கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 16,131 
 
 

அலாரம் ஒருமுறை அடித்து ஓய்ந்து போயிருந்தது.

காலையில் எழும்பி வீட்டு வேலைகள் செய்ய மனம் இல்லாதவளாக கட்டிலில் பிரண்டு கொண்டு இருந்த தமயந்தி, மெல்ல அயர்ந்து கொண்டு போனபோது திரும்பவும் அலாரம் சிணுங்கியது.

திடுக்கிட்டு விழித்தவள் கைகளை நீட்டி அலாரத்தின் தலையில் ‘பேசாமலிரு’ என்று செல்லமாய் ஒரு தட்டுத்தட்ட அது வாயடைத்துப்போய் நின்றது.

ராமைப்போலத்தான் அவன் வாங்கி வந்த இந்த அலாரமும். கட்டிலைவிட்டு எழும்பும்வரையும் அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கும். தூக்கம்வராத இரவுகளில் அதன் டிக்.. டிக்.. சத்தம்கூட சிலசமயம் எரிச்சலைக் கிளப்பும்.

சோம்பல் முறித்தபோது, திரும்பவும் மணியடித்தது.

இது அலாரம் அல்ல, தொலைபேசிதான் அடிக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது.

தொலைபேசியின் கிறிங்… கிறிங்… ஓசை, அதனை அலாரத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. இப்போதெல்லாம் நல்ல செய்திகளைச் சொல்லாத தொலைபேசிச் சத்தத்தைக் கேட்கவோ, தபால்பெட்டியைத் திறந்து தபாலை எடுக்கவோ வெறுப்பாகவே இருக்கிறது.

அதேசமயம் ஓசைகள் மூலமே தங்களை இனம் காட்டும் தொழில் நுட்பக் கருவிகளை நினைத்துப் பார்க்க அவளுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகம் பற்றி வியப்பாகவும் இருந்தது.

விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று சலித்தபடி தொலைபேசியை எடுத்தவளுக்கு தாயாரின் அன்பான குரல் மறுபக்கத்தில் இருந்து உட்சாகப்படுத்தியது.

ஊரில் இப்போ பொழுதுசாயும் நேரம்தான் என்பது நினைவில் வந்தது.

‘அம்மாவா..? எப்படி அம்மா இருக்கிறீங்கள்..?’ என்று கேட்டாள்.

‘ஏதோ இருக்கிறம். இங்க கெஞ்சம் மழைக்குளிர், போனமுறை வந்தபோது நீ கொண்டு வந்த சுவற்றர்தான் போட்டுக்கெண்டு இருக்கிறன். எப்ப பாத்தாலும் உங்களைப்பற்றிய நினைவாகவே இருக்கு. மருமகன், பிள்ளைகள் எப்படி இருக்கினம், என்ன செய்யினம்?’

‘சுகமாக இருக்கினம் அம்மா. இன்னும் நித்திரையாலை எழும்பவில்லை!’

‘நீ கொடுத்து வைச்சவள். உன்னுடைய புருஷனும் அப்பா மாதிரியே உன்னையும் பிள்ளைகளையும் கவனமாகப் பாத்துக்கொள்ளுறார். தங்கச்சி ரமாதான் பாவம். ரமாவின்ர புருஷன் அவளை வேலைக்கு ‘போபோ’ என்று கலைக்கிறாராம். வேலையோ சரியான கஷ்டமாம். ஒவ்வெரு நாளும் அழுதழுதுதான் வேலைக்குப் போறாள். வேலையாலை வீட்டில வந்தும் அழுகைதானாம். அதனால மனம் சோர்ந்து நொந்துபோய் இருக்கிறாள். அவள் சரியானபாவம், அவளுக்கு குடும்ப அனுபவம் போதாது. மனசுடைஞ்சு போயிருக்கிறாள். அடிக்கடி அவளோட போனிலை எண்டாலும் கதைச்சு ஆறுதல் சொல்லு.’

‘சரி அம்மா, அவையலும் ஆசையிலை பெரிய வீடு ஒன்ற வேண்டி விட்டினம். ஒரு ஆள் மட்டும் இங்க தனிய உழைக்கிறது காணாது தானே அம்மா. எல்லாருக்கும் அளவுக்கு மிஞ்சின ஆசை. அதுதான் இங்கை இருக்கிற பிரச்சனை. இங்க யாருக்குதான் கவலை இல்லை. வீடு இருக்குது, கார் இருக்குது, எல்லா வசதியும் இருக்கு, ஆனல் மனதிலை சந்தோஷம் மட்டும் இல்லை அம்மா. மாதம் முடியப்போகுதெண்டால் மோட்கேஜ் கட்டவேணும் எண்ட கவலை, பிள்ளைகளைப் படிப்பிக்க வேணும் எண்ட கவலை, உனக்கு என்ன கவலை அம்மா..?.’

‘எனக்கு என்ன கவலை, உங்களைப் பற்றின கவலைதான் பிள்ளை’.

வயதான காலத்திலையும் எங்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிற அம்மா. எங்களுக்கும் வயசானால் இப்படித்தான் யோசித்துக் கொண்டிருப்போமோ தெரியாது!

‘தமயந்தி தமயந்தி.. பிள்ளையளை வெளிக்கிடுத்தாமல் அங்க என்ன செய்யிறீர்’ தினசரி நடக்கும் காலைவேளை நாடகம் ஆரம்பித்து விட்டதற்கு அடையாளமாய், தொலைபேசிச் சத்தத்தையும் மேவிக் கொண்டு, ராமின் குரல் கீழே இருந்து வந்து இடது பக்கக் காதுக்குள் புகுந்தது.

இனி அலாரம் நிக்காமல் அடிச்ச மாதிரி கொஞ்ச நேரம் அல்லோல கல்லோலம்தான்.

‘சரி அம்மா, பிள்ளைகளை வெளிக்கிடுத்த வேணும், நான் பிறகு கதைக்கிறன்’ என்றவள் போனை வைத்துவிட்டு கீழே சென்று, பம்பரமாக வீட்டு வேலைகளைச் செய்யத் தெடங்கினாள்.

பிள்ளைகளை குளிப்பாட்டி உடுப்புப்போட்டாள். பிறகு கணவரின் உடுப்பை ஸ்திரி பண்ணி அவருக்கு கொடுத்து விட்டு எல்லாருக்கும் சாப்பாட்டு மேசையில் காலை சாப்பாடு எடுத்து வைத்தாள். கணவருக்கு மத்தியான சாப்பாடு கட்டிக் கொடுத்துவிட்டு, அவர் வேலைக்குப் போக தமயந்தி பிள்ளைகள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு பாடசாலைக்கு சென்றாள்.

‘உங்களுடைய பிள்ளைகள் கொஞ்சம் குழப்படிதான்’ அவளைக் காணும் போதெல்லாம் ரீச்சர் அடிக்கடி சொல்வது ஞாபகம் வந்தது. எப்போதும் ரீச்சரை தவிர்த்துக் கொள்ளவே விரும்புவாள் அல்லது ஒரு சிரிப்போடு ரீச்சரை சமாளித்துக் கொள்வாள்.

ஒரு முறை ராம் பிள்ளைகளை விடுவதற்காக, பாடசாலைக்குச் சென்றபோது இதே முறைப்பாடு ரீச்சரிடம் இருந்து வந்தது.

‘ஆம்பிளைப்பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருப்பாங்கள், இந்த வயசில குழப்படி செய்தால்தான் அவங்கள் ஆம்பிளைப்பிள்ளைகள்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்துவிட்டான். பிள்ளைகள் குழப்படி என்று தெரிந்தாலும் மற்றவர்களுக்கு முன்னால் தனது பிள்ளைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டான்.

வீட்டிற்கு வந்து கெஞ்ச நேரம் ரீவீ பார்க்கலாம் என்று கதிரையில் உட்கார்ந்தாள். தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி புறப்பட்டுச் சென்றபின் ஏற்படும் ஒருவித அமைதியை அப்போது வீட்டிலே உணர்ந்தாள்.

தெலைபேசி அலறியது. ராமாகத்தான் இருக்கும் என்று நினைத்த படி தொலைபேசியை எடுத்தபேது, அது ராம் இல்லை அவளது சிநேகிதி சியாமளா. சியாவுடன் நேரம் போவது தெரியாமல் கதைத்து முடித்த பேது, வீட்டு சுவர்மணிகூட்டில் இருந்த குருவி எட்டிப் பார்த்து ரிஷியை பாடசாலையில் இருந்து கூட்டிவாற நேரம் ஆகிவிட்டது என்று குரல் கொடுத்தது.

அவசர அவசரமாக கார் திறப்பை எடுக்கச் சென்றபோது அருகில் இருந்த தொலைபேசியில் செய்தி பதிவாகி இருப்பது தெரிந்தது. என்னதான் இருக்கிறது பார்த்து விட்டுதான் செல்வோமே என்று நினைத்தாள்.

தொலைபேசியின் சில இலக்கங்களை அளுத்தியபோது. தொலைபேசியில் ஆறு செய்திகள் காத்திருந்தன. செய்திகளை ஒவ்வென்றாகக்கேட்டாள். ஆறும் ராமின் செய்திகள்தான் பதிவாகி இருந்தன. தமயந்தி உடனே ராம்மிடம் தொடர்பு கொண்டாள்.

‘தமயந்தி இவ்வளவு நேரமும் என்ன செய்து கெண்டு இருந்தனி. எத்தனை தரம் அடிச்சனான். ரிஷி பள்ளிகூடம் முடிஞ்சு அவதிப்படப்போறான் என்று பயந்து போய் இருந்தனான்.’

‘தெரியும் ஆறு தரம் அடிச்சிருக்கிறீங்கள், பார்த்தனான்’ பதட்டப்படாமல் பதில் சொன்னாள்.

‘ஏன்தான் இந்தத் தொலைபேசியைக் கண்டு பிடிச்சாங்களோ..? கையிலே மாட்டாத, கட்டிப்போடும் ஒரு விலங்கு இது’ என்று மனதுக்குள் திட்டினாள்.

‘ஆறுதரமில்லை, அறுபதுதரம் அடிச்சிருப்பன்’ ராமின் குரல் உயர்ந்தது.

வேலையாலை வந்ததும் சத்தம் போட்டுக் கத்தப்போறான் என்று பயந்து போனாள் தமயந்தி, ‘வேலைநேரத்தில் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் யாருக்கும் எடுக்கக்கூடாது என்று கணவன் வேலைசெய்யுமிடத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?’

‘எங்கட தொலைபேசியிலை ஏதோ கோளாறாக்கும், வேலை செய்யவில்லை போல கிடக்குது. இங்க ஒருக்கா தானும் மணி அடிக்கவில்லை. நேரம்போச்சு, நான் ரிஷியையும், விஷ்னுவையும் கூட்டிக் கொண்டு வந்து கோல் பண்ணிறன்’ என்று சொல்லிவிட்டு, அவனிடம் இருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தோடு பாடசாலை நோக்கி விரைந்தாள்.

பாடசாலையில் இருந்து மூவருமாக அருகில் இருக்கும் மோலுக்கு சென்று மக்டோனாஸில் உணவு அருந்தியபின், பிள்ளைகள் ஆசைப்படவே அருகே இருந்த பூங்காவிற்கு சென்றார்கள். பிள்ளைகளைக் கொஞ்சநேரம் ஊஞ்சாலில் ஆட்டிவிட்டு, கொஞ்சநேரம் விளையாடியபின் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தொலைபேசி பழுதாகிவிட்டதாக ராம்மிற்கு பொய்சொல்லி விட்டோமே என்று மனம் சற்று உறுத்தியது. அதேநேரம் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பிள்ளைகளுடன் கொஞ்சநேரம் நிம்மதியாக இருக்க முடிந்ததையிட்டு மனதுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

கதவை திறந்த போது ராம் ஏற்கனவே வீட்டிற்கு வந்திருந்தான்.

‘எங்கை எல்லாரும் உலாத்திப்போட்டு வாறீங்கள் என்று கத்தப்போகிறான்’ என்று நினைத்தாள். அவன் ஒரு மௌனப் பார்வையோடு நிறுத்திக் கொண்டான்.

மேசை மேல் இரண்டு பெட்டிகள் இருந்தன. பெட்டியின் வெளியில் எழுதியிருந்த ‘எப்படி பாவிப்பது?’ என்பது பற்றிய குறிப்பை உன்னிப்பாக வாசித்துக் கொண்டு இருந்தான்.

‘தமா இது என்ன தெரியுமா?’

‘இல்லை’ என்று தலை அசைத்தாள்;.

‘இவை குடும்பத்திற்கான கைத்தொலைபேசிகள். ஒரு மாதாந்த கட்டணத்துடன் இரண்டு செல்லிடபேசியையும் பாவிக்கலாம். இரண்டு பேரும் எந்தநேரமும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளலாம். போற இடமெல்லாம் கொண்டு திரியலாம். இனி மிஸ்பண்ண வேண்டியே வராது’

‘கடவுளே இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என் நிம்மதியை, சுதந்திரத்தை அல்லவா கெடுக்குது’ என்று மனதுக்குள் நினைத்தாள்.

ஆனாலும் கணவனிடம்,

‘இப்படி ஒன்றுக்காகத்தான் இவ்வளவு நாளும் பார்த்துக் கொண்டிருந்தனான்’ என்று செல்லிய வண்ணம் கணவனின் உணவை நுண்அலை அடுப்பில் சூடாக்கினாள்.

‘ஆயுள் தண்டனைகூட ஆகக்கூடினால் இருபத்தைந்தோ முப்பது வருஷம்தான். குடும்பம் என்று வந்துவிட்டால், ஆடுறமாடோ பாடுறமாடோ எப்படியாவது காலமெல்லாம் கறந்துதான் காலத்தைப் கழிக்க வேணும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

உருவமில்லாக் கைவிலங்கை அவளுக்குப் போட்டு விட்டார்களா, இல்லை தானே தேடிப் போட்டுக் கொண்டாளா என்பது அவளுக்கே புரியவில்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *