கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,882 
 

(1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளிக்கூடம் விட்டாயிற்று. புற்றீசல்போல் ஒன்றாக வெளிவந்த சிறார்களிலிருந்து பிரிந்து தனிவழியே நடந்து கொண்டிருந்தார்கள் நிரோஷாவும் நஸீம்கானும்; இருவரும் ஐந்தாம் வகுப்புத்தான்.

“காரு வார்…இங்கல வாங்கொ” நஸீன்கான் கவனமாக அவளைப் பாதையோரத்துக்கு இழுத்துக் கொண்டான்.

இருவருக்கும் ஒரே வயதுதான். இருந்தாலும், நணீம்கான் சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையல்லவா. நிரோஷா பள்ளிக்கூடத்துப் போகும்போதும், வரும்போதும் நஸீம்கானை தனது பாதுகாவலனாகத்தான் கருதி வருகிறாள்.

நிரோஷாவின் உம்மாவும் நஸீம்கானின் வாப்பாவும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள். அவர்களது பெற்றோருக்கு அவர்கள் இருவருமே குழந்தைகளாதலால், ஒரே வீட்டின் இரண்டு பகுதிகளிலும்தான் இரு குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். இதனால்தான் போலும் நிரோஷாவுக்கும் நஸீம்கானுக்குமிடையே இவ்வளவு நெருக்கம்.

“நிரோஷாக்கு இஸ்கோத்து தரவா?”

வேண்டாமென்றா சொல்வாள். அவள் தலையாட்டி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

அவன் தன் கழுத்திலே தொங்கிக் கொண்டிருந்த பேக்கைத் திறந்து புத்தகங்களை விலக்கி, நாலைந்து பிஸ்கட்டுகளை வெளியெடுத்து, மூன்றை நிரோஷாவுக்கு கொடுத்துவிட்டு அவனும் கடிக்கத் தொடங்கினான்.

அவன்தான் ஐந்தாம் வகுப்பு மொனிட்டர். பிஸ்கட் பகிர்வதும் அவன்தான். இதனால் எப்படியும் மேலதிகமாக நாலைந்து அவனுக்கு கிடைக்கவே செய்யும். அவற்றை நிரோஷாவுக்காக வீணாக்காமல் வைத்துக் கொள்வான். அவளுக்கும் நாளாந்தம் மூன்று பிஸ்கட் கிடைக்கத்தான் செய்யும். இருந்தாலும் நஸிம்கான் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வதில் கொள்ளை ஆசை.

“தண்ணி தரவா?”

சற்று நின்று தன் தோளிலே தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் போத்தலிலிருந்து தண்ணீர் வார்த்து நீட்டினாள் அவள். அவன் குனிந்து அதனைக் குடித்தான்.

வெள்ளை உடுப்புகள், பேக்குகள் சகிதம் களைத்துப் போனவர்களாக இருவரும் வீட்டு எல்லையை அடையும் போது, அன்று அவர்களுக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது.

வீட்டிலே ஏதோ பரபரப்பான சூழ்நிலை. நிரோஷாவின் உம்மாவும் வாப்பாவும் நடு முற்றத்தில் தடிகளை நட்டு வேலியடைத்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே இரு பக்கத்தாரும் அகோரமாக வாக்குவாதப்பட்டார்கள்.

நிலைமையைச் சற்றே புரிந்துகொண்டதும் நிரோஷாவின் கண்மேட்டில் கண்ணீர்த் துளிகள் உருண்டு நின்றன. சோகம் கலந்ததொரு பார்வையை அவள்மீது வீசினான் நஸீம்கான். இருவருக்கும் எதுவுமே கதைத்துக் கொள்ள இயலவில்லை. இருபக்கமாகவும் பிரிந்து சென்றார்கள்.

வெளியே மாத்திரமல்ல வீட்டினுள்ளும் கூட நடுப்பகுதி அவசர கோலத்தில் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு வீடாக அல்ல; இப்பொழுது இரு வீடுகளாக இருந்தன.

“உம்மா…இதெனத்தியனும்மா” வெள்ளைச் சட்டையை கழற்றி வைக்காமலேயே அவள் கேட்டாள்.

“இங்க வாடீ…இதுக்குப் பொறகு அந்தப் பொக்கத்துக்கு அடிவெக்கப்படாது. ஸ்கூலுக்குசரி கடக்கிச்சரி அவனோட போ பாக்க”

உம்மாவின் கடூரமான வார்த்தைகள் அவளது சின்ன இதயத்தை சுளீரென்று குத்தியது. அவளால் அன்று சாப்பாடுகூட உட்கொள்ள முடியவில்லை.

மாமாவுடனோ மாமியுடனோ அவளுக்கு கதைக்காமலிருந்துவிடலாம். ஆனால் நஸீம்கானோடு…இவ்வளவு ஒன்றாகவே கைவீசி வீசி பள்ளிக்கூடம் சென்ற அவர்கள், இனிமேல் தனித்தனியாக…

நினைக்கும்போதே வேதனை அவளிதயத்தை நாராகக் கிழித்தது.

அன்றும் நிரோஷா பள்ளிக்கூடம் போக வெளிக்கிட்டாள்; தனியாகத்தான். இப்படித் தனியே அவள் போய்வர ஆரம்பித்து இப்போதைக்கு ஒரு வருடத்துக்கும் மேலாகிறது.

சற்று தூரத்தில்…ஆமாம் நஸீம்கான் போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். அவசர அவசரமாகப் போய் அவனை நெருங்குவோமா என்ற ஆசை. மறுகணம் முன்னைய சில சம்பவங்களின் நினைவுக் கீறல்…அவனோடு கதைத்ததற்காக உம்மா அவளது தொடையைக் கிள்ளியெடுத்த வலி இன்னும் நெஞ்சிலிருந்து அகலவில்லை.

ஒரு பெருமூச்சு அவளுக்குள்ளிருந்து பழைய நினைவுகளையெல்லாம் கிளறிக்கொண்டு வெளியேறியது.

முன்பெல்லாம் சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குளிக்கப் போவதே ஓர் ஆனந்தம். மாமாவின் அல்லது வாப்பாவின் கண்காணிப்பில் சென்றாலும் அவன்தான் அவளுக்கு வழிகாட்டி.

வயல்வெளிக்கூடாக சுமார் ஒரு மைலுக்கப்பால் கொடவன்ன’ என்றொரு வெட்டு வாய்க்கால். அதில் குளிக்கவும் முடியும். லீவு நாட்களென்றால் பிள்ளைகளுக்கு அங்குதான் கொண்டாட்டம். வயலை அண்டிய பற்றைக் காடுகள்…

அங்கெல்லாம் கரம்பைக்காய்…சிமிட்டிக்காய்…இத்தியாதிகள்.

நஸீம்கானின் கையில் எப்பொழுதும் கெட்டபொல்’ இல்லாமல் போகாது. கல்வைத்து எதற்காவது அடித்தானென்றால் அதைப் பொறுக்க அவள் ஓடுவாள். அந்தளவுக்கு அவனது இலக்கில் அவளுக்கு நம்பிக்கை.

குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கினாலோ அவன் பாடு கொண்டாட்டம் தான். சிலவேளை கரையில் நிற்கும் அவளை உள்ளே தள்ளி விடுவான். அவள் தத்தளித்துச் சத்தமிடும் போது பாய்ந்து இழுத்து நிறுத்தி விடுவான்.

சாரத்தை மடித்துக்கட்டி பலூன் போல காற்றடித்துக் கொண்டு… காலடித்தடித்து நீந்தி விளையாடுவான். அவளுக்கோ பொழுது போவதே தெரியாது.

மாலை வேளைகளில் வீட்டுப் பின்புறமாகவுள்ள மலைச்சாரலில் தான் அவர்களது பொழுது கழியும். ஏதாவதொரு பெருமரம் அங்கு விழுந்துகிடக்கும். நாலைந்து சிறுவர்களை அமரவைத்துக் கொண்டு அவன் தன்னை டிரைவராகக் கற்பனை பண்ணிக் கொண்டு துள்ளித் துள்ளி உதைப்பான். மரம் மேலும் கீழும் ஆடியசையும். அதன் தாக்கத்துக்கு ஈடு பிடிக்க முடியாமல் சிலவேளை வாய்விட்டுக் கத்துவாள். அப்போது அவனது ஆட்டம் இன்னுமின்னும் அதிகரிக்கும். ஆனால் அவள் விழுந்துவிடப்பார்த்தாலோ கைதாங்கிக் கொள்ளவும் தவறமாட்டான்.

பருவ விடுமுறை காலங்களில் குஞ்சூடு’ அமைக்கும் சீஸன் வந்துவிடும். கம்பு… ஓலைகள் கொண்டு சின்னஞ்சிறு வீட்டை அமைத்துக் கொள்வார்கள். அங்கே குடும்ப வாழ்வுக்கே ஒத்திகை நடக்கும். பெரும்பாலும் நிரோஷாவையும் நஸீம்கானையும் தான் கணவனும் மனைவியுமாகத் தீர்மானித்து விளையாடுவார்கள்.

“டணங்… டணங்…”

பள்ளிக்கூட மணியொலித்தது. தன் நினைவலைகளை அறுத்துக் கொண்டு கேற் மூடுவதற்கிடையில் உள்ளே ஓடினாள் நிரோஷா.

இலசவ புத்தகங்களுக்கு மேலட்டை போட்டுக் கொண்டிருந்தாள் நிரோஷா. அவள் இப்பொழுது எட்டாம் ஆண்டு அல்லவா? முன் வாசலில் காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து தலை நிமிர்ந்தாள் அவள். அவளால் நம்பவே முடியவில்லை. அங்கே அவளது மாமா வந்து கொண்டிருந்தார்.

