வித்தைக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,461 
 
 

கார்கில் சண்டையின்போது பாகிஸ்தான்காரன் உங்க ஊர் மேலே ‘எங்கே குண்டு
போடலாம்’னு ஒரு ஹெலிகாப்டர்ல பறந்து போனா உங்களுக்கு எப்படி இருக்கும். அட,
ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் இல்லை, மாசக்கணக்கா, வருஷக்கணக்கா, அதுவும்
சரியா ஆபீஸ¤லேர்ந்து களைப்பா வந்து சாப்பிடற வேளையில அப்பிடி பண்ணினான்னா
எப்படி இருக்கும். அதுவும் ஒரு வழியா குண்டையாவது போட்டுத் தொலைஞ்சான்னா
நிம்மதியா போயிடும். குண்டும் போடாம, இப்ப போட்டுடுவேன்னு பயமுறுத்திண்டு
இருந்தா உங்களுக்கு கோபம் வராதா? மொட்டை மாடியில போய் நின்னுண்டு
‘போட்டுத்தொலையேண்டா சனியனே’ ன்னு கத்தமாட்டேளா? அந்த மாதிரிதான்
என் நிலைமையும். என் அம்மாவுக்கும், என் அருமை மனைவிக்கும் நடக்கும் நித்யபடி
சண்டை நான் மேல சொன்னத விட மோசமானது.

பனிப்போர் ன்னா ஏதோ எஸ்கிமோக்கள் பனியில சண்டை போட்டுப்பான்னு
நெனச்சிண்டிருந்தேன். எனக்கு கல்யாணம் ஆனதக்கப்புறம்தான் அதோட உண்மையான
அர்த்தம் தெரிஞ்சுது. நீங்க என்ன சொல்ல வரேள்ன்னு புரியறது. வீட்டுக்கு வீடு
நடக்கிற ராமாயணந்தான். இதைப்போயி ஏன் பெரிசு படுத்தறேம்பேள். ஆனா ஒரே
வீட்டிலேயே ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் எல்லாம் நடந்தா நான் என்ன
பண்றது. ஒரு மனுஷன் தன் வீட்டுக்குப்போன உடனே தான் ராமர் வேஷம் போடணுமா,
கிருஷ்ணர் வேஷம் போடணுமா, கோவலன் வேஷம் போடணுமான்னு கூட தெரியாம
இருந்தா எப்படி. இவா சண்டையை நிறுத்தறுதுக்கு நான் நாய் வேஷம் கூட போட்டு,
கொலைக்கவும் தயார். ஆனா சண்டையே சில சமயம் நடக்கறதா இல்லயான்னு சரியா
புரிய மாட்டேங்கறதே. எனக்கு தெரிஞ்சு சண்டைன்னா ஒரு வெட்டு, குத்து அல்லது
வள்வள் ளுன்னு நாயே பேயேன்னு அடிச்சுக்கறதாவது இருக்கும். ஆனா இங்க, இந்த
பக்கத்திலேர்ந்து ஒரு முணுமுணு, பதிலுக்கு அந்த பக்கத்திலேர்ந்து ஒரு நக்கல்
கமெண்ட், பதிலுக்கு ஒரு கீழ்வெட்டுப் பேச்சு, அங்கேயிருந்து ஒரு எகத்தாளம்,
இங்கேயிருந்து ஒரு முகவரியில்லாத தூஷணை என்று ஏகப்பட்ட
வாணவேடிக்கைகளுக்கப்புறம் கடைசியாக ரெண்டு பேரும் மனதில் காயங்களுடன்
கண்ணைக்கசக்கிக் கொண்டிருப்பார்கள். நிச்சயமாக வெள்ளிக்கிழமைகளில்
மங்கலமாக குத்துவிளக்கேற்றி விட்டு ஏதோ சம்பிரதாயம் போல கண் கசக்கும்
வைபவம் நடக்கும். நான் ரொம்ப சென்டிமென்டான ஆசாமி இல்லதான். இருந்தாலும்
ரொம்ப நாட்களாக நம் வீட்டிற்கு வரவேண்டும் என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கும்
மஹாலக்ஷ்மி தப்பித்தவறி வரும்பொழுது இவர்கள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து
சகிக்காமல் பக்கத்து வீட்டில் நுழைந்து விடப்போகிறாளே என்ற பயம்தான்.

ஆண்டவன் சந்தோஷமான மூடில் இருந்தபோது ஆணை படைச்சிருப்பான்னு
நினைக்கிறேன். குழப்பத்தில இருந்தபோது பெண்ணை படைச்சிருப்பானாயிருக்கும்.
அதனாலதான் ஆண் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க ஆசைப்படறான். பெண்
தானும் குழம்பி இருக்கிறவாளையும் குழப்பறா. ஆனா அறிவியல் தெரிஞ்ச என்
நண்பர் ஒருவர் ‘ஆண்டவன் யாரையும் படைக்கலை. குரங்கிலேர்ந்து பிறந்தவன்
மனிதன்’ என்று ரொம்ப உறுதியா சொல்லுவார். பெண்ணிலிருந்துதான் ஆண்
பிறந்தான் ங்கறதை தான் அப்படி கிண்டலா சொல்றாரோன்னு தோணினாலும்,
அப்படியும் ஒரு உண்மை இருக்குன்னுதான் படறது. என்னடா இது ! அம்மாவையும்
பொண்டாட்டியையும் குரங்கு ங்கறானேன்னு பாக்காதீங்க. அவ்வளவு ஆத்திரம்
வர்றது எனக்கு. வீட்டிலதான் இப்படி. ஆபீஸிலயாவது நிம்மதியா இருக்கலாம்னு
போனா அங்கயும் மானேஜருக்கும் டைபிஸ்ட்டுக்கும் தகராறு, அது இல்லைன்னா
பியூனுக்கும் பக்கத்து கடைக்காரனுக்கும் தகராறு. ஆபீஸ் கதைக்கு அப்புறம்
வருவோம். முதல்ல என் வீட்டுக்கதையை சொல்றேன்.

எல்லா திறமைகளும் ஒரு மனுஷன் கிட்டயே இருப்பதில்லைங்கிறதுக்கு நான் ஒரு
நல்ல உதாரணம். கல்யாணம் ஆன ஒரு வருஷத்துக்குள்ளயே ஒரு பொண் கொழந்தைக்கு
அப்பாவாக முடிஞ்ச எனக்கு , கோபாலகிருஷ்ணன் ங்கிற என் பெயருக்கு பின்னால
பிகாம் ன்னு சில எழுத்துக்களை போட்டுக்கிறதுக்கு ஆறு வருஷம் ஆச்சு. மார்ச் மாத்தி
செப்டம்பர், செப்டம்பர் மாத்தி மார்ச் சுன்னு மாசங்கள் தான் வந்ததே யொழிய ரொம்ப
நாள் நல்ல ரிசல்ட்டே வரலை. சின்ன வயசில சைக்கிள் ஓட்டச்சேயே எனக்கு பாலன்ஸ்
வராது. இங்க படிப்புல க்ரெடிட்டும் டெபிட்டும் எப்பிடி கூட்டினாலும் எனக்கு மட்டும்
எப்படி பாலன்ஸ் ஆகும். கடைசியா ஒரு வழியா எக்ஸாம் எழுதின எக்ஸ்பீரியன்ஸிலேயே
பாஸாகி முடிச்சேன். அதுக்காகத்தான் வெயிட் பண்ணிண்டு இருந்தா மாதிரி அப்பாவும்
மண்டையைப் போட்டார். போற போது புள்ளைக்கு எதாவது நல்லது பண்ணி
வைக்கலாமேன்னு ஒரு அம்பதாயிரம் ரூபா கடனும் வெச்சுட்டுப்போயிட்டார். சின்னதா
ஒரு வீடு, அம்மா, அம்பதாயிரம் ரூபா கடன் இது மூணும்தான் அவர் ஞாபகார்த்தமா
உட்டுட்டு போனது. போறதுக்கு முன்னால பொறுப்பா தங்கைக்கு கல்யாணம் பண்ணி
வெச்சுட்டு எனக்கு சுமை வெக்காம போயிட்டார். அதல வந்த கடன் தான் அந்த
50000 னு அம்மா சொல்லுவா. அவர் போனதுக்கப்புறம் நான் அலைஞ்சி திரிஞ்சி
வாங்கின வேலைதான் இப்ப நான் பார்க்கிறது. அதுக்காக ஏதோ ஸ்விஸ் பாங்க்ல
வேலை செய்யறேன்னு நெனச்சிக்காதீங்க. நாலு ஆடிட்டர்கள் கூட்டா சேர்ந்து
அரசாங்கத்தை சட்டபூர்வமா ஏமாத்தறது எப்படி ன்னு சொல்லிக்கொடுக்கற ஒரு
கம்பெனியில உபகுமாஸ்தா வா இருக்கேன். ஆடிட்டர்களும், அரசாங்கமும், ஓட்டை
சட்டங்களும் இருக்கற வரைக்கும் என் வேலைக்கு ஒண்ணும் பயம் இல்லை. நானும்
இந்த கம்பெனியில பத்து வருஷமா வேலை செஞ்சி அந்த 50000 கடனையும் அடைச்சி
சிக்கனமா ஒரு 50000 சேர்த்தும் வெச்சிருக்கேன். என் கூட இன்னும் ரெண்டு
உபகுமாஸ்தாக்களும் எங்கள் மூன்று பேருக்கு மேல் ரங்கா என்று ஒரு அக்கவுன்டன்டும்
உண்டு. ரங்கா எனக்கு மேல் என்றாலும், எனக்கு நெருங்கிய நண்பன். ரங்கா பற்றி
அப்புறம்.

இந்தக்கதை ஆரம்பிக்கும் ஒரு வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடனே
யுத்த அறிகுறிகள் தெரிந்தது. எல்லா விளக்கும் அணைக்கப்பட்டு வீடே இருளில்
இருந்தது. என் மகள் அமலா (மனைவி பெயர் கமலா. அதற்கு மோனையாக அமலா)
மட்டும் ஒரு டேபிள் லாம்ப் வெளிச்சத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள்.
செருப்பைக்கழற்றி விட்டு விளக்கைப்போட்டேன். மெதுவாக அமலாவின் அருகில்
போய் ‘அமுல், எங்கடா யாரையும் காணோம்’ என்றேன்.

அமலா பாடத்திலிருந்து தலையை தூக்கிப்பார்த்து ‘ அம்மா கிச்சன்ல அழுதுண்டிருக்கா.
பாட்டி பக்கத்தாத்துக்கு போயிருக்கா’ என்றாள். எதிர் பார்த்ததுதான்.

‘ அமுல், அம்மா ஏன் அழுதுண்டிருக்கா’

‘பாட்டி அம்மாவை ‘மூதேவி வந்த வீடு மூளியாதான் போகும். குடிகாரன் பரம்பரையில
பொண்ணு எடுத்தது என் தப்பு’ ன்னு சொன்னா. அதுக்கு அம்மா அழுதுண்டிருக்கா’ .
குடிகாரன் என்பது கமலாவின் அண்ணன் சந்துருவை.

‘பாட்டி ஏன் அப்படி சொன்னா?’

‘அம்மா பாட்டியை ‘பெரியவாளா இருந்துண்டு இப்படி பொய் சொன்னா உங்க நாக்கு
அழுகியே போகும்’ னு சொன்னா. அதுக்குதான்’ என்றாள் அமலா. எதிர்காலத்தில் நல்ல
ரிப்போர்ட்டராக வருவாள்.

திடீரென்று ஞாபகம் வந்தது போல் ‘அப்பா! அம்மா நன்னா உன் மானத்தையும்
வாங்கிட்டா. பாட்டிகிட்ட ‘உங்க பிள்ளை லட்சணத்துக்கு குடிகார சம்பந்தம்தான்
கிடைக்கும். பின்ன மகராஜா சம்பந்தமா கிடைக்கும்’ னு சொன்னா’ என்று
மலர்ச்சியுடன் தன் நினைவுக்கூர்மையை மெச்சிகொள்வதுபோல சொன்னாள்.
இனிமேல் இவளுடன் பேச்சுக்கொடுப்பது உசிதமாக தோன்றவில்லை. தவிர
இரண்டு பேரையும் சமாதானப்படுத்த வேண்டும். எனவே ‘ சரி சரி! இதையெல்லாம்
கவனிச்சுண்டு படிப்பை கோட்டை விட்டுறாதே’ என்று சொல்லிக்கோண்டே அவள்
எதுவும் பதில் சொல்வதற்குள் கிச்சனுக்குப்போய் விளக்கைப் போட்டேன்.

கிச்சனின் ஒரு ஓரம் பூஜையறை. அங்கே தரையில் உட்கார்ந்துகொண்டு குத்து
விளக்கின் சுடரையே பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா. என்னை அலட்சியம்
செய்கிறாளாம். கோபமாம்.

‘நீங்க ரெண்டு பேரும் என்ன வேணா சண்டை போட்டுக்குங்க. ஆனா அந்த சின்ன
பொண்ணு முன்னால என்னை அலட்சியமா பேசினா அது என்னை நாளைக்கு
மதிக்குமா’ என்றேன். நியாயமான குற்றச்சாட்டு திரும்ப வைக்கும்.

எதிர்பார்த்தபடி கமலா திரும்பி என்னை நேர்ப்பார்வை பார்த்தாள். ‘பெரிய மைசூர்
மகாராஜா பரம்பரை. மானம் போயிருத்தாக்கும். நான் சொல்லி ஒண்ணும் உங்க
மானம் போகலை. அதுக்கு முன்னாடியே உங்கம்மா உங்க மானத்தை வாங்கியாச்சு.
அவன் ஒரு சோப்ளாங்கி. ஒரு துப்பு கெட்ட முண்டம். ஒழுங்கா படிச்சிருந்து ஒரு
நல்ல உத்யோகத்துக்கு போயிருந்தான்னா நான் ஏன் கண்ட கழுதை கிட்ட
கெஞ்சிண்டிருக்கணும் ன்னா. அதுக்குதான் நான் சொன்னேன். உங்களுக்கே தெரிஞ்ச
உங்க பிள்ளை லட்சணத்துக்கு குடிகார சம்பந்தம்தான் கிடைக்கும். அதுக்கு ஏன்
பொலம்பரேள்ன்னேன்’ என்றாள். அம்மாதான் எவ்வளவு சொன்னாளோ இல்லை
என்னை உசுப்பேற்றி விட இவள்தான் எவ்வளவு சேர்த்துண்டாளோ!

ஆனால் ஒன்று. கடைசியில் எல்லோருமாக சேர்ந்து இந்த ஒரு பாயிண்டில்
என்னை க்ளீன் போல்ட் ஆக்கிவிடுவார்கள். நானா படிக்க மாட்டேன் என்றேன்.
படிப்பு வரவில்லை. அதற்கு நான் என்ன செய்வது.

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தொடர்ந்தாள். ‘ எங்கண்ணா குடிகாரனாமே!.
உங்கம்மாதான் பார்த்தாளா இல்லை அவனுக்கு ஊத்தி கொடுத்தாளா? என்னிக்கோ
அமலா ‘மாமா ஆத்துல விஸ்கி பாட்டில் இருக்குன்னு’ சொன்னத வெச்சு உங்கம்மாவா
கற்பனை பண்ணிக்கறதா? அவன் பாவம் யாரோ ·ப்ரெண்டுக்கு வாங்கி வெச்சுருந்தானாம்.
விஸ்கி சாப்டயாடா ன்னு கேட்டதுக்கு விசுக்கி விசுக்கி அழுதான்’. பீர் சாப்டயாடா
என்று கேட்டிருந்தால் பீறி பீறி அழுதிருப்பானோ. இது முழு பாட்டில் விஸ்கியை
சோற்றில் மறைக்கும் வேலை. சந்துரு என்னும் என் மைத்துனன் ‘அய்யோ பாவம்
உனக்கு ரொம்ப வலிக்குமே’ என்று அழுதுகொண்டே நம் மென்னியை திருகி
கொண்டிருப்பவன்.

‘ சரி சரி ஆனது ஆச்சு!. வெள்ளிக்கிழமையும் அதுவுமா. மூஞ்சியை தொடச்சிண்டு வா.
ஒரு நல்ல………..’ மேலே தொடருமுன் அம்மா வீட்டுக்குள் வருவது தெரிந்தது. முதலில்
இவளை சமாதானப்படுத்தினேன் என்று தெரிந்தால் அவளை சமாதானப்படுதுவது கடினம்
என்று அனுபவம் சொன்னதால் வார்த்தையைக்கூட முடிக்காமல் ஹாலுக்குள் தாவி
அப்பொழுதுதான் வருவது போல பாவ்லா செய்தேன். அம்மா உள்ளே நுழையவும்
ஓரக்கண்ணால் அம்மா முகத்தைப்பார்த்தேன். முகத்தில் ரொம்ப கோபம் தெரியவில்லை.
ஒன்று சண்டையின் முதல் ரவுண்டில் நாக் அவுட் பாயிண்ட் கிடைத்திருக்க வேண்டும்.
அல்லது பக்கத்து வீட்டில் போய் கொட்டியதில் கொஞ்சம் ஆறுதல் வந்திருக்கும்.
நாளை கண்டிப்பாக பக்கத்து வீட்டு பத்மனாபன் ‘தாயிற்சிறந்த கோயிலும் இல்லை’
என்று போதிப்பார். ‘எங்கேம்மா’ போயிட்டு வரே’ என்று ஒன்றுமறியாதவன் போல
கேட்டேன். அப்பாவித்தனமான கேள்விக்கு கோபித்துக்கொள்ள முடியாதே. ‘ஆமாம்
போனேன், பொறந்தாத்துக்கு. கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்றாள். ஆக இந்த
வீட்டில் ஒரு முண்டம் ரெண்டு கழுதை இருப்பது புரிந்தது. சற்று குரலை உயர்த்தி ‘
எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ். இன்னிக்கு எனக்கு போனஸ் வந்திருக்கிறது’
என்றேன். உண்மையில் போனஸ் வந்திருந்தது. முகம் கழுவிக்கொண்டிருந்த கமலா
அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தாள். அம்மா முகத்திலும் சற்று மலர்ச்சி வந்தது.
அமல் குட்டி ‘ஹையா’ என்று குதித்துக்கொண்டு ஒடி வந்தது. இந்த காலத்தில் பணம்
என்பது பிரத்யக்ஷ தெய்வம்தான்.

‘முதலில் அதிலிருந்து 100 ரூபாய் செளம்யாவிற்கு பொங்கலுக்கு அனுப்பு’ என்றாள்
அம்மா. செளம்யா என் தங்கை.

‘எங்கண்ணா வெட்டிங் டே ரெண்டு நாள்ல னு ஞாபகம் இருக்கா’- கமலா. இது
வேண்டுமென்றே இரண்டாவது ரவுண்டுக்கு சீண்டல். அம்மா மோவாயை தோளில்
இடித்துக்கொண்டாள்.

‘அப்பா! எனக்கு வீடியோ கேம்’

தர்ம சங்கடமான ஒரு நிமிஷத்துக்குப்பின் நான் ‘ முதல் செலவு திருப்பதி
வெங்கடாசலபதிக்கு. மற்றது அப்புறம் சாப்டுண்டே’ என்றேன். இப்படித்தான் திருப்பதி
வெங்கடாசலபதிக்கு பெரிய வருமானம் போல. எல்லோர் வீட்டு போனஸிலும் அவருக்கு
ஒரு பங்கு உண்டு.

இப்படியாக போனஸ் தயவில் ஏற்றப்பட்ட சமாதானக்கொடிக்கு இரண்டு நாள் வரையில்
ஆபத்து இல்லை. செளம்யா விற்கு பொங்கலுக்கு பணம் அனுப்பியாயிற்று. வெட்டிங் டே
பரிசுகள் வாங்கப்பட்டன. அமலாவிற்கு கையகல வீடியோ கேம் கிடைத்தது. எனக்கு
இரண்டு நாள் நிம்மதி கிடைத்தது.

திங்கட்கிழமை சாப்பாட்டின்போது அம்மா கொஞ்சம் குழைந்து போய் விட்ட சாதத்தைப்
பிசைந்து கொண்டே ‘ செளம்யா அவ்வளவு அழகா சாதம் வடிக்கறா!. சாதம் பண்றவா
அவ கிட்ட போய் கத்துக்கலாம். அவ மாமியாரே சொல்றா: உங்க பொண்ணு பண்ற
சாதத்தை அப்படியே கோத்து மல்லிப்பூவுக்கு பதிலா தலையில வெச்சுண்டுள்ளாம்னு’
என்று ஆரம்பித்தாள். சமாதானக்கொடி சற்று ஆட ஆரம்பித்தது. ஆனாலும் கமலா
நேரடியாக மோத முடியாது. ‘ நான் உன்னைப்பத்தி என்னடீம்மா சொல்லிப்புட்டேன்,
என் பொண்ணப்பத்தி சொல்லிக்கக்கூட எனக்கு உரிமையில்லயான்னா’ என்று நழுவி
விடுவாள்.

‘ஆனா என்னதான் சொல்லுங்கோ! சில பேருக்கு தான் அது மாதிரி மாமியார்
அமையறது. பண்ணறாளோ இல்லயோ மாட்டுப்பொண்ண ஒசத்தியா சொல்ற மாமியார்
எங்க இருக்கா’ என்று பதிலடி கொடுத்தாள் கமலா. சமாதானக் கொடியின் ஆட்டம்
கொஞ்சம் அதிகமானது. அம்மா இதற்கு பதில் பேச முடியாது. ‘ஐயையோ உங்களை
எங்க சொன்னேன். நீங்க தங்கம்னு தெரியாதா என்ன!. அவா மாமியாரை சொன்னேன்’
என்ற நக்கலான பதிலுடன் கமலா ரெடியாக இருப்பாள்.

‘மனசு அமயறா மாதிரி தான் மத்ததும் அமையும்’ – அம்மாவின் கொஞ்சம் வீக்கான
சமாளிப்பு.

‘இப்ப என்னங்கிறேள். எனக்கு மனசு சரியில்லயா. இல்லை மாமியார் சரியில்லையா’
என்று கமலா நேரடி தாக்குதலுக்கு மாறின உடனே சமாதானக்கொடி படாரென்று
அறுந்து விழுந்தது.

‘எல்லாம் ரொம்ப சரியாதான் இருக்கு. வாய்தான் சரியா இல்லை. பதிலுக்கு பதில்
வாயாடிண்டு’ – சமாதான கொடி மிதிபட்டது.

‘ஓஹோ. சொல்றதையெல்லாம் கேட்டுண்டு வாயைதொறக்காம இருந்தா
நல்லவளாக்கும். தப்பா சொன்னத கேட்டா வாயாடியா?’

இதற்குமேல் கேட்டுக்கொண்டு இருக்க எனக்கு பொறுமையில்லை. ‘போதும். ரெண்டு
பேரும் இப்ப நிறுத்துங்கோ’ என்று கத்தினேன்.

‘ஆமாண்டா. உம் பொண்டாட்டிய அடக்க வக்கு இல்லை உனக்கு. என்னை அடக்கு’

சிவப்பு துணியால் உசுப்பி விடப்பட்ட காளைமாட்டின் கோபம் ஜிவ்வென்று
தலைக்கேறியது எனக்கு.

‘என்ன எழவுக்கு ரெண்டு பேரும் இப்படி சண்டைபோடறீங்க. ஒருவேளையாவது எழவு
நிம்மதியா இருக்க உடறங்களா? உங்க சண்டை தாங்கல. செத்து ஒழிஞ்சுடறேன்.
அப்புறம் ரெண்டுபேரும் கட்டிப்புடிச்சுண்டு சண்டை போடுங்க. நீங்க ரெண்டு பேரும்
எக்கேடாவது கெட்டுப்போங்கோ. நான் நாளையிலேர்ந்து வீட்டுக்கே வரலை. அப்படியே
ஆபீஸ்லயே இருந்துடறேன்.’ என்று கத்திவிட்டு கையை உதறிவிட்டு சட்டையை
மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன்.

மனசு முழுக்க ஆத்திரமும் எரிச்சலுமாக இருந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம்
நடக்கிறது? பெரியவதானே ஏதோ சொல்லிவிட்டாள் என்று பெருந்தன்மை ஏன்
இவளுக்கு இல்லை. ஒரு ஒரு ஆபீஸிலும் வேலை செய்பவனெல்லாம் கொஞ்சம்
கூட சொரணை இல்லாமல் மேலதிகாரியிடம் பெருந்தன்மையாக எப்படி வாங்கிக்கட்டிக்
கொள்கிறான். அதுக்காகவாவது கமலாவை ஒரு வருஷம் வேலைக்கு அனுப்பணும்.
இல்லை அம்மாதான் ஆகட்டும். ஏதோ ஒரு நாள் சாதம் குழைஞ்சி போனா குத்தி
காட்டணுமா? என்ன ஜென்மங்களோ? யார் கிட்ட இதையெல்லாம் சொல்லி அழறது.
ரங்காதான் கரெக்ட். ரங்காவுக்கும்தான் அம்மா இருக்கா. பொண்டாட்டி இருக்கா.
பய எப்பவும் சந்தோஷமா இருக்கானே. எப்படி? ரங்காவைதான் கேக்கணும். என்று
யோசித்துக்கொண்டே ரங்கா வீட்டுக் கதவை போய் தட்டினேன். ரங்காதான் திறந்தான்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் ‘வா வா ‘ என்றான்.

‘என்ன. குடும்பத்தில் குழப்பமா?’ என்றான் சிரித்துக்கொண்டே. எதையும் ஈஸியாக
எடுத்துக்கொள்பவன். ஹ¥ம்…

நேரிடையாக பதில் சொல்லாமல் ‘எங்கே வீட்டில் யாரையும் காணோம்?’ என்றேன்.

‘கோயில்ல டன் டன்னா புண்ணியம் கொட்டியிருக்காம். அள்ளிண்டு வரப்போயிருக்கா’
என்றான். அம்மாவும் கமலாவும் கோயிலுக்கு ஒன்றாகப்போனால் எப்படி இருக்கும்
என்று யோசித்தேன். கடவுளும் கோயிலை விட்டு அவர் ·ப்ரண்ட் வீட்டிற்கு ஓடி விடுவார்.

ரங்காவிடம் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கொட்டினேன். ‘ நீ எப்படி இந்த மாதிரி
பிராப்ளம் இல்லாமல் சமாளிக்கறே. இல்லை உனக்கும் இருக்கு. அப்படியே
சகிச்சுக்கறேன்னு மாத்திரம் சொல்லாதே’ என்றேன்.

நான் சொன்னதைக்கேட்டு ரங்கா சிரித்தான். “கோபி, நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அந்த
உண்மை உனக்கு தெரியலே. நான் சொல்றத கேளு. ஒருத்தருக்கு ஒருத்தர பிடிக்கறது
பிடிக்காதது எல்லாம் ஒரு வகையான பர்செப்ஷன். எனக்கு கர்னாடிக் மியூசிக் புரியாது.
அதப்பத்தி தெரியாது. அதனால கர்னாடிக் மியூசிக்க உயர்வா பேசரவங்கள எனக்கு
பிடிக்காம போகும். அதே ஆளே அக்கவுண்ட்ஸ்ல கில்லாடியா இருக்கய்யா நீன்னு
பாராட்டினா அவர ரொம்ப பிடிச்சு போயிடும். நமக்கு பிடிக்காதவங்க உயர்வா
நெனக்கிற விஷயம் எல்லாம் நமக்கு பிடிக்காது. இதெல்லாம் ஒரு மாதிரி
உள்ளுணர்ச்சியா நமக்குள்ள ஒர்க் பண்றது. எங்க வீட்டில என் வொய்·பும் அம்மாவும்
ரொம்ப ·ப்ரெண்ட்லி. எங்கம்மா சொல்றது எல்லாம் எம்பொண்டாட்டிக்கு பிடிக்கும்.
நான் வாயைத்திறந்தா தான் ரெண்டு பெரும் கொஞ்சம் உளர்றத நிறுத்தறியான்னுவாங்க.
அதுக்காக எங்க அன்பு எதுவும் கொறையலே. அதனாலதான் எங்க வீட்டில எதுவும்
தகராறு இல்லை. தவிர உனக்கு இல்லாத அட்வான் டேஜ் எனக்கு இருக்கு. எங்க
அப்பா. மனுஷன் டெரர். ஒரு கத்து கத்தினார்னா எல்லாரும் அடங்கிப்போயிடுவா”
என்றான். எதுவும் உபயோகமாக இல்லை. புரிந்த மாதிரியும் இல்லை. அவன் ஆபீஸ்ல
பாலன்ஸ் ஷீட் போடற மாதிரி குழப்பமா இருந்தது.

“கமிங் பாக் டு யுர் கேஸ், உங்க வீட்டில மறைமுகமா ஒரு போட்டி நடக்கறது.
உங்கம்மா, கமலா ரெண்டு பேர்ல யாருக்கு நீ ரொம்ப சொந்தம்ங்கறதுதான் அந்த
சண்டை. இருக்கறது ஒரு பழம். ஆனா ரெண்டு பேருக்கு வேணுங்கற சிச்சுவேஷன்
எல்லாம் இது மாதிரி தகராறுதான். காவேரியிலேர்ந்து காஷ்மீர் வரை,
ஈழப்பிரச்னையிலேர்ந்து இந்திப்பிரச்னை வரை எல்லாம் இந்த மாதிரிதான். இதில
இதுதான் சரியான நியாயம்னு சொல்லவே முடியாது. சரித்திரம் முழுக்க இதேதான்.
இவன் போய் அவன் ஊரைக் கொளுத்திட்டு வீரத்தைக்காமிச்சான். அவன் இவன்
ஊரைக்கொளுத்திட்டு வெறியத்தீத்துண்டான். இதேதான். இது பிரச்சனையை
புருஞ்சுக்கற முதல் பாகம். அடுத்தது அந்த பிரச்சனையை முடிக்கறது. இப்ப நீ
புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா நீ கயத்து மேல நடக்கற வித்தைக்காரன் மாதிரி.
உனக்கு பாலன்ஸ¤க்காக இருக்கற ஒரு கம்பின் ரெண்டு பக்கம்தான் உங்கம்மாவும்
கமலாவும். உன் கவனமெல்லாம் கயத்துமேல எப்படி முன்னேர்றதுன்னுதான் இருக்கணும்.
அத விட்டுட்டு கம்பு மேல கவனத்த வெச்சி எந்த பக்கம் சாய்ஞ்சாலும் நீயும்
விழுந்துடுவே. அந்த கம்பும் விழுந்துடும். புரியறதா’ என்றான். சுத்தமாக புரியவில்லை.
‘புரியறது’ என்றேன். ‘குட். இப்ப போய் நிம்மதியா படுத்து தூங்கு. ரெண்டு பேரும் என்ன
பண்ணிண்டாலும் கண்டுக்காதே. வேணும்னா நாளையிலேர்ந்து கொஞ்சநாள் ஒவர்டைம்
பண்ணிட்டு லேட்டா வீட்டுக்கு போ. உனக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.
பணத்துக்கு பணமும் ஆச்சு. எனக்கும் கொஞ்சம் வேலை முடியும். உன் பிரச்சனை
தன்னால தீரும் கவலைப்படாதே’ என்றான்.

கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வீட்டுக்கு திரும்ப வந்தபோது எல்லோரும் படுத்து
தூங்கி விட்டிருந்தனர். சட்டையைக்கழற்றிவிட்டு ஹாலிலேயே படுத்துக்கொண்டேன்.
ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. அதிகாலை தூக்கத்தில் கனவில் தாடி
வைத்துக்கொண்டு ஒரு கழைக்கூத்தாடி ஒரு கையில் அம்மாவையும் ஒரு கையில்
கமலாவையும் தூக்கிக்கொண்டு கயத்துமேல் நின்று கொண்டிருந்தான். என்னைப்
பார்த்ததும் ‘இதில் யாரை கீழே போட?’ என்று கேட்டான். ‘ரெண்டு பேரையும்
இந்து மகா சமுத்திரத்தில் கொண்டு போய் போடு ‘என்று சொன்னேன்.

அடுத்த நாள் யாரிடமும் பேசாமல் ஆபீஸிக்கு கிளம்பினேன். மத்யானத்திற்கு மேல்தான்
ரங்கா வந்தான். ஓவர்டைம் செய்கிறேன் என்று சொன்னேன். குட் என்று சொல்லிவிட்டு
காணாமல் போனான். இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு போனபோது கவலையாக
உட்கர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெளனமாக சாப்பிட்டு விட்டு படுத்தோம்.

அடுத்த நாள் வேலை மும்முரமாக இருந்தது. நான்கு ஆடிட்டர்களிலேயே அதிசிடு
மூஞ்சியான ஆடிட்டர் வந்திருந்ததனால் ஆபீஸே நிசப்தமாக இருந்தது. மூன்று மணி
நேரம் முப்பத்தெட்டு ·பைல்களையும் ஆறு லெட்ஜர்களையும் குடைந்ததில் மூன்று
இடத்தில் மணிவண்ணன் 7 ஐ 4 என்று போஸ்டிங் செய்திருந்த தவறு தெரிந்தது.
முப்பதெட்டு ·பைல்களையும் அடுக்கி கப்போர்டில் வைக்கும்போதுதான் இரண்டு
நாள் சரியாக தூங்காததில் கண்ணை சுருட்டிக்கொண்டு வர அப்படியே இருண்டு
வர மயக்கம் போட்டு விழுந்தேன்.

கையில் முள் குத்தியது போல வலிக்கவே முழிப்பு வந்தது. ‘ஒரு இஞ்செக்ஷன்
போட்டிருக்கேன். அவர் கிட்ட ரொம்ப பேசாதீங்கோ. திரும்ப அப்புறம் வந்து
பார்க்கிறேன்’ என்று ஒரு புதிய குரல் கேட்டு கண்ணைத்திறந்து பார்த்தால் ஒரு
ஆஸ்பத்திரி அறையில் இருந்தேன். கொஞ்சம் தூரத்தில் வெள்ளைக்கோட்டு
டாக்டருடன் அம்மா பேசிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் ‘ அட!
பைத்தியக்காரா! இப்படி பண்ணுவியா! அந்த பையன் ரங்கா மாத்திரம் சமயத்தில
வந்து விஷத்தை பிடுங்கியிருக்கலைன்னா என்ன ஆகியிருந்திருக்கும். நான்
இன்னிக்கோ நாளைக்கோ போறவ. ஆனா கமலா எப்படி கஷ்டப்பட்டிருப்போ.
உனக்கு போறதே புத்தி’ என்றாள். என்ன விஷம். என்ன பண்ணினேன். ஒன்றும்
புரியவில்லை.

‘ என்ன விஷம். என்ன சொல்றே நீ. நான் சும்மா மயக்கம்….’ என்று முடிப்பதற்குள்
‘போறும் சமத்து வழியறது. எல்லா வீட்டிலயுந்தான் சண்டை நடக்கிறது. எல்லாரும்
விஷம் சாப்பிட்டு செத்து போறாளா? டாக்டர் சொன்னார். இன்னும் கொஞ்ச நாழி
பண்ணியிருந்தாலும் திரும்பி உயிரோட பாத்திருக்க முடியாதுன்னு.’

பக்கத்தில் டெலிபோன் மணி அடித்தது. டெலிபோன் எல்லாம் வைத்து
பணக்காரத்தனமாக என்ன ஆஸ்பத்திரி இது? என்ன இதெல்லாம் என்று யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அம்மா போனை எடுத்து ‘இப்பதான் எழுந்தான்’ என்று
சொல்லி என்னிடம் கொடுத்தாள், ‘ரங்கா’ என்று சொல்லிக்கொண்டே.

போனில் ரங்கா ‘என்ன ஓய்! இங்க இவ்வளவு வேலை இருக்கு. ஜாலியா ஹாஸ்பிடல்ல
போய் படுத்துண்டுட்டீரா? என்ன ஒண்ணும் புரியலையா? நீ மயக்கம் போட்டு விழுந்திட்ட.
நாந்தான் நம்ம க்ளயன் ட் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டேன். டாக்டர் நமக்கு
வேண்டியவர்தான். சும்மா ஒரு பத்து நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆத்துல ‘நீ ஏதோ
சோகமா இருந்தே. மத்யானம் ஏதோ சின்ன பாட்டில்லேர்ந்து சாப்டுண்டு இருக்கறச்சே
நான் சந்தேகப்பட்டு புடுங்கி பார்த்தா ஏதோ விஷம் ‘னு ரீல் விட்டிருக்கேன். டாக்டரும்
அதுக்கு மேல சேர்ந்து சுத்துவார். ‘ஏன் மாமி ஏதாவது ஆத்துல தகராறா’ ன்னு
போட்டு வெச்சேன். கில்டி ·பீலிங் வேலை செஞ்சிண்டிருக்கும். நீ எதுவும் பேசி
கெடுத்து வைக்காதே. அப்புறம் வந்து பாக்கறேன்’ என்றான்.

அம்மா போனை வாங்கி வைத்துவிட்டு ‘ நல்ல பிள்ளை.சமயத்தில ஒத்தாசையா வந்து
மாமி எந்த ஹெல்ப் வேணுமின்னாலும் கேளுங்கோ. கோபி உடம்புதான் முக்கியம் னு
சொல்லித்து. பாவம் கமலாதான். என்ன பண்ணுவேம்மா எனக்கு ஒண்ணுமே
புரியலயேன்னு அழுதுது. வாயால கொட்டினாலும் மனசு நல்லதுடா அதுக்கு.
அதைப்போயி தவிக்க உட்டுட்டு போணோம்னு எப்படிடா தோணித்து உனக்கு’ ன்னு
சற்று அழுகையாய் சொன்ன போது நெஞ்சு முழுக்க என்னென்னவோ
முட்டிக்கொண்டது.

கமலா அம்மாவுக்கு காப்பி எடுத்துக்கொண்டு அமலாவுடன் வந்திருந்தாள். என்னைப்
பார்த்தவுடன் பொங்கி வரும் அழுகையோடு ‘ ஏன் இப்பிடி பண்ணினீங்க. எதாவது
ஆகியிருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்’ என்றாள். சற்று சுதாரித்துக்கொண்டு ‘
டாக்டரை பார்த்தேம்மா. இனிமே பயப்பட ஒண்ணும் இல்லன்னார். ஆனா பத்து நாள்
இங்க தான் இருக்கணுமாம். நான் பாத்துக்கறேன் நீங்க போங்கம்மா. நீங்க பாவம்.
கார்த்தாலேர்ந்து இங்கியே இருக்கேள். போய் சாப்டுட்டு வாங்கோ’ என்றாள்.
அம்மாவுடன் வாசலுக்கு அன்னண்டை போய் எனக்கு கேட்காது என்று நினைத்துக்
கொண்டு ‘ டாக்டர் ஜாக்ரதையா பார்த்துக்கோங்கோன்னு சொல்லியிருக்கார்ம்மா.
திரும்பவும் அவர் டிரை பண்ணினார்னா நீங்க ரெண்டு பேரும் கம்பி எண்ணனும் னு
மிரட்டினார். அதான் ஏதாவது பண்ணிண்டுடுவாரோன்னு பயமாயிருக்கும்மா.’ என்றாள்.
அதற்கு அம்மா ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தைரியமாயிரு’ என்றாள்.

அமலா என் பக்கத்தில் வந்து ‘ஏம்ப்பா விஷம் சாப்டே’ என்றாள். ‘ நீ பெரியவளாகி
மாமியாரோட சண்டை போடச்சே சொல்றேன், நான் ஏன் விஷம் சாப்டேன்னு’
என்றேன். ‘மாமியார் எங்கிட்ட சண்டை போட்டா நான் மாமியாருக்கே விஷம்
கொடுத்துடுவேன் ‘ என்றாள். அடுத்த வாயாடி ரெடி.

கமலா உள்ளே வந்து ‘ ரொம்ப சாரி. என்னாலதானே இப்படி பண்ணீங்க. எனக்கு
ரொம்ப வாய் வந்திருக்கு. இனிமே நான் எதாவது தப்பா சொன்னா வாய் மேலயே
அடிங்கோ. இந்த மாதிரி இனிமே பண்ணாதீங்கோ. நானாவது பரவாயில்லை.
எப்படியோ சமாளிச்சுட்டேன். அம்மாதான் பாவம். ஏற்கனவே பிளட் பிரஷர்ல ரங்கா
வந்து சொன்ன வுடனே ‘ஐயோ’ ன்னு சாய்ஞ்சுட்டா. பகவானே அவனைக்காப்பாத்துன்னு
சொல்லிண்டே இருந்தா.’ என்றாள்.

சாயங்காலம் ரங்கா வந்தபோது கமலா மருந்து வாங்க போயிருந்தாள். ‘ என்ன! டாக்டர்
நன்னா தூக்க மருந்து குடுத்துட்டாரா? தூங்கி வழியறே. நன்னா பத்து நாள் தூங்கு.
நாளைக்கு கொஞ்சம் கதைப்புத்தகம், ம்யூசிக் கேஸட் எல்லாம் அனுப்பறேன். பத்து
நாள் ஒனக்கு லீவு சொல்லிட்டேன். மூணு நாள் கழிச்சு டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிடுவார்.
உடனே வேலைக்கு வந்து நிக்காதே. போனஸ் வந்தது இல்லை. அதுல எல்லாரையும்
அழைச்சிண்டு ஊட்டி போயிட்டு வா. நம்ப ஆடிட்டர் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அதுல
போய் தங்கிக்கோ. ஆடிட்டர் ஒழுங்கா சம்பளம்தான் கொடுக்கலை. இப்படியாவது
அனுபவிப்போம். நான் எல்லாம் அரேஞ்ச் பண்றேன். என்ஜாய்.’ என்றான்.

ஒரு கேள்வி மட்டும் என்னை உறுத்திக்கொண்டிருந்தது. ‘டாக்டர் எப்படி
பொய்யெல்லாம் சொல்றார். ப்ரொபசனல் எதிக்ஸ் இல்லயே’ என்றேன்.

‘பொடலங்கா. அவரோட டாக்ஸ் ரிட்டன்ல இல்லாத பொய்யா? இப்ப உனக்கு ட் ரீட்
பண்றதையே தர்ம கணக்கு காமிச்சு லாபம் அடிச்சுடுவாரு. ஒரு பைசா கூட தப்பி
தவறி கொடுத்துடாதே. நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன்’ என்றான்.

கமலா வந்து ரங்காவைப்பார்த்து ‘ ரொம்ப தாங்க்ஸ். நீங்க மட்டும் அவர் கையிலேர்ந்து
புடுங்கியிருக்கலைன்னா… நெனச்சிப்பாத்தாலே பயமாயிருக்கு’. என்றாள்.

‘அதையே சொல்லிண்டுருக்காதீங்கோ. யாராவது கேட்டா சூசைட் அட்டெம்ப்ட்ல
அவனை உள்ள தள்ளிடுவா. நான் கரெக்ட் டயத்துக்கு புடுங்கினது ஒண்ணும்
அதிசயமே இல்லை. ஏன்னா…………….. நான் ஒரு பெரிய புடுங்கி’ என்று சிரித்தான்
ரங்கா.

– ரங்கா
(இந்த கதையில் வரும் ரங்காவிற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பெயர்
தேவைப்பட்டதே என்று என் பெயரை கடன் கொடுத்திருக்கிறேன்.
அவ்வளவுதான்.————–ரங்கா)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *