை பேசியில் தொடர்பு கொண்டு உடனே வரச்சொல்.”
அகன்றான்.
மறுநாள் சரியாய் 10.10 க்கு கிரிஜாராணி மானேஜிங் அறையில் பொன்னுரங்கம் முன் அமர்ந்திருந்தாள்.
அருகில் சேகர் உட்கார்ந்திருந்தான்.
பொன்னுரங்கம் ஏறிட்டார்.
மாநிறத்திற்கும் கொஞ்சம் கூடுதலான நிறம். அழகிய கண்கள். அதற்கேற்ற பொலிவான முகம். நெற்றியில் பொட்டு இல்லை. விளக்கடியில் நிழல்போல் மெலிதான சோகம் மட்டுமில்லை என்றால் முகம் இன்னும் களையாக இருந்திருக்கும். சத்தியமாய் இவள் விதவை இல்லை என்று அடித்துச் சொல்லாம்.! – பொன்னுரங்கம் கண நேரத்தில் ஆளைக் கணித்துவிட்டார்.
கிரிஜாராணி கையிலிருந்த கோப்புகளை நீட்டினாள்.
வாங்கி பார்த்தார்.
விளம்பரத்தில் கொடுத்த அனைத்தும் அதில் சரியாக இருந்தது.
“விளம்பரம் வித்தியாசமாய் இருந்தது…”என்றார்.
“பெரிய குடும்பம் சார். நான் திருமணமாகி தனிமரமாகி வீட்டோட வந்து பாரமாகிட்டேன். ஏதாவது வேலை பார்த்து நிமிரலாம்ன்னா… கிடைக்கலை. அதனாலதான் சார் அப்படி ஒரு விளம்பரம்.”
“எப்போ திருமணம் நடந்தது…?”
தேதி சொன்னாள்.
“கணவர் எப்போ காலமானார்..?”
தேதி சொன்னாள்.
துணுக்குற்ற பொன்னுரங்கம்….
“என்னம்மா…திருமணத் தேதி, கணவர் இறப்புத் தேதியையும் ஒன்னா சொல்றே..?”பார்த்தார்.
‘’ ஆமாம் சார். ரெண்டும் ஒரே தேதி.! தாலி கழுத்துல ஏறி சடங்கெல்லாம் முடிச்சபிறகு…எதையும் கலைக்காமல் மணமக்கள் மாலையும் கழுத்துமாய் பாலியைத் தண்ணீரில் விட மண்டபத்துக்கு எதிரில் உள்ள காவேரி ஆற்றுக்குப் போனோம். படித்துறை பாசியில் கால் வழுக்கி விழுந்த பின் மண்டையில் பலத்த அடி. தண்ணியில விழுந்து உடனே செத்துட்டார்.”- கமறினாள் .
பொன்னுரங்கம், சேகருக்கு மனசைப் பிசைந்தது.
“சா…. சாரிம்மா…..”என்று வெளிப்படையாகவே தன் வருத்தத்தை வெளியிட பொன்னுரங்கம் சேகரைப் பார்த்தார்.
அவன் தலை குனிந்திருந்தான்..
“ராணி! எந்த வேலை கொடுத்தாலும் செய்வீயாம்மா..?”- பரிவுடன் கேட்டார்.
“செய்வேன் சார் !”
“மறுக்கக்கூடாது !”
“மாட்டேன் சார்!”
“சேகர்! ஒரு நிமிசம் என் பின்னால வா”பொன்னுரங்கம் இருக்கையை விட்டு எழுந்தார்.
இருவரும் கதவைத் திறந்து அருகிலிருந்த அறைக்குள் சென்றார்கள்.
பத்து நிமிடங்களில் திரும்பி வந்தார்கள்.
அவரவர் இருப்பிடத்தில் அமர்ந்தார்கள்.
“பேச்சு மாறமாட்டியே..?”- கராறாகக் கேட்டார்.
“சத்தியமா மாறமாட்டேன் சார்.”
“பக்கத்தில் அமர்ந்திருக்கும் சேகர் என் பிள்ளை. இந்த கம்பெனியின் அடுத்த வாரிசு. இவனைத் திருமணம் செய்துகிட்டு குடும்பம் நடத்துறதுதான் உன் வேலை.”பொன்னுரங்கம் அவளைப் பார்த்து அமைதியாய் நிறுத்தி நிதானமாக சொன்னார்.
“சார் !..”கிரிஜா பதறி எழுந்தாள்.
“பதற்றம், பயம் வேணாம். ஒன்னும் அவசரமில்லை. இவனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. அதுக்கு நான் உத்திரவாதம். பையனைப் பிடிக்கலைன்னா…கட்டிக்கனும் என்கிற கட்டாயமில்லே. ஆனால் உனக்கு இங்கே இந்த வேலையைத் தவிர வேறு வேலை இல்லே. வீட்டுல கேட்டு விருப்பம் இருந்தால் நாளைக்கே ஒரு நல்ல நாள் பார்த்து முறையாய் திருமணம் முடிச்சி தாலி கட்டி வேலையில் சேர்த்துக்கலாம்.”தெளிவாய் சொல்லி நிறுத்தினார்.
பூவைத் தேடிப்போன இடத்தில் புதையல்.!
கிரிஜாராணிக்கு மயக்கம் வந்தது.