விவசாயி மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 5,861 
 
 

அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர்.

யோசிக்க ஒன்றுமில்லை! தாத்தாவின் முடிவே என் முடிவும் என திட்டவட்டமாக கூறினாள். லக்ஷ்மி.

லக்ஷ்மி, ஒரே பெயர்த்தி, அரசு என்கிற திருவரசு தாத்தாவுக்கு.

அப்போது லக்ஷ்மிக்கு பத்து வயதேயிருக்கும்!

ஐந்தாம் வகுப்பு முடித்து விடுமுறைக்குச் சென்று கழித்து ஊர் திரும்பும் போது நடந்த விபத்தில் இவள் மட்டுமே உயிர் பிழைத்து ஊர் வந்து சேர்ந்தாள்.

தாயும்,தந்தையையும், வீட்டு நடு கூடத்தில் கிடத்தி வைத்து இருந்தது, இன்றும் நினைவில் உள்ளது.

பாவம், இந்த பிள்ளை! அனாதியா போயிட்டு!
இதுக்கு விபரமே தெரியலையே! அழக் கூட இல்லையே!
என என்னை மைய்யப் படுத்தியே எல்லோரும் இவள் நிலையைக் கவலைக்கிடமாக பேசியதும் நினைவில் வந்து போகும்.
அர்த்தம் விளங்க மேலும் ஐந்து வருடம் தேவைப்பட்டது.

அவர்களுக்கு என்ன தெரியும்?

மறுநாள் வீடே வெறிச்சோடி இருந்ததைக் கண்டு நான் பட்ட வேதனையும் பயமும் இன்னும் என்னை விட்டு அகலவில்லை.
அன்றிலிருத்து தனிமையை நினைத்தாலே ஒரு பயம் வந்து அடி வயிற்றைப் பிசையும்.

விவசாயம் பார்த்த தாத்தா ,என்னையும் பார்த்துக் கொள்ளும் படியானது. காரணம்!

அப்பாவும் அம்மாவும் காதல் கல்யாணமாம்! அம்மா தன் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறி வந்ததால் ஓடுகாலியாகிப் போனாள் ஊருக்கு.

தாத்தாவே இருவரையும் அழைத்து வந்து மகன் விரும்பியவளையே மணம் முடித்து அப்போதே புரட்சி பண்ணியவர்.

தன் கூடவே தங்க வைத்து விவசாயம் பயிற்றுவித்து ஊரிலே மரியாதையாக வாழ்ந்து வாழ வைக்கும் கலையை தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தவர்.

அப்பா,அம்மா, மரணத்திற்கு வந்தவர்கள் ,என்னுடைய வாழும் இடத்தை மாற்றப் பார்த்ததாகவும், அதுவும் அவர்கள் வீட்டில் தங்க ஏற்பாடு இல்லையாம், ஏதாவது ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறோம், என பேசியுள்ளனர். தாத்தாவின் கோபம் அன்று ஏறி பின் அடங்கிப் போனதாக தாத்தாவே இன்றும் கூறிச் சிரித்துக்கொள்வார்.

தாத்தாவுடன் சேர்ந்து வயல், வங்கி ,சந்தை,தோப்பு, டிராக்டர் பயணம்,என விவசாயத் தொழில் அனைத்தும் அத்துபடி இந்த பதினெட்டு வருடத்தில்.

ஏன் அரசு? புள்ளையை நல்லா படிக்க வைக்கலாமில்ல? எனக் கேட்டவர்கெல்லாம்,

போடா, போய் உம் புள்ளையை நல்லா வளர்த்துக் காமி! எனச் சொல் சாட்டைபோல் அடி விழும்.

என் பேத்தி நல்லா படிக்கலைன்னாலும் பராவாயில்லே! அவ வாழ்க்கையை வாழ அவளுக்கு பயிற்று வைச்சு இருக்கேன் என்று பெருமையாகச் சொல்வார்.

நல்லா படிச்சாதானே, நாளைக்கு கட்டி கொடுக்க முடியும், இல்லைன்னா சாணி அள்ளிக்கிட்டு இங்கேயே கிடக்க வேண்டியதுதான் என பக்கத்து வீட்டு பாட்டி சொன்னதுக்கு அப்படி ஒரு கோபம் தாத்தாவுக்கு வந்தது.

அப்படி ஒரு ஆசை இருக்கா உனக்கு?

ஏய் கிழவி, ஏன் வயசாகிட்டு இன்னும் போகலியா நீ?

என் பேத்தி ஏண்ட சாணி அள்ளனும்? அவ மகாராணி .
என சண்டையிட்டதோடு அவளிடம், இன்று வரை பேச்சுவார்த்தை கூட இல்லை.

இருக்கிற பத்து ஏக்கர் நிலம், மாடுகள்,எல்லாவற்றையும் விற்று சென்னைக்கு போயிடலாமே என எல்லோரும் கூறினர்.

போனவனெல்லாம் திரும்ப இங்கதான் வருவாங்க பாரு!
அப்ப அவன் விற்ற இடம் கூட அவனுக்கு கிடைக்காது,

அப்போ வரவனுக்கெல்லாம் நான்தான்யா நெல் படியளப்பேன்.

என்ன ஒரு தீர்க்கமான பார்வை, தாத்தாவிற்கு என மெய்ச்சினாள்.

இவளைப் பெறுத்தவரை அரசு தாத்தா இல்லை. ஒரு நல்ல அப்பாவாக,அம்மாவாக, அனைத்து உறவுமாக, இருவருக்கான உலகம் என்பது சந்தோஷமாக, கிராமத்தில் அனைவருக்கும் உதவிகள் செய்து, நல்லது ,கெட்டதுக்கெல்லாம் போய் வந்து ஊரே கதி என கிடந்து உழைப்பவர்கள்.

அவ்வளவு பாசம் உள்ள பெயர்த்திக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார். எத்தனையோ இன்ஜினியர், தொழில் முனைவோர் என பலர் பெண் கேட்டு வந்தனர்.

மாச சம்பளம் வாங்கி கட்டுக்கோப்பா குடும்பம் நடத்தி சுயநலமா வாழ்ந்தோம்கிறதெல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லை.

விவசாயம் பண்ணி நாமும் நல்லா இருந்து , உணவுக்கான மரியாதையளித்து நாலு பேருக்கு உணவளித்து, வாழ வைச்சு வாழறதுதான் சிறந்த வாழ்க்கை, அந்த வாழ்க்கையைத்தான் நான் என் பெயர்த்திக்கு கொடுக்கப் போகிறேன். அதனாலேதான், ஒரு விவசாயியைதான் என் பெயர்த்திக்கு கட்டி வைப்பேன்,

அவனுக்குத்தான் வாழ்க்கையின் அர்த்தமும், ஒரு உயிரின் வலியும் நல்லாத் தெரியும், அவனாலதான் தாய் தந்தை இழந்த ,என் அருமை பெயர்த்தியையும் நல்லா பார்த்துக்கமுடியும் என தீர்மானமாக இருந்தார்.

அப்போதான் காரிலே யாரோ வந்து இறங்கினர்.

வந்தவரே பேச ஆரம்பித்தார். தாத்தாவிடம்.
ஐயா! என்னைத் தெரியுதா?

நான் தான் சங்கரன். மேலத்தெரு சங்கரன் என்றார்.

ஆங்.. சொல்லுங்க! நல்லா நினைவுலே இருக்கு!

பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

சிறு விவசாயியா இருந்த போது நாற்றுகள் இவரிடம் வாங்கி நிலம் சாகுபடி பண்ணியதையும் அது நல்ல மகசூல் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

அதன் பிறகே சிறுக,சிறுக,நிலம் பெருகி இப்போ சுமார் ஐந்தரை ஏக்கர் நிலம் உள்ளது. இவரின் நிலம் கூட இப்போ தாத்தாவின் இடத்தை ஒட்டிதான் இருக்கு,

சும்மா தரிசாவே போட்டு வைச்சு இருக்கான்னும், ஒத்தை புள்ளையை படிக்க வைக்க பட்டணம் போனான் கூட அடிக்கடி சொல்லுவார்.

ஐயா! இவன் எம் மகன். சென்னையில் ஒரு கம்பெனியிலே நல்ல வேளையில் இருக்கான்.

வயலைப் பார்க்கனும்னு ஆசைப் பட்டான்,அதான் கூட்டியாந்தேன்.

நல்லது,காபி குடிச்சுட்டு போ, இவதான் என் பெயர்த்தி லக்ஷ்மி.

சின்ன வயசிலே பார்த்ததுங்க! நல்லா வளர்ந்திட்டு அடையாளமே தெரியலே! அந்த மகாலகஷமி மாதிரியே இருக்காங்க!

மாமா, நீங்க வேனா மறந்து இருக்கலாம்,

தாத்தாவும்,நானும் உங்களைப் பத்தி பேசாத நாளே இல்ல. நீங்க வயலை தரிசா போட்டதை, தாத்தா, மண்ணை மலடு ஆக்கிட்டு போயிட்டான்னு சொல்லித் திட்டுவார்.

அதுவும் உங்க பையனும் நானும் ஒரே பள்ளிதான், ஒரு வயது மூத்தவர். ஆனா,கணக்கிலே கொஞ்சம் மக்கு. என்றாள் கிராமத்துக்கே உரிய துடுக்காய்.

அங்கே சிரிப்பு ஒலி எழுந்து அடங்கியது.

காரை அங்கேயே போட்டுவிட்டு நடந்தே சென்றனர், வயல் சுற்றிப் பார்த்து திரும்பினர்.

என்ன சொல்றார்? உன் பையன். இதெல்லாம் எதுக்கு வித்திட்டு என் கூட வந்திடுங்க ,என்கிறானா? என்றார்.

இல்லைங்க அய்யா!

வேலையை விட்டுட்டு ஊரோடு வந்திடுறேன், நம்ம நிலம் இருக்கும் போது நாம ஏன் அடுத்தவருக்கு உழைக்கனும்? என்கிறான். ஐயா!

சரியாச் சொன்னான்!.போ!

அப்படியே செய்யச் சொல்லு, நீ கூட இருந்து எல்லாம் கற்றுக் கொடு. என்றார். தாத்தா.

என்ன ஐயா? நான் பட்ட கஷ்டம் நம்ம பையனும் படனுமான்னுதான் யோசனையா இருக்கு? உங்களுக்கு தெரியாததா? தினம் தினம் தூக்கம் கெட்டு,மழை வந்தாலும் கவலை, வரலைன்னாலும் கவலை,

விதை பயிராகி, பயிர் உயரமாகறதுகுள்ளே நம்ம உசுரு போய், உசுரு வருதே!

எல்லாத் தொழிலிலும் தான் இந்த மாதிரி சங்கடங்கள் இருக்கும்.
அதுக்காக தொழிலையே விட்டுடலாமா? அதுவும் நாம நாட்டுக்கே படியளக்கிறோங்கிற திமிரோடு வேலை செய்யனும்.

சரியாச் சொன்னீங்க!

அப்படின்னா, நீங்களே முதல் ஒரு ஏக்கருக்கு நாற்றுகள் கொடுத்து குறுவைக்கு உதவி பண்ணுங்க,

உங்க கைராசி அவன் செழிக்கட்டும். என வேண்டுகோள் விடுத்தார்.

அவன் முடிவில் தீர்க்கமாக இருப்பான்னா, சொல்.லு!

நாற்றுகள் மட்டுமில்லே என் பெயர்த்தியையே உனக்கு மருமகளா குடுத்துடுவேன். எங்க நிலத்தையும் சேர்த்தே பார்த்துக்கட்டும் என்றார் தாத்தா தடாலடியாக!

வயக்காட்டைப் பார்க்க வந்த இடத்திலே சம்பந்தம் பேசிட்டாரே, என யேசித்தபடி அதிர்ச்சியில் இருந்தபோது தான் இதையெல்லாம் காதில் வாங்கிய லக்ஷ்மி அங்கே வந்தாள்.

நல்ல யோசனைதான்! மகாலட்சுமியை யாராவது வேணாமுன்னு சொல்லுவாங்களா? வீட்டிலே கலந்துகிட்டு வருகிறேன், இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு. பட்டுனு சொல்லிட்டிங்க!
எனப் பாராட்டிக் கிளம்பினார்.

அப்போ நாங்க கிளம்புறோம்! நல்லா யோசித்து முடிவைச் சொல்லுங்க! எனக் கூறி கிளம்ப எத்தனித்தனர்.

யோசிக்க ஒன்றுமில்லை!தாத்தாவின் முடிவே என் முடிவும் என திட்டவட்டமாகக் கூறினாள் லக்ஷ்மி.

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *