வினோத மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,783 
 
 

இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள்.

இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக என்னிடம் மட்டும் பாட்டி சொன்ன செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாகப் போய்விட்டது எனக்கு.

அதுவரைக்கும் என்னுடைய தாத்தா கைலாசம்தான் சில விஷயங்களில் ஒரு மாதிரியான ஆசாமியாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் என் தாத்தா அப்படியொரு வினோதமான மனிதர்.

ஆனால் தாத்தாவையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டாள் என் பாட்டி. பாட்டி என்னிடம் சொன்ன அந்த ரகசியத்தில், வினோதமான மனநிலையில் என் தாத்தாவிற்கு எந்த விதத்திலும் என் பாட்டியும் குறைந்தவள் கிடையாது என்பதை உணர்ந்துகொண்டேன். பாட்டி சொன்ன அந்த ரகசியத்தை இப்போது சொல்லாமல் தாத்தா செய்த மிகப்பெரிய காரியத்தை முதலில் சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும் என் தாத்தா பற்றிய ஒவ்வொரு சமாச்சாரமாகப் புரியத் துவங்கினாலும்கூட, என்னுடைய பதினெட்டாவது வயதில்தான் தாத்தாவின் இரண்டு பெண்டாட்டி சமாச்சாரம் வெட்ட வெளிச்சமாக எனக்குத் தெரிந்தது.

இப்போதுதான் பெரிய வீடு; சின்ன வீடு என்று எப்படியெல்லாமோ பேசுகிறார்கள். ஆனால் என் கைலாச தாத்தாவின் விஷயத்தில் அந்த மாதிரியான சமாச்சாரம் எதுவும் கிடையாது. என்னோட இரண்டு பாட்டிகளுமே தாத்தாவிற்கு பெரிய வீடுகள்தான்!. என் ஈஸ்வரிப் பாட்டி வீடும் பெரிசு; சுந்தரிப் பாட்டி – அதாவது சின்னப் பாட்டி வீடும், அதேமாதிரி பெரிசுதான்.

தாத்தா ஈஸ்வரிப் பாட்டியின் வீட்டில் இருக்கும்போது அவரைத்தேடி யாராவது சுந்தரிப் பாட்டியின் வீட்டுக்குப் போனால், “அந்தப் பெரிய வீட்டில் இருக்கார்” என்று சொல்லி அனுப்புவார்கள். அதே மாதிரி தாத்தா அங்கே இருக்கும்போது அவரைத்தேடி இங்கு யாராவது வந்தாலும் “அந்தப் பெரிய வீட்ல இருக்கார்” என்று சொல்லி அனுப்புவோம்.

இதில் இருக்கிற இன்னொரு பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், எங்களின் இரண்டு பாட்டிகளும் நிஜத்திலுமே கூடப் பிறந்த அக்கா தங்கச்சிகள்தான். என் அப்பாவைப் பெற்ற ஈஸ்வரிப் பாட்டிதான் அக்கா; சுந்தரிப் பாட்டி தங்கச்சி.

அக்காவுக்கும் தங்கச்சிக்கும் சரியாகப் பத்து வயசு வித்தியாசம். தாத்தா முதலில் ஈஸ்வரிப் பாட்டியை கல்யாணம் செய்து கொண்டபோது பாட்டிக்கு வயது பதினாலுதான். தாத்தாவுக்கு பதினெட்டு. அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணமாகி பன்னிரண்டு வருடங்கள் வேகமாயும் ஓடிவிட்டது. அவர்களுக்கு இரண்டு மகன்கள்; இரண்டு மகள்கள்.

இந்தச் சமயத்தில்தான் பாட்டியின் தங்கச்சி சுந்தரிக்கு வயசு பதினாறு ஆகி, அவளுக்கும் ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட அவளுடைய அப்பா ரொம்ப மும்முரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருக்கிறார்.

என் தாத்தாவிடமும் வந்து நல்ல பையனாக எங்கேயாவது இருந்தால் பார்த்துச் சொல்லும்படி மரியாதைக்காக ஒரு வார்த்தை சொல்லி வைத்திருக்கிறார். தாத்தாதானே அவர்களுடைய வீட்டிற்கு மூத்த மாப்பிள்ளை ! இந்த மரியாதைகூட காட்டாவிட்டால் எப்படி…?

ஆனால் அந்த விஷயத்தில் திடீர்ன்னு ஒருநாள் யாருமே கற்பனை செய்துகூடப் பார்த்திராத திருப்பம் வந்து சேர்ந்துவிட்டது.

“அவளுக்கு என்னத்துக்கு அங்கே இங்கேன்னு தேடி மாப்பிள்ளை பார்க்கணும்? நானே அவளையும் கட்டிக்கிறேனே…” என்று சொல்லி தாத்தா பெரிய குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்.

தாத்தாவுக்கு தான் மிகப்பெரிய பணக்காரன் என்கிற திமிரும் அகம்பாவமும் எப்பவுமே உண்டு. பஞ்சு வியாபாரம்; வத்தல் கமிஷன்; வெல்ல மண்டி; கொடி முந்திரித் தோட்டம்; பனங்காடு எனக் கொழித்துக் கொண்டிருந்தார்.

“இது என் பொண்ணோட கல்யாண விஷயம்… வெளையாடாதீங்க மாப்ள.”

“இந்த விஷயத்துல போய் ஒருத்தன் விளையாடுவானாக்கும்?”

“நெஜமாவே சுய நினைப்போடதான் கேக்கறீங்களா மாப்ள?”

மாமனார் இப்படிக் கேட்டதும், தாத்தா கோபத்துடன் வண்டியில் ஏறி கிளம்பி வீடாராம்.

“சுய நினைப்போடதான் கேக்கறியான்னு என்னைப் பார்த்து கேக்கறான் உங்கப்பன். என்னை என்ன கிறுக்குப் பயல்னு நெனச்சானா அந்த தகரக் கடைக்காரன்..?” பாட்டியிடம் உறுமினாராம் தாத்தா.

“என்னதான் இருந்தாலும் ஒங்களைப் பார்த்து ஒங்க மாமனார் அந்தமாதிரி ஒரு கேள்வியைக் கேட்டது ரொம்பவே அக்ரமம்தாங்க மொதலாளி…” என்று தாத்தாவின் வெள்ளி வெற்றிலை செல்லத்தைச் சுமக்கும் செந்தில்கூட பாட்டியோட அப்பாவைத்தான் கடிந்து கொண்டான் என்றால் அதைக் கலிகாலம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது ?

“நான் இருக்கும்போது, வேறு எவன் அவ களுத்துல தாலியை கட்டிடுவான்னு நானும்தான் பாத்துப்புடறேன்… சும்மா குருவியைச் சுடறமாதிரி சுட்டுத் தள்ளிரமாட்டேன் தள்ளி?”

“நீங்க கொஞ்சமும் விசாரப் படாதீங்க, தகரக் கடைக்காரர் தானா வழிக்கு வருவார்…”

தாத்தாவின் மாமனாருக்கு தகரத்தில் டின்கள் செய்து மொத்தமாய் சப்ளை செய்கிற வியாபாரம். அதனால் வந்ததுதான் தகரக்கடைக்காரன் என்ற பெயர்…

“ஒங்களுக்கு மேல பெரிய மாப்ள வேறு எவன் இருக்கான் இந்த ஏரியாவுல? ‘உம்’ னு ஒரு வார்த்தை சொல்லுங்க…ஒங்க மச்சினியை கடத்திக்கிட்டே வந்துடறோம். அளகர்கோவில்ல வச்சி காதும் காதும் வச்சாப்ல கல்யாணத்தை முடிச்சுரலாம்…”

தாத்தாவைச் சுற்றி ஒரு கும்பல் ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த போது, அவரின் மாமனாரைச் சுற்றியும் ஒரு கும்பல் இருந்தது.

“வள்ளி தேவானை மாதிரி இருந்துட்டுப் போவட்டுமே…”

“இது ஒண்ணும் ஊர் ஒலகத்துல நடக்காத சமாச்சாரம் இல்லை தகரம்!”

“ஒன் பெரிய மாப்ள ரொம்பப் பசையுள்ளவன். சுந்தரியை ரொம்பப் பிரியப்பட்டு கேக்கறான், பேசாம குடுத்திட்டுப் போயேன்…”

ஆள் ஆளுக்கு வளைத்து வளைத்துச் சொன்னதும் பாவம் தகரக் கடைக்காரருக்கும் வேற வழி தெரியவில்லை. பணிந்துவிட்டார். ஆனால் ஒரு கண்டிஷன் போட்டார்.

“என் மூத்த மாப்ள பெரிய பணக்காரன்தான்; அதோட சிம்ம லக்னத்துக்காரன் வேற… பொண்ணைக் கட்டித் தரமாட்டேன்னு சொன்னா – ஏதாவது ஏடா கூடமா செஞ்சாலும் செஞ்சுடுவான். அதனால ஒத்துக்கறேன். ஆனா ஒரு கண்டிஷன்… சுந்தரி இதுக்கு ஒத்துக்கறாளான்னு மொதல்ல கேக்கணும். அவ இஷ்டம் என்னன்னு தெரியாம நாம பாட்டுக்கு ஆளுக்கு ஆள் பேசிட்டு இருக்கறதுல அர்த்தம் எதுவும் இல்ல…”

“தாராளமா கேளுங்க, ஆனா ஒரு கண்டிஷன்.”

தாத்தாவும் அவருடைய பங்குக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

“நீர் அவள தனியா கேட்டுட்டு வந்து சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்.”

“பொண்ணைக் குடுத்தவன் பேர்ல இவ்வளவு நம்பிக்கை இல்லாம பேசக்கூடாது மாப்ள…”

“ஒங்க வீட்டு ஹால்ல எனக்கு முன்னாடி நிக்க வச்சித்தான் நீங்க சுந்தரியிடம் கேக்கணும். தவிர, அப்போது ஒங்க தயாதிக்காரன் ஒருத்தனும்; எங்க தயாதிக்காரன் ஒருத்தனும் சாட்சிக்கு இருக்கணும்.”

“அப்படியே ஆகட்டும் மாப்ள.”

ஹாலில் அனைவரும் கூடினர்.

“ஒன்னை ஒன் பெரிய மச்சானே கட்டிக்கிறேன்னு சொல்றார்மா… நீ என்ன சொல்ற?” சுந்தரிப் பாட்டியின் முகம் நிமிரவே இல்லையாம். ஆனால் வெட்கத்தினால் ரெண்டு கன்னமும் வெட்டியெடுத்த நுங்கு மாதிரி மினுமினுத்ததாம். ராட்டினம் போல சுற்றிச் சுற்றிப் பார்த்தாளாம். சத்தமில்லாத அன்பான குரலில் “பெரிய மச்சானையே கட்டிக்கிறேன்பா…” என்றாளாம்.

“அப்ப கல்யாணத்துக்கு தேதி பாத்திடவா…?”

“பாத்திடுங்கப்பா.”

அவ்வளவுதான்… தாத்தாவின் முதல் கல்யாணம்கூட அப்படி நடக்கவில்லையாம். அப்படியொரு அட்டாகாசம் பண்ணியிருக்கிறார் மனிதர்.

இப்போ அதெல்லாம் ரொம்ப ரொம்பப் பழைய கதை. ஆனாலும் இன்னிக்கி வரைக்கும் ஒருத்தரும் மறக்காத கதை.

“கைலாசத்துக்கு என்னய்யா? மிதமிஞ்சின யோகக்காரன். அழகான மச்சினியையும் கட்டிக்கணும்னா ஒருத்தனுக்கு பெரிய மச்சம்ல வேணும்… வேற எவனுக்கு இருக்கு மச்சம், அவனைத் தவிர? என்று ஆம்பிளைகள் தாத்தாவின் ரெண்டாம் கல்யாணம் பற்றி வருஷக் கணக்கில் பேசிக் கிடந்தார்கள்.

என்னதான் கூடப் பிறந்த அக்கா தங்கச்சிகளாக இருந்தாலும், சக்களத்திகள் என்றாகிவிட்ட பிறகு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் சண்டையும், சச்சரவும் வந்து விடுவது இயற்கைதானே?

அதனால் கல்யாணம் முடிந்த கையேடு, தாத்தா என் சின்னப்பாட்டியை தனியாக வேறொரு வீட்டில் குடி வைத்துவிட்டார். சின்னப் பாட்டியும் அவள் பாட்டுக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒரு பிள்ளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தாள். இதில் ஒரு பெரிய கூத்து என்னவென்றால் பேரன் பேத்தி பிறக்கத் துவங்கிவிட்ட பிறகும்கூட தாத்தாவிற்கு பிள்ளைகளும் பிறந்து கொண்டிருந்தார்கள் என்பதுதான்.

புதுப்புது தலைமுறைகள் வந்துவிட்டன. என் தாத்தா இறந்து பத்து வருஷத்துக்கும் மேலாகி விட்டது. சின்னப் பாட்டி செத்தும் எட்டு வருடங்கள் ஓடிப் போய்விட்டது. தொண்டு கிழமாக கிடந்த ஈஸ்வரிப் பாட்டிதான் இப்போது இருபது நாட்களுக்குமுன் பொசுக்குன்னு போயிட்டா.

அவள் இறப்பதற்கு நான்கு நாட்கள் இருந்தபோது, எதேச்சையாக வீட்டில் பாட்டியுடன் நான் மட்டும்தான் இருந்தேன்.

“ஏலே ராசப்பா…”

“என்ன பாட்டி?”

“உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்.. கிட்ட வரீயா?”

பாட்டிக்கு ரொம்பவும் நெருக்கமாய்ப் போய் உட்கார்ந்துகொண்டேன்.

“என்னமோ ஒன்கிட்டயாவது சொல்லிரணும்னு ரொம்ப நாளாவே மனசு கெடந்து ராப் பகலா அடிச்சிட்டு இருக்குய்யா…”

“என்ன விஷயம் பாட்டி?”

“யார்கிட்டயும் சொல்லிரக்கூடாது….”

“சொல்லவே மாட்டேன்.”

“உங்க தாத்தா எப்படி சுந்தரிப் பாட்டியையும் கல்யாணம் செய்துகிட்டாக என்கிற சமாச்சாரம் ஒனக்கும் தெரியும் இல்லீயா?”

“அதெல்லாம் ஊர்ல இருக்கிற எல்லாத்துக்குமே தெரிஞ்ச சமாச்சாரம்தானே பாட்டி?”

“அதுல வேற ஒரு சூட்சுமம் இருக்குய்யா. சுந்தரியையும் கட்டிக்கனும்ங்கிற நெனைப்பு ஒருநா கூட ஒன் தாத்தாவுக்கு வந்ததே கெடையாது ராசா. அவுக பாட்டுக்கு துட்டு சம்பாதிக்கறதுலேயேதான் எப்பவும் குறியா இருப்பாகளே தவிர, வேற ஒரு ஸ்மரனையே வராது. சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி அவுக மனசைக் கெடுத்த பாவி யார்ன்னு யாருக்காச்சும் தெரியுமா?”

“நீ என்ன பாட்டி சொல்ற…?”

“எல்லாம் இந்தப் பொச கெட்டவ செய்து வச்ச வினை…”

சேலைத்தலைப்பால் மூக்கைச் சிந்தி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

செவனேன்னு கெடந்த அவுகளைப் போயி நான்தான்யா புத்தி பிசகிப்போயி உசுப்பி விட்டுத் தொலைச்சேன். எங்கப்பா என் தங்கச்சிக்கு மாப்ளை பாத்துகிட்டு இருக்காக, அவளையும் நீங்களே கட்டிக்குங்கன்னு நான்தான் ராசா அவுகளுக்கு விடாம நாலு நாளைக்கு விடிய விடிய தலையணை மந்திரம் போட்டேன். அதுக்குப் பொறகுதான் அவுக தார்ப்பாச்சியைக் கட்டிக்கிட்டு கெளம்பிப் போனாக.”

“என்ன பாட்டி இது அநியாயமா இருக்கு… சின்னப் பாட்டியையும் கட்டிக்க நீயா தாத்தாவை தூண்டிவிட்ட?”

“எல்லாம் இந்தப் பொச கெட்டவ செஞ்சதுதான்.”

“நம்பவே முடியலை பாட்டி… ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீ ஏன் தூண்டிவிட்ட?”

“பொறாமைதான். பொட்டச்சிங்ககூட பொறந்த குணமாச்சே பொறாமை! என்னை மட்டும் விட்டுருமா அது? சனி புடிச்சு ஆட்டின மாதிரி மனசுக்குள்ள பொறாமை பிடிச்சி என்னை ஆட்டுச்சுய்யா ராசா. என் தங்கச்சி சுந்தரி இருக்காளே, அவ சின்ன வயசுல கருவாச்சியா இருந்தாலும் கரும்புக் கட்டு கணக்கா இருப்பா. அப்படியொரு உடம்பு நிகுநிகுன்னு… பாத்தவன் அசந்துபோயி நின்னுருவான்.

“அவளை ஒருவாட்டி திருச்சுழி கோயிலுக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். அப்ப அங்க புதுக்கோட்டை சமீன்தாரு மவனும் வந்திருந்தான். சுந்தரியைப் பார்த்ததும் அப்படியே சொக்கிப்போய் நின்னான். அவனும் நம்ம சாதிக்காரன்தான் ராசா…

சுந்தரியைப் பத்தி வெசாரிச்சிப் பாத்திட்டு அவளைப் பொண்ணு கேக்கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டானம். கோயில்காரக இதைப்பற்றி என்கிட்டயும் சொல்லி வச்சாக… கோயிலுக்குப் போய்ட்டு வந்த அன்னிக்கு ராவுல எனக்கு உறக்கமே வரலை… சுந்தரி பெரிய சமீன்தாரு வீட்டுக்கு மருமவளா போயிடுவாளேன்னு நெனச்சி நெனச்சி பொறாமையில புழுங்கினேன். பொறாமைத் தீ பத்திகிட்டு எரிஞ்சது…

ஏன்னா, என் அப்பா வீட்ல என் கொடிதான் பறந்துகிட்டு இருந்திச்சி. பெரிய சீமான் வீட்டு மருமவன்னு என் பேச்சுக்குத்தான் அங்க செல்வாக்கு. நான் அவுகளுக்கெல்லாம் பெரிய ராணி மாதிரிதான்.

புதுக்கோட்டை சமீன்தாரு ஆளுங்க ரொம்பப் பெரிய சமஸ்தானம். சுந்தரி அவுக வீட்டுக்கு மருமகளா போயிட்டா, அவதான் என்னைவிடப் பெரிய ராணியாட்டம் ஆயிடுவா. பெறகு எங்க வீட்ல அவ கொடிதான் பறக்கும். அவ சொல்தான் எடுபடும். என் சொல் ஒண்ணுகூட எடுபடாது. என் கொடியும் பறக்காது… அதை நெனைக்க நெனைக்க தாங்கப் போகலை எனக்கு. அந்த சமீன்தாரு வீட்டுக்கு இவ மருமவளா போயிடவே கூடாதுன்னு நெனைச்சேன்…

அதுக்கு என்ன செய்யலாம்னு கெடந்து விடிய விடிய யோசிச்சிப் பார்த்தப்ப எனக்கு இந்த ஒரு வழிதான் தெரிஞ்சது. சமீன்தாரு வீட்டு ஆளுங்க வந்து பொண்ணு கேக்கறதுக்குள்ளே ஒங்க தாத்தாவை உசுப்பி விட்டுடனும்னு மும்முரமா கச்சையைக் கட்டிக்கிட்டு நின்னேன். சமீன்தாரு மவன் விசாரிச்சி வந்து பொண்ணு கேக்கறதுக்கு முன்னாடி நாம முந்திக்கொண்டு விடனுமேன்னு ரொம்ப அவசரப்பட்டேன்…

ஊசி மருந்து ஏத்தற மாதிரி பக்குவமா விசயத்தை ஏத்தினேன். ஒடனே உங்க தாத்தாவும் தார்பாச்சைக் கட்டிக்கிட்டு பொறப்பட்டுப் போயி, அவளைக் கட்டிக்கிட்டு வந்தப் பொறகுதான் மறுசோலியும் பார்த்தாக….

ஆனா நாந்தான் அந்த மனுஷனை உசுப்பி விட்டேங்கறதை மட்டும் யார்கிட்டையும் சொல்லிரக்கூடாதுன்னு அவருகிட்ட சத்தியம் வாங்கிட்டேன். இல்லைன்னா என் தலையில்ல உருண்டு போயிடும்…”

“பெரிய மாப்ளை கேக்கறார் என்கிறதாலே மட்டும் ஒரு மனுசர் தன் சின்ன மவளையும் கட்டிக் கொடுத்துருவார்ன்னு எப்படி நீ எதிர்பார்த்தே?”

“கட்டிக் குடுத்தாரில்ல… அது ஒருகாலம் ராசா…”

“ஒருவேளை சின்னப் பாட்டி தாத்தாவைக் கட்டிக்க முடியாதுன்னு சொல்லியிருந்தாலும் விசயம் நீ நெனச்ச மாதிரி நடந்திருக்காதே?”

“ஒனக்கு விவரம் தெரியாது. அதனால கேக்கறே… ஒன் தாத்தா மேல அந்தக் கருவாச்சிக்கு எப்பவுமே ஒரு கண் உண்டு ராசப்பா. அவ மனசு எனக்கு எங்கே தெரியும்னு அந்தப் பொச கெட்டவளுக்கு நெனப்பு. எனக்கா தெரியாது ஒரு பொட்டச்சிபத்தி? அதுவும் என் கூடப் பொறந்த தங்கச்சி பத்தி தெரியாமப் போயிடுமா…?

அவுகளைப் பாத்தாதான் அவளுக்கு ரெண்டு கன்னமும் செவந்து பூத்திருமே பூத்து… பொங்கிப் பொங்கில்ல அவுககிட்ட பேசுவா. அதைப் பார்த்திருக்கிறதாலேதான் எனக்கு தெரிஞ்சுது, கல்லை எடுத்து எரிஞ்சா மாங்கா விழுந்துரும்னு…! அதேமாதிரி விழுந்திருச்சி.

“என்னதான் நீ சொன்னாலும், ஒன் புருஷனையே பங்கு போட்டுக்கிற அளவுக்கா அப்படியொரு பொறாமைன்னு நெனச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு பாட்டி…”

“என் கொடி அரைக்கம்பத்துல பறந்தாலும் பரவாயில்லை… அந்தக் கருவாச்சியோட கொடி உயரத்துல பெரிசா பறந்திரக்கூடாது. அதான் ராசப்பா என்னோட ஒரே நெனப்பு… அவ்வளவுக்கு ஒரு பொறாமைத் தீ !”

பாட்டியின் இந்த மனோநிலை உண்மையில் ஆச்சரியமானதுதான். செத்துப் போவதற்கு முன்னால் இதை என்னிடம் மட்டும் ஏன் சொல்லி விட்டுப் போனாள் என்பதை நினைத்தால் அதைவிடவும்தான் ஆச்சர்யமாக இருக்கிறது…

நினைத்துப் பார்த்தால் – தாத்தா; பாட்டி; சின்னப் பாட்டி மூன்று பேருமே வினோதமான மனித ஜென்மங்கள்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *