(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாலைப் பொழுது நீண்டுகொண்டே வந் தது. சுவர்க் கடிகாரம் ராகம் போட்டுப் பாடி நான்கு அடித்து ஒய்ந்தது. சமையற்கார ராமன் ஒவல் கரைத்துக் கொண்டு வைத்தவன், “இரவுச் சாப்பாட்டுக்கு…” என்று தலையைச் சொறிந்தவாறு கேட்டான்.
“ஒன்றும் வேண்டாம் போ. அண்ணாவோ ஊரில் இல்லை. சூடாக ஒரு டம்ளர் பால் கொடு, போதும். உனக்குத் தேவையானால் சமைத்துக் கொள்” என்றேன்.
இதே சமயம் போன் மணி அடித்தது. யாராக இருக்கும் கெளசல்யாவாக இருக்குமோ? இரண்டு மூன்று நாட்களாக அவள் என்னிடம் பேசவேயில்லையே! ரிசீவரை எடுத்துக் குரல் கொடுத்தேன்.
“ஹலோ…”
“ஹலோ! நான்தான் பாஸ்கர் பேசுகிறேன். நானும் கெளசல்யாவும் உங்களுடன் முக்கியமான விஷயம் பற்றிப் பேச இரவு ஏழரை மணிக்கு வருகிறோம்…”
“அவளுக்குப் பேச ஒழிவில்லையாக்கும்?”
“அதெல்லாம் இல்லை. அதுதான் நேரவே வருகிறோமே!”
“டொக்” கென்ற சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இரவு ஏழரை மணிக்கு வந்தால் கெளசல்யா சாப்பிட்டு விட்டுத்தான் போவாள். எந்த நேரத்தில் வந்தாலும் அவளுக்கு அடுப்பங்கரை ஆராய்ச்சிதான். ஆவக்காய் ஊறுகாய்ச் சாதமும், வடகமும் பொரித்துப் போட்டாக வேண்டும். பெரிய சாப்பாட்டுராமி அவள்!
வாசல் தாழ்வாரத்தில் தெரிந்தது.
“ராமா!” என்று அழைத்தேன்.
பவ்யமான தோற்றத்துடன் இடுப்பில் வரிந்து கட்டிய துண்டோடு ராமன் எதிரில் வந்து நின்றான்.
“ராமா! கெளசல்யாவும், பாஸ்கரும் வருகிறார்கள். உனக்கு வடித்துக் கொள்வதோடு கூடக் கொஞ்சம் சாதம் வடித்துவிடு, போதும்!”
“அதற்கென்னம்மா, சமையல் செய்வதற்கே நேரம் இருக்கிறது. ஒரு சாம்பார் வைத்து, உருளைக் கிழங்கு பொடிமாஸ் செய்தால் ஆயிற்று…” இப்படிச் சொல்லிக் கொண்டே ராமன் உள்ளே போனான். அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் சமையலறையிலிருந்து வெங்காய மணம் வீசியது. ராமனுக்கு விருந்தினர் வருகிறார்கள் என்றால் ஒரே உற்சாகம்.
சரியாக ஏழரை மணிக்கு வாசலில் கார் வந்து நின்றது. பாஸ்கரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கெளசல்யா முன்புறம் சரிந்து விழுந்த பின்னலைப் பின்னால் தள்ளியபடி வெளியே வந்தாள். காரின் பின்புறத்திலிருந்து குழந்தைகள் இறங்கினார்கள்.
இறங்கியவர்கள் தங்கள் பெற்றோரைப் பின்தங்க வைத்துவிட்டுப் புல்தரையில் குதித்தோடி வந்து ‘ஆன்ட்டி’ என்று கூவியவாறு என் அருகில் வந்து நின்றார்கள்.
கெளசல்யாவுக்கு முத்தவன் மகன். குமார் என்று பெயர். என் கழுத்தைச் சுற்றி வளைத்தவாறு என்னை நெருக்கினான். பெண்ணின் பெயர் பத்மா. அவள் என் மடிமீது ஏறி உட்கார்ந்து கொண்டாள்.
“ஹலோ, சுமித்திரா! உன்னுடைய தனிமையை, சிந்தனைகளை யெல்லாம் கலைக்க நாங்கள் வந்துவிட்டோம். அடடா இந்த வால்கள் என்ன இப்படித் தலைமேல் ஒன்றும் மடிமேல் ஒன்றுமாக ஏறிக் கொண்டிருக்கின்றன!. ‘ஹூம்…’ பாஸ்கர் புன்முறுவலுடன் என்னை வணங்கியபடி எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். ராமன்தான் எல்லோருக்கும் தக்காளி ஜூஸ் கொண்டு வந்து வைத்தான்.
குமாரும் பத்மாவும் தக்காளி ஜூஸைக் குடித்துவிட்டுத் தோட்டத்துக்கு விளையாடப் போய் விட்டார்கள்.
குழந்தைகள் வெளியே போய்விட்டார்கள் என்று தெரிந்த தம்பதியர் அர்த்தத்துடன் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தனர். கௌசல்யாவின் அழகு முகத்தில் துயரத்தின் சாயை படர்ந்திருந்தது. பாஸ்கரனின் நெற்றியில் கவலைக் கோடுகள்.
எனக்கொன்றும் புரியவில்லே. கணவன் மனைவிக்குள் ஏதாவது தகராறு இருக்குமோ? அவர்கள் என் எதிரிலேயே சில்லறைச் சண்டைகள் போட்டுக் கொள்வார்கள். பழம், காய், என்று ‘டூ’ கூட விடுவதுண்டு. இந்த ஊடலெல்லாம் கணத்தில் மறைந்து களிப்பில் மூழ்கியதையும் பார்த்திருக்கிறேன்.
நான் ஆவலுடன் அவர்களே நோக்கினேன்.
கெளசல்யாதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“சுமித்திரா! உன்னிடம் முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறோம். இவருக்கு விவசாயத் துறையில் மேலும் ஆராய்ச்சி செய்யப் பண்ணே அமைப்புகளை நேரில் பார்வையிட்டுக் கற்றுக்கொள்ள, இவர் பணி புரியும் ஸ்தாபனம் இவரை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறது. நானும் அப்படியே இவருடன் சென்று கல்வித் துறையில் மேலும் பட்டம் பெற்று வரலாமே என்று எண்ணுகிறேன். குழந்தைகள் இருவரையும் உன் பொறுப்பில் விடலாமென்கிற எண்ணம்…”
“ஓ! விடலாமே! உன் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கிறேன்.”
“அதென்ன, உன் குழந்தை என்றுவிட்டாய் இருவரின் மனமும் இவ்வாறு ஒட்டிக் தொண்டபோது, உனது எனது என்ற பேத நிலையிலா பேசுவார்கள்? நம் குழந்தைகள் என்று சொல்” என்றாள் கெளசல்யா உணர்ச்சிப் பெருக்கோடு.
பாஸ்கர் சிரித்தார். பிறகு கெளசல்யா கவலையுடன், “பத்மாவை விடக் குமாரை நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாயோ? அவன் ரொம்பவும் விஷமக்காரன். எங்கள் காரையும் இங்கேயே விட்டு விட்டுப் போகிறோம். வேண்டுமானால் வேலைக்காரியை இங்கே வந்துவிடச் சொல்லட்டுமா?” என்றான்.
இதற்கு நான் பதில் கூறவில்லை. சாப்பாடு தயார் என்று அறிவிக்க வந்த ராமனே பதில் கூறினான். “எதற்கம்மா வேலைக்காரி? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?” என்று!
ஏறக்குறைய ஒரு விருந்தே தயார் செய்திருந்தான் ராமன். சாப்பாட்டுக்கு அப்புறம் நேரம் கழித்தே அவர்கள் கிளம்பினார்கள்.
பத்மாவும் குமாரும் ‘ஆன்ட்டி’யுடன் இரவைக் கழிப்பதாகக் குதித்தார்கள்.
“இருக்கட்டுமே. பழக வேண்டுமில்லையா?” என்றார் பாஸ்கர்,
குழந்தைகள் இருவரும் பெற்றோருக்குக் கையசைத்து விடை கொடுத்துவிட்டு உள்ளே வந்து என்னைக் கதை சொல்லும்படி கேட்டார்கள். கதை கேட்டவர்கள். சொன்னவள் எப்போது தூங்கினோமோ தெரியாது.
காலை மலர்ந்து விட்டிருந்தது. ஜன்னலின் திரைச் சீலேயை ஒதுக்கிவிட்டு வெளியே பார்த்தபோது எதிரே கருவேல மரத்தில் காக்கைக் கூடு ஒன்று தெரிந்தது. கன்னங்கரிய குஞ்சுகள் நான்கு வானத்தை அண்ணாந்து பார்த்தவாறு உட்கார்த்திருந்தன. மேலே கரும் புள்ளியாக ஏதோ தெரிந்தது. அது சிறிது சிறிதாக உருவம் பெற்ற போது தாய்ப் பறவை என்று புரிந்தது. அது தன் அலகில் எதையோ கொண்டு வந்தது. கூட்டை நோக்கிப் பறந்து வந்து கனிவுடன் குஞ்சுகளின் வாயில் உணவூட்டியது.
உள்புறம் என் பார்வை திரும்பியபோது குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தர்கள். தாயின் அரவணைப்பில் தூங்குவதாக அவர்கள் எண்ணம். அவர்களுக்குச் செவிலித் தாயாக இருக்க வேண்டிய பொறுப்பு என்னைச் சார்ந்திருக்கிறது.
இப்போது. மகத்தான் பொறுப்பல்லவா அது ? உள்ளங்களின் உறவாடல் மட்டும் அல்ல. சதையின் சதையாக, ரத்தத்தின் ரத்தமாக…அது எப்படி முடியும்?.
ராமன் கதவைத் திறந்துகொண்டு வெந்நீர்ச் செம்புடன் உள்ளே வந்தான். குழந்தைகளை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே போய் விட்டான். அதிகாலையில் வெந்நீரால் தொண்டையைச் சுத்தம் செய்தால்தான் வலி குறைவாக இருக்கிறது. கழுத்தில் சுற்றியிருந்த மப்ளரைக் கழற்றி வைத்து விட்டுப் பல் துலக்கி வாய் கொப்பளித்தேன். குழந்தைகளும் எழுந்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. பள்ளிக்கு விடுமுறை. ஆகவே, அவர்கள் வீடு செல்வது பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ நினையாமல் விளையாட்டில் மூழ்கியிருந்தார்கள்.
கெளசல்யா போன் செய்தாள்.
“ஹலோ, சுமித்திரா குழந்தைகள் உன்னைப் பாடாய்ப்படுத்திப் பம்பரமாய்ச் சுழல வைத்திருப்பார்களே… மச் டிரபிள்சம்…இல்லையா?”
“சே…அதெல்லாம் இல்லை…அவர்கள் டிரேட் ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உன் பிள்ளை இருக்கிறானே பெரிய பிஸினஸ் புள்ளியாக வருவாண்டி….”
கெளசல்யா கலீரென்று சிரித்தாள். “சரி, நாங்கள் இன்று அங்கே வரவில்லை. ‘ஷாப்பிங்’ போகிறோம். கம்பளி உடை வேறு தைக்க வேண்டும். அடுத்த வாரம் கிளம்ப வேண்டுமே!” என்றாள்.
கெளசல்யாவும் பாஸ்கரும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள். ‘ஆன்டி”யிடம் சமர்த்தாக இருப்பதாகச் சொல்லிக் குழந்தைகள் பதவிசாக நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. விண்ணில் விமானம் பறந்து செல்லச் செல்ல மண்ணில் நின்றிருந்த நான் இதயச் சுமையால் அழுந்தி நின்றேன்.
என் அருகே என்னுடன் துளியும் சம்பந்தப் படாத – உறவற்ற இரண்டு குழந்தைகளின் நலனை ஏற்றிருப்பது முற்றிலும் சரியா தவறா என்பதுதான் அந்தச் சுமைக்குக் காரணம்.
பால் வடியும் முகத்தினளான பத்மாவும் ஆண்மைக்குரிய கம்பீரம் இன்னும் அரும்ப வயதாகாவிட்டாலும், அதற்குரிய முரட்டுத்தனம் நிரம்பிய குமாரும் என் கைகளைப் பற்றி வீட்டுக்கு வரும்படி அழைக்கும்வரை நான் கற்பனையில் மூழ்கியிருந்தேன்.
அவர்களுக்கு எல்லாமே ஒரளவு புரிந்திருந்தது. தங்கள் பெற்றோர் ஏதோ காரணமாக வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்தனர்.
எங்காவது ஒரு சிணுங்கல், ஒர் அழுகை, முணு முணுப்பு எதுவுமே இல்லை. குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் ஏதோ பெரியவர்களைப் போல் விட்டேற்றியாக நடந்து கொண்டார்கள்.
சமையற்கார ராமனைக் கூப்பிட்டுக் கேட்டேன். “ராமா! உன்னிடம் அவர்கள் ஏதாவது படுத்தல் கிடுத்தல் செய்கிறார்களா?”
ராமன் வழக்கம் போல் தலையைச் சொறிந்தான் “அதெல்லாம் ஒண்ணும் இல்லையம்மா. போட்டதைச் சாப்பிடறதுகள். நாமதான் என்ன, குறைச்சலாகக் கவனிக்கிறோமா இதுகளே? காலம்பற ஜாம், வெண்ணெய் தடவிய ரொட்டி, பால். மத்தியானம் இரண்டு தினுசு காய்கறியோட சாப்பாடு….மாலையில் பிஸ்கட், பழம், டீ…. ராத்திரி சப்பாத்தி கூட்டு, பால்….கெளசல்யா அம்மா இருந்தால்கூட இவ்வளவு அக்கறையா கவனிக்க மாட்டார்கள். குறைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கு?”
ராமனோடு பேசுவதில் அர்த்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சாப்பாடு, தூக்கம் இவை மட்டும்தான் குழந்தைகளின் உலகம்? அவை தம் பெற்றோரிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி எப்படியோ இருக்குமே!
கெளசல்யா குழந்தைகளின் நலனை விசாரித்துக் கடிதம் போட்டிருந்தாள். குழந்தைகளுக்கே கடிதம் எழுதியிருந்தாள். குழந்தைகள் ஏதாவது தங்கள் குறைகளைப் பற்றி அவளுக்கு எழுதட்டும் என்று நான் அவர்களிடம் தபால் கவரைக் கொடுத்து அவர்களே கடிதம் எழுதிப் போட்டு ஒட்டி ராமனிடம் கொடுத்து ‘போஸ்ட்’ செய்யும் படி கூறினேன்.
பத்மாவும், குமாரும் கடிதம் எழுதி முடித்ததும் என் அறைக்குள் ஒடி வந்தார்கள்.
“ஆன்ட்டி! கடிதாசு படிக்கட்டுமா? கேட்கிறீங்களா?” என்று கேட்டாள் பத்மா.
“நான் படிப்பேன்…” என்றான் குமார்.
“நான் படிப்பேன்….” என்றவாறு பத்மா கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
‘அன்புள்ள அம்மா,
இங்கே ஆன்டியும், தம்பியும் சுகம். . என்று ஆரம்பித்தது கடிதம். அப்புறம் ‘ஆன்ட்டி’ அவர்களிடம் அன்பாக இருப்பது. ராமன் அவர்களைக் கவனித்துக் கொள்வது. இவைதாம் கடிதம் முழுதும்.
இவை யெல்லாம் உண்மையா? இதற்கும் மேலாக, மன அந்தரங்கத்தில் என்னைப் பற்றி ஏதாவது குறை இருக்காதா? குழந்தைகளுக்குக்கூட ரகசியங்களே வைத்துப் பூட்டி வைக்கத் தெரியுமோ?
‘குறை சொல்லும்படியாக நாம் நடந்து கொள்ளாததால் இப்படி இருக்கிறதுகள் போல இருக்கு ‘ என்று நினைத்துச் சற்றுக் கடுமையாகவே அவர்ககளிடம் நடந்துகொள்ள ஆரம்பித்தேன்.
“பத்மா, குமார்!” என்று அதட்டும் குரலில் கூப்பிட்டுப் பள்ளிப் பாடங்களைப் பற்றி விசாரித்தேன். கணக்கிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் தவறு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிக் கோபித்துக் கொண்டேன்.
குழந்தைகள் தலை குனிந்து என் கோபத்தை வரவேற்றார்கள். “எக்ஸ்கியூஸ் மீ ஆன்ட்டி” என்று பத்மா குழைவுடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். குமார் வெட்கத்தோடு பென்சிலேக் கடித்தபடி நின்றிருந்தான். அவர்களைப் படிக்கப் போகும்படி சொல்லிவிட்டு, இரவு சாப்பாட்டின் போது அவர்கள் கோபத்துடன் இருக்கிருறாகளா என்று கவனித்தேன்.
வழக்கம்போல் ராமனுடன் பேசியவாறு சாப்பிட்டார்கள். படுக்கப் போகுமுன் என்னைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்டனர்.
இந்தக் குழந்தைகளின் மனத்தைப் பற்றி அறிய நான் என்ன முயன்றும் முடியவில்லையே ! கொஞ்சமும் அவர்களின் உள் சுபாவம் வெளிப்படவில்லே. ‘சமர்த்துக் குழந்தைகள்’ என்று ராமனும், என் அண்ணாவும் வாயாரப் புகழ்ந்தார்கள்.
காலம் விரைந்து ஒடிக் கொண்டிருந்தது. கெளசல்யாவும், பாஸ்கரும் ஊர் திரும்பினார்கள். அவர்கள் ஊர் திரும்பும் தகவலைத் தாங்கி வந்த கடிதத்தைக் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டினேன். வெகு சாதாரணமாக அதை அவர்கள் கேட்டுக் கொண்டு விளையாடப் போய் விட்டார்கள்!
கெளசல்யாவும் பாஸ்கரும் எனக்குத் தங்கள் நன்றியை வண்டி வண்டியாகச் சமர்ப்பித்துவிட்டுக் குழந்தைகளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.
அங்கே அன்றிரவு எனக்கு விருந்து வேறு. இரண்டு வருஷங்களாக என்னுடன ஒன்றிவிட்ட குழந்தைகள் இல்லாமல் அந்த விடே என்னவோ போல் இருந்தது. ராமனுக்கும் வேலை ஒடவில்லை. சீக்கிரமே அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அயல் நாடுகளிலிருந்து வாங்கி வந்த பொருள்கள், மற்றும் சமையலறைககு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் காட்டினாள் கெளசல்யா. பிறகு என்னை ஒய்வவெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, விருந்து தயாரிப்பைப் பார்வையிடச் சென்று விட்டாள். எனக்கு நேரம் போகவில்லை. தோட்டத்தைச் சுற்றி வரக் கிளம்பினேன். கெளசல்யாவின் வீட்டுத் தோட்டம் மிகவும் அழகானது. வகை வகையாக அங்கே செடிகள், கொடிகள் உண்டு. அவற்றைப் பராமரிக்கப் பல ஆட்களும் இருந்தார்கள்.
திராட்சைப் பந்தலின் கீழ் பத்மாவும், குமாரும் உட்கார்ந்து சுவாரசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நான் மறைந்திருந்து அவர்கள் பேச்சைக் கேட்டேன்.
“ஏன்டா, குமார்! அப்பா உன்னைக் கோபிச்சுண்டு அடிச்சாளேன்னு வருத்தமா இருக்கியா?” என்றாள் பத்மா.
“சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லை. பின்னே அடிக்க மாட்டாளா? அமெரிக்காவிலேயிருந்து வாங்கிண்டு வந்த ரயில் பொம்மையைச் சாவி கொடுக்கத் தெரியாம உடைச்சால் நன்னாத்தான் அடிப்பா…உன்னைக்கூடத்தான் அம்மா கன்னத்தைப் பிடிச்சு நிமிண்டினாளே…!”
“‘ஆனா…. ‘ஆன்ட்டி’ நம்மை அடிச்சதே இல்லேடா. அவா வீட்டுப் புத்தர் பொம்மையை உடைச்சப்போக்கூடப் போனாப் போறதுன்னுட்டா, இல்லையா? தப்பு செஞ்சா அம்மா அப்பாதான் கண்டிப்பா. நமக்கும் பயம் இருக்கும்…”
“உனக்கு இங்கே பிடிச்சிருக்கா…’ஆன்ட்டி’ வீடு பிடிச்சிருக்கா, பத்மா?”
“சந்தேகமென்ன? இங்கேதான். அங்கே விருந்தாளி மாதிரிதானே நாம இருந்தோம்?”
“அம்மாகூட அப்படித்தான் சொல்றாள். அந்தத் தேசத்துலே எல்லாம் எத்தனை செளகரியம் இருந்தாலும், இங்கே வந்தப் புறம்தான் மனசு நிம்மதியாயிருக்காம்.”
நான் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருந்த வினாவுக்கு விடை கிடைத்ததும் என் மனம் நிறைந்தது. குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கத் தாயின் அதட்டலும், தந்தையின் கண்டிப்பும் தேவைதான்.
அவர்கள் விருந்தாளிகளாகவே என்னிடம் இருந்தார்கள்.