சுபசகுனம் சிரித்தான்… அழுதான்… கோபப் பார்வை பார்த்தான்… ‘தூ’ என்று காறித் துப்பினான்… தன் ஓரடி நீளக் கூந்தலை சிலுப்பி உர்ரென முறைத்தான்… அரிவாளை சரக்கென எடுத்தான்… ஆவேசமாக அலறியபடி ஒரே வெட்டாக வெட்டினான்… அப்படியே முகத்தில் ரத்தம் ஜிவுஜிவுக்க, உதடு துடித்து நின்றான்.
டைரக்டர் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவன் வெட்டிய ஆவேசத்தைப் பார்த்துச் சின்னதாக ஓர் அதிர்வு கொடுத்தார். வெட்டின கிளை முறிந்து விழுந்திருந்தது.
‘‘ஓ.கே&தான்! நல்லா எக்ஸ்பிரஷன் குடுக்கறான். தம்பி… உன் கூந்தல் நல்லா டிஃபெரென்ட்டா இருக்கு. தலையை நல்லா நாலு சிலுப்பு சிலுப்பு பார்ப்போம்…’’
சுபசகுனம் தன் கூந்தலை இப்படி அப்படி ஆட்டிக் காட்டினான். ஷாம்பூ விளம்பரம் மாதிரி பட்டுக் கூந்தல் பறந்தது.
‘‘டெஸ்பரேடோல ஆன்டானியோ பண்டேராஸ் மாதிரி இருக்கான்யா! நல்லா லைட் பண்ணி ஃபில்டர் போட்டு, அந்தக் கூந்தலை சிலுப்பித் திருப்பறப்போ டெரர் எஃபெக்ட் குடுத்துட்டா போதும்… கதை கலரே சேஞ்ச் ஆகிடும்! இவனை வில்லனுக்கு அல்லக்கையா போட்டுக்கலாம். தம்பி, நாளைக்கு வா! ஒரு சின்ன கேரக்டர் தரேன்!’’
‘‘தெய்வமே…’’- சுபசகுனம் சாஷ்டாங்கமாக டைரக்டர் காலில் விழுந்தான்.
சுபசகுனத்தை நீங்கள் சினிமாவில் நிறைய முறை பார்த்திருக்கலாம். ஆனாலும், அவனை உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்காது.
விஜய் வில்லனை உதைக்கும்போது சிதறி ஓடிய கூட்டத்தில் அவன் இருந் திருக்கிறான். சஞ்சய் ராமசாமிக்கு அசின் போன் பண்ணி, ‘ஆம்பளை ஜட்டி விளம்பரத்துல நடிக்கறி யாப்பா?’ என்று கேட்டபோது, அசினுக்கு பின்பக்கம் நடந்து போயி ருக்கிறான். ‘பருத்திவீர’னில் கார்த்தி முத்தழகு வீட்டு வாசலில் கலாட்டா செய்துவிட்டு, டக்ளஸின் சோன்பப்டி வண்டியை எட்டி உதைத்துவிட்டுப் போகும்போது பக்கத்தில் நின்றிருந்த இவனுக்குச் சரியான அடி!
‘‘எதுக்குடா இந்த நாறப் பொழப்பு? பேசாம ஊர்ல போய் விவசாயம் பண்ணலாம்ல..?’’ – திருவல்லிக்கேணி மேன்ஷன் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்.
சுபசகுனம் சிரிப்பான். ‘‘இருக்கட் டும்ணே! என்னிக்காவது வெளிச்சமா வந்துடுவோம்ல? ‘குஷி’ படத்துல விஜய் சாருக்கு நாலு ஃப்ரெண்ட்ஸ். அதுல ஒருத்தர்தான் ஷாம். அவர் நடிச்ச படம் தேசிய விருது வாங்க லியா? இன்னொரு படத்துல கதா நாயகிக்கு தோழி த்ரிஷா. நாலு பேர்ல ஒண்ணா நின்ன பொண்ணு. இப்ப எழுவது லட்சம் எம்பது லட்சம்னு வாங்குதில்ல..? நமக்கும் காலம் வரும்ணே! நானெல்லாம் மண்ணுக்குள்ள புதைஞ்சுகெடக்கற நிலக்கரிண்ணே! ஒருநாள் இல்ல ஒருநாள், வைரமாவோம்ல?’’
நாயர் கடையிலிருந்து வாங்கிவந்த டீயும், செய்தித்தாளில் சுற்றிய வெங்காய வடை, இனிப்பு போண்டா வுமாக எதிரே பவ்யமாக நின்றான் சுபசகுனம்.
‘‘என்னடா விசேஷம்?’’
‘‘நாளைக்கு ஷ¨ட்டிங்ல முதல் தடவையா ஒரு கேரட் (கேரக்டர்) தர்றோம்னு சொல்லியிருக்காங் கண்ணே!’’
‘‘அடி சக்கை! எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாவகாசமா சொல்றே? வெரிகுட்! முதல்ல அழகா, ஒழுங்கா கிராப் வெட்டிக்கிட்டு லட்சணமா போ!’’
‘‘ஐயையோ! இந்த முடியைப் பார்த்துதாண்ணே சான்ஸே கொடுத்தாங்க!’’ என்று பதறினான்.
சுபசகுனத்துக்குத் தன் ஓரடி நீளக் கூந்தலில் அலாதி இறுமாப்பு… பெருமை! பெண்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அழகாக வளர்த்து வைத்திருந்தான். காலை யில் ஸ்பெஷலாக அரைத்த சீயக்காய் தேய்த்து அரை மணிநேரம் குளிப்பான். ஷாம்பூ போடவே மாட்டான். குளித்த தலையை மேன்ஷன் மொட்டை மாடியில் நின்று நன்றாக உலரவிட்டு, பட்டுப் போல் பளபளப் பாக வாசனையாக வைத் திருப்பான். பிறகு, அழகாக எண்ணெய் தடவிச் சிக்கெடுத்து வாரி, ரப்பர் பேண்ட் போட்டு விஜய சாந்தி ஸ்டைலில் குதிரை வால் கொண்டை.
அன்று இரவு… தட தடவென கதவு தட்டப்பட்டது. எழுந்து போய்த் திறந்தான் சுபசகுனம். கிராமத்திலிருந்து அவனது தாய்மாமன் உட்பட, ஆட்கள் வந்திருந்தார்கள்.
‘‘மாமா, வா வா… என்ன இந்த நேரத்துல?’’
‘‘ஊர்ல உங்க ஆத்தா தவறிடுச்சிப்பா!’’ & வாயைத் துண்டால் பொத்தி விம்மினார்.
சுபசகுனம் அதிர்ந்தான். ‘‘மாமா…!’’
‘‘தண்ணி எடுக்கப்போய், தடுமாறி கிணத்துல விழுந்துட்டுது. வெளிய எடுக்கும்போதே உசிரில்லை… நீ உடனே கிளம்பு!’’
‘‘இப்பவேவா?’’
‘‘ஏய்… என்னடா கேக்கறே? ஏற்கெனவே ஒருநாள் ஆகிப்போச்சு! வயசான ஒடம்பு. தாங்காது.’’
‘‘நா… நா… வரலே மாமா!’’
‘‘என்னடா பேசறே… செத்தது உங்க ஆத்தா!’’
‘‘எனக்கு நாளைக்கு முக்கியமான ஷ¨ட்டிங் இருக்கு!’’
அனைவரும் திகைத்துப் போனார்கள்.
‘‘டேய் சுபசு… செத்தது யாரோ இல்ல, உன் அம்மா! போக மாட்டேன்னா என்ன அர்த்தம்?’’ மேன்ஷன் நண்பர்கள் கோபப்பட்டார்கள்.
‘‘அதுக்காக? எனக்கு வாய்ப்பு வர்ற நேரத்துல அவங்க செத்துட்டா நா என்ன பண்றது? எனக்காக ஷ¨ட்டிங்கை நிறுத்திவைக்கவா போறாங்க? நா இல்லன்னா வேற யாரையாவது போட்டு எடுத்துருவாங்க. அப்புறம், மறுபடி நா நாலு வருஷம் லோலோனு அலையணும்.’’
‘‘அப்ப உங்க ஆத்தா அநாதைப் பொணமா போனா பரவாயில்லேங்கிறியா?’’
சுபசகுனம் அசரவில்லை. பிடிவாதமாக நின்றான்.
‘‘சரி, அப்ப ஒண்ணு செய்! இப்ப கிளம்பினா காலைல 4 மணிக்கே போயிடலாம். விழுப்புரம் பக்கம்தானே கிராமம்… 6 மணிக்கு எரிச்சிட்டு அடுத்த பஸ் புடிச்சு வந்துடலாம். கிளம்பு!’’
‘‘நா வரலேன்னா வரலே!’’
‘‘ஏன்டா நாயே?’’
‘‘கொள்ளி வெச்சா மொட்டை போடணும்.நா முடியை எடுக்க மாட்டேன்.. மொட்டை போடமாட்டேன்!’’
முட்டுக்காடு.
தயாரிப்பாளர் அலறிக்கொண்டு இருந்தார்… ‘‘எங்கேய்யா தங்கராசு? ஒரு படம் ஓடிட்டா பெரிய இவனா அவன்?’’
‘‘பேமென்ட் ப்ராப்ளம் சார்… சம்பளம் ரொம்ப கம்மினு ஃபீல் பண்றார். ஏத்திக் குடுத்தா வரேங்கறார்…’’ & புரொடக்ஷன் மேனேஜர் சொல்ல, தயாரிப்பாளர் கடுப்பாகி செல்லில் தங்கராசுவுக்கு லைன் போட்டார்.
‘‘ஹலோ! நா அறிவழகன் பேசறேன்!’’
‘‘எந்த அறிவழகன்?’’
‘‘ஆங்… உன்னை முதன்முதலா சினிமாவுல அறிமுகப்படுத்தின முண்டம்!’’
‘‘முதலாளி, வணக்கம்க!’’
‘‘என்ன தங்கராசு, பிரச்னை பண்றே? உன்னை வில்லனா என் படத்துல போட்டதுக்கு நீ எனக்கே வில்லனா விளையாட்டுக் காட்டறியா? பேமென்ட் குடுத்தாதான் வருவேன்னு சொன்னியாமே..?’’
‘‘அப்படில்லாம் இல்ல முதலாளி! என் பெண்டாட்டிக்கு திடீர்னு பிரசவ வலி! ஆஸ்பத்திரில இருக்கேன்.’’
‘‘உனக்கு எப்படா கல்யாணம் ஆச்சு? ஏன்டா… உன் திமிருக்கு நா தாலியறுக்கவா? நீ வருவியா மாட்டியா?’’
‘‘அந்த பேமென்ட் மேட்டரை மட்டும் கொஞ்சம் கரெக்ட் பண்ணிட்டீங்கன்னா…’’
தயாரிப்பாளர் ஆத்திரமாகப் போனை அணைத்துவிட்டு, ‘‘அந்த நாய் வராது டைரக்டர் சார்..! வளர்த்த கடா மார்ல பாய்ஞ்சிடுச்சு!’’
‘‘என்ன பண்ணலாம்?’’
‘‘அடுத்த கடா தயார் பண்ணுங்க!’’ என்று எரிச்ச லானவர், தூரத்தில் சுபசகுனம் தன் கூந்தலைக் கோதிவிட்டபடி, தன்னைப் பார்க்க வந்த நண்பர் களுடன் பேசிக்கொண்டு இருப் பதைப் பார்த்து…
‘‘யாருய்யா அது?’’
‘‘கம்பெனி ஆர்ட்டிஸ்ட்தான். வில்லனுக்கு அல்லக்கையா போட்டுக்கலாம்னு…’’
‘‘அவன் சரியா வருவானா தங்கராசு கேரக்டருக்கு? இவ்ளோ முடிவெச்சிருக்கானே… டிஃபரென்ட்டா இருக்குய்யா!’’
இடுப்பளவு தண்ணீரில் நின்றான் சுபசகுனம். வெடவெட வென நடுங்கினான். குளிர் அல்ல… படபடப்பு! திடீரென்று இப்படிப் பிரதான வில்லன் வாய்ப்பு… எதிர்பார்க்கவே இல்லை!
‘‘ஷாட் சொல்லியாச்சாப்பா அவனுக்கு?’’ டைரக்டர் கத்தினார்.
அஸோஸியேட் குளத்தை நோக்கி ஓடினான்.
‘‘இத பாரு சுபசகுனம்… வில்லன் அறிமுகம் இது. தண்ணிக்குள்ளே முங்கிக்க. ஆக்ஷன் சொன்னதும் பத்து செகண்ட் விட்டு, குபீர்னு மேலே வா! தலையை நல்லா சிலுப்பி விடு! வலது கையைத் தூக்கு. இந்தா ரேசர். அப்படியே உன் தலையில வெச்சு, முடியை சுத்தமா மழிச்சுடு! ஆமா, உனக்கு நீயே மொட்டை அடிச்சுக்கறே! ஒரே ஷாட்தான்! ரீ-டேக்கே கிடையாது. ஒழுங்கா பண்ணணும். புரியுதா?’’
‘‘சார்…’’ அதிர்ந்தான் சுபசகுனம். ‘‘மொட்டை அடிக்கணுமா?’’
‘‘ஆமா! கதைப்படி ஊர்ல உங்கம்மா செத்துப்போயிட்டாங்க. ஊருக்கு நீ போக முடியாது. ஏன்னா, அங்கே போலீஸ் உன்னைத் தேடுது. அதான், இங்கேயே மொட்டை அடிச்சுக்கறே! ஸீன்ல பிரமாதப்படுத்தணும். புரியுதா?’’
அஸோஸியேட் விலகி ஓட, சுபசகுனம் தண்ணீரில் முங்க…
‘‘ஆக்ஷேன்ன்ன்ன்ன்ன்…’’
பத்து செகண்ட் இடைவெளி விட்டு சுபசகுனம் குபீரென தண்ணீரை விட்டு வெளியே வந்து, அழுகையும் ஆத்திரமுமாக ‘‘அம்மா…’’ எனக் கண்கள் கலங்கக் கதறியபடி தன் முடியை மழிக்கத் தொடங்க…
மொத்த யூனிட்டும் அசந்து போய் நின்றது. தயாரிப்பாளர் கை தட்டினார். ‘‘பரவாயில்லய்யா… புதுப் பையன் நல்லா பண்ணிட்டான்ல? சொல்லப் போனா அந்தத் தங்கராஜைவிடவே நல்லா ஃபீலிங்கா பண்ணிட்டான்யா! இவனை விட்டுறக்கூடாது! பார்த்துட்டே இருங்க, இவனை இண்டஸ்ட்ரில பெரிய ஆளா கொண்டாந்து காட்டறேனா, இல்லியான்னு..?’’
தயாரிப்பாளர் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு இருக்க, டைரக்டர், கேமராமேன் உள்ளிட்ட அனைவரும் ஏகோபித்துப் பாராட்ட, அது எதுவும் காதில் விழாதவனாக…
சுபசகுனம் இன்னும் அழுதுகொண்டு இருந்தான்.
– 16th மே 2007