“ஆ… வாங்கொ ….. இரீங்கொ நானா” என்றாள் அவளது உம்மா.

“தங்கச்சீ… எப்போதும் நாங்க கோவமா இருக்கேலுமா கோவதாவங்கள மறந்திரோணும். நாளாக்கி மகன்ட சுன்னத்து செய்யப்போ எல்லாரும் நேரத்தோட வந்து வேலவெட்டியள பாத்துக்கேட்டுச் செய்யோணும்” இது மாமாவின் அடக்கமான வார்த்தைகள்.

அவளது மாமா கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். உம்மா ஊற்றிக்கொடுத்த கோப்பியை குடித்து விட்டுத்தான் சென்றார். நிரோஷாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

“மாமா வந்திட்டுப் போற…ம்…எந்த நாளும் நாங்க கோவமா ஈக்கேலுமா. குடும்பத்துக்குள்ள சண்டை சச்சரவு வந்தத்துக்கு எந்த நாளும் நீடிக்கியல்ல.” மகளை நியாயப்படுத்தும் பாங்கில் அவள் சொன்னாள்.

அடுத்த நாள்…

நிரோஷா கண் விழிக்கும்போது முற்றத்தை இரு கூறிட்டிருந்த வேலியைக் காணவில்லை. அவளது உம்மா மாமி வீட்டில் கத்திரிக்காய் அரிந்து கொண்டிருந்தாள். வாப்பாவும் மாமாவும் முற்றத்தில் ஏதோ ஏற்பாட்டில் மூழ்கிப் போயிருந்தார்கள்.

அவளும் முற்று முழுதாக வேலைகளில் இறங்கிவிட்டாள். அடுத்தடுத்து வீடுகளிலிருந்து கதிரைகள் கொண்டு வருவதும் வீட்டைத் துப்பரவு செய்வதும், கடைக்கு ஓடியாடுவதுமாக அவளது பொழுது கழிந்து கொண்டிருந்தது. பகலைக்கு எல்லோருக்கும் அங்குதான் சாப்பாடும் கூட.

மாலை நான்கு மணிக்கெல்லாம் சுன்னத்துச் சடங்கிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. வீடெல்லாம் ஒரே சனமும் ஆரவாரமுமாக இருந்தது. வருவோர்க்கு தேநீர்-பலகாரங்களை உள்ளேயிருந்து ஒழுங்கு பண்ணிக் கொடுத்தாள் நிரோஷா.

சுன்னத்து மாப்பிள்ளையை உடுப்பாட்டி, மாலையிட்டு, ஊர்வலமாகப் பள்ளி வாசலுக்கு அழைத்துச் சென்றபோது அவள் நன்கு கூர்ந்து பார்த்தாள்.

ஸவாரி ஓட்டோடு நஸீம்கான் மிகவும் அழகாய்த் தோற்றமளித்தான்.

காணிக்கை போட்டுவிட்டு வந்ததைத் தொடர்ந்து முபாரக் லெப்பையின் தலைமையில் ‘அல்லாஹ் அல்லாஹ் ஸிக்ரு முழக்கத்திற்குள்…நஸீம்கானின் பிரலாபம் அமுங்கிப் போய்.. எல்லாம் நிறைவேறி முடிகையில் வெள்ளம் வடிவது போல்.. சனங்கள் சிறிது சிறிதாக….

முன்னறையில்தான் நஸீம்கானுக்கு சுன்னத்துப் படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இனசனத்தவர்கள், நஸீம்கானின் கூட்டாளிமார்கள் வருவதும் போவதுமாக….

நிரோஷாவுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. கதவு நீக்கலுக்கிடையால் மெல்ல எட்டிப் பார்த்தான்.

அவன் மல்லாந்தபடி படுத்திருந்தான். முகத்தில் வேதனை கப்பியிருந்தது. வாப்பா பக்கத்தேயமர்ந்து காற்று வீசிக்கொண்டிருந்தார். கூரைக்குக் குறுக்காக வெண் பிடவை கட்டி… அதிலிருந்து நூல் தொங்கவிட்டு…. அதில் பூட்டூசி போட்டிணைத்த வெண்பிடவை மலையுச்சி போல் குவிந்து… கழுத்து முதல் கால்வரை மறைத்துக் கொண்டிருந்தது. பாவம் என்று அவள் மனம் சொல்லிக் கொண்டது.

“நிரோஷா…எனத்தியனிது. உள்ளுக்குப் பெய்த்து மச்சனப்பாரே…இப்பிடி ஒளிச்சொளிச்சிப் பாக்கோணுமா”

அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மாமி இப்படிச் சொன்னதும் அவளுக்கு வெட்கம் வெட்கமாக வந்தது. இருக்காதா என்ன? சுன்னத்து அல்லவா? ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினாள் நிரோஷா.

– மல்லிகை 1987 ஆகஸ்ட், சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *