கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 2,682 
 
 

(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு இருட்டைக் கீறிக்கொண்டு கரும் பாம்புபோல் நீண்டு நெளிந்து கிடந்த தெருவை ‘வான்’ கடந்து கொண்டு இருந்தது. எப்ப யாழ்ப்பாணம் வரும்? பிள்ளைகள் நித்திரையை துரத்திவிட்டு மகிழ்வில் மூழ்கி இருந்தார்கள். அவர்களுக்கு முகம் தெரியாத பெரியம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்கும் மகிழவு எனக்கும்தான்.

ஒவ்வொரு வசந்தம் மலரும் பொழுது எனது மனமும் முகமும் சுருங்கிவிடும். அந்தப் பெயர் தெரியாத பூவுக்கு பயப்படுகிறமாதிரி நான் சிறுவயதில் பயப்பட்டது கணக்கு மாஸ்ரருக்கு மட்டும்தான். அந்தப் பூ பார்க்கும் பொழுதெல்லாம் சிரித்தபடி இருக்கும், சில மனிதர்களைப்போல. ஆனால் அது காய்ந்து பின் வெள்ளைப் களப் பஞ்சு மாதிரி பறக்கும் போது எனக்கு பயம் வந்திடும். ரவியும் மெசினால் அதன் தலையை வெட்டிவிட்டு வெட்டிப்போட்டன் இனி பயமில்லை என்று நிமிர்றதுக்கிடையில் ராவணனின் தலை முளைக்கிறமாதிரி பச்சைப் புல்லுக்கிடையில் தலையை நீட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கும் இந்தச் சின்ன மரத்தின் உறுதி என்னை சிந்திக்கத் தூண்டியது. இப்படித்தான் எங்களையும் வேரோட அழிச்சிடலாம் என்றுதான் நினைத்தார்கள்..

‘வான்’ மெதுவாக ஊர்வதுபோல் இருந்தது.

திரும்பவும் செக்பொயின்ரோ? நினைவு அச்சப்படுத்தியது. ஆனாலும் முகமாலையில் அந்த பெண் ராணுவம் நடந்து கொண்ட விதம் மனம் எடைபோட முடியாமல் தவித்தது. ராணுவப் பெண்ணின் அருகாமை என்னை பயப்படுத்தியது. ஆனால் பாவாடையில் பதிந்து கிடந்த கறையை பின்னால் குத்தி மறைத்த பொழுது மனம் நெகிழ்வில் மூழ்கியது. நன்றியை சிரிப்பால் உணர்த்திவிட்டு நகர்ந்தாலும் என் நினைவுகள் அந்த இடத்திலேயே வேர்விட்டு நின்றது. பிள்ளைகள் ரொம் அன்ட் ஜெரியைப் பார்த்து மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்த ரொம் ஜெரி விளையாட்டு பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ரொம் ஜெரியை ஏமாற்ற பல சதிகள் புரியும். சின்ன ஜெரி ரொம்மிட்ட ஏமாறுகிற மாதிரி ஏமாந்துவிட்டு கடைசியில ரொம் விரித்த வலையில் அதையே விழவைத்து அதன் பொய் முகத்தையும் காட்டிக்கொடுத்துவிடும். போர்த் தந்தந்திரத்தில் இதுவும் ஒன்று. ஆயுதத்தால் ஆயிரம் மனிதரை கொன்று குவிப்பதை விட ஒரு மனிதரின் மனதை மாற்றுவதுதான் மிகப்பெரிய வெற்றி என எங்கேயோ படித்தது நினைவில் உதிக்க மனம் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.

இருள் மெல்ல விலகிக்கொண்டிருந்த நேரத் தில் நான் விளையாடிய தெருவையும் என் நண்பிகளின் வீட்டையும் இமைகள் தடவிக் கொண்டு சென்றது. எல்லாமே மாறியிருந்தது. வீட்டு கேற் அருகில் ‘வானீ’ நின்றது. எத்தனை வருடம் எவ்வளவு ஏக்கம் ஒவ்வொன்றையும் தொட்டுத் தழுவ மனம் துடித்தது, அழுது விடுவேனோ என பயப்பட்டது. முதலில் என் விழிகளில் விழுந்த அந்த மஞ்சள் மதில் நான் பாடசாலையால் வரும் பொழுது எனக்காக அதில் சாய்ந்து நிற்கும் என் அம்மாவும் ஜிம்மியும்…

அழுகை கண்ணை மறைக்க… அக்காவின் முகம் மங்கலாக தெரிந்தது. அக்கா என்னை இறுக அணைத்த பொழுது அம்மா என்னை அணைப்பதுபோல் ஓர் உணர்வு எழுந்து அழுகையை அதிகப்படுத்தியது. இருபது வருடத்தின் பின் என்னுடைய வீட்டை எனக்குள் இருந்துகொண்டு எப்பொழுதும் தன்னையே நினைக்கவைக்கும் என்ர கனவு வீட்டைக் கண்டேன். சிரிப்பும் சத்தமும் நிறைந்திருந்த வீடு மௌனத்தில் ஆழ்ந்து கிடந்ததை பார்க்க மனம் வலித்தது. ஒவ்வொரு இடத்திலும் அம்மாவின் நினைவுகள் உறைந்துபோய்க் கிடந்தன. அம்மா வின் கற்பனையை, சிரிப்பை, அழுகையை எல்லாவற்றையும் உள்வாங்கி தனக்குள் புதைத்து வைத்திருந்த என்ர அம்மாவின் வீடு இன்று அம்மா இல்லாமல் துயருள் ஆழ்ந்தி ருந்தது. இறுதிக்காலம் மட்டும் என்ர குஞ்சு அம்மாவை மழையில், வெய்யிலில், துயரில் எல்லாவற்றிலும் உடனிருந்து காத்த வீட்டை மெல்ல தடவினேன். ‘பிள்ளையன் மனை உதவுறமாதிரி மக்கள் உதவமாட்டார்கள்.’ அம்மாவின் தீர்க்க தரிசனம் கன்னத்தில் கோடுகளை வரைந்தன.

அக்காவின் தோற்றத்திலும் காலம் கைவைத் திருந்தது. கால ஓட்டத்தை மனிதனின் கைகளி லும் கால்களிலும் புரிந்து கொள்ளமுடியும் என்பது மாறி புன்னகை தொலைத்த வறண்ட முகம். எந்த உணர்வையும் என்னால் புரிந்து கொள்ள முடியாது இருந்தது.

‘களைச்சுப் போய் வந்திருக்கிறியள். முதல்ல குளிச்சிட்டு வாங்கோ’ என்று கூறியபடி அக்கா மெல்ல நகர்ந்தா.

வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து பாதி மண்ணில் படுத்துக்கிடந்தது. ஏதோ ஒன்று தன் கோபத்தை சுவரில் பதித்திருந்தது. இடிந்த சுவரில் சரித்தும் நெளித்தும் எழுதத் தெரியாத கை எதையோ கிறுக்கியிருந்தது. என்னவாக இருக்கும்? இந்த மண்ணும் வீடும் தனது என்று எழுதியிருப்பானோ.? அழகான எழுத்தை கோணலாக எழுதியவனின் மனமும் அப்படித் தான் இருந்திருக்கும். புரியாத எழுத்தை சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. எமது ரணங்களுக்கு முதல் காரணம் புரியாத மொழியாகத்தான் இருக்க வேண்டும். இதனால் விழுந்த இடைவெளிகள் அதிகம். ஆனால் வெளிநாட்டில் மட்டும் எந்த நாட்டில் வாழ் கின்றோமோ அந்த நாட்டு மொழியை கற்று அழகாக பேசிக்கொண்டுதானே இருக்கின்றோம்.

‘அங்க நிண்டு யோசிச்சுக்கொண்டு நிக்காமல் கெதியா குளிச்சுபோட்டு வா’, அக்காவின் குரல் மறுபடியும் அம்மாவை நினைவுபடுத்தியது.

‘சுகந்தி கிடாரத்துக்க இருக்கிற தண்ணி முழுவதையும் அள்ளிக் குளி. வாழையெல்லாம் வாடுது’. நல்லா வாடட்டும். எனக்குப் பிடிக்காத வாழைக்கு தண்ணிபோகக் கூடாது. என்ன செய்யலாம் ? என யோசித்தே நேரத்தைக் கடத்துவன். அம்மாவின் முகம் சிவந்து போகும். பின் மறுபடி சிரிக்கும். சிரித்த முகத்துடன் வளைய வரும் அம்மா இல்லாத வீடு… கத்தி அழவேண்டும்போல் இருந்தது. எங்கள் வீட்டில் மனிதர்களைவிட மரங்கள்தான் அதிகமாக இருந்தது. மனிதர்களோடு பேசுவதைவிட மரங்களோடு பேசுவது எவ்வளவு மகிழ்வை தரும். அண்ணா குறோட்டன் வளர்ப்பார். விதம் விதமா சுருண்ட தலையோட குழந்தைகள்போல் சிலிர்த்து சிரித்தபடி நிற்கும். அண்ணாவுக்கும் மாமாவின் மகனுக்கும் குறோட்டன் வளர்பதில் ஒரே போட்டி. மாமா வீட்டில முதல் நாள் பார்க்கும் பொழுது வெறுமையாக இருந்த இடத்திலெல்லாம் புதுசா குறோட்டன் தானே நடந்து வந்து நிற்பதுபோல அதிசயமாக நிற்கும். பிறகுதான் புரிந்தது அதெல்லாம் சுப்பிரமணியம் பூங்காவின் மர்மம் என்று.

அம்மா நித்திய கல்யாணி, தேமா செவ்வரத்தை, அரளி, மல்லிகை என்று சுவாமிக்கு தேவையான பூமரத்தில் எப்பவும் கண்ணாக இருப்பா. அப்பா சாமிநாதனை ஏவிக்கொண்டே இருப்பார். எங்கள் வீட்டில் நாய் செத்தால் அதை தாட்டுவிட்டு தேசிக்காய் மரம் நடுவது சாமிநாதனின் வேலை. எத்தனை நாய் செத்தது என்று அடிவளவுக்குள் நிமிர்ந்து நிற்கும் தேசிக்காய் மரங்களை பார்த்தால் புரிந்து விடும். எனக்காக வளர்ந்த மரம் என்ர செரிமரம். கைகளை பரப்பி நிழலும், பழமும் தந்த அந்த மரம் நின்ற இடத்தில் இப்போ வாழையும் இல்லாமல் கிடங்குகள் வெட்டி மூடினமாதிரி…என்னவாக இருக்கும்?

அக்காவின் அழைப்பு என்னை குளிக்கத் தூண்டியது.

சாப்பாட்டறையில் அம்மாவின் சமயலையும் அந்த சங்கீதக் குரலையும் தவிர மிகுதி எல்லாம் இருந்தன. என்னால் சாப்பிட முடிய வில்லை.

‘சுகந்தி உனக்கு எப்பபார்த்தாலும் கதைக்கிறதும் சிரிக்கிறதும்தான் வேலை. முதல்ல சாப்பிடு.’ அம்மாவின் குரல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. எதுவும் நடக்காததுபோல் ரவி சாப்பாட்டில் கவனமாக இருந்தார். அக்கா என் தலையை தடவிவிட அதுபோதுமாக இருந்தது. அக்காவை கட்டிபிடித்து அம்மா அம்மா என்று விக்கி அழத்தொடங்கிவிட்டேன். நான் அழுவ தைப் பார்த்து பிள்ளைகளும் அழத் தொடங்கி விட்டார்கள்.

இப்பிடித்தான் அங்கேயும் எப்ப பார்த்தாலும் தானும் அழுது பிள்ளைகளையும் அழவைச்சுக் கொண்டு இருப்பா.

இவள்தானே ரவி எங்கட அம்மான்ர செல்லம். கடைசி நேரத்திலையும் இவளைத் தான் கூப்பிட்டுக்கொண்டே இருந்தா. கடைசி நேரம்… நெஞ்சுக்குள் அடங்கியிருந்த தீ எழும்பி எரிந்தது. எனக்குத் தெரியும் என்ர குஞ்சு அம்மா என்னைத்தான் தேடியிருப்பா எப்படி தேடியிருப்பா? மனதுக்குள் அழுது அழுது தேடியிருப்பா. எந்த அறையாக இருக்கும்? அக்காவிடம் கேள் கேள் என மனம் தூண்டி யது. வாய் மௌனித்து இருந்தது.

என் சின்ன அறை. நானும் அம்மாவும் ஒன்றாகப் படுத்து, கதைத்து, சிரித்து களித்த அறைப்படிகள் என்னை பார்த்துக்கொண்டே இருந்தன, அவை ஏதோ சொல்ல நினைப்பது போல்.

இந்தப் படியில்தானே அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்து ஆகாயத்தையும் நகரும் முகில்களையும், வேப்பமர இலைகளை யும், அதில் கட்டியிருக்கும் ஊஞ்சலையும் ரசித்தபடி இருப்பேன். படியில் அம்மா இருந்து என்னைப் பார்த்து சிரிப்பதுபோல், வா என கை நீட்டி அழைப்பதுபோல்… மெதுவாகப் போய் படியில் தலைவைத்து நிமிர்ந்து பார்த்தேன். அதே முகில்கள் அந்த வேப்ப மரம் ஊஞ்சல் உரசிய அடையாளத்துடன். எல்லாம் அப்ப டியே. ஆனால் என்ர அம்மா மட்டும்… கண்ணீர் படிகளை கழுவின.

நினைவுகள் எப்போதும் இறப்பதே இல்லை. சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் இந்த நினைவுகள்தான் என்னை உயிர்ப்புடன் வாழவைக்கின்றன. பல சமயங் களில் என்னை மூலையில் முடக்கியும் விடுகின்றது. இவைகளை உதறிவிட்டு எழவேண்டும் என மனம் துடிக்கும். ஆனால் ஏதோ ஒன்று என்னை திரும்ப திரும்ப அதற்குள்ளே அழுத்திக் கொண்டே இருக்கும். இப்பவும் அப்படித்தான் அக்காவுக்கு என்ன சொல்லப் போகிறாய்? என எனக்குள்ளேயே கேள்வி எழுந்து என்னையே கேட்டபடி இருக்க என் மனமோ அடிவளவையும் மரங்க ளையும் சுற்றிக் கொண்டே இருந்தன.

மரங்கள் சூழ்ந்த அடிவளவில் நிழல்கள் படர்ந்து பரவிப்போய்க் கிடந்தன. இந்த மரங்களெல்லாம் சிரித்த நாட்களை விட என்னிடம் அடிவாங்கி அழுத நாட்கள்தான் அதிகம், சின்ன வகுப்பில் சிவஞானம் ரீச்சர், முருங்கைகாய் மாதிரி நீட்டு விரல் இருக்கிற பஞ்சலிங்கம் மாஸ்ரர் அவர் வகுப்பு தொடங்குவதற்கு முதல் நீட்டு விரலால் தலையைச் சுற்றி தலையே நீ வணங்காய் என்ற தேவாரத்தை சொல்லத் தொடங்கின உடனே திருராசா அழத்தொடங்குவான். அவன் அழுவதை பார்த்தால் எனக்கு அம்மாவின் நினைவு வரும் நானும் அழுவன். என்னைப் பார்த்து ராகினியும் அழுவாள்.

பிறகு மூன்று பேரும் கதிரையில் ஏறி நிற்கவேணும். அதில் ஏறி நிற்க்கேக்க வில்லுான்றிச் சுடலைக்கு சவம்போகும். பள்ளிக்கூடத்துக்கு கிட்ட மேளம் அடிக்காமல் நமச்சிவாய பதிகம் பாடிக்கொண்டு போவார்கள். திருராசா என்னைக் கேட்பான், எங்க சவம் போகுது? என. இவன் இப்படிக் கேட்பான் என்று தெரிந்து கவன்மா கையை பின்னால கட்டிக்கொண்டு நிற்பன். ஏனோ தெரியாது எப்பவும்போல ஏமாந்து கையை காட்டிடுவன்.

பிறகு அவன், ‘எனக்கென்ன உன்ரை கை அழுகப்போகுது’ என்று சொல்லிச் சிரிப்பான். ராகினியும் சேர்ந்து சிரிப்பாள். நான் விரலை சூப்பிவிட்டு அன்று முழுவதும் கையைப் பார்த்து பயந்துகொண்டே இருப்பன். சில நேரங்களில் சிலேற் பென்சிலை சுவரில் தேய்த்துவிட்டு கன்னத்தை உப்பென்று செய் கூரா இருக்கா எண்டு பார்ப்பம் என்று சொல்லிப்போட்டு குத்திவிடுவான். சுடுகாயாலும் சுடுவான். நான் றிங்பொட்டில் திறக்கேக்க நல்ல பிள்ளைமாதிரி சிரிப்பான். நான் அம்மாவிடம் சொன்னால் அம்மாவும் சிரிப்பா அம்மா அவனுக்கும் செல்லம். தன்ரை அண்ணான்ர மகன் என்று தடவுவ, எனக்கு அம்மாவில் கோபம் கோபமா வரும்..

என்ர செரிமரத்தை வெட்டினது அவனுக்கு சந்தோஷம். நான் அதில ஏறி நித்திரை கொண்டு விழுந்ததாலதான் அம்மா சாமி நாதனிட்ட சொல்லி செரி மரத்தை வெட்டிவை. சாமிநாதன் கோடாலியோட நின்ற காட்சி என்னை என்னவோ செய்தது. மரம் என்னைப் பார்த்து அழுதது, கெஞ்சினது நானும் அழுதனான், ஆனா யாருக்கும் எங்கட அழுகை தெரியவே இல்லை. அதை வெட்டின இடத்தில் அம்மா வாழைவைக்கச் சொன்னா, அதுவும் வளர்ந்தது. நான் அதின்ர இலையை நுள்ளி கீளித்து ஏதாவது செய்து கொண்டே இருப்பன்.

கணக்கு மாஸ்ரரின்ர கோபத்தை எல்லா தென்னை மரங்களிலையும், நாவல் மரத்திலை யும் காட்டுவன். அந்த மரங்களெல்லாம் பொல்லாத கணக்கு ரீச்சரை பார்த்து பயப்படு கிறமாதிரி கற்பனை செய்து மகிழ்வன். ஆனா நான் அடிக்காதது பாலப்பழ மரத்துக்கு மட்டும்தான். ஒரு வீட்டிலையும் இல்லாத பாலமரம் எங்கட வீட்டில மட்டும் இருக்கு என்று எனக்கு ஒரே பெருமை. எல்லோரிடமும் கேட்பேன், ‘எங்கட வீட்டில பாலமரம் நிக்குது. உங்கட வீட்டில இருக்கே? அவையளின்ர முகம் சுருங்கிபோகும். அப்பபார்த்து ராகினி சொல்லுவாள், ‘ஆனா காய்க்காது என்ன…இப்ப நான் சுருங்கிபோய்விடுவன். ராகினியில கோபம் கோபமா வரும். இவள் சரியான எரிச்சல் பிடிச்சவள். எவடம் எவடம் விளையாடேக்க இவளை எறும்புப் புற்றுக்குக் கிட்ட விடவேணும் என்று மனதுக்குள்ள நினைத்துக்கொள்வேன். இந்த மரம் ஏன் காயக்கிதில்ல. அடியாத மாடு படியாது எண்டு அம்மா சொல்லிறது சரியோ? இதுக்கும் அடிச்சிருக்கலாமோ? என பல கேள்வி முளைத்து நிற்கும். யாரோ சொன்னவர்கள் என்று சாமிநாதன் விளக்கீட்டு க்கு வீட்டு மேல்கூட்டில, மதிலில எல்லாம் சுட்டி வைத்துவிட்டு, விளக்கு மாறால் பாலை மரத்துக்கு அடிச்சவர். ‘இண்டைக்கு அடிச்சா நாணத்தில் அடுத்த வருஷம் காய்க்கும் அம்மா’ என்று சொல்லி அடிக்கேக்க எனக்குப் பாவமாக இருந்தது. எண்டாலும் காய்க்கட்டும் எண்டு பார்க்காத மாதிரி இருந்தனான். பாலப்பழ காலம் வந்து வந்து போனது. பழத்தைச் சாப்பிட்ட பிறகு வாய் கதைக்கேலாமல் ஒட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி மரமும் மௌனமாகவே நின்றது.

‘அம்மா இந்த மரம் ஏன் காய்க்கிதில்ல?’

‘அது

‘ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலதான் காய்க்குமாம்.’

‘அப்ப எங்க காய்க்கும்?

‘காட்டுக்க காய்க்கும்’

‘எங்கட வீட்டிலையும் ஆரையும் அடிவளவுக்க போகாமல் செய்தா காய்க்குமே?’

அம்மா என்னைப் பார்த்து அப்பவும் சிரிப்பா. அம்மா சிரிக்கேக்க அவவின்ர வைரத்தோடு மாதிரியே சிரிப்பும் பளிச்சென்று இருக்கும். எனக்கு ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடிக்க வேணும்போல இருக்கும். ஆனாலும் கேள்வியை அடுக்குவன்.

‘சொல்லுங்கம்மா’

‘என்னத்தை சொல்ல?’

‘அதுதான் ஆரும் அடிவளவுக்க போகவேணாம் எண்டு சொல்லுவமே? ஐயோ அம்மா அப்புத்துரை??’

அம்மா ‘ம்’ எண்டு சிரிப்பா.

‘அப்புத்துரையை எப்பிடி மறிக்கிறது அம்மா? அவர் இல்லாட்டி எனக்கு விருப்பமான அப்பத்துக்கு ஆர் கள்ளுத் தாறது?

அக்கா சொன்னா நீ போன பிறகு ‘வீட்டில் நினைவுபடுத்தியது. எத்தனை முருங்கைகள் அப்பமே சுடேல்ல.’

அப்பம் எண்டா எனக்கு ஒரே புழுகமா இருக்கும். அம்மாவும் ரம்ளரை தந்து சொல்லுவா, ‘கோடியால அப்புத்துரை போகும். எங்கேயும் பிராக்குப் பளர்த்துக்கொண்டு இருந்திடாத’. அடுத்த நாள் ஐஞ்சு மணிக்கு நடராசா தேங்காய் துருவிற சத்தம் கேட்கத் தொடங்க நானும் எழும்பி முதல்ல பிய்யிந அப்பத்தை சாப்பிடத் தொடங்குவன் பிறகு நல்ல அப்பம் வரேக்க எனக்கு வயிறு நிரம்பிவிடும். முட்டை அப்பம், நல்ல அப்பம் எல்லாம் அக்கா சாப்பிடுவா. அம்மா என்னை கவலையா பார்ப்பா. இப்பவும் அப்படித்தான் என்ற அம்மா இங்க எங்கயாவது இருந்து பார்த்துக்கொண்டே என்னை இருப்பா. வாழ்க்கையில் சுகத்தை மட்டும் சுவாசித்து வாழ்ந்த அம்மாவின் மீது துன்பத்தின் நிழல் படர காரணமாய் இருந்த நான் பிறந்திருக்கவே கூடாது, அந்தக் கடைசி நாள் பிரிவின் பாதை நீண்டு என்னையும் அம்மாவையும் பிரித்த அந்த கணம் இப்பவும் அம்மாவின் அழுத முகம் என் மனதில்.

நான் அக்காவுக்கு எப்பிடி சொல்லப்போறன்? ஒவ்வொரு விடியலும் நடுங்கிக்கொண்டே விடிந்தது. அக்காவின் உடைபடாத மௌனம் என்னுள் பயத்தை அதிகரித்தது. அக்கா மட்டும் அல்ல, இந்த வீடும், மண்ணும், வீட்டைச் சுற்றி நிறைந்து நிற்கும் மரங்களும் எல்லாமே மௌனம் காத்தன. ஆனால் அவர்களின் முகங்களில் சோகம் படிந்துபோய் இருந்தது. அக்கா சுகந்தி என்று கூப்பிடும் பொழுதெல்லாம் மனம் பயப்பட்டது. என்னுடைய கருத்தை அக்கா கேட்கப்போவதே இல்லை. மனம் உடைந்து உடைந்து விழுந்து களைத்துப் போயிருந்தது. நித்திரை கூட என்னைவிட்டு தூர விலகியிருந்தது. நிலவு முற்றத்தை நிறைத்து நின்றாலும் மனித இருப்பைத் தொலைத்த மௌனம் நிறைந்து கிடந்தது. வெளியில் முள்முருங்கையின் பூக்கள் சத்தமில்லாமல் கொண்டே இருந்தன. குசினி உதிர்ந்து விறாந்தையில் வரிசையாக நிற்கும் முருங்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அத்தானையும் நினைவுபடுத்தியது. எத்தனை முருங்கைகள் நின்றாலும் எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது நட்ட முருங்கையைத்தான் நான் மிகவும் விரும்பினேன். அதற்குத்தான் நிறைய தண்ணீர் விடுவேன். அதுவும் வளர்ந்து கிளைகளைப் பரப்பி நிழல் தந்தது. நெருப்பு வெக்கைக் காலத்திலும் சிவப்பாய் பூத்து குளிர்மையைத் தந்தது. மரங்களையும் பிராணிகளையும் நேசித்த காலம் எங்கேயோ தொலைந்து போயிருந்தது. இந்த மரங்களெல்லாம் என்னை தேடியிருக்குமோ? அம்மா மாதிரியே என்னை நேசித்த ஜிம்மியை எங்க தாட்டிரிப்பினம்? விடை தெரியாத கேள்விகளை சிந்திக்க சிந்திக்க பொழுதுகள் சுமையாக அழுத்தின.

என்னோடு சிரித்து, விளையாடி, சண்டை போட்ட வாசுகியை அக்கா அறிமுகப்படுத்தும் அளவிற்கு அடையாளம் அழிந்து ‘அந்த வாசுகியா இவள்’ என ஆச்சரியப்படவைத்தாள்.

போரின் நிழல் அவளின் அகத்திலும் முகத்தி லும் ஆழப் பதிந்திருந்தது. அவளின் சோகக் கதையை அக்கா சொன்னவுடன் அவளோடு தனிமையில் பேச வேண்டும்போல் இருந்தது. வாசுகியின் வீட்டுக்கு போகும் வழிகளில் இராணுவம் எத்தனையோ அப்பாவிகளை கொன்று குவித்த களைப்பிலும் பெருமிதத் திலும் அவர்களும் அவர்களின் ஆயுதங்களும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இவர்களில் யாரோ ஒருத்தன் சிலவேளை இவனாகவும் இருக்கலாம் வாசுகியின் ஒரே மகளையும் தேடிப்போன கணவரையும்…..?

உடல் நெருப்பாய் எரிந்தது. காகமும் குயிலும் சேர்ந்து கத்தி என்னை திடுக்கிடவைத்தது. என்னவாக இருக்கும்? காகம் கஸ்ரப்பட்டு கட்டின வீட்டை குயில்பிடித்திருக்குமோ? சும்மா முட்டை மட்டும்தான் போட்டுக்கொண்டிருந்தது. காகமும் இனம் காணும்மட்டும்தான் காத்திருக்கும். இன்று என்ன நடந்தது, இங்க மனிதர்களே அடுத்து என்ன நடக்கும் என புரியாமல் தவிக்கும்போது.

வாசுகியின் வீட்டு முற்றம் உதிர்ந்த சருகுகளால் மூடிக்கிடந்தது. அவள் கதைக்கும் பொழுது எந்த மாற்றமும் தெரியவே இல்லை. இவள் சோகத்தை எல்லாம் மறந்திட்டாளோ? அக்கா ஏன் அப்படி சொன்னவ? என்றெல்லாம் என்னை சிந்திக்கவைத்தாள்.

இருட்டுது வாசுகி அக்காவும் ரவியும் தேடுவினம். நான் போயிற்றுவரட்டே.

இங்க பொறு நானும் வாறன் இவள் கலா தெரியும்தானே எங்களடோ படிச்சாள் அவளும் நான் படிப்பிக்கிற பள்ளிக்கூடத்திலதான் படிப்பிக்கிறாள். அவள் என்ர மகள் சுமதிக்கு டாப்பில ஒரே வட்டம் போடுறாளாம். அதுதான் ஏன் எண்டு கேக்கபோறன். இருண்ட வெளி நீண்டு கொண்டு போனது.

அந்தப் பாதையும் நீண்டு கொண்டுதான் இருந்தது. அக்கா சொன்னவ, ‘பேசாமல் தாவடி யால போய் வைத்தீஸ்வராவால போங்கோ. அங்கதான் ஆள்நடமாட்டம் இருக்கும்’. அண்ணா சொன்னான், ‘ஆக்கள் இல்லாத இடத்தால போனால் ஸ்பீடா போகலாம். வா! நாாவந்துறை யால போய் சோனகத் தெருவால போவம்’.

நாவந்துறைச் சந்தியில் அன்னிய மணம் மணந்து வயிற்றுக்குள் என்னவோ செய்தது. அண்ணாவையும் ஸ்கூட்டரையும் மற்றப் பக்கம் நிற்பாட்டிச்சினம். தடுமாறி விழப்போன என்னை அப்பார் மாதிரி கவனமா பிடிச்சினம். இவை வரேக்க எல்லாரும் கதைச்சவை, ‘இனி எங்களுக்குப் பயமில்லை, காந்தி சொன்ன மாதிரி இரவிலையும் பயமில்லாம நடக்கலாம். இவை எங்கட சகோதரம்’ என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்தவை. ஆனா அப்பாமாதிரி இருந்தவரின்ர கை அப்பான்ர கை மாதிரி இருக்கேல்ல, குரலும்கூட.

‘எங்க போறீங்க?

‘வீட்டை’

‘வீடு எங்க இருக்கு?

‘அங்க ஆஸ்பத்திரி நோட்டில’

நீட்டின கையைப் பிடிச்சவன். தங்கச்சி சட்டைக்கே என்ன வைச்சிருக்க? அந்த நேரம் பார்த்து அவர்களுக்கு அவசர அறிவிப்பு வர தப்பிய மான்களாய் நாங்கள், அண்ணா சொன்னான், ‘அம்மாட்டை சொல்லாத என்ன. பிறகு எங்களுக்குதான் அடிப்பா’. ஓம் என்றுதான் தலையாட்டினான். ஆனால் அம்மாவை கண்டவுடன் என்னையறியாமல் நான் வாழ்க்கையில் ஒருநாளும் அப்படி அழுததே இல்லை. அம்மாவின் முகத்திலும் நான் என்றுமே காணாத துயரவெள்ளம் நிறைந்திருந்தது. சீயாக்காயும் மஞ்சளும் போட்டு தேச்சுத் தேச்சு முழுக வார்த்தா. கிடாரத்தில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டு இருந்தது. தீயும் சுவாலைவிட்டு எரிந்தது. அம்மம்மா தன்ர அறையில் ஆசையா வைத்திருந்த இந்திராகாந்தியின் படத்தை கழற்றி ஓரமாக வைத்தா.

இரவு படுத்திருக்கும்போது அம்மாவின் கண்ணை தொட்டுப்பார்த்தான். ஈரமா இருந்தது.

‘அம்மா ஏன் அழுகிறீங்க?’

‘ஒண்டுமில்லை குஞ்சு’. பிறகு அம்மா என்னை தடவித் தடவி அழுதா.

‘இப்ப ஏன் அழுகிறீங்க?’

‘குஞ்சு பயப்பிட்டனியே?’

ஓம் எண்டு சொன்னா அம்மா இன்னும் அழுவா, இல்லையெண்டு சொல்லுவமோ என நினைத்தாலும் தலை தன்பாட்டில் ஓம் என்றது. அம்மா இறுக்கி கட்டிப்பிடிச்சா. அம்மா இப்பிடித்தான். ஆனால் உங்கட கைமாதிரி இருக்கேல்ல. பயமா இருந்தது. அம்மா சத்தமா விக்கி அழுதா. என்னை இறுக்கி கட்டிப் பிடிக்கேக்க அம்மான்ர மூச்சு இன்னும் சூடா இருந்தது. அன்று மட்டும் அம்மா கர்ணன் கதை சொல்லாத இரவாய்க் கழிந்தது. எனக்காய் தூக்கம் தொலைத்து, சுகம்துறந்து என்னையே சுவாசித்த என்ர அம்மாவின் நினைவுகள் இரகசியமாய் அழவைத்தது.

நினைவுகளில் மூழ்கியிருந்த என்னை அக்கா என் மடியில் அல்பத்தை வைத்து மீண்டும் அழவைத்தா. முதல் பக்கத்தில் என்ர குஞ்சு அம்மா தலைமாட்டில் குத்துவிளக்கு. பக்கத்தில் பெரியம்மா, அக்கா. ஒரு கணம் என் உடலெல்லாம் தீப்பற்றியதுபோல் இருந்தது. வெளியில் சோவென மழை கொட்டிக் கொண்டிருந்தது. என் உதடுகளில் மெல்ல உப்புக்கரித்தது. உணர்வே இல்லாமால் பக்கங் களை கை புரட்டின. சாய்மனைக்கதிரையில் அம்மா படுத்திருக்க இளநீராலும், பாலாலும் கரணவாய் குருக்கள் அம்மாவை அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். என் கண்களிலிருந்து அம்மா கொஞ்சம் கொஞ்சமாக மறைவதுபோல்.

என்ர குஞ்சு அம்மாவை பெட்டியில்வைத்து மூடப்போகும் படம் நெஞ்சில் ஆயிரம் ஊசியால் குத்துவதுபோல் வலித்தது. அம்மாவின் கண்கள் என்னையே பார்ப்பதுபோல், நீ வருவாய் வருவாய் என்று கடைசி நிமிஷம் மட்டும் காத்திருந்தனான். ஏன் என்னை ஏமாற்றினீ? என கேட்பதுபோல் இருந்தது.

‘என்னால் முடியேல்லையே அம்மா, கண்ணீர் அம்மாவை கழுவிக்கொண்டு ஓடியது.

அம்மா.

ம்

அம்மா

ஓம்

‘நான் செத்தா என்னை சவப்பெட்டிக்குள்ள வைச்சு மூடுவீங்களே?’

அம்மா என்னை ஒரு பார்வை பார்த்தா விழி ஓரத்தில் மெல்லிய கசிவு தெரிந்தது.

‘அம்மா ஏண் எண்டு கேட்கமாட்டீங்களே? ஏனெண்டா மூடினா இருட்டா இருக்கும் மூச்சு விட ஏலாம் பயமா இருக்கும். பிறகு மேளம் அடிக்கக் கூடாது.ஆ…சொல்ல மறந்திட்டன் முக்கியமா நமச்சிவாய பதிகம் பாடவே கூடாது. நீங்க விரும்பினா அம்மா எண்ட பாட்டை மட்டும் பாடுங்க என்ன’,

தன்னை மறந்து சிரித்த அம்மா வாய்மூடி, விரல்கட்டி உயிர் பிழியும் துயரம் கவிழ்ந்து கிடந்தது.

என்ற மனசில அலையும் சூறாவளியும் சேர்ந்தே அடித்தபடி இனி கதைக்காட்டி இந்த சூறாவளி பெருத்துப் பெருத்து என்னையே அடிச்சு அழிச்சிடும். அம்மா அடிக்கடி சொல்வா, ‘குஞ்சு உண்மையை சொல்ல நீ ஆருக்கும் பயப்பிடக்கூடாது. எது பேசினாலும் வார்த்தை கள் கைவீசி நடக்கவேணும்’,

‘அக்கா’

‘என்ன?’

அம்மா சொல்லித்தந்த மாதிரி வார்த்தைகள் வரவில்லை. அவை ஓடி ஒளிந்தன.

‘அம்மா எந்த அறையில்…?’ அக்கா இருட்டில் நின்றா. பெருமூச்சுடன் சின்ன அறையைப் பார்த்தா. ஒ என்ர அறை அம்மா வும் நானும் சிரித்து. கதைத்து எனக்கும் அம்மாவுக்கும் பிடித்த அறை. உணர்வின்றி கால்கள் அறையை நோக்கி நடந்தன. இங்கதான் என்ர அம்மான்ர மூச்சு இந்த அறையிலதான் அமைதியாய், பெருமூச்சாய் மூசி மூசி கழிஞ்சிருக்கும். அம்மான்ர உயிர் எங்கேயும் போயிருக்காது. இந்த அறையிலதான் இங்கதான் என்னைத் தேடித் தேடி எனக்காக வில்லூன்றிப் பிள்ளையாரை வேண்டியபடி இருக்கும். என்ர வீட்டில இந்த அறையில் ஒரு நிமிஷம் என்றாலும் இருக்க வேணுமென்று எத்தனை நாட்கள் ஏங்கி அழுதிருப்பன், இனி என்ர ஒரு கை எழுத்தால எல்லாம் மாறிப் போகப்போகுது. எங்கட வீட்டை தங்கட வீடு என்று யாரோ எல்லாம் சொல்லப்போகினம். முகம் தெரியாதவர்களின் பாதங்கள் என்ற அம்மா நடந்த தடயங்களை அழிக்கும். ஓம் என்ர அம்மாவின் எல்லா அடையாளங்களையும் அழிக்கும். பிறகு என்ர அம்மான்ர உயிர் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்காது. ஓ என்று கத்தியபடி ஏதாவது ஒரு வெட்ட வெளியில் அலைஞ்சு அலைஞ்சு என்னைத் தேடுவா. இது நடக்கக்கூடாது, நடக்க விடவும் மாட்டன். நான் என்ன அம்மா செய்ய? என் உயிரை யாரோ வேரோடு அறுப்பதுபோல் இருந்தது, எல்லாமே என் கையை விட்டு நழுவுவதுபோல்.

சுகந்தி… இது என்ர அம்மா. என்ர அம்மா சுவரில் சிரித்தபடி என்னையே பார்த்துக்கொண்டு இருந்தா. சுகந்தி… அம்மா என்னை அழைப்பது போல், ‘அம்மா கூப்பிட்டனீங்களாம்மா?, அம்மா என்னைத் தொடுவதுபோல், என் தலை தடவி அணைப்பதுபோல் விரலுடன் விரல்கோர்த்து என்னை இறுகப் பிடித்து, ‘என்னை தவிக்க விட்டுட்டுப் போனமாதிரி இந்த வீட்டையும் விட்டுடாதே’. ஒரு நிமிடத்தில் எல்லாம் கனவுமாதிரி. ‘அம்மா என்னை பாருங்கம்மா என்னோட கதையுங்கம்மா, என்னை தனியா விட்டிட்டு எங்கேயும் போகாதேங்கம்மா’. அம்மா வின் படத்திலிருந்த ஆணி என்கையை கீறி இரத்தம் வழிந்துகொண்டு இருந்தது, அக்கா கத்தினா, ‘சுகந்தி அழாத. வா, வந்து கையைக் கழுவு.’

‘கழுவு’, எனக்குள் இருந்த வார்த்தை அகல கைவீசியது.

– பெண்கள் சந்திப்பு மலர்-2004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *