பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை திணிக்காவிட்டால்,மனம் கவலை கொள்ள ஏதவதொரு பிரச்சனையை கொண்டு வந்து அதைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிடும்.பேப்பரில் அச்சியப்படும் செய்திகளை உருவாக்குகிறவர்களாக சில நபர்கள் நாட்டில் இருக்கிறார்கள்;பல பேர் அதனைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்,அதில் சங்கரனும் ஒருவன்.
திரும்பவும் பைரவியின் முகம் அவனுடைய மனதில் தோன்றியது.அவன் பயின்று வந்து அதே காலகட்டத்தில் வேறோரு துறையில் படித்து வந்த பெண் அவள் மூன்று வருடங்களில் மூவகைத் தோற்றம் கண்டான் அவளிடம் ஸ்ரீதேவியாய்,கலைமகளாய்,திருமகளாய் தெய்வமாய் நினைத்து வணங்கிச் சென்றிருக்கலாம்;கோவில் தெய்வம் தன்னுடைய வீட்டில் குடியிருக்க வேண்டுமென ஆசைப்பட்டான் சங்கரன்!தன்னை கும்பிட வருபவனையே சோதனை செய்யும் தெய்வம், குடியிருக்க அழைத்தால் சும்மா விடுமா?
இதயச் சிப்பிக்குள் விழுந்த அவளின் நினைவுகளைப் பக்குவமாய் பாதுகாத்து வந்தான் சங்கரன்.சில வருடங்களில் நினைவுத் துளிகள் முத்தாய் உருமாறியது.இந்த விலை மதிப்பற்ற முத்து அனுமனைப் போல் தன் ஆற்றல் உணராமல் தன்னை மாலையாக்கிச் சூடிக்கொள்ள பைரவியின் கழுத்தை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நின்றது.
உலக வரலாற்றில் சரிந்தன பல சாம்ராஜ்யங்கள் பெண்களின் கடைக்கண் பார்வைக்காக!சாம்ராஜ்யங்களே அப்படியென்றால் அதில் ஒரு துரும்பு சங்கரன்.சங்கரனைப் பொறுத்தவரை உலகிலேயே பாக்கியசாலி யாரென்றால் பெண்ணால் காதலிக்கப்படுபவன் என்பான்!இவனைச் சொல்லி என்ன பயன் சரியும் சீட்டுக் கட்டில் இவனும் ஒரு சீட்டு அவ்வளவே.
ஜடப்பொருள் மூலக்கூறுகளின் சரியான ஒருங்கிணைப்பால் அமைந்த அவளது முகத்தில் வசீகரம் அவனை ஈர்த்தது;எந்த ஒரு மூலக்கூறுகளின் கூட்டமைவும் இறுதியில் பிரிந்து அழியும் என அவன் உணர்ந்திருக்கவில்லை.சந்ததிகள் உருவாகவும்,மனித இனம் அழியாமல் இருக்கவும், இயற்கை நடத்தும் விளையாட்டு இது.இவற்றை பகுத்தறிந்து உணர்வதற்கு இவன் ஆதிசங்கரனல்ல வெறும் பி.எஸ்.சி தேர்ச்சியுறாத சங்கரன்.
தன் காதலை பேனா மையின் உதவியால் காகிதத்தில் வெளிப்டுத்தி கடிதத்தை அவளிடம் கொடுத்தான்.மறுநாள் பதில் வருமென்று எதிர்பார்த்து வகுப்பறையில் காத்திருந்த சங்கரனுக்கு கல்லூரி முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது.முதல்வர் அறையில் ஐந்தாறு நபர்கள் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் இருந்வர்கள் அறையில் நுழைந்த சங்கரனை முறைத்துப் பார்த்தார்கள்.மேஜையில் அவன் பைரவிக்கு கொடுத்த காதல் கடிதம் இருந்தது.
சங்கரனின் தந்தையை கல்லூரிக்கு அழைத்துவர ஏற்கனவே ஆள் அனுப்பிவிட்டார்கள்.விவரம் என்னவென்று அறியாமல் வந்த சங்கரனின் அப்பா சண்முகத்தை பைரவியின் அண்ணன்கள் தரக்குறைவாகப் பேசவே, அவருக்கு சங்கரன் மீது கோபம் திரும்பியது;அங்கேயே அவனை இரு கன்னத்திலும் அறைந்தார்.முதல்வர் சங்கரனின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக பைரவியின் அப்பாவிடம் சமரசம் பேசினார்.ஆனால் அவர்கள் விடாப்பிடியாக மறுத்ததுடன்,அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஈவ்டீசிங்னு போலீஸில புகார் பண்ணிடுவோம்னு மிரட்டவே,கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்று சங்கரனை சஸ்பெண்ட் செய்து வைத்தார் கல்லூரி முதல்வர்.அவனுடைய கடைசி பருவத் தேர்வை எழுதவும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இந்த விஷயம் காட்டுத்தீபோல் ஊரில் பரவியது.
சண்முகம் வேலை செய்யும் அலுவலகத்திலும்,ஊரிலும் அவரைத் தெரிந்தவர்கள் இதைப் பற்றி விசாரிக்கவும்,வளர்ப்பு சரியில்லையென்று அவர் காதுபடவே ஏசவும் செய்யவே, அவருக்கு அவமானமாக இருந்தது.அடக்கிவைத்திருந்த கோபத்தை வீட்டில் காட்டினார்.
“கண்ணாடிவீட்டிலேர்ந்து கல்லெறிந்து விட்டான்டி உம்புள்ள;அவனவன் படிக்க வைக்க காசில்லாமல் டேபிள் துடைக்கிறானுங்க!இவனை படிடான்னு காலேஜ்ல சேர்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்பிவைச்சா அவன் மேல வைச்ச நம்பிக்கையை பொய்யாக்கிட்டு போற வர பொண்ணுங்க பின்னாடி அலைஞ்சிகிட்டு இருந்திருக்கான்.எப்ப அவன் மனசில வேற எண்ணம் வந்திருச்சோ இனிமே அவன் படிப்புக்குன்னு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் பெத்திட்டேங்கிறதுக்காக வீட்ல இருந்துட்டுப் போகட்டும்;இனிமே ஒரு பிரச்சனையை இழுத்துகிட்டு வீட்டுக்கு வந்தான்னா, நானே அவனை போலீஸில ஒப்படைச்சிட்டுப் போயிடுவேன்.அங்க போய் கம்பி எணணுனா புத்தி வந்துடும் உம்புள்ளைக்கு!” என்றார் தன்னுடைய மனைவி வனஜாவிடம் சண்முகம்
“கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியாடா? அம்மா,அப்பா,குடும்பத்தைப் பத்தி, உம்படிப்பைப் பத்தி அதுக்குள்ள என்னடா உனக்கு அவசரம்?இப்ப அம்புட்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறியேடா!இத்தனை வருஷம் ராப்பகலா படிச்சிம், எல்லாம் வீணாப்போயிட்டுதே, அப்பவே ஜோசியக்காரன் சொன்னான் பையனுக்கு ராகுபுத்தி நடக்குதுன்னு பயந்தமாதிரியே நடந்திடுச்சி!” என்று சங்கரனிடம் புலம்பினாள் அவனது அம்மா வனஜா.
இப்பொழுது அவள் கீரைக்காரியிம் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கி கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழரை ஆகியிருந்தது.இன்னும் சரியாக நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் சென்னை விமான நிலையத்தில மலேசிய விமானத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும் என்ற நினைவு வந்தது.டவுனுக்குச் சென்று ஏஜெண்ட்டிடம் சில விவரங்களை கேட்க வேண்டிய வேலையிருந்தது.குளித்த பின் சாப்பிட்டுவிட்டு டவுன் நோக்கி சைக்கிளில் சென்றான் சங்கரன்.
சில வாரங்களாகவே அவனுடைய வீட்டில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது.அவரவர் மனங்களில் ஒரு புழு குடைவது போன்ற உணர்வு.அதற்குக் தற்போதையை காரணம் சங்கரனல்ல அவனுடைய அக்கா உஷா.
சண்முகம் அரசுப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்று ஒரு வருடம் முடியப்போகிறது.வீட்டில் போர் அடிப்பதால் தனியார் கல்வி நிறுவன அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்று வருகின்றார்.ஓய்வுக்குப் பின் வந்த பி.எப் பணத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே அக்காவின் கணவர் தொழில் துவங்க கொடுத்திருந்தார்.அன்று மீண்டும் ஒரு யாசகம் அக்காவிடமிருந்து தொலைபேசி வழியாக ” இப்போதைக்கு எவ்வளவு புரட்ட முடியும்னு தெரியலை, நான் பாத்துகிட்டு நாளைக்கு காலையிலே போன் பண்றேனே! ” என்று சண்முகம் ரிசீவரை கீழே வைத்தார்.
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார்.அதற்கு அவள்” எதையும் யோசனை பண்ணி செய்யுங்க நமக்கும் ஒரு புள்ள இருக்கான்!அவனுக்கும் சரியா வேலை எதுவும் அமையலை ” என்றாள்.
“இல்ல வனஜா, பணத்தை கொடுத்துட்டு அவரு பிசினஸில இவனையும் சேர்த்துவுட்டு பார்த்துக்கடான்னா பார்த்துக்கமாட்டான், அப்படி இப்படி ஒத்தாசையா இருந்தான்னா இவனுக்கும் ஏதோ மாசத்துக்கு இவ்வளதுன்னு செலவுக்கு கொடுக்கமாட்டாரா மாப்பிள்ளை! ” என்றார் சண்முகம்.
“ஏங்க அந்தப் பணத்துல இவனுக்கே ஒரு தொழில் வச்சிக் கொடுத்தா நல்லா பண்ணமாட்டானா?நீங்க என்னமோ அவருகிட்ட பணத்தை கொடுத்திட்டு, இவனும் அங்க போய் ஒத்தாசையா இருப்பானாம், அவரு ஏதோ பாத்து செலவுக்கு ஏதாச்சும் கொடுப்பாராம்!ஏங்க உங்களுக்கு இப்படி தோணுது? பணத்தையும் கொடுததுட்டு அவனையும் அனுப்பிவைச்ச நல்லா இருக்கும் ” என்று கடுகடுத்தாள்.
சங்கரன் காதுக்கு விஷயம் எட்டியது.அச்செய்தி அவனுக்கு வேம்பாய்க கசந்தது.
“எந்த அத்தாட்சியும் இல்லாம பணத்தை ஏற்கனவே கொடுத்திருக்கோம்.இப்ப திரும்பவும் கொடுத்திட்டு, நாளைக்கு அவசரத்துக்கு கேட்டா அவர் கொடுப்பாரா நாம தான் கறாரா கேட்க முடியுமா?இன்னொருத்தர் கிட்ட பணம் வாங்கினா திரும்பக் கொடுக்கணுமேன்னு ஒரு மனசில எண்ணம் இருக்கும்.இப்ப நம்ம அப்பாகிட்ட வாங்கினாக்கா மாமா தானே ஒண்ணும் சொல்லமாட்டார் அப்படின்னு தோணும்” என அம்மாவின் காதில் போட்டு வைத்தான் சங்கரன்.
ஏற்கனவே சங்கரனால் ஏற்பட்ட தலைகுனிவை மனதில் வைத்திருந்த சண்முகம் “அவன் போறதும், போகாததும் அவனிஷ்டம் என்னை பணம் கொடுக்காதீங்கன்னு சொல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கு? “என்றார் கோபமாக சங்கரனின் யோசனையை சொன்ன தன் மனைவியிடம்.
வனஜா சங்கரன் தனியாக இருக்கும் போது அவனிடம் வந்து ” அவருக்கு உம்மேல இருக்கிற கோபம் இந்த ஜென்மத்துல தீராதய்யா; அவரு ஏதோ சொத்தை பிரிக்கறேன்னு வக்கீலைப் பார்க்க போயிருக்கிறார்.வயித்துப் புருஷனுக்கா, கயித்துப் புருஷனுக்கா யாருக்கு நான் பரிஞ்சு பேசுறது? அவர்கிட்ட ஏடாகூடமா ஏதாவது பேசிவைககாம கொடுக்கிறதை வாங்கிக்க ராசா;நீ நல்லாயிருப்ப, சொத்து,பணம் எல்லாம் ஆத்து தண்ணி மாதிரி நிலையா இருக்காதுய்யா உம் அம்மாவோட ஆசிர்வாதம் உங்கூடவே வரும்யா ” என்றாள் கண்ணீருடன்.
தான் மறைந்த பிறகு அப்பா எனக்கும் ஒண்ணும் செய்யலை என்ற பேச்சி வந்துவிடக் கூடாது என்பதாலும்.சண்முகத்துக்கு ரெண்டு பிள்ளைங்க தான் அதுகளே ஒண்ணுக்கொண்ணு விட்டுக்கொடுத்துப் போகாம கோர்ட்ல போய் நிக்கிதுக என்ற அவப் பெயர் வந்துவிடக்கூடாது என்பதால் உயிருடன் இருக்கும் போதே சொத்தைப் பிரித்து நிலத்தையும்,வீட்டு மனையையும் பெண்ணுக்கு கொடுத்து விட்டு அதற்சு ஈடாக சங்கரனுக்கு ஒரு தொகையை கொடுத்தார்.வீட்டை மட்டும் தன் பேரிலேயே வைததுக்கொண்டார் சண்முகம்.
“இனி அவங்கவங்க சொந்தக்காலிலே நிக்கப் பழகிக்கிங்க இந்த வயசான காலத்தில பணம் கொடு கொடுன்னு ஒரு பக்கமும் கொடுக்காதே கொடுக்காதேன்னு ஒரு பக்கமும் சொன்னா நான் என்னத்த செய்ய?ரெண்டும் எம்புள்ளைங்க தான்.அதான் பிரிச்சிக் கொடுத்திட்டேன்;அத வச்சி ஏதாவது பண்ணிக்கட்டும்.சங்கரன் பிரச்சனை பண்ணினதுனால அவன் இந்த வீட்ல இருந்தா மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து யாரும் இங்க வந்துபோகமாட்டாங்க அதனால கொஞ்ச நாள்ல அவனை வேற எங்கயாச்சும் தங்கிக்கச் சொல்லிரு.உத்யோகம் கிடைச்சி கல்யாணம்னா, அதுவும் வந்து சொன்னான்னா பெத்தவன்ங்கிற கடமைக்கு வந்து அட்சதை போடறேன்!செத்த பின்னாடி கொள்ளி அவன் தான் வைக்கணும்னு இல்ல யார் வைச்சாலும் எரியும் இந்த கட்டை சொல்லிட்டேன்” என்று கூறி மெளனமானார்.
அன்று இரவு வீட்டிற்குச் செல்லாமல் விரக்தியான மனநிலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழமையான சிவன் கோவில் மடத்திற்குச் சென்று படுத்துக் கிடந்தான் சங்கரன்.அருகில் இருக்கும் இடுகாட்டுக்கு தப்புச் சத்தத்தோடு பிணம் சென்று கொண்டிருந்தது.என்றேனும் ஒரு நாள் நாமும் இறந்துவிடுவோம் நடந்ததைப்பற்றிய மனக்கசப்புகளும்,நடக்கப் போவதைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகளும,திட்டங்களுமின்றி சிவனே என்று சரணடையலாம். உயிருடன் இருக்கும்போது முடியாத சரணடைதல் உடலை விட்டு நீங்கியதும் முடிகிறதே எப்படி என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
இந்த சிந்தனை அவனுக்கு அமைதியைத் தந்தது என்றாலும், சங்கரன் என்ற இந்த உடலைச் சுமக்கும் வரை சில தன்மானங்களை,சுய மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது என எண்ணினான்.தியாகம்,தியாகம்,தியாகம் இவையில்லையென்றால் வேறெப்படி அடைய முடியும் இறைவனை என்ற என்றோ படித்த ஆன்மிக பெரியோர் ஒருவரின் பேருரைகளின் சாரம் ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு, ஆனாலும் மற்றவர்களின் வளர்ச்சிக்காகவும்,வசதிக்காவும் நம்மை வளைக்க முற்படும்போது இயல்பாகவே கோபம் எழுகிறது.மற்றவர்கள் உயரே செல்ல யார்தான் படிக்கல்லாய் இருக்க ஆசைப்படுவார் இவ்வுலகில்?இயலாமையினால் அவர்களின் வலையில் சிக்கி நம் கனவு,கற்பனை சிதைந்துவிடுமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது.தரையில் படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தான் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கோழையாயிருப்பதை விட உலகைத் துறந்துவிடலாம் அல்லது இறந்துவிடலாம் என்ற எண்ணமும்,இவ்வுளவு தானா என் வாழ்க்கை முற்றுப் பெறாத கதையாகிவிட்டதே ?எப்படி இருப்பினும் இழப்பு தனக்குத்தான் என்ற எண்ணமும் மேலோங்கி அவனை அழவைத்தது.
அழுது கொண்டிருந்த அவன் தோளை பற்றி உலுக்கியது ஒரு கை;திரும்பிய சங்கரன் மடத்தின் மாடவிளக்கின் வெளிச்சத்தில் பரதேசிக் கோலத்தில் இருந்த ஒருவனைப் பார்த்தான். “கோவில் மடத்திற்கு வந்து படுத்துக் கொண்டு வீட்டை நினைத்து அழுகிறாயா?உனது பருவத்தைப் பார்த்தால் பெண் ஸ்நேகிதத்தில் தோல்வியாயிருக்குமென்று தோன்றுகிறது ” என்று சொல்லிவிட்டு
சற்று நேரம் நிதானித்தான். “உண்மையா, இல்லையா?.ஆமாம் அல்லது இல்லையென்று சொல் “என்றார் குரலில் கண்டிப்புடன்.ஆமாம் என்று தலையசைத்தான் சங்கரன். ” விரும்பியவளையே திருமணம் செய்து கொண்டால் அவள் உனக்குச் சொந்தமாகிவிடுவாளா? ” என்ன யோசிக்கிற சொல்றேன் கேளு என்று ஆரம்பித்தான் அப்பரதேசி.
சக்திக்கு வரம் தந்து
அதனால் சிவன் தன் இடந்தந்து
குமரியில் அவள் குங்குமம் கலந்து
மண்ணே செந்நிறமாய் யுகயுகமாய் காட்சி தந்து
காமனை நெற்றிக்கண் நெருப்பால் எரித்து
கையிலையில் தேவியுடன் தாண்டவம் புரிந்து
மந்தை ஆடுகளின் மீது பாயும் புலிகளைப் போல்
இன்பத்தின் மீது வெறிகொண்டு அலையும்
ஐம்புலன்களாகிய புலிகளைக் கொன்று
அதன் தோலில் அமர்ந்திருக்கும் சிவனையன்றி
வேறு யாரைத் தீண்டுவாள் அந்தசக்தி
என்று உரக்க பாடிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தான் அப்பரதேசி
“இந்த ஆண்டியும் ஒரு நாள் அரசனைப் போல் வாழ்ந்தவன் தான்!இல்லறத்தில் ஈடுபட்டு அழகான மனைவி மக்களைப் பெற்றவன் தான்,சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதைப் போல் நிஜத்தை ஒரு நாள் எதிர் கொண்டேன்;ஒரு அறை விழுந்தது, சிங்கத்தின் அறையல்லவா இவ்வுலகத்தைப் பொறுத்தவரை நான் மாண்டவன் தான்.புல்,பூண்டு முதல் மனிதன் வரை எல்லாம் அவன் சொத்து என உணர்ந்தேன்.அதனை அனுபவிக்கலாம் தனக்குத்தான் உரிமையென சொந்தம் கொண்டாட முடியாது! என்ன விளங்கிச்சா? ” என்றவன்.
“உன் முடிவை கைவிடலை போலிருக்கே அதான் தற்கொலை பண்ணிக்கிறதை சொன்னேன்.உன் அகம் துடிக்கிறது எனக்குத் தெரியுதே!ஒண்ணு புரிஞ்சிக்க இங்க எல்லோரும் போறத்துக்காகத் தான் இருக்கோம் கொடுத்த வேலை முடியட்டும் ” என்று சிறிது நேரம் கண்களை மூடி கழுத்தில் கிடந்த ருத்ராட்சையை நெற்றிப் பொட்டில் சில வினாடிகள் வைத்திருந்து பிறகு கண்களைத் திறந்து பேச ஆரம்பித்தான்.
“சாகிறத பத்தி நான் ஒண்ணும் சொல்லலை,அதோட வாழ்க்கை முடிஞ்சிட்டுதா என்ன?அதே போல் சந்நியாசம் கொள்வதும் எளிதல்ல யோசிப்பாரு வசதி இருக்கும் போது அதை அனுபவிக்காம இருந்தாலும், அவை நம் சொத்து என்ற எண்ணம் மனநிறைவைத் தரும்;எல்லாத்தையும் துறந்திட்டா எதைக்கண்டு நிறைவடைய முடியும்? எது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும்? ”
“இன்னொன்னு என்ன தான் வெளியில திருவோடு ஏந்தி, திருநீறு அணிந்தாலும் முற்றத்தில் சோற்றை வைத்தாலும் தெருவில் கிடக்கும் மலத்தை தின்னும நாயைப் போல் மனம் மோகம் கொண்டு வீதியில் அலையும்.காவி உடுத்தினா மட்டும் பத்தாது,ஈசன் மாலையிலும் மலத்திலும் மாறி மாறி உட்காரும் ஈக்களைப் போல் இருக்கப்படாது. ”
“விரக்தியின் விளிம்பில் தற்கொலை,அதைப் போல விரக்தியின் விளிம்பில் சந்நியாசம்.எனக்கு ஏன் சாவு வரமாட்டேங்கிது, சாவு வரமாட்டேங்கிதுன்னு நாள் பூரா சொல்றவன் பாம்பு கடிச்சா உடனே வைத்தியர்கிட்ட ஓடுவான்.காலமே காயங்களை ஏற்படுத்தும்;காலமே காயங்களுக்கு மருந்தாகும்.குட்டையாய தேங்கிவிடாதே,ஆறாய் ஓடு;எதிர்ப்படும் காமம்,மோகம்,புகழ், மழலைச் செல்வம் ஆகியவற்றைக் கடந்து வா, அமைதிக்கடலில் சங்கமிக்க வா.பறவைகளுக்கு கலங்கரை விளக்கமா வைக்கிறாங்க, இல்ல மழைத் தண்ணிக்கு வாய்கால் வெட்டுறாங்களா?மழைத்துளி மாதிரி விழுகின்ற இடம் தெரியாமல் பிறக்கிறோம்;விழுந்த இடம் குளம்னா,குட்டைனா,ஏரினா,சாக்கடைனா நம்மளும் அதான்.அதுலேர்ந்து விழுந்த மழைத்துளியை மட்டும் பிரிக்க முடியுமா? ”
“அப்புறம் என்னவோ ஊட்ல அக்கா குடும்பத்தோட,அப்பாவோட பணவிஷயத்துல மனஸ்தாபம்னு புலம்பறியே.நடந்து போகும் வழியில் பெரிய குழியில் விழுந்துட்டோன்னு வை.இரண்டு கைஇருக்கிறதுனால மட்டும் மேல ஏறிட முடியுமா?மனசில நம்பிக்கை வேணும், அப்பதான் மேல ஏற முயற்சி பண்ணத் தோணும்.வாழ்க்கையில நிறைய பள்ளம் இருக்கு தம்பி;நல்ல வேளை இந்த சின்ன குழியில விழுந்துட்டோன்னு சந்தோஷப்பட்டு, யானைக்கு வெட்டின குழிக்குள்ள நம்ப விழுந்திட்டா என்னாகும் நினைச்சிப்பார்! தும்பிக்கை இல்லைனா விநாயகப் பெருமான் இல்லை.நம்பிக்கை இல்லைனா மனுசன் இல்லை. ”
“காலையில் அவன் வீ்ட்ல இருக்கணும் இல்லாட்டி முருகன் கோச்சிப்பான் ” என்று சொல்லிவிட்டு அந்த இருளில் கிளம்பிய அவன் எழுந்து நின்று சிறிது நேரம் ருத்ராட்சை மாலையை கைவிரலால் உருட்டிய பின் கண் திறந்து சங்கரனை நோக்கி ” உளியால் அடிப்பது வலிக்குதேன்னு கல் நினைத்தால் அது தெய்வச்சிலையாக முடியுமா? விடியப்போகுது தம்பி நான் கிளம்பறேன் ” என்று விடைபெற்றான் அப்பரதேசி.
அங்கிருந்து நெஞ்சுறுதியோடு வீட்டுக்கு கிளம்பினான் சங்கரன் யாருமற்ற வீதிகளில் வீசும் காற்று அவனுடைய எதிர்மறையான எண்ணங்களை அடித்துச் சென்றது. அதன் பிறகு தன்னுடைய பங்காகக் கொடுக்கப்பட்ட பணத்திலிருந்து டிராவல்ஸ் ஏஜெண்ட்டிடம் பணம் கொடுத்து பாஸ்போர்ட்,விசா வாங்கி பணிக்காக இப்பொழுது மலேசியா செல்லத் தயாராகி வருகிறான் சங்கரன்.பயணப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் விமான பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளவும், சென்னை செல்லும் பேருந்தில் டிக்கெட் ரிசர்வ் செய்யவும் இப்போது சைக்கிளை மிதித்துக் கொண்டு டவுன் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் சங்கரன்.
மாலை மணி ஆறு சென்னை செல்லும் பேருந்தில் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருக்கும் சங்கரனுக்கு பேருந்து முன்னேறிச் செல்லும் பாதையில் அவன் நீச்சலடித்த ஆறு,விளையாடிய மைதானம்,படித்த பள்ளி,கோவில் ராஜகோபுரம் பேருந்தின் வேகத்தில் பின்நோக்கிச் சென்று அவனுக்கு விடை கொடுத்தன.
வானில் அவன் கூடவே பயணிக்கும் வெண்மேகத்தைக் கவனித்துக் கொண்டே வந்தான் சங்கரன்;சில நிமிடங்களில் அம்மேகம் சிறிது சிறிதாக காற்றில் கரைந்து அம்மேகம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் முற்றிலும் காற்றில் கரைந்துவிட்டது.வாழ்க்கை எனும் காற்று வீசும் திசையில் சங்கரன் பயணித்துக் கொண்டு இருக்கிறான்;காற்றுக்கு எதிராக பயணிக்க அவனால் முடியுமா?ஆஃப்டர் ஆல் ஒரு வெண்மேகமல்லவா அவன்.