கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 2,281 
 
 

தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம். ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும். உள்ளூர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என் தம்பி. அவன் இப்போது எங்கே சென்றிருப்பான். அவனைத்தான் வீட்டில் காணவில்லை. கேள்விக்குப்பதில் ஏதும் எனக்குச்சொல்லாத அம்மா எதிரே இருக்கும் மேசையை மட்டுமே காட்டினாள். அந்த மேசையின் மீது அப்படி என்ன இருக்கிறது. நான் எட்டிப்பார்தேன்.

தம்பியின் திருத்தப்பட்ட தமிழ்த் தேர்வுத்தாள் ஒன்று கிடந்தது.

தம்பியின் கையெழுத்துத்தான். தமிழ் முத்து முத்தாக எழுதியிருந்தான் நான் அதனை எடுத்துப்பார்த்தேன். நடந்துமுடிந்த காலாண்டுத் தமிழ்த்தேர்வில் அவனுக்கு எண்பது மதிப்பெண். தேர்வுத்தாள் எனக்குத் தெரிவித்தது நல்லதொரு செய்திதான்.எப்போதும் எழுபது தொடங்கி எண்பது மதிப்பெண்தானே அவன் வழக்கமாய்ப் பெறுவது. இப்போது ஒன்றும் குறைந்து விடவில்லை. எனக்கு மகிழ்ச்சியே. பின் என்னதான் ஆயிற்று இந்த அம்மாவுக்கு..

என்ன நடந்தது சொல்லேன்? மீண்டும் அம்மாவிடம் கேட்டேன். அவள் சிவப்பு மை கொண்ட பேனாவால் திருத்தப்பட்டு மேசைமீது கிடந்த அந்தத் தமிழ்த் தேர்வுத்தாளையே மீண்டும் எனக்குக் காட்டினாள். அது மேசை மீது சிவமே என்று கிடந்தது. தம்பியின் அந்தத்தமிழ்த்தேர்வுத்தாளையே எடுத்து மீண்டும் பார்த்தேன். எனக்கு ஏதும் புரியவில்லை. விழித்தேன்.

‘மனப்பாடப்பகுதியிலிருந்து திருக்குறள் எழுதச்சொன்ன கேள்விக்கு உன் தம்பி என்ன பதில் எழுதி இருக்கிறான் பார்?’ அம்மா எனக்குச்சொன்னாள்.

தேர்வுத்தாளை ஊன்றிப்பார்த்தேன்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து படும்

உனது மனப்பாடப்பகுதியிலிருந்து.

‘படும்’ என முடியும் திருக்குறளை எழுதுக? என்னும் இந்த வினாவுக்குத் தம்பி எழுதிய விடை. இரண்டாம் வரியில் செய்து விடல் என்பதற்குத்தான் செய்து படும் என எழுதிக் குறளை முடித்து இருக்கிறான். மதிப்பெண் முழுதாக இரண்டும் கொடுக்கப்பட்டுத்தான் இருந்தது. தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர் இது தெரியாமல்தான் முழு மதிப்பெண்ணையும் வழங்கி இருக்க வேண்டும். இதற்கு நீ ஏன் அழுகிறாய்?’

அம்மா பதில் சொன்னாள்.

அப்பா தம்பியிடம் சொன்னார், ‘தேர்வுத்தாளைக்கொண்டு போய்த் தமிழ் ஆசிரியரிடம் காட்டி இரண்டு மதிப்பெண் குறைத்துக்கொள்’ என்றார்.

‘அவர் குணம் உனக்குத்தான் தெரியுமே’

‘ஆமாம் அவர் அப்படித்தான் சொல்வார். அதுவும் சரித்தான்’, அம்மாவுக்குப்பதில் சொன்னேன்.

பிறகு நடந்தது அம்மா சொன்னாள்.

‘தம்பி அவனுடைய தமிழ் ஆசிரியரிடம் சென்று தேர்வுத்தாளைக் காட்டி மதிப்பெண் குறைக்கமுடியவே முடியாது என்றான். எனக்குப் போடப்பட ரேங்க் குறைந்துவிடும். ஆக என்னால் முடியாது என்று காரணம் சொன்னான்’.

‘அதுவும் சரிதானே’ என்றேன்.

‘உன் அப்பா ஒத்துக்கொண்டால்தானே’.

‘அப்புறம் என்ன நடந்தது?’

‘வாக்குவாதம் மட்டுமே நடந்தது. பள்ளி மதிப்பெண் அட்டையில் நீ யே கூட என் கையெழுத்தை போட்டுப் பள்ளியில் கொடுத்துவிடுவாய்’ என்றார் அப்பா. தம்பி பேசாமல் நின்றுகொண்டிருந்தான்.

வாய்மையாற்காணப்படும்

‘படும் என முடியும் குறள் சொல்?’ அப்பா கேட்டார். ‘புறந்தூய்மை நீரால் மையும் அகந்தூய்மை’ உடன் தம்பி குறளைச் சரியாய்ச் சொன்னான். ‘எழுத வேண்டியது தானே’ அப்பா கேட்டார். ‘தேர்வின் போது இக்குறள் நினைவுக்கு வரவே இல்லை. எவ்வளவோ மூளையைக்கசக்கி முயன்றேன் முடியவில்லை. ஆகத்தான் நினைவுக்கு வந்த ஒரு குறள் ஒன்று எழுதி ‘ஈற்றுச்சொல் மட்டுமே’ படும் ‘என மாற்றிப்போட்டேன். இது தெரிந்தே செய்தேன் நான் செய்தது தவறுதான்’

தம்பி அப்பாவிடம் சொல்லி முடித்தான்.

‘உனக்கு மதிப்பெண் குறைப்பது என்பது ஒருவிஷயமே இல்லை. இன்று இப்படி தவறு செய்பவன் நாளை எது வேண்டுமானால் செய்வாய்’ என்றார் அப்பா

‘நீங்கள்தானே என் ரேங்க் எப்போதும் குறையக்கூடாது என்று சொன்னீர்கள்’

‘அதற்காக இப்படியா’

‘ஆமாம்’ என்றான் அப்பாவிடம்.

‘நீ எல்லாம் என் பிள்ளையா’ அப்பா கேட்டார்.

‘அது நீ தான் சொல்லவேண்டும்’ என்றான் தம்பி.

அப்பாவுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்.

அவ்வளவுதான் நடந்தது.

சற்று நேரத்திரற்கெல்லாம் தம்பியைக் காணவில்லை. இவ்வளவே அம்மா எனக்குச் சொன்னாள். எனக்குத்தலை சுற்றியது. வீட்டில் தம்பியும் இல்லை அப்பாவும் இல்லை. அம்மா தொடர்ந்தாள்.

‘எங்கே தம்பி’ என்றேன் அப்பாவிடம்.

‘எனக்கு மட்டும் என்ன தெரியும்’ என்றார் அவர்.

‘காலை ஏழு மணிக்குப்போனவன். மதியம் ஆயிற்று. இன்னும் வரவில்லை. எங்கு சென்றானோ. என்ன ஆனானோ. அப்பா கோட் ஸ்டேண்டில் மாட்டியிருந்த தன் சட்டைப்பையில் தான் வைத்திருந்த பணம் ஏதும் குறையவில்லை. ஆக ப்பையன் இப்போதும் சரியாகத்தான் இருக்கிறான். ஒன்றும் கெட்டுப்பொய்விடவில்லை’. என்றார்.

‘நீங்களும் உங்க பீத்த காசும்’ என்று கடிந்து சொன்னேன். காசு காசு தான். அதில் என்ன சற்றுப் பீத்த காசு.

‘தம்பி கொஞ்சம் காசு கையில் எடுத்துப்போய் இருந்தாலாவது அவன் வயிறு பசித்தால் எதுவும் வாங்கிச் சாப்பிட்டு இருப்பான்’

தம்பி பசி தாங்காதவன் ஆக அது நினைத்துச் சொன்னேன்

‘இப்படித்தான் பையன்கள் அம்மாக்களால்கெட்டுப்போவது’ அப்பா எனக்குப்பதில் சொன்னார்.

‘உங்களுக்கு உங்கள் காசு. எனக்கு என் பிள்ளை’ வெடுக்கென்று சொன்னனேன்.

‘நீ மட்டும் தனியளாய்த்தானே அவனைப்பெற்றாய்’ என்றார்.

‘ஆமாம் ‘ என்றேன்.

‘அப்புறம் நான் எதற்கு’

‘அது நீங்கள் தான் சொல்லவேண்டும்’

‘ஆத்திரத்தில் சொல்லிவிட்டேன். நானும் போய்த்தொலைந்தால் காசு அருமை பற்றி உனக்குத் தெரியும் ‘ என்று அவர் சொல்ல,

‘போய்த் தொலைங்க்களேன்’ எனக்கும் கோபம். ஆகச் சொல்லிவிட்டேன்.

அவரும் எங்கோ கிளம்பிப்போய்விட்டார். ‘அவரும் எங்கே சென்றார் என்று தெரிந்தால்தானே’.

‘அவர் சட்டைப் பையில் பணம் இருந்ததா?’ நான் அம்மாவைக் கேட்டேன்.

‘எதை விட்டாலும் அதையா விடுவார்’ அம்மா சொன்னாள்.

‘காசு நமக்காகத்தானே அப்பா சேர்த்துவக்கிறார்’

‘நீயும் அவர் பக்கம் தான் பேசுவாய். நீ என்ன நியாயம் சொல்லிவிடப்போகிராய்’

என்னிடம் சொன்ன அம்மா உடன் வீட்டை விட்டு வேளியே போனாள்

‘நீ எங்கே போகிறாய்’

‘நீ கேட்கவேண்டாம்’ அம்மா சொல்லிப் புறப்பட்டாள்.

எனக்குப்பசி, வேலை முடிந்துவந்த களைப்பு. நானே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டேன். பாயெடுத்துப் போட்டு மின் விசிறிக்குக் கீழாகப் படுத்துக் கொண்டேன். நாளைக்கு எனக்கு அலுவலகத்தில் இன்னும் கூடுதல் வேலை இருக்கிறது.

தம்பி கிரிக்கெட் மைதானம் மூடியதும் வீடு வருவான்.

அப்பா நூலக நேரம் முடிந்ததும் வருவார்.

அம்மா வினாயகர் கோவில் நடைச் சாத்தியதும் வந்து விடுவாள்.

அழகாகச் சமாதானம் சொல்லிக்கொண்டேன்

கதவுத் தாழ்ப்பாள் போடாது சும்மா சாத்தி மட்டுமே வைத்துப்படுத்துள்ளேன்.

என் மனம் ஒத்துக்கொண்டால்தானே. வீட்டு வாயிற்கதவு. உறங்கு நீ என்று கெஞ்சுகிறது உடல். மனக்குரங்கு என்னை உறங்க விட்டால்தானே.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *