வினோத வார்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 4,269 
 

கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின் முன் கூடத்திற்கு வந்து; விழிகளில் முதல் விழுந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.

நல்ல தாய்க்கு மகளாகவும், புகழ் சிறந்த தந்தையின் செல்வமாகவும் இந்தப் பூமிக்கு ஒரு ஜன்மமாக வந்து, படித்து, பட்டம் பெற்று ஆசிரியையாக பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி; இளைத்துவிட்ட இந்த நாற்பத்தியொரு வயதில் இந்து மகளிர் கல்லூரியின் அதிபதியாகிவிட்ட ஒரு களை அவளின் முகத்தில் தட்டிக் கொண்டிருந்தது.

நடக்கக் கூடாதே என்று கட்டும் காவலுமாகக் காத்து வந்த ஒரு விஷயம் நடந்து விட்டால் ஏமாற்றம் மட்டுந்தான் ஏற்படும். அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டுகின்ற அடி உணர்வுகள் முகத்தைக் கருமையாக்க , ஏமாற்றம் கவலையாக உருக்கொள்கையில் கண்கள் பனிக்க…

இது பெண்களுக்கு இயற்கை!

ஆனால் அத்திவாரமிட்டு, புதுமையாக வாழ்ந்துவிட்ட – வாழ்ந்து கொண்டிருக்கின்ற தங்கள் வாழ்வில், தன் கணவர் பழமையோடு பழமையாகி வந்த ஒரு பண்பை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்பார் என்று அவள் எதிர்பாக்கவே இல்லை.

நடக்காது என்று நம்பியிருந்த அந்த உத்திரத்தில் விழுந்த இடி அது!

மென்று மென்று விழுங்கப்படுகின்ற சோளம் பொரிபோல நினைவுகள் உள்ளே உள்ளே சென்று உதரத்தில் உறைந்து கிடந்தன. அநுபவமற்ற ஒருவன் கஷ்டப்பட்டு உள்விழுங்கிய பீர் , அதை – அந்த நெடியை – மறைக்க தாம்பூலம், பெப்பமின்ட் எல்லாம் போட்டு சொற்ப நேரம் நிம்மதியாகின்ற வேளை – அது மேற்கொண்டு புரட்டி வந்து, அவன் செய்த அந்த தீங்கினை உலகுக்கு வெளிக்காட்டுவதுபோல, உறைந்தவை யாவும் மீண்டு வந்து கொண்டிருந்தன.

வீட்டின் முன்புறத்தில் வெளி ‘கேட்’ வரை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அந்த ஒற்றை விளக்கில் கணிசமான பருமனுடனும், காதுப்புறங்களாக நரைத்த ஒருவரைப் பார்த்தவர் கை எடுத்து கும்பிடாத குறையில் தம்மையும் அறியாத ஒரு மதிப்பைக் கொடுத்து, விலகிச் செல்வர்.

அமர்ந்திருந்த காம்பட்டேபிள்’ கதிரையின் மேற்புறங்களிலிருந்து இடையை நோக்கி வழிந்து வந்து ஒன்றுடன் ஒன்றாக ஐக்கியமாகிவிட்டிருந்த கைகளை மேலும் மேலும் நெரித்தாள் அவள்.

சிலை வடித்த கால்கள் ஒன்றை மற்றொன்று முட்டியும் முட்டாமலும் அடக்கமாக முன் நீண்டு ஆறுதலாகிக் கொண்டிருந்தன.

பெண்மைக்கு எந்தவிதமான கேடும் ஏற்படாத நிலையிலும், அமைதியற்ற மனமும், அலை பாயும் சிந்தையுமாக இருந்த புவனேஸ்வரியின் இறுகி இருந்த வாயைத் திறப்பதற்கு அங்கு யாருமே வரவில்லை .

வரவேண்டியவர்கள் தாமாக வராதவரையும் புவனேஸ்வரி அம்மாள் பேசுவதற்கு எத்தனையோ இருந்தும் பேசாமலேயிருந்தாள்.

இடையிடையே வெறிகாரர்களுடைய கண்களைப் போல் மேல் நோக்கிப் பிதுங்கும் அந்த விழிகளையும், மூச்சுக்கே அமைதியில்லாத அந்த இதழ்களையும் அந்த வீட்டிலுள்ள யாராவது பார்த்தால் நிச்சயம் பயந்துதான் போவார்கள். அவர்கள் கணவராய் இருந்தாலும் சரி; அன்புக்கும் ஆசைக்கும் என்று இருக்கிற மகனாய் இருந்தாலும் சரி; அல்லது எங்கோ பிறந்து இங்கு வீட்டில் ஒருத்தியாய் வந்து வளர்கின்ற வேலைக்காரியாக இருந்தாலும் சரி…

கூடத்தின் மூன்று சுவர்களிலும், அந்த வீட்டு மனிதர்களின் கடந்த கால நல்ல நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எடுத்துக் காட்டியபடி, வரலாற்றுச் சின்னங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்ற புகைப்படங்களை ஆறுதல் தேடிய அவள் விழிகள் ஒரு முறை சுற்றி வந்தன.

மருத்துவக் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற்ற அன்று, தனது கணவர் மகாசிவம் கறுப்புக் கவுணுடன் நின்று எடுத்த படம் கண்களிற் பட்டது. கைதேர்ந்த டாக்டர் மட்டுமல்ல, கைராசிக்காரர் என்றும் ஊரார் – அந்த யாழ்ப்பாண மாவட்டத்தார் பேசிக் கொண்ட பெருமையான பேச்சுக்கள் அவள் காதுகளில் தேன்மாரி பெய்த வேளைகளில் – மறுபடியும் பிறந்து, மறுபடியும் கன்னியாகி அந்த மகத்தான புருஷருக்கு மாலை போடவேண்டும் என்று கனவு கண்ட நாட்கள் பிறவாத நாட்களாகிக் கொண்டிருந்தன.

புவனேஸ்வரி அம்மாள் மகளிர் கல்லூரிக்கு அதிபராகப் பதவி ஏற்ற சமயம் ஊராரும், பிறரும் மனம் உவந்து அளித்த வாழ்த்துப் பத்திரம் பல வர்ணங்கள் கொண்ட ஒரு சித்திரமாகத் தெரிந்தது.

பின்பு தமிழ் மாதர் கலாச்சார மன்றம்’ என்ற புதுமையான ஒரு சங்கத்தை ஆரம்பித்து, தானே அதற்குத் தலைவியான போது, பேசிக் கொண்டிருக்கையில் எடுத்த படம்…

மலடி என்ற பெயர் உருவாகாமல் தன்னை மகிழ்விக்க வந்த தன் மகன் குமரனுடைய படம்…

“பாவி!”

உலகை மறந்து ஒரு கணம் விழிகளால் உலவிவந்த புவனேஸ்வரி அம்மாள் மீறி வந்த ரெளத்திரத்தை அடக்கி அடக்கி ஏற்பட்ட களைப்பை, அப்படி அழைத்ததன் மூலம் தீர்த்துக் கொண்டாள்.

ஒரு கணத்துள் ஏற்பட்ட விசனத்தை ஒரு கணத்திலேயே மறந்து, கூடத்தின் ஒரு மூலையில் கை கூப்பியபடி நிற்கும் ஓர் உருவம்…படமாக இருந்த பொழுதும், பக்தியும் கனிவும் நிறந்த பார்வையுடன் தன் வேலைக்காரி கமலம்மாவின் தகப்பன் குப்புச்சாமி நிற்பதைக் கண்டதும் புவனேஸ்வரி அம்மாளுக்கு அழவேண்டும் போல் தோன்றியது.

கருணையின் முன்பு அன்பு அழுவது இயற்கை. குப்புச்சாமி அவளைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் அது. இப்பொழுது கருணை வடிவமாய், அன்பு ஒளியாய் அவளையே கும்பிட்டபடி நிற்கின்ற அந்த உருவத்துக்கு முன் அவள் அடிமையாகி, ஒரு விதத்தில் குற்றவாளியாகி, கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள்.

குப்புச்சாமியின் படத்தைப் பார்த்ததும் புவனேஸ்வரி அம்மாளின் சாட்சி விழித்துக் கொண்டாற் போன்றதோர் உணர்வு. இளமை சாய்ந்து விட்ட இருக்கையை விட்டு எழுந்து படத்தின் அருகே நடந்தாள்.

“குப்புச்சாமி”

புவனேஸ்வரி அம்மாளின் அதரங்கள் மட்டும் அசைந்தன. வற்றிவிட்ட நாவில் தவழ்வதற்கு முனைந்த ஒலிக்குழந்தைகள் வாய்க்குள்ளேயே பிணமாகி விட்டன.

புனிதமானவற்றின் பெயரை உரத்து அழைக்கும் திருப்தியில் புனிதமாகிவிட்ட உணர்வைப் பெறுவதற்கும் புவனேஸ்வரி அம்மாளுக்குச் சந்தர்ப்பமாகவில்லை – நினைவுகளைப் பசுமையாக்கியமுறையால் நாநீரும் வற்றியிருந்தது. தன் குரலால் குப்புச்சாமியின் பெயரை அழைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் குடிபுகுந்தது.

“அம்மா! அவவும் போயிட்டாங்க. இனிமே இந்தக் கொழந்தைக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லங்க. தாயும் தகப்பனும் எண்டு உங்க ரெண்டு பேரையுந்தான் நம்பி விட்டிட்டுப் போறான். நான்….சாவு நிச்சயந்தானே…அப்படிச் செத்துப் போனா…இவவை ஒங்க குழந்தையாகவே பாவிச்சிடுங்க. இவவுக்கு அப்பன் எண்ணு …குப்புச்சாமின்னு….ஒருத்தன் இருந்ததை மறந்திடுங்க….இது ஏனென்னு வேலைக்காரி என்னு….ஏதாவது தப்புத்தண்டா கமலாம்மா நான் வரட்டுமா…”

குப்புச்சாமி எட்டு வருஷங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகள் புவனேஸ்வரி அம்மாளின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பிக் கொண்டிருந்தன.

மலைநாட்டு உழைப்புச் செழிப்பதற்காக, தன்னையே பசளையாகக்கின்ற தியாக சிந்தையுள்ள ஒரு தீரனின் தினக்குரல்…..

உலகத்தை நன்றாகப் புரிந்துவிட்ட அந்த முதியவர் அன்று எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டதே என்று நினைக்கையில் புவனேஸ்வரி அம்மாள் உண்மையில் ‘கோ’வெனக் கதறிவிட்டாள்.

மூடியிருந்த உலைமூடி அடுப்பில் விழுந்து நொறுங்க, வேகின்ற அரிசி கொதித்தாற் போல், கொதித்து யாரிடமோ பழி தீர்க்க முனையுமாப் போல் நினைவுகள் மறுபடியும் கொதித்தன.

ஏதாவது நடந்து விட்டால் தானே பொறுப்பு என்று பழிபோட்டு விட்டு, இன்று செத்து மறைந்த குப்புச் சாமியை ஒரு விதத்தில் பாராட்டாமலும் அவளால் இருக்க முடியவில்லை .

கமலாம்மாவின் கைகளையன்றிப் பிறர் கைப்படிருக்காத குப்புச்சாமியின் படத்தில் முதன் முறையாக புவனேஸ்வரி அம்மாளின் நடுங்குகின்ற கரங்கள் தடவி வந்தன.

“உத்தமர்களுக்கு ஒரு வார்த்தை. நானே பொறுப்பேற்று முடிக்கிறன். நீங்கள் நிம்மதியாக இருங்கள்”

புவனேஸ்வரி அம்மாள் முனகிக் கொண்டே தான் இருந்த இடத்துக்கு வந்தாள்.

அவர்களுடைய வீட்டுக்கு வந்து வந்து போவோருடைய சௌகரியத்துக்காக அமைக்கப் பெற்றன போல் காணப்பெற்று, இன், அவுட்’ முறையில் பிரிந்திருந்த முற்றத்து – வெளிக் கேட்டுக்களில் ஒன்றைத் தகர்த் தெறியுமாப்போல் ஒரு கார் உள்ளே வந்து நின்றது.

உத்தரவை எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமற்ற அவளுடைய கணவர் மகாசிவம் வருகிறார் என்று காரின் அடையாளத்தைக் கண்டு கொண்டதும், வெறுப்பு பன்மடங்காகியது.

அவர் வித்திட்டு வைத்த செய்கை தந்த விளைவை புவனேஸ்வரி அம்மாள் எண்ணும் பொழுது கணவர் என்ற மதிப்பை அளிக்கவே தயங்கிக் கொண்டிருந்தாள்.

ஆண்டாண்டுகளாக வளர்ந்து பூத்து கனிந்த தாம்பத்திய அன்பு , இடைநடுவே அந்த அன்புக்கே குறியாக வந்த ஒன்று அதனை மறைக்கின்ற செயலைச் செய்துவிட்டால் பொறுக்கக் கூடியவர்கள் இருக்கமாட்டார்கள்.

குற்றம் எத்தன்மையது என்ற ஒன்றுதான் புவனேஸ்வரி அம்மாளுக்குக் கவலையைத் தருவதாக இருந்ததே ஒழிய, குற்றத்தைச் செய்தவர், அல்லது அப்படிச் செய்வதற்குத் தூண்டுதலாக இருந்தவர் எத்தன்மை உடையவர் என்பது அவளுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. அவர் கணவராக இருந்தாலும் சாதாரண மனிதன் நிலைக்கே ஏற்றப்பட்டு விடுகிறார்.

கணவர் மகாசிவம் செட்டுக்குள் காரை நிறுத்திவிட்டு, தீர்க்கமாக நடந்து வந்து, தன் முன்னே நிற்பதைக் கண்டும் கவனியாது இருந்தாள்.

பகற்போது ஏற்பட்ட பயங்கரமான அந்த இயற்கை நிகழ்ச்சியின் தாக்குதலில் இருந்து தன் மனைவி இன்னும் மீளவில்லை என்று தன் வரையில் எண்ணிக் கொண்டு மெதுவாக உள்ளறைக்கு சென்றார் மகாசிவம்.

நெடுநாட்டுகள் ஒருமித்து வாழ்ந்த வாழ்வில் அவளைப் பற்றி நிறையப் படித்திருந்தார் மகாசிவம். பண்பாடு, பண்பாடு என்று தொட்டதற் கெல்லாம் தந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டி அவளை அமைதியாக்க அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையுமே தோற்றுப்போனதை அவர் மறந்திருக்க முடியாது.

உடைகளைக் களைந்து கட்டிலில் போட்டுவிட்டு, சாரத்தை உடுத்துக் கொண்டு ஸ்டூலில் அன்றைய தினப் பத்திரிகையை கையிடுக்கில் மாட்டிவைத்தபடி முன் கூடத்துக்கு வந்த மகாசிவம், தம் மனைவி அழுது தீய்த்து நாசி நீர் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

தம்முடைய தவறுகள் எவையாயிருந்த பொழுதும் அழுபவள் மனைவி என்ற எளிமை தோன்றியதும், தொண்டயை ஒருவாறு சரிப்படுத்தியபடி, ‘என்ன இப்ப நடந்து போச்சு……. இவ்வளவு நேரமாக நீ அழுது கொண்டா இருக்கிறாய்?” என்ற கேட்டார் மகாசிவம்.

புவனேஸ்வரி அம்மாள் கலங்கிச் சிவந்து போன விழிகளை அப்படியே மேலே உயர்த்தி வெறுமையான பார்வையை அவர் மீது விழுத்திவிட்டு, மறுபடியும் விம்மத் தொடங்கினாள்.

“அழுது அழுது வாதிக்கிறது குழந்தைகளுக்கு முடிஞ்ச விஷயம்; அல்லாட்டி இளசுகளுக்கு ஏலக்கூடிய விஷயம்……. நீ தானே பெரிய மனுஷியாச்சே அழுது எதைச் சாதிக்கப் போகிறாய்?”

ஆரம்பத்தில் கோழையாக இருந்தவன் இடைக்காலத்தில் ரௌடியாக வாழ்ந்த வளர்ச்சியை புவனேஸ்வரி அம்மாள் புரிந்து கொண்டாள். தன்வாய் பேசாதிருக்கும் வரை அவர் வீரராகிக் கொண்டே இருப்பார் என்பதும் அவளுக்குத் தெரிந்த ஒன்று.

“உங்களுடைய சுயமரியாதையையும், உங்க மகனின்ரை மனுஷத் தன்மையையும் நினைச்சு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். நான் அழயில்லை ”

“புவனேஸ்…மத்தியானமே நான் சொன்னேன். நடந்தது நடந்து போச்சு..இனிமேலாச்சும் கவனமாக இருப்பம்…இல்லாட்டி…” என்று கூறிக்கொண்டே மனைவிக்கு எதிராக் காணப்பட்ட மற்றொரு கதிரையில் வந்து அமர்ந்தார் மகாசிவம்.

கையிலிருந்த பத்திரிகையை அவசர அவசரமாகப் புரட்டியபடி தன் முகத்தை மறைத்துக் கொண்டார். தான் சொன்னவற்றுக்குக் கிடைக்கப் போகின்ற பதிலை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தார் அவர்.

“இல்லாட்டி…என்ன செய்யப் போறீங்களாம் ? இந்தக் கொடுமையை ஆதரிக்கிற நீங்கள் வேறை எதைச் செய்யமாட்டீங்கள். அவளைக் கொலை செய்துவிட்டுத் தற்கொலை எண்டு தீர்ப்பு வழங்கப் போறீங்களா”

“புவனேஸ்…. உஸ்!” ஆத்திரத்தைக் கொட்டி விட்ட களைப்பில் உடல் தளர்ந்து கொண்டிருந்த புவனேஸ்வரி அம்மாள் கணவரை மதிக்க முடியாமற் போன உணர்ச்சிகளை நொந்தபடி நடுங்கினாள். மேலும் கணவருடைய அந்த அதட்டல் அவளை என்னவோ செய்தது.

“நான்ஸன்ஸ். எடியுகேட்டட் இடியட்ஸ் வில் டாக் லைக் திஸ்!”

“என் கண்முன்னாலையே ஒரு பெம்பிளைப் பிள்ளை அவலப்படுகிறதை என்னாலை சகிக்க முடியாது. அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வந்திட்டுதென்டால் என்னை இங்கே பார்க்கமாட்டீங்கள். உங்களுக்கு கனக்க சொல்லத் தேவையில்லை…… அவ்வளவுதான்!”

“புவனேஸ்…காம் டவண்…பிளீஸ்…லிஸின்ட் டு மீ…உனக்கு தமிழிலை அறிவு இருந்தா – அந்தத் தமிழிலே உள்ள அத்தினை பண்பாடுகளும் வாழ்க்கையிலை வைக்கலாம் எண்டு கனவு காணாதை….ஆப்டர் ஆல்…தமிழிலையும் இதே விஷயம் நடந்திருக்கெண்டு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஸோ யூ டோன்ட் பீ அன் ஐடியலிஸ்ட்! பட் பீ ஏறியலிஸ்ட்!”

மனைவியின் வார்த்தைகள் வரம்பை மீறியும், மடிந்தும் போவதைக் கண்டதும் தம்மைப் பெட்டிப் பாம்பாகக் காட்டத் தொடங்கினார் மகாசிவம். தான் அமைதியாகப் பேசுவதன் மூலம் ஆத்திரக்காரரை அடக்கிவிடலாம் என்ற மனோதத்துவரீதியில் அவர் பேசத் தொடங்கினார்.

“என்னத்தைக் கேள்விப்பட்டீங்கள்……?” கணவரின் பணிவுக்கு ஒரு பணிவாக இந்தக் கேள்வி பிறந்தது. தாம் எதிர்பார்ப்பதே நடக்கின்றது என்ற மகிழ்ச்சி உதடுகளின் கோடியில் ஒரு முறை மட்டும் மின்னி மறைய, அவர் சொன்னார்.

‘ஒருத்தியை ஒருத்தன் காதலிக்கிறதும், களவாக இரண்டு பேரும் சந்திக்கிறதும், இன்னும் என்னன்னமோ செய்யிறதும் உலகத்திலே சாதாரணமாக நடக்கிற சமாச்சாரங்கள். இதைப் பெரிசா அந்தக் காலத்து மனுஷங்கள் பாடி வச்சாங்களே அதுதான் எனக்கு ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் என்னன்டால், அந்த விஷயத்தை இந்த சென்ஸரியில் வாழுறவங்கள் பெரிசு படுத்திப் பேசுறாங்களோ; அதுதான ‘

கூறிவிட்டு புவனேஸ்வரி அம்மாளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் மகாசிவம். அழுது காய்ந்த கன்னங்களில் முன்பிருந்த ஜொலிப்பு உருவாக்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அந்தத் திருப்தியில், மனைவி தன் வழிக்கு வருகின்றாள் என்ற நம்பிக்கையில் – தொடந்தார்.

“உனக்கு தெரியும் நீ என்னை மாரி’ பண்ணினதாலைதான் நம்மளுக்கு குமரன் எண்டு ஒரு பிள்ளை பிறந்தது. அப்படி அத்தினை பேரும் ஒன்றாகிறதாலைதான். அவங்களைப் போல எத்தனையோ பிறக்குதுகள்.”

“நான் ஒரு பிள்ளையைப் பெத்தவன். அதே காலத்திலை ஆயிரம் பிள்ளையள் பிறக்கிறதுக்கு இந்த ரெண்டு கையாலை உதவினவன். அந்த ஆயிரங் குழந்தையளிலை நூற்றுக்கு பன்னிரண்டு வந்ததும் வராததுமாகத் திரும்பிப் போயிடும். அப்படி அந்தக் குழந்தைகள் பிறந்து சாகிறதும் பிறக்காமல் சாகிறதும் நட்டம்தான். ஆனா தாய்க்கு ஒரு பிரசவ வேதனையைக் கொடுக்காமல், அவளுடைய உடம்பிரைல இருக்கிற கட்டைக் கெடுக்காமல் வந்தமாதிரியே அழிஞ்சு போறதை நான் விரும்புறன்…”

தாம் நினைக்கின்ற விஷயத்தை வெளிவிடுவதற்கு அனுமதி கேட்பவர்போலச் சற்று நிறுத்தினார் மகாசிவம்.

“அதுக்காக?” புவனேஸ்வரி அம்மாள் தன்னுடைய பொறுமை முடிந்துவிட்டதைக் காட்டத் தொடங்கினாள்.

“மாத்திரை போடுவீங்கள்! நான் மறக்கயில்லை. ஆனால் உங்கடை உத்தம புத்திரன் செய்த இந்தப் பாவத்தை எந்தக் கடலிலை கொண்டு போய் கொட்டப் போறீங்கள்? அப்படி நீங்கள் பிராயச்சித்தஞ் செய்தாலும் அது தீர்ந்திடுமா? அப்படி நினைக்கிறீங்களா ?

“சரி அப்பிடித்தான் சிசுக்கொலை செய்தாலும், உங்க மகன் – அவள் மேலும் சும்மா இருப்பினமா? ஏதோ ஸைக்கோலொஜி பேசுறிங்களே அடிக்கடி! இந்த விஷயத்தை பற்றி உங்கடை ஸைக்கோலொஜி ஏதாச்சும் சொல்லுதா?”

புவனேஸ்வரி அம்மாளின் ஒவ்வொரு கேள்வியும் அவரைக் குலுக்கிக் கொண்டிருந்தது. தம்மைச் சமாளித்தபடி, “அவளை சொந்த ஊருக்கே………” என்றார்.

“அனுப்பிப் போடலாம் எண்டா சொல்லப் போறீங்கள்? சரிதான்…அவளுக்கு இந்த உலகத்திலை இருந்த ஒரே ஒரு உறவு அவளுடைய அப்பன்தான். அவரும் போயிட்டார். அப்படியெண்டா எந்த ஊருக்கு அனுப்புறகாக யோசனை?”

“புவனேஸ்! அளந்து பேசு…!”

அளந்து நடக்கிறவங்களட்டைத் தான் அதைச் செய்யலாம். நம்மளட்டை முடியாதே…

“உமக்! மூண்டு மாசம்….மத்தியானம் சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக அவள் வாந்தி எடுத்தாளே…அந்த வேதனையை…”

புவனேஸ்வரி அம்மாள் அழுதாள். மகாசிவம் அவளைச் சமாதானப்படுத்த வழி வகைகளைத் தேடிக் கொண்டிருந்தார்.

“இட் ஈஸ் ஆல் ரைட்! புவனேஸ்! இப்ப குமரன் எங்கே?” கமலம்மாவினுடைய கதை காரசாமாகப் போய்க் கொண்டிருந்ததற்கு முடிவற்ற ஒரு முடிவைக் கண்டவர்போல், பேச்சை வேறு பக்கம் திருப்பினார். அதுவும் பழைய கதையின் பாதியாகவே நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

“குமரன்…நல்ல பேரைத் தேடி வைச்சீங்கள்! அவள் வாந்தி எடுத்த அந்த நேரத்துக்குப் பிறகு நான் காணயில்லை. கமலம்மா எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவ்வளவுதான்…நான் திரும்புறதுக்கிடையிலை ஓடியிட்டான். இன்னும் வரயில்லை”

மகனைக் காணவில்லை என்பதை மனைவி இவ்வளவு பொறுப்பில்லாமல் சொல்கிறாளே என்று நினைக்க அவராற் பொறுக்க முடியவில்லை.

“அட கஷ்டமே! எங்கை போனானோ? உனக்குப் பயந்து ஒரு வேளை தற்கொலை கூடச் செய்துடுவானே…அவனை நீ கோபிச்சியா? ஒளிக்காதே ! உள்ளதைச் சொல்லு எனக்குத் தலையெல்லாமே சுத்துது. எனக்கு வெறிபிடிச்சுதென்டால் என்ன செய்வன் எண்டு தெரியாது. கமோன்! ஸ்பீக் ஆப்!”

‘படீர்!’

கன்னத்தை மெதுவாகத் தடவியபடி: “நான் ஆருக்குப் பதில் சொல்லுறது?” என்ற சொல்லி நிறுத்திவிட்டு, கண்களை மறைத்த கண்ணீரை துடைத்து விட்டாள் புவனேஸ்வரி அம்மாள்.

அவள் அழுதாள்!

“வீட்டிலை ஒரு பிள்ளை போல இருந்தவளை காப்பாத்த முடியாமல் தவறவிட்ட என்னை நம்பி இரண்டாயிரம் பெம்பிளைப் பிள்ளையள் படிக்குதுகளே. அதுகளின்ரை தாய் தகப்பமாரிலை பாதிக்கு மேலே எங்கடை குப்புச்சாமியைப் போல நிலைமையிலை உள்ளதுகள் தான். அதுகளின் வாழ்க்கைக்கு என்ன கரண்டி கொடுக்கப்போறான்? நாளைக்கு இது தெரியவந்தா……… ஐய்யோ …… தமிழ்மாதர் கலாச்சார மன்றம்…அதுக்குத் தலைவி…தெய்வமே!…”

புவனேஸ்வரி அம்மாள் பித்துப் பிடித்தவள் போல் தலையில் வாரி வாரி அடித்துக் கொண்டாள்.

“ஆர் யூ மாட்?” என்றலறியபடி அவளுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டார் மகாசிவம்.

அவர்கள் இருவரும் ஏதோ பேசுகிறார்கள் என்ற நினைப்பில் தன்னைத் தானே தனியனாக்கிக் கொண்டிருந்த கமலாம்மா ஆரவாரித்த அழுகையொலியைக் கேட்டதும் குசினியை விட்டு ஓடிவந்தாள்.

“ஐய்யா!..என்னங்க…அம்மா அழுறாங்களே…ஐ…யோ”

“அதுக்காக நீ அழாதை! இப்படி நீங்க இரண்டு பேருமா எங்களை அழவைச்சிங்களே அது நல்லதுதான். ஆதரவில்லை எண்டு வந்த உனக்கு அடைக்கலம் தந்த இவளுக்கு நீ செய்த நன்றி இது. பெத்து வளத்ததுக்கு அவன் செய்த நன்றி இது. போதும்…நீ பேசாமல் போ!..”

எங்கோ பார்த்தபடி, மனைவியை அணைத்த கைகளை நகர்த்திக் கொண்டே மகாசிவம் சொன்னார். விடுபட்ட கைகள் தொப்பென்று மடியில் விழ, தலையைக் கவிழ்த்தபடி இளைத்தாள் புவனேஸ்வரி அம்மாள்.

அவருடைய துணைக்கு மதிப்புக் கொடுக்க இரண்டடி பின்புறமாக நகர்ந்த கமலம்மா, அன்பு மேலீட்டால் ஓடிவந்து புவனேஸ்வரி அம்மாளே இறுக அணைத்துக் கொண்டாள்.

புவனேஸ்வரி அம்மாளின் மடியில் முகம் புதைத்து, கால்களை இறுகக் கட்டிப் பிடித்திருந்த கமலம்மாவின் அடர்ந்த கேசத்தை தன்னையும் மீறிய வாஞ்சையுடன் தடவிவிட்டாள் புலனேஸ்வரி அம்மாள்.

செம்பவள நிறத்துடன் சிங்காரமாக வளர்ந்திருந்த அவளை, வீட்டுக்கு வந்த விருந்தினர் “உங்கடை மகளா? இப்பிடி ஒரு பிள்ளை இருக்குதெண்டு தெரியாதே!” என்று வியந்த கேள்விகள் அவள் நெஞ்சில் உரமிட்டு நின்றன.

கமலம்மா குளியறையிலிருந்து தன் மானத்தை காத்தபடி, ஈரப்புடைவையுடன் தன்னுடைய அறைக்கு ஓடுகின்ற காட்சிகளை பெருமையோடு நின்று புளகாங்கிதப்பட்ட புவனேஸ்வரி அம்மாள், அவளுடைய உடலை ஒரு முறையாவது தொட்டு மகிழவேண்டும் என்று துடித்த பாசத்துடிப்புக்கள் நினைவில் புடமிட்டன.

அதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல், அவளே தானே வந்து கால்களில் விழும்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.

மகாசிவம் தம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தாம் கண்டு துணிந்த ஒரே முடிவு நிறைவெய்திக் கொண்டிருப்பதை மனதார ரஸித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆனந்தத்தின் குளிர்மை சித்தத்தையும், அது நிறைந்த செயல்களையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.

“நீ வாழ வேண்டியவள் கமலா. உனக்கு ஒரு தீயதும் வராது. உங்கப்பருக்கு நான் என்டைக்கும் துரோகம் நினைக்கமாட்டன்…எல்லாம் அவன்ரை தலைவிதி…ஒருத்தனாகப் பிறந்து இவ்வளவு சொத்துக்கும் அதிபதியாகி, படிச்சு நாளைக்கு பெரிய மனிஷனாகி…நல்ல பெரிய இடத்திலை பெண் எடுத்தாலும்….அந்த மருமகள் பெம்பிளைப்பிள்ளை இல்லாத எனக்கு பிள்ளையாக இருப்பாளோ தெரியாது…”

“நம்பிக்கையிலே வாழுவதை விட முட்டாள் தனம் சந்தேகத்திலே வாழுகிறது புவனேஸ்! அப்பிடி அந்த மருமகள் இருக்கமாட்டாள் என்றே வைச்சுக்கொள்ளன்…”

புவனேஸ்வரி அம்மாள் பேசிக்கொண்டே சென்றதைக் குறுக்கிட்டுத் தடுத்துக் கூறினார் மகாசிவம்.

திடீரென்று எழுந்து, கார் செட்டுப் பக்கம் விரைந்தார் மகாசிவம்.

நல்லது நடக்கையில் வேண்டியவர்கள் இல்லாத போது அது குறையான ஒன்றாகப்படுவது மனித சுபாவம். மதிய வேளை விஷயம் தெரியவந்ததை அறிந்து தன் மகன் போயிருக்கக் கூடிய இடம் என்று தாம் நினைத்திருந்த இடத்துக்குப் போகத்துடித்தபடி காரை எடுத்தார்.

அவரையும் அறியாத வேகம் ஒன்று மனதிற் கூடி, உடலில் ஓடிக்கொண்டிருந்த இரத்தம் வேகம் குறைந்து உறைவதுபோலாகிக் கொண்டிருந்தது.

ஒன்றை ஒரு பக்கமாகப் பார்க்கும் பொழுது அது அழகாயிருந்தால், அதன் மறுபக்கத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தத்துவம் நிலைத்துக்கொண்டிருந்தது.

ஒன்றின் வேகம் தணியும் பொழுது மற்றொன்றின் வேகம் அதிகரிக்கின்றது. ஓட்டமாக வந்தவன் தன் ஓட்டம் முடிந்ததும், உடம்பில் ஏற்படுகின்ற வேகத்தை உணர்ந்தாற்போல் மகாசிவம் உணர்ந்து கொண்டிருந்தார்.

அவருடைய கார் வெளிக் ” கேட்டால் திரும்பி வீதியில் ஏறமுனைந்த பொழுது, மற்றேன்று உள் நுழைவதை அவர் பார்க்காமல் விடவில்லை.

திகில் பிடித்த உணர்வில் தமது காரை பட்டென்று வீதியிலேயே நிறுத்திவிட்டு, ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தார்.

குமரனுடைய நண்பன் பாலா அந்த வந்த காரிலிருந்து இறங்கினான்.

அவனைக் கண்டதும் குமரனைக் கண்ட ஆவலோடு அருகில் சென்றார் மகாசிவம்.

“நீ போ அம்மா உள்ளே ” என்று கமலாவை தன் வாழ்வில் முதல் தடவையாக அழைத்துக் கூறிவிட்டு இனி என்றும் அழைக்கும் உறுதியுடன் நடந்து வந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.

பாலா வாயைத் திறக்கக் கூடாது; திறந்தால் அது நல்ல முடிவாகவே இருக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையும் அப்பொழுது வேண்டிக்கொண்டிருந்து, பலகோரங்களை கண்ணாற் கண்டும் சற்றும் கலங்காத மகாசிவமும் “கு…மரன்!” என்று உணர்ச்சிகளையும், பிரார்த்தனைகளையும் மீறிக் கத்திவிட்டார்.

‘என்னைப் பார்க்கிறதுக்கு வந்தவன். எனக்கே தெரியாமல் தன்னை மறைச்சுப் போட்டானே..மா..ம…” என்று அலறியபடி மகாசிவத்தின் கால்களில் விழுந்தான் பாலா .

“கு…” – ஏகோபித்த மூச்சில் உருவாக்கி ஏகோபித்த முடிவில் வாழ்வையுங் கொடுக்க நினைத்த மகாசிவமும், புவனேஸ்வரி அம்மாளும் இரத்த ஒலி எழுப்பினார்கள்.

பாலா மண்ணிலே புரண்டு, அழுது கொண்டிருந்தான்.

“ஐ டிட் மை லெவல் பெஸ்ட்..மகா!” என்று மகாசிவத்தின் தோட்களைத் தட்டிதேற்றியபடி டிரைவர் ஸீட்டிலிருந்த பாலாவின் தகப்பனும், மகாசிவத்தின் சக டாக்டருமான சிவநேசன் வந்தார்.

“சே! வாட் ஏ புவர் வேர்ட்?” என்று வெறுத்துவிட்டு, “எங்களுக்குத் தெரியாமலே ‘லாப் புக்குள்ளை போய் பொட்டாஸியம் ஸைனைட்டை எடுத்திருக்கிறானே…இது விதியா?…” கலங்கினார் சிவநேசன்.

“குமரன்!” என்ற அழைப்பு ஒன்றுடனேயே தனது ஒலியை நிறுத்திக் கொண்ட புவனேஸ்வரி அம்மாளை கமலா தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் கங்கை ஊற்றெடுத்திருந்தது.

வார்த்தைகள் கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் மகாசிவம்.

கமலா மீது அத்தனை கண்களும் திரும்பின.

புவனேஸ்வரி அம்மாளை தான் அணிந்திருந்த துண்டுத் தாவணியைக் கழற்றி, அதன் மீது வளர்த்திவிட்டு, ஓடிப்போய் காரின் பின் கதவைத் திறந்தாள் கமலா.

“என்னைச் சாக வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு , நீங்க போயிட்டீங்களா…? என் அவள் அலறத் தொடங்கியதும், அத்தனை கண்களும் அழுவதை நிறுத்தி அகலத் திறந்தன.

பின் சீட்டில் நீண்டிருந்த உடலை விழுந்து தழுவி, கண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தாள் கமலா.

“அய்யாவும் அம்மாவும் உங்கடை எண்ணப்படியே சம்மதிச்ச பிறகும் சாகத் துணிஞ்சீங்களா?” என்று கமலா அழுதுகேட்ட பொழுது, அத்தனை கண்களும் மறுபடி அழுதன.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *